Friday, 2 August 2019

தொட்டுவிடத் தொட்டுவிட . . .


தொட்டுவிடத் தொட்டுவிட . . .

                அவன் அன்று மழையில் நனைந்துகொண்டே சென்றது. அவள் துவட்டிக்கொள்ள துண்டு கொடுத்தது, தலையைத் துவட்டாமல் அசட்டையாக நின்றது . . . அந்நேரம் பார்த்து அவனுக்கு உதவிபுரிய ஒரு தும்மல் வந்தது . . . உடனே அவள் பதறிப்போய் அவன் தலையைத் துவட்டிவிட்டது . . . வாஞ்சையோடு அவளை வைத்த கண் வாங்காது நோக்கியது . . . அவள் உடனே வெட்கப்பட்டு உள்ளே ஓடியது . . . அனைத்தும் ஸ்லோமோஷனில் மற்றும் ஒருமுறை டிஸ்பிளே ஆகி மறைந்தன.
            சே! இதெல்லாம் ஒரு விஷயமா? உப்பு சப்பு இல்லாமல் இருக்கிறதே! இதெல்லாம் ஒரு கதையா?
            சாதாரணமாகப் பார்த்தால் இதில் ஒன்றும் இல்லைதான். எல்லா மழைக் காலங்களிலும் வெளியில் செல்பவர் மழையில் நனைந்துவருவதும் வீட்டிலிருக்கும் அம்மாவோ, தங்கையோ, மனைவியோ, மகளோ தலையைத் துவட்டத் துண்டு எடுத்துக் கொடுப்பதும் எங்கும் சகஜம்தான்! ஆனால் கல்யாணம் ஆகாத ஒரு பருவப்பெண் தந்தை, உடன்பிறப்பு உறவு இல்லாமல் ஓர் ஆடவனுக்கு இதைச் செய்தால் அதுமட்டும் கல்லில் வடிக்கவேண்டிய காவியமாகிவிடுகிறதே!
            நமக்கு ஒன்று பிடித்துவிட்டால் அது சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும் மனம் அதனை நினைத்து நினைத்து மகிழ்வது ஆச்சரியம்தான். அவன்கூட அப்படித்தான் . . . நினைக்கும்போதே அவன் நெஞ்சம் இனித்தது. நெஞ்சம் முழுக்க அவள் நிரம்பி வழிந்தாள். ஸ்டில் போட்டோ போன்று அவனும் அவளுமாகப் பல்வேறு ஸ்டில்கள் அவன் மனத்தில் தோன்றித் தோன்றி மறைந்தன.
            பக்கத்தில் மனைவி பத்மா சலனமற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைத் தொட்டணைப்போமா என்று கைகளை எடுத்தவன் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
            மீண்டும் தன் நினைவுகளில் மூழ்கிக் கலக்க நினைத்தான். ஒருநாள் அவள் அவனை மதிய உணவுக்கு அழைத்திருந்தாள். அவனும் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றான். அன்று அவள் தந்தை தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்காகத் தூரமாகப் போயிருந்தார். அப்போதெல்லாம் செல்போன் வழக்கத்தில் இல்லை. அவன் பல்வேறு வேலைகளில் மூழ்கிவிட்டான். மாலையில்தான் வேலை ஒழிந்தது.  உடனே புறப்பட்டுச் சென்றவன் திகைத்து நின்றான். அங்கே அவள் எல்லா உணவு வகைகளையும் மேசைமேல் பரப்பிவைத்துவிட்டுச் சாப்பிடாமல் காத்திருந்தாள். அதைக் கண்டதும் அவன் மனம் நெகிழ்ந்துவிட்டது. எனக்காக இப்படிச் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருக்கிறாளே? என்மீது எவ்வளவு அக்கறை இருக்க வேண்டும்? எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்? என்று நினைத்து நினைத்துப் பரவசமானான்.
