மிஸ்டு கால்
அவன் பெயர் எதுவாக
வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அவன் மாணவியர் அவனுக்கு
வைத்த பெயர் மிஸ்டர் ஹாண்ட்ஸம்.
லொட லொட வென்று
பெல்ஸோ அல்லது நன்கு அயர்ன் செய்யப்பட்ட பேண்ட்டோ போட்டுப் பெண்களைக் கவர்வதெல்லாம் பழசாகிப்போன காலம். இப்போதெல்லாம் சாயம் வெளுத்தும் வெளுக்காமலும் இருக்கும் ஜீன்ஸ் பேண்ட்டினை நன்கு டைட்டாகப் போட வேண்டும். அதற்குள்
காலின் தசைநார்களும் பின்பகுதியும் சிக்கித் தவித்து ஸ்டிப்பாகத் தெரிய வேண்டும். அப்போதுதான் உடலின் வடிவம் என்னவென்று முழுமையாக ஊகிக்க முடியும். மேலே டீ ஷர்ட்
இன் செய்து பெல்ட் போட்டுக்கொள்ள வேண்டும். இன் செய்யாமல் ஷர்ட்டை
லொட லொடவென்று அணிந்து அழகை மறைப்பானேன்? அதெல்லாம்
பெண்களைக் கவரவேண்டும் என்ற நினைப்பில்லாத துறவியர்
செய்யும் வேலை.
ஆண்களின் ரசனைப் பொருளாகத் தாம் இருக்கவேண்டும் என்று
பெண்கள் தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டமுடன் இருந்த காலகட்டம்
மறைந்து ஆண்களையும் ரசிக்கும் பெண்கள்
கூட்டம் திரிந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படித்தான் மிஸ்டர் ஹாண்ட்ஸம் வேலை கிடைத்து அந்தக்
கல்லூரியில் வந்து சேர்ந்தான். அழகென்ன பெரிய அழகு. சுமாரான அழகுதான். சுமாரான நிறம்தான். அவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிட கவர்ச்சி என்று ஒன்று இருந்தது. கவர்ச்சிக்கும் அழகுக்கும் சம்பந்தம் இருந்தாலும் அவை எப்பொழுதுமே சம்பந்தம்
உடையவை என்று சொல்ல முடியாது.
அவனுக்குத் தன் மாணவியரைக் கவரும்
கவர்ச்சி நிறையவே இருந்தது. அவன் ஊதுகின்ற மகுடிக்கு
மயங்கி அவர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாகச் சுண்டெலிகள் போன்று அவனைப் பின்தொடரத் தயாராக இருந்தார்கள். அவனென்ன அந்தக் காலத்து தசரத ராஜாவா? தன்
அந்தப்புரத்தில் அறுபதினாயிரம் மனைவியரை வைத்துக் கொள்ள? அவனும் ரெடிதான், அவர்களும் ரெடிதான். ஆனால் அரசாங்கம் சும்மா இருக்குமா?
அவனுடைய செல்போன் நம்பரை முதல் நாளே தன் வகுப்பு
மாணவியருக்குக் கொடுத்துவிட்டான். 'உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும்
நேரம் காலம் எதுவுமில்லாமல் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். எனக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை' என்று கூறினான்.
'அதுவும் நீங்கள்ளாம் இன்னும் சம்பாதிக்கல. அதனால உங்களுக்குக் காசுகொடுத்துச் செல்போனுக்குச் சிம் கார்டு வாங்க
முடியாது. அதனால நீங்க மிஸ்டு கால் கொடுத்தா போதும்'.
என்று போனஸ் செய்தியும் ஒன்று உதிர்த்தான். 'சமயத்துல நான் ஏதாவது மீட்டிங்குல
இருந்தாலும் இருக்கலாம். அதனால் உடனே பேசமுடியாமப் போகலாம்.
நீங்க மிஸ்டு கால் கொடுத்தீங்கன்னா எனக்கு
ஓய்வு கெடைக்கும்போது உங்க சந்தேகமெல்லாம் நான்
போக்கிடுவேன்'.
'ஆஹா இவரல்லவா ஆசிரியர்.
எந்தப் பெண் ஆசிரியையாவது அவர்
செல் நம்பரையோ, அல்லது வீட்டு லாண்ட் லைன் நம்பரையோ நமக்குத்
தர்ராங்களா? நாம ஏதாவது தொந்தரவு
பண்ணிடுவோமோன்னு பயம். சரியான சுயநல வாதிங்க, என்ன இருந்தாலும் நம்ம
ஹாண்ட்ஸம் மாதிரி வருமா?' மாணவிகள் தங்களுக்குள் அவரைப் பற்றிப் புகழ்ந்துகொண்டார்கள்.
உண்மைதான். அவனுடைய பொழுதுபோக்கே லைசென்ஸுடன் இப்படிப் போன்செய்யும் பெண்களிடம் கடலை போடுவதுதான். அவன்
பணிசெய்யும் கல்லூரி, பெண்கள் கல்லூரியாக இருப்பது எவ்வளவு வசதியாக இருக்கிறது. இதே ஆடவர் கல்லூரியோ
அல்லது ஆடவரும் பெண்களும் இணைந்து பயிலும் கல்லூரியாகவோ இருந்தால் இந்த அளவிற்கு மாணவிகள்
தன் மீது மயங்கித் திரிய
மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்குத்தான் அவர்கள் வகுப்பிலேயே காதலர்களோ, நண்பர்களோ கிடைத்துவிடுவார்களே!
அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது பிளஸ் பாய்ண்ட். ஊரில் அவனுக்கு வேலை கிடைத்த கையோடு
உடனடியாகத் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று வேகவேகமாகப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்குப் பெண்ணைத் தேடி விட்டால் அவன்
தங்கைக்கும் சேர்த்துத் திருமணம் நிகழ்த்தி விடலாம். ஆனால் அவனுக்குப் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. தங்கைக்கு
முன்னதாகவே திருமணம் அமைந்துவிட்டது.
அவனுடைய தங்கையின் திருமணத்தைக் காணும் சாக்கில் அவன் வகுப்பு மாணவியர்
பலர் அவன் ஊருக்குச்சென்று அவன்
வீட்டில் தங்கித் திருமணத்தை நேரில்கண்டு மகிழ்ந்து வந்தார்கள். ஒருவேளை அந்தச் சந்தர்ப்பத்தில் அவனைக் கட்டிக்கொள்ளும் லக்கி சான்ஸ் தனக்குக் கிடைத்துவிடாதா என்ற நப்பாசையில்.
