பாவை மன்னிப்பு
கவிதா தன்னைப் பார்த்து
மயங்குகிறாள் என்பது பீட்டருக்கு நன்றாகவே தெரிந்தது.
எதற்காக அவள் தன்னைப் பார்த்து
மயங்க வேண்டும்? அவளை மயக்கும் அளவிற்குத்
தன்னிடம் வசீகரம் இருக்கிறது. இந்த எண்ணமே அவனுள்
மகிழ்ச்சியை ஊற்றெடுக்கச் செய்தது.
அவள் மயக்கத்திற்கு அவன்
ஏன் துணைநிற்க வேண்டும்? அவனென்ன மணமாகாதவனா? வீட்டில் அவனுக்கென்று அவன் மனைவி மரியா
இருக்கிறாள். அவனுக்காக . . . அவனுக்காக
மட்டுமே . . . அவனைத்
தொட . . . அவனை ஆதரவாய் அணைத்துக்கொள்ள
. . . அவனோடு அந்தரங்கமாய் உறவுகொள்ள . . .
அவளிடமிருந்து அவனுக்கு என்ன கிடைக்காமல் போனது?
அல்லது அவளிடத்தில் கிடைக்காத எது இவளிடத்திருந்து மட்டும்
அவனுக்குக் கிடைத்தது?
பிறகென்ன அவனுக்கு இப்படியொரு தேடல்?
கவிதாவின் சோகத்திற்கெல்லாம் அவன் தோள்கள் தாம்
சுமைதாங்கியாம்!
அவளுக்கென்ன சோகம்?
எல்லாம் அவளாகத் தேடிக்கொண்ட சோகம்.
பெண் என்றால் ஒன்று
அடக்கமாக இருக்க வேண்டும். அப்பா அம்மாவின் சொல்படி நடந்துகொள்ள வேண்டும் - அதுவும் முக்கியமாகத் திருமண விஷயத்தில்!
அப்பா பார்த்த பையனை
எந்த மறுப்பும் சொல்லாமல் கழுத்தை நீட்ட வேண்டும் - அதுவும் அப்பா சொல்லும் நேரத்தில்!
அப்போது பள்ளியில் படிக்கிறோமா, கல்லூரியில் படிக்கிறோமா? என்றெல்லாம் யோசிக்கக் கூடாது.
இன்னும் இன்னும் படிக்கவேண்டும், வேலைக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா?
இல்லையா? என்றெல்லாம் கவலைப்படக்கூடாது. ‘இன்னும் டிகிரி முடிக்க ஒரு வருஷந்தான் இருக்கு
. . . முடிச்சிடறேனே’ என்று மறுவார்த்தை சொல்லக் கூடாது.
ஆனால் அவள் சொன்னாள்.
நல்ல வரன் வரத்தான்
செய்தது, பட்டப் படிப்பின் இரண்டாவது வருடத்தில்.
‘அப்பா . . . தயவுசெஞ்சி என்னத் தொந்தரவு பண்ணாதீங்க! இன்னும் ஒரு வருஷத்துல டிகிரி
வாங்கிடுவேன். பிளீஸ்பா’ - கெஞ்சினாள் கவிதா.
வேலுமணிக்கும் மகள்மேல் கொஞ்சம் அக்கறைதான். அவர் ஒரு தொடக்கப்பள்ளி
ஆசிரியர். அந்தக் காலத்தில் தான் ஒரு பட்டதாரி
ஆகவேண்டும் என்று நிறையவே ஆசைப்பட்டவர். முடியவில்லை. சரி. . . தன் மகளாவது படிக்கட்டுமே!
கல்யாணத் தரகரிடம், ‘கொழந்த படிக்கணுமின்னு ஆசைப்படறா, படிச்சி முடிக்கட்டும் பாக்கலாம்’ என்று பட்டும்படாமல் சொல்லிவிட்டார்.
பட்டப்படிப்பு முடிந்ததும் கவிதா இரண்டுமாதம் வீட்டில்தான் இருந்தாள். அப்போது பார்த்து எந்த நல்ல வரனும்
அமையவில்லை. ஏன் வீட்டில் சும்மா
இருக்க வேண்டும்? - யோசித்தாள் கவிதா. தோழிகள் சிலர் பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பம்
வாங்கிப்போட்டார்கள். அவர்களோடு இவளும்.
கல்லூரியிலிருந்து சேர்க்கைக் கடிதமும் வந்து விட்டது. கொஞ்சம் அடம், கொஞ்சம் அழுகை, ஒரு நாள் பட்டினி
- அப்பாவின் அனுமதிக்கு இவையெல்லாம் தேவைப்பட்டன.
அம்மா . . . ? அவள் வாயில்லாப் பூச்சி!
தன் கணவன் வாக்குமூலத்திற்கு எதிராக அவள் என்றும் கொடிபிடித்ததும்
இல்லை. வெளிநடப்பு செய்ததும் இல்லை.
பட்ட மேற்படிப்பின்போதும் ஒருசில நல்ல
வரன்கள் வந்தன. அப்போதும் பழைய பல்லவி. ‘எம்.ஏ. முடிச்சிடறேம்பா. எம்.ஏ. முடிச்சிட்டா ஒரு
வேலக்குப் போயிடலாம்பா’.
அவள் சொல்வதும் சரிதான்!
இனி வருங்காலம் எப்படி இருக்குமோ? ஒருவர் வருவாயில் குடும்பம் நடத்துவது இனிச் சிரமம்தான். அவளும் வேலைக்குப் போனால் தன் குடும்பத்திற்குச் சௌகரியமாக இருக்கும்.
மேலும் அவனிடம் தொடக்கக் கல்வி படித்த பல மாணவிகள் எம்.ஏ. அல்லது எம்.எஸ்ஸி. முடித்துவிட்டு நல்ல வேலையில் இருப்பதாகக்
கூறிக்கொள்வதைக் கேட்கும்போது வேலுமணிக்கும் தன் மகள் படித்து
முடிக்கட்டுமே என்ற ஆசை உள்ளூற
எழுந்தது.
கவிதா முதுகலை படித்தது
ஆண்களும் பெண்களும் இணைந்துபடித்த ‘கோஎஜுகேஷன்’ கல்லூரியில். பாடங்களின் இடையே பெண்ணியச் சிந்தனைகளின் காற்றும் கொஞ்சம் கொஞ்சம் சுவாசிக்கக் கிடைத்தது. அச் சிந்தனைகளை அவளுக்குத்
தெரிந்த அளவில் வளர்த்துக் கொண்டாள்.
‘பெண்கள்னா ஓர் ஆணைச் சார்ந்துதான்
வாழணுமா?’
‘அது சரி, ஆம்பளத்
தொண இல்லாம பொண்ணால வாழ முடியுமா?’
‘ஆம்பள இல்லாம பொம்பள வாழலாம். ஆனா பொம்பள இல்லாம
ஆம்பளயால வாழவே முடியாது, தெரிஞ்சுக்கோங்க!’
‘இதெல்லாம் பேசறதுக்குதான் ரொம்ப நல்லா இருக்கும். பிராக்டிகலா முடியாதும்மா?’
‘புருஷன் செத்துப்போயிட்டா பொம்பள கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதில்லையா? அப்பமட்டும் தனியா வாழறப்போ ஏன் கல்யாணமே பண்ணிக்காமா
இருக்க முடியாது? ஆனா பொண்டாட்டி செத்துட்டா
அவன் ஒடனே இன்னொரு கல்யாணம்
பண்ணிக்கறான். ஆம்பளயால பொம்பளத் தொண இல்லாம வாழ
முடியாதுன்னு இதிலிருந்தே தெரியலையா?’
‘அவன் தாயில்லாமத் தவிக்கிற
கொழந்தங்கள வளக்கறதுக்காகக் கல்யாணம் பண்ணிக்கறான்’.
‘ஏன் பொம்பளங்க மறுகல்யாணம்
பண்ணிக்காம கொழந்தய வளக்கலயா? கொழந்தக்காகத்தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறான்னு சொல்றதெல்லாம் சுத்த ஏமாத்து! இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா, வர்ற பொம்பள அவனோட
மொத தாரத்துக் கொழந்தய எவ்ளோ கொடுமப் படுத்துவா? அது தெரிஞ்சுந்தானே அவன்
கல்யாணம் பண்ணிக்கறான்? கொழந்தய வளக்கணுமுன்னா வேலைக்கு ஓர் ஆள வச்சிக்கறதுதான?’
.
. . !
‘இதில இருந்து என்ன
தெரியுது. பொம்பளைங் களுக்குதான் மனஉறுதி அதிகம். அவங்களால தனியா வாழமுடியும். ஆனா ஆம்பளங்களால தனியா
வாழவே முடியாது’.
ஆசிரியர் வராத தருணங்களில் மரத்தடியில்
அமர்ந்து சக மாணவர்களோடு அரட்டை
அடித்துக் கொண்டிருந்தபோது இப்படிப்பட்ட சிந்தனைகளும் துவைக்கப்பட்டு அலசப்பட்டு மனத்தில் மடித்து வைக்கப் பட்டன.
‘இனிமே ஆம்பளங்கதான் புள்ள பெத்துகணுமுன்னு ஒரு காலம் வரணும்.
அப்பத்தான் ஆணாதிக்கத்த ஒழிக்க முடியும்’ என்றெல்லாம் அவள் பேசிய பேச்சுகளைப்
பார்த்துத் திணறிப்போன சக மாணவர்கள் கவிதாவைக்
காதலித்து அவளுக்குள்ளும் ஏதேனும் ரசவாதத்தை ஏற்படுத்த முடியும் என்ற முயற்சியில் இறங்கேவே
இல்லை.
