கபிலரின் உரையாடல்
நெறி
ஒரு மொழியின் செவ்வியல்
தன்மையை அம் மொழியிலுள்ள பல்வேறு
வகையான மொழிக்கூறுகளால் இனங்காணலாம். அவ்வகையில் கருத்துப் பரிமாற்றத்தின் முக்கியக் கூறான உரையாடலிலும் செவ்வியல்தன்மையின் கூறுகள்
அமைகின்றன எனலாம். அக் கூறுகள் மொழியில்
நிலைத்துநின்று தொடர்ந்துவரும் பாங்கினை அம்மொழியில் காணப்படும் தொன்மையான இலக்கியங்களே சான்று பகர்கின்றன.
மொழி என்பது கருத்துப்
பரிமாற்றத்திற்குரிய பொதுவான சாதனம் என்றாலும் அக் கருத்துப் பரிமாற்றத்தின்
முக்கியக் கூறாக உரையாடல் அமைகிறது எனலாம். அதாவது மனித இனத்தின் முக்கிய
வாழ்க்கைக் கூறாக உரையாடல் அமைகிறது. ஐங்குறுநூற்றுப் பாடல் ஒவ்வொன்றும் உரையாடல் என்னும் தொடர்நிகழ்வின் ஒரு
பகுதியைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். கூற்று என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதை
இன்றைய திறனாய்வுப் போக்கின் அடிப்படையில் கருத்துப் பரிமாற்ற வடிவமான உரையாடல் என்னும் கோட்பாட்டில் அடக்கி உரையாடலின் பன்முகப் போக்குகள் கபிலர் பாடல்களில் பொருந்தி வருமாற்றைக் காணலாம்.
உரையாடல் தொடக்கம்
பேசுபவர் கேட்பவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கேட்பவரின் பெயரையோ அல்லது உறவுநிலையைச் சுட்டும் சொல்லையோ குறிப்பிட்டு அழைத்து உரையாடலைத் தொடங்குதல் ஒரு மரபாகும்.
வாழ்த்தி விளித்தல்
முன்னிருப்போரை விளித்து அவரை வாழ்த்திவிட்டு உரையாடலைத்
தொடங்கும் போக்கைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. ஐங்குறுநூற்றில் இடம்பெறும் கபிலர் பாடல்களில் தோழி செவிலித் தாயிடம்
உரையாடலைத் தொடங்கும்போது அன்னாய்
வாழி என்று
வாழ்த்தித் தொடங்குகிறாள். தோழி
தன் தலைவியையும் அன்னாய் வாழி என்றே வாழ்த்துவதைக்
காணமுடிகிறது. தலைவி தோழியிடம் உரையாடலைத் தொடங்கும்போதும் அன்னாய் வாழி என்றே தோழியை
விளித்து, வாழ்த்துவதாகக் கபிலர் காட்டுகிறார்.
மேற்காட்டிய சான்றுகளில் தாம் கூறப்போந்த செய்தியினை
மனம்செலுத்தி விரும்பிக் கேட்குமாறு வேண்டுகோள் விடுப்பதையும் காணமுடிகிறது. இதனை வேண்டு என்னும்
சொல் உணர்த்துகிறது.
பின்னர் மீண்டும் அன்னை என்று விளித்துத் தாம் கூறவேண்டிய செய்தியை
உரையாடல் நிகழ்த்துபவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு அன்னாய், அன்னை என்று விளிக்கும் சொற்கள் மகளிரிடையே பொதுவாக வழங்கிவந்திருப்பதை அறியமுடிகிறது.
அம்ம
வாழி
தோழி
பைஞ்சுனைப்
பாசடை
நிவந்த
பனிமலர்க்
குவளை
யுள்ளகங்
கமழுங்
கூந்தன்
மெல்லிய
லேர்திக
ழொண்ணுதல்
பசந்த
லோரார்
கொன்னங்
காத
லோரே
(225)
என்னும்
பாடலில் 'அம்ம வாழி தோழி'
என்று தோழி தலைவியை விளித்து
உரையாடலைத் தொடங்குகிறாள். இவ்வாறு, உரையாடலின் தொடக்கத்தில் 'அம்ம வாழி தோழி'
என்று தோழி தலைவியையும் தலைவி
தோழியையும் வாழ்த்தித் தொடங்குவதையும் காண முடிகிறது.
தலைவனை விளிக்கும்போது அவன் வாழிடத்தைச் சிறப்பித்து,
அத்தகைய நாட்டினைச் சார்ந்தவனே என்று விளிக்கும் உரையாடல் போக்கையே பெரும்பாலும் காணமுடிகிறது. சான்றாக,
குரங்கின்
றலைவன்
குருமயிர்க்
கடுவன்
சூரலஞ்
சிறுகோல்
கொண்டு
வியலறை
மாரிமொக்குள்
புடைக்கு
நாட
(275.1-3)
என்னும்
பாடல் அடிகளில் தலைவனின் குன்றில் நிகழும் காட்சியொன்றைத் தோழி குறிப்பிடுகிறாள். இதே தன்மையில் இப்பாடலுடன்
சேர்த்துப் பதின்மூன்று பாடல்களின் தொடக்கம் அமைந்திருக்கக்
காணலாம்.
மகப்பேறு கருதி இரண்டாவதாக மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட தன் கணவனை முதல்
மனைவி விளிக்கும்போதும் இதே தன்மையுடைய உரையாடல்
போக்கைக் கைக்கொள்வதைக் காணமுடிகிறது.
மயில்க
ளாலப்
பெருந்தே
னிமிரத்
தண்மழை
தழீஇய
மாமலை
நாட
(292.1-2)
என்று
கணவனின் கவனத்தைத் திருப்பித் தான் கூறவந்த செய்தியை
அவள் உரைக்கிறாள். இவ்வாறு விளிக்கும் தன்மை கணவன் மனைவியிடையே நிலவும் விலகல் மனப்பாங்கைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.
பொய்படு பறியாக் கழங்கே (250.1) என்று தோழி அஃறிணைப் பொருளான
கழங்கினை விளித்தும் உரையாடலைத் தொடங்குகிறாள்.
உரையாடல் முடிவு
கூற்று நிகழ்த்துபவர் உரையாடலின் தொடக்கத்தே கூற்றைக் கேட்பவரைக் குறிக்கும் விளியைப் பயன்படுத்தாமல், தாம் சொல்லவந்த செய்தியைச்
சொல்லி முடித்தபின்னர் விளிப்பெயர் கூறித் தம் கூற்றை நிறைவு
செய்யும் போக்கையும் கபிலர் பாடல்களில் காணமுடிகிறது.
அலங்குமழை
பொழிந்த
வகன்க
ணருவி
யாடுகழை
யடுக்கத்
திழிதரு
நாடன்
பெருவரை
யன்ன
திருவிறல்
வியன்மார்பு
முயங்காது
கழிந்த
நாளிவண்
மயங்கிதழ்
மழைக்கண்
கலிழு
மன்னாய்
(220)
என்னும்
பாடலில் தோழி செவிலியிடம் செய்தியைக்
கூறி முடிக்கும்போது 'அன்னாய்' என்று விளித்து முடிக்கிறாள். அதேபோன்று
தலைவியிடமும் செய்திகளைக் கூறிவிட்டு அன்னாய் என்ற சொல்லுடன் உரையாடலை
நிறைவு செய்கிறாள். தலைவியும் அதே முறையில் தோழியிடம்
நிகழ்த்தும் உரையாடலின் முடிவில் அன்னாய் (213.5, 215.6) என்றுகூறி முடிக்கிறாள்.
நம்முறு
துயர
நோக்கி
யன்னை
வேலற்
றந்தா
ளாயினிவ்
வேலன்
வெறிகமழ்
நாடன்
கேண்மை
யறியுமோ
தில்ல
செறியெயிற்
றோயே
(241)
என்னும்
பாடலில் உரையாடலின் முடிவில் தலைவியை விளிக்கும் தொடரில் அவளுடைய அழகு சிறப்பிக்கப்படுகிறது.
உரையாடல் நீட்சி
உரையாடலின் தொடக்கத்திலும் முடிவிலும் அல்லாது பாடலின் இடையிலும் தோழி தலைவியையும் (252.3) தலைவி தோழியையும் தோழி
என்று விளிப்பதனைக் காணமுடிகிறது. அத்தகைய பாடல்களைக் கூர்ந்து நோக்கும்போது இரண்டு செய்திகளின் இடையில் அச்சொல் பயின்றுவரக் காணலாம். ஒரு
தொடரை முடித்துவிட்டு அடுத்த செய்தியைக் கூறப்புகுமுன் மீண்டும் தன்செய்தியில் கேட்பரின் கவனத்தை ஈர்ப்பதற்கு இவ்வாறு விளித்துச் சொல்லுதல் உரையாடலின் ஒரு போக்காக அமைவதை
உணரலாம்.
