Monday, 5 August 2019

பெருங்கடுங்கோவின் உவமைத்திறன்


பெருங்கடுங்கோவின் உவமைத்திறன்
                மொழிப்புலப்பாட்டு உத்திகளில் சிறப்பிடம் பெற்றமைவது உவமையாகும். கவிதைகளில் இதன் பயன்பாடு மிகத் தொன்மைவாய்ந்தது என்பதும் எல்லா மொழிகளிலும் இயல்பாகக் காணப்பெறுவது என்பதும் உலக இலக்கியங்களைப் பயிலும்போது அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வகையில் கலித்தொகையில் தாம் பாடிய பாலைத்திணைப் பாடல்களில் பெருங்கடுங்கோ உவமைகளைக் கையாளுகின்ற தன்மையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
உவமைக் களன்
                உவமைகள் வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கின் அடிப்படையில் எழும் என்று தொல்காப்பியர் வகுத்துரைக்கின்றார். பாலைபாடிய பெருங்கடுங்கோவின் உவமைகள் யாவும் மேற்கூறியவற்றின் அடிப்படையில் அமைவதோடன்றி தொன்மம் உள்ளிட்ட பல்வேறு கூறுகளையும் களனாகக் கொண்டமைகின்றன.
தொன்ம உவமை
            தொன்மங்கள் என்பவை தொன்றுதொட்டு மக்கள் பயன்பாட்டில் வழங்கி வருவனவாகும். பெருங்கடுங்கோ பல்வேறு தொன்மக்கதைகளைத் தம் பாடல்களில் உவமானமாக எடுத்தாளும் தன்மையைக் காணமுடிகிறது.
            தலைவியின் முகம் மதிபோன்று இருந்தது. பசலை காரணமாக அம் முகம் பொலிவிழந்தது. எனவே, முகத்திற்கு மதியை உவமிக்கக் கருதிய ஆசிரியர் பசலைபாய்ந்த முகத்திற்கு இராகு என்னும் பாம்பினால் பற்றப்பட்ட திங்களை உவமை காட்டுகிறார். கிரகணத்தின்போது திங்களைப் பாம்பு விழுங்கும் என்ற தொன்மச் செய்தியை,
தீங்கதிர் மதியேய்க்குந் திருமுக மம்முகம்
பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால் (14.16-17)
என்னும் அடிகளில் அவர் உவமையாக எடுத்துரைக்கிறார்.
            பொருள் விளக்கத்திற்காக ஆளப்படுதல் உவமையின் இன்றியமையாப் பயனாகும். எனினும் தொன்மச் செய்திகளை எடுத்தாளும்போது சொல்லப்படும் பொருள் அறியப்பட்டதாகவும் தொன்மச் செய்தி கண்டறிய இயலாத தாகவும் அமைந்துவிடுகிறது. அதனால் உவமானத்தால் உவமேயத்தில் பொருள்விளக்கம் ஏற்படுவதைக் காட்டிலும் உவமேயத்தால் உவமானம் விளக்கம் பெறுகிறது. காட்டாக, மாயவள் மேனிபோல் தளிர்ஈன (34.3) என்று தளிரின் நிறத்தைத் திருமகளின் நிறம்போன்று இருந்தது என்னும்போது உவமேயத்தால் உவமானம் விளக்கமுறு வதைக் காணமுடிகிறது.
கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல் மராத்து
நெடுமிசைச் சூழு மயிலாலுஞ் சீர (35.1-2)
என்று ஆசிரியர் கூறும்போது மரத்தின் உயர்ந்த கிளையில் மயில்கள் அமர்ந்திருத்தலாகிய உவமேயத்தால் துழாய்மாலை அணிந்த பலராமனின் தோற்றமாகிய உவமானம் விளக்கமுறுகிறது எனலாம்.
                சிவபெருமான் திரிபுரம் எரித்தமை (1.1-8), கௌரவர் சூழ்ச்சியால் பாண்டவர்கள் தங்கியிருந்த அரக்குமாளிகை தீப்பிடித்து எரிந்தமை (24.1-11) முதலான பல்வேறு தொன்மச் செய்திகள் பெருங்கடுங்கோவால் உவமைகளாக எடுத்தாளப்பெற்றுள்ளன.
