முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 12
சனி, ஞாயிறு கடந்து
திங்கட் கிழமை புது தைரியத்துடன் சந்திரனை
எதிர்கொண்டாள் சுந்தரி.
'இதோ பாருங்க, நான்
சொல்ற இதுக்காவது நீங்க ஒத்துக்கிட்டுதான் ஆகணும்!'
கேள்விக்குறியோடு நோக்கினான் சந்திரன்.
'நீங்க ஒன்னும் ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்க வேணாம்! ஆனா ஒரு குழந்தைய
மட்டும் பெத்துக்கோங்க.'
'என்ன ஔறுறே சுந்தரி! ஒனக்குப்
பைத்தியம் புடிச்சிடுச்சா?'
'எனக்கு ஒன்னும் பைத்தியம் பிடிக்கல, நடக்கறதத்தான்
சொன்னேன்!'
'விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டுச் சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம். நான்தான் எல்லாத்தையும் மறைக்காம உங்கிட்ட சொல்லிட்டேனே.'
'அதனாலதான் சொல்றேன். நீங்க உங்க மனைவிக்குத் துரோகமா
கல்யாணம் பண்ணிக்க வேண்டாம், ஆனா கொழந்தைய மட்டும்
பெத்துக்கோங்க!'
'அதெப்படி முடியும்?'
'ஏன் முடியாது? நான்
பெத்துத் தாரேன்!'
விக்கித்துப் போனான் சந்திரன். 'நீ.
. . நீ. . . என்ன சொல்றே?'
'கடவுள் என் கனவுல வந்து,
உன்னால சந்திரன் சாருக்குக் கட்டாயம் புள்ள பெத்துத் தரமுடியும்னு சொன்னாரு! உங்களுக்குச் சந்ததி உண்டுன்னாரு! அவரே நமக்குப் புள்ளையா
பொறப்பாருன்னும் சொன்னாரு!'
நம் அடி மனத்தில்
அழுந்திக் கிடக்கும் ஏக்கங்கள், நினைவலைகள் ஆகியனவே கனவுகளாக மேலெழுகின்றன என்று மாணவர்களுக்குப் பாடமாக எடுத்த பிராய்டின் கொள்கை அன்று சந்திரனுக்கு மறந்து போனது. அதனை அவன் சுந்தரிக்கு
விளக்க விரும்பவில்லை.
அசத்தியமாக அவள் சொன்ன ஒன்று
சத்தியமாவதில் அவனுக்கு எந்தவிதத் தடையும் இருக்கவில்லை.
'சரிதான்! உனக்குச்
சாமிப் பைத்தியம் முத்திப் போச்சு!'
'அப்படில்லாம் சொல்லாதீங்க! என் மேல ஆணையா
சொல்றேன். நான் உண்மையத்தான் சொல்றேன்.
அந்தக் கடவுள் பாலாஜியே என் வயித்துல வந்து
பொறக்கறதாச் சொன்னாரு!'
'அது மட்டுமில்லீங்க, நமக்குக்
கொழந்தை இல்லையேன்னு ஏங்கிக்கிட்டு இருக்கற உங்க மனைவிக்கு என்னால
வர கொழந்தயப் பரிசாக் கொடுங்க, அவங்க அத வளக்கறதுல எவ்வளவு
சந்தோஷப் படுவாங்க தெரியுமா? அது உங்க ரத்தம்
இல்லையா? அதக் கொஞ்சும் போதெல்லாம்
எப்படிப் பூரிப்பாங்க தெரியுமா? உங்களுக்காக இல்லாட்டாலும் நீங்க மேடத்துக்காவது இந்தத் தியாகத்தப் பண்ணியே ஆகணும். தாய்மை அடையலையேன்னு அவங்க படற வேதன ஒரு
பொண்ணான எனக்குத்தான் தெரியும். அவங்க பக்கமா நீங்க யோசிச்சுப் பாருங்க!'
நான்கு நாட்கள் முன்னால்தான் தாட்சாயணியை மலடி என்று பழித்த
சுந்தரி இன்று சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மேடம் என்றும் தாய்மை என்றும் கதைகளை அடுக்கினாள்.
'இது சாத்தியமே இல்லை
சுந்தரி!'
'எல்லாம் சாத்தியந்தான்! இந்த உலகத்துல எத்தனையோ
அதிசயங்கள் நடக்கலையா? அதுல இதுவும் ஒன்னுன்னு
நெனச்சிக்கோங்க!'
'நீ போய் . . . ?
உனக்கென்ன வயசு? எனக்கென்ன வயசு? நான் போய். . . ? நோ
நோ. . .!' வார்த்தைகள் முழுமையாக வெளிவராமல் சந்திரனின் தொண்டைக்குள் சிக்கி உடைந்தன.
சந்திரனிடம் தன் யோசனையைக் கூறியவுடன்
'என்ன பாழாப்போன புத்தி ஒனக்கு' என்று தன் கன்னத்தில் 'பளார்'
என்று அறைந்துவிடாமல், குழப்பத்தோடு அவன் தடுமாறியதே அவளுக்குப்
பாதித் தெம்பை அளித்தது. அவனைக் கரைத்துவிடலாம் என்ற தைரியத்தையும் கொடுத்தது.
