முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 9
'என்ன சுந்தரி, வேலை
எல்லாம் ஆச்சா?' மதியம் அமர்ந்திருந்த சுந்தரியிடம் கேட்டான் சந்திரன்.
அவளோ எதையும் காதில்
வாங்கிக் கொள்ளாமல் ஏதோ சிந்தனையில் மூழ்கி
இருந்தாள்.
'ஏய் முண்டம்! (சற்றே
அன்பு மனத்திலிருந்து எட்டிப் பார்த்தது), என்ன பலத்த யோசனை?
உன்னத்தானே கேக்கறேன்!' அங்கிருந்த சாக் பீஸ் துண்டை
எடுத்துச் செல்லமாக அவள் மீது எறிந்தான்.
இந்த உலக நிஜத்திற்கு
வந்தாள் சுந்தரி. 'ஒன்னுமில்லை, ஒரு யோசனை!'
'என்ன யோசனை சொல்லேன்
கேட்போம். . . '
'எல்லாம் ஒங்க கொழந்தயப் பத்தித்தான்!'
'ஏய் அத விட்டா
ஒனக்கு எதையும் பேசத் தோணாதா?'
'எங்கள மாதிரி பொம்பளங்க கல்யாணம், குடும்பம், கொழந்த இப்படித்தான் எதையாச்சும் நினைச்சுக் கெடப்போம். இதைத் தவிர எங்களுக்கு வேற
என்ன தெரியும்?'
'அது நடக்காதுன்னுதான் நான்
ஏற்கெனவே தெளிவா சொல்லிட்டேனே!'
'நீங்க நெனச்சா ஆயிடுச்சா? கடவுள் நெனைக்கனும்! என் மனசுல ஒரு
அசரீரி சொல்லிக்கிட்டே இருக்கு. ஒங்களுக்கு நிச்சயமா ஒரு கொழந்த இருக்கு.'
'ஐயோ! ஒனக்கு எப்படி
புரிய வெக்கறதுன்னு எனக்குத் தெரியல. உன் கணக்குத் தப்பு
சுந்தரி!'
'நீங்கதான் கணக்கத் தப்பாப் போடுறீங்க! ஏன் ஒரு கணக்குக்கு
ரெண்டு வழி இருக்காதா? ஒரு
வீட்டுக்கு ஒரு வழிதானா இருக்கு?
கொல்லப்பக்க வழியும் தானே இருக்கு? ஒரு
பாதை சரியில்லைன்னா வேற பாதைல போய்ப்
பாருங்க! போகவேண்டிய எடம் வந்துடும்.'
- அறிவு ஜீவியாகப் பேசினாள் சுந்தரி. இவளுக்குள் இத்தனை அறிவா? வியந்தான் சந்திரன்.
'நீ என்னதான் சொல்ல
வர்றே? சுத்தி வளைக்காமச் சொல்லு, நான் கிளாசுக்குப் போகணும்.'
'நான் நேராவே சொல்லிடறேன்.
நீங்க ஏன் கொழந்தைக்காக இன்னொரு
கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது?' - குட்டையில் கல் எறிந்தாள் சுந்தரி.
'சேச்சே நீ என்ன பேசறே?
ஒரு கொழந்தைக்காக போயி கட்டின பொண்டாட்டிக்கு
யாராவது துரோகம் செய்வாங்களா?'
'யாரு துரோகம் செய்யச்
சொன்னாங்க? நீங்க என்ன ஊரு ஒலகத்துல
இல்லாததையா செய்யப் போறீங்க? முத தாரத்துக்குப் புள்ள
இல்லைன்னா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறது ஒன்னும் நம்ம நாட்டுல புதுசு
இல்லையே! தன் பேரு இந்த
உலகத்துல என்னென்னைக்கும் நெலச்சு நிக்கறதுக்கு ஒரு கொழந்த வேணாமா?
நெறைய வீடுங்கள்ல மொத பொண்டாட்டியே முன்ன
நின்னு தன் புருஷனுக்கு ரெண்டாவது
கல்யாணம் பண்ணி வெக்கறதில்லையா? சட்டம்கூட அத ஏத்துக்குமே!' - சமுதாயவியல்,
உளவியல், சட்டம் என்று அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளையவந்தாள் சுந்தரி.
'இருக்கலாம் சுந்தரி, ஊரு ஒலகத்துல இது
சாதாரணமா இருக்கலாம். ஆனா என் பொண்டாட்டி
இதுக்கு நிச்சயமாச் சம்மதிக்க மாட்டா'.
'இதப்பத்தி அவங்ககிட்ட பேசியிருக்க மாட்டீங்க!'
