Thursday 27 November 2014

பலியாடுகள்


முனைவர் அவ்வை நிர்மலா




















சுப்பையாவும் பாஸ்கரனும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். முதுகலை, ஆங்கில இலக்கியம். ஒரே விடுதியிலும் தங்கி இருந்தார்கள். உயிர் நண்பர்கள்.

பாஸ்கரன் கூச்ச சுபாவம். அனைவரோடும் சகஜமாகப் பேச பயப்படுவான். யாரேனும் ஏதேனும் நினைத்துக்கொண்டால்?

சுப்பையா கொஞ்சம் தைரியசாலி. பெண்களோடு சகஜமாகப் பழகுபவன். எப்போதும் அவனைச் சுற்றி ஐந்தாறு பெண் தோழிகள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். 

அவர்களில் புவனாவின் மேல் அவனுக்கு ஒரு கண். அவளுக்கும்தான். 
நட்பு கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாக மலர்ந்து டாக்டர்பட்டம் வாங்கிய கையோடு இருவரும் திருமணமும் செய்துகொண்டார்கள்.

அவர்கள் திருமணத்தைப் பார்த்து அனைவருமே சிலாகித்துப் பேசினார்கள். எல்லோருக்கும் இப்படி அமைந்துவிடுமா என்ன?

பாஸ்கரனும் உஷாவை உள்ளூறக் காதலித்துக் கொண்டுதான் இருந்தான். அவன் கேட்டிருந்தால் உஷாவும் ஓ.கே. சொல்லி இருப்பாள். ஆனால் அவனுக்குத்தான் பயம். அம்மா, அப்பா, இரண்டு தங்கைகள், அண்ணன், தம்பி என்று பெரிய குடும்பம். அவன் குடும்பப் பாசம் அவனை வெகுவாகக் கட்டிப்போட்டது.

அவன் தன் காதலைப் பற்றிச் சொன்னால் அவர்கள் ஒன்றும் தடைசொல்லப் போவதில்லை. இருந்தாலும் அவன் கூச்சம் அதனை வெளிப்படுத்த வியலாமல் செய்துவிட்டது.

அவன் பேசாமல் இருந்ததால் பெற்றோர்களே பார்த்து அவனுக்கு அலமேலுவைத் திருமணம் செய்துவைத்து விட்டார்கள்.

அலமேலு குடும்பப் பாங்கான பெண். நன்றாகச் சமைப்பாள். மாமியார், மாமனார், நாத்தனார் என்று அனைவரிடமும் அன்பாகப் பழகுபவள். கணவனே கண்கண்ட தெய்வம் என்று எந்நேரமும் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் மகிழ்ச்சி காண்பவள். அவனும் கொடுத்துவைத்தவன்தான். அவன் திருமணத்திற்குச் சுப்பையா தன் மனைவியோடு சென்று வாழ்த்திவிட்டு வந்தான்.

திருமணம் முடித்ததும் ஒவ்வொருவருக்கும் ஒரு திசையில் வேலை கிடைத்து அப்புறம் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றல் ஆகி என்று வாழ்க்கை இயந்திரகதியில் போய்க் கொண்டிருக்கிறது.

திருமணம் ஆகி சில மாதங்கள் சுப்பையாவும் பாஸ்கரனும் அவ்வப்போது கடிதங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். பிறகு அதுவும் மெல்ல மெல்ல நின்றுபோனது.

ஆயிற்று பத்து ஆண்டுகள்!

பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில். வருடாவருடம் இப்படி ஒன்றிரண்டு கருத்தரங்களில் பங்குகொண்டால்தான் மதிப்பாக இருக்கும்.
பாஸ்கரன் தன் மனைவியோடு கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளச் சென்றான்.
கருத்தரங்கம் வந்தவர்கள் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார்கள்.  
சிற்றுண்டி அருந்திக் கையைக் கழுவிவிட்டுத் திரும்பிய சுப்பையாவின் கண்களில் மின்னல். எதிரே பாஸ்கரன் நின்றிருந்தான்.

'பாஸ் எப்படி இருக்கே?', அவன் வயிற்றில் செல்லமாகக் குத்தினான் சுப்பையா.

'நல்லா இருக்கேன் சுப்பு, பாத்து எவ்வளவு நாளாச்சி, நீ நல்லாயிருக்கியா?'
'எனக்கென்ன, ரொம்ப நல்லாயிருக்கேன்'. 

'பாஸ்கர், சுகர் டேப்லட் எடுத்துக்காம வந்துட்டீங்களே, இந்தாங்க' - உல்லி உல்லி புடவையில் இருந்த ஒல்லியான தேகம் பாஸ்கரிடம் மாத்திரையை நீட்டியது.

சுப்புவின் முகத்தில் கேள்விக்குறிகள்.
'சுப்பு, இவங்க என்னோட மிஸஸ் சுதா. இவங்களும் நானும் ஒரே காலேஜ்லதான் வேல செய்யறோம்'. 

'சுதா, நீ போய் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிட்டு புக்ஸ், பை எல்லாம் எனக்கும் சேர்த்து வாங்கி வச்சிடு. இதோ வந்துடறேன்'.

தன் கணவன் பாஸ்கரன் நண்பரிடம் தனியே பேச விரும்புகிறார். புரிந்துகொண்ட சுதா ஒரு புன்னகையோடு அங்கிருந்து விலகிப்போனாள்.
'பாஸ்கர், உன் ஒய்ப் . . . ?'

'அத ஏன் கேக்கற சுப்பு? அந்த அலமேலுவக் கட்டிக்கிட்டு நான் எவ்வளவு கஷ்டம்தான் படறது? சுத்த முண்டம். படிப்பறிவு கொஞ்சமும் இல்ல. பயங்கற பொஸஸிவ். எப்பப் பாத்தாலும் அவ முந்தானியப் புடிச்சிக்கிட்டே இருக்கனும்னு நினைச்சா. நம்ம ஒன்னு சொன்னா அவ ஒன்னு செய்வா? ஒரு படிப்பறிவில்லாத முட்டாளக் கட்டிக்கிட்டு எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?'
'சுதா என்னோட காலேஜ்ல வேலைக்குச் சேந்தா. செம பிரிலியண்ட். வெரி மாடஸ்ட், அவளுக்கு அண்ணன், தம்பின்னு எந்தவகையான பேமிலி பிக்கல் பிடுங்கலும் இல்ல. என்னோட லைப் பார்ட்னரா இருக்கேன்னு சொன்னா. ஜஸ்ட் ஒன் இயர் முன்னாடிதான் சிம்பிளா மால மாத்தி மேரேஜ் பண்ணிக்கிட்டோம்'. 

'அலமேலு குழந்தய கூட்டிக்கிட்டு ஊரோட போயிட்டா. எப்பவாவது போய்ப் பாத்துட்டு வருவேன். சுதா எதுக்கும் தடை சொல்றது இல்ல'.
'இப்போ ரெண்டு சம்பளம். நெறைய விஷயங்கள எங்களால டிஸ்கஸ் பண்ண முடியுது. எங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டேன்டிங், வி ஆர் வெரி ஹாப்பி'. 
கூச்சம் கூச்சம் என்று அநியாயத்திற்கு வெட்கப்படுபவன் இப்படி சுதாவுடனான தனது தொடர்பை அப்பட்டமாக எடுத்துரைத்துக்கொண்டிருந்தான்.
அதற்குள் கருத்தரங்கம் தொடங்கியதற்கான அழைப்புமணி அடித்தது.
பரபரப்பாகிப் போனார்கள். சரி மீதியை அப்புறம் பேசிக்கொள்ளலாம்.
மதிய உணவு இடைவேளையில் சுப்புவும் பாஸ§வும் பேசிக்கொள்ள முடியவில்லை. புதுப்புது நண்பர்கள் சூழ்ந்துகொண்டார்கள். 

