Tuesday, 6 August 2019

சொர்க்கத்தில் நவபாரதம் காட்சி 5


சொர்க்கத்தில் நவபாரதம்


காட்சி 5

நிகழிடம்                  :  வசந்த மண்டபம்
நிகழ்த்துவோர்     : உமையம்மை, கணபதி, முருகன், தெய்வயானை,                                                          வள்ளி, நாரதர்.

***
    வசந்த மண்டபத்தின் சுவர்களும் விதானமும் பல வண்ண ஓவியங்களோடு காட்சியளிக்கின்றன. எவ்வளவு அற்புதமான காட்சிகள்! சான்றாக அதோ அங்கே பாருங்கள்! பாலைநிலம் வற்றிக்கிடக்கிறது. நீர்வேட்கையால் தவித்த ஆண்மானும் பெண்மானும் நீர் தேடி அலைகின்றன.  நீண்ட தேடலுக்குப்பின் ஒரு நீர்நிலை கண்ணில்படுகிறது.  அதிலும் மிகக் குறைந்த  அளவே தண்ணீர் இருப்பதைக் காணும் ஆண்மான் அத் தண்ணீர் இருவரின் நீர்வேட்கையை நிறைவு செய்யாது என்று எண்ணுகிறது.  அதனால் தன் துணையிடம் இருவரும் சேர்ந்தே நீர் அருந்துவோம் என்று கூறுகிறது.  தன் மன¬வி நீர் அருந்த விட்டுவிட்டு தான் நீர் அருந்துவதுபோல் பாவனை செய்துகொண்டிருக்கிறது.  இத்தகைய அன்பை வெளிப்படுத்தும் சங்க இலக்கியக் காதல் காட்சிகளும் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் வசந்த மண்டபத்தின் செல்வச் செழுமைக்குக் கலைமெருகு ஊட்டுகின்றன.
                வசந்த மண்டபத்தின் சந்திரோதய முற்றத்தில் முருகன் தன் அன்பு மனைவியராகிய தெய்வயானை, வள்ளியோடு பொன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருக்கிறான்.  உமையம்மை அங்கே வருகிறார்.
***
உமை       :  முருகா! தெய்வயானை!  வள்ளி! - அனைவரும் நலந்தானே!
முருகன்     :  எங்களை ஆசீர்வதியுங்கள் அம்மா.
உமை  : நீங்கள் மூவரும் இன்றுபோல் என்றும் இன்பமாக இருக்கவேண்டும்.
முருகன்          : தாங்கள் ஏனம்மா இவ்வளவு தூரம் வந்தீர்கள்?  ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நாங்கள் வந்திருப்போமே.
உமை : அதனாலென்ன அழகா.  உன்னைப் பார்த்து நெடுநாளாயிற்றே!  அதனால்தான் நானே வந்தேன்.  உன் தந்தை  எப்பொழுதும்போல் ஏதோ வழக்கு விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் நான்மட்டும் தனியாக வந்துவிட்டேன். 
                (தெய்வயானையைப் பார்த்து)
                தெய்வயானை! என்ன நீ ஒன்றும் பேசாமல் இருக்கிறாய்? வள்ளியும் உம்மென்று இருக்கிறாள்.  உங்கள் இருவருக்குள் ஏதாவது மன வேறுபாடா?
வள்ளி :  எங்கள் இருவருக்குள் எதுவும் தகராறில்லை அத்தை. நாங்கள் ஒருவரையொருவர் அனுசரித்து வாழப் பழகிக் கொண்டுவிட்டோம்.  பிரச்சனையே உங்கள் அன்பு மகனால்தான்!
உமை :              ஏன்? வேலன் உங்கள் இருவர் மீது காட்டும் அன்பில் ஏதேனும் பாரபட்சம் காட்டுகிறானா?
தெய். : அதெல்லாம் ஒன்றுமில்லை மாமி.  அண்மையில் கூட எங்கள் இருவருக்கும் நம் தேவலோகத்து விசுவகர்மா மூலம் நெய்யச்சொல்லி ஒரே நிறம், ஒரே வேலைப்பாடு, ஒரே விதத்தில்ரிவர்சிபில்புடவை வாங்கித் தந்துள்ளார்.  இதோ பாருங்கள் எங்கள் புடவையை!
உமை    :  மிக அருமையாக இருக்கிறதே!  கடம்பா, எனக்கும் இதுபோன்று ஒரு சேலை வாங்கித்தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியதா? கல்யாணம் என்று ஒன்று ஆகிவிட்டால் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை உடனே மறந்துவிடுகிறார்கள்.
முருகன்   : அம்மா என்ன இது நீங்களுமா இப்படி?  உங்களுக்குப் புடவை வேண்டுமென்றால் நேரடியாகக் கேளுங்கள்.  அதைவிடுத்து நான் உங்களை மதிக்கவில்லை என்று ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்?
உமை    :  நான் ஒன்றும் குற்றம் சுமத்தவில்லை.  உலகத்தில் நடப்பதைத்தான் சொன்னேன்.
முருகன்  :  ஏன் இப்படிக்கூட சொல்லலாமே.  தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்து விட்டால் பிள்ளைகளின் அம்மாக்கள் மனம் மாறிவிடுகிறார்கள் என்று!  