ஹாண்ட்ஸம் கல்லூரியிலிருந்து இப்படி அவனுடைய மாணவியர் திரண்டு வந்ததைப் பார்த்த அவனுடைய அப்பாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. 'எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கவெச்சோம். இப்ப ஒரு நல்ல
சம்பளத்துல உத்யோமும் கெடச்சுடுச்சி. இப்பப்போய் எவளாவது அவன வளைச்சுப் போட்டாள்னா
நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனையெல்லாம் எப்படி அடைக்கிறதாம். அவனுக்கு வரப்போற வரதட்சணைய நம்பி இலட்சக் கணக்கில் கடன் வாங்கியாச்சே!'
சட்டுபுட்டென்று அவனுக்கு நல்ல வசதியான பெண்ணைப்
பார்த்துத் திருமண நாள் குறிக்கப்பட்டது.
அவசரக் கல்யாணம் என்பதால் படித்து வேலையில் இருக்கும்பெண் கிடைக்கவில்லை. என்ன செய்வது? படிப்பிருந்தால்
சொத்துபத்து அதிகமாக இல்லை. சொத்து மிகுதியாக இருந்தால் பெரிய படிப்பும் உத்தியோகமும் அமையவில்லை.
அவன் கல்யாணமும் ஊரில்தான்
நடந்தது. ஆனால் அந்தக் கல்யாணத்திற்கு அவன் மாணவியர் எவரும்
செல்லவில்லை. அவன்தான் அவர்களுடைய ஆசையில் சடாரென்று மண்ணைப் போட்டுவிட்டானே? இனி எந்த நம்பிக்கையில்
அவனைச் சுற்றிக்கொண்டிருக்க முடியும்?
அவனுக்குக் கல்யாணம்தான் ஆகிவிட்டதே தவிர அதற்காக அவனிடத்துத்
தோன்றிய மயக்கம் ஒரேயடியாக தெளிந்துவிடுமா? ஒருபக்கம் அவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்ட வருத்தம் இருந்தாலும் தங்கள் கல்லூரிக் காலம் முடியும்வரை அவனிடம் கடலையாவது போட்டுக்கொண்டு இருக்கலாம்.
கல்லூரியில் அவன் துறைக்கு நேரெதிரே
நிழல் பரப்பிக்கொண்டு ஒரு வேப்பமரம் நின்றது.
அதுதான் அவர்களின் வேடந்தாங்கல். அங்கே அவர்களின் ஃபிரீ பீரியட்களில் வந்து அமர்ந்துகொண்டால் அவன் டீ குடிக்கப்
போகும் போது, அல்லது அலுவலக அறைக்குப் போகும்போது என போகும்போதும் வரும்போதும்
அவனைப் பார்த்து ரசிப்பதே சிலருக்கு அன்றாட வேலையாகிப் போனது. கல்லூரி நாலரை மணிக்கு முடிந்துவிட்டாலும் மேலும் ஒரு மணிநேரம் அந்த
மரம் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது. ஏனென்றால் அவன் ஒருமணிநேரம் கழித்துத்தான்
வீட்டிற்குப் போவான் - அவன் நடமாட்டத்தை ரசிக்கும்
தன் ரசிகர்களை அவன் ஏமாற்ற விரும்புவதில்லை.
வீட்டிலே சாந்தி காத்துக்கொண்டிருப்பாள். இருக்கட்டும். குளத்துத் தண்ணீரை ஆறா அள்ளிக்கொண்டு போய்விடப்போகிறது.
அவன் காலையில் தினமும்
ஆறு மணிக்கு டென்னிஸ் கிளப் கிளம்பிவிடுவான். முடித்து வருவதற்கு எட்டு மணியாகும். குளித்து, சாப்பிட்டுவிட்டு கல்லூரி கிளம்ப சரியாக இருக்கும். அவளோடு
பேச முடிவது மாலையில்தான். அதுவும் அவன் வீட்டிற்கு ஆறு
மணிக்குதான் வருவான். கல்யாணமாகிக் கொஞ்ச நாள் ஏதோ கொஞ்சம்
பேசுவதற்கிருந்தது. தினமும் நிறைய நேரம் பேச என்ன இருக்கிறது?
சாப்பிடுவது, தூங்குவது இப்படிப்பட்ட நேரம்தான் இருவரும் அதிகமாக ஒன்றாகக் கழிக்கும் நேரமாகிவிட்டது.
அவள் ஏதாவது கேட்டால்
'ம்', 'ஊகூம்' இரண்டு தான் அதிகமான ஒலிகளாக
அமைகிறது. கொஞ்சம் பெரிய சொல் என்றால் 'ஆமாம்',
'இல்ல', மற்றபடி பெரிய தொடர்கள் அதிகமாக உபயோகிப்பது எப்பொழுதும் சாந்திதான்.
கல்யாணமானதும் முதல்வேலையாக சாந்தி உண்டாகிப்போனாள். ஐந்தாவது மாதத்திலேயே, 'இங்கே அவளப் பாத்துக்க யாரும் இல்ல, அதனால என்ன பண்றது?' என்றான்.
'அவன் அம்மா காடு கழனியெல்லாம் அம்போன்னு
விட்டுட்டு ஒரேயடியா அங்கல்லாம் வந்து இருக்கமுடியாதுப்பா! நீ வேணா சாந்திய
இங்கன கொண்டாந்து விட்டுடு. நீ வாராவாரம் வந்து
பாத்துட்டுப் போ' என்று கூறிவிட்டாள். சாந்தியின்
வீட்டுவகையறா ஜனங்களுக்கும் உடன்வந்து இருக்கத் தோதுப்படவில்லை.
அதனால் சாந்தா ஐந்தாவது மாதத்திலேயே ஹாண்ட்ஸம்மை நிம்மதியாக இருக்க விட்டுவிட்டு ஊரோடு போய்விட்டாள்.
பிளஸ் டூவிற்குப் பிறகு
கல்லூரி, பல்கலைக்கழக விடுதிகளிலும் வேலைகிடைத்த பிறகு ஹோட்டல்களிலும் சாப்பிட்டு நாக்குச் செத்துப்போய் அடக்கம் செய்யும் நிலையில் இருந்தவனுக்குக் கடந்த நான்கு மாதங்களாகச் சமையல் கலையில் கைதேர்ந்த சாந்தி தன் கையால் மணக்க
மணக்க ருசிக்க ருசிக்கச் சமைத்துப் போட்டாள். விதவிதமான அந்தச் சாப்பாட்டுக்குப் பழக்கப்பட்டுப்போன நாக்கு ஹோட்டல்களில் சமைக்கப்பெறும் ஒரேமாதிரியான சுவையை ஏற்றுக்கொள்ள மறுத்தது.