                இத்தகைய தொன்மங்கள் உவமைகளாக ஆளப் படுவதை நோக்கும்போது அவை பொருள் விளக்கமுறுதல் என்னும் பயன்பாட்டைக் கொண்டிருப்பதைவிட குறிப்பிட்ட தொன்மங்களை இலக்கியப்படுத்தும் ஆசிரியரின் குறிக்கோளை எதிரொலிப்பதை அறியமுடிகிறது.
தொழில் உவமை
                தொழில்கள் தொடர்பான செய்திகள் பலவற்றை உவமைகளாகப் பெருங்கடுங்கோ எடுத்தாள்கிறார்.
                பாலைநிலத்து வெம்மையால் சோர்ந்த யானை நிலத்திடை மருப்பூன்றி இருந்த காட்சியைக் குறிப்பிடும் பெருங்கடுங்கோ, கலப்பைகொண்டு ஏர்உழும் காட்சியை ஒப்புமை காட்டுகிறார்.
. . .                                          ஞாயிறு
கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினந் தெறுதலி
னுறலூறு கமழ்கடாஅத் தொல்கிய எழில்வேழம்
வறனுழு நாஞ்சில்போன் மருப்பூன்றி நிலஞ்சேர (7.2-5)
என்னும் அடிகளில் இயற்கைக் காட்சியை உணர்த்துவதற்கு உழவுத்தொழில் சார்ந்த செய்தி ஒன்றைப் அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.
கேள்வி யந்தணர் கடவும்
வேள்வி யாவியின் உயிர்க்குமென் னெஞ்சே (35.25-26)
என்னும் அடிகளில் உயிர்மூச்செறிவதற்கு அந்தணர் இயற்றும் வேள்வியில் எழுகின்ற புகையை ஒப்பிடுகிறார் ஆசிரியர்.
அரசுசார் உவமை
            கலித்தொகையில் பெருங்கடுங்கோ பயன்படுத்தும் உவமைகள் பிறர் பயன்படுத்தும் உவமைகளிலிருந்து வேறுபட்டமைகின்றன. அவர் அரசராக இருந்த காரணத்தால் அரசு சார்ந்த பல செய்திகளை உவமைகளாக எடுத்தாளும் போக்கைக் காணமுடிகிறது.
                ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோற்
            பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண் டமைவாளோ? (4.12-13)
என்னும் பகுதியில் தலைவன் பிரிவால் பசப்பேற்பட்ட தலைவியின் முகத்தை, ஆட்சி செய்பவர் நாட்டு மக்களை அலைக்கழிக்கும் நிகழ்ச்சியோடு ஒப்புமைப்படுத்துகிறார். ஞாயிறு வெம்மையான கதிர்களோடு தோன்றியதைக் கண்ட ஆசிரியர் கொடுங்கோல் ஆட்சியை நினைவு கூர்கிறார்.
            தலைவனால் அளிசெய்யப்பெறாத தலைவியின் கண்ணீர் சிந்தும் நிலைக்கும் கொடுங்கோல் ஆட்சியில் குடிமக்கள் கலங்கும் தன்மை கீழ்வருமாறு உவமிக்கப் படுகிறது :
நிறைதளரா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவும்
முறைதளர்ந்த மன்னவன்கீழ்க் குடிபோலக் கலங்குபு
பொறைதளர்பு பனிவாருங் கண்ணாயின் எவன்செய்கோ (33.13-15)
                இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான நாள்தோறும் தோன்றும் ஞாயிறைக் காணும்போது அதன் வெம்மை நுண்பொருள் தன்மையுடைய கொடுங்கோல் ஆட்சியை நினைவுபடுத்துகிறது.
நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக்
கொடிதோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு
கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினந் தெறுதலின் (7.1-3)
என்று பாலையில் எரிக்கும் சூரியனின் கதிர்கள் மன்னவனின் கொடுங்கோலாட்சியினை உவமைக்களனாகக் கொண்டு அமைகின்றன.