ஒருநாள் கருத்தரங்கம்தான். அதனால் மாலையில் அவரவர் ஜாகைக்குத் திரும்பும் அவசரம்.

'சுப்பு, உன் விசிட்டிங் கார்டு கொடு, அப்பறம் பேசறேன்'. சுப்புவின் விசிட்டிங் கார்டு பெற்றுக்கொண்டு  பாஸ்கரன் தன் புது மனைவியோடு கிளம்பிப்போனான்.

ஆறு மாதம் ஓடிப்போனது. திருச்சியில் ஒரு கருத்தரங்கம். பாஸ்கரன் தன் மனைவி சுதாவோடு போயிருந்தான். சுப்பு திருச்சியில்தான் இருக்கிறான். ஆனால் அந்தக் கருத்தரங்கிற்கு சுப்பு வரவில்லை. அது இரண்டுநாள் கருத்தரங்கம். 

சனிக்கிழமை மாலை சுப்புவின் வீட்டிற்குப் போய் இரவு அங்கேயே தங்கி விடலாம். அவனும் அவன் மனைவி புவனாவும் தன்னிடம் எவ்வளவு பிரியம் காட்டுவார்கள்! நிச்சயமாய்த் தான் அவர்கள் வீட்டில் இரவு தங்காவிட்டால் கோபித்துக் கொள்வார்கள். சுப்புவுக்குப் போன் செய்யாமல் போய் அவனை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண்டும்.

சுதாவைக் கூப்பிட்டான். 

'பிரண்ட்ஸ§க்குள்ள ஆயிரம் இருக்கும். நான் எதுக்கு அங்கே நந்தியாட்டம். நீங்க போயிட்டு வந்திடுங்க. அடுத்தமுறை நான் நிச்சயம் வரேன்'.
தனக்குத்தான் சுகர் வந்துவிட்டது. சுவீட் சாப்பிட முடியாது. ஆனால், சுப்புவுக்கு இனிப்பு வகைகள் ரொம்பப் பிடிக்கும், புவனாவுக்கும்தான். அகர்வால் ஸ்வீட்ஸ் ஒரு கிலோ வாங்கினான்.

சுப்புவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் ஒன்றும் சிரமமாக இல்லை. ஆனால் வீடுதான் கொஞ்சம் பழைய மாதிரி திண்ணையுடன் கூடியதாக இருந்தது. மாலைநேர இருளைப் போர்த்திக்கொண்டு நின்றது. 

இருட்டுக்குள் ஒளிந்துகொண்டிருப்பது அவன் வீடாக இருக்குமோ என்று சற்றே சந்தேகமாகவும் இருந்தது.

காலிங்பெல்லை அழுத்தினான். சின்னதான இடைவெளியோடு கதவு திறந்தது. உள்ளே சன்னமாக ஒளி கிடைத்தது. ஒரு முகம் எட்டிப்பார்த்து 'யாரு?' என்றது.

தான் வீடு மாறி வந்துவிட்டது நிச்சயமாகத் தெரிந்து போனது. 
'சுப்பையான்னு . . .'

'அவங்க வெளியில போயிருக்காங்க. இப்ப வந்திடுவாங்க. உள்ள வந்து உக்காருங்க' என்று சொல்லிவிட்டு ஓர் இருக்கையைக் காட்டிவிட்டு உள்ளே போய்விட்டாள் அந்தக் குள்ளமான பெண்.

'தான் ஒழுங்காகச் சுப்புவுக்குத் தெரிவித்துவிட்டு வந்திருக்க வேண்டும். சுப்புவும் புவனாவும் எப்பொழுது வருவார்களோ?  சரியாகக் கூட பதில்சொல்லாமல் இந்த வேலைக்காரி உள்ளே போய்விட்டாளே!' 
பொழுதுபோகாமால் அங்கே தூசி படிந்துகிடந்த ஒரு புத்தகத்தை எடுத்துத் தூசு தட்டிப் புரட்டிக் கொண்டிருந்தான்.

வாசலில் டூ வீலர் நிறுத்தும் சத்தம் கேட்டது. அவர்கள்தான் வந்திருக்க வேண்டும். எட்டிப் பார்த்தான்.

சுப்பு வாசற்படி ஏறிக்கொண்டிருந்தான்.
'சுப்பு . . . !'
'பாஸ் . .  எப்ப வந்தே?'
'நான் வந்து பத்து நிமிஷமாச்சி!'
'சரி வா வா உட்கார்'.

'தேனு. . . ரெண்டு காபி கொண்டா' - உள்ளே நோக்கிக் குரல்கொடுத்தான் சுப்பு.
'சுப்பு . . . !  எங்க புவனாவக் காணோம்?'

'அது வந்து . . .  நீ மொதல்ல காபியக் குடி. அப்பறம் பேசுவோம்'.
'தேனு . . .! நாங்க கொஞ்சம் வெளியில போய்ட்டு வரோம்'. - சொல்லிவிட்டு பாஸ§வின் கைபிடித்து அழைத்துக்கொண்டு வெளியில் இறங்கினான் சுப்பு.
ஒரு மௌனம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

தெருவின் முனையில் ஒரு சிறிய பார்க் இருந்தது. நான்கைந்து பெஞ்சுகள் இருந்தன, எல்லாம் காலியாக! மார்கழி மாதப் பனி பெய்துகொண்டிருந்தது. இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள்.

பாஸ்கரன் தொண்டையைச் செருமினான்.

சுப்புவிற்குப் புரிந்தது. 'பாஸ§ அவ என்னை விட்டுட்டுப் போயிட்டா'. 
'ஏன்?' என்னும் தோரணையில் புருவத்தை உயர்த்தினான் பாஸ்கரன்.
'அவளோட பிராப்ளமே ஓவர் ஸ்மார்ட்னஸ்தான். பயங்கர அறிவுஜீவியோட வாழ முடியாதுடா. எதைச் சொன்னாலும் ஏன், எதுக்குன்னு கேள்விகேட்டா என்ன செய்யமுடியும்? ஒய்ப்புன்னா எப்பவும் புருஷனுக்கு கொஞ்சமாவது அடங்கி நடக்கனும் இல்ல'.

'எல்லா வேலைலயும் பிப்டி பிப்டி பங்கெடுக்கனுமுன்னு சட்டம் போட்டா'.
'குளிக்கப் போனா டவல், சோப்புன்னு எதுவும் எடுத்துத் தரமாட்டா'. 
'நானும்தானே கிளம்பனும், எனக்கு லேட்டாகாதா? ஒங்களுக்கு வேண்டியத நீங்க எடுத்து வெச்சிக்கக் கூடாதா?' அப்படின்னு எப்பப்பாத்தாலும் ஏட்டிக்குப் போட்டியா நடந்தா . . . 