அறுசுவை குறித்த பாடம். தன் சுயம் ஞாபகத்திற்கு
வந்தது. வகுப்பில் புலம்பினான். மாணவிகள் 'உச்' கொட்டினார்கள். மறுநாளிலிருந்து
ஒருவர் மாற்றி ஒருவர் அவனுக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டுவந்தார்கள்.
அதை எப்படி அவனிடம் சேர்ப்பது என்பதில்தான் பிரச்சனை முளைத்தது. துறையில் கொண்டுபோய்க் கொடுத்தால் மற்ற ஆசிரியர்கள் என்ன
ஏது என்று கேட்கமாட்டார்களா?
அதற்கும் அவர்கள் ஒரு வழி கண்டுபிடித்தார்கள்.
மதியத்திற்குள் அவ் உணவை அவன்
காரில் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். அதற்காகவே அவன் காரின் கதவைப்
பூட்டாமல் வைத்தான்.
அவன் மதிய உணவுப்
பிரச்சனை ஒருவழியாகத் தீர்ந்தது. அவன் எல்லா வாரங்களிலும்
சனி, ஞாயிறில் தன் ஊருக்குப் போவதில்லை.
அங்குபோய் மட்டும் அவன் என்ன செய்யப்
போகிறான். அத்துடன் வாரத்தின் இடையே வரும் விடுமுறை நாட்கள் வேறு. அப்போதெல்லாம் மூன்று வேளையும் ஹோட்டலுக்குத்தானே போகவேண்டும். வருந்தினாள் சுகந்தி.
சுகந்தி நன்றாகவே சமைப்பாள். சனிக்கிழமை. 'அம்மா
இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா' என்று ஒரு பொய்யை மெய்போல்
சொல்லிவிட்டு பஸ் ஏறினாள். தைரியத்தை
வரவழைத்துக்கொண்டு நேராக ஹாண்ட்ஸம் வீட்டிற்குச் சென்றாள். அவன் திருமணத்தின் பொருட்டு
வீட்டில் விருந்துகொடுத்தபோது எல்லா மாணவியரும் அவன் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள்.
வழி மனப்பாடமாக இருந்தது.
சற்றே பெரிய வீடு.
ஊரை விட்டுத் தள்ளி இருந்த புதிதாகக் கட்டப்பட்ட வீடு. தனி
வீடு. அக்கம்பக்கத்தார் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைக்கும் தொந்தரவு இல்லை. கார் பார்க்கிங் வசதியோடு
நகரின் மையத்தில் குறைந்த வாடகையில் இவ்வளவு பெரிய வீடு நிச்சயமாகக் கிடைக்காது.
அந்த வீட்டின் உரிமையாளர் சிங்கப்பூரில் இருந்தார். அதனால் அவர் தொல்லையும் இல்லை.
வாடகைப் பணத்தை அவர் சொந்தக்காரர் ஒருவர்
வாங்கிச் சென்றுவிடுவார். இப்படி எந்தவிதச் சுதந்திரமும் பறிபோகாமல் இருந்த வீட்டிற்குச் சுகந்தி செல்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.
சுகந்தி தன் கடிகாரத்தில் நேரத்தைப்
பார்த்தாள். ஒன்பது இருபது. கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் நேரம்.
காலிங்பெல்
அழுத்தியதில் உள்ளே கிளிகள் குரல்கொடுத்தன. கதவைத் திறந்தவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சுகந்தி டைட்டான மஞ்சள் நிற சம்கி ஒர்க்
சுடிதாரில் ஜொலித்தாள். அவள் வரிசைப் பற்களில்
முல்லைச்சரம் கட்டியம் கூறியது.
வகுப்பில் பாடம் எடுக்கும்போது மாணவிகள் கவனிக்கிறார்களா என்று சுற்றும்
கண்கள் அதிகநேரம் நிலைத்துநிற்பது சுகந்தியிடம்தான். சிவந்த நிறம். சற்றே கிள்ளிப் பார்த்தால் என்ன என்று கிள்ளத்
தோன்றும் கொழுகொழு கன்னம். அளவான அழகான சுருண்ட முடி. சுழித்துச் சிரிக்கும் வெளிர் ரோஸ் உதடுகள். பிற
அழகைப் பற்றிக் கேட்பானேன். சற்றே லோ நெக் சுடிதார்
கச்சிதமாக. துப்பட்டா வெறும் பேருக்குத்தான். கழுத்தைச் சுற்றாமல் இடது பக்கம் பொறுப்பின்றி
தொங்கிக்கொண்டிருக்கும்.
அவள் உட்காருவது எப்பொழுதும் முதல் பெஞ்ச். நன்றாகவும் படிப்பாள். வகுப்பின்போது அவள் பார்வை அவனை
விட்டு எங்கும் நகர்ந்தது இல்லை.
வா வா! உள்ள
வா சுகந்தி! என்ன இந்தப் பக்கம்?
'சார்! மண்டே செமினார் இருக்கு சார். அதற்கு பிரிப்பேர் பண்ணி இருக்கேன். அதக்கொஞ்சம் கரெக்ட் பண்ணிக்கொடுங்க சார். மொத மொத செமினார்
பேப்பர் பிரசண்ட் பண்றதால கொஞ்சம் பயமா இருக்கு சார்!
'அப்படியா, சரி உட்கார்! பாத்துத்
தரேன். ஆனா இப்ப டென்னிஸ்
மேட்ச் இருக்கு! எனக்காக எல்லாரும் காத்துட்டிருப்பாங்க. இப்பதான் கௌம்பலாம்னு இருந்தேன்.'
'அதனாலென்ன நீங்க போய்ட்டு வாங்க சார்'.
'கொறஞ்சது ரெண்டு மணி நேரம் ஆகும்பா'
'பரவாயில்ல சார். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் வெயிட் பண்றேன்
சார்'.
'சரி அப்படின்னா ஒன்னு
பண்ணு. இந்த புக்ஸ் படிச்சிட்டு
இரு. போர் அடிச்சதுன்னா டி.வி. பார். சீக்கிரமா
வந்துடறேன்'.
அவன் கிளம்பினான். சுகந்தி
மெதுவாக சமையலறையை ஆராய்ந்தாள். காலையில் அவன் ஏதோ டிபன்
செய்திருக்க வேண்டும். எண்ணெய்ச் சட்டி தீய்ந்துபோய் இருந்தது. அநேகமாக நூடுல்ஸ் செய்திருப்பான் என்பது புலனாய்வில் தெரியவந்தது.
நல்ல வேளையாக பச்சை
மிளகாய், வெங்காயம், தக்காளி, கொஞ்சம் கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி எல்லாம் பிரிட்ஜில் இருந்தன. தேங்காய் கூட இருந்தது. காலையில்
நூடுல்ஸ் செய்வதற்காக வாங்கிய மிச்சமாக இருக்க வேண்டும்.