. . .          விரிகதிர் தெறுதலி
னலவுற்றுக் குடிகூவ வாறின்றிப் பொருள்வெஃகிக்
கொலையஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ
லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம் (9.4-7)
என்னும் அடிகளில் கொடுங்கோல் மன்னவன் தன் குடிகளிடத்து வரி வசூலிக்கும் கொடுந்தன்மை சுட்டப்படு கிறது.
                கொடுங்கோலாட்சியில் மக்கள் துன்புறுவதை உணர்ந்து கொண்டவராகவும் அரசர்கள் நல்லாட்சி செய்தல் வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவராகவும் மேற்காட்டிய உவமைகள் பெருங்கடுங்கோவின் பண்பு நலனை வெளிப்படுத்துகின்றன.
            செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல
                வெரிவெந்த கரிவறல் வாய்புகுவ (12.1-2)
என்னும் அடிகளில் பாலைக்காட்சியானது பகைவரின் நிலங்களை எரித்துப் பாழ்படுத்திய அரசனின் செயலோடு ஒப்புநோக்கப்படுகிறது.
பேதையோன் வினைவாங்கப் பீடிலா அரசனாட்
டேதிலான் படைபோல இறுத்தந்த திளவேனில் (26.7-8)
என்னும் அடிகள் படைவலியற்ற சூழலில் பகைவன் படைஎடுத்து வருதலை இளவேனில் பருவத்தோடு ஒப்பிடுகின்றன.
                பெரும்பாலும் இயற்கையையும் இயற்கை நிகழ்வு களையும் கவிஞர்கள் உவமைகளாகப் பயன்படுத்தல் இயல்பு. அரசராக வீற்றிருந்த பெருங்கடுங்கோ தம் படைப்புகளில் இயற்கைக் காட்சிகளுக்குக்கூட அரசுசார்ந்த செய்திகளை உவமைப்படுத்திக் கவிஞனின் அனுபவம் அவனது படைப்புகளில் எதிரொலிக்கும் என்பதற்குக் கட்டியங்கூறுகிறார்.
உலகியல் உவமை
                உலகின் இயல்புகளை உவமைகளாகச் சுட்டுவதன் மூலம் தாம் கூறவந்த பொருளைச் சிறப்பாகக் காட்டும் உத்தியைப் பெருங்கடுங்கோ பல பாடல்களில் சிறப்பாகப் பயன்படுத்துகிறார். அதற்கு,
பொருந்தியான் றான்வேட்ட பொருள்வயி னினைந்தசொற்
றிருந்திய யாக்கையுண் மருத்துவ னூட்டிய
மருந்துபோன் மருந்தாகி மனனுவப்பப்
பெரும்பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே (16.18-21)
என்னும் இப்பாடற் பகுதியைச் சான்றாகக் காட்டலாம்.
                மெய்யை உணர்த்தும் சுற்றம் போன்றது கானகம் (2.21-22), தாயுயிர் பெய்த பாவை போன்று நல்லவர்கள் சொன்ன சொல் மாறமாட்டார்கள் (21.5-6), காதலரின் தூது மருந்துக்கு நிகரானது (31.14-18) என்னும் பகுதிகளில் உலகியல் அனுபவங்களைத் தாம் கூறவந்த கருத்துக்கு உவமையாக்கிக்கொள்ளும் தன்மையைக் காணமுடிகிறது.
உவமை அடுக்கு
                பெருங்கடுங்கோ உவமைகளைப் பயன்படுத்துவதில் பெருவிருப்பினர் என்பதை அவருடைய பாலைக்கலிப் பாடல்கள் பலவற்றின் மூலமாக அறியமுடிகிறது. ஒன்றிற்கு மேற்பட்ட உவமைகளைத் தொடர்ந்து அடுக்கிச்சென்று மொழிப் புலப்பாட்டில் ஓவியத்தன்மையைப் புகுத்துகிறார்.
