Sunday, 25 August 2019

பணம் என்னடா பணம் பணம்


பணம் என்னடா பணம் பணம்
            பாக்கியம் இன்று தனிமரமாக நிற்கிறாள். அவளுக்குத் தேவையெல்லாம் மூன்றுவேளை சோறும் கட்டிக்கொள்ள இரண்டு புடவைகளும்தான். தலை நரைக்கத் தொடங்கிவிட்டது. இனிமேல் தன் கற்புக்குப் பெரிதும் ஆபத்து வந்துவிடப் போவதில்லை. அதனால் படுத்துக்கொள்ள ஏதோ ஒரு வீட்டுத் திண்ணை போதும்.
            இருந்தாலும் இப்போது அவள் தங்கிக்கொள்ள முன்னூறு ரூபாய் வாடகையில் ஒரே அறைகொண்ட ஓட்டுவீடு இருக்கவே இருக்கிறது. ஏதோ கையில் தெம்பு இருக்கிறவரை உழைத்துச் சம்பாதித்து வாடகை கொடுக்கலாம்.
            தெம்பும் திராணியும் அற்றுவிட்டால் மேலே சொன்ன வழிதான். ஏதாவது ஒரு வீட்டின் திண்ணைதான்.
            அவள் தலையெழுத்து அதுதான் என்று சொல்ல முடியாது.
            அவள் முன்னே விறகடுப்பு எரிந்து கொண்டிருந்தது. ஒரு சின்ன அலுமினியப் பாத்திரத்தில் உலை கொதித்துக் கொண்டிருந்தது.
            அவள் கையில் ஒரு பத்திரத்தை வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
            வேலங்குடி மேலவீதியில் வசிக்கும் திரு முனுசாமியின் மகன் பொன்னுச்சாமி முதலாவது நபர்.
            காரனோடை எண் 15 இரண்டாவது சந்தில் வசிக்கும் பொன்னுச்சாமியின் மகளும் தேவேந்திரன் குமாரர் ஞானசேகரன் மனைவியுமாகிய பாக்கியம் இரண்டாவது நபர்
என்று தொடங்கி,
            அறுபதுக்கு நாற்பது நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் சதுர அடிகொண்ட ஆர்.சி.சி. கல் கட்டிடம் பாக்கியத்திற்காக சுய சிந்தனையோடு எழுதிக்கொடுத்த உயில் . . .
            இன்றைய மதிப்பு ரூபாய் பத்து லட்சம்
என்று இருந்தது.
            அந்த உயிலைத் திரும்பவும் படித்துப் பார்த்தாள் பாக்கியம்.
            பத்து லட்சம் என்பது சாதாரணமா?
            அங்கேயே போய்விட்டால் ஏதோ சாப்பாட்டுக்கு மட்டும் வழிசெய்து கொள்ளலாம்.
            அந்த வீட்டை வாடகைக்கு விட்டால் மாசம் இரண்டாயிரம் சுளையாகக் கிடைக்கும்.
            இரண்டு லட்சம் போக்கியத்திற்கு விட்டால்கூட அந்தப் பணத்தை வங்கியில் போட்டுவிட்டு வட்டிப் பணத்தை வாங்கி ஜீவனம் செய்யலாம்.
            அதுவும் வேண்டாம் என்றாலும் அந்த வீட்டை மனைக்கட்டோடு பத்து லட்சத்திற்கு விற்றுவிட்டு வங்கியில் போட்டுவிட்டால் இருக்கிறவரை நிம்மதியாக இருக்கலாம்.
            இந்த வழிகளில் ஒன்றையுமே பாக்கியம் செய்வதாகக் காணோம்.
            பொன்னுசாமியின் ஈமச்சடங்கிற்கு வந்த சுற்றமும் நட்பும் இப்படியெல்லாம் பேசிக்கொண்டார்களே அன்றி பாக்கியம் எதையும் நினைத்துப் பார்க்கவில்லை.
            அவள் அம்மா சிவகாமி சென்ற வருடம்தான் போய்ச் சேர்ந்தாள். தனிக்கட்டையான பாக்கியத்தைத் தன்னோடு வந்து இருக்குமாறு பொன்னுச்சாமி எவ்வளவோ வற்புறுத்தினான். அவள்தான் கேட்கவில்லை.
            அவள் தனிக்கட்டை ஆனது எதனால்?
            கல்யாணமாயி பத்து வருஷமாச்சி. இன்னும் ஒரு புழு பூச்சி இல்ல. அங்கலாய்த்துக் கொண்டார்கள் அவளுடைய புகுந்த வீட்டில்.
            அவளும் என்னென்னவோதான் செய்து பார்த்தாள். அரசமரமும் கைகொடுக்கவில்லை. ஆறுகால பூசையும் பலிக்கவில்லை.
