முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 11
நெடுநேரம் தூக்கம் வராமல் பாயில் புரண்டாள் சுந்தரி. எங்கோ ஓரிடத்தில் பெண் பூனையை விடாது
அழைக்கும் ஆண் பூனையின் ஒலி
கேட்டது. நெடுநேர முயற்சிக்குப் பின்னர் பெண் பூனை இணங்கிவிட்டது
என்பதை அறிந்தாள். அவர்கள் வீட்டுக் கடிகாரம் பன்னிரண்டு முறை அடித்துவிட்டு ஓய்ந்தது.
அதன் டிக்டிக் சத்தம் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தது.
இத்தனை நாள் பழகிய சந்திரனுக்கு
ஏதாவது நல்லது செய்தால் என்ன? அந்த ஆண்பூனைக்கு இந்தப்
பெண் பூனை ஏதாவது உதவி
செய்தே ஆகவேண்டும்.
சற்றே கண்ணயர்ந்ததில் அவள்
கனவில் மீண்டும் திருப்பதி பாலாஜி எழுந்தருளினார்.
'சுந்தரி, சந்திரனுக்கு நிச்சயமாகக் குழந்தை உண்டு.'
'அதெப்படி பிறக்கும்? அவருடைய மனைவிதான் அந்தச் சக்தியை இழந்துவிட்டாளே!'
'அதனாலென்ன. நான் உனக்கு அந்தச்
சக்தியைக் கொடுக்கிறேனே! வேண்டுமானால் நீ முயற்சித்துப் பாரேன்!'
'எப்படி?'
'கட்டிக்கொண்டால்தான் மனைவியா?'
'அவர் ஏற்றுக்கொள்வாரா?'
'வேண்டுமானால் என்னைத் துணைக்கு அழைத்துக் கொள்ளேன். என் பெயரைப் பயன்படுத்திக்கொண்டால்
நிச்சயம் அவன் வழிக்கு வருவான்.
மந்திரம் கால், மதி முக்கால்!
எல்லாம் உனக்குத் தெரியாததா என்ன?'
கல்யாணம்தான் கட்டிகிட்டுப் பெத்துக்கலாமா? இல்ல பிள்ள குட்டி
பெத்துக்கிட்டுக் கட்டிக்கலாமா? - யோசித்தாள் சுந்தரி. முதல்வழியைச் சந்திரன் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டான். அந்த வழியில் அவனை
மடக்க முடியாது. சமுதாயத்தில் மனைவி, சுற்றம், நண்பர்கள் போன்றோராலும் அதிக சிக்கல்கள் எழும்.
இரண்டாம் வழிதான் அவனை வீழ்த்தச் சரியான
வழி.
முன்பெல்லாம் இரண்டாம் தாரமாக ஆகப் போவதில்லை என்று
பிடிவாதமாக நின்றவள் ஆயிற்றே? இப்போது அந்தக் கொள்கையை எப்படித் தளர்த்திக் கொள்வது?
அந்தக் கொள்கை இருபது வயதில் சரியாக இருந்திருக்கலாம்? ஆனால் இனியும் அப்படி நினைத்துக் கொண்டு காலம் கடத்த முடியுமா? வெறும் ஆயாவாக இந்தப் பள்ளியில் வேலை பார்த்துத் தன்
காலத்தை ஓட்டிவிட முடியுமா? எல்லாம் உடம்பில் தெம்பு இருக்கும் வரைதான் வேலைசெய்து பிழைக்கலாம். என்னதான் அண்ணன், அண்ணி, அவர்கள் குழந்தைகள் என்று சொந்தங்கள் இருந்தாலும் கையில் பசையும் உடலில் வலிவும் உள்ளவரைதான் எல்லாம். தன் வயதான காலத்தில்
யார் சோறு போடுவார்கள்? வீடுவீடாகப்
பிச்சையா எடுக்க முடியும்?
தன் முதுமை வாழ்க்கையில்
தன்னைப் பாதுகாக்க ஒருவர் வேண்டும். தேவையான அளவிற்குச் சொத்து சுகமும் வேண்டும்.
வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. வாய்ப்பு ஒருமுறைதான் கதவைத் தட்டும். இன்னும் யோசித்துக் கொண்டிருந்தால் இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலே போய்விடும்.
இரண்டாம் தாரம் என்றாலும் தான் ஒரு அன்றாடங்
காய்ச்சியைப் போய்க் கட்டிக்கொள்ளப் போவதில்லையே!
சந்திரனுக்குக் கார், பங்களா, சொத்து எல்லாம் இருக்கின்றன.
வயது?
தான் மட்டுமென்ன பதினாறு
வயது பருவப் பெண்ணா? முப்பது வயதைக் கடந்துதானே நிற்கிறாள்.
தன்னைவிட அவருக்குக் கொஞ்சம் வயது அதிகம் என்றாலும்
பார்ப்பதற்கு இன்னும் இளமையாகத்தானே தெரிகிறார். வயதில் குறைந்தவர்கள் எத்தனைபேர் பார்ப்பதற்கு அவரை விட முதியவர்களாகத்
தெரிகிறார்கள்?
மீசை சற்றே நரைத்திருக்கிறது;
கருப்பு மை அடித்துவிட்டால் போகிறது!