உமை                :               தாய்ப்பாசத்திற்கே மாசு கற்பிக்கிறாயா?
முருகன்          :               நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் அம்மா!  நான் திருமணத்திற்கு முன்னால் உங்களுக்கு என்னென்ன பரிசுகள் கொடுத்தேன்?  எத்தனை புடவைகள் வாங்கிக் கொடுத்தேன்?
உமை                :               ஒன்றும் கொடுத்ததில்லை!
முருகன்          :               அப்படி இருக்கும்போது இப்பொழுதுமட்டும் கொடுக்கவில்லை என்று நீங்கள் குற்றம் சுமத்துவது சரியா?
உமை    :               உனது மனைவிகளுக்கு மட்டும் நீ கொடுக்கலாமா?
முருகன்     :   உங்களுக்குத் தரவில்லை என்பதைவிட, இவர்களுக்குக் கொடுத்ததுதான் உங்கள் பொறாமைக்குக் காரணம் இல்லையா?
உமை   :  என்ன!  நான். . . நான்  பொறாமைப் படுகிறேனா?  நீ நன்றாக இருப்பதைக் கண்டு முதலில் மகிழ்ச்சி அடைபவள் நான்தானடா! 
முருகன் :    உண்மைதான்.  நான்மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இப்படித்தான் எல்லாத் தாய்மார்களும் தம்முடைய மகன் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.  ஆனால், தம் மருமகள்கள் சந்தோஷமாக இருந்தால் வயிறு எரிகிறார்கள்.  உலக மாதாவாக இருந்தாலும் நீங்களும் ஒரு மாமியார் என்பதை நிரூபித்து விட்டீர்கள்!
உமை                :               போதும் போதும் நிறுத்து! தெய்வயானை...! வள்ளி. . . ! - இப்பொழுது உங்களுக்குச் சந்தோஷம்தானே!  என் மகனை எனக்கு எதிராகத் தூண்டிவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்கிறீர்களா?
தெய்.                 :               ஐயோ மாமி, என்ன இது?
வள்ளி               :               அத்தை, நாங்கள் எதுவுமே பேசாதபொழுது எங்கள் மீது வீணாகக் குற்றம் சாட்டுகிறீர்களே? இது நியாயமா அத்தை ?
உமை                :               ஓஹோ. . . , நான் அநியாயம் செய்கிறேன் என்கிறாயா?  வீட்டிலிருந்து கிளம்பும்போதே அவனைத் தயார்செய்து வைத்துவிட்டீர்கள் போலிருக்கிறது!  எல்லாம் சரி! ‘தலையணை மந்திரம்நன்றாக வேலை செய்கிறது!
முருகன்          :               அம்மா, சற்றே பொறு!  ஏனம்மா படபடவென்று பொரிந்து தள்ளுகிறாய்?  உனக்குவேறு வயதாகிவிட்டது.
உமை                :               அதைத்தானே பார்த்தேன்.  எனக்கு வயதாகி விட்டது. . . ; அதனால் புத்தி பேதலித்து விட்டது என்கிறாயா?
முருகன்          :               அம்மா, சிறு வயதில் நான் எப்பொழுதும் உன் பேச்சைக் கேட்டது கிடையாது.  உங்கள் பெரிய பிள்ளை - அதாவது, என் அண்ணன் கணபதிதான் அம்மா-பிள்ளையாக வளர்ந்தான்.  நீ குளிக்கச் செல்லும்போதுகூட அவன் உன் முந்தானையைப் பிடித்துக் கொண்டே வருவான் என்று நீயே பலமுறை கூறி இருக்கிறாய்.  நான்முன்கோபிஎன்றும் எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொண்டு  வீட்டை விட்டு ஒடிவிடுவேன் என்றும் நீ கூறியிருக்கிறாய். . .
உமை                :               ஆமாம் ஆமாம்! அதற்கென்ன இப்போது?
முருகன்          :               அது மட்டுமில்லை.  நீங்கள் அனைவரும் மிகவும் வற்புறுத்தியதன் பேரில்தான் நான் தெய்வயானையை மணந்து கொண்டேன்.  என் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயக் கல்யாணம் செய்துவிட்டீர்கள் என்று பழி வாங்குவதற்காக அவளைக்கூட வெகுநாள் வரையில் நான் அன்பாக நடத்தியது கிடையாது.  அதன் பிறகும் வேண்டுமென்றே என் எதிர்ப்பினைக் காட்டவேண்டும் என்று வேடர் குலத்து மகளான வள்ளியைக் காதலித்து மணம்புரிந்து கொண்டு தனியாகக் குடும்பம் நடத்தினேன்.  பிறகு நீங்கள் எல்லோரும் திரண்டு வந்து என் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தி தேவ லோகத்துக்கு அழைத்து வந்து தெய்வயானை, வள்ளியோடு ஒன்றாக வாழுமாறு செய்தீர்கள்.
உமை                :               எல்லாம் பழைய கதை! அதற்கென்ன இப்போது?
முருகன்          :               அம்மா! நீங்கள் நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்.  நான் எப்பொழுதும் உங்கள் சொல் கேட்கும் நல்ல பிள்ளையாக இருந்தேனா? அல்லது பிடிவாதம் பிடிக்கும் துஷ்டப் பிள்ளையாக இருந்தேனா?