'எனக்கு ஒன்னும் பிடிக்கல. எனக்குன்னு அவ ஒன்னும் பாத்துப் பாத்துச் செய்யல. பாத்துப் பாத்து எதயும் சமச்சுப் போடல. எப்பப் பாத்தாலும் லிட்டரேச்சர், புக்ஸ், செமினார், அசோசியேஷன், மீட்டிங் இப்படியே இருந்தா வீட்டைப் பாக்க வேணாமா?' 

'நாம வெளியோபோய் களைச்சு வந்தா காலைப் பிடிச்சுவிடனும், வாய்க்கு ருசியா சமைச்சுப் போடனும், நேரம் காலம் தெரியாம நம்மள எதுவும் எதுத்துப் பேசக்கூடாது. இப்படி இல்லைன்னா அந்தப் பொண்டாட்டிகூட எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?' 

சுப்பையாவின் செயலுக்கு அவன் பார்வையில் நன்றாகவே காரணங்களைக் கற்பித்தான்.

சுப்பையா, பாஸ்கரன் இவர்களுக்கு என்னதான் வேண்டும்? அவர்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் ஆடைகளா இந்தப் பெண்கள்? குளிர் காலத்திற்குக் கம்பளி உடை, வெயிலுக்குப் பருத்தி உடை! 
வேலை செய்யும் வேலைக்காரி, குடும்பத்தைக் குதூகலமாய் நடத்தும் அறிவு ஜீவி இரண்டும் ஒரே ஓட்டுக்குள் வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவுமாய் முட்டையில் இருப்பது போன்று இரண்டு உருவங்கள் ஒரு பெண்ணுக்குள் இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். 

அப்படி என்றால் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்கு யார் விதிகளை வகுக்க முடியும். ஏனென்றால் விதிகளை வகுப்பவர்கள் அவர்களல்லவா?

'அப்ப புவனா . . . ?'

'அவளுக்கு நான் டைவர்ஸ் கொடுத்துட்டேன்'. ஏதோ அவளுக்கு விருது கொடுத்ததுபோல் சொன்னான் சுப்பையா.

'அப்ப வீட்ல . . .?'

'தேனு . . .  தேன்மொழி . . . ! அவதான் என் பொண்டாட்டி. மாடியில குடியிருந்த பொண்ணு. அப்பப்ப வீட்டப் பாத்துக்கிட்டா. அப்படியே . . . கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சி . . . இப்ப நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்'.

எப்படியோ பாஸ்கரனும் சுப்பையாவும் செய்முறைப் பரிசோதனை செய்து அவர்களது சந்தோஷம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பலியாடுகள் புவனாவும் அலமேலுவும் . . . ?

அங்கிருந்து கிளம்பினான் பாஸ்கரன்.

கருத்தரங்கம் நடக்குது பார்

கவிதாயினி அவ்வை நிர்மலா










பதவி ஒசர வேணுமுன்னா கண்ணம்மா
கருத்தரங்கம் கலந்துக்கணும் கண்ணம்மா

ஆய்வுசெஞ்சி எழுதிடவே கண்ணம்மா
அதிககால மாகுமடி கண்ணம்மா

வேறுயாரோ எழுதிவச்சத கண்ணம்மா
காப்பியடிச்சி அனுப்பறாங்க கண்ணம்மா

அஞ்சாறு பக்கத்துல கண்ணம்மா
ஆயிரம் தப்பு பண்ணறாங்க கண்ணம்மா

கருத்தரங்கம் ஏற்பாடாச்சு கண்ணம்மா
கட்டுரையும் பதிப்பிச்சாங்க கண்ணம்மா

கட்டுரையப் படிக்கவந்தா கண்ணம்மா
கருத்தக்கேக்க ஆளக்காணோம் கண்ணம்மா

தன்னுடைய பேச்சமட்டும் கண்ணம்மா
தரணுமுன்னு விரும்புறாங்க கண்ணம்மா

அவங்கபேச்சு முடிச்சதுமே கண்ணம்மா
அடுத்தவண்டி ஏறிடறாங்க கண்ணம்மா

மத்தவங்க கருத்தக்கேக்க கண்ணம்மா
பொறுமயில்ல சிரத்தயில்ல கண்ணம்மா

கண்மூடித் தனமாத்தான கண்ணம்மா
கருத்துகளக் குழப்பறாங்க கண்ணம்மா

உணர்ச்சியோங்கி இருப்பதாலே கண்ணம்மா
உண்மைதேட மனசுவல்ல கண்ணம்மா

அடுத்தவரை நக்கலடிச்சுக் கண்ணம்மா
ஆளசிலர் முழுங்குறாங்க கண்ணம்மா

விவாதமெல்லாம் சூடுபிடிச்சும் கண்ணம்மா
விழலுக்கிறச்ச நீராச்சுது கண்ணம்மா

சேரவேண்டிய எடத்தப்போயி கண்ணம்மா
கருத்துசேர முடியலயே கண்ணம்மா!

இருண்மை கொண்ட நெஞ்சினாய்






அழுகிக்கிடக்கும்
குட்டையைத் தூர்வாரி 
தாமரைகளை
மலரவிட்டமை 
தரங்கெட்ட செயலென்று 
தம் கும்பகருணத் தூக்கம் 
கலைந்துவிட்டதற்காகக் 
கூச்சலிட்டு 
ஊர்கூட்டும் 
சில சொறித்தவளைகள்! 

முட்டிக் கொண்டிருக்கும் 
முடைநாற்றம் வீசும் 
குட்டிச் சுவர்களை 
நெட்டித்தள்ளிச் 
சோலைகள்
உருவாவதை 
ஜீரணிக்கவியலாக்
கோபத்தில் 
கத்தித் தொலைக்கும் 
சில தரங்கெட்ட
கழுதைகள்!...

சமயம் பார்த்துக் காத்திருக்கும்
ஊளை நரிகளின்
பேரப் பேச்சுகளின்
தந்திரம் புரியாமல்
எண்ணிக்கை பலத்தில்
ஏமாந்து சாய்ந்துவிடும்
சில செம்மறியாடுகள்!

தங்கள் பிரதிநிதிபெறும்
தரச்சான்றிதழ்
காணச் சகியாமல்
பொறாமையால்
கொடிபிடிக்கத்
தம் சேலையையே
கிழித்துப் பங்கப்படும்
திரௌபதிகள்!

இராமன் முடிதுறப்பதால்
தமக்கு இனி
இலாபமில்லையென்னும்
தப்புக்கணக்கில்
இராவணனோடு சேர்ந்துகொண்டு
மூக்கறுபட இருக்கும்
லட்சுமண பரதன்கள்!

காற்றாடிகளைப் பறக்கவிடும்
சூட்சுமம் கற்றுக்கொள்ளாமல்
காற்றை எதிர்ப்பதாகக்
காட்டிக்கொள்ள
காற்றாடிகளைப் பறக்கவிடாமல்
கயிறுகளை அறுத்துவிடும்
காலித்தனங்கள்!