முதல் மனைவி?
அவள் தான் மலடியாயிற்றே!
இனி அவளுக்குக் குழந்தை பிறக்காது என்பதும் நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. அவளை மெதுமெதுவாக அப்புறப்
படுத்துவதென்பது தன்னைப் பொறுத்தவரை எளிதான விஷயம். சற்றே பொறுமையும் கூடுதல் நடிப்பும் தேவைப்படும்.
சந்திரன் மனத்தில் தனக்கென பெரிய இடமிருக்கிறது. அதில் அவள் ஆடலாம்; பாடலாம்;
அவன் கண்களைக் கட்டிவிட்டுக் கண்ணாமூச்சி விளையாடலாம். அவனால் கண்டுபிடிக்கவே முடியாது.
ஏன் முடியாது?
ஆமாம். முடியாது. இதென்ன சினிமாவா?
சினிமாவில்தான் நெடுநாள் வில்லத்தனத்தை எப்படியாவது கதாநாயகனுக்கு விளக்கிவிட வேண்டும் என்று வில்லி அங்கே கதாநாயகன் இல்லை என்ற நம்பிக்கையில் யாரிடமாவது
தன் வில்லத்தனத்தை விளக்கிக் கொண்டிருப்பாள். அங்கே மறைந்திருக்கும் கதாநாயகன் அவள் கூறுவதைக் கேட்டு
'என் மனைவிக்குத் துரோகம் இழைத்துவிட்டேனே! நான் மகா பாவி'
என்று கூவிக்கொண்டு இதயத்தைப் பிடித்துக்கொண்டு வீழ்ந்து விடுவான். பின்னர் எல்லாச் சொத்தையும் அந்த வில்லி அபகரித்துக்
கொள்வாள். அப்படிக் கதாநாயகன் வில்லியை அறிந்துகொண்டால்தான் கதை முடிவு நன்றாக
இருக்கும் என்று இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள்.
கதை வேறு, வாழ்க்கை
வேறு! வாழ்க்கையில் தன்னால் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும். பாலுக்கும் காவலாகப் பூனைக்கும் தோழனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முடியும். கொஞ்சம் சிரமந்தான். அதற்காகப் பார்த்தால் காரியம் கெட்டுவிடும்.
சந்திரன் தன் வலையில் பூரணமாக
விழுந்திருக்கிறான். அவன் எழ முயற்சிக்கும்
போதெல்லாம் அவனுக்குக் கை கொடுப்பதாக நடித்து
கீழே படுக்க வைத்துவிட வேண்டும். அவனால் உண்மையை உணர்ந்து கொள்ளவே முடியாது.
அவன் மனைவி மீது
தானும் அன்பைப் பொழிவதாகக் காட்டிக்கொள்ள வேண்டும். அவன் மீது தன்
ஒட்டுமொத்த வாழ்வையும் தியாகம் செய்துவிட்டதாக நடிக்க வேண்டும். தனக்குச் சொத்து வேண்டாம், கௌரவம் வேண்டாம், வசதிகள் வேண்டாம், நல்ல பெயரும் வேண்டாம்
என்று அனைத்தையும் தியாகம் செய்து விலகுவதாகக் காட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் முற்றிலுமாக விலகிவிடக் கூடாது. யார் கண்ணிற்கும் முக்கியமாகச்
சந்திரன் கண்ணிற்குப் புலப்படாமல் சூத்திரக் கயிறைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்.
கணவனுக்கும்
மனைவிக்கும் தன் இடையீட்டால் நிச்சயம்
சண்டை வரும். ஆனால் சந்திரன் மீது தான் பொழியும்
அன்பால் அவனது சிந்தனைத்திறன் மொத்தமாக மழுங்கடிக்கப்பட வேண்டும்.
அவன் மனைவி என்ன
சொன்னாலும் என்னையே பெரிதும் காப்பாற்ற நினைப்பான். என்னிடமிருந்து அவனைப் பிரிக்க அவள் போராடும் மனப்
போராட்டம் அவள் மீது அவனுக்கு
எரிச்சலைத்தான் உண்டுபண்ணும். அவள் கோபத்தால் அவனை
விட்டு விலகுவாள். எனக்கு அது போதுமே! அட்டை
எப்படி சின்ன ஓட்டையில் மெதுமெதுவாக நுழைந்து பின்னர் பெரிய மரத்தையே பட்டுப்போக வைத்துவிடுகிறதோ அதுபோன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்படும் விலகலை நான் சாதகமாக்கிக்கொண்டு மெதுமெதுவாக உள்ளே
நுழைந்து முதல் மனைவியாகிய மரத்தைப் பட்டுப்போகச் செய்து விடுவேன்.
பட்டுப்போன சொத்தை மரத்தைச் சந்திரன் எத்தனை காலந்தான் நினைத்து வருந்துவான். பின்னர் அவனே அம் மரத்தை
வெட்டிச் சாய்த்துவிடுவான். அவன் கைகளைக்கொண்டே அவன்
ஆசையாய் வளர்ந்த அந்த மரத்தை வெட்டச்
செய்ய என் அறிவாகிய கத்தியை
நான் கூர்மையாக்க வேண்டும்.
(தொடரும்)
No comments:
Post a Comment