உமை                :               நீ பிடிவாதக்காரன்தான்!
முருகன்          :               நான் இப்பொழுது அனுசரணையாகப் பேசுவதுபோல் திருமணத்திற்கு முன்பு பேசியிருக்கிறேனா?
உமை                :               பத்து கேள்வி கேட்டால் ஒன்றுக்குத்தான் பதில் சொல்வாய்! ஏதாவது சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவாய்!
முருகன் :  அப்படியென்றால் திருமணத்திற்குப் பிறகுதானே நான் நல்லவனாக - பொறுமை உள்ளவனாக - தாயிடத்து மரியாதை காட்டுபவனாக இருக்கிறேன் என்று அர்த்தம்.
உமை                :               ஆமாம்!
முருகன்          :               அப்படி வாருங்கள் வழிக்கு! இப்போது சொல்லுங்கள். திருமணத்திற்குப் பின் என்னிடத்தில் நல்ல மாற்றம்தானே ஏற்பட்டுள்ளது?  இதற்கு உன் மருமகள்களுக்கு நீ நன்றி சொல்லவேண்டுமே அல்லாது பொறாமைப்படலாமா?
உமை                :               அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கந்தா!
முருகன்          :               அம்மா, உலகில் எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான் ஒரு கற்பனையை வளர்த்துக் கொள்கிறார்கள்.  அதீத அன்பின் காரணமாகச் செல்லம் கொடுத்துத் தம் பிள்ளைகளைத் தான்தோன்றித்தனமாக வளர்த்துவிடுகின்றனர்.  திருமணம் செய்துகொண்ட மனைவி மிகுந்த பொறுமையுடன் அவனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவந்தால், அதைத் தன்னால் செய்ய இயலாத இயலாமையால் பொறாமையாக மாற்றிக் கொள்கிறார்கள்.  அதுமட்டுமல்லாது தன் மகன் திருமணத்திற்குப் பின் தன்னைவிட்டு மனத்தால் நெடுந்தூரம் விலகிவிட்டான் என்று கற்பனை செய்துகொண்டு, அதற்குக் காரணம் அவன் மனைவிதான் என்று தப்பிதம் கற்பித்து மேலும் மேலும் வன்மத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.
உமை                :               என்னைத் தவறாக எண்ணிக்கொள்ளாதே வேலா.  ஏதோ பிழையாகக் கூறிவிட்டேன்.  உன் மனம் புண்பட்டுவிட்டதா?
        (அங்கே கணபதி வர)
கணபதி          :               யார் மனது  புண்பட்டது? ஏன் புண்பட்டது? எப்படிப் புண்பட்டது? எங்கு . . .
உமை :             அப்பா மகேஸ்வர புத்ர! யாருக்கும் ஒன்றும் இல்லை.  எல்லாம் முடிந்தபின் மீண்டும் வந்து கிளறாதே!
                (கணபதியின் முகத்தில் மகிழ்ச்சி வடிந்து முகம் தொங்கிவிட்டது! ! ! ?)
முருகன்          :               அம்மா! அவன் உன் பிள்ளை! வீணாய் இப்பொழுது அவன் மீதும் கோபத்தைக் காட்டாதே.
உமை                :               நீயும் என் மகன்தானடா.  உனக்கும் உன் மனைவியருக்கும் என்ன பிரச்சனை என்று சொல்?
                (கணபதி இடைமறித்து)
கணபதி          :               அம்மா. . . தந்தையார் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பார்க்கச் சொன்னார்.  தம்பியின் குடும்பப் பிரச்சனையில் நான் தலையிடுவது சரியில்லை;   செல்கிறேன்.
வள்ளி               :               அத்தை சொன்னதற்காக வருத்தப் படாதீர்கள் மாமா, என் தரப்பில் பேச நீங்களும் இங்கேயே இருங்கள்.  நீங்கள்தான் உங்கள் தம்பிக்குப் புத்தி சொல்லவேண்டும்.
கணபதி          :               என்ன பிரச்சனை செய்கிறான் வேலன்?  என்னிடம் சொல்.  அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறேன்.  நான் பார்த்து உங்களைச் சேர்த்துவைத்தேன்.  நீ கண்ணீர் விட்டால் அப் பாவம் என்னைத்தான் வந்துசேரும்.  வேலா! என்ன கொடுமை செய்தாய் வள்ளிக்கு?
முருகன்          :               ஒன்றும் இல்லை அண்ணா!  இவர்கள் ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
உமை                :               தெய்வயானை! பிரச்சனை இதுதான் என்று போட்டு உடையேன்!
முருகன்          :               அம்மா, அதை நானே சொல்கிறேன். நான் சில காலம் பிற உலகங்களையெல்லாம் சுற்றிவரலாம் என்று நினைக்கிறேன்.
வள்ளி               :               சிலநாள் என்றால் எவ்வளவு என்று கேளுங்கள் அத்தை.
முருகன்          :               சுமார் நான்கைந்து வருடங்கள்!
உமை                :               அதிலென்ன தடை இருக்கிறது?  தாராளமாகச் சுற்றி வாருங்களேன்.  உலகைச் சுற்றிவருவது அவனுக்குப் புதிதா என்ன?
தெய்.                 :               அவர் சுற்றப்போவது தனியாக, அதாவது எங்களை விட்டுவிட்டு!