ஆம்பளையே வேண்டாம் என்று ஆடவர்க்கு எதிராக எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும் அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டது
யாருக்காக? தன் புருவத்தை வில்போல்
திருத்திக்கொண்டது யாருக்காக? விதவிதமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டது யாருக்காக? தன்னை நோக்கிச் செலுத்தப்பட்ட பார்வைப் பக்கங்களுக்கு தீனிபோட அல்லவா? Êசக மாணவர்கள், ‘இன்னக்கி
என்ன விஷேசம்? சூப்பரா இருக்க’, ‘என்ன புது டிரஸ்ஸா?’
என்று கேட்கும்போது முகம் மலர்கிறதே எதற்காக? மெல்லிய புடவையை முறையாகக் கொசுவம் வைத்து, தொடைப் பகுதியில் பிசிறு தட்டாமல் சிக்கென்று இருக்குமாறு கட்டுகிறாளே யாருக்காக? லோ நெக், லோ
ஹிப் வைத்துக்கொண்டு அவ்வப்போது தன்னை எந்த மாணவனாவது ரசிக்கிறானா
என்று கள்ளப்பார்வை பார்த்து உள்ளூறப் பூரிக்கிறாளே எதற்காக? இவற்றில் ஆடவரைக் கவரும் நோக்கு இல்லையென்றால் அவள் வீட்டில் இருக்கும்போது
ஏதோ ஒரு கசங்கலை உடுத்திக்கொண்டு
திரிவது ஏன்?
முதுகலைப் படிப்பு முடித்ததும் பி.எட். படிக்க
வேண்டும் என்றாள். அதுவும்
முடிந்தது.
உடனே ஒரு பள்ளியில்
வேலையும் கிடைத்தது.
அப்பா பூரித்தார் - தன்னைப்
போலவே தன் மகளும் ஓர்
ஆசிரியராகி விட்டாள்.
அம்மா பூரித்தாள் - மாதக்
கடைசியிலும் பற்றாக்குறை இல்லாமல் வகைவகையாகச் சமைத்துப்போட முடிந்தது.
கவிதாவும் பூரித்தாள் - யார் தயவும் இல்லாமல்
தன்னை விதவிதமாக அலங்கரித்துக்கொள்ள முடிந்தது.
பாடம் எடுப்பது, மாணவர்களின்
வீட்டுப்பாட நோட்டுகளைத் திருத்துவது, மாதாந்திரத் தேர்வுகளை வைப்பது, அந்தத் தேர்வுத் தாள்களைத் திருத்துவது என்று பணிப் பட்டியல் நீண்டுகொண்டு சென்றது. காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, ஆண்டுத் தேர்வு; ஆண்டுத் தேர்வு முடிந்ததும் மாணவர் சேர்க்கை வேலை, இத்யாதி இத்யாதி என்று ஆண்டுமுழுதும் ஏதோ ஒரு வேலை.
தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து ஆசுவாசமாக மூச்சுவிட நேரமில்லை. வீட்டிற்குப் போனாலும் நோட்டுப் புத்தகங்களைத் திருத்தும் பணி மலைபோல் அச்சுறுத்தியது.
அது மட்டுமா? ‘நோட்ஸ் ஆஃப் லெஸன்’ எழுத
வேண்டும். தேர்வுக்கு வினாத் தாள்களைத் தயாரிக்க வேண்டும். இத்தனை வேலைகளுக்கு இடையில் சுயம் பற்றிச் சிந்திக்க நேரம் எங்கே? கிடைக்கும் கொஞ்சநஞ்ச நேரத்தையும் ஒன்றிரண்டு சீரியல்களும் காமெடித் திரையும் எடுத்துக் கொண்டன.
அவளுக்கு வயது ஏறுகிறதே என்று
அப்பாவிற்குக் கவலை ஏறத்தான் செய்தது.
என்ன செய்வது? சொந்தத்திலும் தெரிந்த இடங்களில் இருந்தும் வரும் வரன்கள் அவள் அளவிற்குப் படிக்கவில்லையே!
அவள் இப்போதெல்லாம் வரன்களின் வசதி, நல்ல குணம் என்பவற்றையெல்லாம்
புறந்தள்ளிப் படிப்பையே முன் நிறுத்துகிறாள். தன்னை
மணந்துகொள்பவன் தன்னைவிட அதிகம் படிக்கவில்லையென்றாலும் ஒரு பட்டமேற் படிப்பாவது
கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்று வாதம் செய்கிறாள்.
பழைய காலமென்றால் உற்றார்
உறவினரின் தொணதொணப்பு அதிகமாக இருக்கும். கல்யாணம் காட்சிகளுக்கு உறவுக்காரர்கள் முன்னதாகவே வந்து விடுவார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து குசலம் விசாரிப்பதுடன் எல்லோர் பிரச்சனைகளையும் நட்ட நடுவில் போட்டு
அலசிக் கொண்டிருப்பார்கள். ‘என்ன இன்னும் ஒம்
பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணலையா? வயசாகுதப்பா! என்ன பொறுப்பில்லாம இருக்க?
நம்ம குப்புசாமி மவன் படிச்சிட்டு வேலைக்குப்
போயிட்டானே அவனப் பாக்கறதுதானே? மணியோட மவன் சொந்தமா கட
வச்சிக்கிட்டு ஒஹோன்னு இருக்கானே! அவனுக்கு முடிச்சிடறதுதானே?’ என்று வரன்களை அவர்களே தேடிக்கொடுத்துத் தொளைத்தெடுத்து விடுவார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் நெருங்கிய
உறவினர் விஷேசங்களுக்குக்கூட தாலிகட்டும் நேரத்தில் போய்விட்டு, ‘ஆபீஸ்ல பர்மிஷன் சொல்லிட்டு வந்திருக்கேன், சீக்கிரம் போவணும்’ என்று சடங்கு சம்பிரதாயங்களின் இடைவெளியில் கிடைக்கும் நிமிட இடைவெளியில் உள்ளே புகுந்து 'மொய்'ப் பணத்தைக்
கொடுத்துவிட்டுத் திரும்பி விடுபவர்கள்தாம் அதிகம். அதனால் உறவுகளின் விசாரிப்புகள், ‘நான் நல்லாருக்கேன் - நீ
நல்லாருக்கியா’, ‘ஊர்ல எல்லாரும் நல்லாருக்காங்களா’,
என்ற பொதுவான உரையாடல் துணுக்குகளில் முடிந்து விடுகின்றன.
பெண்களின் போக்கும் இன்று வெகுவாக மாறிவிட்டது. அப்போதெல்லாம் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுப் பெண்கள் கிணற்றடியிலும் குழாயடியிலும் ஆற்றங்கரையிலும் தண்ணீர் எடுக்கும் சாக்கில், துணி துவைக்கும் போக்கில்
அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ‘எம் பொண்ணு மறுவீட்டுக்கு
வந்திருக்கா. ஏன் ஒம் பொண்ணுக்கு
இன்னும் கல்யாணம் குதறல?’ என்ற மற்றவர்கள் நச்சரிப்பார்கள்.
அந்த எரிச்சலில் ‘முதல்ல எம் மவளுக்குக் கல்யாணம்
செஞ்சிட்டுதான் மறு வேல’ என்று
தாய்மார்கள் சபதம் ஏற்றுக்கொள்வார்கள்.
திருமணமாகாத பெண்கள் பக்கத்து வீட்டு அம்மாவின் பேரன் பேத்திகளோடு விளையாடும்போது, ‘எம் பொண்ணும் நீயும்
ஒரே வருஷந்தான் பொறந்தீங்க. இன்னும்கேட்டா, அவ ஒன்னவிட ரெண்டு
மாசம் சின்னவ. ஒனக்கும் கல்யாணம் ஆயிருந்தா இன்னேரம் ஒனக்கும் ரெண்டு கொழந்த பொறந்திருக்கும்’ என்று கூறி அங்கலாய்ப்பாள். அதைக்
கேட்டதும் சுருக்கென்று தைக்கும். ‘சரி சரி! அப்பா
எந்த வரனையாவது சீக்கிரம் காட்டட்டும். கழுத்தை நீட்டுவோம். ரெண்டு பிள்ளய பெத்துப்போட்டு நான் யாருன்னு காட்டறேன்’
என்று பொறாமை கலந்த போட்டி மனத்தில் எழும்.
ஆனால் இப்போதெல்லாம் அவரவர்க்கு
அவரவர் பிரச்சனை. தொலைக்காட்சித் தொடர்களால் திண்ணைப் பேச்சுகள் தவிர்க்கப்பட்டுவிட்டன. அடுத்த வீட்டைப் பற்றி அலசுவதும் குறைந்துவிட்டது. நெருக்கடி கொடுக்கும் தூண்டு சக்தியாகச் செயல்பட்ட இந்த ஒன்றின் மறைவினால்
அவரவர் பாட்டுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கவிதாவுக்கு வந்த ஒன்றிரண்டு வரன்களும்
இப்போது சுத்தமாக நின்றுபோனது. டாக்டர், இன்ஜினியர் என்று நன்கு படித்த வசதியான மாப்பிள்ளைகள் அழகான பெண்களைத்தான் தேடுகிறார்கள். அப்போதுதான் தன் மகள் ஒன்றும்
பெரிய அழகியில்லை என்பதும் அவள் சராசரிதான் என்பதும்
கவிதாவின் அப்பாவுக்குத் உறைத்தது. அதை அவளுக்குப் புரியவைக்க
முடியாது. அவள் மட்டுமென்ன? யாருமே
உண்மைகளை அறிந்துகொள்ள விரும்புவதில்லை. ஏற்றுக்கொள்ள முன்வருவதும் இல்லை.