சிறுதினை
கொய்த
லிருவி
வெண்காற்
காய்த்த
வவரைப்
படுகிளி
கடியும்
யாண
ராகிய
நன்மலை
நாடன்
புகரின்று
நயந்தனன்
போலுங்
கவருந்
தோழியென்
மாமைக்
கவினே
(286)
என்னும்
பாடலில் தினையைக் கொய்து எஞ்சிய காய்ந்த தாள்களில் அவரைக்காய்கள் காய்த்திருக்க அவற்றைப் பாழ்படுத்தும் கிளிகளை விரட்டும் நாடன் தனக்குத் தீமையொன்றைச் செய்யக் கருதினான் என்று தலைவி கூறுகின்றாள். தொடர்ந்து
அந்தத் தீமை எதுவென்று கூறும்
போது தோழியை விளித்துக் கூறுகிறாள். உரையாடலில்
இடையிடையே கேட்போரை ஈர்க்கும் முகமாக அவரை விளிக்கும் போக்கை
இங்கே காண முடிகிறது.
யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப (231.1) எனத் தொடங்கும் பாடலில்
தோழி தலைவனை நோக்கி யாங்கு வல்லுநையோ என்ற வினாவை முதலில்
எழுப்பி அவனைக் குறிக்கும் விளிச்சொல்லைப் பின்னர் பயன்படுத்துவதனைக் காணலாம்.
கொடிச்சி
யின்குரல்
கிளிசெத்
தடுக்கத்துப்
பைங்குர
லேனற்
படர்தருங்
கிளியெனக்
காவலுங்
கடியுநர்
போல்வர்
மால்வரை
நாட
வரைந்தனை
கொண்மோ
(289)
என்னும்
பாடலில் தோழி ஒரு செய்தியைக்
கூறிவிட்டு அதற்கடுத்து மற்றொரு செயலைச் செய்யுமாறு அறிவுறுத்தும்போது தலைவனை விளிக்கும் உரையாடல் போக்கைக் காணமுடிகிறது.
குன்றக்
குறவ
னார
மறுத்தென
நறும்புகை
சூழ்ந்து
காந்த
ணாறும்
வண்டிமிர்
சுடர்நுதற்
குறுமகள்
கொண்டனர்
செல்வர்தங்
குன்றுகெழு
நாட்டே
(254.3)
என்னும்
பாடலில் தோழி தலைவியை நோக்கி
உரையாடல் நிகழ்த்தும்போது உரையாடலின் இடையே தலைவியைச் சுடர்நுதற் குறுமகள் என்று விளிக்கும் தன்மையைக் காணமுடிகிறது. இங்குக்
குறுமகள் என்பது அன்னாய் என்பது போல விளி வேற்றுமை
ஏற்காமல் இடம்பெறக் காண்கிறோம்.
உரையாடல் வகைகள்
உரையாடல் வகைகளைக் கீழ்வரும் நான்கு பிரிவுகளில் அடக்கிக் காணலாம் :
1. தன்னுள்
உரையாடல் (Intra personal Commumication)
2. தம்முள்
உரையாடல் (Inter personal Commumication)
3. குழுநிலை
உரையாடல் (Group Commumication)
4. மக்கள் தொடர்பியல் (Mass Commumication)
4. மக்கள் தொடர்பியல் (Mass Commumication)
இந்நான்கு
வகையான உரையாடல்களையும் கபிலர் தம் பாடல்களில் அமைத்திருப்பதனை
உய்த்துணர முடிகிறது.
தன்னுள்
உரையாடல்
கூற்று நிகழ்த்துபவர் தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல் தன்னுள் உரையாடலாகும்.
வருவது
கொல்லோ
தானே
வாரா
தவணுறை
மேவலி
னமைவது
கொல்லோ
புனவர்
கொள்ளியிற்
புகல்வரு
மஞ்ஞை
இருவி
யிருந்த
குருவி
வருந்துறப்
பந்தாடு
மகளிரிற்
படர்தருங்
குன்றுகெழு
நாடனொடு
சென்றவென்
னெஞ்சே
(295)
என்னும்
பாடலில் தலைவியின் தனிமொழி அமைந்திருக்கக் காணலாம். தலைவனைக் காணச்சென்ற தன் நெஞ்சினை நினைத்துக்
கூறுவதாக அமைத்துள்ள பாடலின் பொருட்சிறப்பு எண்ணத்தக்கது.
வெள்ள
வரம்பி
னூழி
போகியுங்
கிள்ளை
வாழிய
பலவே
யொள்ளிழை
யிரும்பல்
கூந்தற்
கொடிச்சி
பெருந்தோட்
காவல்
காட்டி
யவ்வே
(281)
என்னும்
பாடல் தலைவனின் தனிமொழியாக அமைந்திருக்கிறது. காதலனாக இருக்கும் நிலையில் யாருமில்லா தனிமையில் பேசிக்கொள்வதையும் (259, 299)
தன் நெஞ்சிடம் (288) பேசிக்கொள்வதையும் தன்னுள் உரையாடல் வகையில்
அடக்கலாம்.
தோழி கூற்றாகவரும் இரண்டு
பாடல்களில் (245, 284) தனிமொழியைக் கபிலர் அமைத்துள்ளார். 245ஆம் பாடல் தோழி
தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்திருப்பினும் தலைவி கேட்கவேண்டும் என்ற நோக்கத்தையும் தன்னகத்தே
கொண்டமைந்துள்ளது.
தம்முள் உரையாடல்
காதல் வயப்பட்ட நிலையிலுள்ள தன் தலைவியிடம் தோழி
உரையாடல் நிகழ்த்துவதாக முப்பத்திரண்டு பாடல்களைக் கபிலர் அமைத்துள்ளார்.
தலைவியிடம் நிகழ்த்தும் உரையாடலுக்கு நிகரான எண்ணிக்கையில் தலைவனிடமும் தோழி உரையாடல் நிகழ்த்துவதைக்
காணமுடிகிறது. தன் தலைவியின் காதலன்
என்ற நிலையிலுள்ள தலைவனிடம் தலைவியைச் சந்திக்க வேண்டிய இடத்தைக் குறிப்பிடுதல், அவனது பிரிவால் தோன்றும் தலைவியின் உடல், மன வேறுபாடு, விரைவில்
தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தல் முதலானவை
தொடர்பாக அவள் நிகழ்த்தும் உரையாடல்கள்
இருபத்தாறு பாடல்களில் அமைந்துள்ளன. சிறைப்புறமாக இருந்த தலைவன் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத் தனிமொழியாகப் பேசும் ஒரு பாடலையும் (284) கபிலர்
அமைத்துள்ளார்.
தலைவியைக் காதலித்து அவளுடைய பெற்றோரின் ஒப்புதலுடன் மணம் புரிந்துகொண்ட தருவாயிலும்
(294) உடன்போக்கு மேற்கொண்டு மணம் செய்துகொண்டபின் சந்திக்கும்
நிலையிலும் (280) பரத்தையிடம் சென்றுவந்த போது அவன் செயலைச்
சுட்டிக்கூறும் நிலையிலும் (240) தலைவனிடம் தோழி உரையாடல் நிகழ்த்துகிறாள்.
இவ்வாறு மொத்தம் முப்பது பாடல்கள் தலைவனை நோக்கிய தோழி உரையாடலாக அமைந்துள்ளன.
தலைவனிடம் தோழி மேற்கொள்ளும் உரையாடல்
அவளுடைய தர்க்க அறிவையும் உறுதியான மனப் போக்கையும் ஆளுமையையும்
புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
தலைவன்,
தலைவி நீங்கலாக தலைவியின் காதலை வெளிப்படுத்தி செவிலி, தமர் ஆகியோரிடம் அறத்தொடு
நிற்றலை நிகழ்த்தும் உரையாடல் போக்குடன் பத்து பாடல்கள் அமைந்துள்ளன.
காதல் வயப்பட்ட தலைவி தன் உள்ளக்கிடக்கையைத் தோழிக்கு வெளிப்படுத்துவதாக
அமையும் உரையாடல்கள் 14 பாடல்களில் அமைந்துள்ளன.
திருமணம் புரிந்து கொண்ட பின்னர்த் தோழியிடம் உரையாடும் போக்கில் ஒரே ஒரு பாடல்
அமைந்துள்ளது (203). பரத்தை ஒழுக்கம் மேற்கொண்ட தலைவனுக்காகப் பரிந்து பேசவந்த வாயில்களிடம் தலைவி உரையாடல் நிகழ்த்துவதாக ஒரு பாடலைக் (265) கபிலர்
அமைத்துள்ளார். தனக்கு
மகப்பேறு வாய்க்காத காரணத்தால் தன் கணவன் இரண்டாம்
திருமணம் செய்துகொண்ட நிலையில் தன் கணவனிடம் மனைவி
பேசுவதாக ஒரு பாடல் (292) அமைந்துள்ளது.
மொத்தம் பதினெட்டு பாடல்களில் தலைவியின் உரையாடல் அமைந்துள்ளது.