பத்மா சற்றே புரண்டு படுத்தாள். பத்மாவின் கை தன்னிச்சையாக அவன் உடலைச் சுற்றி வளைத்தது.
                'ஆணும் பெண்ணும் தொட்டுக்கிட்டா மின்சாரம் பாயுமாமே' என்று கிண்டலடித்தாள் தொலைக்காட்சியில் காதல் காட்சியைப் பார்த்துக்கொண்டே. 'நான் வேணுமன்னா தொடறேன். . . பார்!' என்று சொல்லிக் கொண்டே சட்டென்று அவள் கைகளைத் தொட்டும் தொடாமல் தொட்டான். மின்சாரம் பாயவில்லை. ஆனால் அவன் குறும்பு . . . அது மகிழ்ச்சியா? கோபமா? எதிர்பார்ப்பா? ஏமாற்றமா? அவளுக்குத் தெரியவில்லை. மௌனமானாள். 
                'சாரி ஏதோ விளையாட்டா தொட்டுட்டேன். மன்னிச்சிடு' என்றான் அவன். அவள் சகஜ நிலைக்குத் திரும்ப நெடுநேரமானது. அதன்பின் தொட்டுப் பேசிக்கொள்வதே அவர்களுக்குச் சகஜமாகிப் போனது.
            பத்மா ஏதோ கனவு கண்டிருக்க வேண்டும். லேசாக வாய் குழறினாள். தெளிவற்ற ஒலி வெளிப்பட்டது.
                'நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு நெனச்சேன்' என்று மகிழ்ச்சியைக் கண்களில் காட்டினாள் அவள்.
                'எப்படி கண்டுபிடிச்சே? காக்கா கத்துச்சா?'
                'இல்ல . . . கனவு கண்டேன்'.
                ' அப்படியா? அப்ப மிச்ச கனவையும் சொல்லிடு. இப்பவே பலிக்குமான்னு சொல்லிடறேன் . . .' என்றும் போல் அவன் தன் குறும்புப் பார்வையை அவள் மீது வீசினான்.
                'ஊகூம் முடியாது. நான் சொல்லமாட்டேன். நீங்க சிரிப்பீங்க . . .'  அவள் நாணத்தால் சிவந்தாள்.
            அடிக்கடி அவள் இப்படி அநியாயத்திற்கு வெட்கப்படுவது அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நிறைய ஆடவர்களுக்கு இப்படிப் பெண்கள் வெட்கப் படுவதையும் நாணத்தால் முகம் சிவப்பதையும் பார்க்க ஆசை. ஆனால் அவர்கள் மனைவி வெட்கப்பட்டால்தானே? முழுசும் நனைந்தபின்னே முக்காடு எதற்கு? தன்னையே அவனுக்குக் கொடுத்துவிட்டபிறகு அங்கே வெட்கப்பட என்ன இருக்கிறது? அவர்கள் என்ன டிராமாவா போடுகிறார்கள்! தேவையில்லாமல் வெட்கப்பட?
            அவன் கண்களுக்கு நாணத்தோடு கோணிக்கொண்டு நின்ற அவள் அழகாய்த் தெரிந்தாள். 'இவளை அப்படியே அணைத்துக் கொண்டால் என்ன? இன்னும் முகம் சிவக்குமோ?' மூளை ஆராய்ச்சி செய்தது.
                'அப்பா வீட்ல இல்ல, ஒரு கல்யாணத்துப் போயிருக்காங்க. ராத்திரிக்குத்தான் வருவாங்க'. அவள் சமயமறிந்து கூறினாள். இப்போதெல்லாம் தன்னை விட்டுவிட்டுத் தன் தந்தை இப்படி உறவினர்கள் வீட்டு விஷேசங்களுக்கெல்லாம் தவறாமல் சென்றுவர வேண்டும் என்று விரும்பினாள். அவர் மறந்துவிடாதிருக்க அவளே அழைப்பிதழ்களை எடுத்துவைத்து ஞாபகப்படுத்தவும் செய்தாள்.