இனி முதல்தாரமாக வாழ்க்கைப்பட
அவளுக்கு வாய்ப்பில்லை என்ற உண்மையும் அவருக்குப்
புலப்பட்டது. அவள் வயதுக் கணக்கும்
அதனை ஊர்ஜிதப்படுத்திற்று. அவளுக்குக் கணவனாக வரப்போகிறவன் நிச்சயம் அவனைவிட ஒரு வருடமாவது மூத்தவனாக
இருக்க வேண்டாமா? அந்த வயதுப் பொருத்தத்தோடு
நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கும்
தன் சாதிக்காரன் இன்னுமா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பான்? . . . பின்னே
சாதி முக்கியமில்லையா? எதற்காகவும் சாதியை விடமுடியாது.
‘எம்
மவ பேச்சக்கேட்டு நான் எவ்ள பெரிய
தப்பு செஞ்சிட்டேன். இப்போ என்னத்தான் எல்லாரும் காரித் துப்புவாங்க. கொஞ்ச வருஷம் கழிச்சு எம் பொண்ணே, ‘நான்தான்
அறிவில்லாம சொன்னேன். நீங்களாவது எனக்குப் புரிய வெச்சிருக்கலாமேப்பா’ - அப்படீன்னு என்னத் திருப்பிக் கேட்டாலும் கேப்பா’. காலங்கடந்து வேலுமணி யோசித்தார்.
மதியம் அவள் பெயருக்கு வந்த
ஓர் அரசாங்க முத்திரையிட்ட கடிதம் பிரிக்கப்படாமல் கிடந்தது. பெண்ணியச் சிந்தனைகளோடு சில எல்லைகளையும் அவள்
வரையறுத்துக்கொண்டுவிட்டாள்.
அவளுக்கென்று தனி அறை, அவளுக்கென
தனி தொலைக்காட்சிப் பெட்டி. இவ்வாறு ‘பிரைவசி’ என்ற பெயரில் தன்னைத்தானே
அவள் தனிமைப்படுத்திக் கொண்டாள். அதனால் அவள் சொந்த விவகாரங்களில்
யாரும் தலையிடுவது இல்லை.
‘அப்பா, அப்பா, எனக்கு கவர்மெண்ட் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல வேல கெடச்சிருக்குப்பா’. கடிதத்தைப் பிரித்துப்
படித்ததும் மகிழ்ச்சிக் கூக்குரலிட்டாள் கவிதா.
இனி அவளுக்குத் திருப்திகரமான
வரன்கள் வரவில்லையென்றால் அவள் வேலையைக் காரணம்
காட்டி அதனை விட்டுவிட முடியாது
என்று பிடிவாதம் பிடிப்பாள்.
புதிய வேலையில் பழைய
வேலையைப் போன்ற அழுத்தம் இல்லை. அரசாங்கப் பணி என்பதால் தேவையில்லாத
லொட்டு லொசுக்கு வேலையெல்லாம் இல்லை. ‘ஏன் இத்தன பேர்
பெயில் ஆனாங்க? பசங்களோட மார்க் ஏன் தொண்ணூறுக்குக் கொறைச்சலா
இருக்கு?’ என்ற தலைமையாசிரியரின் மிரட்டல்
இல்லை. ‘மார்க் கொறச்சலான பசங்களைச் சாயந்திரம் ஒக்கார வெச்சி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கணும்’ என்ற திணிப்பு இல்லை.
‘நாள் முழுதும் ஓய்வில்லாப் பணி’ என்கின்ற இயந்திரகதியும்
இல்லை. ஒருநாளைக்குக் குறைந்தது ஒருமணி நேரமாவது ஓய்வு கிடைத்தது. தேர்வுத் தாள்களையும் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு திருத்த வேண்டாம். அவள் வகுப்பு மாணவர்கள்
பலர் வெளியில் காசுகொடுத்து டியூஷன் படித்து அவளது கற்பித்தல் சுமையை வெகுவாகக் குறைத்தார்கள்.
ஆனால் இந்த பணிச்சுமையின்மை
வேறொரு சிக்கலை ஏற்படுத்தியது. அவளுக்குக் கிடைத்த ஓய்வுநேரம் அவளைப் பற்றி - அவள் எதிர்காலத்தைப் பற்றி
- அவளுக்குக் கிடைக்கவேண்டிய இன்பங்கள் பற்றி - அந்த இன்பங்களை எவ்வாறு
அடைவது என்பது பற்றி - சுருங்கச் சொன்னால் தான் இன்னும் தனிமரமாய்
நிற்பது பற்றி - தன்னந்தனியாக யோசிக்கச் செய்தது.
கல்லூரிக் காலத்தில் வாய்ச் சவடாலாகக் கூறிக்கொண்டிருந்த கொள்கைகள் தன்னால் பின்பற்றக் கூடிய சாத்தியம் இல்லையோ என்று தோன்றியது. இவ் உலகம்முழுக்க வயதுவந்த
ஆணும் பெண்ணும் அடைந்து விட்ட ஏதோ ஒன்றைத் தான்
மட்டும் இழந்து நிற்பது ஏன் என்று மனத்திற்குள்
விசாரம் தோன்றியது.
வீடாக இருந்தால் ஓய்வு
நேரங்களில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அவளை யோசிக்கவிடாமல் செய்து
விடும். ஆனால் பள்ளியில் தினம் கிடைக்கும் ஓய்வு நேரத்தை எப்படிப் போக்குவது? குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் என்று இதழ்களை வாசிக்கலாம். ஆனால் மாற்றி மாற்றி திரிஷா, நயனதாரா, தனுஷ், நகுல், சுனைனா என்று இவர்களைப் பற்றிய கிசுகிசுக்களைப் படித்துக் கொண்டிருப்பதே போர் அடித்தது. நல்ல
கதைப் புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தால் அவையும் மாறி மாறி ஆணையும்
பெண்ணையும்தான் சுற்றிச்சுற்றி வருகின்றன. காதல் ரசத்தை வழிய விடுகின்றன. அக்
கதைகள் ‘தான் இழந்தவை பெரிதோ’
என்று அவளை உருகச் செய்தன.
பணியில் சேர்ந்து இரண்டு வாரத்தை இப்படி ஓட்டியது இரண்டு யுகத்தைக் கழித்ததுபோன்று இருந்தது.
சன்னலுக்கு வெளியே எவ்வளவு நேரம்தான் பார்வையை ஓட்டுவது. அங்கும் சொல்லிக்கொள்வதுபோல் பார்க்கத் தக்கதாக எதுவும் இல்லை. அடுத்த கட்டடத்தின் பின்பக்கச் சுவர்தான் தெரிகிறது. அவ்வப்போது அறையின் மேற்குப் பக்கம் பார்வையைத் திருப்பினால் ‘பீட்டர் சார்’ ஏதேனும் ஒரு புத்தகத்தை ஆழ்ந்து
படித்துக் கொண்டிருக்கிறான். எதேச்சையாக அவன் பார்வையும் இவள்
பார்வையும் சந்திக்கும் தருணங்களில் அவன் லேசாகப் புன்னகை
புரிகிறான்.
இவளை மகளாகக் கருதி
உறவு பாராட்ட முடியாது. சக வயதுத் தோழியாகக்
கருதிச் சகஜமாகப் பேசவும் முடியாது. இரண்டிற்கும் இடைப்பட்ட வயது. யோசித்தான் பீட்டர்.
அவனாகவே அவர்களுக்குள் இருந்த இறுக்கத்தை மெல்ல மெல்ல உடைத்தான். ‘என்னம்மா, வீட்டில யார் யார் இருக்காங்க?’
என்ற அறிமுகத்தில் ஆரம்பித்தான். அவள்
முதலில் பேசத் தயங்கினாள். பெரும்பாலான ஓய்வு நேரங்கள் அவர்கள் இருவருக்கும் ஒன்றாக அமைந்ததுதான் விதி என்பதா? வேறு
வழியில்லை. நேரத்தைக் கொல்ல வேண்டுமென்றால் கொஞ்சமாவது பேசித்தான் ஆக வேண்டும்.
யாரும் இல்லாத தருணங்களில் அவள் தனிமையைப் பற்றிச்
சிந்தித்து அதனையும் யாரிடமாவது பகிர்ந்துகொள்ள மனம் தேடியது. அவள்
ஏமாற்றங்களை எல்லாம் கேட்க யாரிடத்தும் காதுகள் இல்லை.
அந்த அறையில் பெரும்பாலும்
பெண்கள். பல வயதுக்காரர்கள். புதிதாகத்
திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை என்னும் வசந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளைப் பெற்றவர்கள் குழந்தைகளின் படிப்பு, குழந்தைகளைப் பள்ளியில் விடுவது, திரும்ப அழைத்துப் போவது, பள்ளிக்கூடங்களிலும் பள்ளி வாகனங்களிலும் நடக்கும் விபத்துகள் என்று தன்னொத்த பெண்களிடம் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஓய்வுபெறும் வயதை வேகமாக நெருங்கிக்
கொண்டிருந்தவர்களோ தம் மகன், மகள்
திருமண ஏற்பாடு குறித்த செய்திகளையும் பேரன் பேத்திகளின் கொஞ்சல்களையும் பரிமாறிக் கொண்டார்கள்.
அவளைப் போன்று முதிர்கன்னியான நிலையில் யாரும் இல்லாதது அவள் தனிமையை மிகுவித்தது.
அவள் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள எந்த ஆர்வமூட்டும் செய்தியாவது
தன்னிடம் இருக்கிறதா என்று தேடித்தேடிப் பார்த்தாள். எதுவும் கிடைக்கவில்லை. அப்பா, அம்மா, சாப்பாடு, பள்ளிக்கு வந்துபோவது - இவற்றில் எந்த விஷயமும் புதுமைகளைப்
புகுத்தவில்லை. எப்போதும் போல்தான் இருக்கின்றன. மற்றவர்களுக்கு மட்டும் பேசிக் கொள்வதற்கு என்னென்னவோ விஷயங்கள் கிடைக் கின்றனவே?