'அப்படி எல்லாம் ஒன்னுமில்ல, கல்யாணமாயி ஒரு ரெண்டு வருஷம்
இருக்கும். மெதுவா என் அம்மா இந்தப்
பேச்ச எடுத்தாங்க, பிள்ள இல்லைன்னா ரெண்டாங் கல்யாணம் செஞ்சுக்கறது தப்பில்லைன்னு ஜாடமாடையாச் சொன்னாங்க. அதக் கேட்டு என்
பெண்டாட்டி எரிமலையா கொதிச்சா! ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிச்சா! ஒங்க அம்மா இப்படியெல்லாம்
பேசறதா இருந்தா இனி அவங்க நம்மகூட
இருக்க வேணாம்னு சொல்லிட்டா. அதுக்கப்பறம் எங்க அம்மா சாகறவரைக்கும்
அந்தப் பேச்சையே எடுக்கல.'
'சரியான பயந்தாங்கொள்ளி மாமியாரா இருந்திருக்காங்களே! நீ சும்மா இரு
மலடின்னு சொல்லிட்டுக் கொறயில்லாத நல்ல பொண்ணாப் பாத்து
உங்களுக்கு அவங்க கட்டிவெச்சிருக்க வேண்டாமா?' - இதுவரை சந்திரனின் மனைவியை 'மேடம்' என்று மரியாதையாகக் கூறி வந்தவள் மெல்ல
மெல்லத் தான் கொடுத்துவந்த மரியாதையைக்
குறைக்கத் தொடங்கினாள்.
தன் கீழ்க் கடைநிலை
ஊழியம் செய்யும் அதிகப் படிப்பும் அறிவு முதிர்ச்சியும் அந்தஸ்தும் இல்லாத சாதாரணப் பெண்ணொருத்தியால் தன் மனைவிக்கு ஏற்பட்ட
மரியாதைக் குறைவைச் சந்திரன் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அதனைச் சுந்தரியும் கவனிக்கத் தவறவில்லை.
'இன்னொரு கல்யாணமா? வாய்ப்பே இல்லை. அதெப்படி ரெண்டு கல்யாணம் பண்ணிக்க முடியும்?'
'ஏன் முடியாது? பெரிய
பெரிய அரசியல்வாதிங்க ரெண்டு கல்யாணம் பண்ணிக்கலையா? பெரிய பெரிய பணக்காரங்க அங்கங்க ஒரு கல்யாணம் செஞ்சுக்கறது
இல்லையா? உங்க சொத்துக்கென்ன பஞ்சமா?'
'ஏன் நாம கும்புடற
சாமிங்கள எடுத்துக்கோங்க! பார்வதி இருக்கும்போது கங்கையக் கல்யாணம் செஞ்சிக் கிடலயா சிவபெருமான்! தெய்வானை இருக்கும்போது முருகன் கொறத்திப் பொண்னு வள்ளியக் கல்யாணம் பண்ணிக்கலையா? பாமா
ருக்மணி ரெண்டு பேரைக் கிருஷ்ணன் கல்யாணம் பண்ணிக்கலையா?' - புராணக் கதைகளை எல்லாம் எடுத்துக்காட்டினாள் சுந்தரி.
'சுந்தரி. . . நீ
பேசாம ஆய்வுக் கட்டுரை எழுதலாம்! போ! போ!
நடக்காததப் பேசி மனசக் காயப்
படுத்தாதே'
'இன்றைக்கு இது போதும். மிச்சத்தை
நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்.' - நடையைக்
கட்டினாள் சுந்தரி.
இதுவரை தானுண்டு தன் பள்ளி வேலையுண்டு,
வீடுண்டு என்று அமைதியாக வாழ்ந்துவந்த சந்திரனை நன்றாகவே குழப்பி விட்டாள் சுந்தரி.
ஆமை புகுந்த வீடும்
ஆமினா புகுந்த வீடும் உருப்படாது என்பர். அந்தப் பள்ளியில் சுந்தரி ஆமைபோல் புகுந்து ஊழ்வினையைச் சந்திரன் மேல் ஏற்றினாள்.
இதுவரை மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லி அவர்களை எல்லாம் நல்வழிப்படுத்திய சந்திரன் தேய்பிறையாகி மெல்ல மெல்ல ஒளியிழந்து வந்ததை அவனாலேயே அறிந்துகொள்ள முடியவில்லை.
சந்திரனைப் பிடித்த ராகுவாகச் சுந்தரி அவனைப் பீடித்தாள். அடுத்தது சந்திர கிரகணம்தானே!
(தொடரும்)
No comments:
Post a Comment