                ' அப்ப இன்னிக்கு முகூர்த்த நாளா?' என்று கேட்ட அவன் குறும்புப் பார்வையில் ஆயிரம் கேள்விகள் தொக்கி நின்றன. அப் பார்வையில் தெரிந்த அர்த்தத்தை அவள் புரிந்துகொள்ளாதவளா? விரும்பாதவளா? வெட்கத்தோடு சட்டென எழ அவள் கால் நாற்காலியின் காலில் இடித்துக் கொண்டது.
                'அம்மா' என்று அவள் தன் காலைப் பிடிக்குமுன் அவன் கைகள் அக் கால்விரல்களை நீவிக்கொண்டிருந்தன. குறிப்பறிதல் என்பது இதுதானோ?
                'தொட்டால் ஷாக்கடிக்குமா?' அடித்தது. காலைத் தொட்டது மேலே மேலே தொடர்ந்து ஒரு முடிவுக்கு வந்தபோது முடிந்துபோன அந்தச் செயல் ஷாக்காகி மனத்தில் மெல்ல உறைத்தது.
            பத்மாவை அவன் அணைக்க அவள் மெல்லச் சிணுங்கினாள். பத்மாவின் மீதும் அவனுக்குக் காதல் ஒட்டி இருந்தது.
            அதற்குப் பிறகு அவன் அங்கு அடிக்கடிச் செல்வது வாடிக்கையானது. பலரது கண்களுக்கு வேடிக்கையானது. எந்த அத்துமீறலுக்கும் அவள் சிணுங்கியதில்லை. அவன் வரவேண்டும் என்பதற்காக அவள் பல ஆயத்தங்களைச் செய்துவைத்தாள். அப்பணிகளை நிறைவேற்ற வந்ததுபோல் அவர்கள் சந்திப்புகள் நிகழ்ந்தன. வீடும் கம்பெனியும் ஒன்றாக இருந்தன. தந்தை வெளியே செல்லும் நாட்களைக் குறிப்பாக உணர்த்துவாள். அவர் வீட்டிலிருந்தால் ஏதேனும் ஒரு வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு அதைச் செய்யச் செல்வதாக அடிக்கடி வெளிநடப்புகள் செய்தாள்.
            மணி பன்னிரண்டு முறை அடித்து நின்றது. தூக்கம் சற்றே கலைந்த பத்மா அவனைப் பார்த்து, 'இன்னுமா தூங்கலை?' என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு அவன் பதில்சொல்லும் முன்பாகவே தூங்கிப்போனாள்.
            அவன் அவளை முதன்முதல் சந்தித்ததை நினைத்துப் பார்த்தான். அவன் ஒரு கடையில் தன் விசிட்டிங் கார்டைக் காட்டிச் சில பொருட்களின் விலைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். எதேச்சையாக அங்கே வந்திருந்த அவள் ஆச்சரியப்பட்டுப் போனாள். 'உங்களைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன். எனக்குப் போட்டி நீங்கதான். ஒரு வகைல பாத்தா நீங்க என்னோட எதிரி. நாங்க எந்தக் கம்பெனிக்குக் கொட்டேசன் போட்டாலும் அங்க உங்க கம்பெனிதான் லோ கொட்டேசன் கோட் பண்ணி இருக்கறதாச் சொல்லி எங்களுக்கு வாய்ப்பு தர மாட்டேங்கறாங்க. உங்களால எங்களுக்கு ரொம்ப நஷ்டம். எங்கப்பா ரொம்ப நொடிச்சுப் போயிட்டார்' என்று மூச்சுவிடாது பேசிக்கொண்டே போனாள். அவள் தந்தையும் அவனைப் போன்றே மொத்தவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கிப் பெரிய கம்பெனிகளுக்கு சப்ளை செய்யும் ஏஜெண்ட் நிறுவனம் வைத்திருந்தார்.
