Thursday 5 December 2019

வைக்கம் முகம்மது பஷீர் - தோப்பில் முகம்மது மீரான் சிறுகதைகளில் தன்வரலாற்றுப் பதிவுகள்


வைக்கம் முகம்மது பஷீர் - தோப்பில் முகம்மது மீரான் சிறுகதைகளில் தன்வரலாற்றுப் பதிவுகள்













        மலையாளச் சிறுகதை உலகில் வைக்கம் முகம்மது பஷீருக்கென்று முதன்மை இடமுண்டு. அவருடைய படைப்புகளைப் படித்தும் மொழிபெயர்த்தும் பஷீரின் சாயலில் தம் படைப்புகளைத் தமிழில் படைத்தவர் தோப்பில் முகம்மது மீரான். இருவரும் அடிப்படையில் இசுலாம் சமயத்தினர். இருவருமே இசுலாத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தாலும் இசுலாமியரால் பின்பற்றப்பெறும் காலத்திற்கொவ்வாத பழ மரபுகளை எதிர்த்தவர்கள். அதனால் தம் கால உறவுகளால் பல துன்பங்களுக்கு உள்ளானவர்கள். இவ்வாறு இருவருக்கிடையேயும் இழையோடும் ஒற்றுமைகள் அவர்தம் படைப்புகளிலும் இழையோடுவதைக் காணமுடிகிறது. எனவே, அவர்கள் இருவரின் படைப்புகளையும் ஒப்புநோக்குதல் பொருத்தமானது; தேவையானதும் கூட.
பஷீர் ஏறக்குறைய நூறு சிறுகதைகளைப் எழுதியுள்ளார். 1945இல் ஜென்ம தினம் எழுதினார். ஓர்மக் குறிப்பு, அனர்க நிமிஷம், விட்டிகளோடே சொர்க்கம், பாவப்பட்டவரோடே வேசியா, விசுவ விக்கியாதமாய மூக்கு, விசப்பு, ஒரு பகவத் கீதையும் குறெ முலைகளும், ஆனப்பூட, சிரிக்குன்ன மரப்பாவ, பூமியுடெ அவகாசிகள், சிங்கடி முங்கன், யா இலாஹி முதலானவை பஷீரின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள்.
மீரான் எழுதிய முதல் சிறுகதை பூவும் பூக்கூடையும் என்பதாகும். எனினும் 1968இல் பிறை இதழில் நரகபூமி என்ற சிறுகதையே முதன்முதல் வெளியானது. அதற்குப் பிறகு சுமார் 35 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர் அவரது 48ஆம் வயதில் அடுத்த கதை வெளிவந்தது.
கதைக்கரு
கதைக்கருவைப் பொறுத்தவரை இருவரும் தம் அனுபவங்களைப் படைப்புகளில் பயன் கொண்டனர். தன் சொந்த வாழ்வின் சாரத்திலிருந்தே பஷீர் தன் படைப்புகளை உருவாக்கினார். (பவா செல்லதுரை, 169) என்று பஷீரின் கதைக்கரு பற்றி பவா செல்லதுரை கருத்துரைக்கிறார்.
இசுலாமியரின் கல்வியறிவு, குடும்ப உறவுகள், பெண் முன்னேற்றம், விழிப்புணர்வு ஆகியவற்றை பஷீர், மீரான் இருவரும் தம்படைப்புகளில் மையப்படுத்தினர்.
கதைமாந்தர்
இருவரின் படைப்புகளிலும் அவர்களும் அவர்தம் சுற்றமும் நட்பும் சமகாலச் சமூக மாந்தரும் இடம்பெறுகின்றனர்.
உலக இலக்கியம் இன்றளவும் நாயகர்கள் எனக் கொண்டாடும் வேசிகள், குற்றவாளிகள், திருடர்கள், கூட்டிக் கொடுப்பவர்கள் இவர்களே பஷீரின் கதாநாயகர்கள். அவர்களுள் சுரக்கும் ஈரக்கசிவைப் பஷீர் தம் கதைகளால் ஸ்பரிசித்தார். (பவா செல்லதுரை, 170) என்று பஷீரின் கதைமாந்தர் குறித்துப் பவா செல்லதுரை எடுத்துரைக்கிறார்.