தங்கள் கணவனைப் பற்றி, அவன் வாங்கிக்கொடுத்த புடவையைப்
பற்றி, குழந்தைகளைப் பற்றி, அவர்கள் செய்த சேட்டைகளைப் பற்றி, அவர்கள் விழுந்து பல்லை உடைத்துக்கொண்டது பற்றி, அவர்களின் பிறந்தநாள் வைபவம் பற்றி, அவர்கள் படிப்பு பற்றி, மாமியார் - மருமகள் சண்டை பற்றி . . . தான் எதைப் பற்றிப்
பேச?
மற்றவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் இவளுக்கு ஈடுபாடில்லை. அவற்றைக் கேட்டுக்கொள்ளும் பொறுமையும் இல்லை.
பெரும்பாலும் பெண்களுக்கு இவற்றைத்தவிர வேறெதுவும் சுவாரசியமான விஷயமாகப் படுவதில்லை.
ஆண்களின் பேச்சு வேறு மாதிரி இருக்கும்.
அரசியல் பற்றி, அவர்கள் அண்மையில் பார்த்த திரைப்படம் பற்றி . . . விலைவாசி உயர்வு பற்றி . . .
அவள் தனிமையைப் பீட்டர்தான்
போக்கினான். அவள் ஏன் இன்னும்
திருமணம் செய்துகொள்ளவில்லை? என்று சுற்றிவளைத்துக் கேட்டான். அவளும் அதற்கான காரணத்தைச் சுற்றிவளைத்துச் சொன்னாள். அவள் அளவிலான பெண்ணியச்
சிந்தனைகளை அள்ளி வீசினாள். பீட்டரும் அவள்தான் புதுமைப்பெண் என்று சான்றிதழ் வழங்கினான். தன் சொற்களுக்குத் தாளம்போட
ஒருவர் கிடைத்த திருப்தி அவளுக்குக் கிடைத்தது.
பீட்டர் ஒருநாள் 'நோட்ஸ் ஆஃப் லெஸன்' எழுதப்
பேனாவைத் தேடிக் கொண்டிருந்தான். பாக்கெட்டிலிருந்து எடுத்து எழுதும் பேனாவை அவ்வப்போது எங்கேயாவது வைத்துவிட்டு வந்துவிடும் மறதிப் பேர்வழி அவன். இது ஒரு 'டைப்'பான மறதி.
‘சார் இந்தாங்க, இந்தப்
பேனாவுல எழுதுங்க, என்கிட்ட நெறைய பேனா இருக்கு, இத
நீங்களே வெச்சிக்கோங்க.’ அவள் ஓர் எழுதுகோலைப்
பீட்டருக்குக் கொடுத்தாள். வெறும் ஐந்துரூபாய் பேனாதான். ஆனால் அப்பேனாவை உற்றுப் பார்த்தபோது அதற்குள் ஒரு காகிதச் சுருள்.
பிரித்துப் பார்த்தான். கவிதை
ஒன்று:
பெண் சக்தியின்
வடிவம்
ஆண் சகதியின் வடிவம்
சேற்றில் முளைத்த செந்தாமரை
ஏதோ ஹைக்கூவாம். அவள்
கவிதைகள் என்ற பெயரில் ஏதோ
சுமாராக எழுதுவாள் போலும்.
அதனைப் படித்துவிட்டு ‘ஆஹா! ஓஹோ!’ என்று
அவன் சிலாகித்தான். கவிதா
என்ற பெயர் அவளுக்கு எந்த அளவிற்குப் பொருந்திவிட்டது
என்பதைச் சுட்டிக்காட்டி 'கவிக்குயில்' என்ற பட்டத்தை அவளுக்குச்
சூட்டி மகிழ்ந்தான்.
அதற்குப் பின் அவள் விதவிதமாக
நிறைய பேனாக்களை வாங்கினாள். அவனுடைய பேனா மறதியும் அவளுக்கு
ஒருவகையில் வசதியாய்ப் போயிற்று.
ஒவ்வொரு நாளும் ஆணாதிக்கம், பெண்ணடிமை, கற்பு, முதிர்கன்னி என்ற போர்வையில் ஏதேனும்
ஒரு கவிதைக் கிறுக்கலை எழுதிப் பேனாவிற்குள் வைத்துக் காலையில் வந்தவுடன் அவனது மேஜையில் வைப்பாள். அதைப் படித்துவிட்டு அவர்கள் இருவர் மட்டும் அந்த அறையில் இருக்கும்போது
அதைப்பற்றி 'ஓஹோ' என்று அவன்
சிலாகிப்பான். அவள் கவிதைகளுக்கு அவன்
கொடுத்த அங்கீகாரமே அவன் ஆணாதிக்கம் சிறிதும்
இல்லாதவன் என்று அவளுக்குப் ‘பாண்டு’ பத்திரம் எழுதிக் கொடுத்தது. வேறு யாராவது அவன்
நிலையில் இருந்திருந்தால் அவள் கவிதைகளைப் படித்துவிட்டு,
‘ஆடவரை ஏன் இப்படித் தாறுமாறாய்ப்
போட்டுத் தாக்குகிறாய்?’ என்று பொரிந்திருக்க மாட்டாரா? 'பெண்ணியவாதி' என்று அவள் பிடித்திருந்த கொடியை
அவனிடம் கொடுத்துவிட்டு அவள் இளைப்பாறினாள்.
கொஞ்ச நாளில் அவள்
கவிதையின் கரு மெல்ல மெல்லத்
திசை மாறியது. அவள் எழுதும் கவிதைக்
கிறுக்கல்களில் பெண்ணியம் தன் சாயலை மறைத்துக்
கொண்டது.
இமையின்றி கண்ணா
உமியின்றி நெல்லா
குழலின்றி நாதமா
குழவியின்றி அம்மியா
பயிரின்றி நிலமா
உயிரின்றி உடலா
நகமின்றி விரலா
சுகமின்றி வாழ்வா
இப்படி
ஒன்று இல்லாமல் வேறொன்று இல்லை என்று அவள் ஒரு காதல்
கவிதை வரைந்தாள். பீட்டருக்கு ஏதோ ஒன்று புரிந்தது.
அவன் அதற்கு விடைப்பாட்டு
எழுதி பேனா மூலமே தூதனுப்பினான்.
மோதினால் விலகும் தடை
உலகை ஆள்வது இடை
மழையிலிருந்து காக்கும் குடை
கேள்விக்குக் கிடைக்கும் விடை
இந்தப்
பேனாவிடு தூது நன்றாகவே செயல்பட்டது.
அவர்கள் இருவரின் கவிதைகளும் அதற்குப்பின் ‘உலகை ஆள்வது காதல்’
ஒன்றுதான் என்னும் பாணியில் பயணித்தன.
ஒன்று - பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருந்துவிட வேண்டும். அதனால் அவர்களுக்கு ஆபத்தோ? இல்லையோ? மற்றவர்களுக்குப் பெரும்பாலும் ஆபத்து வராது.
அல்லது தீவிரப் பெண்ணியவாதியாக மாற வேண்டும். ‘எனக்குத்
திருமணமும் வேண்டாம்; ஒரு மண்ணும் வேண்டாம்.
பாலுறவும் கற்பும் அற்ப விஷயங்கள்’ என
எண்ணவேண்டும். ‘சந்தி, உறவுகொள், பிரி’ என்று யார் யாரிடம் வேண்டுமானாலும்
உறவு கொள்ளலாம். தன்னைத் திருப்திப்படுத்தும் நபருக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா? என்றெல்லாம் கவலையில்லை. அதனை அறிந்துகொள்ளவும் தேவையில்லை.
கவர்ச்சியும் அந்த நேரத்திற்கான தூண்டலும்தான்
முக்கியம். ஆனால் அதனை அப்பொழுதே மறந்துவிடவேண்டும்.
அதை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட ஆணும் பெண்ணும் எதிர்காலத்தில் உறவைப் பலப்படுத்த நினைக்கக் கூடாது’ என்று முடிவெடுத்துவிட்டு மேலை நாட்டினர் சிலர்
போன்று எதற்கும் துணிந்தவராய்த் திரியவேண்டும்.
ஆனால் நம் நாட்டிலோ
தொன்றுதொட்டுவரும் பண்பாட்டையும் விடமுடியாமல் புதிய பெண்ணியமும் வேண்டும் என்று பேசிக்கொண்டு ‘ஆற்றில் ஒரு கால் சேற்றில்
ஒரு கால்’ வைத்தால் எப்படிக் கரைசேருவது? கவிதாவின் நிலைமையும் அதுவாகத்தான் இருந்தது.
இத்தனை வருடங்கள் தனக்குக் கணவன் என்ற ஆண் துணை
தேவையில்லை என்று நினைத்தவள் இப்போது தனிமை விரட்டும்போது அதனை விரட்ட ஓர்
ஆணைத்தான் துணைக்கு நாடினாள்.
ஆடவர் பலரை நாடியிருந்தாலும்
பிரச்சனை இல்லை. அவரவர் சிறிதுநேரம் ‘டைம் பாஸிங்’ என்று
நினைத்து அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போய்விடுவார்கள். இவளும் நங்கூரம் போடாத கப்பல்போல் பயணித்திருப்பாள். ஆனால் அவள் பார்வை முழுதும்
பீட்டரை நோக்கிக் குவிந்ததுதான் வினையாக முடிந்தது.
