முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 15
பள்ளித் தேர்வுகளைத் தொடர்ந்து விடுமுறை வந்தது. தனது தலைமையாசிரியப் பதவியைக்
காரணம் காட்டி மாணவர் சேர்க்கைக்காகத் தான் தினந்தோறும் முழுநேரமும்
பள்ளி செல்லவேண்டும் என்று மனைவியிடம் கூறிவிட்டான். சுந்தரியின்
பாதுகாப்பும் இனித் தன்னைச் சேர்ந்ததல்லவா?
தனக்காகச் சுந்தரி செய்ய எடுத்துக்கொண்ட தியாகம் அவன் மனத்தை மெழுகாய்
உருக வைத்தது. சுந்தரியின் சின்ன அசைவுகளும் சொற்களும் கூட இப்போதும் எண்ணி
எண்ணி வியக்கும் அளவிற்குப் பெருமிதம் கொண்டன.
இருவரும் சேர்ந்த அன்று, புணர்ச்சி என்பது இதுதானோ? என்று அவள் அவனைப் பார்த்து
வெட்கத்தோடு கேட்டாள். அந்தக் கேள்வி ஒன்றே அவள் கற்பின் திருவுரு
என்பதைப் புலப்படுத்தி விட்டதாக அவன் கருதினான்.
பெரும்பாலான பெண்களின் மனத்திலும் முதற் சேர்க்கையில் அத்தகைய விடையறியா வினா தொக்கி நிற்கக்
கூடும் என்பதை அவன் நினைவுகூர மறந்தான்;
மறுத்தான். எல்லாப் பெண்களும் திருமணத்தன்று கொக்கோகம் படித்துவிட்டா மணமகனிடம் வருகின்றனர்?
'சினிமாவுல ஆம்பள ஒருத்தன் பொம்பள ஒருத்திகிட்ட நெருக்கமா உக்காருவான். ஒருத்தர ஒருத்தர் தொட்டுகுவாங்க. அப்பறம் பாத்தா கொழந்த பொறந்துடும். இதைப் பார்த்துட்டு நானும் சின்னப் புள்ளைல ஒரு பொண்ண அப்பா,
அண்ணன்னு சொந்தம் இல்லாத மத்த ஆம்பள எவனாச்சும்
தொட்டுட்டா குழந்த பொறந்துடும்னு நெனச்சுக்குவேன். பஸ்சுல போம்போது யார் கையாச்சும் என்மேல
எதேச்சையா பட்டுட்டா பயந்துபோய் அந்த எடத்தத் தட்டி
விட்டுக்குவேன். கடவுளே விபரீதம் ஒன்னும் ஆயிடக்கூடாதுன்னு கடவுளயும் வேண்டிக்குவேன்' என்று தன் மனைவிகூட கல்யாணமான
புதிதில் கூறியிருக்கிறாள். அவளுடைய அப்பாவித்தனத்தை அன்று அவன் ரசித்ததை இன்று
மறந்துபோனான். இப்போது சுந்தரியின் அப்பாவித்தனமே விசுவ ரூபமாகத் தெரிந்தது.
சந்திரன் பகுத்தறிவு வாதியாக இருந்தவன். தன் மாணவருக்குப் பகுத்தறிவுப்
பாதையைக் காட்டியவன். ஆனால் இன்றோ அவன் சுந்தரி என்ற
பயங்கரமான கற்பனாவாதியின் கைப்பிடியில் சிக்கிக்கொண்டான். அவள் அவனைக் கட்டிப்பிடித்துக்
கற்பனைச் சகதியில் புரட்டி எடுத்தாள். அச் சகதியின் மையத்தில்
தோன்றிய ஒரு பொந்துவழியாக இழுத்துச்சென்றாள்.
உள்ளே ஒரு மாயலோகம் இருந்தது.
அங்கே பகுத்தறிவுக்கு வழியில்லை. எங்கும் வண்ண வண்ண விளக்குகள்.
சுவர்களில் பதிக்கப்பெற்ற கண்ணாடிச் சில்லுகளில் அவர்கள் உருவம்பட்டுக் கோடிக் கணக்கான பிம்பங்களைத் தோற்றுவித்தன. எங்கும் அவர்களாகத் தெரிந்தார்கள். எங்கும் மாயத் தோற்றம். அங்கே அவர்கள் ராஜா ராணியாக உலா
வரலாம். அங்கே அவர்களைக் கேள்வி கேட்க யாரும் முன்வரமாட்டார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் ஆமாம்
என்பார்கள். வணங்கி வழிவிடுவார்கள். எந்தத் தவறையும் சரியென்றே கூறுவார்கள். அங்கே விமரிசனங்கள் எழாது.