தன் வரலாற்றுப் பதிவுகள்
சமயம் வாய்க்கும்போதெல்லாம் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் முன் நிகழ்ந்தனவற்றைப் பிறரிடம் சொல்லி மகிழ்வதும் வருந்துவதும் அங்கலாய்ப்பதும் பெருமிதப் பட்டுக்கொள்வதுமாகக் காலங்கழிக்கின்றனர். அவற்றில் பலவிதமான சுவாரஸ்யமான தகவல்களும் இடம்பெறலாம். சமுதாயத்திற்குத் தேவையான அனுபவங்களும் வெளிப்படலாம். காலங்காலமாகப் போற்றப்படவேண்டிய செய்திகளும் இருக்கலாம். வரலாற்று நிகழ்வுகளும் தடம்பதிக்கலாம். அக்காலத்திய பண்பாடு போன்றவையும் வாழ்க்கைக் கட்டமைப்புகளும் சொல்லப்படலாம். நிலவியல் அமைப்புகள் போன்றவையும் ஆராயப்படலாம். ஆனால் அவை அனைத்தும் பேச்சளவில் நின்றுபோய் காலப்போக்கில் மறக்கப்பட்டுவிடுகின்றன. எனினும் சிறந்த படைப்பாளர்கள் இத்தகைய தம் வாழ்வில் நிகழ்ந்த சிறுசிறு செய்திகளையும் தம் படைப்புகளின் மூலமாகப் பதிவுசெய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர் எனலாம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளைக் கதையோட்டத்தில் நயமாக வெளிப்படுத்திவிடுகின்றனர். தங்கள் வாழ்க்கை வரலாற்றையும் வாய்க்குந்தோறும் ஆவணப்படுத்திவிடுகின்றனர்.
அவ்வகையில் வைக்கம் முகமது பஷீர், தோப்பில் முகமது மீரான் இருவருமே தம் வாழ்க்கைப் பதிவுகளைச் சிறுகதைகளில் அடையாளம் காட்டிவிடுகின்றனர். அப்படைப்புகளின் வழியாக இருவர்தம் வாழ்க்கையினைக் கட்டமைக்க இயலும் எனலாம்.
பிறப்பும் இளமையும்
பஷீர், மீரான் இருவரது இளமைக் காலத்திலும் ஒற்றுமை இழையோடுகிறது. இருவரும் வணிகப் பின்புலம் உடையவர்கள்.
பஷீர் ஜனவரி 21, 1908இல் திருவிதாங்கூரில் பிறந்தார். தந்தை காயி அப்துல் ரஹ்மான்; தாயார் குஞ்ஞாச்சும்மா. இவருடன் பிறந்தோர் மூன்று ஆண்பிள்ளைகளும் இரண்டு பெண்பிள்ளைகளுமாவர். பஷீரின் தந்தை மரவியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினார். எனினும் இடையே வணிகம் நொடித்துப்போக வறுமை ஆட்கொண்டது.
தேங்காய்ப் பட்டணத்தில் 1944, செப்டம்பர் 26இல் மீரான் பிறந்தார். பெற்றோர் தமது பிறந்தநாளைக் குறித்து வைக்காததால் தமது உண்மையான பிறந்த நாள் தெரியாது என்று மீரான் தம் கதை மூலமாகப் பதிவு செய்கிறார். அம்சி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்காக தாம் படித்த அரசு ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கும்போதுதான் பதிவேட்டில் அவருடைய பிறந்தநாள் பதியப்படாதது தெரியவந்தது. பெற்றோருக்கும் அந்த தேதி ஞாபகத்தில் இல்லை. குத்துமதிப்பாக இந்தத் தேதியை வாசுபிள்ளை சார் குறித்ததாகப் பதிவுசெய்கிறார் மீரான். தன் பிறந்தநாள் குறிக்கப்பட்ட சூழலை,
ஒண்ணு செய்வோம். அஞ்சு வயசில் பள்ளிக்கூடத்தில் சேர்த்ததுபோல ஒரு ஆண்டு, மாசம், தேதியைக் கணக்குப் பண்ணிப் போட்டு டி.சி.யைக் கொடுப்போம். மத்தது பிறகு பார்ப்போம். அரை கிளாஸ் வாசு பிள்ளை சார் சொன்ன யோசனை ஹெட்மாஸ்டருக்கும் பிடித்திருந்தது. கையிருன்னிஸாவைக் குட்டிம்மா பிரசவித்த ரஜப் பத்துலுமல்ல; வாப்பாவின் கணக்குப்படி சித்திரை மாதம் நெத்தோலி பட்ட நாளிலுமல்ல; அரைகிளாஸ் வாசுபிள்ளை சார் கணித்துப் போட்ட ஆண்டு மாதம் தேதியில் என் உம்மா என்னைப் பிரசவித்தாள்! 26.9.1944இல்! பிறந்த ஆண்டு, மாதம், தேதி தெரிந்துகொண்ட மனக்களிப்புடன் டி.சி.யைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்தேன். அம்சி உயர்நிலைப் பள்ளியில் ஒண்ணே கால் ரூபாய் முதலில் சேரும்போது கட்ட வேண்டும். (மீரான், பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு, 427-28)
என்று பதிவுசெய்கிறார் மீரான்.