Tuesday 25 November 2014

புதுவைக் கவிஞர் மலையருவியின் கவிதைக் கொள்கை


புதுவைக் கவிஞர் மலையருவியின் 

கவிதைக் கொள்கை




முனைவர் ஒளவை இரா நிர்மலா

எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), எம்.ஏ.(இந்தி), எம்.ஏ.(மொழியியல்),
எம்.ஃபில்., பிஎச்.டி., நிறைசான்றிதழ் தெலுங்கு,
சான்றிதழ் : நாட்டுப்புறவியல், பிரெஞ்சு, மராட்டி, கணினியியல்.
தமிழ் இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி,
காரைக்கால் - 609 602 அலைபேசி 93450 05865

       முனைவர் நா. இளங்கோ 'மலையருவி" என்ற பெயரால் அறியப்படும் புதுவைக் கவிஞராவார். இவர் தமிழ்ப் பேராசிரியர். வலைப்பதிவுகளில் தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளைப் பதித்து வருபவர். சங்க இலக்கியங்கள், திருக்குறள், நாட்டுப்புறவியல், தகவல் தொடர்பியல் முதலான துறைகளில் மிகுந்த ஈடுபாடும் புலமையும் மிக்கவர். தமிழியல் ஆய்வுகள், பேச்சுக்கலை, பேராசிரியப் பணி மூன்றிலும் முத்திரை பதித்து வருபவர்.

            ஒரு கவிஞராக இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளமை, தொடர்ந்து முகநூல், பிளாகர் முதலிய இணைய தளங்களில் கவிதைகளைப் படைத்துவருதல்,கவிதைகளைப் பற்றிய புரிதலோடு கவிதைப் பட்டறைகளை நடத்துதல், இரண்டாயிரம் ஆண்டு நெடியவரலாறு படைத்த தமிழிலக்கியக் கடலின் கரைகண்ட நல்ல புலமை, முப்பத்தைந்து ஆண்டுகள் இலக்கியங்களைக் கற்பித்து வருதல், தமிழிலக்கியங்களை ஆய்வு செய்தல், ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் கவிஞர் மலையருவியின் எழுத்துகளில் காணலாகும் கவிதை பற்றிய செய்திகளிலிருந்து கவிதை இலக்கியக் கொள்கையை வரையறுப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

எது கவிதை அல்ல?

     மனிதத் தின்னிகள்  என்னும் தமது கவிதைத் தொகுப்பில் 'எழுதப் போகும் கவிதை" என்னும் தலைப்பில் அமைந்த முதல் கவிதையில் கவிதை பற்றிய ஓர் அலசலை முன்வைக்கிறார் கவிஞர் மலையருவி.

எண்ணங்களின் பின்னல் கவிதையா?

     எண்ணங்களாலே
     பின்னிய வலைகளில்
     சிக்கிய கவிதையின்
     இரத்தம் குடித்து
     இளைப்பாறுகின்றது
     சிந்தனைச் சிலந்தி (ப. 21)


என்னும் பகுதி எண்ணங்களால் பின்னப்படும் வலையில் கவிதை ஆக்குதலின் சிரமத்தை எடுத்துரைக்கிறார். சிந்தனையைச் சிலந்தியாக உருவகப்படுத்தும் கவிஞர் எவ்வாறு சிலந்தி வலையில் சிக்குகின்ற பூச்சிகளின் இரத்தத்தைக் குடித்து உயிரற்றதாக்கி விடுகிறதோ அதே போன்று சிந்தனையைச் செலவிட்டு எழுதப்படும் கவிதையில் கவிதை உயிரற்ற உடலாக இருப்பதாகப் புதிய கோணத்தில் சிந்திக்கிறார். 

       எது கவிதை என்பதனை வேர்ட்ஸ்வொர்த் குறிப்பிடுங்கால், ‘அமைதியான சூழலில் மனத்தில் அழுத்திக் கொண்டிருக்கும் வீரியமான எண்ணங்கள் எழுச்சியோடு வெளிவருதலைச் சேகரிக்கும்போது கவிதையாகிறது’ என்று குறிப்பிடுகிறார். வோர்ட்ஸ்வொர்த் இதுதான் கவிதை என்பதனை முத்திரை யிட்டுரைக்கக் கவிஞர் மலையருவி எது கவிதை அல்ல என்பதனைத் தெளிவுபடுத்துகிறார்.

கலைநயமா? யதார்த்தமா? - எது கவிதை?

      சொற்களைக் கொண்டு
      விண்ணை முட்டக்
      கலைநயத்தோடு
      கட்டிய மாளிகை
      யதார்த்த உலகின்
      அனுபவ அதிர்வுகளில்
      ஆட்டம் காண்கிறது          
(மனிதத் தின்னிகள் 21)

என்னும் பகுதியில் கலைநயம் மட்டுமே கவிதையாகி விடுவதில்லை என்பதைக் கவிஞர் அறியவைக்கிறார். கவிதையில் யதார்த்தம் என்பது இல்லையெனில் அது எவ்வளவுதான் கலைநயம் மிக்கதாகப் படைக்கப் பட்டாலும் அதன் கட்டமைப்பு ஆட்டம் கண்டுவிடும் என்கிறார் கவிஞர்.

வார்த்தைகளின் அடுக்கு கவிதையா?

             எழுத்துப் படைப்புகள் சொற்களாலும் தொடர்களாலும் கட்டமைக்கப் படுகின்றன. இவ்வடிவம் கவிதையில் மேலும் சுருங்கிய வடிவம் பெறுகிறது. இன்றியமையாச் சொற்களின் கட்டமைப்பில் கவிதை எழுந்துநிற்கிறது. அவ்வாறு கவிதை எழுவதற்கு சொற்கள் மட்டுமே துணைபுரியுமா? என்று தன் கவிதைப் படைப்பையே ஆய்ந்து பார்க்கிறார் மலையருவி.

     அதைத் தேடி
     இதைத் தேடி
     தேடித்தேடித் தேய்த்தேன்
     சொற்களை நிறுத்திச்
     சுமைகளை ஏற்றினேன்
     நகர மறுத்தன           (காலடியில் தலை)

என்று நிதர்சனத்தைச் சொல்லும்போது சொற்களைக் கொண்டு கவிதையைக் கட்டமைக்கும் முயற்சி தோல்வியில் முடிவதை ஒத்துக்கொள்கிறார் கவிஞர்.

     வார்த்தைகளை அடுக்கிவிட்டாலும் அது கவிதையாய்ப் பரிணமிப்பதில்லை. கவிதை என்னும் மீனினைப் பிடிக்க வார்த்தை என்னும் புழுக்களால் முடிவதில்லை என்றும் அந்த வார்த்தைகள் சிரத்தையோடு கண்டுபிடிக்கப்பெற வேண்டியுள்ளது என்பதையும் வலியுறுத்துகிறார்.

     வார்த்தைப் புழுவைத்
     தூண்டிலில் மாட்டி
     சிரத்தையின்றிக்
     கவிதையைப் பிடிக்கத்
     தூண்டிலோடு போனது
     மீன்
              (மனிதத் தின்னிகள் 21)

இந்தச் சிரத்தையே கவிஞனின் கவித்துவ உள்ளத்தைச் சார்ந்ததாகிறது.