காதலிக்கும் நிலையில் தன் காதல் உள்ளத்தையும்
பிரிவினால் நேரும் துயரத்தையும் வெளிப்படுத்துவதாகத் தலைவியின் உரையாடல்கள் அமைந்துள்ளனவேயன்றி சொல்வன்மையை வெளிப்படுத்துவனவாக பெரும்பாலும் அமையவில்லை என்றே கூறலாம்.
தலைவனைப் பொறுத்தவரையில் உரையாடல் நிகழ்த்தும் வாய்ப்புக் குறைவாகப் பெற்றுள்ளதையே அறியமுடிகிறது. காதலனாக இருக்கும் நிலையில் தன் காதலியைச் சந்திக்கவேண்டும்
என்னும் விழைவைத் தோழியிடம் ஆற்றும் உரையாடல்களும் (256, 298) பாங்கனிடம் கூறும் செய்திகளும் (255, 291) வெளிப்படுத்து கின்றன. திருமணம் செய்துகொண்ட பின்னர்க் கணவன் என்ற நிலையில் மனைவியிடம்
தான் கொண்ட அன்பைப் புலப்படுத்தும் விதமாக உரையாடுவதை ஒரு பாடலில் காணமுடிகிறது
(293). தலைவிக்குக் கிடைத்த உரையாடல் வாய்ப்பில் பாதி அளவே தலைவனுக்காகக்
கபிலர் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தம்முள் உரையாடல்
வகைகள்
கூற்றாக அமைவன, மாற்றம் மட்டும் அமைவன, கூற்றும் மாற்றமும் இணைந்து அமைவன ஆகிய மூன்று நிலைகளில்
தம்முள் உரையாடல் வகை அமையும்.
ஐங்குறுநூற்றுப் பாடல்கள் குறுகிய அடிவரையறை கொண்ட காரணத்தால் கூற்றும் அதைத் தொடர்ந்த மாற்றமும் அமைகின்ற தன்மையில் உரையாடலை அமைக்க வழியில்லை என்பது கண்கூடு. இதனால் கபிலரின் பாடல்கள் கூற்றாகவோ அல்லது மாற்றமாகவோ அமைகின்றன.
கூற்றாக அமைதல்
அம்ம
வாழி
தோழி
நம்மொடு
சிறுதினைக்
காவல
னாகிப்
பெரிதுநின்
மென்றோள்
நெகிழவும்
திருநுதல்
பசப்பவும்
பொன்போல்
விறற்கவின்
தொலைத்த
குன்ற
நாடற்
கயர்வர்நன்
மணனே
(230)
என்னும்
பாடல் தோழிகூற்றாக அமைகிறது. தலைவன் வரைவுவேண்டித் தமரை அனுப்புகிறான். தனது
பெற்றோர் அதனை எவ்வாறு எதிர்கொள்வார்களோ?
என்ன நிகழப் போகிறதோ? என்றெல்லாம் தலைமகள் அச்சம் கொள்கிறாள். அப்போது தலைவியின் பெற்றோர் தலைவனுக்கு மணமுடித்துத்தர இசைந்த செய்தியை அறிந்துவந்த தோழி அதனைத் தலைவிக்கு
எடுத்துரைக்கிறாள். இவ்வாறு கூற்றுகளாக மட்டும் அறுபத்தொரு பாடல்கள் அமைகின்றன.
மாற்றமாக அமைதல்
அன்னாய்
வாழிவேண்
டன்னையென்
றோழி
நனிநா
ணுடைய
ணின்னு
மஞ்சு
மொலிவெள்
ளருவி
யோங்குமலை
நாடன்
மலர்ந்த
மார்பின்
பாயற்
றுஞ்சிய
வெய்ய
ணோகோ
யானே
(205)
என்னும்
பாடல் மாற்றமாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. நொதுமலர்
வரைவுவேண்டி வந்தபோது தலைவி வருத்தத்துடன் காணப்படுவதைக் கண்ட செவிலி தோழியை
நோக்கித் தலைவி வருந்தக் காரணமென்ன? எனக் கேட்க தோழி
விடையிறுப்பதாக இப்பாடல் அமைகிறது. தலைவி நாணம் மிக்கவள் என்பதுடன் செவிலியிடத்து அச்சமும் கொண்டிருக்கிறாள் என்றும் அவ்வாறிருந்தும் ஆரவாரிக்கும் வெண்மையான அருவி பாய்கின்ற உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்த ஒருவனுடைய மார்பில் இன்துயில் கொள்வதையே பெரிதும் விரும்புகிறாள் என்று தோழி தலைவியின் காதலைச்
செவிலிக்கு வெளிப்படுத்தி அறத்தொடு நிற்கிறாள். இங்கு இடம்பெறுகின்ற தோழி கூற்றின் மொழி
அமைப்பிலிருந்து இது செவிலியின் வினாவிற்கு
விடையாக அமைந்திருப்பதை அறியமுடிகிறது.
இவ்வாறு முன்னர் எழுப்பப்பெற்ற வினாவிற்கு விடை பகர்வதாக அமையும்
போக்கில் இருபத்திரண்டு பாடல்கள் அமைகின்றன.
கூற்றும்
மாற்றமும்
அமைதல்
அன்னாய்
வாழிவேண்
டன்னை
நீமற்
றியானவர்
மறத்தல்
வேண்டுதி
யாயிற்
கொண்ட
லவரைப்
பூவி
னன்ன
வெண்டலை
மாமழை
சூடித்
தோன்ற
லானாதவர்
மணிநெடுங்
குன்றே
(209)
என்னும்
பாடல் தலைவி கூற்றாக இடம்பெறுகிறது. இதில் 'மறத்தல் வேண்டுதியாயின்' என்னும் தொடர் தலைவி கூற்று நிகழ்த்துவதற்கு முன்னால் தலைவனைத் தலைவி மறத்தல் வேண்டும் என்று தோழி குறிப்பிட்டமையை அடியொற்றி
எழுந்திருக்கவேண்டும் என்பதனைப் புலப்படுத்திநிற்கிறது. தனக்கு முன்பு பேசியவரின் மொழிகளைத் திரும்பச்சொல்லி அதற்கு விடைகூறுதல் உரையாடலில் காணக்கூடிய ஒரு போக்காகும். எனவே
இப்பாடலைக் கூற்றும் மாற்றமும் அமைகின்ற உரையாடலுக்குச் சான்றாகக் கருத இடமுண்டு. இதே
தன்மையில் மற்றொரு பாடலையும் (234) கபிலர் அமைத்திருக்கிறார்.
அம்ம
வாழி
தோழி
நாமழப்
பன்னாள்
பிரிந்த
வறனி
லாளன்
வந்தன
னோமற்
றிரவிற்
பொன்போல்
விறற்கவின்
கொள்ளுநின்
னுதலே
(229)
என்னும்
பாடலில் தோழியின் கூற்று வினாவாக அமைந்து அதற்கான விடையைத் தலைவியிடமிருந்து எதிர் நோக்குகிறது. எனவே இத்தகைய வினா
அமைப்பில் அமையும் பாடல்கள் உரையாடலின் தொடர்ச்சியைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன எனலாம்.
இவ்வாறு கூற்றின் இறுதியில் வினா அமைப்பைக்கொண்டு அதற்குரிய
பதிலினை எதிர்நோக்கும் உரையாடல்போக்கைப் பதினைந்து பாடல்களில் கபிலர் அமைத்திருக்கிறார்.
குழு உரையாடல்
இருவருக்கு மேற்பட்டோர் ஓரிடத்திலிருந்து உரையாடும்போது அது குழு உரையாடலாக
அமைந்து விடுகிறது. அவ் உரையாடலின்போது மூவருமே
உரையாடலில் பங்குபெறவேண்டும் என்ற அவசியம் இல்லை
என்பர். இருவர் தமக்குள் பேசிக்கொள்ள மூன்றாமவர் கேட்பவர் என்னும் பங்கினை மட்டும் செய்பவராகவும் அமையலாம்.
தோழி தலைவனிடம் நிகழ்த்தும்
உரையாடலின் போது தலைவியும் அங்கு
இருப்பதை அறியமுடிகிறது. தலைவியைக் காதலிக்கும் தலைவனிடம் உரையாடும் தோழி அங்கிருக்கும் தலைவியை
இவள் (234, 238, 277,
285) என்று
சுட்டி உரைப்பதுகொண்டு அவ்வுரையாடல் நிகழும் இடத்தில் தலைவியும் உடன்இருப்பதை உணரமுடிகிறது.
மின்னவிர்
வயங்கிழை
ஞெகிழச்
சாஅய்
நன்னுதல்
பசத்த
லாவது
துன்னிக்
கனவிற்
காணு
மிவளே
நனவிற்
காணாணின்
மார்பே
தெய்யோ
(234)
என்ற
பாடலில் தோழி தலைவியை இவள்
என்று அண்மைச் சுட்டினால் குறிப்பதால் அங்கே தலைவியும் இருவரது உரையாடலையும் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது புலனாகிறது.