மீரானுடன் சேர்த்து இவர் பெற்றோர்க்குப் பதினான்கு பேர் மகவுகளாவர். இவர் தந்தை கருவாட்டு வியாபாரம் செய்தார். கன்னியாகுமரியில் கருவாடு வாங்கி, அதனை இலங்கை முதலான இடங்களில் விற்றுப் பெரும்பொருள் ஈட்டினார். பின்னர் நண்பர்களின் ஏமாற்றுதலால் பொருளிழந்து வறுமையில் வீழ்ந்தார்.
பிறந்த இடத்தின் பதிவு
ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த மண் எத்தகைய தரத்தோடு இருந்தாலும், அதுவே அவருக்குப் பிடித்தமான இடமாக மனத்தில் பதிந்துவிடுகிறது.
நாங்கள் நடக்கும் வழி - ராஜபாதைதான். ஆனால் தார்ரோடல்ல. பாதையின் இருபுறமும் மரங்கள். இடையிடையே வீடுகளுமிருந்தன. வழிப்பாதையில் வாகனங்கள் எதுவுமில்லை. ஆட்களின் சஞ்சாரமெல்லாம் அப்போது நடந்துதான். (பர்ர்ர்...! , மூக்கு 297-98)
என்று தமது இருப்பிடத்தையும் அன்றைய வாழ்நிலையையும் பதிவுசெய்கிறார் பஷீர்.
மீரான் தமது கிராமத்தைப் பற்றியும் அங்கிருந்து தெரியும் சூரியன் தோன்றும் பாறை மற்றும் ஊசிக் கிணறு பற்றிய நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறார். ஊசிக்கிணற்றைப் பாதுகாக்கும் பாம்பு எதிரே தோன்றி பெயரைக் கேட்கஎனக்கப் பேரு மீரான். வீடு தோப்பில்” (161) என்று பதிலிறுக்கிறார்.
நாலு மூட்டுத் தென்னையும் கொஞ்சம் பனைமரங்களும் முந்திரி மரமும் ஒரு பின்னை மரமும்தான் எங்கள் தோப்பிலுள்ள மரங்கள். முன்னொரு காலத்தில் புலி பதுங்கியிருந்த குகையும் அங்குண்டு. மனித வாடையை அறிந்தால் விரட்டிக் கொத்தும் கொடூரமான பாம்புகள் நிறைந்த கைதைக் காடும் பாறைக் கூட்டங்களும் அங்குண்டு. (மீரான், மொட்டைக் கடிதம், வேர்களின் பேச்சு, 137)
என்று தம் தோப்பினைச் சித்திரிக்கிறார்.
தம் ஊருக்கு அருகேயிருந்த சேண்ட பள்ளி என்னும் ஊர் குறித்த செய்திகளை மையமிட்டு கேள்வியின் விளிம்பில் (303-311), ஆதத்தின் மகன் மைதீன் பிள்ளை (112 - 16) முதலான சிறுகதைகளைப் புனைந்துள்ளார் மீரான்.