எலக்ட்ரிக் குக்கர் இருந்தது. ஷெல்பைத் திறந்தாள். பாசுமதி அரிசி இருந்தது. என்ன சமைக்கலாம். யோசித்தாள்.
பேசாமல் விஜிடபிள் பிரியாணி செய்துவிடுவோம்.
காய்கறிகளை நறுக்கி வதக்கி, அரிசியைக் களைந்து எலக்ட்ரிக் குக்கரில் அனைத்தையும் சேர்த்துச் சுவிட்ச் போட்டாள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி பிரிட்ஜில் இருந்த தயிரோடு கலந்தாள். ரெய்தா
தயார். முட்டை கேண்டி நிறைந்திருந்தது. இரண்டு எடுத்தாள். வேக வைத்தாள். முட்டையின்
ஓட்டைப் பக்குவமாக நீக்கினாள்.
இன்னும் அவன் வரவில்லை. ஏதாவது
ஸ்வீட் செய்யலாமா? ரவை இருந்தது. முந்திரி,
திராட்சை, நெய் எல்லாம் இருப்பில்
இருந்தன. எல்லாம் அவள் மனைவி வாங்கி
வைத்துவிட்டுச் சென்றவை. பயன்படுத்தப்படாமல் சுகந்திக்காகக் காத்திருந்தன.
ஐந்து நிமிடத்தில் ரவா
கேசரி ரெடி.
கிளிகளின் குரல் ஹாண்ட்ஸம் வந்துவிட்டதை அறிவித்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரண்டு.
'என்ன சுகந்தி, ரொம்ப
போர் அடிச்சதா?'
'இல்லை சார்'.
'சரி வா! உன்
செமினார் பேப்பரைப் பாக்கறேன்'.
'ம்'
'ரொம்ப நல்லாவே எழுதியிருக்கே, குட்'. சில திருத்தங்களைச் செய்து
கொடுத்தான்.
'அடடா, மறந்தே போயிட்டேனே சுகந்தி. நீ தனியா இருப்பியேன்னு
வேகமா வந்திட்டேன். ஒனக்குச் சாப்பிட எதுவும் வாங்கிட்டு வரனும்னு எனக்குத் தோனவே இல்லையே. வெரி சாரி! ஒனக்குப்
பசிக்குதா?'
'பன்னண்டரை மணி ஆனாலே வயிறு
பசிக்க ஆரம்பிச்சுடும் சார். காலேஜ்ல டெய்லி பன்னண்டரைக்குச் சாப்பிடுவேன் இல்லையா சார்?'
'அடடா இப்ப என்ன
பண்ணலாம். சரி வா! நான்
ஹோட்டல்லதான் சப்பிடப்போறேன். நீயும் என்னோட சாப்பிடு'.
'ஓகே. சார்! ஒரு
டம்ளர் கூல் வாட்டர் கிடைக்குமா
சார்?'
'இதோ கொண்டுவரேன்'.
சமையலறையில்தான் பிரிட்ஜ் இருந்தது. உள்ளே சென்றான். சமையலறை பெரிதாக இருந்ததால் அங்கேயே அவன் டைனிங் டேபிள்
போட்டிருந்தான். அப்போதுதான்
மனைவி தோசை சுடும்போது சுடச்சுட
பக்கத்திலேயே இருந்து சாப்பிட முடியும். அப்படியே மனைவிக்குக் கம்பெனி கொடுத்த மாதிரியும் இருக்கும்.
உள்ளே தண்ணீர் எடுக்கச்
சென்றவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
அது என்ன டைனிங்
டேபிளில் ஹாட்பேக் எல்லாம் இருக்கின்றன.
திறந்து பார்த்தான். 'வெஜிடபிள் பிரியாணி, அதற்குத் தோதாக வேகவைத்த முட்டை, ரெய்தா, கேசரி. . . அடேயப்பா!
எல்லாம் சுகந்தியா செய்தாள்'. திரும்பினான்.
சமையலறை வாசலில் புன்னகை முகத்தோடு சுகந்தி நின்றிருந்தாள்.
'என்ன சுகந்தி, ஒனக்குச்
சமைக்கக்கூட தெரியுமா?'
'ஏதோ சுமாராத் தெரியும்.
கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி சாப்பிட்டுடுங்க சார்'.
சாப்பிட உட்கார்ந்தான். 'அடேயப்பா, தூள் கௌப்பிட்ட போ!'
ஸ்பெஷல் கிளாஸ் நாலரை மணிக்கு முடிந்தது.
அதன்பின் அவன் ஊரிலிருக்கும் சனிக்கிழமைகளில்
சுகந்திக்கு ஸ்பெஷல் கிளாஸ் அல்லது குரூப் ஸ்டடி உறுதியானது.
அவளுடைய கிள்ளத் தூண்டும் கன்னங்கள் கிள்ளப்பட்டன. சுழிக்கும் உதடுகள் சுடான ஒத்தடம் பெற்றன. ஒற்றையாய்
நின்ற அந்த வீடு இருவரையும்
ஒன்றாக்கியது.
ஏதோ பேருக்காகச் சாந்தாவை
மண்ந்து கொண்டதற்கு ஐந்து மாதக் குடித்தனம் நடத்திக் குழந்தை பெற்றாகிவிட்டது.
சாந்தி குழந்தை பெற்று மூன்று மாதமாகியது. 'இன்னும் எத்தன நாள்தான் மாப்பிள தனியா இருப்பார்? ஊரப் பாக்கக் கிளம்பு'
என்று சாந்தியின் தாய் நச்சரித்தாள்.
சாந்தி திரும்ப வந்ததில் சுகந்திக்கு வருத்தம்தான். என்ன செய்வது. இது
எதிர்பார்த்ததுதானே! இனி சனிக்கிழமைகளில் சந்திக்கும்
இடத்தை மாற்றவேண்டும்.
சாந்தியின் கவனம் அனைத்தும் குழந்தையின் மீதே இருந்தது. தன்
கணவனின் நடத்தையில் அவளுக்கு எந்தவித சந்தேகமும் தோன்றவில்லை.
கண்களை இமைகள் மூடித் தூங்கும்போது நம்மைச் சுற்றி நிகழ்பவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை.
அப்படித்தான் அவளது நம்பிக்கை என்னும் இமைக் கதவுகள் மூடி அவள் கணவனின்
நடத்தையைப் புலப்படுத்தாமல் தடுத்துவிட்டன.
குழந்தையை கவனித்துக்கொள்ளும் சாக்கில் அடிக்கடி சுகந்தி வீட்டிற்கு வந்துபோய்க் கொண்டிருந்தாள்.