சில
பாடல்களில் தலைவி உடன் இருத்தல் தெளிவாகச்
சுட்டப்பெறவில்லை. எனினும் தன்னையும் தலைவியையும் ஒன்றாகக் குறிப்பதுபோல் வரும் பன்மைச் சொற்கள் அங்குத் தலைவியும் உடன்இருப்பதைக் குறிப்பாய்ச் சுட்டுவதாகக் கொள்ளமுடிகிறது.
யாம் (237), யாம் எம் (275), எம்
ஊர் (279), வாழேம் (239), எழுகமோ (236) என்னும் சொல்லாட்சிகள் தலைவியின் இருப்பை உணர்த்துகின்றன.
வன்கட்
கானவன்
மென்சொன்
மடமகள்
புன்புல
மயக்கத்
துழுத
வேனற்
பைம்புறச்
சிறுகிளி
கடியு
நாட
பெரிய
கூறி
நீப்பினும்
பொய்வலைப்
படூஉம்
பெண்டுதவப்
பலவே
(283)
என்னும்
பாடல் பாடப்பெற்ற சூழலால் தலைவியும் உரையாடல் நிகழ்களத்தில் இருப்பதை உணரமுடிகிறது.
இவள் என்ற சுட்டுச்சொல்லும்
தன்மைப் பன்மைச் சொற்களும் தலைவியின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன என்னும் செய்தி மேலே விவரிக்கப்பெற்றது. அக்கருத்து
சரியானதே என்பதை நிறுவுவதற்கு தலைவிஇன்றி நிகழ்த்தப்பெறுவதுபோல அமைந்த சூழலையுடைய பாடல்களையும் உறழ்ந்து நோக்குதல் நலம்பயக்கும்.
தலைவனுடன் நிகழ்த்தும் உரையாடலில்,
திருந்திழை அரிவை (231)
மென்றோள் கொடிச்சி (260)
நீ நயந்தோள் (264, 266)
நின் நயந்துறைவி (273)
மடந்தை (297)
முதலான
சொற்றொடர்களைத் தலைவியைக் குறிக்கத் தோழி கையாளுகின்றாள். இவை
அனைத்தும் தலைவி உரைநிகழ் இடத்தில் இல்லை என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
அறம்புரி
செங்கோன்
மன்னனிற்
றாநனி
சிறந்தன
போலுங்
கிள்ளை
பிறங்கிய
பூக்கமழ்
கூந்தற்
கொடிச்சி
நோக்கவும்
படுமவ
ளோப்பவும்
படுமே
(290)
என்னும்
பாடலில் தலைவியைக் குறிக்க அவள் என்ற சேய்மைச்
சுட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதால் தலைவி உரைநிகழ் களத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
தோழி செவிலியிடம் நிகழ்த்தும்
உரையாடலின் போது தலைவியை இவள்
என்று குறிப்பிடுகிறாள். இவள் என்பது அண்மைச்சுட்டாக
அமைவதால் அங்குத் தலைவியும் உடன்இருப்பதாகக் கொள்ளலாம்.
தோழி செவிலியிடம் தலைவியைப்
பற்றிய உரையாடல் நிகழ்த்தும் சில பாடல்களில் என்
தோழி (205.1), வயங்கிழை (210) என்று தலைவியைப் பற்றிக் குறிப்பிடுகிறாள். இச் சொற்களின் பயன்பாடு
உரைநிகழ் களத்தில் தலைவி இல்லை என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
தாய்கேட்குமாறும் (249) செவிலி கேட்குமாறும் தமர்
கேட்குமாறும் (247) தலைவியிடம்
தோழி உரையாடல் நிகழ்த்தும் பாடல்கள் குழு உரையாடலுக்குச் சான்றாக
அமைகின்றன.
தோழி தமர்கேட்ப தலைவியிடம்
உரையாடல் நிகழ்த்தும்போது தலைவன் சிறைப்புறமாக இருந்து கவனிப்பதையும் (258) குழுநிலை உரையாடலாக எடுத்துக் கொள்ளலாம்.
தான் கூறும் செய்தியைத்
தலைவன் கேட்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், அவன் கேட்டுக்
கொண்டிருக்கிறான் என்பதை அறிந்தே உரையாடல் நிகழ்த்துகிறாள் தோழி. எனவே இச்சூழலில் அமையும்
உரையாடல்கள் குழு உரையாடலாக அமைகின்றன.
மக்கள் தொடர்பியல்
ஒருவர் தம் கருத்தை ஒரு
குழுவினருக்குத் தெரிவிக்கும்போது அது மக்கள் தொடர்பியலாகிறது.
இவ் உரையாடல் வகையில் அச்செய்தியைக் கேட்கும் குழுவினரின் மறுமொழி எதிர்பார்க்கப்படுவதில்லை. செய்தி உரைப்போரின் செய்தி மட்டுமே மையப்படுத்தப்படுகிறது. அச்செய்தியால் ஏற்படும் விளைவு அல்லது செயல் இன்றியமையாத இடம் பெறுகிறது.
பொய்படு
பறியாக்
கழங்கே
மெய்யே
மணிவரைக்
கட்சி
மடமயி
லாலுநம்
மலர்ந்த
வள்ளியங்
கானங்
கிழவோ
னாண்டகை
விறல்வே
ளல்ல
னிவள்
பூண்டாங்
கிளமுலை
யணங்கி
யோனே
(250)
என்று
கழங்கைப் பார்த்துத் தோழி உரையாடல் நிகழ்த்துவதாக
அமைந்த பாடலில் அருகிலிருக்கும் தலைவி இவள் என்று சுட்டப்பெறுகிறாள்.
வெறியாடல் நிகழ்த்துமுகமாக தமரும் வேலன் முதலியோரும் அருகிருப்பதால் இப்பாடல் மக்கள் தொடர்பியலுக்குச் சான்று பயக்கிறது.
மேற்கூறியவற்றால், ஐங்குறுநூற்றுக் கபிலர் பாடல்களில் தம்முள் உரையாடல் வகை பெருமிடம் பெறுவதை
அறியமுடிகிறது. அதற்கடுத்த நிலையில் குழு உரையாடல் அமைந்திருப்பதனை
உய்த்துணர முடிகிறது. தன்னுள் உரையாடல் மிகக் குறைந்த அளவிலேயே அமைந்துள்ளன. மக்கள் தொடர்பியல் என்பது ஒரேஒரு பாடலில் மட்டுமே அமைந்துள்ளது. அவ் உரையாடல் வகை
அமையும் வாய்ப்பினை பாடுபொருள் ஏற்படுத்தித் தரவில்லை என்பதே அதற்குரிய காரணமாகும்.
உரையாடல் நுட்பம்
உரையாடல் நிகழ்த்துவதில் தோழியே சொல்வன்மை பெற்றவளாகத் திகழ்கிறாள். காதல் வயப்பட்ட தலைவியிடம் தலைவனைப் பற்றிய செய்திகளை உரைத்தல், அவன் வரைவிடை வைத்துப்
பிரிந்தபோது அவளை ஆற்றுவித்தல், அவன்
மீண்டு வந்ததை அறிவித்தல், தலைவனுக்குக் குறியிடம் கூறல், வரைந்துகொள்ளுமாறு வற்புறுத்தல், தலைவியின் காதலைச் செவிலிக்குக் கூறி அறத்தொடு நிற்றல்
எனப் பல சூழல்களில் அவள்
உரையாடல் நிகழ்த்துகிறாள்.
இப்பாடல்கள் தோழியின் உரையாடல் வன்மையோடு தலைவியிடம் கொண்ட அவளது அன்புப் பிணைப்பினையும் எடுத்துக்காட்ட வல்லன.
கபிலரின் நூறு பாடல்களில் எழுபத்துமூன்று
பாடல்கள் தோழியின் உரையாடல் திறனைப் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன. உரையாடல் நிகழ்த்தலுக்குத் தகுதியான செய்திகளும் வேறுபட்ட செய்திகளைப் புலப்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் பல நிலைகளில் தோழிக்கு
வாய்த்திருப்பதனை இப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.
உரையாடல்
நோக்கம்
மக்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடல் நிகழ்த்துவதிலும் சில அடிப்படை நோக்கங்கள்
பின்னிப் பிணைந்திருக்கக் காணலாம்.
உரையாடல் அல்லது கருத்துப் பரிமாற்றத்தின் முதன்மை
நோக்கங்களாக,
1. அறிந்ததை
வெளிப்படுத்தல்
2. அறியாததைத்
தெரிந்து கொள்ளல்
3. தேவைகளைப்
பெறுதல்
4. உறவுகளை
மேம்படுத்தல்
5. சிக்கல்களுக்குத்
தீர்வு காணல்
ஆகியவற்றைக்
கூறலாம்.
அறிந்ததை வெளிப்படுத்தல்
தான் அறிந்த செய்தியைப்
பிறருக்கு வெளிப்படுத்தும் விழைவு உரையாடலின் இன்றியமையாக் கூறாகும்.