     கழனிகளிலே
     கவிதைப் பயிர்கள்
     வார்த்தைக் களைகளால்
     வளர்ச்சி குன்றின. . .
     எழுத்தும் சொல்லும்
     வேகமாய் வளர்கையில்
     கவிதைகள் மட்டும்
     காணாமல் போவதேன்?
       (மனிதத் தின்னிகள் 22)

என்ற வினாவினை எழுப்புகிறார் கவிஞர். கவிதையைக் கட்டமைக்கச் சொற்கள் வேண்டுமாயினும் அச்சொற்களே சில சமயங்களில் களைகளாக மாறி பயிரின் வளர்ச்சியைக் குன்றச் செய்துவிடுகின்றன. அதாவது தேவையற்ற சொற்களை அடுக்குவதால் அளவில் பெரிய கவிதையாக அதனை வடிவமைக்க இயலும் என்னும் கருத்துத் தவறானதாகும். அச்சொற்களே இன்றியமையாச் சொற்களின் வீரியத்தைக் குறைத்துவிட வல்லன. கவிதையின் அளவு வேண்டுமானால் தேவையற்ற சொற்களின் பயன்பாட்டினால் பெரிதாகலாம். ஆனால் கவிதை அங்கிருந்து காணாமல் போய்விடுகிறது.

       ஒரு முழுக்கவிதையில் ஒரே ஒரு சொல்லில் கவிதை உட்கார்ந்து கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடும் அந்தச் சொல்லைக் கண்டுபிடித்து விளையாட்டைத் தொடர்வது அத்துணை எளிய செயலாய் இருப்பதில்லை. என்று புதுவை யுகபாரதியின் பருத்திக்காடு என்னும் துளிப்பா நூலுக்கு கவிஞர் அளித்த அணிந்துரைப் பகுதி ஈண்டு குறிப்பிடத்தக்கது எது (11). எனவேதான் கவிதை எச்சொல்லில் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே கவிஞனின் பணியாகிறது. சரியான சொல்லைத் தேர்ந்தெடுப்பவன் பேசப்படுகிறான்.

அணிநலம் கவிதையாகுமா?

       மரபுக் கவிதைகள் பெரும்பாலும் அணி அழகுகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டவையாகத் திகழ்கின்றன. அதன் காரணமாகவே அணி இலக்கண நூல்களும் வெகுவாக எழுந்தன. திறனாய்வாளர்கள் இலக்கியக் கட்டமைப்பில் உத்திகளின் பயன்பாடு குறித்து மெத்தவே கவனம் செலுத்துகின்றனர். அந்நிலையில் ஒரு கவிஞன் தன் கவிதைப் படைப்பில் அணிகளுக்கும் உத்திகளுக்கும் தரவேண்டிய கவனம் குறித்துச் சிந்திக்கிறார் மலையருவி:

     உத்திகளாலே குத்தித் தள்ளி
     அணிகளாலே நையப் புடைத்து
     மெல்ல நகர்த்தினேன்


     சொற்கள் செத்தன


     மீண்டும் மீண்டும்
     கவிதை தேய்ந்தது      
(காலடியில் தலை 61)

உத்திகளை வலிந்து திணிப்பதும் அணிகளால் அலங்கரிப்பதும் கவிதையின் உயிர்நாடியான சொற்களைச் சாகடித்துவிடச் செய்கின்றன என்பதையே தம் கவிதைக் கொள்கையாக அவர் முன்னிறுத்துகிறார்.

அனுபவம் கவிதையாகிறது

   கவிதை பற்றிய திறனாய்வாளர்கள் கவிஞன் தன்னுடைய அனுபவங்களையும் அல்லது தான் அறிந்த பிறருடைய அனுபவங்களையும் கவிதையாக்குகிறான் என்று கருத்துரைக்கின்றனர்.அவ்வகையில் மலையருவியும் வாழ்க்கைப் பூக்களிலிருந்து தொகுத்த அனுபவம் என்னும் தேன் தேனடையாகிய மனத்தில் நிறைக்கப்படுகிறது என்றும் தேக்கப்பட்ட தேன் அனைத்தும் நுகரப்படுவதில்லை என்பதுபோல் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட சில துளிகளே கவிதைகளாய் உள்ளத்தை உவகைப் படுத்துகின்றன என்பதையும்,

     வாழ்க்கைப் பூக்களில்
     வண்டுகள் உறிஞ்சி
     காலம் காலமாய்க்
     கட்டிய தேனடை
     கவிதைத் தேனாய்
     நிரம்பி வழிகையில்
     சிந்திய சிலதுளி
     நெஞ்சம் நிறைந்து
     நினைவில் இனிக்கிறது       
(மனிதத் தின்னிகள் 22)

என்னும் பகுதியில் எடுத்துரைக்கிறார்.

    எழுதும் தூரிகை
    வண்ணக் குழம்பில்
    நானே குழைந்து
    ஓவியமாகிறேன்


    தூரிகை பிடித்த
    விரல்களின் வழியே
    நானே படர்ந்து
    காட்சியாய்க் கரைகிறேன்


    மகுடியை இசைக்கும் லயிப்பில்
    நானே பாம்பாய்
    நெளிந்தாடுகிறேன்


    ஊதும் குழலில்
    காற்றாய்க் கரைந்து
    உயிரே இசையாய்
    உருகிடுகின்றேன்      
(காலடியில் தலை 25)

என்று வரிசைப்படுத்துங்கால் ஒரு படைப்பாளன் தன் படைப்பில் தன்னையே பதியவிடுகிறான் என்பதை நுணுக்கமாக உரைக்கிறார் கவிஞர். ஓவியன் தன் ஓவியத்தில் தன்னையே பதித்துக்கொள்கிறான் என்றும் தூரிகையின் வழியே தன்னைப் பற்றிய காட்சியும் தன் மனத்தில் விளைந்த காட்சியுமாகத் தன்னையே காண்கிறான் என்றும் கூறும்போது படைப்பாளனின் அனுபவப்பதிவு படைப்பின் கருவாவதை உறுதிப்படுத்துகிறார்.

பாடுபொருள்

                இலக்கியங்கள் எவற்றைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன என்பதை ஓர் ஆய்வாளனாகக் கண்டுரைக்கிறார் மலையருவி.

     என்னைச் சுற்றி இலக்கியங்கள்
     தொல்காப்பியம்
     சங்க இலக்கியம்
     திருக்குறள்
     சிலப்பதிகாரம்
     இன்னபிற இலக்கியங்கள்     
(மனிதத் தின்னிகள் 36)

என்று ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இலக்கியங்களைப் பட்டியலிடுகிறார் கவிஞர்.

     மார்க்சிய
     தமிழ்த்தேசிய
     பெண்ணிய
     தலித்திய
     நவீனத்துவ
     பின்நவீனத்துவ
     இன்னபிற பார்வைகளால்
     ஆய்வு புதுமெருகேறுகிறது     
(மனிதத் தின்னிகள் 37)

என்று சொல்வதன் மூலமாக இத்தகைய ஆய்வுகளுக்கு நிலைக்களனாக அவ் இலக்கியங்களின் பாடுபொருள் ஈடுகொடுப்பதை அறிய முடிகிறது.

               தமிழ் இலக்கியங்களாக இருந்தாலும் சரி, உலக இலக்கியங்களாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் போரையும் காதலையும் முன்னிறுத்துகின்றன. இவற்றில் போரைப் பற்றிப் பாடும் புலவர்கள் அவர்தம் காலத்தைய அரசர்களின் வீரத்தைப் புகழ்ந்து பாடி அவர்களைத் தன்னிகரற்ற தலைவர்களாக்குகிறார்கள்.அரசர்களின் வீரத்திலும் வெற்றியிலும் எஞ்சி நிற்பவை உயிர்க்கொலை என்னும் உண்மையைக் காணச் சமுதாயம் மறந்துவிடுகிறது. இதில் செம்மொழி இலக்கியங்களும் விதிவிலக்கல்ல.