ஒரு சனிக்கிழமை டென்னிஸ்
விளையாடப் போகும்போது அவன் சார்ஜில் போட்ட
தன் செல்போனை அகஸ்மாத்தாய் மறந்துவிட்டுப் போய்விட்டான்.
அவன் செல்போன் அவ்வப்போது
சின்னச் சின்னதாய்ச் சிணுங்கியது. பத்துப் பதினைந்து சிணுங்கல்கள். ஒன்று மட்டும் நீண்டு ஒலித்தது. சாந்தி எடுத்தாள். 'ஹலோ' என்றாள்.
அவள் ஹலோ சொன்னதும்
எதிர்ப்புறம் கட்டானது.
செல்போனின் கால் ஹிஸ்டரியைப் புரட்டினாள்.
எல்லாம் மிஸ்டு கால்கள். ஏகப்பட்ட எண்கள். காலர் ஐ டி எல்லாவற்றிலும்
இனிஷியல்கள். அதனால் பெயர் எதுவும் தெரியவில்லை. ஆணா பெண்ணா தெரியவில்லை.
மேலும் சில கால்கள் வந்தன.
அவள் எடுத்துப் பேசியதும் அனைத்துமே கட்டாகிப்போனது. இப்படிக் கட் செய்பவர்கள் அனைவரும்
நிச்சயம் அவருடைய மாணவிகளாக இருக்கலாம். அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஏன் இந்தப் பொண்ணுங்களுக்கு
பொம்பளையோட பேசினா கற்பு போயிடுமா என்ன? இந்த தே . . . (ஒரு
கெட்ட வார்த்தையை இடைச்செருகினாள்) கூடவெல்லாம் பேசிகிட்டிருக்கிற இவரைச் சொல்லனும்?
'ஏன் இப்படி மிஸ்டு
காலா வருது?' கணவனிடம் கொக்கி போட்டாள்.
'இல்லம்மா எக்ஸாம் வருதுல்ல, ஏதாவது சந்தேகம் வந்திருக்கும். அதுக்காகப் போன் பண்ணியிருப்பாங்க'.
'சந்தேகம்னா காலேஜ்ல கேக்க வேண்டியதுதானே, வீட்டுக்கு ஏன் போன் பண்ணனும்'.
'காலேஜ்னா இப்படித்தான் இருக்கும். காலேஜ் போயி படிச்சிருந்தாதானே ஒனக்குத் தெரியும்?'
அவள் கல்லூரிப் படிகளை
மிதிக்காதவள் என்பதைக் குத்திக்காட்டி அந்த வலியில் அவன்
அப்போதைக்குத் தப்பித்துக்கொண்டான்.
அடுத்த சனிக்கிழமையும் அவன் வாழ்க்கையில் விளையாடியது.
முதல்நாள் இரவு ஆரம்பித்த மழை
விடாது கொட்டியது. அவனால் டென்னிஸ் விளையாடப் போகமுடியாது.
போன்
செய்பவர்களுக்கு மூளை வேண்டாமா? 'மழையா
இருக்கே, நம்ம சார் வீட்லதானே
இருப்பாங்க, என்ற யோசனை வேணாம்?'
ஒவ்வொருத்தியும் மிஸ்டு கால் கொடுத்துத் தொலைத்தாள்.
சாந்தி பக்கத்தில் இருந்துகொண்டு கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முகம் சுரத்தை
இழந்தது.
இரண்டு மணி நேரத்தில் சுமார்
ஐம்பது மிஸ்டு கால்கள் வந்திருக்கும். செல்போனைக் கையில் எடுத்தாள் சாந்தி. ஆய்வு செய்ததில் அதில் முப்பதுக்கும் மேற்பட்டவை ஒரே நம்பரில் இருந்தன.
அவள் சுகந்தியாக இருக்கக்கூடும் என்று சாந்திக்குத் தோன்றியது. செல்லில் அந்த நம்பரை அழுத்தினாள்.
எதிர்குரல் 'ஹலோ' என்று ஒரு
பெண்ணின் குரல்! சாந்தி நினைத்ததுபோலவே அது சுகந்தியின் குரல்தான்.
எதற்கும் நிச்சயப்படுத்திக் கொள்வோம். 'என்ன சுகந்தி, என்ன
விஷயம்னு சார் கேக்கச் சொன்னார்.'
எதிர்பாராத தாக்குதல். சுகந்தியால் சுதாரிக்க முடியவில்லை. 'இல்ல மேடம், சார்கிட்ட
ஒரு புக் பத்திக் கேக்கனும்.
சார் பிஸியா இருக்காறா?'
'ஆமாம்! நீ அரைமணிநேரம் கழிச்சுப்
போன் பண்ணு'.
கணவனை முறைத்தாள்.
'மொறைக்காதே, நீ நெனக்கறமாதிரி எங்களுக்
குள்ள ஒன்னும் இல்ல'. எங்கப்பன் குதிருகுள்ள இல்லை என்று அவனே தங்களுக்குள் ஏதோ
இருப்பதைக் கோடிட்டுக் காட்டினான்.
'அந்தத் தே. . . எதுக்கு
அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்துட்டு
இருக்கா? காலேஜ் விஷயத்த காலேஜோட வச்சிக்கனும்'.
தன் நாக்குக்கும் நரம்புக்கும்
சுகமளித்த சுகந்தியைச் சாந்தி தே . . . என்று
குறிப்பிட்டது அவனுடைய இருதயத்தையே கூர்மையான கத்தியால் குத்தியதைப் போல் இருந்தது.
வார்த்தைகள் வளர்ந்தன.
பல்லுக்குள் அடங்கி இருக்கும் வரைதான் நாக்கு சமத்தாக இருக்கும். கொஞ்சம் அதனை இயங்க விட்டுவிட்டால்
உள்ளே இருப்பதை எல்லாம் கொண்டுவந்து வெளியே கொட்டிவிட்டுத்தான் அது அடங்கும். சமயத்தில்
தன் ஆளையே கவிழ்த்துவிட்டுவிடும்.
அப்படித்தான் அவனும் தனக்கும் சுகந்திக்குமான உறவை முன்மொழிந்தான்.
அவள் அழுதாள், ஆர்ப்பரித்தாள்,
திட்டினாள், கத்தினாள். தனி வீடு என்பதால்
எல்லாம் வீட்டுக்குள் நடந்தேறின.
மீண்டும் சுகந்தியிடமிருந்து போன் வந்தது. சாந்தி
எடுத்து அவளைக் கன்னாபின்னாவென்று திட்டினாள். உடனே சுகந்தி போனைத்
துண்டித்து விட்டாள். இருந்தும் சாந்தி வாய் ஓயாது திட்டிக்கொண்டே
இருந்தாள்.