உமை                :               அதனாலென்ன போய்வரட்டுமே!
வள்ளி               :               தனியாக இருப்பதற்கு ஒருவருக்கு இருவராக எங்களை ஏன் மணந்து கொண்டாராம்?
முருகன்          :               ஒரு நான்கு வருடங்கள் பிரிந்திருப்பதில் என்னபிழை வந்துவிடப் போகிறது?
வள்ளி               :               பிரிந்திருக்கவேண்டின் ஏன் திருமணம் செய்துகொண்டாராம்?  தனியாகவே இருந்திருக்கலாமே?
                (அங்கே நாரதர் வந்து சேர்கிறார்)
நாரதர்             :               அம்மா, நீங்களும் கணபதியும் இங்கேதான் இருக்கிறீர்களா?
கணபதி          :               நாரதரே. . . நீர் எதற்காக இங்கே வந்தீர்?
நாரதர்             :               கதிர்காமனைப் பார்த்து வெகுநாட்களாகி விட்டனவே; பார்த்துச் செல்லலாம் என்றுதான் வந்தேன் விக்ன விநாயகனே!
கணபதி          :               இங்கு ஏதோ விவகாரம் வெடிப்பதுபோல் இருக்கிறதே என்று உம் கழுகு மூக்கில் வியர்த்திருக்கும்.  அதற்காகத்தானே வந்தீர்?  உண்மையைச் சொல்லும்!
முருகன்          :               அண்ணா, அவரும் இங்கேயே இருக்கட்டும்.  அவரை விரட்ட வேண்டாம்.  அவர் நாலும் தெரிந்தவர்.  என் சார்பில் அவரே நீதி வழங்குவார்.  என்ன நாரதரே சரியா?
நாரதர்             :               விஷயத்தைச் சொல்லாமல் நீதி கேட்டால் எப்படி வள்ளி மணாளா?
முருகன்          :               நான் தெய்வயானைக்கும் மணாளன்தான். இப்படிப் பிரித்துச் சொல்லி எங்களுக்குள் சண்டையை மூட்டிவிடாதீர்!
நாரதர்             :               நாராயணா நாராயணா! ஏதோ பேச்சுக்குச் சொன்னேன். நீங்கள் இவ்வளவு விழிப்பாய் இருப்பீர் என்று எண்ணவில்லை!!! 
முருகன்          :               நாரதா! நான் கேட்பதற்குப் பதில்சொல்! சில காரியங்களைச் செவ்வனே முடிப்பதற்காகக் கணவன், தன் மனைவியைச் சில ஆண்டுகள் பிரிந்திருப்பதில் தவறேதும் இல்லையே?
நாரதர்             :               இல்லையே! இதில் தவறு இருப்பதாக எனக்கொன்றும் படவில்லை. தாராளமாகப் பிரிந்திருக்கலாம். 
தெய்.                 :               நீர் பிரம்மச்சாரி!  உம்மைக் கேட்டால் வேறெப்படி சொல்வீர்?
நாரதர்             :               நானொன்றும் என் தனிப்பட்ட கருத்தைச் சொல்லவில்லை அம்மணி.  எல்லாம் நான் பார்த்தறிந்ததைத்தான் சொல்கிறேன்.
வள்ளி               :               எதைப் பார்த்தீர்? எதை அறிந்து கொண்டீர்?
நாரதர்             :               பூலோகத்தில் திருமணம் முடித்த கையோடு மனைவியை விட்டுவிட்டு கணவன் மட்டும் வெளியூரில் வேலைக்குச் செல்வது வெகு சகஜம். 
தெய்.                 :               ஐயோ பாவம்!  அப்பெண்ணின் மன நிலையை யாரேனும் நினைத்துப் பார்த்தீரா?
நாரதர்             :               நீங்கள் சரியான பத்தாம்பசலியாக இருக்கிறீர்கள் அம்மணி.  அப்பெண்கள்தான் தம் கணவன் வெளிநாடு சென்று நிறைய பொருளை ஈட்டிவர வேண்டும் என்று விரும்புகிறார்கள். 
வள்ளி               :               பாவம்! உள்நாட்டில் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லையோ என்னமோ?
நாரதர்             : அப்படியெல்லாம் இல்லை.  உள்நாட்டில் குறைந்த அளவு சம்பளமே கிடைக்கும்.  ஆனால் அதை வைத்துக்கொண்டு எண்ணி எண்ணிச் செலவுசெய்ய வேண்டும். சிக்கனமாக இருந்தால்தான் வாழ்க்கைவண்டி ஓடும். ஆனால் அப் பெண்கள் தம் பெட்டி நிறைய துணிமணி களும் நகைகளும் நிரம்பி வழியவேண்டும் என்று பேராசைப்படுகிறார்கள்.  ஆடம்பரமான வாழ்வு ஒன்றே அவர்கள் ஆசைப்படுவது!  அதனால் அவர்களை மணந்து கொண்டவர்களும் இளமையைத் தொலைத்து வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி பெரும் பொருள் சேர்க்க ஓயாது வெளிநாட்டில் உழைக்கிறார்கள்.
கணபதி          :               அப்படியென்றால் இல்லற வாழ்வை அவர்கள் எப்படித்தான் வாழ்வார்கள்?