பிள்ளைப் பருவம்
ஆனைமுடி என்னும் சிறுகதை பஷீரின் பிள்ளைப் பருவத்தை மையமிட்டதாகும். தொடர்ந்து படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தினை மாற்றுவதற்காகக் கொம்பானையின் கீழ் தான் நடந்துசெல்லக் கட்டாயப் படுத்தப்பட்டதையும் தன் சிநேகிதி ராதாமணி கேட்டதற்காக ஆனைமுடியொன்றைப் பெறப் பஷீர் எடுத்த முயற்சிகளும் இக்கதையின் கருவாக அமைகின்றன. இவற்றை மையமிட்டுத் தமது பிள்ளைப் பருவக் குறும்புகள், குழந்தைமையில் மாதவிக்குட்டியின் பால் அருந்தியது, தம்பி அப்துல்காதருடனான பாசமிக்க மற்றும் முரண்பட்ட பொழுதுகள், அவர்களுடைய நண்பர்களான நத்துதாமு, ராதாமணி, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், ஆசிரியர் புதுசேரி நாராயணபிள்ளை, அக்காலத்தில் நாட்டை ஆண்டவர்கள், நாட்டுப் பிரிவினை எனப் பெயர்களுடனும் விவரங்களுடனும் இக்கதையில் பதிவுசெய்கிறார் பஷீர்.
தந்தையின் மரவியாபாரம் குறித்துப் பஷீர் தம் கதைகளில் பதிவுசெய்கிறார் (பர்ர்ர்...!, மூக்கு, 297).
அப்போதெல்லாம் நாங்கள் கண் விழிப்பதே ஆனையின் முகத்தில்தான். வாப்பா, தடி வியாபாரம் செய்யும் வியாபாரி. குடயத்தூர் மலையிலிருந்து தடிகளை வெட்டி, கட்டுகளாகக் கட்டி நதி வழியாகக் கொண்டுவருவார். வீட்டின் பக்கத்தில், நதிக்கரையில் தடிகளை இழுத்துப் போட்டு அடுக்கி வைப்பதற்குத்தான் இந்த ஆனைகள். வீட்டின் பக்கத்திலுள்ள தோட்டங்களில்தான் ஆனைகளைக் கட்டிப்போடுவது. அவற்றிற்குத் தென்னையோலைகள், பனையோலைகள் போன்றவற்றைக் கொடுக்கும் வேலையை நான் மேற்பார்வை செய்வேன். அதாவது பார்த்துக்கொண்டு நிற்பேன். (ஆனைமுடி, மூக்கு, 270)
என்று ஆனைமுடி கதையில் தந்தையின் மரவணிகம் குறித்து விரிவாகவே எடுத்தியம்புகிறார்.
உம்மாவின் ரூஹ் (255-263) என்னும் சிறுகதையில் தம் தாயைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் தம் தாய் பதின்மூன்று பிள்ளைகளைப் பெற்றதையும் (258) தாம் ஐந்தாவது மகனாகப் பிறந்த தகவலையும் (263) பதிவுசெய்கிறார் மீரான்.
அன்று இரவும் எப்போதும் போல் உம்மாவோடு சேர்ந்து படுத்துக் கொண்டேன். உம்மாவின் வாசம் அடித்தாதான் உறக்கம் வரும். வாயிலிருந்து வேப்பான புகையிலையின் வாசம். தலையிலிருந்து யானைக்குழி ஆசான் கொடுத்த நீரிறக்கத்திற்குள்ள தைலத்தின் வாசம். கல்யாண வீட்டுக்குப் போகும்போது உம்மா லாச்சுப் பெட்டியிலிருந்து எடுத்து அணியும் உடையிலுள்ள பாச்சா மருந்தின் வாசம்! இவைதான் உம்மாவின் வாசம். (மீரான், பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு,  424)
என்று தம் தாயோடு படுத்துறங்கியதையும் தன் மனத்தில் என்றும் நீங்காருதிக்கின்ற தாயின் வாசத்தையும் ஆவணப்படுத்துகிறார் மீரான்.
சூரியனைப் பிரசவிக்கும் பாறையில் மீரானின் இளமைக் காலத்து நிகழ்வு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மீரான், அவருடைய பெற்றோர், ஆசிரியர் - இவர்களே இக்கதையின் மாந்தராக இடம்பெறுகின்றனர். தம் பெயரையும் மீரான் இக்கதையில் பதிவுசெய்கிறார்.
நான் மூக்குச் சளியைப் புறங்கையால் துடைத்தேன். அந்தக் கையை நிக்கரில் தேய்த்துக்கொண்டு எழுந்தேன். பட்டன் இல்லாத நிக்கர் கழன்று விழாமல் இருக்கக் கையில் பிடித்துக்கொண்டேன். (சூரியனைப் பிரசவிக்கும் பாறை, 158)
என்று தம் பிள்ளைக் காலத்தைப் பதிவுசெய்கிறார் மீரான்.