     இரத்தமும் நிணமுமாய்ச்
     சிதறிய மாமிசத்துண்டுகள்
     தீய்ந்து கருகிய உடல்கள்
     நெருப்பு
     பெருநெருப்பு
     புகை
     வானை முட்டிய புகை
     கொத்துக் கொத்தாய்ப்
     பிணக் குவியல் (மனிதத் தின்னிகள் 38)

என்று போர்பற்றிய பாடல்களின் விமர்சனத்தை முன்னிறுத்துகிறார்.

     மரண ஓலங்களுக்கிடையே
     செம்சொழிப் புலவர்களின்
     பாணர்களின்
     பாடல்கள் தெளிவாகக் கேட்கவில்லை
     பிஞ்சுக் குழந்தைகளின்
     பெண்களின்
     வீரர்களின்
     சடலங்களுக்கிடையே
     வேந்தர்களும் வள்ளல்களும்
     காணாமல் போனார்கள்
     என் அறை முழுவதும்
     இரத்த வாடை        (மனிதத் தின்னிகள் 38)

என்னும் அடிகள் இலக்கியம் நுகர்ந்த வாசகனின் அனுபவமாக வெளிப்படுகிறது. இவ்விலக்கியங்களால் விளைந்த பயன் என்ன என்னும் வினாவையும் கவிஞர் எழச்செய்கிறார்.

படைப்பில் நிறைவின்மை

      எந்த ஒரு சிறந்த படைப்பாளனும் தனது படைப்பினை முழுமை பெற்றதாகக் கருதமாட்டான். படைப்பு வெளிவந்த பிறகு அதனை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்றே கருதுவான். அதனால்தான் கம்பனைப் போன்ற மாகவிஞர்களும் அவையடக்கப் பாடலைப்பாடி அங்கலாய்த்துக் கொண்டார்கள் எனலாம். இத்தகைய உளவியல்சார் மனப்பாங்கை,

     எழுதிய கவிதையை
     என்ன செய்வது
     படித்துப் படித்துப் பார்த்தேன்
     நிறைவு இல்லை
     நண்பரிடம் காட்டினேன்
     நன்றாக வந்திருக்கிறது என்றார்  
 
                                                (கவிதையும் குழந்தையும்மனிதத் தின்னிகள் 96)

என்று எடுத்துரைக்கிறார் கவிஞர் மலையருவி.

கவிஞனும் சமுதாயமும்


                 படைப்பாளர்கள் மற்றும் கவிஞர்கள் போற்றப்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அத்தகைய போற்றுதல் காலம் கடந்தே நடக்கிறது. பெரும்பாலும் படைப்பாளிகள் குறிப்பாகக் கவிஞர்கள் தம் சக மனிதர்களால் பாராட்டப் பெறுவதில்லை. சிலநேரங்களில் கேலியிலிருந்தும் உதாசீனத்தி லிருந்தும் அவர்கள் தப்புவதில்லை என்பதை,

     பலரும் ஆர்வத்தில் வாங்கி
     வாசித்தார்கள்
     என நினைக்கிறேன்
     புரியலையே! என்றார் ஒருவர்
     ஆரம்பிச்சிட்டீங்களா?
     இது இன்னொருவர்
     ஒன்றும் சொல்லாமல்
     கோபப் பார்வையுடன் மற்றொருவர்
     அசட்டுச் சிரிப்புடன் அடுத்தவர்
     உதட்டைப் பிதுக்கினார் ஒருவர்
     ஏன் காட்டினோம் என்றிருந்தது      
(மனிதத் தின்னிகள் 96)

 என்று உலக நடப்பினை எதார்த்தத்துடன் எடுத்துரைக்கிறார் கவிஞர்.

                 இவ்வாறு கவிதை எவ்வாறு பிறக்கிறது, எது கவிதையாகிறது, கவிதை பற்றிய சமுதாய மனப்பாங்கு முதலானவற்றைத் தம் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தி கவிதைக் கொள்கையை வகுக்கிறார் கவிஞர் மலையருவி.




பயன் நூல்கள்
  • மலையருவி – நா. இளங்கோ, காலடியில் தலை, சென்னை : தமிழ்ப் புத்தகாலயம், 1985.
  • மலையருவி – நா. இளங்கோ,  மனிதத் தின்னிகள், சென்னை: விழிகள் பதிப்பகம், 2013.

Tuesday 11 November 2014

ஆசை முகம் மறந்து போச்சே ..

ஆசை முகம் மறந்து போச்சே ..