            அவள் இளமையானவள், திருமணமாகாதவள் - தோற்றத்தில் தெரிந்தது. துணிச்சல் மிக்கவள், குடும்ப அக்கறை உள்ளவள் - அவள் பேச்சில் தெரிந்தது. அவள் தன்னை எதிரி என்று சொன்னாலும் தன்னை நண்பனாக்கிக்கொள்ள விரும்புகிறாள் - அவள் பார்வையில் தெரிந்தது.
                'அடடா ரொம்ப சாரிங்க! என்னால நீங்க கஷ்டப்படுவீங்கன்னு எனக்குத் தெரியாது! வெரிவெரி  சாரி. . . !'
            அவள் சொன்ன வார்த்தைகளை ஒருவேளை அவள் தந்தை சொல்லியிருந்தால் அவனுக்குக் கோபம் வந்திருக்கும். 'வியாபாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா' என்று அறிந்துகொள்ளாத அவருடைய முட்டாள்தனமான பேச்சால் எரிச்சல் வந்திருக்கும். இனியும் அந்தப் போட்டிக் கம்பெனியை அதிக வித்யாசத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற வேகம் பிறந்திருக்கும்.
            ஆனால் இப்போது அவ் வார்த்தைகளை முன்மொழிந்தது ஒரு பெண்ணாயிற்றே. பெண் என்றால் பேயே இரங்கும். அவன் எம்மாத்திரம்? அப்பாவைவிட அப்பா பெற்ற மகளின் துயருக்காகத் துன்புற்றான்.
                'இனிமே நாம எதிரிங்க இல்ல. . . பிரண்ட்ஸ்!'  எனச் சிரித்தான்.
                'அப்ப ஒன்னு பண்ணுவோம். இனிமே நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணணும். கொட்டேசன் போடும்போது எப்படி எப்படிப் போடணும்? மார்கெட்டிங் எப்படிப் பண்ணணும்? யார் யாரைப் பார்க்கணும்? . . . இப்படி எல்லாத்தையும் சொல்லித் தரணும். இனிமே எங்கப்பாவுக்கு பதிலா நான்தான் எல்லாத்தையும் பாக்கப்போறேன்! எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா?' கலகலப்பான அவள் பேச்சு பிடித்தது.
                'எதிரியிடமே உதவி கேட்கிறாள் . . . அசகாய சூரிதான் . . .' அவளுடைய நடை, உடை, பாவனை அனைத்திற்கும் மனம் நிறையவே மார்க் அள்ளிப்போட்டது. 'எவ்வளவு வெகுளியாக இருக்கிறாள்' அவள் அவனுக்கு வெகுளியாகத் தெரிந்தாள். இதே நாற்பது வயது கடந்த திருமணமான பெண்ணொருத்தி கேட்டிருந்தால் மனம் அவளைக் 'கைகாரி' என்று மதிப்பீடு செய்திருக்கும்.
                'என்கிட்டயே ஐடியா கேப்பாங்களாம், என்ன எதிர்த்து கொட்டேசன் போடுவாங்களாம். எல்லாத்தையும் அவங்களுக்கு விட்டுக்கொடுத்துட்டு நாங்க வாயில விரல வெச்சிக்கிட்டு சப்பிக்கிட்டு இருக்கணுமாம், என்ன கற்பனை!' என்று முகத்தில் கடுகு வெடித்திருக்கும்.
            போட்டிக் கம்பெனிகள் தங்கள் ரகசியங்களை வெளியிடக் கைகோர்ப்பது என்பது இயலாதது. அவ்விதி அங்கே தளர்த்தப்பட்டது. அவன் பூரணமாய் அவளுக்கு உதவிக் கை நீட்டினான். நீட்டிய கைகளை அவள் பத்திரமாகப் பிடித்துக்கொண்டாள். இனி அவள் காட்டில் மழை பெய்யப் போகிறது. அவளுக்குக் கசக்கவா செய்யும்?