தோணல முண்டு துறக்கப்பட் டோர்
வேணீ ருண்ட குடையோ ரன்னர்
நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர்
அல்குநர் போகிய வூரோ ரன்னர்
கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்
சூடின ரிட்ட பூவோ ரன்னர் (22.8-13)
என்னும் பகுதியில் தொடர்ந்து மூன்று உவமைப் பகுதிகள் இடம்பெற்று ஓவியக் காட்சிகளை முன்னிறுத்தக் காணலாம். இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாகப் பல உவமைகளை விரிவாக அமைக்கும் தன்மையை இவரது பல பாடல்களில் காணலாம்.
எதிர்  உவமை
                படைப்பாளர்கள் உவமைகளைப் பயன்படுத்தும்போது பெரும்பாலும் எளிதில் காணக்கூடிய இயற்கைப் பொருள் களையும் காட்சிகளையும் உவமையாக்கி மொழிப் புலப்பட்டை எளிமைப்படுத்த முயல்வர்.
மணிபோல அரும்பூழ்த்து மரமெல்லாம் அலர்வேய (32.6)
என்னும் பெருங்கடுங்கோவின் பாடல் அடியில் இத்தகைய பொதுத்தன்மையைக் காணமுடிகிறது.
                மகளிரின் பற்களை வருணிக்கவரும் கவிஞர்கள் முல்லை அரும்புபோன்ற பற்கள் என்று சுட்டுவர். பெருங்கடுங்கோ, முல்லை அரும்புகளைப் பற்றிக் கூறும்போது, எயிறேய்க்குந் தண்ணருவி நறுமுல்லை (31.16) என்று பற்களை உவமையாகச் சுட்டுகிறார்.
                யாழின் இசையைக் குறிப்பிடும் புலவர்கள் பெரும்பாலும் தும்பி, தேனீ, வண்டு முதலியவற்றின் முரலோசையை உவமைப்படுத்துவர். பெருங்கடுங்கோ,
நரம்பின் தீங்குரல் நிறுக்குங் குழல்போல்
இரங்கிசை மிஞிறொடு தும்பிதா தூத (32.22-23)
தளையவிழ்பூஞ் சினைச்சுரும் பியாழ்போல இசைப்பவும்  (33.16)
வடிநரம் பிசைப்பபோல் வண்டொடு சுரும்பார்ப்பத்
தொடிமகள் முரற்சிபோல் தும்பிவந் திமிர்தர
இயனெழீஇ யவைபோல எவ்வாயும் இம்மென (35.3-5)
என்னும் பகுதிகளில் தும்பி முதலியவற்றின் முரலும் ஓசையைக் குழல், யாழ் ஆகியவற்றின் இசையோடு பெருங்கடுங்கோ ஒப்புமைப்படுத்தக் காணலாம். இவ்வாறு பொதுவாக இலக்கியங்களில் காணப்பெறும் உவமான உவமேயங்கள் பெருங்கடுங்கோ பாடல்களில் மாறி அமைந்திருக்கும் தன்மை பரவலாகக் காணப்படுகிறது. அச்சான்றுகளை நோக்கும்போது இதனை ஒரு மொழிப் புலப்பாட்டு உத்தியாகக் கையாளும் அவரது முனைப்பை அறிந்துகொள்ள முடிகிறது.
                இளவேனில் வரவு முதலியவற்றின் வருணனைப் பகுதிகளில் (31.1-13) இத்தகைய எதிர் உவமைகள் அதிகமாகப் பயன்கொள்ளப் பெற்றுள்ள தன்மையைக் காணமுடிகிறது.
                இதுகாறும் கண்டவற்றால், பெருங்கடுங்கோவின் உவமைப் பயன்பாடு பிற கவிஞர்களிடமிருந்து மாறுபட்டுத் தனித்துவம் மிக்கதாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. கலித்தொகையின் பிற ஆசிரியர்கள் பாடல்களை நோக்கும்போது பிறரைக்காட்டிலும் பெருங்கடுங்கோ அதிகமான உவமைகளை ஆண்டுள்ளமையை அறிய முடிகிறது.

¨
நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, சங்கச் சாரலில்
காஞ்சிபுரம் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2012,  52-60.

No comments:

Post a Comment