‘கண்ட கண்ட கழுதையை எல்லாம் உள்ளே யார் விட்டது’ என்று சற்று இரைந்தே சொன்னார் பரந்தாமன்.
கோப்புகளில் ஓடிக்கொண்டிருந்த கண்களையும் மனத்தையும் அவர் பக்கம் திருப்பினேன்.
ஒருவன் அவரை முறைத்துக்கொண்டே அறைக்கு வெளியே சென்றுகொண்டிருந்தான்.
 அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வறுமையால் கூனிக்குறுகிப்போன உருவம் என்பது அவன் நடையில் தெரிந்தது.
தேய்க்கப்படாத கசங்கிய உடை. கவனமாகத் துவைக்கப்படாததால் அழுக்கே அதன் 
நிறமாக மாறிப் போயிருந்தது.
என்ன சார் விஷயம்?’
அவன் பொண்ணுக்குக் காலேஜ்ல படிக்க ஸ்காலர்ஷிப் வேணுமாம். அதுக்கு இங்க   வந்து அப்ளிகேஷன் கேக்கறான்.’
ஸ்காலர்ஷிப் விவகாரமெல்லாம் மேல்தளத்தில் இருந்தது. அவன் மூன்றாவது தளத்திற்குச் செல்வதற்குப் பதில் தவறுதலாக இரண்டாம் தளத்திற்கு வந்துவிட்டான்.
இப்படி மாறிப்போவது என்ன குற்றமான காரியமா? அங்கேயே வேலை செய்பவர்களுக்குத்தான் எந்தப் பிரிவு எங்கே இருக்கிறதென்று தெரியும். வெளியே இருந்து வருபவர்களுக்கு எப்படித் தெரியும்? ஒரு நாளைக்கு இப்படிக் குறைந்தது பத்து பேராவது வேறு ஏதாவது ஒரு செக்ஷனுக்குள்ள விஷயத்தைப் படிக்கட்டு ஏறியதும் உள்ள எங்கள் அறையில் வந்து விசாரித்துச் செல்வது வாடிக்கைதான்!
இப்படி வாடிக்கையான ஒரு விஷயத்திற்காகப் பரந்தாமன் சாருக்கு மூக்குமேல் கோபம் ஏன் வந்தது?
பரந்தாமன் சாருக்கு என் அப்பா வயது இருக்கும்  - என் அப்பா உயிருடன் இருந்திருந்தால். பரந்தாமன் சார் அடுத்த வருடம் பணிஓய்வு பெறப்போகிறார்; யாரையும் பெரிதாகக் கடிந்துகொள்ள மாட்டார்; பொறுப்பானவர்; வெளியே இருந்து விவரம் தெரியாமல் வருகின்ற பாமர மக்களுக்கு எல்லாவற்றையும் விளக்கி ஒரு வகுப்பு எடுத்துவிடுவார். அதைப்பார்த்து நாங்கள் பலமுறை அதிசயப்பட்டதுண்டு. சிலநேரம் கேலி செய்வதும் உண்டு. அப்படிப்பட்டவர் ஏன் இப்படிக் கோபித்துக் கொள்கிறார்?
ஒருவேளை அவர் வீட்டில் ஏதாவது சண்டையோ? அதனால்தான் அந்தக் கோபத்தை இப்படி வெளிஆள்மேல் காட்டுகிறாரோ?
காலையிலிருந்து அவர் சாந்தமாகத்தானே இருந்தார்?
இன்னும் அவர் வாய் சென்றவனைத் திட்டிக் கொண்டிருந்தது.
என்னசார் இது. இவ்வளவு கோபமா இருக்கீங்க? போறாரு விடுங்க’.
ஏம்மா சாந்தி . . . !  அந்தக் கட்டைல போறவனப் பாத்தா ஒனக்குக் கோவம் வரலயா?’
நான் ஏன் சார் கோபப்படணும்? பாவம், போகட்டும் விடுங்க சார்’.
நீ ஓர் அபூர்வப் பிறவிம்மா!’
பரந்தாமன் சார் சொன்னதைக்கேட்டு எனக்குக் குழப்பமாக இருந்தது. எதற்காக இவர் இப்படி டென்ஷனாகிறார்? என்னை ஏன் சம்பந்தமில்லாமல் புகழ்கிறார்?
இவனெல்லாம் வாந்திபேதி வந்து போய்ச்சேராம இருக்கானுங்களே? இவன் பொண்ணுக்கு ஸ்காலர்ஷிப்பா வேணும்? நான் அந்த செக்ஷன் சுந்தர்கிட்ட சொல்லி அவனுக்கு உதவித்தொகை கிடைக்காமப் பண்றேன் பாரு . . .’
பரந்தாமன் சாருக்கு ஏன் இந்தக் கோபம்?
அவனுக்கும் உங்களுக்கும் என்ன சார் பகை?’
ஏன் அவனுக்கும் எனக்கும் பகை இருந்தாத்தானா? நான் என்ன உப்பு போட்டு சோறு திங்கல? எனக்குச் சொரண இல்ல? எத்தனமொற என்ன நீ அப்பா மாதிரின்னு சொல்லியிருக்கே? உன் அப்பாவா இருந்தா கோபப்பட மாட்டாரா?’
என் அப்பா அவர்மீது ஏன்சார் கோபப்படணும்?’
தன் பொண்ணக் கட்டிக்கிட்டு நிர்க்கதியா விட்டுட்டுப் போனவனப் பாத்து எந்த அப்பா ஆத்திரப் படாம இருப்பார்?’
யாரு சார் வந்தது?’
ஏம்மா? அவன நீ சரியா பாக்கலையா? உன் புருஷன்தான் வந்திருந்தான் . . .’
பரந்தாமன் சார் இன்னும் ஏதேதோ அவனை வசைமாரி பொழிந்து கொண்டிருந்தார். பின்னோக்கிச் சென்ற என் கவனத்தில் அச்சொற்கள் தெளிவின்றி ஒலித்தன.
வந்தவன் என் புருஷனா . . . ?
நான் கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்று, கருப்பு கவுன் அணிந்து, பட்டத்தை வாங்கிப் புகைப்படம் எடுத்து வீட்டு ஹாலில் மாட்டி மகிழ்ந்துகொண்டிருந்த வேளை. . .
ஆங்கில அறிவு அரசுப் பணித் தேர்வில் வெற்றிபெற துணைபுரிந்தது.
அகால மரணமடைந்தவிட்ட அப்பா. அப்பா இல்லாத குடும்பத்தில் அண்ணனுக்குத்தானே பொறுப்பு அதிகம். தங்கைக்கு மணம் செய்வித்தால்தான் அவன் நிம்மதியாகத் திருமணம் செய்துகொள்ள முடியும்.
பாவம். அவனுக்கும் அனுபவம் இல்லை. வந்த வரனை விட்டுவிட விரும்பாமல் எனக்கு அவசரக் கல்யாணம் செய்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட நினைத்தான்.
அந்தக் காலத்தில் எனக்கு மட்டும் என்ன தெரிந்திருந்தது? அண்ணன் சொன்னான். கேட்டுக் கொண்டேன்.
என்ன படிச்சிருக்காருண்ணா?’
இதோ பாரு. நம்ம சக்திக்கு ஒன் அளவுக்குப் படிச்சவன என்னால தேடமுடியாது. ஏதோ நல்ல பையனா? சம்பாதிக்கிறானா? அவ்வளவுதான் பாக்கணும்!’  
அண்ணனின் பொறுப்புணர்வை அக்கம் பக்கத்தினர் மெச்சிக்கொண்டார்கள்.
புகைப்படத்தில் அவன் முகம் சுமாராகவே இருந்தது.
தலையாட்டினேன். தலை நீட்டினேன்.
தாலி கட்டிய உடனேயே தாலி கட்டியவன் சுயரூபம் தெரிந்துவிட்டது.
அவன் வீட்டிற்குக் காரில் செல்லும்போதே நடு வழியில் காரை நிறுத்தினான்.
சுகுமார், இந்தா பாரு . . . இனிமே இவ சம்பாதிக்கறதுல ஒரு சல்லிக்காசு ஒங்க வீட்டுக்குக் கொடுக்க முடியாது. இவ சம்பாதிக்கறதுல ஏதாச்சும் கெடைக்கும்னு நெனப்பிருந்தா அந்த நெனப்ப இப்பவே விட்டுப்புடணும். இல்லன்னா இதோ இதே கார்ல அவள திருப்பிக் கூட்டிட்டுப் போயிடு’ - தாட்சண்யமின்றிச் சொன்னான் அவன்.
அண்ணனுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை. எனக்கும்தான்!
அண்ணன் மௌனம் அவனுக்குச் சாதகமானது.
அன்றோடு என் பிறந்த வீட்டுத் தொடர்பு அறுந்து போனது.
கல்யாணமாயிட்டா வாழ்வோ சாவோ அது வெளியில தெரியக்கூடாது. தெரியறமாதிரி நடந்துகிட்டா அவ நல்ல பொண்ணு இல்லஎன்று கட்டுதிட்டத்தில் வாழ்ந்த தாயினால் வளர்க்கப்பட்ட நான் - காலம்காலமாகப் பெண்குலத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட வலையில் கட்டுண்டு கிடந்த நான் - அதன் இறுகிக்கிடந்த முடிச்சுகளைத் தளர்த்தக்கூட எந்தவித யோசனையும் செய்யவில்லை.