நாரதர்             :               ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களுக்கு இரண்டு மூன்று மாதங்கள் தொடர் விடுப்புக் கிடைக்கும்.  அப்பொழுது மனைவியோடு உல்லாசமாக இருப்பதுடன் சரி.  ஒன்றிரண்டு குழந்தைகள் பெற்று விட்டால் அப்புறம் முழுமூச்சாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் குறிக்கோள்.
உமை                :               அப்படியென்றால் அக்குழந்தைகளை மடியில் தூக்கி வைத்து, கொஞ்சி,  சீராட்டி, தாலாட்டி ஆசைதீர மழலைச் சொற்களைக் கேட்பதெல்லாம் எப்படி?
நாரதர்             :               அதற்கெல்லாம் வாய்ப்பு எங்கேயிருக்கும்?  ஒருமுறை விடுப்பில் வரும்போது குழந்தை பிறந்திருக்கும்.  அக்குழந்தை பிறக்கும்போது மனைவியின் பக்கத்தில்கூட ஆறுதலாக இருக்கமுடியாது.  அடுத்தமுறை வரும்போது அக்குழந்தை வளர்ந்து பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்கும்.  அப்புறம் மழலையை எங்கே இரசிப்பது?
உமை                :               ஆச்சரியமாக இருக்கிறது.  நான் முருகனின் குழந்தைப் பருவத்தில் அவன் குறும்புகளை யெல்லாம் முக்கண்ணனிடம் எடுத்தெடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பேன் தெரியுமா?  அப்போது நான் அவரைத் தவம் செய்யவே விட்டதில்லை.  முருகனும் தான் கற்றதெல்லா வற்றையும் தன் தந்தையிடம் ஒன்றுவிடாது மழலையோடு எடுத்துச் சொல்வான்.  அவரும் முருகனை அரியாசனத்தில் அமர்த்தி, தாம் கீழே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார். அவர்கள் இருவருக்கும் ஆசிரியர் - மாணவர் விளையாட்டு விளையாடுவதுதான் பொழுது போக்கு. ‘தகப்பன்சாமிஎன்று கூறி அனைவரும் அவனைத் தூக்கித் தூக்கி வைத்துக் கொள்வார்கள்.  உலகைக் கட்டிக் காக்கும் ஈசனே தன் மகனின் மழலையில் ஆழ்ந்து உலகை மறந்து கிடக்கும்போது, இச்சைகளில் ஆழ்ந்து அமிழ்ந்துபோவதற்கே பிறப்பிக்கப்பட்ட இம்மக்கள் இந்த அரிய சுகங்களிலெல்லாம் எப்படிப் பற்றில்லாமல் இருக்கிறார்கள்?
நாரதர்             :               அவர்கள் தங்கள் இளமைக் காலத்திலேயே பெரும்பொருளை ஈட்டிவிட்டு வீடு, நிலம் என்று வாங்கிப்போட்டுவிட்டால் முதுமைக் காலத்தில் பற்றாக்குறை இல்லாமல் வாழலாம் என்று கணக்குப்போடுகிறார்கள் தாயே!
தெய்.                 :               வாழ்க்கை என்பதே இப்படிப்பட்ட சிறுசிறு விஷயங்களில் இன்பம் காண்பதுதானே? அவற்றை இழந்துவிட்டு இம் மக்கள் எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்?
நாரதர்             :               வெளிநாடு செல்பவர்கள் மட்டுமில்லை அம்மணி.  ஒரே நாட்டில் இருப்பவர்கள்கூட கணவனும் மனைவியும் வேறுவேறு ஊரில் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.  ஒருவருடைய இடத்திலிருந்து மற்றொருவர் வேலை செய்யும் இடத்திற்குச் செல்ல இரண்டு மூன்று நாட்கள்கூட ஆகும். அதனால் ஆளுக்கொரு வீடு எடுத்துத் தனியாக வசிக்கிறார்கள்.
வள்ளி               :               அப்படியென்றால் குழந்தைகள் நிலைமை என்னாவது?
நாரதர்             :               பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பெண்களுக்குத்தான்.  ஆண்கள் வாரத்திற்கு ஒருமுறையோ, மாதத்திற்கு இரு முறையோ வசதிபோல் தன் மனைவி இருக்குமிடத்திற்குச் செல்வர்.  சிலர் மாதக் கணக்கில்கூட பார்க்காமல் இருந்துவிடப் பழகிக்கொண்டுவிடுகிறார்கள். 
தெய்.                 :               இதென்ன பிழைப்பு!
நாரதர்             :               பிழைப்பிற்காகத்தான் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இந்தக் காலத்தில் தம் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமானால் - உயர்கல்வி தர வேண்டுமானால் - தம் பெண்பிள்ளைக்கு அதிக வரதட்சணை கொடுத்து வசதியான இடத்தில் திருமணம் முடித்துவைக்க வேண்டுமானால் -  ஆடம்பரமாகச் செலவு செய்து சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ வேண்டுமானால் கணவனும் மனைவியும் வேலைபார்த்துப் பொருளீட்ட வேண்டியது அவசியமாகிவிட்டது அம்மணி.
கணபதி          :               அதற்கு அவர்கள் பிரிந்துதான் பொருளீட்ட வேண்டுமா?  ஒரே ஊரில் ஏதேனும் ஒரு வேலையைப் பார்க்கக்கூடாதா?