அம்ம
வாழி
தோழி
நம்மலை
வரையா
மிழியக்
கோட
னீடக்
காதலர்ப்
பிரிந்தோர்
கையற
நலியும்
தண்பனி
வடந்தை
யச்சிர
முந்துவந்
தனர்நங்
காத
லோரே
(223)
என்னும்
பாடலில் தலைவியை நோக்கி உரையாடும் தோழி காதலர் வந்த
செய்தியை எடுத்துரைக்கின்றாள்.
அறியே
மல்லே
மறிந்தன
மாதோ
பொறிவரிச்
சிறைய
வண்டின
மொய்ப்பச்
சாந்த
நாறு
நறியோள்
கூந்த
னாறுநின்
மார்பே
தெய்யோ
(240)
என்னும்
பாடலில் தலைவனின் புறவொழுக்கத்தைத் தலைவி அறிந்துகொண்டனள்
என்பதைத் தோழி
எடுத்துரைக்கிறாள். அறிந்தனம்
மாதோ என்று அவள் உரைக்கும்போது அச்
செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கூறுதல் உரையாடலின் சிறப்பாக அமைகிறது.
அறியாததை அறிந்து
கொள்ளல்
அறியாத செய்திகளை அறிந்துகொள்ளும் ஆர்வ வெளிப்பாடும் உரையாடலின்
முக்கியக் கூறே.
காமம்
கடவ
வுள்ள
மினைப்ப
யாம்வந்து
காண்பதோர்
பருவ
மாயி
னோங்கித்
தோன்று
முயர்வரைக்
கியாங்கெனப்
படுவது
நும்மூர்
தெய்யோ
(237)
என்னும்
பாடலில் தோழி தலைவன் இருக்கும்
இருப்பிடத்தை மிக நயமாக அறிந்துகொள்ள
முயல்வதைக் கபிலர் குறிப்பாக வெளிப்படுத்துகிறார்.
அன்னாய்
வாழிவேண்
டன்னை
யென்னை
தானு
மலைந்தா
னெமக்குந்
தழையாயின
பொன்வீ
மணியரும்
பினவே
யென்ன
மரங்கொலவர்
சார
லவ்வே
(201)
என்னும்
பாடலில் தோழி தன் அன்னையைப்
பார்த்துக் கண்ணிற்குப் புலனாக எதிரே தோன்றும் மலைச்சாரலில் பொன்னிற மலர்களைச் சொரியும் மரத்தின் பெயர் யாது என்று தனக்குத்
தெரியாத ஒன்றை அறிந்துகொள்ள முனைவதுபோல் வினாத் தொடுக்கின்றாள். இவ்வுரையாடல் அறியாததை அறிந்துகொள்ளல் என்னும் போக்கில் அமைந் திருப்பதைப்போல் தோன்றினாலும் உண்மையில் அதன் வாயிலாகத் தலைவிக்கும்
தலைவனுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்
வழியாகவே அதனை அமைத்துக் கொள்கிறாள்
தோழி.
தேவைகளைப் பெறல்
தமது அல்லது பிறரது
தேவையைச் சுட்டிக்காட்டி அதற்கான வழிமுறைகளைப் பெறுவதும் உரையாடலின் ஒரு திறனே.
நயவா
யாயினும்
வரைந்தனை
சென்மோ
கன்முகை
வேங்கை
மலரு
நன்மலை
நாடன்
பெண்டெனப்
படுத்தே
(276.4-6)
என்று
உரைக்கும் தோழி தலைவியின் உடனடித்
தேவையைப் புலப்படுத்துகிறாள். தலைவன் தலைவியின்மீது கொண்ட காதலின் அளவு என்னவென்று அறிந்து
கொள்வதைவிட முக்கியமாக அவளது நற்பெயர் அலரால் பாதிக்கலாகாது என்றும் அதற்கு முன்னர் அவனுடைய மனைவி அவள் என்று ஊரார்
ஏற்றுக்கொள்ளுமாறு அவன் அவளை மணந்துகொள்வதே
விரைவாக ஆற்றவேண்டிய செயல் என்பதையும் புலப்படுத்துகிறாள்.
கொடிச்சி
யின்குரல்
கிளிசெத்
தடுக்கத்துப்
பைங்குர
லேனற்
படர்தருங்
கிளியெனக்
காவலுங்
கடியுநர்
போல்வர்
மால்வரை
நாட
வரைந்தனை
கொண்மோ
(289)
என்ற
தோழியின் உரையாடலிலும் தேவையைப் பெறுகின்ற முனைப்பு வெளிப்படுகிறது. தலைவனை வரைந்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக அமையும் தோழியின் கூற்றாக வரும் பாடல்கள் தேவைகளைப் பெறுகின்ற உரையாடல் போக்கை வெளிப்படுத்துகின்றன எனலாம்.
உறவுகளை மேம்படுத்தல்
உறவு மேம்பாட்டை உருவாக்குவதில்
உரையாடலுக்குப் பெரிதும் பங்குண்டு.
கருவிரன்
மந்திக்
கல்லா
வன்பார்ப்
பிருவெதி
ரீர்ங்கழை
யேறிச்
சிறுகோன்
மதிபுடைப்பதுபோற்
றோன்று
நாட
வரைந்தனை
நீயெனக்
கேட்டியா
னுரைத்தனெ
னல்லனோ
வஃதென்
யாய்க்கே
(280)
என்னும்
தோழியின் உரையாடல் பகுதியும் உறவுகளை மேம்படுத்தும்போக்கில் அமைந்திருக்கிறது. தலைவன் தலைவியை உடன்போக்கு மேற்கொண்ட பின்னர் ஊரறிய திருமணம் இயற்றிக்கொண்டு இனிதே வாழ்கிறான் என்ற செய்தியைத் தலைவியின்
அன்னைக்குக் கூறித் தலைவனைப் பற்றிய நல்லெண்ணத்தைத் தான் உருவாக்கிவிட்டதாகத் தோழி தலைவனிடம்
தெரிவிக்கின்றாள்.
தன் கணவனுக்குப் புறவொழுக்கம்
இருக்கிறதோ என்று ஐயம் கொள்கிறாள் அவன்
மனைவி. அதனைக்
கண்டறிவதற்காகப் பொழிலில் அவன் அமர்ந்திருக்கும்போது அவனது கண்களைப்
பின்னிருந்து மூடுகிறாள். அவள் எண்ணத்தைப் புரிந்துகொண்ட
கணவன் தன் மனைவியின் ஐயத்தைப்
போக்குமாறு உரையாடல் நிகழ்த்துகிறான்.
சிலம்புகமழ்
காந்த
ணறுங்குலை
யன்ன
நலம்பெறு
கையினென்
கண்புதைத்
தோயே
பாய
லின்றுணை
யாகிய
பணைத்தோட்
டோகை
மாட்சிய
மடந்தை
நீயல
துளரோவென்
னெஞ்சமர்ந்
தோரே
(293)
என்ற
அவனது உரையாடல் வாயிலாகத் தான் யாரையும் தன்
மனத்தாலும் நினைத்ததில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறான். தன் மனைவியின் கைவிரல்களைக்
காந்தள் மலர்களோடு ஒப்பிட்டும் தோள்களை மூங்கிலோடு ஒப்பிட்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் தன் பாயலின் இன்துணை
அவள் மட்டுமே என்பதையும் குறிப்பிடுகிறான். மேலும்
அவளுடைய பெண்மைச் சிறப்பைத் தான் உணர்ந்திருப்பதையும் 'மாட்சிய மடந்தை'
என்ற சொல்லால் புலப்படுத்துகிறான். இவ்வாறு தனது உரையாடலில் அவன்
கையாளும் சொற்கள் கணவன் - மனைவி இல்லறப் பிணைப்பை வலுப்படுத்துவனவாக அமைகின்றன.
மகப்பேறு அற்ற முதல் மனைவி
தன் கணவன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பின்னர் அவனை நோக்கி,
மயில்க
ளாலப்
பெருந்தே
னிமிரத்
தண்மழை
தழீஇய
மாமலை
நாட
நின்னினுஞ்
சிறந்தன
ளெமக்கே
நீநயந்து
நன்மனை
யருங்கடி
யயர
வெந்நலஞ்
சிறப்பயா
மினிப்பெற்
றோளே
(292)
என்று
கூறுகிறாள். இவ்வாறு
அவள் கூறுவதன் வாயிலாகத் தன் கணவனின் இரண்டாம்
மனைவியைத் தான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதை
வெளிப்படுத்துகிறாள். குடும்பத்தினரிடையே ஏற்படக்கூடிய மனஅழுத்தத்தையும் நெருடலான மனப்பாங்கையும் மேற்கண்ட உரையாடல் மூலமாக நீக்கி அங்குச் சுமூகமான உறவுநிலையை ஏற்படுத்துகிறாள்.