'இனிமே அவகிட்ட எந்த ஒறவும் வெச்சிக்கக்
கூடாது சொல்லிட்டேன்'.
சுகந்திக்கு அம்மா மட்டும்தான். லோயர் மிடில் கிளாஸ். ஒரே பெண். அவள்
அப்பா இறந்ததும் அவர் வேலை அம்மாவிற்குக்
கிடைத்தது கடைநிலை ஊழியராக. அரசாங்கச் சம்பளம் என்பதால் குறைவில்லாமல் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. மற்றபடி சுற்றத்தாரிடமிருந்து எந்த உதவியும் எதிர்பார்க்க
முடியாது. அதனால்தான் சுகந்தியை அவள் பெரிதும் கண்டிப்பதில்லை.
தந்தையில்லாத பெண். ஆனால் அவள் சொன்ன செய்தி
அவள் இதயத்தில் நெருப்பை அள்ளிப் போட்டது.
எவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறாள் ஐந்து மாதம் என்று. இப்போது அதைக் கலைக்கக்கூட முடியாதே.
தலையில் அடித்துக்கொண்டாள்.
சுகந்தி அம்மாவிற்கு ஆறுதல் சொன்னாள். அம்மா நான் சொல்றதைக் கேளேன்.
நீயே சல்லடை போட்டுத் தேடினாலும் இப்படி ஒரு புருஷன் எனக்குக்
கிடைக்காது. கைநிறைய சம்பாதிக்கிறார். என்னை நல்லாப் பாத்துக்குவார்.
அவருக்குதான் ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சேடி, அதுமட்டுமா, கொழந்தவேற இருக்கறதாச் சொல்றியே.
அம்மா அவருக்கு அவளக்
கொஞ்சம்கூடப் பிடிக்கல. நான் கொஞ்சம் பிடிவாதம்
பிடிச்சா டைவர்ஸ் வாங்கிடுவார். அவருக்கு அவரோட கொழந்த மேல கூட ஒன்னும்
பாசம் கெடயாது. கொழந்த கரேல்னு நல்லாவே இல்ல. நான் ஒரு கொழந்தய
செக்கச்செவேல்னு பெத்துட்டா என் கொழந்தமேல பாசம்
வந்துட்டுப்போவுது.
'நம்ம ஒறவுமொறையெல்லாம் என்ன
சொல்லும்?'
'ஆமாம் நல்ல ஒறவுமொற, நாம
கஷ்டப்படும்போது யாருவந்து நின்னா? இப்ப ஏதாவது கேட்டா
அவங்க நாக்க அறுக்கனும்' வீராவேசமாகப் பேசினாள்.
'அம்மா, நீ ஒன்னும் பயப்பாடாத,
காதும் காதும் வெச்சமாதிரி சிம்பிளா கல்யாணத்த முடிச்சிடலாம். நீயும் எங்ககூடயே இருந்துடலாம். வேற யாருக்காவது கட்டிக்குடுத்தா
ஒன் கடைசி காலத்துல யார் நிழலுலபோயி நிப்ப?'
சுகந்தி கேட்ட கேள்விக்கு அவளுக்கும் பதில் தெரியவில்லை. அவள் சொல்வதெல்லாம் உண்மைதான்.
'ஆனா, உனக்காக அவன்
பொண்டாட்டிய விட்டவன், நாளைக்கு ஒன்ன விட்டுட்டா என்ன
பண்ணுவ?'
'அம்மா, அவளுக்குப் புருஷன எப்படிக் கவர் பண்றதுன்னு தெரியல.
நானும் அவள மாதிரி ஏமாளியா
இருந்ததுடுவனா? அவர நான் கேர்புல்லா
பாத்துக்க மாட்டேனா?'
அம்மாவின் எல்லாக் கேள்விகளுக்கும் சுகந்தியின் விடைகள் திருப்திகரமாகவே அமைந்திருந்தன.
'எப்படியோம்மா, இது உன் வாழ்க்கை,
எப்படியோ சௌக்கியமா இருந்தா சரிதான்'.
அவளுடைய இயலாமை எதிர்ப்பின்றி தலையாட்டியது.
சுகந்தி கில்லாடிதான். அதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட கில்லாடியான பெண்கள் சமுதாயத்தில் நிறையவே இருக்கிறார்கள். தங்கள் குறுக்கிடுதலால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை பறிபோகுமே என்று கொஞ்சமும் நினைப்பதில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் தான் எவ்வாறு சுகப்படுவது?
ஒருவர் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் இன்னொருவர் அழிந்துதானே ஆகவேண்டும் என்பது அவர்கள் கைக்கொள்ளும் சித்தாந்தம்.
அவர்களுக்குச் சபல புத்தியுள்ள ஏமாளியோ
கோமாளியோ எவனோ ஒருவன் மாட்டத்தான்
செய்கிறான். அவனைத் தங்களது சூழ்ச்சி வலையில் மெல்லமெல்ல இழுத்து வெளியே தப்பிச் சென்றுவிடாதவாறு சிலந்தி வலை பின்னிக் கட்டிப்போட்டு
விடுகிறார்கள். அப்படியே அவன் விழித்துக் கொண்டாலும்
அவர்களிடமிருந்து தப்பித்துவிட முடியாது. ஏதேனும் மந்திரங்கள் வைத்திருப்பார்கள். அந்த மந்திரங்கள் சுகந்தியிடம்
நிறையவே இருந்தன.
கல்லூரித் தேர்வுகள் முடிந்துவிட்டன. இப்பொழுது விடுமுறைதான். அதனால் அவனைக் கல்லூரியில் சந்திக்க முடியாது.
விடுமுறையில் ஊருக்குப் போகலாம் என்று அவனை ஊருக்கு அழைத்துச்
சென்றுவிட்டாள் சாந்தி.
அவன் எங்கே போனால்
என்ன? சுகந்தி சும்மா விடுவாளா?
அப்புறம் செல்போன் எதற்குத்தான் இருக்கிறது?
செல்போனால் விடாமல் துரத்திக் கொண்டிருந்தாள்.
செல்போனில் ரிங்டோன் கேட்டு இரண்டு மூன்று முறை அவன் மறுமொழி
கூறாமல் கட்செய்வதைப் பார்த்து 'ஏன் எதுவும் பேசாமல்
கட் செய்கிறான்?' என்று வினோதமாக உடன் இருப்போர் பார்த்தனர்.
தொந்தரவு வேண்டாம் என்று வைப்ரேஷன் மோடில் மாற்றி செல்போனை ஷர்ட் பாக்கெட்டில் வைத்தான்.
விடாமல் அதிர்ந்துகொண்டு இருந்தது.