பின்னர், அவர்கள் பேச்சு பேச்சோடு நிற்கவில்லை. அவளுக்குப் பீட்டரைத் தொட்டுப்பேச ஆசைவந்தது. திரைப்படங்களில் வரும் கற்பனை இசைகளின் பின்னணியில் தொடுதல் சுகம் கொடுத்தது. அதற்கு அடிக்கடி தனிமையை நாடியது மனம். அவர்கள்
தனிமைக்கு இடையூறாய்வரும் நபர்களைப் பார்க்கும்போது அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. பீட்டருக்கும் இதெல்லாம் புரியாமல் இல்லை. எந்தவித முயற்சியும் இல்லாமல் தானேவந்து மடியில்விழும் மாம்பழத்தை யார்தான் வேண்டாம் என்று சுவைக்காமல் விடுவார்கள்.
‘பீட்டர் சார் எனக்கு அப்பாவைப்
போல’ என்று அனைவரிடமும் முதலில் கூறிக் கொண்டிருந்த கவிதா நாளாக ஆக அவனை ஆசைதீர
அணைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்கான சமயத்தையும் தேடிக் கொண்டிருந்தாள்.
‘அய்யோ பாவம் அவளுக்கும் யார் இருக்கா? அவ
ஆதங்கத்த யார்கிட்ட கொட்டுவா?’ என்று பீட்டர் மனத்தில் முதலில் எட்டிப்பார்த்த பச்சாதாபம் இப்போது ‘அய்யோ பாவம்! பாலுணர்வு என்பது இயற்கையின் நியதியாச்சே? அவ பாலுணர்வுக்கு யாரு
வடிகாலா இருப்பாங்க?’ என்று அனுதாபப்பட்டது. அவளது விரக தாபம் வெளிப்படையாகத்
தெரிந்தது. எது ஒன்று கிடைக்கவில்லையோ
அதற்குத்தான் மனம் ஏங்கித் தவிக்கிறது.
அதனால்தான் காவிக்குள் காமாந்தகர்கள் தென்படுகிறார்கள்.
வறட்டுக் கொள்கைகளால் அவள் கழித்த நாட்களைத்
மீட்டுக் கொணர்ந்து அவள் வாழ்க்கையைச் சீராக்க
முடியுமா?
‘அவனாக வலிந்து தன்னைத் தழுவ மாட்டானா?’ அவளுள்
ஏக்கம் எட்டிப்பார்த்தது. எப்படித் தன்னைத் தழுவுமாறு அவனை அவள் வேண்டுவாள்?
அப்படிக் கேட்டால் அவன் தன்னைப் பற்றி
என்ன நினைப்பான்? அவள் வெட்கங்கெட்டவள் என்று
நினைத்துவிட்டால்? அவள் குடும்பப்பெண் இல்லை
என்று முத்திரை குத்தி விட்டால்?
மனமிருந்தால் மார்க்கமுண்டு. பள்ளியில் மாணவர்களை நான்கு நாள் கல்விச் சுற்றுலா
அழைத்துப் போகவேண்டும் என்று ஏற்பாடானது. முதலில் பீட்டர் சாரும் சரோஜினி டீச்சரும் உடன் செல்வதாக இருந்தது.
கவிதாவிற்குத் தானும் பீட்டருடன் செல்லவேண்டும் என்று ஆசைதான். ஆனால் மாணவர்களை ஒழுங்குபடுத்த சீனியர்தான் செல்லவேண்டும்; ஜுனியர்க்கு அதற்கெல்லாம் அருகதை இல்லை என்பது போலல்லவா தலைமையாசிரியர் நடந்துகொண்டார்.
சுற்றுலாவிற்கு இரண்டு நாட்களே எஞ்சி இருந்தன. அப்போது பார்த்துச் சரோஜினி டீச்சரின் மகன் வண்டியில் போகும்போது
விபத்தில் சிக்கிக் கையை ஒடித்துக் கொண்டான்.
‘சார்! எம் பையன இந்த
நெலமல விட்டுட்டு என்னால எப்படிப் போமுடியும்? வேற யாரயாவது
போவச் சொல்லுங்க’, - சரோஜினி டீச்சர் ஒரு குண்டைத் தூக்கிப்
போட்டார்.
‘கிளாஸ்லயே இவனுங்கள அடக்க முடியாது. டூர்ல கேக்கவே வேணாம். எவனுக்காச்சும் ஏதாச்சும் ஆச்சுன்னா யார் அவஸ்த படறது?’
பயம் தொற்றிக்கொள்ள சீனியர் டீச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி நழுவினார்கள்.
சரோஜினி டீச்சரின் மகன் அடிபட்டுக் கிடந்ததற்குப்
பெரிதும் மகிழ்ந்தவள் கவிதாதான்.
‘நான் வேணும்னா போறேன்
சார். எங்க வீட்ல நான்
எப்படியாவது பர்மிஷன் வாங்கிடறேன் சார்’. உதவிக்கரம் நீட்டினாள் கவிதா. தலைமையாசிரியருக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது. யாரும் போகவில்லை என்றால் கடைசியில் அவர்தானே போக வேண்டிவரும்?
‘இந்த டூரில் எப்படியாவது
பீட்டர் சாரைக் கரெக்ட் பண்ணிவிடவேண்டும்’, - முடிவுசெய்தாள் கவிதா.
ஆற்றைக் கடக்க நினைத்தவள் தெப்பத்தோடு வந்திருக்கலாம். ஆனால் நீந்தியே கரைசேர்ந்து விடலாம் என்று ஏதோ குருட்டு தைரியத்தில்
ஆற்றில் இறங்கியாகி விட்டது. பாதி ஆற்றை அடையும்போதுதான்
பயம் பற்றிக் கொண்டது. நீந்திக் கடப்பதில் நம்பிக்கை அற்றுப்போனது. கைக்கு ஏதாவது பிடிமானம் கிடைத்தால் அதனைப் பற்றிக்கொண்டு கரை சேர்ந்துவிடலாம். ஆனால்
அவள் பார்வைக்கு முதலில் தட்டுப்பட்டதோ இத்துப்போன பழைய மரக்கட்டைதான். அவள்
சற்றே பொறுமையாகத் தேடினால் ஆற்றில் அடித்துவரும் புதிய மரக்கட்டைகூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவளுக்குப் பொறுமையும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. கண்ணில்பட்ட அந்த மரக் கட்டையை
விட்டுவிட அவள் விரும்பவில்லை. தான்
அந்த மரக்கட்டையைக் கெட்டியாகப் பிடித்தால் ஒருவேளை அந்த மரக்கட்டையே சிதைந்து
அமிழ்ந்துபோகும் சாத்தியக் கூறு இருக்கலாம். அவளுக்கு
அதைப்பற்றியெல்லாம் கவலைஇல்லை. அதனை விட்டு விட்டால்
வேறு கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?
'பீட்டர் சார்தான் இந்த ஜாடிக்கு ஏத்த
மூடியாக இருக்க முடியும்’ - திட்டம் தீட்டினாள் கவிதா.
தனக்கு அழகாக இருக்கிறது என்று பீட்டர் ஸ்பெஷல் கவனம் செலுத்தித் தன்னைக் கவனிக்கவைத்த உடைகள் ஐந்தை எடுத்து வைத்தாள். மேக்கப் செட், சென்ட் என அனைத்தையும் கச்சிதமாகப்
பேக் செய்தாள்.
பேருந்தில் இடதுபுற வரிசையில் கவிதாவும் வலதுபுற வரிசையில் பீட்டரும் உட்கார்ந்து கொண்டார்கள். இப்படித் தனித்தனியாய் உட்கார்ந்து கொண்டால் கவிதாவின் ஆசை நிறைவேறுவது எப்படி?
அதற்கு வழி இல்லாமலா?
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா . . .
வசீகரா உன் நெஞ்சினிலே
தூங்கினால் போதும் . . .
என்னும் சிருங்கார ரசம் ததும்பும் பாடல்கள்
பேருந்தில் இசைக்கப்பட்டபோது அவளும் அர்த்தம் ததும்பப் பீட்டரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
சுற்றுலாவின் முதல் தங்கும் இடம் கோடைக்கானல். வழியிலுள்ள
இடங்களைச் சுற்றிவிட்டு கோடைக்கானல் சேர்ந்தபோது மதியம் பின்னடைந்து கொண்டிருந்தது. முதலில் சில்வர் கேஸ்கேடில் ஒரு குளியல். மாணவர்கள்
அருவியைக் கண்டதும் ‘ஹய்யா ஜாலிதான்’ என்று குளிக்க ஓடினார்கள். தண்ணீர் ஐஸாகக் குளிர்ந்தது. போன வேகத்தில் பலர்
‘ஐயோ சாமி வேண்டாம் குளியல்’
என்று புறமுதுகிட்டு வந்துவிட்டார்கள். சிலர் மட்டுமே கோதாவில் நின்றார்கள்.
கவிதாவிற்கு அருவி, ஆறு போன்றவற்றில் குளித்தாலோ,
வெளி இடங்களில் பச்சைத் தண்ணீர் குடித்தாலோ ஒத்துக்கொள்ளாது. அதற்காக இன்றுவரை கடவுளைச் சபித்தவள், இன்று உடம்புக்கு ஏதாவது வரவேண்டும் என்று நன்றாகப் பிரார்த்தித்துக் கொண்டாள். நெடுநேரம் அந்தக் குளிரும் அருவியில் குளித்தாள். ஈர உடைகளைக் களையாமல்
நெடுநேரம் தண்ணீர் சொட்டச் சொட்ட நின்றாள். மழையில் நனைந்து உடலை ஒட்டிய உடைகளோடு
இருக்கும் காதலியைப் பார்க்கும் காதலன் மனத்தில் கிலுகிலுப்பு தோன்றும் என்று திரைப்படங்கள் அறிவுறுத்துகின்றனவே! அப்படி ஒரு கிலுகிலுப்பு தன்னை
இந்தக் கோலத்தில் பார்க்கும் பீட்டருக்கு ஏற்படாமலா போகும்? என்ற நப்பாசையும் இருந்தது.