சிக்கல்களுக்குத்
தீர்வு
காணல்
குறிப்பிட்ட சிக்கலைத் தகுந்த உரையாடல்வழித் தீர்ப்பது மிகச்சிறந்த உரையாடலின் இலக்கணமாகும்.
அன்னாய்
வாழிவேண்
டன்னைநம்
படப்பைப்
புலவுச்சேர்
துறுக
லேறி
யவர்நாட்டுப்
பூக்கெழு
குன்ற
நோக்கி
நின்று
மணிபுரை
வயங்கிழை
நிலைபெறத்
தணிதற்கு
முரித்தவ
ளுற்ற
நோயே
(210)
என்னும்
பாடல் தலைவியின் காதல் வாழ்க்கை சிக்கலாகி விடாமல் காக்கும் தோழியின் உரையாடல் சிறப்பை முன்வைக்கிறது. காப்பு மிகுதிக்கண் தலைவியின் மெலிவு கண்டு அதனைத் தெய்வத்தால் ஆனதென்றெண்ணி வெறியெடுக்க முயலும் சமயத்தில் தோழி, தலைவியின் காதலைப் பற்றிச் செவிலிக்கு எடுத்துரைத்துத் தலைவியின் வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு காண முயல்கிறாள்.
கறிவளர்
சிலம்பிற்
கடவுட்
பேணி
யறியா
வேலன்
வெறியெனக்
கூறு
மதுமனங்
கொள்குவை
யனையிவள்
புதுமலர்
மழைக்கண்
புலம்பிய
நோய்க்கே
(243)
என்னும்
பாடலில் தோழி தன் அன்னையை
விளித்துத் தலைவிக்கு உற்ற நோயின் காரணம்
அறியாத வேலன் வெறி என்று கூறுகிறான்;
ஆனால் அது உண்மையல்ல. இதனைச்
சற்றே சிந்தித்து தலைவியின் மலர்போன்ற கண்களிலிருந்து பெருகும் கண்ணீரைத் துடைக்க ஆவன செய்யவேண்டும் என்று
சிக்கலை அவிழ்க்கக்கூடிய புது வழியை எடுத்துரைக்கிறாள்.
தலைவியின் சிக்கலைத் தீர்க்க நற்றாய் முன்பு அணுகிய நெறி தவறென்பதைச் சுட்டிக்காட்டுவதுடன்
அதற்குரிய தீர்வையும் தோழி தன்னுடைய உரையாடல்
மூலமாக உணர்த்துகிறாள்.
தோழி செவிலியிடம் நிகழ்த்தும்
அனைத்து உரையாடல்களும் (205, 208,
210, 212, 220, 243, 248, 271) சிக்கலுக்குத் தீர்வு காணும்போக்கில் அமைந்து சிறப்பனவாகும்.
அஃறிணைப் பொருளான கழங்கினைத் தோழி விளித்து உரையாடலைத்
தொடங்கும் பாடலும் (250) சிக்கலைத் தீர்க்கும் நோக்கத்தோடு அமைந்திருக்கிறது. தலைவி காதல்வயப்பட்ட செய்தியை நேரடியாகக் கூறவியலாத சூழலில் வேலன் கழங்கு ஆய்ந்துகொண்டிருக்கும் தருணத்தில் அப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை - சிக்கலை
எவ்வாறேனும் விரைந்து தீர்க்கவேண்டும் என்று எண்ணும் தோழி கழங்கை விளித்துக்
கூறுவதாய் அமைந்துள்ளமை நயம்பயக்கிறது.
அறிந்ததை வெளிப்படுத்தி, அறியாதனவற்றை ஆர்வ வெளிப்பாட்டால் அறிந்து,
தேவைகளைப் பெற முயன்று, உறவுகளை
மேம்படுத்தி, வாழ்வில் உருவாகும் சிக்கல்களைத் தகுந்த உத்திகளால் தீர்க்க முயலும் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய உரையாடல் திறன் கபிலரின் ஐங்குறுநூற்றுப் பாடல்களில் விரவிக்கிடக்கக் காணலாம்.
உரையாடல் சூழல்
உரையாடல் அமையும் சூழல்களைக் கீழ்வருமாறு வகைப்படுத்துவர் :
இடச் சூழல்
உறவுச் சூழல்
தொடர்நிகழ்வுச் சூழல்
உளவியல் சூழல்
பண்பாட்டுச் சூழல்
இவ்
ஐந்துவகைச் சூழல்களும் ஒன்றோடொன்று இணைந்து உரையாடலில் கருத்துப் புலப்பாட்டை மிகுவிக்கின்றன எனலாம்.
இடச் சூழல்
கருத்துப் பரிமாற்ற நிகழ்வு நடைபெறும் இடத்தின் தன்மையை இடச்சூழல் என்கிறோம். உரையாடலில் பங்கேற்போர்க்கு இடையேயுள்ள தூரம், ஒலியளவு, ஒலியின் இடையூறு ஆகியவற்றை இடச்சூழல் தெளிவுபடுத்துகிறது.
அன்னாய்
வாழி
வேண்டன்னை
நம்படப்பைத்
தேன்மயங்கு
பாலினு
மினிய
வவர்நாட்
டுவலைக்
கூவற்
கீழ்
மானுண்
டெஞ்சிய
கலிழி
நீரே
(203)
என்னும்
பாடலில் தலைவியின் பிறந்த இடமும் அவள் மணம்செய்து கொண்டு
சென்ற தலைவனின் வாழிடமும் ஒப்புமைப்படுத்தப் பெறுகின்றன. மேலும் பாடலில் உணர்த்தப்படும் செய்தி வாயிலாகக் கூற்று நிகழும்போது தலைவி தன் பிறந்த இடத்திலிருந்து
பேசுவது புலப்படுத்தப்பெறுகிறது.
அளிய
தாமே
செவ்வாய்ப்
பசுங்கிளி
குன்றக்
குறவர்
கொய்தினைப்
பைங்கா
லிருவி
நீள்புனங்
கண்டும்
பிரித
றேற்றாப்
பேரன்
பினவே
(284)
என்று
தோழி கூறும்போது அவ் உரையாடல் தினைப்புனத்தில்
நிகழ்கிறதென்னும் இடச்சூழலைப் புலப் படுத்துகிறது. தோழி தலைவியுடன் உரையாடும்
நிலையில் சிறைப்புறமாகத் தலைவனும் இருப்பது குறிப்பால் உணரப் படுகிறது. மேலும் தினையைக் கொய்தபின்னும் அதன் பசிய அடியையுடைய
வறுந்தட்டைகள் எஞ்சியிருக்கும் தினைப் புனத்தை நீங்காமல் கிளிகள் மயங்குகின்ற அரிய காட்சியையும் கபிலர்
காட்சிப்படுத்துகிறார்.
சங்க அகப் பாடல்களில்
முதற்பொருளில் ஒன்றாகிய இடம் இன்றியமையாத பங்கு
வகிக்கிறது எனலாம். எனவே பெரும்பாலான பாடல்களில்
இடச்சூழலை அமைத்துப் பாடல் புனைவதைப் புலவர்கள் முக்கிய உத்தியாகக் கையாண்டிருப்பதை அறியலாம். கபிலர் தம் பாடல்களில் குறிஞ்சி
நில அமைப்பையும் அங்கிருக்கும் காட்சிகளையும் கருப்பொருள்களையும் மிக அழகாகக் காட்சிப்படுத்துவதன்
வாயிலாக இடச்சூழலைத் தெளிவுபடுத்துகிறார்.
உறவுச் சூழல்
உரையாடலில் பங்கேற்போர் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையிலான தொடர்புடையவர்
என்பதனை உறவுச் சூழல் எடுத்துரைக்கிறது. பங்கேற்பாளர் நட்பு பூண்டவ ராகவோ, சுற்றத்தினராகவோ அமையலாம். சங்க அக இலக்கியங்களில்
கூற்று நிகழ்த்துவோரின் விவரிப்பில் இக்கூறு வெளிப்பட்டு நிற்பதைத் தெள்ளிதின் அறியலாம்.
எரிமருள்
வேங்கை
இருந்த
தோகை
இழைஅணி
மடந்தையின்
தோன்றும்
நாட
இனிது
செய்தனையால்
நுந்தை
வாழியர்
நல்மனை
வதுவை
அயரஇவள்
பின்னிருங்
கூந்தல்
மலர்அணிந்
தோயே
(294)
என்று
தலைவனிடம் தோழி உரையாடும்பொழுது தலைவனும்
தலைவியும் களவொழுக்கம் நீத்து கற்பொழுக்கம் பூண்டு கணவனும் மனைவியுமாக வாழும் உறவுச் சூழல் வெளிப்படுகிறது. அத்துடன் நட்பு என்னும் அடிப்படையில் தோழிக்கும் தலைவிக்குமான நெருக்கமும் தலைவனோடு தோழி உரைநிகழ்த்தும் மாண்பும்
புலப்படு கின்றன.