அவனுக்குத் தம் அடிக்கும் பழக்கமும்
இல்லை. அந்தப் பழக்கம் இருந்தாலாவது 'தம்' அடிக்கும் சாக்கில்
வெளியே போய்விட்டு வரலாம்.
அக்கம் பக்கம் பார்த்துவிட்டுத் திருடனைப்போல் வெளியே போனான்.
தோப்பு துறவு என்று இருந்தாலாவது ஜன சந்தடி இல்லாத
இடத்தில் கவலைப்படாமல் பேசிக் கொண்டிருக்கலாம்.
தெரு முழுக்க வீடுகள்
மயம்தான். எங்குப்போய் நின்றுபேசினாலும் ஏதேனும் ஒரு முகம் அவனைப்
பார்த்து புன்னகையோ தலைஅசைப்போ செய்கிறது.
அப்படியே வாக்கிங் போவதைப் போன்று பாவலா செய்துகொண்டிருந்தான்.
அவன் வாக்கிங் போவதாக
யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதென்னவோ நிஜம். வாக்கிங் போவதற்கென்று நேரம் காலம் இருக்கத்தானே செய்கிறது.
திரும்பவும் சுகந்தியிடமிருந்து போன் வந்தது. அதற்காகத்தானே
அவன் வெளியே வந்தான். அவள்தான் ஒரு நிமிடத்திற்குப் பத்துமுறை
போன் செய்து கொண்டிருந்தாளே!
தொடர்பு கொண்டான். 'ஹலோ' என்ற அவனது
ஒற்றைச் சொல்லுக்கு எதிராக ஒரு புயலே அடித்தது.
'இதுதான் நான் பண்ற கடைசி
போன். இதோ நான் கடற்கரைலதான்
நின்னுகிட்டு இருக்கேன். கடைசியா ஒரு தடவை பேசிடலாம்னுதான்
போன்பண்ணேன்'.
'உங்களால்தான் என் வாழ்க்கை கெட்டுச்
சின்னாபின்னமாய்ப் போய்விட்டது. இனிமே நான் உயிரை வைத்துக்கொண்டு
என்ன சாதிக்கப் போறேன். ஒரேயடியா நான் போய்ச் சேர்ந்திடறேன்.
நான் சாகப்போகிறேன் . . .'
'என்னம்மா
இப்படியெல்லாம் நீ பேசற, நீ
செத்துட்டா நான் மட்டும் உசுறோட
இருப்பேன்னு நெனக்கிறியா?'
'அப்படின்னா எனக்கு ஒரு போன் பண்ணக்கூட
உங்களுக்கு மனசில்ல, அப்படித்தானே, உங்களுக்காக நான் இழக்கக்கூடாததை எல்லாம்
இழந்துட்டு நிக்கறேனே? உங்க இன்பத்துக்காகத்தானே நான் உயிரோட
வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்?'
'அடடா, எல்லாம் எனக்குத் தெரியாதா? கொஞ்சம் பொறுமையா இரும்மா?'
அவன்
ஏதோ அவளைத் தேடிப்போய்க் கற்பழித்த ரேஞ்சில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவள்தானே வலுக்கட்டாயமாக அவனுடைய வீட்டிற்கு வேண்டுமென்றே சென்று அவன் மன உணர்வுகளை
மெல்ல மெல்லத் தூண்டி அவன் தனக்கு முத்தம்
தரவும் உடலைத் தீண்டவும் உணர்வுகளைச் சிலிர்த்தெழச் செய்யவும் இடம் கொடுத்தாள்? இப்போது
அதற்கான ஒட்டுமொத்தப் பழியையும் அவன் மீதே சுமத்துவது
எந்த வகையில் நியாயம்?
இந்த வினாக்களை அவனால்
அவளிடம் கேட்க முடியவில்லை. ஏனென்றால் இன்னும் அவளிடம் அவன் மயங்கித்தான் கிடக்கிறான்.
அவனிடமும் தப்பு இருக்கிறதே. முதல் வருகையிலேயே அவளுடைய அத்துமீறிய நடத்தையைக் கண்டித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தால் இப்போது இந்த நிலைக்குப் போயிருக்குமா?
அவன் குற்ற உணர்ச்சி
அவனைக் கேள்வி கேட்கவிடாமல் தடுத்தது.
அதுவே சுகந்திக்குச் சாதகமாகிப்
போனது.
அவனது குற்றஉணர்ச்சி ஒன்றையே
அவள் தன் ஆயுதமாக எடுத்துக்கொண்டு
மலை ஏறினாள்.
அவனுக்காக அவள் இழந்ததையும் அதனால்
அவள் சாகப்போவதையும் எத்தனை விதங்களில் எத்தனைக் குரல் ஏற்றத்தாழ்வுகளில் எத்தனை விதமான மெய்ப்பாடுகளில் சொல்ல முடியுமோ சொல்லிக்கொண்டே இருந்தாள்.
திரும்பத்திரும்ப கீரல் விழுந்த ரிக்கார்டுபோல் அவள் சொன்ன சொற்களால்
அவன் திணறிக் கொண்டிருந்தான்.
மனைவி ஒரு விஷயத்தை
ஒருமுறைக்குமேல் சொன்னால் எரிச்சல் வருகிறது. 'எல்லாந் தெரியும், போய் உன் வேலயப்
பார்' என்பான். அதே காதலி என்றால்
அவள் எத்தனை முறை சொன்னாலும் கேட்டுத்தான்
ஆகவேண்டும். அதுதான் ஆடவர்கள் கடைப்பிடிக்கும் நியமமுறை.
அவள் சொற்கள் நிமிடங்களைக்
கரைத்து மணியைத் தொட்டது.
இன்னும் சில நிமிடங்களில் அவன்
செல்போன் கார்டின் பணம் தீர்ந்துபோனாலும் போகலாம்.
அவள் பேசுவதை நிறுத்த
வேறு வழியில்லை.
அவளை எப்பொழுதும் கைவிடப்போவதில்லை
என்று வாக்களிக்கப்பட்டது.
அவளும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு விட்டாள்.
அன்றைக்கு அவளை அழவைத்ததற்காக ஆயிரம்
முத்தங்களைப் பரிசாகக் கேட்டாள்.
நடுரோட்டில் நின்றுகொண்டு அவன் எப்படி ஆயிரம்
தர முடியும்.
அவன் தரும் பத்தை
ஆயிரமாக மாற்றிக்கொள்ளச் சொன்னான்.
அவன் ஒன்று கொடுத்தால்
அது நூறுக்குச் சமம் என்றான்.
மேலே சூரியன் எரித்துக்கொண்டிருக்க
அவன் வேறுவழியில்லாமல் இப்படி முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு அந்த வழியாகச் சென்ற
சில பெரிசுகள், 'பைத்தியம் முத்திப்போச்சு' என்று தங்களுக்குள் கூறிச் சிரித்துக்கொண்டார்கள்.