உடைகள் வெயிலில் தானாகக் காய்ந்துவிடும் என்றாள். அங்கே குளிரோ பல் நடுங்க வைத்தது.
அடுத்த இரண்டு மணிநேரத்தில் தன் உடலின் உள்ளே
சூடு பரவியதைக் கவிதா உணர்ந்தாள். இதுதான் அவளுக்குச் ஜுரம் வருகிறது என்பதன் அறிகுறி. கடவுளுக்கு மனதார நன்றி கூறினாள். மாலைக்குளிரில் ஜுரம் தீவிரமடைந்தது. தீவிரம் அடைந்தவுடன் அவள் முகத்தைப் பாவமாக
வைத்துக்கொண்டாள்.
பீட்டர் துடித்துப் போய்விட்டான். ‘என்னம்மா இது? இப்டி ஜுரம்
கொதிக்குதே, வா டாக்டர்ட்ட போலாம்’.
‘எல்லாம் தானா சரியா போயிடும்
சார். காலைல பாத்துப்போம்’, பிடிவாதமாக மறுத்தாள்.
‘சரிசரி. . . ! போய்ப்
பேசாமப் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ’.
அவர்கள் தங்குவதற்குப் பக்கத்துக் கிராமத்தின் சமுதாயக் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே அவ்வப்போது திருமணங்கள் நடைபெறுவது வழக்கம் போலும். அதனால் மணமகள் அறையும் மணமகன் அறையும் இருந்தன. மற்றபடி பெரிய ஹால். மாணவர்கள் ஹாலில் அவரவர்க்கு இடம்தேடிப் பிடித்துக்கொண்டார்கள். பயணக் களைப்பு. எல்லோரும் அவர்கள் கொணர்ந்த போர்வையைத் தலை முதல் கால்
வரை இழுத்துவிட்டுக்கொண்டு சுருண்டனர்.
கவிதாவின் அறைக்கதவு தாளிடப்படாமல் லேசாகத் திறந்துகிடந்தது. நாற்பது வாட் மின்விளக்கின் வெளிச்சம்
மங்கலாகக் கசிந்து கொண்டிருந்தது. ‘கவிதா எப்டி இருக்காளோ?’ ஓசைப்படாமல் கதவை அகலத் திறந்தான்
பீட்டர். அவள் தூங்காமல் விழித்துக்கொண்டு
கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
‘ஏம்மா, தூக்கம் வரலயா? ஜுரம் எப்படி இருக்கு?’, கேட்டுக்கொண்டே நெற்றியைத் தொட்டான். அனலாய்க் கொதித்தது. ‘என்ன இப்படி இருக்கு?’
தன் கைப்பையைத் துழாவி, ‘பாராசைடமால்’ ஒன்றையும் ‘செப்ட்ரான்’ ஒன்றையும் அவனே
அவள் வாயில் போட்டுத் தண்ணீரை ஊற்றினான்.
‘நான் சாயந்திரம் கொடுத்த
மாத்ரய சாப்ட்டியா இல்லயா?’
‘ம்! சாப்ட்டன்’
அவள் எங்கே சாப்பிட்டாள்?
காய்ச்சல் அதிகமாக வேண்டும் என்று அதனைத்தான் பலிகொடுத்து விட்டாளே. முதலுதவிப் பெட்டியிலிருந்து அவன் இரண்டு மாத்திரைகளை
எடுத்துக்கொடுத்தான். அவற்றைப் போட்டுக் கொள்வதாகப் பாவனைசெய்து யாரும் கவனிக்காதவாறு பர்ஸில் பத்திரப்படுத்தினாள்.
‘தல விண்விண்ணுன்னு தெறிக்குது.
ஒடம்பெல்லாம் வலிக்குது’, முனகினாள்.
‘வெற்றி வெற்றி என்றுதானே இருக்கு நல்லதுதானே!’ என்று ஜோக் அடித்தான்.
அந்த மொக்கை ஜோக்கைக் கேட்டுக் கவிதா விழுந்துவிழுந்து சிரித்து அவன் அறிவை மழுங்கடித்தாள்.
‘சரி தூங்குடா! எல்லாம்
படுத்துத் தூங்கினா சரியாப் போயிடும்’.
‘தூக்கமே வரலங்க’
‘புது இடமில்லயா, அப்படித்தான்டா
இருக்கும்’.
‘நான் இப்படித் தனியா
இருந்ததே இல்லங்க. ரொம்ப பயமா இருக்கு’ என்று
அஞ்சுபவளாக அநியாயத்திற்குக் காட்டிக்கொண்டாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பழங்காலத்துச் செல்லரித்த பெண்மையின் குணங்கள் என்று கூறிக்கொண்டிருந்த அவள் இப்போது அவற்றையே
தன் வசதிக்காக முகத்தில் எடுத்து அப்பிக் கொண்டாள்.
அவன் கைகளை எடுத்துத்
தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள். அவள் இச்சைக்கு அவன்
இடம் கொடுப்பது நன்றாகவே தெரிந்தது. அவன் அவள் நெற்றியை
மெதுவாக அழுத்தி விட்டான். அவன் மடியில் தலைகவிழ்த்து
அழுதாள் ஒன்றும் நடக்காமலேயே! ஏதோ ஒன்று நடப்பதற்கான
அழைப்பு அது என்று அவனுக்கு
நன்றாகவே புரிந்தது. பீட்டர் எழுந்து கதவை உள்தாழ் இட்டான்.
'ஆண்கள் ஏமாற்றுக்காரர்கள், ஆதிக்க வெறி பிடித்த தண்டங்கள்,
மனைவிக்குத் துரோகம் செய்யும் முண்டங்கள், பெண்கள் இல்லாமல் வாழமுடியாத பாலுணர்வுப் பிண்டங்கள்' என்றெல்லாம் கல்லூரி நாட்களில் பெண்ணியம்
பேசிய கவிதா தன் சொற்களுக்கு உரிய
சான்றாகப் பீட்டரை உருவாக்கித் தயாரித்து அழுத்தமான முத்திரை குத்திக் கொண்டிருந்தாள்.
கவிதா சிறந்த பெண்ணியவாதிதான்
என்று தான் நம்பியதாக இதுவரை
காட்டிக்கொண்டிருந்த பீட்டர் அது உண்மையா இல்லையா
என்று உள்ளே ஆறஅமர ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தான்.
தொடர்ந்த மூன்று இரவுகளும் அவளுக்குத் தனிமையில் கழியவில்லை என்பது அவளுக்கு மனநிறைவை அளித்தது. ஜுரம் வந்த பிறகு பேருந்தில்
அவர்கள் இருவரும் தனித்தனி இருக்கைகளில் அமர்வது அநாவசியமாகப்பட்டது. இரவுக்கும் பகலுக்கும் நிறையவே வேலை இருந்தன.
கவிதா மிஸ்ஸின் ஓய்வும்
பீட்டர் சாரின் கரிசனமும் மாணவர்களுக்கு எந்தவிதச் சந்தேகத்தையும் தாராமல் வைரல் பீவர் என்ற காரணம் திரையிட்டது.
அத்துடன் ஊரைப் பார்க்கும் ஆர்வமும் உற்சாக அரட்டையும் மாணவர்களை யோசிக்கவிடவில்லை.
அவனென்ன
இருபது வயதுக் காளையா? இல்லையே.
இரண்டு இருபதுகளைக் கடந்து அடுத்த கணக்கீட்டிலும் பாதியைத் தாண்டப் போகிறானே!
இவள் மட்டுமென்ன இளமைப்
பொலிவு கொண்ட கார்காலப் பருவத்துக் காலையில் மொட்டிலிருந்து அவிழ்ந்தும் அவிழாமலும் நிற்கும் மெத்தென்ற மலரா? இல்லையே! வேனிற்
காலத்தின் புழுக்கத்தில் வறட்சியில் மலர்ந்து திரங்கி வெப்பக் காற்றால் அலைப்புண்ட மதியத்து மலரல்லவா?
அவன் பலவீனத்தை நன்றாகவே
பயன்படுத்திக் கொண்டாள் கவிதா. அவன் பூஞ்சை மனம்
அவளுக்காக இரங்கியது. 'எங்கே ஓடிப்போகப் போகிறது?' என்று உரிமையாளரால் கவனிக்காமல் விடப்பட்ட நிலத்தை அவள் வேலிகட்டி வெற்றிக்
கொடி நாட்டினாள்.
அவள் நினைத்தது முடிந்தது
என்பது சில வாரங்களில் அவளுக்குத்
தெரிந்துவிட்டது. அவன் விதைத்தது முளைத்துப்
பால்பிடித்துவிட்டது. இனி முற்றும்வரை அவள்
அமைதியாகக் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவள் விளைச்சலை இலாபகரமாக
அறுவடை செய்யமுடியும்.
என்னதான் மனத்திற்கு ஆயிரம் எச்சரிக்கைகளைக் கொடுத்தாலும் அது கொஞ்சம் துள்ளித்தான்
பார்ப்போமே என்று துள்ளத்தான் செய்கிறது. அவளும் சற்றே துள்ளினாள்.