முதல்மாதச் சம்பளத்தை அப்படியே கொண்டுபோய் அவனிடம் கொடுத்தேன்.
சம்பள ரசீதை எடுத்துப் பார்த்தான். சம்பளப் பணத்தை எண்ணிப் பார்த்தான்.
அம்பது ரூபா கொறயுதே?’
ஆபிஸ்ல பிடிச்சுக்கிட்டாங்க’.
ஆபிஸ்ல பிடிக்கறதுதான் இதுல போட்டிருக்கே?’
அவுட்சைடு ரெகவரி சம்பள ரசீதுல போட மாட்டாங்க.’
அது என்ன எழவு? நான் படிக்காதவன்னு என்னையே ஏமாத்தறயா? உன் அம்மாவுக்குப் பணத்தைக் கொடுத்திட்டு இங்கவந்து நாடகம் ஆடறியா?’
அவுட்சைடு ரெகவரி பற்றி அவனுக்கு என்னால் விளக்க முடியவில்லை. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடாது என்பார்கள். அந்த மூர்க்கனுக்கு என்னால் எப்படி விளக்க முடியும்?
அவன் மூர்க்கன் என்றுதான் முதலில் நினைத்தேன்.
பிறகுதான் தெரிந்தது அவன் காமாந்தகன் என்று - அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதென்று.
என்னை மணந்துகொண்டபின் ஏற்பட்ட தொடர்பா? முன்னாலேயே இருந்ததா? ஆராய்ச்சி செய்யக் கூடத் தெரியாத அப்பாவியாக இருந்தேன்.
அந்தப் பெண் இப்போது ஏன் குறுக்கே வந்தாள்?
நான் யாரை நொந்து கொள்வேன்?
அப்பாவியாக என்னை வளர்த்துவிட்ட என் அன்னையையா?
தன் சுமையை இறக்கிவைத்தால்போதும் என்று அவசரப்பட்டுவிட்ட என் அண்ணனையா?
என்னை எதற்காக மணந்துகொண்டோம் என்று தெரியாமல் தாலிகட்டிய கணவனையா?
இன்னொரு பெண்ணுக்குத் துன்பம் இழைக்கலாமா என்று எண்ணிப் பார்க்காத அந்தக் கல்நெஞ்சக்காரியையா?
திருமணத்திற்கு முன்னதான தொடர்பு என்றால் திருமணம் நடக்காமல் தடுத்து அவனை அவள் மணந்து கொண்டிருக்க வேண்டும்.
அத் தொடர்பு பின்னால் ஏற்பட்டது என்றால் மணமானவனை விட்டு நீங்கி இருக்கவேண்டும்.
என்னிடத்தில் என்ன இல்லை?
கண்ணாடி முன் நின்றேன்.
சிவப்பாக இருந்தேன். வட்ட முகம். அழகாகவே இருந்தேன். நான் அழகு என்பதை நான் மட்டும் சொல்லவில்லை. என் வகுப்புத் தோழிகள் சொல்லி இருக்கிறார்கள். அக்கம்பக்கத்தினர் சொல்லியிருக்கிறார்கள். சொந்தக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கல்லூரியில் படித்தும்கூட எனக்கு ஆண் நண்பர்கள் யாரும் இல்லையென்று அக்கம்பக்கத்தினர் சிலாகித்துப் பேசுவார்கள்.
அடக்கம் . . . ? என்னை அம்மா அடக்கி அடக்கி வளர்த்தார்கள். என் சந்தோஷங்களைக்கூட நான் அடக்கமாகத்தான் அனுபவிப்பது வழக்கம். அதிர்ந்துகூட பேச மாட்டேன்.
என் கணவன் வீட்டுச் சொந்தங்கள் அனைவருக்கும் என்னைப் பிடித்துப்போய்விட்டது. அவனுக்குத் தவிர . . .
எனக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்தான்.
நான் அடங்காதவள் என்றான்.
படித்த திமிர் என்றான்.
நான் யார் யாருடனோ தொடர்பு வைத்திருக்கிறேன் என்றான்.
எதற்குமே எனக்குப் பொருள் விளங்கவில்லை.
என் அரசாங்க உத்யோகமும் கைநிறைய வாங்கும் சம்பளமும்கூட அவன் என்னை விவாகரத்து செய்வதைத் தடுக்கவில்லை.
என்னை விவாகரத்து செய்யவில்லை என்றால் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைவியாகத் தன்னை அவன் திருமணம் செய்துகொள்ள இயலாது என்பதை அவள் வற்புறுத்தி இருப்பாள் போலும்.
எத்தனையோ பேர் எனக்காக, எனக்குத் தெரியாமலேயே அவனிடம் வாதிட்டார்கள்.
விவாகரத்து தராமல் அவனோடு என்னை வாழவைக்க வேண்டும் என்று வக்கீலும் நீதிபதியும்கூட ஆசைப்பட்டார்கள். முயற்சியில் தோற்றுப்போனார்கள்.
கடைசியில் அவனிடமிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டுமானால் விவாகரத்து தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்து அவர்களே விவாகரத்து வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.
ஒன்றரை வருடத்தில் என் திருமண வாழ்க்கை பூத்துப் பிஞ்சாகி வெம்பி வீழ்ந்துவிட்டது.
அண்ணன் திருமணம் செய்துகொண்டு தனியே போய்விட்டான்.
சிறகடித்து வெளியுலகம் காணப் பறந்த குஞ்சு அம்மாவின் கூட்டிற்கே திரும்பிவிட்டது.
எங்கே தவறு? என்ன தவறு? யாரிடம் தவறு? என்று யோசித்து யோசித்தே விடைகாண முடியாமல் தவித்தேன்.
மனநோய் முற்றுவதற்குள் என்னை நானே தேற்றிக் கொண்டு வாழப் பழகிவிட்டேன்.
என்னை நிர்க்கதியாக்கிவிட்ட அவனைச் சபிக்கக் கூட எனக்குத் தெரியவில்லை.
இவனுங்கல்லாம் இங்கவந்து நம்ம தாலிய அறுக்கறானுவ . . .’ - இன்னும் குமுறிக்கொண்டிருந்தார் பரந்தாமன் சார்.
என் கழுத்துச் செயினைத் தொட்டுப் பார்த்தேன். எல்லோரும் அது தாலிச்சரடு என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் அதில் இப்போது தாலி என்று எதுவும் இல்லை. அவன் கட்டிய தாலியை நானும் பல ஆண்டுகள் சுமந்துகொண்டிருந்தேன். ஏதோ ஒரு தருணத்தில் ஒரு ஞானோதயம் தோன்றியது. அவனையே என் மனத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டபிறகு அவன் கட்டிய தாலி மட்டும் ஏன் சுமையாக?
அவனோடு ஒட்ட முயற்சித்தும் ஒட்டாமல்போன ஒன்றரை வருட வாழ்க்கையில் அவன் முகம்கூட என் மனத்தில் ஆழப் பதியவில்லை. சிற்சில நிகழ்ச்சிகள் தவிர வேறெதுவும் என் மனத்தில் பிம்பங்களாக்கப்படவில்லை.
இப்போது அவன் பெயர்கூட எனக்கு மறந்து விட்டது.
அவன் உருவம்கூட மறந்துவிட்டது.
இன்று வந்தவனை நான் நன்றாகத்தான் பார்த்தேன். இருந்தாலும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. உள்ளூரிலேயே இருந்தால்கூட எத்தனையோ பேரை நாம் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அப்படித்தான் அவனும் ஆகிப்போனான். உள்ளூரில் அவன் இருந்தும்கூட அவனை உண்மையிலேயே என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
அவன் நாளை என்னிடமே வந்தால்கூட அவனை என்னால் அடையாளம் காண இயலுமா என்பது சந்தேகமே!


நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி,  ஆசைமுகம் மறந்துபோச்சே,  காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2009,  1-10.