நாரதர்             :               பார்க்கலாம்தான்.  ஆனால் பெரும்பாலும் மக்கள் அரசுப்பணிகளையே விரும்புகிறார்கள்.  அரசுப்பணி ஒரே இடத்திலா கிடைக்கும்? 
முருகன்          :               ஏன் நாரதா, தனியார் நிறுவனங்களில் வேலைசெய்தால் என்ன?
நாரதர்             :               தனியார் நிறுவனங்களில் ஆளைப்பிழிந்து எடுத்து விடுவார்கள். ‘தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போல் மேலதிகாரிகள் சொல்வதற்கெல்லாம்ஆமாம் சாமிஎன்றுஜால்ராபோட வேண்டும். அது மட்டும் அல்லாமல் சம்பளமும் மிகச் சொற்பமாகவே தருவார்கள்.  உதாரணமாக ஓர் அரசுக் கல்லூரியில் வேலைசெய்தால் மாதச் சம்பளம் பதினைந்தாயிரம் ரூபாய் என்றால் தனியார் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியர் என்ற பேரில் மாதத்திற்கு இரண்டாயிரம் மட்டுமே சம்பளம் தருவர்.   அத்துடன் தன் சீட்டு  எப்பொழுது வேண்டுமானாலும் கிழிந்துவிடும் என்று அஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான் வருவாய்க்கேற்ப இரண்டு இலட்சம், மூன்று இலட்சம் என்று இலஞ்சம் கொடுத்தாவது பலர் அரசுப் பணியில் சேர்ந்து விடுகிறார்கள்.
கணபதி          :               இப்படி இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து வேலைக்குச் சேர்வதைவிட அப்பணத்தை வைத்துக்கொண்டு ஏதாவது தொழில் தொடங்கினால் விரைவில் கோடீஸ்வரர் ஆகிவிடலாமே!
நாரதர்             :               சுயதொழில் செய்யவேண்டுமானால் இலாப நஷ்டத்தை ஒன்றாகப் பாவிக்கும் தைரியம் வேண்டும் யானை முகத்தோனே!  விடா முயற்சி வேண்டும்.  அறிவாண்மை வேண்டும்.  ஆனால் அரசுப் பணியில் சேர்வதாயின் இவற்றில் எதற்கும் அவசியம் இல்லை.
முருகன்          :               அப்படி என்றால் அரசுப்பணியில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றா கூறுகிறாய்?
நாரதர்             :               நான் அப்படிக் கூறவில்லை வேலாயுதா! முட்டாள்களே அரசுப்பணியில் இருந்தால் அரசாங்கம் எப்படி நடக்கும்?  பாதிக்குப்பாதி பேராவது புத்திசாலிகளாக இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தப் பாதிப்பேர் மீதிப் பேரின் வேலையையும் சேர்த்துச்செய்து அரசு இயந்திரத்தைச் சீராகக் கட்டிக்காக்கிறார்கள்.  முட்டாளான ஒருவன் சுயதொழில் செய்து வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால் எத்தனையோ அறிவுச் செப்பமில்லாதவர்கள் பெரிய பெரிய அரசுப் பதவியிலிருந்து காலந்தள்ள முடிகிறது.  ஏனென்றால் அவர் செய்யும் தவறால் ஏற்படும் எந்த ஓர் இழப்பும் அத்தனிமனிதனை எந்த விதத்திலும் பாதிப்ப தில்லை. அதனால் அவர் வாழ்க்கையில் கவலையின்றி இருக்கமுடிகிறது.
உமை                :               அதனால்தான் அனைவரும் அரசுப் பணியையே விரும்புகிறார்களா?
நாரதர்             :               அதுமட்டுமில்லையம்மா. அரைக்காசு உத்தியோகமானாலும் அரசு உத்தியோகமேபுருஷலட்சணமாகக் கருதப்படுகிறது. அரசாங்க உத்தியோகம் கிடைக்கவில்லையெனில் அவருக்குத் திறமை இல்லாதது போன்று சமுதாயம் எண்ணுகிறது. அதனால் தம் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பவர்கள்மாப்பிள்ளைஅரசு உத்தியோகக்காரனா? என்று பார்க்கிறார்களே அன்றி திருமணத்திற்குப் பின்னால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இணைந்துவாழ முடியுமா? என்று பார்ப்பதில்லை.  இதனால் அவர்கள் வாழ்க்கை இரயில் தண்டவாளங்களைப் போன்று அருகருகே இருந்தாலும் இணைய முடியாமல் இருக்கிறது.
   தெய்.              :               திருமணத்திற்குப் பின் அவர்கள் வாழ்க்கை இப்படித்தான் அமையும் என்று தெரிந்தும் அதனைத் தேர்ந்தெடுப்பதை அறியாமை என்பதா? அறிவீனம் என்பதா? திருமணத்தை ஒரு வேலியாக நினைக்கிறார்களேயன்றி அது துய்த்து இன்புறவேண்டிய ஒன்று என்பதை மறந்துவிட்டார்களே!
நாரதர்             :               தன் மகள் அரசு உத்தியோகம் பார்க்கும் பட்சத்தில்,  மாப்பிள்ளை அரசு உத்தியோகம் பார்க்காமல் சுயதொழில் செய்தால் நிலைமை இன்னும் மோசம் அம்மணி. பெண்ணைப் பெற்றோர் காலப் போக்கில் தம் மருமகனை ஒருபொருட்டாக மதிப்பதே இல்லை.