            மீரான் அம்சி பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றார். அச் செய்தியையும் அப் பள்ளியில் படித்த காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வினையும் உம்மாவின் ரூஹ் என்னும் சிறுகதையில் பதிவிடுகிறார்.
அம்சி பள்ளிக் கூடத்தில் வள்ளியின் மகன் ராகவன் பயல் என்னோடுதான் படித்தான். என் மொட்டைத் தலையைப் பார்த்துக் கேலி செய்தான். ராகவன் பயலுக்கு ஓங்கி ஓர் உதை வைத்தேன் நெஞ்சாம் பலவை நோக்கி. மூச்சுவிடத் திணறி அப்படியே உட்கார்ந்துவிட்டான். பயந்துபோய்த் தலைதெறிக்க ஓடித் தப்பிவிட்டேன். மறுநாள் பள்ளிக்கூடம் செல்லும்போது வழிமறித்து நிற்கிறார்கள் - வள்ளி, ராகவன் பையன், அவன் அண்ணன் நீலாண்டனும் மாதவனும். வீட்டுக்கு ஓட முயன்ற என்னை எட்டிப் பிடித்தது மாதவன். நீலாண்டன் கையில் தென்னை ஓலை கீறுவதற்குள்ள பளபளக்கும் நீண்ட வலியாத்தி (பெரிய கத்தி). என் நெஞ்சாங்குலை நடுநடுங்கியது. அற்று விழுந்தது. ஊராளி, வெட்டினாலும் வெட்டுவான்! (மீரான், உம்மாவின் ரூஹ், வேர்களின் பேச்சு, 260)
என்று தமக்கும் தன் நண்பனுக்கும் நிகழ்ந்த சண்டையை விவரிக்கிறார். ஆனால் ராகவனின் தாய் வள்ளி மீரான் குழந்தையாக இருக்கும்போது தன் முலைப்பாலைக் கொடுத்து வளர்த்ததைச் சுட்டிக்காட்டி ஊறு நேராமல் விடுக்கிறாள்.
நீங்கொ பச்சப் பாலகனாட்டு இருக்கும்போ, நீங்கொ உம்மா நீங்களெ போட்டுட்டுப் போயிட்டாங்கொ. அப்போ நானாக்கும் தெவசவும் வந்து நீங்களுக்கு முலப்பாலு தந்தது. எக்கெ ராகவன் பயலுக்குள்ள பாலெயாக்கும் நீங்கொ குடிச்சியோ, அவனை நீங்கொ அடிக்கலாமா?” வள்ளி கண்களைத் துடைத்துத் தந்தாள். (மீரான், உம்மாவின் ரூஹ், வேர்களின் பேச்சு, 261)
என்று தமக்குப் பாலூட்டிய வள்ளியைப் பற்றிய குறிப்பையும் வெளிப்படையாகப் பதிவிடுகிறார். பஷீரும் தமக்கு மாதவிக்குட்டி பாலூட்டிய தகவலைப் பதிவிடுகிறார்.
நீ மாமிட்டே இருந்து பால் குடிச்சிருக்கே, இந்த மாதவிக் குட்டிட்டே இருந்தும் பால் குடிச்சிருக்கே.” (ஆனைமுடி, மூக்கு 283)
என்று தம் தாய் உரைத்ததாகப் பஷீர் குறிப்பிடுகிறார்.
கல்வி
பஷீர், மீரான் இருவருக்குமே பள்ளிக்கல்வி எளிதாய் அமையவில்லை.
பஷீரின் காலத்தில் இசுலாமியரிடையே மதக் கல்வியைத் தவிர பள்ளிக் கல்வி தடைசெய்யப்பெற்றிருந்தது. ஆங்கிலக் கல்வி இபுலீசின் மொழி என்றும் நரகத்து மொழி என்றும் பழிக்கப்பெற்றது. எனினும் இக் கொள்கைகளைப் பஷீரின் தந்தை ஏற்கவில்லை. தம் சமூகத்தினரின் எதிர்ப்புகளுக்கிடையே பஷீரை ஆங்கிலக் கல்வியில் சேர்ப்பித்தார். குர்ஆன் படித்ததுடன் வைக்கம் ஆங்கிலப் பள்ளியில் ஆங்கிலமும் இந்தியும் கற்றார் பஷீர். பஷீரின் சகோதரிகளும் மேல் சட்டையோடு முக்காடு அணிவிக்கப் பெற்று ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப் பெற்றனர். விளைவாக இசுலாம் சமூகத்தினர் பஷீரின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தனர்.