சங்க அக இலக்கியங்களில்
கூற்று நிகழ்த்துவோர் யார் என்று சுட்டப்படும்
நிலையில் உறவுச்சூழல் சுட்டப்படுவதை அறியலாம். தலைவன், தலைவி, தோழி, செவிலி, பாங்கன், கண்டோர், அறிவர் என இன்னார் கூற்று
என்று சுட்டப்பெறும் நிலையில் உறவுச்சூழலைப் புலப்படுத்திவிடுவது ஓர் உத்தியாகப் பயன்பட்டிருப்பதை
நாம் காணமுடிகிறது.
தொடர்நிகழ்வுச்
சூழல்
எந்த ஓர் உரையாடலும்
முன் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றையோ கூறிய செய்தி ஒன்றையோ அடிப்படையாகக் கொண்டு அதன் அடுத்த நிகழ்வாகத்
தொடர்ந்து நடைபெறுகிறது எனலாம். எனவே அவ் உரையாடல்
மூலமாக தொடர்நிகழ்வுச் சூழலை நாம் அறிந்து கொள்ளலாம்.
அன்னாய்
வாழிவேண்
டன்னை
நீமற்
றியானவர்
மறத்தல்
வேண்டுதி
யாயிற்
கொண்ட
லவரைப்
பூவி
னன்ன
வெண்டலை
மாமழை
சூடித்
தோன்ற
லானாதவர்
மணிநெடுங்
குன்றே
(209)
என்னும்
பாடல் தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்து சென்றபோது தலைவி ஆற்றியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தும் தோழியை நோக்கி உரைப்பதாக அமைந் துள்ளது. இப்பாடலில் தோழி தலைவியை நோக்கி
மறத்தல் வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லியமை தெளிவாகப் புலப்படுத்தப் பெற்றுள்ளது. இதனால் தலைவியின் கூற்று தோழி கூற்றின் தொடர்நிகழ்வாக
அமைந்திருத்தலை அறியமுடிகிறது.
அம்ம
வாழி
தோழி
காதலர்
பாவை
யன்னவென்
னாய்கவின்
றொலைய
நன்மா
மேனி
பசப்பச்
செல்வ
லென்பதம்
மலைகெழு
நாடே
(221)
என்னும்
பாடல் தலைவன் தன்னிடம் சொல்லிச்சென்ற ஒரு செய்தியைக் கூறுமுகமாக
அமைந்துள்ளது. இவ்வாறு இப்பாடல் தலைவன் கூற்றின் தொடர்நிகழ்வாக அமைந்திருக்கக் காணலாம்.
அம்ம
வாழி
தோழி
நாளு
நன்னுதல்
பசப்பவு
நறுந்தோ
ணெகிழவு
மாற்றலம்
யாமென
மதிப்பக்
கூறி
நப்பிரிந்
துறைந்தோர்
மன்றநீ
விட்டனை
யோவவ
ருற்ற
சூளே
(227)
என்னும்
பாடல் தலைவன் முன்பு கூறிய சூள்மொழியை நினைவுறுத்தும் வண்ணமாக அமைந்துள்ளது.
உளவியல் சூழல்
உரையாடலில் ஈடுபடுவோரின் மனநிலை, உணர்வு ஆகியவற்றை உளவியல் சூழல் புலப்படுத்துகிறது.
கருங்கால்
வேங்கை
மாத்தகட்
டொள்வீ
யிருங்கல்
வியலறை
வரிப்பத்
தாஅம்
நன்மலை
நாடன்
பிரிந்தென
ஒண்ணுதல்
பசப்ப
தெவன்கொ
லன்னாய்
(219)
என்று
தோழி தலைவியிடம் கூறும்போது வினாவை எழுப்பி அதன் மூலம் அவளைத்
தேற்றுவதைக் காணமுடிகிறது. தலைவன் பிரிவால் தலைவியிடத்து நேர்ந்த மனவருத்தமும் அது அவளது முகத்தின்
வாயிலாக வெளிப்பட்டமையுமாகிய உணர்வு நிலையினைத் தோழி மிக அழகாக
வெளிப்படுத்து கிறாள்.
அம்ம
வாழி
தோழி
நம்மூர்
நிரந்திலங்
கருவிய
நெடுமலை
நாட
னிரந்துகுறை
உறாஅன்
பெயரி
னென்னா
வதுகொனம்
மின்னுயிர்
நிலையே
(228)
என்று
தோழி உரைக்கும்போது வினாவின் மூலம் அச்சம் ஏற்படுத்தி தலைவியின் மனப்பாங்கை அறியும் போக்கைக் காணமுடிகிறது.
சங்க அகப்பாடல்கள் ஒவ்வொன்றும்
பாடல் மாந்தரின் உள்ளநிகழ்வைத் தெள்ளிதின் வெளிப்படுத்த வல்லன. உரிப்பொருள் என்பது உரையாடல் சூழலாகிய உள்ளச்சூழலை வெளிப்படுத்தும் உத்தி எனலாம். இதுவே புலவர் அப் படைப்பில் தோற்றுவிக்கக்
கருதிய பயனாகவும் அமைகிறது.
பண்பாட்டுச் சூழல்
உரையாடல் பங்கேற்பாளர் மற்றும் அவர் சார்ந்த சமுதாயத்தின்
நம்பிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களையும் அவ்வப்போது குறிப்பிட்டுச் செல்லக் காணலாம். மொழி என்பது இக்கூறுகளின்
மீதே கட்டமைக்கப்படுகிறது. எனவே இக் கூறுகள்
பண்பாட்டுச் சூழலை வடிவமைப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன எனக்
கூறலாம்.
பொய்யா
மரபி
னூர்முது
வேலன்
கழங்குமெய்ப்
படுத்துக்
கன்னந்
தூக்கி
முருகென
மொழியு
மாயிற்
கெழுதகை
கொல்லிவ
ளணங்கி
யோற்கே
(245)
என்னும்
கபிலரின் பாடல் கழங்கு பார்த்து வேலன் நிகழ்த்தும் வெறியாடலைக் குறிப்பிடுகிறது.
அன்னாய்
வாழிவேண்
டன்னை
நம்மூர்ப்
பார்ப்பனக்
குறுமகப்
போலத்
தாமும்
குடுமித்
தலைய
மன்ற
நெடுமலை
நாடன்
ஊர்ந்த
மாவே
(202)
என்னும்
பாடல் அந்தணர்கள் குடுமி வைத்துக்கொள்ளும் வழக்கினை எடுத்துரைக்கிறது. மேலும் தலைவன் குதிரையில் ஊர்ந்து சென்ற செய்தியும் அக் குதிரைக்குத் தலையாட்டம்
என்னும் அணியைச் சூடி அழகுபடுத்தியமையும் புலப் படுத்தப்
பெறுகின்றன.
இவ்வாறு பாடல்களின் வாயிலாகப் புலவர்கள் உணர்த்தும் பிற புறச் செய்திகள்
புலவரின் சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்து பண்பாட்டுச் சூழலை அமைத்துக்கொடுக்கின்றன. இத்தனைய செய்திகளே அப் படைப்பிற்கு உயிரோட்டத்தை
ஏற்படுத்துவனவாகும்.
மேற்கூறியவற்றால் கபிலரின் பாடல்களில் காணப்படும் உரையாடல்கள் இன்றைய மொழியியல் அறிஞர்கள் சுட்டும் உரையாடல் நுணுக்கங்களோடு அமைக்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. அக இலக்கியக் கூறுகளான
முதற்பொருள் இடச்சூழலையும் கூற்று விவரம் உறவுச் சூழலையும் உரிப்பொருள் உளவியல் சூழலையும் அமைத்துக்காட்டுகின்றன. பாடலில் உணர்த்தப்படும் பிற செய்திகள் பண்பாட்டுச்
சூழலை அமைக்கவும் மொழிப் புலப்பாட்டு முறை தொடர்நிகழ்வுச் சூழலை
அமைக்கவும் ஏதுவாக அமைகின்றன. இவ் ஐந்து சூழல்களும்
சங்கப் பாடல்களில் வரையறுத்து அமைக்கப்பட்டிருப்பதன் வாயிலாகத் தமிழ்மொழியின் செவ்வியல் தன்மை புலப்படுத்தப்பெற்றுள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.
உரையாடல் உத்திகள்
சிறந்த உரையாடல் அமைவதற்கு பங்கேற்பாளரின் உரையாடல் திறன் இன்றியமையாததாகும். உரையாடலின் சிறப்பினை மிகுவிப்பதாக அமையும் உத்திகளைப் பயன்படுத்தி உரையாடலை நிகழ்த்தும்போது அவ் உரையாடல் எதிர்பார்க்கும்
பலனைத் தருகிறது.
1. 1. எதிர்பார்ப்புகளில்
நியாயம் இருத்தல் (Realistic Expectations)
உரையாடுபவரின் சொற்களில் ஒருவித நியாயம் அமைந்திருக்க வேண்டும். எதையும் பொருளற்றுப் பேசினால் அதனால் எவ்விதப் பயனையும் அது ஏற்படுத்தாது. பேச்சில்
ஒரு நியாயம் இருக்கும்போது அப்பேச்சு சிறந்த உரையாடலாக அமையும் எனலாம்.