வள்ளி               :               ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் ஆணும் பெண்ணும் மணந்து கொண்டால் பிரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே!
நாரதர்             :               ஆஹா சரியாகக் குட்டையைக் குழப்பி விட்டீர்களே அம்மணி!  இதை மட்டும் பூலோகத்தினர் கேட்டுவிட்டால் உங்களை நார் நாராகக் கிழித்துவிடுவார்கள். இப்படிப்பட்ட புரட்சிசெய்ய அந்த ஆண்மகன் முருகனாக இருக்க வேண்டும்.  பெண் வள்ளியாக இருக்க வேண்டும். காதல், காதல் என்று திரைப்படங்கள் ஒன்றுவிடாது காதலுக்குக் கொடிபிடித்தாலும் அதை மக்கள் ஆரவாரம் செய்து இரசித்தாலும் தங்கள் குடும்பம், குழந்தைகள் என்று வரும்போது, எப்பொழுதும் காதலுக்கும் கலப்புத் திருமணத்திற்கும் எதிரிகள்தாம்!
கணபதி          :               அப்படியென்றால் இந்தப் பிரச்சனைக்கு முடிவுதான் என்ன?
நாரதர்             :               இப்பிரச்சனை முடியக்கூடாதென்று அரசுவேறு அவ்வப்போது சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.
முருகன்          :               அது என்ன நாரதா?
நாரதர்             :               தப்பித்தவறி இவற்றையெல்லாம் மீறி கணவனும் மனைவியும் ஒரே ஊரில் வேலைபார்த்தால் உடனே யாரேனும் ஒருவருக்குப் பணிஇடமாற்றம் வந்துவிடும்.
தெய்.                 :               ஏன் இப்படிச் செய்கிறார்கள்? 
நாரதர்             :               எல்லாம் விதிகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாததுதான் காரணம் அம்மணி.  அரசுப்பணியில் இடமாற்றம் என்று ஒரு முறை உள்ளது.  யாரேனும் தவறு செய்தால் அவர்களைத் தண்டிப்பதற்காக இடமாற்றம் புகுத்தப்பட்டது.  அதுமட்டுமல்லாது திருமணம், கல்வி ஆகியவற்றின் காரணமாக வேறொரு இடத்திற்குக் குடிமாற விரும்புபவர்களின் வசதிக்காக இவ்விதி கொண்டுவரப்பட்டது.  ஆனால் இன்றோ கணவன் - மனைவியும், பெற்றோர் - குழந்தைகளும் பிரிந்து துன்புறு வதற்காகவே இதனைப் பயன்படுத்து கிறார்கள்.  தேவையில்லாத தருணங்களில் கூட இடமாற்றம் செய்து குடும்ப நிம்மதியைக் கெடுப்பதும் இல்லாமல் அலுவலகப் பணியில் அவர்கள் முழுமனத்தோடு ஈடுபடமுடியாமலும் செய்து விடுகிறார்கள். அதனால் அவர்களால் பெரும்பாலும் சமுதாயம்தான் நலிவடைகிறது.
முருகன்          :               இங்கே சமுதாயம் எங்கே இடையில் வந்தது?
நாரதர்             :               இடமாற்றத்தால் நேரும் விளைவு எல்லாவற்றிலும் எதிரொலிக்கிறது கந்தா.  அதாவது ஒரு மருத்துவரை இடமாற்றம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அவர் வாரத்தின் இறுதி வேலைநாள் அன்று வேலைநேரம் முடிவதற்கு இரண்டு, மூன்று மணிநேரம் முன்னதாகவே புறப்பட்டுத் தம் ஊருக்குச் சென்றுவிடுவார். மீண்டும் திரும்பி வரும்போது திங்களன்று தாமதமாக வருவார். வார நாட்களிலும் அலுவலகப் பணியில் சிந்தனையைச் செலுத்தாது குடும்பத்தின் நினைவாகவே இருப்பார்.  அரசு விடுமுறைகள் வேலை நாட்களுக்கு இடையில் வந்துவிட்டால் கொண்டாட்டம்தான்.  தம்மிடம் இருக்கும் நேர்விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டு விடுப்பு என எதையாவது அவற்றுடன் சேர்த்துத் தம் ஊரைப்பார்க்கக் கிளம்பிவிடுவார். 
உமை                :               அப்படியென்றால் நோயாளிகளின் கதி என்னாவது?
கணபதி          :               அதோகதிதான்!
நாரதர்             :               இதேபோல் மருத்துவமனையின் பிற ஊழியர்களையும் நினைத்துப் பாருங்கள்.  இப்படி இருந்தால் பணியாளர்களிடையே ஓர் ஒருங்கிணைப்பை எப்படிக் கொண்டுவர முடியும்?  இப்படிக் கல்வித்துறை, பொதுப் பணித்துறை, மின்சாரத்துறை என ஒவ்வொரு துறையும் இடமாற்றம் என்ற முறையற்ற விதியால் ஒழுங்கமைப்பு கெட்டு, சமுதாயத்தைப் புரையோடச் செய்திருக்கிறது.
கணபதி          :               அப்பப்பா! மகா குழப்பமாக இருக்கிறதே!   