சுதந்திரப் போராட்டத்தின் தீவிரத்தால் பஷீர் தம் கல்வியை நிறுத்தினார். 1925 மார்ச் 8இல் வைக்கம் போராட்டத்திற்காக காந்திஜி வைக்கம் சென்றபோது அவரது மேனியைத் தம் கைகளால் தொட்டுப் புத்தெழுச்சி பெற்றார் பஷீர். தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1930இல் உப்புச் சத்யாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.
தம் ஆரம்பக்கல்விக் காலத்தைப் பிறப்பின் விசித்திரம் (421-428) கதையிலும் உயர்நிலைப் பள்ளிக் கல்விக் காலத்தைக் குட்டன்பிள்ளை சார் (414-420) கதையிலும் பதிவுசெய்கிறார் மீரான்.
பள்ளி மாணவர்கள் எச்சில் கொண்டு சிலேட்டில் எழுதியதை அழிப்பதுபோல் தானும் துப்பல் தொட்டு அழித்த செய்தியையும் நுண்மையாகப் பதிவிடுகிறார் மீரான் (பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு,  422).
முத்தாரம்மன் கோவில் கொடை கொட்டுமேளமும் பெண் வேடம் கட்டிய ஆணின் கம்பாட்டமும் கியாஸ் லைட் வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்ததில் வீட்டுப் பாடம் எழுதவில்லை. எழுதாமல் போனால் தொலைத்தோல் ¬ரைகிளாஸ் வாத்தியாரின் பூச்செடிக் கம்பில் ஒட்டி விடும். அந்த நெஞ்சுக் கலக்கத்தில் மறுநாள் பள்ளிக்கூடம் செல்லாமல் சாய்ஞ்ச மாமரத்தின் உச்சாணிக் கொம்பில் இலை மறைவில் உட்கார்ந்து கொண்டிருந்து பெய்த மூத்திரம், அங்குத் தேடி வந்த வாத்தியாரின் வழுக்கைத் தலையில் சாரலாக விழுந்து என்னைக் காட்டிக் கொடுத்தது. (மீரான், பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு,  423)
என்று தாம் செய்த குறும்புச் செயலையும் வெளிப்படையாகச் சொல்கிறார் மீரான்.
புத்தகத்தில் மயிலிறகு வைத்தால் அது குட்டி போடும் என்ற நம்பிக்கை எவ்வாறோ பள்ளி செல்லும் அனைத்துக் குழந்தைகளிடமும் காலங்காலமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இத்தகைய நம்பிக்கையை மீரானும் தம் சிறுவயதில் கொண்டிருந்தார் என்பதை,
முன்பின் பல பக்கங்கள கிழிந்து விட்ட கேரளப் பத்திய பாடாவலிக்குள் குட்டி போட வைத்த மயில் இறக்கை குட்டி போடவில்லை. என் புத்தகத்திற்குள் வைக்கப்பட்ட மயில் இறக்கையை மலடு என்றார்கள். (மீரான், பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு,  422)
என்று குட்டிபோடாத தமது மயிலிறகின் உண்மையை எடுத்துரைக்கிறார்.