            அவனை அழைத்துச்சென்று தன் அப்பாவிடம் அழகாக அறிமுகம் செய்தாள். ஒரு பெண்ணிடம் பழக அவள் அப்பாவின் ஆதரவும் கிடைத்துவிட்டது என்றால் பாதிச் சிக்கல் தீர்ந்தது என்று அர்த்தம்.
            அதன்பின் தன் கம்பெனிக்கு ஆர்டர்கள் கிடைப்பதைவிட அவள் கம்பெனிக்கு ஆர்டர் கிடைக்க வேண்டும் என்பதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டினான். அவள் முகம் மலர்ந்து இருப்பதைக் காணுகின்ற சுகம் ஒன்று போதாதா?
            அவன் சற்றே புரண்டு படுத்தான்.  தானும் பத்மாவும் திருமணத்தில் மாலைமாற்றிக்கொண்ட போட்டோ லாமினேஷன் செய்யப்பெற்று சுவரில் தொங்கியது. அதன்மீது அவன் கண்கள் ஒரு நிமிடம் நிலைத்தன.
            ஒருபக்கம் அவள், மறுபக்கம் பத்மா. இடையில் அவன். இந்தப் படம் சாத்தியமா? கற்பனை செய்யும்போது எல்லாம் சாத்தியம் என்பதுபோல்தான் தெரிந்தது.
            கண் குருடானவர்களின் அறிவு குருடுபடுவதில்லை. அவர்கள் தங்கள் அறிவால் தெளிவுபெறக்கூடும். ஆனால் குளிர் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பவர்களுக்கு நெருப்பு தெரியும் குளிர்ச்சியாக! காயும் சூரியன் குளிர்ச்சியாகத் தெரியும்! அவர்கள் காணும் நிறங்கள் மாறுபட்டுத் தெரியும். இந்த உலகையே அவர்கள் பிறழஉணர்ந்துகொள்ளத் தலைப்படுகிறார்கள்.  அவனும் அப்படித்தான்! தன் கற்பனைக்கேற்ப இந்தச் சமுதாயத்தைப் பிறழ உணர ஆசைப்பட்டான்.
            அவள் அவனோடு பழகிய சில நாட்களிலேயே நெடுநாள் பழகியவளைப்போல் நடந்துகொண்டாள். ஆதி காலந்தொட்டு எடுத்த அனைத்துப் போட்டோக்களின் ஆல்பங்களையும் அவனிடம் காட்டித் தன் உறவினர்களை அறிமுகப்படுத்தினாள். யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைக்கும் சட்டை போடாத தன் குழந்தைப் பருவப் போட்டோவை அவனிடம் காட்டி ஆனந்தம் கொண்டாள். அவன் அந்தப் படத்தைத் தன் பார்வையால் அளந்தபோது அவளுக்கு வியர்த்தது.
                'இவளுக்குப் பொருத்தமா ஒரு வரன் இருந்தா சொல்லுப்பா' அவள் அப்பா அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
                'ஆமாம், எல்லாம் நல்லாயிருந்தா ஜாதகம் பொருந்த மாட்டேங்குது. ஜாதகம் பொருந்துனா வரதட்சணை ஜாஸ்தி கேக்கறா. . . இந்தக் காலத்துல போய் குலம், கோத்ரம், அது, இதுன்னு அப்பா பாத்துண்டிருக்கார். லவ் மேரேஜ் பண்றவா இதெல்லாம் பாத்துண்டா இருக்கா?' என்று கூறும்போதே அவள் பார்வை கேள்வியோடும் விடையோடும் அவனைத் தொட்டது. 