நாரதர்             :               இன்னும் இருக்கிறது, கேளுங்கள்.  ஒருவர் ஒரே பொறுப்பில் நிலைத்திருக்காத காரணத்தால் நிறைய பணிகளும் நிறைவேற்றப் படாமல் தேங்கிக்கிடக்கின்றன.
வள்ளி               :               அதெப்படி?
நாரதர்             :               ஒரு கோப்பினைப் படித்து என்ன செய்வது என்று ஆராய்ந்து ஒருவர் முடிவெடுக்கவே நிறைய நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.  ஒருவழியாக அதனைச் செய்துமுடிக்கலாம் என்று இருக்கும்போது வேறொரு இடத்திற்கு இடமாற்றம் வரும்.  அவர் போனபின் அதே இடத்திற்கு மற்றொருவர் வந்து ஒருவழியாக இடமாற்றம் காரணமாக எழுந்த குடும்பப் பிரச்சனையையெல்லாம் சரிசெய்தபின் அக் கோப்புகளை மறுபடியும் படிக்க ஆரம்பித்து வழிமுறைகளை ஆய்ந்துகொண்டிருக்கும்போது அவருக்கும் மீண்டும் இடமாற்றம் வந்து குறுக்கிடும். இப்படியே . . . ஒவ்வொரு கோப்பிலுள்ள பிரச்சனையும் தீர்க்கப்படாமல், ‘கன்னித்தீவு சிந்துபாத் கதைபோல முடிவே இல்லாமல் தொடர்கதையாகிவிடுகிறது.
தெய்.                 :               இதைக் கேட்கும்போதே மண்டை காய்கிறதே!
நாரதன்          :               இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது.
கணபதி          :               அதையும் சொல்லிவிடு!
நாரதன்          :               அரசுப்பணியில் சேரும்போது வேலை கிடைத்தால் போதும் என்று எந்த மூலை முடுக்காக இருந்தாலும் போய்ச் சேர்ந்து விடுகிறார்கள்.  ஆனால் நகரின் மையப் பகுதிக்கோ தலைமையகத்திற்கோ சென்று நிலையாக இருப்பதுதான் பெரும்பாலானோர் குறிக்கோளாக இருக்கிறது.  அதனால்எப்போ? எப்போ?’ என்று காத்துக் கொண்டிருக் கிறார்கள். இரண்டு மூன்று ஆண்டுகள் வேலைசெய்து பணிநிரந்தரம் ஆனதும் முதல் வேலையாக யாரையாவது பிடித்துப் பெருநகரங்களுக்கு நகர்ந்து விடுகிறார்கள்.  அதனால் அவர்கள் விட்டுச் செல்லும் பணி இடங்கள் பெரும்பாலும் ஆண்டுக்கணக்கில் நிரப்பப்படாமலேயே கிடக்கின்றன.   அங்குப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.  இதனால் வளர்ச்சியடையாது பின்தங்கிய பகுதிகள் நிலையாகப் பின்தங்கியே கிடக்கின்றன.
முருகன்          :               அப்படியென்றால் இடமாற்றம் என்பது பலசமயங்களில் சமூக முன்னேற்றத்தின் வேகத்தடை என்று சொல்! இதைப்பற்றி எல்லாம் யாரும் சிந்திக்கவில்லையா?
நாரதர்             :               சட்டம் இயற்றுபவர்களுக்கு இத்தகைய சிந்தனைகள் தோன்றுவதில்லை. இச் சிந்தனைகள் உள்ளவர்கள் சட்டம் இயற்றும் பொறுப்பில்  இருப்பதும் இல்லை!
வள்ளி               :               ஐயா நாரதரே! எங்கள் பிரச்சனையைத் தீர்த்துவையுங்கள் என்று சொன்னால் உலகப் பிரச்சனைகளை எம் தலைமீது வைத்துத் தலைவலியை ஏற்படுத்திவிட்டீரே!
முருகன்          :               வள்ளி! அவரென்ன சொல்வது?  நானே முடிவெடுத்து விட்டேன்.  வாழ்க்கை என்பதுஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கைஎன்று சங்க இலக்கியம் கூறுவதுபோல் கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்வதே சிறப்பு என்பதைப் புரிந்துகொண்டுவிட்டேன்.
தெய்.                 :               நாதா, இன்னொரு முறை சொல்லுங்க. . .
முருகன்          :               அதாவது என் தர்ம பத்தினியே! ஒரே ஆடையைச் சுற்றிக்கொண்டு வறுமையில் வாடுவதாக இருந்தாலும் கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வதே இன்பம் பயக்கும் என்று ஆன்றோரும் சான்றோரும் கூறுவதால் உங்களைப் பிரிந்து செல்லப்போவதில்லை. அப்படியே சென்றாலும்  உங்களையும் அழைத்துக் கொண்டே செல்கிறேன்.  போதுமா?
உமை    :   அதுதான் சரி. நாம் பேசிக்கொண்டிருந்ததில் நேரமானது தெரியவில்லை.  நம்மைக் காணாது உங்கள் தந்தை நெற்றிக் கண்ணைத் திறந்துவிடப் போகிறார்.  புறப்படுங்கள்!                        
                                                                                                                                                                    ***   
                                                                                (தொடரும்)

No comments:

Post a Comment