            கடைசியில் எப்படியாவது குழந்தை பெற்றே தீருவது என்று பெரிய பேர்போன மருத்துவமனைக்குச் சென்றாள்.
            பரிசோதித்த மருத்துவர், ‘எப்படியாவது கொழந்த பொறக்க வழிசெஞ்சிடலாம். கொறஞ்சது ரெண்டு லட்சமாவது செலவாவும். பணத்தத் தயார் பண்ணிட்டு வாங்க’, என்றார்.
            பாக்கியம் தன் பெற்றோரிடம் சென்று கையைப் பிசைந்தாள்.
            ஞானசேகரன் பாக்கியத்தைக் கட்டிக்கொண்டது முதலாக, ‘இதை வாங்கிவா, அதை வாங்கிவாஎன்று சராசரி ஆடவரைப்போல நச்சரித்தது கிடையாது. மாமனார் வீட்டிற்குப் போனாலும் அவன்தான் செலவுசெய்வான். அவன் தன்மானப் பேர்வழி.
            அதுவே பாக்கியத்தின் பெற்றோர்க்கு வசதியாகப் போய்விட்டது. அவர்களுக்கு வரும் ஓய்வூதியத்தில் கால்வயிறும் அரைவயிறும் சாப்பிட்டுக் காசை மிச்சப் படுத்திச் சேர்த்து வைப்பதில் ஏதோ தனிச்சுவை கண்டு விட்டார்கள். அத்தியாவசிய செலவுக்குக்கூட அவர்கள் தம் பணத்தை வெளியில் எடுத்தது கிடையாது. பணத்தைச் சேர்த்துச் சேர்த்து வங்கியில் போட்டு வட்டியைக் குட்டிபோடவைத்து பத்திரங்களாக்கிப் பெட்டியில் வைத்துப் பத்திரப்படுத்துவதே அவர்கள் பொழுது போக்காகிவிட்டது.
                ஒரு பொண்ணுதான்னாலும் இப்பவே சொத்தக் கொடுத்துடாத. பொறவு வயசான காலத்துல கால் வயித்துக் கஞ்சி யாரும் ஊத்தமாட்டாங்க. சொத்து இருக்கற வரதான் மதிப்பு மருவாத எல்லாம்!’ என்று காசில்லாமல் கிடைத்த அறிவுரைகளைச் சிரம் மேற்கொண்ட பொன்னுசாமி தன் பெண்ணின் வாழ்க்கையைவிட பொன்னிற்கே அதிக முக்கியத்துவம் அளித்தான்.
            காசு சேர்ப்பதில் இருந்த பெருமிதம் ஒன்றே பொன்னுசாமிக்குப் போதுமானதாக இருந்தது. தன் மகளுக்கும் மருமகனுக்கும் இப்போதே கொடுத்தால் காசு வீணாக்கிப் போய்விடும் என்பது அவனது கணிப்பு. அவனைப் பொறுத்தவரை பணம் என்பது சேர்த்து வைப்பதற்கு உரியது; செலவு செய்வதற்கு அல்ல.
                கோயில் கொளம்னு போய்வந்தா கொழந்த தானா பொறக்கும். அதுக்குப்போயி லட்சக்கணக்குல யாராச்சும் செலவு செய்வாங்களா? இதென்ன கூத்தாயிருக்கு?’ - சிவகாமி தன் மகளிடம் சொல்லிவிட்டு அசட்டையாக இருந்தாள். தங்கள் சொத்து மகளின் மருத்துவச் செலவினால் குறைந்துவிடுவதில் அவளுக்கு விருப்பமில்லை. அவள் பங்குக்குச் செய்ததெல்லாம், அதிக காசு செலவில்லாமல் கோயிலைச் சுற்றுவதும் நெய்விளக்கு ஏற்றுவதும் எல்லாக் கடவுளிடமும் தன் மகளுக்குக் குழந்தைப்பேறு தருமாறு மனுப் போடுவதும்தான்!
            வருடங்கள் கரைந்தன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான் ஞானசேகரன். இனி, பாக்கியத்திற்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்ட பிறகு வேறுவழி ஏதாவது இருக்கிறதா என்று சிந்தித்தான்.
            குழந்தை பெற்றுக்கொள்ள இயலாதவன் என்னும் அவப்பேறு அவனுக்குச் சகிக்கமுடியாததாக இருந்தது.
            நம்மை நோக்கி எழுகின்ற எத்தனையோ வினாக்களுக்கு விடை தெரியாதபோது - விடை தர முடியாதபோது யாரும் வருந்துவது கிடையாது. ‘கொழந்த இருக்கா?’ என்று ஆடவனை நோக்கிக் கேட்கப்படும் வினாவிற்கு மட்டும்இருக்குஎன்ற பதிலைக் கொடுத்தால்தான் அவன் வாழ்க்கைத் தேர்வில் 'பாஸ்' பண்ணியதாக அர்த்தம் என்று நினைத்துக் கொள்கிறான்.