இளமைப் பருவம்
பர்ர்ர்...! (மூக்கு 297-305) என்னும் சிறுகதை பஷீரின் பதிமூன்று பதினான்கு வயதில் இருபது வயது நங்கைமேல் நேர்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்துகிறது. அக்கதையில் தாமும் தம் தந்தையும் அணிந்த ஆடையைப் பற்றியும் தோற்றத்தையும் கீழ்வருமாறு பதிவுசெய்கிறார் :
கால்களில் செருப்பில்லை. ஒரு வௌ;ளை வேட்டி உடுத்தியிருக்கிறேன். சிவப்புக்கோடு போட்ட காலர் வைத்த வௌ;ளைச் சட்டை. தலைமுடியை ஒட்ட வெட்டியிருக்கிறேன். என் முன்புறம் வாப்பா நடந்து போய்க்கொண்டிருக்கிறார். நான் உடுத்தியதுபோன்ற உடைகள்தான் வாப்பாவும் உடுத்தியிருந்தார். தலையில் ஒரு தொப்பியும் ஒரு குடையும் அதிகமாக வைத்திருந்தார். (297)
அக்கதையில் அவர்கள் சென்ற இடப்பகுதிகளையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
இரவுக்காலத்தில் தோப்பில் தென்னங் குலைகள் களவாடப்படுதல் அடிக்கடி நிகழும் ஒன்றாகும். லருவாய்க்காக வளர்க்கப்படும் இத் தேங்காய்களின் இழப்பு குடும்பப் பொருளாதாரத்தை வீழ்ச்சியுறச் செய்யும். அதனால் தோப்புக்குரியவர்கள் களவாடுபவர்கள் மீது சினமும் ஆத்திரமும் கொள்ளுதல் இயல்பு. மீரானுடைய தோப்பிலும் இத்தகைய களவுகள் அடிக்கடி நிகழ்ந்திருக்கக் கூடும். அதனைச் சில கதைகளில் பதிவுசெய்யத் தவறவில்லை.
அந்தக் கள்ளப் பயலுவொளாக்கும் தேங்காக் குலையைக் களவாங்குது. பாத்தால் பாவம். திருட்டுப் பயலுவோ என்று சொல்லவே முடியாது. அவ்வளவு லட்சணமான தோற்றம். ஆனால் இந்தப் பகுதியிலுள்ள தேங்காய்க் குலைகளையெல்லாம் திருடிச் செல்வது இந்தக் கள்ளப் படுவாக்கள்தான். கையில் பிடி கிடைத்தால் ஒரே வெட்டு. கையையோ கழுத்தையோ வெட்டித் தென்னை மரத்தின் மூட்டிற்கு உரமாக வைக்கணும். மைதீன் பீவி பல்லை நெரித்தாள். (மீரான், கொலுசு அணிந்த பாதங்கள், வேர்களின் பேச்சு, 180)
என்று தம் கோபத்தை மைதீன் பீவி மூலமாகப் பதிவுசெய்கிறார் மீரான்.
இளமைக்கால நினைவின் ஏக்கப் பதிவு
காலங்கள் மாற மாறச் சூழலும் பண்பாடும் மனிதப் பண்புகளும் மாறவே செய்கின்றன. அதனால் பழைய காலத்தையும் தாம் பிறந்து வளர்ந்த இடத்தின் நினைவுகளையும் அசைபோடுதல் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழக்கூடிய ஒன்று. படைப்பாளர்கள் இத்தகைய நினைவுகளைத் தம் கதைகளில் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்திவிடுகின்றனர் எனலாம். சங்கப் புலவர் தொடித்தலை விழுத்தண்டினாரின்இனிநினைந்து இரக்கமாகின்றுஎனத் தொடங்கும் பாடல் (புறநானூறு 198) இத்தகைய ஏக்கத்தின் முதல் பதிவாகும். அவ்வகையில் பஷீரும் மீரானும் தம் இளமைக்கால நினைவுகளை நினைத்து ஏங்குவதைப் பதிவுசெய்துள்ளனர்.
எவ்வளவு நல்ல ஒரு பொற்காலம் அது. அந்தக் காலம் எங்கே... இந்தக் காலம் எங்கே... அப்போதெல்லாம் சூரியன் எவ்வளவு பிரகாசமாக இருந்தது. நிலவென்றால் அந்தக் காலத்திலுள்ளதுதான் நிலவு. பூக்களெல்லாம் எவ்வளவு அழகும் நிறமும். குயில்களின் கூவல்தான் அப்போதெல்லாம் எவ்வளவு இனிமையாக இருக்கும். ஆற்று நீர் எப்படித் தெளிந்தோடியது. எவ்வளவு மீன்பாடு. பறவைகளும் மலர்களும் பறப்பதும் அசைந்தாடுவதும் ஹோ, எவ்வளவு அற்புதமான காலம். எட்டு ஒன்பது வயதான நாங்கள்தான் உலகின் உயிர் மூச்சு. எங்களை வட்டமிட்டேதான் காலமும் சுழன்றுகொண்டிருந்தது. (ஆனைமுடி, மூக்கு, 272)
என்று இளமைக் காலத்தைக் குறிப்பிட்டு ஏங்குகிறார் பஷீர். சூரியனும் நிலவும் கூட சிறுவயதில் கண்டதுபோல் இல்லை என்று கூறி நயத்தை மிகுவிக்கிறார் ஆசிரியர்.