அவளும் மறுமுனையில், 'உங்களுக்குப் பரிசா நான் நூறு தறேன்.
ஆனா நான் ஒன்னு கொடுத்தா
ஒன்னுக்குத்தான் சமம். வாங்கிக்கோங்க' என்று அவன் போனைத் துண்டிக்காமல்
பார்த்துக்கொண்டாள்.
அவளுக்குத்தான் எவ்வளவு தாராள மனசு? அவள் தாராள மனசுதானே
அவனைச் சிக்க வைத்தது?
ஓர் ஆடவனுக்குக் காதலி
கொடுக்கும் முத்தத்திற்குச் சுவையே தனிதான். அதுவும் உதட்டோடு உதடு கொடுத்தால் . . . என்னவென்று
அதைச் சொல்வது?
அதே மனைவியாக இருந்தால்
'போதும் போதும்' என்பான். 'உன் வாய் நாறுகிறது'
என்பான். காதலியின் வாய் மட்டும் மணக்குமாக்கும்?
சுகந்தி தினமும் தனக்குக் கட்டாயம் போன் செய்ய வேண்டும்
என்று அவனுக்கு ஆணையிட்டாள்.
ஆணையிட்டதுடன் அவன் வாக்கைக் காப்பாற்ற
முனையாத நாட்களிலெல்லாம் தன் கையில் விஷ
பாட்டிலை வைத்துக்கொண்டிருப்பதாகவும் அடுத்த அரை நிமிடத்தில் உயிரைப்
போக்கிக்கொள்ள இருந்ததாகவும் கூறி அவனை மிரட்டினாள்;
சங்கடப்படுத்தினாள்.
தினம் தினம் அவள்
தற்கொலைக்கு முயல்வதும் அவன் வார்த்தைகளால் தற்கொலை
முயற்சி கை விடுவதுமான நாடகம்
நன்றாகவே நடந்தேறியது.
'செத்துத் தொலையேன்' என்று அவன் ஒரு வார்த்தை
கூறியிருந்தால் அவளுடைய முகத்திரை கிழிந்திருக்கும்.
ஆனால் அவனுக்கு உள்ளூற
ஓர் உதைப்பு. அந்த நடுக்கத்தில் அவள்
நன்றாகக் குளிர்காய்ந்து கொண்டிருந்தாள்.
சாந்தியின் சொற்கள் அவன் காதுகளில் ஏறவில்லை.
எப்படியும் ஹாண்ட்ஸம் ஊருக்கு வந்துதானே ஆகவேண்டும், பார்த்துக்கொள்வோம் என்று சுகந்தி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் மிரட்டலை மட்டும்
விட்டுவிடாமல் . . .
ஊருக்குத் திரும்பினர்.
மீண்டும் கணவன் மனைவிக்குள் சலசலப்பு!
'நான் என்ன பண்ணட்டும்.
அவதான் போன்பண்ணி, போன்பண்ணித் தொந்தரவு பண்றா'.
'அப்படின்னா அந்தச் செல்லைத் தூக்கி எறிங்க, நீங்க வேற நம்பர வாங்கிக்கோங்க'
அவன் கேட்டால்தானே. பிரச்சனையை
ஒரேயடியாக முடிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தானே
அதற்குரிய முயற்சியும் தீவிரமாக இருக்கும். சுகந்தியைப் பற்றிய நல்லெண்ணம் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும்போது
அவன் எப்படி அவளைத் தூக்கியெறியச் சம்மதிப்பான்.
அந்தச் சிறிய ஒட்டுதல் சுகந்திக்குப் போதுமானதாக இருந்தது.
கிணற்றில் விழுந்துவிட்ட எலி சின்ன தக்கை
கிடைத்துவிட்டால் அதன் ஆதாரத்தில் உயிரைக்
காத்துக் கொண்டு, பிறகு ஏதேனும் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி
மேலேறி வந்துவிடுவதில்லையா?
'ஊரு ஒலகம் என்ன
சொல்லும்?'
'எனக்கு யாரப் பத்தியும் கவலயில்ல. ஒனக்கு பிடிச்சா தாராளமா என்கூட குடும்பம் நடத்தலாம். இல்லைன்னா உன் இஷ்டம்'.
'ஒரு கொழந்தையையும் பெத்துட்டு
எப்படி இப்படி ஒங்களால சொல்லமுடியுது'.
சாந்தி, எனக்குன்னு ஒரு மனசு இருக்கு
புரிஞ்சிக்கோ, எல்லாம் ஊரு உலகத்துல இருக்கறதுதான்.
ஆனால் அவளால் அதனைச்
சகஜமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
சாந்தியால் தனியாகச் சமாளிக்க முடியவில்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தாள்.
ஹாண்ட்ஸம் அந்த ஊரிலிருந்து வேறு
இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கினான்.
சுகந்தி சொன்னதுபோலவே குழந்தை செக்கச் செவேல் என்று சுகந்தியின் அழகோடு பிறந்துவிட்டது.
அவன் தொட்டிலுக்குக் கயிறு
கட்டியதோடு அவள் கழுத்திலும் மஞ்சள்
கயிறு கட்டப்பட்டுவிட்டது.
அவனைக் கட்டிப்போடும் மந்திரம் சுகந்திக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
சாந்தி சொல்லி, ஆனால் நடைமுறைக்குக் கொண்டுவர முடியாத ஒன்றை சுகந்தி செய்தாள்.
ஹான்ட்ஸம்மின் செல்போனிலிருந்து தேவை இல்லாத எல்லா
எண்களும் நீக்கப்பட்டன.
டென்னிஸ் விளையாடுவதை அவன் விட்டு விட்டான்.
உடற்பயிற்சிக்காக மொட்டை மாடியிலேயே சுற்றிச் சுற்றி நடக்கிறான். கூடவே சுகந்தியும் மொட்டைமாடியில் குழந்தையை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறாள்.
நோட்ஸ் வேண்டும், டவுட் கேட்க வேண்டும் என்று எந்த மாணவியும் வீட்டு
வாசலை மிதிப்பதில்லை.
கல்லூரியின் பக்கத்திலேயே வீடு பிடித்தாகிவிட்டது. கல்லூரி விட்டதும்
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் வீட்டில் இருந்தான்.
அவனைக் கண்காணிக்க அவள் அம்மாவும் எந்நேரமும்
விழிப்பாக இருக்கிறாள்.
இப்போதெல்லாம் அவனுக்குச் சின்னச் சின்னதாய்ச் சிணுங்கும் மிஸ்டு கால்கள் அறவே வருவதில்லை.
(2008)
No comments:
Post a Comment