            ஞானசேகரனுக்கு ஏதோ ஒரு சுமாரான வருமானம் தரக்கூடிய வேலை இருந்தது. அவனுக்கு முந்தானை விரித்துக் குழந்தை பெற்றுத்தரும் பெண்களுக்குப் பஞ்சமா?
            ஒருத்தி வந்தாள். குழந்தை பாக்கியம் பெற்றாள். குழந்தை பெறாத பாக்கியம் அபாக்கியவதி ஆனாள்.
            குழந்தை பெற இயலாதவள் என்ற ஒரே காரணத்திற்காக இத்தனை நாள் தன்னோடு படுத்து தன்னோடு எல்லாம் என்று நினைத்து வாழ்ந்த ஒரு பெண்ணைக் கறிவேப்பிலைக் கொத்து போன்று தன் வாழ்க்கையிலிருந்து எளிதில் எடுத்து எறிந்துவிட எப்படி இந்த ஆடவரால் முடிகிறது?
            ஏதோ ஒப்புக்குத் தானும் ஒரு மூலையில் தன் கணவன் வீட்டில் முடங்கிக் கிடப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்? இத்தனை வருட தாம்பத்ய வாழ்க்கை பாக்கியத்திற்குக் கசந்துவிட்டது.
            சே! என்ன வாழ்க்கை இது? கொள்கைப் பிடிப்பில்லாத ஒரு வாழ்க்கை! இதற்காகவா மனிதன் தேடித்தேடி அலைகிறான்? பொருத்தமான மணமகன் எங்கே, மணமகள் எங்கே என்று தேடித்தேடி செய்யும் திருமணம் எதற்காக? துறவியின் பற்றற்ற நிலை அவளுள் தலைநீட்டியது.
            தன் கணவனைவிட்டுப் பிரிந்து கால்போன போக்கில் நடந்து இப்போது இருக்கின்ற ஜாகைக்கு வந்து சேர்ந்தாள்.
            பாக்கியத்தின் பெற்றோர் அழுதார்கள், அரற்றினார்கள், ஆர்ப்பரித்தார்கள். காரியம் கைநழுவி போய்விட்ட பிறகு என்னசெய்து என்ன பயன்?
                நீ எங்களோட வந்துடும்மா’ - மன்றாடினாள் தாய்
                என்ன பேசாம விட்டுடுங்க. என் வழிய நான் பாத்துக்கறேன். எனக்குச் சோறுபோட்டா உங்க சொத்து கொறஞ்சிப்போயிடும். நீங்க போய் உங்க சொத்த பத்திரமா காபந்து பண்ணுங்க’ - கடுகடுத்தாள் பாக்கியம்.
            சொத்தைப் பூதம்போல் காத்த இருவரும் அதனைத் தங்களோடு மேலுலகத்திற்கு எடுத்துச் செல்லமுடியாமல் பூமியில் விட்டுவிட்டுத்தான் சென்றார்கள் - அதற்கான உயிலையும்.
                எந்தப் பணம் ஆபத்திற்குப் பயன்படவில்லையோ அதனைப் பணமாக நாம் எண்ணமுடியாது. அதுவெறும் காகிதம்தான். தனக்குத் தேவை ஏற்பட்டபோது உதவாத சொத்தின்மீது பாக்கியத்திற்கு வெறுப்புதான் ஏற்பட்டது.  அந்த வீட்டிற்கான உயில் பத்திரத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்துத் தன் முன்னால் எரிகின்ற அடுப்பில் போட்டாள்.
            இனி அந்த வீட்டை யாரும் பராமரிக்க மாட்டார்கள். அக்கம் பக்கத்தினர் யாரும் அதனை உரிமை கொண்டாட முடியாது. என்றேனும் அப்பொருளுக்கு உரியவர்கள் வந்துவிடுவார்கள் என்று எண்ணிக் கொள்வார்கள்.
            அங்கே கோட்டானும் ஆந்தையும் வந்து குடியேறட்டும். பாழ்பட்ட அந்த வீட்டில் காலிப் பேர்வழிகள் குடித்துவிட்டுக் கும்மாளம் போடட்டும். அந்தச் சொத்திற்கு அவள் தரும் தண்டனை அதுதான்!

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி,  ஆசைமுகம் மறந்துபோச்சே,  காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2009,  119-125 .

No comments:

Post a Comment