எல்லா ஆசிரியர்களும் கைவிட்டுவிட்ட
நிலையில் சுற்றுலாவில் மாணவர்களுக்குத் துணையாகச் செல்ல சம்மதித்ததால் தலைமை ஆசிரியரிடம் கவிதாவுக்கு
நல்ல பெயர் கிடைத்துவிட்டது. அதனைக் கருவியாக்கி அவள் மேசையைப் பீட்டருக்குப்
பக்கத்தில் போட்டுக்கொண்டாள். அனைவரும் காணுமாறு வெளிப்படையாகப் பீட்டர் மீது அதிக உரிமை
செலுத்தத் தொடங்கினாள். சிலசமயம் பீட்டருக்குச் சங்கோசமாகக்கூட இருந்தது. தனிமையில் அவனிடம் அதிகமாகக் கொஞ்சினாள். ‘என்ன இது வம்பாப்
போச்சே?’ என்று அவன் நினைக்கும் அளவிற்கு
அடிக்கடி ஊடல் கொண்டாள்.
அவன் சொத்துகளை, சொந்தபந்தங்களை,
விருப்பு வெறுப்புகளைப் பற்றி அவனிடம் அதிகமாக விசாரித்துத் தனக்குள் ஏதோ கணக்குப் போட்டுக்
கொண்டிருந்தாள். ‘சும்மா ஏதோ பொழுதுபோகாமல் விசாரிக்கிறாள்’
என்று அவன் தப்புக்கணக்கு போட்டான்.
தொடர்ந்த இரவுகளில் படுக்கப்போகும்போது ‘குட் நைட், ஸ்வீட்
ட்ரீம்ஸ்’ என்று அவனுக்குக் குறுந்தகவல் அனுப்பினாள். காலையில் ‘குட் மார்னிங், ஹாவ்
எ குட் டே’ என்று
குறுந்தகவல் கொடுத்து எழுப்புவதை வழக்கமாக்கினாள்.
சுற்றுலா போய்வந்து ஒரு மாதத்திற்குமேல் ஆகிவிட்டது.
என்றாலும் அவளோடு அவன் இருந்த நேரங்கள்
அவன் மனத்தில் இன்னும் பசுமையாய்ச் சுவை கொடுத்துக்கொண்டு இருந்தன.
‘பூவர் கேர்ள்! கள்ளங் கபடம் இல்லாத பெண், ஓ ஜீஸஸ்!’ என்று
மனத்திற்குள் கூறிக்கொண்டான்.
அன்று முதல்மணி நேர
வகுப்பை எடுத்துவிட்டு பீட்டர் அறைக்குத் திருப்பியபோது உள்ளே கவிதாவும் கோமளாவும் மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். கவிதாவின் அடுத்த இருக்கை கோமளாவினுடையது. பீட்டர் வந்ததும் பேசிக்கொண்டிருந்த கவிதா ‘டக்’கென்று பேச்சை
நிறுத்திவிட்டு நோட்டுப் புத்தகங்களைத் திருத்த முனைந்தாள்.
கவிதா தன்னிடமெல்லாம் சகஜமாகப்
பேசுவதில்லை என்று கோமளா எத்தனையோ முறை பீட்டரிடம் குறைபட்டுக்
கொண்டிருக்கிறாள். ஆனால் இன்று அவளோடு கவிதா அன்யோன்யமாகப் பேசிக் கொண்டிருந்தமை பீட்டருக்கு வியப்பாக இருந்தது.
‘அப்டி என்னதான் பேசிட்டிருந்தா? ஆனா கவிதா என்னப்
பாத்ததும் ஏன் பேச்சப் பாதில
நிறுத்திட்டா? அவ பாட்டுக்குப் பேச
வேண்டியதுதானே?’ - கொஞ்சமாக யோசிக்க ஆரம்பித்தான் பீட்டர்.
மூன்றாவது மணிநேரம் கவிதாவுக்கு வகுப்பு இருந்தது. அப்போது கோமளாவையும் பீட்டரையும் தவிர அனைவரும் வகுப்புகளுக்குச்
சென்றுவிட்டார்கள்.
‘கவிதா என்ன சொல்லிட்டிருந்தா? எப்டியாச்சும் அத
தெரிஞ்சுக்கணுமே’ - பீட்டரின் மனத்தில் சந்தேக வண்டு குடைந்து கொண்டிருந்தது.
‘என்ன கோமளா? ஆச்சரியமா
இருக்கு! கவிதாவும் நீயும் திக் பிரண்ட்ஸ் ஆயிட்டீங்க
போல?’ - கிண்டல் தொனிக்கச் சொன்னான் பீட்டர்.
பீட்டரைப் பார்த்ததும் கவிதா பேச்சைச் சட்டென்று நிறுத்தி வேலை செய்தது கோமளாவிற்கு
ஒருமாதிரியாக இருந்தது. ‘அவரைப் பற்றித்தான் அவர்கள் பேசியதாகப் பீட்டர் சார் நினைத்துவிட்டால் என்ன
செய்வது?’ தேவையில்லாமல் சீனியர்களுடைய கோபத்தைச் சம்பாதித்துக் கொள்வது நல்லதல்ல என்பது கோமளாவின் அனுபவப் பாடம்.
‘அதெல்லாம் ஒன்னுமில்ல சார். கவிதா ரிசர்வ்டு டைப். அவங்க எப்பவுமே சகஜமாப் பேசமாட்டாங்க. சும்மா ஏதோ டவுட் கேட்டாங்க.
அவ்ளதான்!’
பீட்டர் விடுவதாக இல்லை.
‘டவ்ட்டா? அப்படியென்ன பாடத்துல டவ்ட்? அதுவும் ஒங்கிட்ட கேக்கற அளவுக்கு?’
‘நடத்தற பாடத்துல எல்லாம் ஒன்னுமில்ல சார். எல்லாம் அனுபவப் பாடத்துலதான்!’.
‘நீதான் உலக மகா அனுபவசாலியோ?’
நக்கலடித்தான் பீட்டர்.
‘ஒரு கொழந்த பெத்த
அனுபவம் இருக்கே சார்!’, -வெட்கத்தோடு கூறினாள்.
‘என்ன . . . ?’
‘ஆமா சார், பிரக்னண்டா
இருந்தா எப்டி கேர் எடுத்துக்கணும்னு கேட்டாங்க?
என்னென்ன சாப்பிடணும்? என்னென்ன சாப்பிடக்கூடாதுன்னு கேட்டாங்க’.
‘எதுக்கு . . . ?’
‘அவங்களோட பிரண்டு யாரோ பிரக்னண்டா இருக்காங்களாம்
சார். அதுக்காக விசாரிச்சாங்க’.
‘ஓஹோ . . .’
‘அதத்தான் சார் பேசிட்டிருந்தோம். அப்பப் பாத்து
நீங்க வந்தீங்களா? உங்க எதிர இந்த
விஷயத்தப் பத்திப் பேச ஒருமாதிரியா இருந்தது.
அதனாலதான் டக்குன்னு பேச்ச நிறுத்திட்டோம் சார். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க சார்!’ - அவரைப் பற்றித் தான் எதுவும் தவறாகப்
பேசவில்லை என்பதை வெளிப்படுத்தியதில் மனநிறைவு கொண்டாள் கோமளா.
மணி அடிப்பதற்கு முன்
வகுப்பினை விடும் பழக்கம் பீட்டருக்கு இல்லை. என்றாலும் தேர்வுகள் நெருங்குவதால் பாடங்கள் அனைத்தும் முற்றுப்பெற்ற நிலையில் மாணவர்களை இப்போதாவது ஃபிரியாக விடுவோம் என்று நினைத்தான். மேலும் பள்ளிகள் மூட இன்னும் பத்துநாட்கள்தான்
இருக்கின்றன. பாவம் கவிதா, அவளுடன் கொஞ்சம் அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கலாம். அவளுக்கும் ஆறுதலாக இருக்கும். இந்த இரண்டு காரணங்களாலும்
இன்று கால்மணிநேரம் முன்னதாக வகுப்பை விட்டுவிட்டு வந்தான். அவ்வாறு வந்தது எவ்வளவு நல்லதாகிப் போயிற்று.
தன்னைத் திடீரென்று பார்த்ததும் கவிதாவின் முகம் எப்படியோ மாறிவிட்டதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
அவள் முகத்தில் சந்தோஷம் ஏற்படுவதற்குப் பதிலாக ஏன் பேய் அறைந்ததுபோல்
ஆயிற்று? அத்துடன் கோமளா கூறிய செய்திகள் . . . ? ? ?
கிரிமினல்
விஷயங்களில் அவன் கொஞ்சம் மக்குதான்
என்றாலும் மகா மட்டமான மக்கு
அல்ல. கவிதாவின் அண்மைக்கால விசாரிப்புகளும் அவள் உடலிலும் முகத்திலும்
போக்கிலும் காணப்பட்டுவரும் வேறுபாடுகளும் அப்போது அவன் மூளை அடுக்குகளில்
பதிந்து அதிர்வுகளைத் தூண்டின. சுற்றுலா நாட்களைக் கணக்கிட்டான். ‘கேட்டுப் பாக்கலாமா? கேட்பதென்ன? நிச்சயமா அதுதான்!’
‘இவ ஏதோ சூழ்ச்சி
வல பின்னுறா. நான் நல்லா மாட்டிக்கிட்டேன்!
பூவர் கேர்ள்னு நெனச்சேன். கடசீல நான்தான் முட்டாளாயிட்டேன். தப்பு நடக்கறதுக்கு முன்னால விழிப்பா இருந்திருக்கணும். இப்பவும் ஒன்னும் குடிமுழுகிடல. மவனே அமைதியா யோசி!
வெளியில எதயும் காட்டிக்காத! என்ன செய்யலாம்?’ யோசித்து
யோசித்து மூளை கசங்கியது.
‘பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம்’ என்று இப்படிப்பட்ட பெண்களைத்தான் சொன்னார்களோ? எவ்வளவுதான் படித்தாலும் ஆண்களுக்கு புத்தி வரவில்லையே!'