வரைவிடைவைத்துப் பிரிந்த தலைவன் நீட்டித்து வந்தபோது அவன் கால நீட்டிப்பிற்கான
காரணத்தை ஐயுறுகின்றாள் தோழி.
அம்மவாழி
தோழி
நம்மலை
நறுந்தண்
சிலம்பி
னாறுகுலைக்
காந்தட்
கொங்குண்
வண்டிற்
பெயர்ந்துபுற
மாறிநின்
வன்புடை
விறற்கவின்
கொண்ட
வன்பி
லாளன்
வந்தன
னினியே
(226)
என்னும்
பாடலில் வஞ்சப்புகழ்ச்சியாகத் தோழி தலைவியிடம் உரைக்கும்
செய்தியில் வன்புடையாளன் என்று தலைவனைக் குறிப்பிட்டதற்கும் காந்தள் மலர்கள் பலவற்றை நாடும் வண்டை அவனுக்கு உவமித்ததற்கும் அவனது பண்புநலன் குறித்த ஐயம் எழுவதற்கும் அவனது
காலநீட்டிப்பு இடமளித்ததை அறியமுடிகிறது.
2. நடத்தையை
விளக்கப்படுத்துதல் (Describing Behaviour) உரையாடல் என்பது ஏற்கெனவே செய்யப்பட்ட செயல்பாடுகளுக்குரிய விளக்கமாகவும் அமைகிறது. எனவே அவ்வாறு தரப்படும்
விளக்கம் கேட்போர் ஏற்றுக் கொள்வதாக அமையவேண்டியது இன்றியமையாததாகும். சங்க அக இலக்கியத்தில்
தலைவன் கூற்றாகவரும் பெரும்பாலான பாடல்கள் இத்தகைய தன்மையுடன் இருப்பதை அறியலாம்.
குன்றக்
குறவன்
காதன்
மடமகள்
வரையர
மகளிர்ப்
புரையுஞ்
சாயல்
ஐய
ளரும்பிய
முலையள்
செய்ய
வாயினண்
மார்பினள்
சுணங்கே
(255)
என்னும்
பாடலில் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவனுடைய ஆற்றாமை
மிகுதியைக்கண்டு பாங்கன் வினவ தன் தலைவியின்
சிறப்புகளையும் அழகினையும் எடுத்துக்கூறி தன் ஆற்றாமைக்கான காரணத்தைத்
தலைவன் உரைக்கின்றான்.
3. கருத்தைச் சரியாகப்
புலப்படுத்துதல்
(Proper Coding)
மொழி கருத்தைப்புலப்படுத்தும் வாயில் என்று
கூறுவர். எனவே உரையாடல்வழியாகச் சொல்லவந்த
கருத்தைச் சரிவரப் புலப்படுத்தவேண்டும். கருத்துப் புலப்பாட்டை முழுமையாகச் செய்யமுடியாத உரையாடல், உரையாடல் நிகழ்த்துபவரின் திறனின்மையைப் புலப் படுத்திவிடும். தோழிகூற்றுப் பாடல்களை நுணுகி நோக்கும்போது இத்தகைய உத்திமுறை செவ்வனே அமைந்திருப்பதைக் காணலாம்.
அன்னையு
மறிந்தன
ளலரு
மாயின்று
நன்மனை
நெடுநகர்
புலம்புகொள
உறுதரும்
இன்னா
வாடையு
மலையும்
நும்மூர்ச்
செல்கம்
எழுகமோ
தெய்யோ
(236)
என்று
தோழி தலைவனிடம் கூறும்போது அவன் தலைவியை உடன்போக்கு
அழைத்துச் செல்லவேண்டியதன் தேவையை மிகத் தெளிவாகப் புலப்படுத்திவிடுகிறாள். தலைவனுடன் தன் மகள் கொண்ட
காதலை அன்னை அறிந்துகொண்டுவிட்டாள் என்று தோழி கூறுகிறாள். தலைவனுக்குத்
தன் மகளைத் திருமணம் செய்துவைக்க அன்னை ஆர்வமுடையவளாய் இருந்திருப்பின் அவளே முன்னின்று அதற்கு
வழிவகை செய்திருக்கலாம். அவ்வாறு செய்யாததால் அன்னைக்குத் தலைவனைத் தன் மருமகனாக்கிக்கொள்ளும் கருத்தில்லை என்பது
தெளிவாகப் புலப்படுகிறது. தலைவியின் காதல் அலர்தூற்றும் நிலைக்கு வந்துவிட்டமையால் அவளுடைய திருமணம் விரைவில் நடந்தேறவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இயற்கையும் தலைவியின் துன்பத்தை மிகுவித்தலால் தலைவன் உடன்போக்கு மேற்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று
தோழி வெளிப்படுத்தும் உரையாடல் சுருக்கமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும்
அமைந்திருக்கக் காணலாம்.
4. ஆக்கபூர்வமாகத்
திறனாய்வு
செய்தல்
(Constructrive Criticism)
சூழலையும் எதிர்காலத்தையும் நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப உரையாடல் நிகழ்த்தவேண்டும். அந்த உரையாடல் ஆக்கபூர்வமாக
அமைதலும் வேண்டும்.
குன்றக்
குறவன்
காதல்
மடமகள்
அணிமயி
லன்ன
அசைநடைக்
கொடிச்சியைப்
பெருவரை
நாடன்
வரையு
மாயின்
கொடுத்தனெம்
ஆயினோ
நன்றே
இன்னும்
ஆனாது
நன்னுதல்
துயரே
(258)
என்று
வரைவு மறுத்துரைக்கும் தமருக்கு உரைக்கின்ற தோழியின் கூற்றை இதற்குச் சான்றாகக் காட்டலாம். அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்திருக்கும் பாடல்கள் இவ்வாறு ஆக்கபூர்வமாகத் திறனாய்வுசெய்து செய்திகளை முன்வைப்பனவாக அமைந்துள்ளன.
5. தன்னை உணர்ந்து பேசுதல் (Self Esteem)
உரையாடுபவர் தம் வயது, சமூக
மதிப்பு, சூழல் எனப் பலவற்றையும் உத்தேசித்து
அதற்கேற்ப உரையாற்ற வேண்டியது அவசியமாகும். ஒருவருடைய உரையாடல் அவர்தம் சிறப்புக்கு எந்தவகையிலும் தாழ்வு ஏற்படுத்தாத வகையில் அமைந்திருத்தல் வேண்டும்.
மயில்க
ளாலப்
பெருந்தே
னிமிரத்
தண்மழை
தழீஇய
மாமலை
நாட
நின்னினுஞ்
சிறந்தன
ளெமக்கே
நீநயந்து
நன்மனை
யருங்கடி
யயர
வெந்நலஞ்
சிறப்பயா
மினிப்பெற்
றோளே
(292)
என்னும்
பாடலில் கபிலர் தன்னைஉணர்ந்து பேசும் உரையாடல் உத்தியை நுணுக்கமாகப் புலப்படுத்துகிறார். தன் கணவன் இன்னொரு
பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்தபோது அவளைத் தான் அனுசரித்துச் செல்லவேண்டிய
சூழலில் கணவனைப் பார்த்து அவனைக் காட்டிலும் தனக்கு அவள் இனியள் என்று
கூறும்போது தன் சுயமரியாதையைக் காத்துக்கொள்ளும்
உளவியல் அணுகுமுறைப் பாங்கைத் தலைவி வெளிப்படுத்துதல் புலனாகிறது.
உரையாடலில் கபிலர் புலப்படுத்தும் உத்திகள் அவருடைய ஆளுமைத்திறத்தை மட்டும் புலப்படுத்தும் நோக்கத்துடன் அமையாமல் சமுதாய மக்கள் மொழியைத் தம் உரையாடலில் சிறப்பாகப்
பயன்கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுறுத்துவதற்காகவும் அமைக்கப் பெற்றுள்ளன எனலாம்.
இவ்வாறு மேற்காட்டப்பெற்ற உரையாடல் கூறுகள் மட்டுமன்றி உரையாடலின் பிற கூறுகளையும் சங்கப்
பாடல் களில் பொருத்திக் காணும்போது சங்க இலக்கியங்களைப் புதியகோணத்தில்
புரிந்து கொள்வதற்கான புதிய அணுகுமுறைகள் உருவாகும் என்பதை உணரமுடிகிறது. மேலும் புதிய ஆய்வுகளுக்கு அடித்தளமாகவும் இக் கட்டுரை அமைய
வாய்ப்புண்டு.
¨
நூல்
: நிர்மலா கிருட்டினமூர்த்தி,
சங்கச்
சாரலில்,
காஞ்சிபுரம்
: விழிச்சுடர்ப் பதிப்பகம், 2012, 13-51.
No comments:
Post a Comment