முகம்மது மீரான் தாம் பிறந்து வளர்ந்து இளமைக்காலத்தைக் கழித்த தேங்காய்ப் பட்டணத்தின் பழைய நிலவியல் தன்மையை நேற்று வந்த வழி என்னும் சிறுகதையில் மிக விரிவாகப் பதிவுசெய்கிறார்.
பன்னிரண்டு வயதில் ஊரைவிட்டு ஓடிச்சென்று அறுபத்தெட்டு ஆண்டுகள் கழித்துத் தம் எண்பது வயதில் உறவுகளைத் தேடிச் சொந்த ஊருக்குத் திரும்பும் முஸ்தபா என்பவரின் கதையாக நேற்று வந்த வழி என்னும் சிறுகதை பின்னப்பட்டுள்ளது.
புன்னமூட்டுக் கடையில் நின்னால் கொல்லக்குடி தெரியும். அவ்வளவு திறந்தவெளி.  இப்போ எல்லாம் புதுசு. பழசு ஒன்றையும் காணோம். ஒரு ரேகை கண்டுபிடிப்பதற்கு. (மீரான், நேற்று வந்த வழி, வேர்களின் பேச்சு,  88)
என்று இளமையில் தாம் வாழ்ந்த தேங்காய்ப் பட்டணத்தை முஸ்தபாவின் மூலமாக வெளிப்படுத்துகிறார். மேலும் பிறந்த மண் என்னும்போது ஏற்படுகின்ற சிலிர்ப்பையும் புலப்படுத்துகிறார்.
அப்போது ஒரு ஆப்பம் ஒரு காசு. பதினாறு காசு ஒரு சக்கரம். இரண்டு சக்கரம் ஒரு அணா. ஒரு அணா இன்றைய ஆறு பைசா. (மீரான், நேற்று வந்த வழி, வேர்களின் பேச்சு,  85)
என்று அன்றைய நடைமுறை வாழ்க்கையையும் ஆவணப்படுத்துகிறார்.
தம் பிறப்பு, பெற்றோர், உடன் பிறந்தார், மனைவி மக்கள், சுற்றத்தார் அவர்தம் பெயர்கள், பண்பு நலன்கள், வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகள், குறும்புகள், பொழுதுபோக்கு, ஈடுபாடு போன்றவற்றை வாய்க்குந்தோறும் இருவரும் பதிவுசெய்கின்றனர். படைப்பாளர்கள் இவ்வாறு தம் வாழ்க்கையைப் பதிவிடுதல் உண்டென்றாலும் இவ்விருவரின் கதைகளிலும் இத்தன்மை தூக்கலாகக் காணப்படுகிறது. தன் வரலாற்றைப் பதிவுசெய்யும் பஷீரின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த தாக்கத்தால் மீரானும் இத்தகைய போக்கைக் கைக்கொண்டார் எனலாம். இருவரின் படைப்புகளிலும் ஒரே தன்மையதான நிகழ்வுகளின் பதிவுகளைக் காணமுடிகிறது. இசை, பயணம், சிறை வாழ்க்கை ஆகியவை பஷீரின் படைப்புகளில் மட்டுமே காணப்படுகின்றன. இப் பதிவுகள் இருவருக்குமான வாழ்க்கைப் பின்புலத்தின் வேறுபாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றன எனலாம்.
பயன் நூல்கள்
வைக்கம் முகம்மது பஷீர், உலகப் புகழ்பெற்ற மூக்கு, குளச்சல் மு. யூசுப் (மொ..), நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம், 2008.
வைக்கம் முகம்மது பஷீர், அனல் ஹக், குளச்சல் மு. யூசுப் (மொ..), நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம், 2015.
தோப்பில் முஹம்மது மீரான், வேர்களின் பேச்சு, புத்தாநத்தம் : அடையாளம் வெளியீடு, 2009.
எம்.என். காரச்சேரி, வைக்கம் முகம்மது பஷீர்,  தோப்பில் முகம்மது மீரான் (மொ.), புதுதில்லி : சாகித்திய அகாதெமி, 2010.
பவா செல்லதுரை, பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல, திருவண்ணாமலை, வம்சி புக்ஸ், 2016.