                'மனசு ரெண்டும் பொருந்திட்டா அங்கே வயசு வித்யாசமோ வேறு எதுவுமோகூட குறுக்க நிக்காது. முதல்மரியாதையில சிவாஜிக்குக்  கல்யாணமாயிடுச்சின்னு தெரிஞ்சிருந்தும் ராதா எப்படி உருகிஉருகி லவ் பன்றா. அதுதான் அமர காதல் . . .' அப்பாவின் எதிரில் தன் கருத்தைக் கோடுகாட்டினாள்.
                'சரி சரி அசட்டுப் பிசட்டுன்னு ஏதாவது பேசித் தொனதொனக்காதே!  அவர் கிளம்பட்டும். நேரமாகுது. அவர் வீட்ல தேடுவா' என்று அப்பா அந்தப் பேச்சுக்கு அப்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
            அவரது இயலாமை தன் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்காமல் போனது. அவளைக் கல்லூரியில் படிக்கவைத்ததும் ஒரு குறையாகிப்போனது. படிக்காத அம்மாஞ்சிகளை அவள் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். தனக்கு அப்படியொரு மாப்பிள்ளை தேவையில்லை. கம்பெனியைப் பார்த்துக்கொண்டு நிம்மதியாகக் காலம் தள்ளுகிறேன் என்கிறாள்.
            அவன் தொடர்பு கிடைத்ததிலிருந்து கம்பெனி லாப திசையில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லா லாபகரமான ஆர்டர்களும் அவருக்கே வந்து குவிகின்றன. அதை அவனும் கூடஇருந்து முடித்துக் கொடுத்துவிடுகிறான். முடித்த கையோடு ஆர்டர்களுக்குரிய பணத்தின் காசோலை களையும் விரைவாக வாங்கிக்கொடுத்து விடுகிறான்.
            பணப்புழக்கம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் மனப் புழுக்கமும் ஏற்பட்டுவிட்டது. அவனைத் தன் மகள் பார்க்கும் பார்வையின் அர்த்தம் நன்றாகவே புரிகிறது. 'அவர்களுக்குள் ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ?' என்ற சந்தேகம் வேறு அடிக்கடி தலைநீட்டுகிறது. இதை எப்படி அவர் தன் மகளிடம் நேரடியாகக் கேட்பார். அவளுடைய அம்மா மட்டும் இன்று உயிரோடிருந்தால் இந்தக் கஷ்டமெல்லாம் அவருக்கு இருந்திருக்காது.
            எல்லா ஆர்டர்களையும் அவர்களுக்கே வாங்கிக் கொடுத்துவிட்டால் அவன் ஏஜென்ஸியின் கதி? அதைப் பற்றி அவனே கவலைப்படவில்லையே! தன் கம்பெனியை இழுத்து மூடிவிடாமல் இருக்க அவ்வப்போது எதற்கும் உதவாத சப்பை ஆர்டர்களை அவன் எடுத்துக்கொள்கிறான். அவளிடம் சேரும் பணம் எங்கே போய்விடப்போகிறது என்ற எண்ணம் அவனுக்கு. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு ஆர்டர்கள் வாங்கித் தந்தால்தானே அந்தச் சாக்கில் அவளை அடிக்கடி சந்திக்க முடியும்?
                'என்ன இது. . . ? இன்னும் தூக்கம் வரவில்லையே! வாழ்க்கையில் மேலே போகப்போகத் தூக்கம் வராதோ? பத்மா மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாள்!'.