புடவைக் கடையில் நுழைந்ததும் நாம் எந்தப் பகுதிக்குச்
செல்கிறோமோ அந்தப் பகுதியில் இருப்பவர் அங்குள்ள பிரகாசமான விளக்குகளைப் போட்டு விடுவார். நாமும் நல்ல வெளிச்சம் இருந்தால்தான்
புடவையை நன்றாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க முடியும் என்று மனப்பால் குடிப்போம். ஒரு மணிநேரம் பார்த்துப்
பார்த்துத் தேர்ந்தெடுத்த புடவையை வீட்டிற்கு எடுத்துவந்து சூரிய வெளிச்சத்தில் விரித்துப் பார்த்தால் நாம் கடையில் கண்டு
உள்ளத்தைப் பறிகொடுத்த நிறம் ஒன்றாய் இருக்கும். இப்போது நம் கண்களுக்குப் புலப்படும்
நிறம் வேறொன்றாய் இருக்கும். மொத்தத்தில் அந்த நிறம் நமக்குப்
பிடிக்காத ஷேடில்கூட அமையலாம். 'இதைப்போயா அழகாய் இருக்கிறது என்று எடுத்தோம்?' என்று நம் கண்களையே நம்பமுடியாமல்
திகைப்போம்.
சந்திரனின் நிலையும் முதல்தடவை புடவை எடுத்த கதையானது. அவன் அதற்குக் கொடுத்த
விலையும் அதிகம்.
சுந்தரி பள்ளியில் சேர்ந்த புதிதில் அவள் அழகைப் பற்றி
ஆடவர் யாரேனும் விமர்சித்தால் அவர்களைக் கொச்சையாகத் திட்டித் தீர்ப்பாள்.
அவளைச் சீண்ட வேண்டும் என்று கடைநிலை ஊழியர்கள் சிலர் அவளிடம் வம்புக்கு வருவதும் உண்டு. அப்போது அவள் 'நாயே! பேயே!' என்று அவர்களைப் பொரிந்து தள்ளுவாள்.
இப்படி அவள் குறித்த இயல்பான
நிகழ்வுகளை அவளுடைய தியாகத்தையும் கற்பினையும் பறைசாற்றும் சான்றுகளாகச் சந்திரன் கற்பனை செய்துகொண்டான்.
தன் தாய், தமக்கை,
தங்கை, மனைவி, அடுத்த வீட்டுப்பெண், இன்னும் தெருவிலும் ஊரிலும் உள்ள பெண்கள், பள்ளியில்
பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் என
அனைவருமே இப்படிப் பட்டவர்கள்தாம் என்பது அவன் மனத்துக்கு ஏனோ
தோன்றவில்லை. சுந்தரி மட்டுமே தனித்துவம் பெற்றவளாகத் தோன்றினாள். தன்னுடைய மனைவிகூட சுந்தரியின் தியாகத்திற்கு முன், கற்புக்கு முன் சற்றே குறைந்தவள்தான்
என்று எண்ணிக்கொண்டான்.
இதுவரை இந்தியப் பண்பாட்டில் கூறப்பட்டுள்ள கற்புக்கரசிகள் பட்டியலில் சுந்தரியின் பெயரைச் சேர்த்தான். சுந்தரிக்கு அவுட் ஸ்டேண்டிங், எக்ஸ்ட்ராடினரி, யுனீக் என்று மதிப்பீடு இட்டு வட்டம் போட்டான். அவன் ஆசிரியன் அல்லவா?
அவன் தன் வாழ்க்கையின்
இளமைக் காலத்திலும் பின்னரும் பழகிய பல பெண்கள் 'அப்படி',
'இப்படி' என்று எப்படியோ இருந்தவர்கள்.
திருமணத்திற்குப் பின்னர் தம் குடும்பப் பிரச்சினை
களைக் கணவனிடமே கூறி அவற்றிற்குரிய தீர்வைக்
கண்டுபிடிக்காமல் ஆண் நண்பர்களிடம் அவற்றைச்
சொல்லி ஆறுதல் தேடுபவர்கள் இருக்கிறார்கள்.
திருமணமான பின்னும் தன் கணவனிடம் ஏதோ
பற்றாக்குறை இருக்கிறது என்று எண்ணி பிற ஆடவர்கள் பின்னால்
மயக்கத்துடன் திரிபவர்கள் இருக்கிறார்கள்.
தங்களுக்கு வரும் காதல்ரசம் ததும்பும் செல்போன் குறுந்தகவல்களைச் சற்றும் லஜ்ஜை இல்லாமல் பிற ஆடவர்களுக்கு அனுப்பி
உணர்வுகளைத் தூண்டவைக்க முனையும் திருமணமான தைரியசாலிகளும் இருக்கிறார்கள்!
அவர்கள் மட்டுமே அவன் கண்களுக்கு இப்போது
புலனாகி சுந்தரி அமர்ந்த தராசுத்தட்டில் நிகராக முடியாமல் தோற்றுப்போயினர்.
(தொடரும்)
No comments:
Post a Comment