ஏப்ரல் மாதத் தொடக்கம். வெயில் அனத்தியது. அவன் சில்லென்று சாத்துக்குடி
ஜூஸ் போட்டுப் பிளாஸ்கில் கொணர்ந்தான். முதல்மணி நேர வகுப்பில் ரிவிஷனை
முடித்துவிட்டுவந்து சாத்துக்குடி ஜூஸ் குடித்ததும் தெம்பாக
இருந்தது. அவன் ஒரு கிளாஸ்
குடித்துவிட்டு அவளுக்கும் கொடுத்தான்.
‘ரொம்ப சூப்பரா இருக்கு!’
‘நான்தான் போட்டேன்’.
‘இதக் குடிச்சதும் எவ்ள
தெம்பா இருக்கு தெரியுமா?’
இப்படித் தினமும் குடிக்கவேண்டும்போல் அவளுக்கு இருந்தது.
‘அதனாலென்ன, இது ஒரு பெரிய
விஷயமா?, தெனமும் போட்டுட்டு வரேன்’.
பள்ளி மூடும்வரை வழக்கமாகக்
குடிக்கும் தேநீரை நிறுத்திவிட்டு இனிப் பழச்சாறு குடிக்கலாம் என்று இருவரும் முடிவெடுத்தனர்.
‘நேத்தும் முந்தா நேத்தும் நல்லா இருந்துது. இன்னைக்கென்ன லைட்டா கசக்குது?’.
‘பழம் கொஞ்சம் சலுப்பாயிட்டதுபோல.
அத்தோட ஸெகண்ட் ஹவரே குடிச்சிருக்கணும். நான் அப்பவே
குடிச்சிட்டேன். நல்லா இருந்தது. பரவாயில்ல வேஸ்ட் பண்ணாம இன்னிக்குக் குடிச்சிடு. நாளைக்கு நல்ல பழமாப் பாத்துப்
போட்டுட்டு வரேன்’ - அன்பொழுகக் கூறினான்.
‘அவன் கஷ்டப்பட்டுப் போட்டுக்
கொணர்ந்ததைக் குடிக்காவிட்டால் தன்னைத் தப்பாக நினைத்துக்கொண்டு விட்டால்?’ பழச்சாறின் சுவை நன்றாக இல்லாதிருந்தும்
கவிதா குடித்து முடித்தாள்.
மறுநாள் ஆப்பிள் ஜூஸ் கொணர்ந்தான். ‘நேத்து
சாத்துக்குடி ஜூஸ் நல்லாயில்லன்னு சொன்னியே!
அதனால இன்னிக்கு ஆப்பிள் ஜூஸ் கொண்டுவந்தேன்.’ வந்ததும்
டம்ளரில் ஊற்றி அருந்தக் குடித்தான்.
நன்றாக இருந்தது ஆப்பிள் ஜூஸ். மறுநாளும் ஆப்பிள் ஜூஸே குடித்தபோது கவிதாவின்
முகம் அஷ்ட கோணலாகிப் போனது.
‘இந்த டேஸ்ட் எனக்குப்
பிடிக்கல! வேண்டாம்!’ என்றாள்.
‘இதோ பார்! ஸ்டாஃப்
எல்லாம் வராங்க. டக்குன்னு குடி. அப்பறம் சந்தேகப் படுவாங்க’, பரபரத்தான்.
‘சரி சரி’, என்று
டம்ளரைக் காலி செய்தாள்.
‘போங்க எனக்கு இன்னிக்கு ஜூஸ் பிடிக்கவே இல்ல.
என்னவோ வயித்தப் பொரட்ற மாதிரியே இருக்கு, இனிமே ஆப்பிள் ஜூஸ் வேணாம்’ என்று
மதியம் அலுத்துக்கொண்டாள்.
‘அதன்’ காரணமாகத்தான் இப்படி இருக்கிறதோ? என்று கவிதா தனக்குள் நினைத்துக்கொண்டாள். ‘அதை’ எப்படி அவனிடம்
அவள் வெளிப்படுத்த முடியும். காலம் கனிய வேண்டாமா? ‘கோமளாகிட்ட
கேட்டுப் பாப்பமா? ஐயோ வேணாம்! தேவ
இல்லாம சந்தேகம் வந்துடப் போவுது. ஆக்கப்
பொறுத்தது ஆறப் பொறுக்கணும்’.
மறுநாள் அவளுக்காகச் சப்போட்டா மில்க் ஷேக் கொண்டுவந்து கொடுத்தான்.
அதன் சுவையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. லேசாகக் கசந்தது.
‘ஐயோ
எனக்கு இனிமே ஜுஸே வேணாங்க! கொஞ்சங்கூட
பிடிக்கவேயில்ல. பேசாம பழையமாதிரி டீயே வாங்கி வரச்சொல்லிக்
குடிச்சிக்கலாம்’ என்று பழச்சாறு அருந்தும் படலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் கவிதா. பீட்டருக்கும் இனி ஜூஸ்போட்டுக் கொண்டுவர
வேண்டும் என்ற தேவையோ எண்ணமோ
இல்லை. அவனுக்கு வேறு வேலை இல்லையா
என்ன?
ஜுஸைக் குடித்ததும் குமட்டிக்கொண்டு வந்தது. ‘அதுவாத்தான் இருக்கும்! சந்தேகமே இல்ல. எதுக்கும் இந்தச் சனிக்கெழம ஒரு நல்ல லேடி
டாக்டரக் கட்டாயம் பாக்கணும். சத்து மாத்திரைகளா வாங்கிச் சாப்பிடணும். எனக்குன்னு யார் இருக்கா? நானேதான்
என்னப் பாத்துக்கணும். இதுக்கே பயந்துபோனா இனி வர்ற பிரச்சனங்களச்
சமாளிக்கறது எப்டி?’ தனக்குத்தானே தைரியம் ஊட்டிக் கொண்டாள் கவிதா. ‘ஆனா எப்டி எந்த
டாக்டரப் பாக்கறது?’, யோசனையில் ஆழ்ந்தாள் கவிதா.
அவள் சனிக்கிழமையன்று மகப்பேறு
மருத்துவரிடம் போகவேண்டிய அவசியமில்லாமல் போனது. அவள் வயலில் முளைத்த
கதிர் கருகிவிட்டது. அவளுக்குக் காரணம் தெரியவில்லை. ‘பயிரைப் பாதுகாக்கும் முறை தெரியாமல் கவனக்குறைவாய்
இருந்துவிட்டேனோ?’ என்று மருகினாள். திருட்டுத்தனமாக விதைத்த விளைச்சலின் நஷ்டத்தை அவள் எப்படி அம்பலப்
படுத்துவாள்?
திங்கட்கிழமை அவள் முகம் பேயறைந்ததைப்போல்
இருந்தது. ‘இனி என்ன செய்வது.
தன் திட்டம் எல்லாம் தவிடுபொடியாகி விட்டதே! மீண்டும் இது போன்ற சந்தர்ப்பம்
இனி வாய்க்குமா? விடுமுறை வேறு வந்துவிட்டதே’, மனம்
வேதனையில் முனகியது.
பீட்டருக்கு அவள் ஏமாற்றம் கலந்த
முகமே விஷயத்தை விளக்கிவிட்டது. முகம் நன்றாக வீங்கி இருந்தது. நன்றாக அழுதிருக்கிறாள் என்பதை அவள் முகம் காட்டிக்கொடுத்தது,
அவளது துருப்புச் சீட்டு அழிந்து போனதில் வருத்தமிருக்காதா?
‘என்ன ஒடம்பு சரில்லயா?’
என்று சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.
‘நாளைலயிருந்து ஸ்கூல் லீவில்லையா? உங்களப் பாக்காம எப்படி இருக்கப்போறேன்னு இருக்கு. வீட்ல ரொம்ப போர் அடிக்கும். நான்
ஒங்க வீட்டுக்கு வரலாமா?’
‘அடி கள்ளி, இன்னுமா
நான் ஏமாந்துபோவேன்னு நெனக்கிற?’ - மனத்தில் கருவிக்கொண்டான் பீட்டர்.
முகத்தில் வருத்தத்தை முன்நிறுத்தினான். ‘ஸாரிப்பா! நாளைக்கே என் ஒய்ப்போட ஊருக்குக்
குடும்பத்தோட போறேன். லீவ் முடிஞ்சுதான் வருவேன்.
வெரி ஸாரி’.
கவிதாவிடம் அவன் சொன்ன ‘ஸாரி’
எல்லாவற்றுக்குமாக இருந்தது.
ஒரு பெரிய சூறாவளியிலிருந்து
தப்பித்த திருப்தி அவன் முகத்தில் படர்ந்தது.
மாலையில் தன் மனைவியைக் கடற்கரைக்கு
அழைத்துச் சென்றான்.
‘நான் ஒங்கிட்ட
மன்னிப்பு கேக்கணும் மரியா!’
‘என்ன . . . ! பாவ மன்னிப்பா?’
‘இல்ல பாவை மன்னிப்பு,
பிளீஸ் என்ன மன்னிச்சிடுடா’
அவன் தன்னைக் காலையில்
தேவை இல்லாமல் கோபித்துக்கொண்டதற்காக மன்னிப்பு கேட்கிறான் என்று நினைத்து மரியா அதனை லேசாக எடுத்துக்கொண்டாள்.
‘சரி சரி மன்னிச்சிட்டேன்.
விடுங்க’.
உண்மை என்னவென்று மரியா
அறிந்திருந்தால் இந்த ஜன்மம் முழுக்கத்
தன் கணவனை மன்னித்திருப்பாளா?
நூல் : நிர்மலா
கிருட்டினமூர்த்தி, ஆசைமுகம் மறந்துபோச்சே,
காரைக்கால் : விழிச்சுடர்ப்
பதிப்பகம், 2009, 66-102.
No comments:
Post a Comment