            அவளுடைய அப்பாவிற்குத் தங்கள் நெருக்கம் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஆனால் அவர் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருக்கிறாரே? ஒரு சமயம் தன் மகள் மீது அபாரமான நம்பிக்கை வைத்திருக்கிறாரோ? இல்லை யென்றால் தன்னுடைய மகளின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்க வேண்டாம், எப்படியாவது அவள் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று இருக்கிறாரோ? அவள் முதல்மரியாதையில் சிவாஜி - ராதா காதலைப் பற்றிப் பேசியபோது அவர் முகம் கோபமாக இருந்ததா? தான் அதனைச் சரியாகக் கவனிக்காததற்காக இப்போது வருந்தினான்.  ஆனால் அவள் ஏன் இப்படி முதல் மரியாதை சிவாஜியைத் தனக்கு ஒப்புமை காட்டினாள். தனக்கென்ன சிவாஜி அளவிற்கா வயதாகிவிட்டது? பத்மாவைத் திருமணம் செய்துகொண்டு ஐந்தாண்டுகள் தானே ஆகின்றன. ஒரு சமயம் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதைத்தான் சுட்டிக்காட்டினாளோ?
            ஏற்கெனவே தனக்குத் திருமணமாகிவிட்டதை அவள் ஒருபொருட்டாகவே மதிக்கவில்லையே! அப்படி என்ன தன்னிடம் இருக்கிறது? தன் இளமையா? தன்னிடமிருக்கும் திறமையா? பணமா? அழகா? தன் அந்தஸ்தா?
            அவளையும் பத்மாவை மணந்துகொண்டதுபோல் உற்றார் உறவினரைக் கூட்டி மணந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது? பகிரங்கமாக அவளை வெளியே அழைத்துச் செல்ல முடியுமா? அதையெல்லாம் இப்பொழுது யோசிப்பானேன்? இவற்றையெல்லாம் யோசிக்க வேண்டிய அவளே .கே. சொல்லும்போது அவன் ஏன் தேவையில்லாமல் மண்டையைக் குடைந்துகொள்ள வேண்டும்? நடப்பதுபோல் நடக்கட்டும்.
            அவளுக்குத் தான் வேண்டும். அவளுக்கென்ன இது புதிதா? அவளுடைய அப்பாவிற்கும் ஒரு தொடுப்பு இருக்கிறதே! அவர்கள் கம்பெனியைப் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டு எப்பொழுதும் விசுவாசமாய்! அதைப் பார்த்தும் பட்டும்படாமல் இருப்பவள்தானே அவள். அவளுக்கு இந்தச் சமுதாயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாதா என்ன?
            ஆனால் அவன்தான் இரட்டை மாட்டு வண்டியை ஒழுங்காகச் செலுத்த வேண்டும்.
            அவளைப் பற்றி பத்மா அறிந்துகொள்ளாமல் வாழ்நாள் முழுக்கக் காப்பாற்ற முடியுமா? இப்போது 'சரி' என்று சொல்லிவிட்டுத் தாலி கட்டியதும் முழு உரிமையும் தனக்கே வேண்டும் என்று அவள் பிடிவாதம் பிடித்தால்? இப்படி கன்னாபின்னாவென்று எழும் கேள்விகளுக்கு விடைகாணப் பிடிக்காமல் அவற்றையெல்லாம் புறந் தள்ளினான் அவன்.
நாளைக்கு இரண்டு மணிக்குள் ஒரு முக்கியமான கொட்டேசன் போடவேண்டும். அதுவும் அவள் கம்பெனிக்கு. அந்த ஆர்டர் கிடைத்துவிட்டால் நிறைய லாபம் வரும். அந்தச் சிந்தனை ஒரு நிமிடம் அவன் நினைவுகளை அறுத்து உள்ளேவந்து போனது. மீண்டும் பழைய நினைவுகள் ரீகேப் ஆகி  இறுதியில் வந்து நின்றது.
            நாளைக்கு அவளும் தன் வாழ்க்கைக்கு ஒரு முடிவு கூறுமாறு கூறியிருக்கிறாள். . . அதுவும் நல்ல முடிவாக. . .
            எதைக் கூறுவது?
     அதைப் பற்றி என்றாவது தெரிந்து விட்டால் பத்மா என்ன முடிவெடுப்பாள்?
தூக்கம் அவனைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றது . . .
(2008)

No comments:

Post a Comment