Thursday 1 August 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 6


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 6


            சந்திரன் ஓய்வாக இருந்தால் சுந்தரி ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விடுவாள். சந்தேகங்களைக் கேட்பாள். விவாதம் செய்வாள்.
            ஆசிரியராகப் பணியாற்றியதால் சந்திரனுக்குப் பொறுமை அதிகமாகவே இருந்தது. அவள் கேட்கும் வினாக்களுக்குப் பொறுமையாகப் பதிலுரைப்பான்.
                'ஆமாம்! நீ ஏன் இப்படிப் படிக்காதவ மாதிரி கொச்சையா பேசற?'
                'என்ன பண்றது? எங்க தெருவுல நான் மட்டும்தான் ஸ்கூல் போனேன். எங்க அண்ணியும் படிக்காதவங்க. நான் ரொம்ப நல்லாப் படிப்பேன். சின்ன வயசுல  ஸ்டைலா பேசுவேன். அதைக் கேட்டுட்டு 'நான் ரொம்பப் பண்ணிக்கறேன்னு கேலி பன்னினாங்க, என்கிட்ட சகஜமாப் பேச மறுத்தாங்க. அதனாலதான் நான் அவங்க மாதிரியே பேசிப் பழகிட்டேன். இப்ப மாத்திக்கனும்னு நெனச்சாக்கூட வரமாட்டேங்குது சார்'.
                'நீங்க மட்டும் என்னவாம்? நீங்க படிச்சவர்தானே, நல்லாப் பேசத் தெரிஞ்சவர்தானே? அதிகாரிங்ககிட்ட ரொம்ப சுத்தமா பேசற நீங்க பள்ளிக்கூடத்துப் பசங்ககிட்ட மழலைத்தனமா பேசறீங்க, எங்கள மாதிரி பியூனுங்க கிட்ட கொஞ்சம் கொச்சையா பேசறீங்க. ஏன் நீங்க எல்லாரண்டையும் ஒரே மாதிரி பேசலை?' - பாடம் எடுக்கும் சந்திரனுக்கே பாடம் எடுத்தாள்!
            சுந்தரிக்குத்தான் எவ்வளவு அறிவு? அவளை மட்டும் படிக்க வைத்திருந்தால் இந்நேரம் டாக்டர் பட்டம் வாங்கியிருப்பாள் - அவள் அறிவை வியந்துகொண்டான்.
            சந்திரனுக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அவர் செய்யும் சின்னசின்ன செயல்கூட நல்லதாக நினைப்பான். சட்டென்று ஒன்றைப் பற்றிய கருத்தைக் கணித்துவிடுவது தான் அவனுடைய பெரிய குறை. சில நேரங்களில் அவன் கணிப்புச் சரியாகிவிடுவதுண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவன் கணிப்புத் தப்பாகிவிடுவதை அவன் மனைவிதான் கண்டுபிடித்துக் கூறுவாள்.
            மேலதிகாரி - பணியாள் என்ற பேதத்தைச் சுந்தரி மறந்தாள். நட்பைக் காதலாக்க முனைந்தாள். இப்போதெல்லாம் புதுவிதமான கனவுகளில் மிதந்தாள்.
            வரவர சந்திரன் புதிய நூல்களைத் தேடித்தேடிப் படிப்பதைக் கைவிட்டான். செய்தித் தாள்களைக்கூட ஏதோ மேலோட்டமாகப் பார்த்து மடித்துவைத்து விடுகிறான்.
            சுந்தரி வேலைக்கு வருவதற்கு  முன்னால் ஏதேனும் வகுப்பின் ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்றால் தானே அவ் வகுப்பிற்குச் சென்று மாணவர் தன்னம்பிக்கையை வளர்க்கப் பல கதைகளை எடுத்துரைப்பான், தலைவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறி அவர்களின்  வாழ்க்கையை முன் உதாரணமாகக் கொள்ளுமாறு வற்புறுத்துவான்.
            ஓய்வாக இருக்கும் ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுடைய பிரச்சனைகளைக் கேட்டறிவான். ஆண் ஆசிரியர்களை அருகேயுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களோடு உணவருந்துவான். நெடுநேரம் அவர்களோடு அமர்ந்து அளவளாவுவான்.
            மைதானத்தில் விளையாடும் மாணவர்களை அழைத்து அவர்களோடு உரையாடி மகிழ்வான்.
                'நீங்க இல்லன்னா எனக்கு ரொம்ப ரொம்ப போர் அடிக்குது' என்று சுந்தரி இப்போதெல்லாம் அடிக்கடி சொல்கிறாள். அவளுக்குப் போர் அடிக்கக் கூடாது என்பதற்காக முழுநேரத் தோழனாக ஆகிப்போனான் சந்திரன். பிறருக்காக அவன் ஒதுக்கிய நேரம் சிறிது சிறிதாகக் குறைந்தது.
            அரசல் புரசலாக இதனை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள். சமுதாயத்தில் விரும்பப்படாத நிகழ்வுகள் சில  நடக்கும்போது புறமுதுகில் அவர்களைப் பற்றி அவதூறு பேசுவார்களே அன்றி யார்தான் அவர்கள் முகத்துக்கு நேரேசென்று 'நீ செய்வது சரியில்லை' என்று கூறுவார்கள்?
            தவறு செய்பவர்களோ தங்களை யாருமே கவனிக்கவில்லை என்று கற்பனை செய்து கொள்வார்கள்.  இந்தச் சமுதாயமே ஒருவகையில் நேர்மையற்ற சமுதாயமாக இருக்கிறது. நல்லவர்கள் கெடும்போது ஒருவகையில் மற்றவர்கள் சந்தோஷமே அடைகிறார்கள். தாங்கள் நல்லவர்களாக இருக்க முடியாதபோது ஏன் ஒருசிலர் மட்டும் நல்லவர்களாக நடந்துகொண்டு தம்மைக் கெட்டவர்களாக இனம் காட்டுகின்றனர் என்று நினைக்கிறது ஒரு கூட்டம். சமுதாயத்தில் இப்படிப்பட்ட அநியாயங்கள் நிகழும்போது தம் வாய்க்கு மெல்வதற்குத் தீனி கிடைக்கிறதே என்று மகிழ்கிறது ஒரு கூட்டம். ஆக மொத்தத்தில் பல பேருக்கு நல்லவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. தீயவர்களை முகஸ்துதி செய்து அவர்களின் தீமையான வழக்கத்தை மேலும் மேலும் வளர்த்தெடுக்கவே முனைகிறார்கள்.
            இங்கும் சந்திரன் செல்லும் வழியே சரியானது என்று தம் மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் ஒரு கூட்டம் முளைத்தது.
(தொடரும்)

No comments:

Post a Comment