அதற்கடுத்த நாட்களிலெல்லாம் அவளுடைய பேச்சு ஒரு வட்டத்திலேயே சுற்றிச்
சுற்றி வந்தது. இப்போதெல்லாம் தினமும் கடவுள் தூக்கத்தில் மட்டுமல்ல, விழித்திருக்கும்போதே வருகிறார் என்றாள். அவ்வப்போது கடவுளின் அசரீரியால் தன் உடல் சிலிர்த்து
மயிர்கூச்செறிந்து நிற்பதைக் காட்டினாள். அவள் சொற்களுக்கு அவள்
உடலும் ஒத்துழைத்தது.
'நிச்சயமா ஆம்பள கொழந்ததாங்க!' என்றாள். அந்தக் கடவுளே வந்துபிறக்கக் காத்திருக்கிறான் என்றாள். அக்குழந்தை பிறந்ததும் அவள் இறந்து விடுவாளாம்.
சந்திரனின் குழந்தையைத் தரிப்பதற்காக மட்டுமே அவளது உயிர் கொடுக்கப்பட்டுள்ளதாம். அவனது குழந்தையைப் பெற்றெடுத்த அடுத்த நொடி அவள் இறைவனது
பாதார விந்தங்களைச் சேர்ந்து விடுவாளாம் - இச் செய்திகளை எல்லாம்
தினம் தினம் சந்திரனின் காதுகளில் ஓதுவது ஒன்றையே அவள் நாட்படி நியமமாகக்
கொண்டாள்.
'இதுவரைக்கும் என் ஒடம்ப எந்த
ஒரு ஆம்பளயும் முழுசா பாத்ததில்லே, ஒருத்தனும் தொட்டதுகூட இல்ல. என் கற்பை நான்
நெருப்பா காப்பாத்தி வச்சிருக்கேன்.' என்று தன் கற்புக்கும் நடத்தைக்கும்
சுயவிளம்பரமும் அடிக்கடி செய்தாள்.
வேறொரு பெண் அந்த இடத்தில்
அவள் சொன்னதைக் கேட்டிருந்தால், 'அப்படின்னா மத்த பொம்பளைங்க எல்லாரும்
வேற ஆம்பளைங்களுக்கு ஒடம்ப காட்டிட்டா இருக்காங்க? எல்லா ஆம்பளையையும் பாத்து என்னத்
தொடு தொடுன்னு சொல்லிட்டிருக்காங்களா?' என்று கேட்டு அவளை மடக்கியிருப்பாள்.
ஆனால் சந்திரனுக்கோ அவள்
சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் நியூட்டன் வகுத்த அறிவியல் கொள்கைகளைவிட சிறப்புவாய்ந்த, தனித்தன்மை வாய்ந்த அரிய தத்துவங்களாகத் தெரிந்தன.
சந்திரனின் மௌனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவள் தொடர்ந்தாள்.
'ஒரே ஒரு முறை
மட்டும் என்கூடப் படுங்க. கர்ணன் மேல அருச்சுனன் மறுகணை
தொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செஞ்சிக் கொடுத்ததுபோல நீங்க அடுத்தமுறை முயற்சிபண்ண வேணாம்! ஒரு தடவைல நான்
உண்டாகலன்னா நான் சொன்னதெல்லாம் பொய்யின்னு
நெனச்சிக்கோங்க! அப்பறமா நான் இதப்பத்தி எப்பவுமே
உங்ககிட்ட பேசமாட்டேன்!' அவளைத் தன்னிடம் ஒப்புக்கொடுக்க முனைந்த விதம் சந்திரனை மெய்சிலிர்க்கச் செய்தது. எந்தப் பெண்ணும் நினைத்திராத ஒன்றையல்லவா இவள் உரைக்கின்றாள்?
இப்படிப்பட்ட காட்சிகள் பல படங்களில் ஏற்கெனவே
வந்துவிட்டன என்பதைச் சந்திரன் பாவம் அறியமாட்டான். ஏனென்றால் அவன் அதிகமாகத் திரைப்படங்களைப்
பார்ப்பதில்லை. அதனால் சுந்தரி விரித்த கபட நாடகப் படக்காட்சி
அவனுக்கு எந்தவித சந்தேகத்தையும் எழுப்பவில்லை.
'தனக்கு இனிக் குழந்தை பிறக்குமா?' என்று தன் மீதே சந்திரனுக்கு
இருந்த சந்தேகத்தையும் அவள் உடைத்தெறிந்தாள்.
'அதையுந்தான் பாத்திடுவோமே! நான் சொல்றது பலிக்குதா?
இல்லையா?ன்னு பாருங்க! எது
ஒன்னு தப்பாப்போனாலும் பேசாம நான் வெலகிப் போயிடறேன்.
நான் உங்களத் தொந்தரவு பண்ணமாட்டேன்!'
'அப்படிக் கடவுள் சொன்ன மாதிரி நான் உண்டாயிட்டன்னா கண்காணாத
எடத்துக்குப்போயி ஒரு கொழந்தையப் பெத்து
உங்க கையில கொடுத்துட்டு அடுத்த நிமிஷமே சந்தோஷமா கடவுள்கிட்ட போயி சேந்துடுவேன். நீங்க
அதுக்கு எந்தத் தடையும் சொல்லக்கூடாது'
தினம் தினம் அவள்
உரைக்கும் மந்திர உச்சாடனத்தைக் கேட்டு மெல்ல மெல்ல அவனது எதிர்ப்பு அடங்கிப்போனது.
அதன் பின்னர் அவள்
சொல்வதை ஆமோதிப்பதைப் போல் மெல்ல மெல்ல
அவன் தலையசைத்து ஆமோதித்தான்.
(தொடரும்)
No comments:
Post a Comment