முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 16
ஒருநாள் சுந்தரி வெகு குதூகலத்துடன் பள்ளிக்கு
வந்தாள். அவள் நெற்றி நிறைய
விபூதியும் குங்குமமும் சந்தனமும் பலப்பல வண்ணங்களில் காட்சியளித்தன. ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு அவள் சென்றிருக்க வேண்டும்
என்பதை அத்தீற்றல்கள் பறைசாற்றின. கடவுளின் பெயரை எடுப்பார் கைப்பிள்ளையாக அவள் இஷ்டத்திற்கு மானாங்கன்னியாகப்
பயன்படுத்திக் கொண்டதையும் மன்னிக்குமாறு வேண்டியும் அவள் கோயிலுக்குப் போயிருக்க
வேண்டும்!
'என்ன இன்னைக்கு விசேஷம்?'
'எல்லாம் நல்ல சேதிதான். நான்
அப்பவே சொன்னேனே. நீங்க என்னைக் கேலி பண்ணுனீங்க, கடவுள்
அனுக்கிரகம் இல்லைன்னா இப்படி நடக்குமா? பாருங்க நான் சொன்ன மாதிரியே
ஆயிடுச்சி! - விஷயத்தைச் சொல்லாமல் ஆர்வத்தைத் தூண்டினாள் சுந்தரி.
தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த
முடியவில்லை சந்திரனால். அவள் சொல்லவந்தது இதுவாகத்தான்
இருக்கும் என்று சற்றே ஊகித்துக்கொண்டான். தேர்வு எழுதிவிட்டுத் தான் கட்டாயம் தேறிவிடுவோம்
என்ற நம்பிக்கை இருந்தாலும் 'ரிசல்ட் என்னாகுமோ?' என்று தவிக்கும் மாணவனின் ஆர்வம் சந்திரனைப் பற்றிக் கொண்டது.
வழக்கமாகத் தான் தலைகுளிக்கும் நாட்கள்
தள்ளிப்போனதை மிகுந்த மகிழ்ச்சியோடு சந்திரனிடம் அறிவித்தாள் சுந்தரி. தான் சொன்ன அசரீரி
பலித்து விட்டதை எடுத்துரைத்தாள்.
சினிமாவில் வில்லன் ஒரு பெண்ணைக் கற்பழித்து
விடுவான். அல்லது கதாநாயனுடன் உணர்ச்சி வேகத்தில் ஒரே ஒருமுறை கலந்திருப்பாள்.
இதனை மறைத்துவிடலாம் என்று அவள் நினைப்பாள். இரண்டு
மாதம் கழித்து 'உவ்வே' என்று அவள் வாந்தி எடுத்து
உண்மை வெளிப்பட்டுவிடும். இப்படித் திரைப்படத்தில் கண்டதுண்டு. இது உண்மையா? அல்லது
கதைக்காகச் சொல்லப்பட்டதா? இத்தகைய சந்தேகங்களை வெட்கத்தைவிட்டு யாரிடம் கேட்கமுடியும்? இவற்றைப் பற்றி வினவினால் கேட்பவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்கள்?
சில சந்தேகங்கள் இப்படி விடை காணப்படாமலேயே . . . இவற்றை அவரவர்
ஊகத்துக்கு விட்டுவிட வேண்டியதுதான்!
சந்திரனும் இது முற்றிலும் 'கடவுளின்
கிருபை' என்று மனதார நம்பினான். அந்தத் திருப்பதி வெங்கடாசலபதியே வந்து தனக்குப் பிறக்கப் போகிறான் என்று அவனுக்கும் எண்ணம் வலுத்தது. இல்லையென்றால் முதற் பந்தே பவுண்டரி ஆகுமா?
சில நாட்களாகவே சுந்தரி
அடிக்கடி மயக்கமாக இருக்கிறது என்றாள். அவ்வப்போது வாந்தி வருவதுபோல் பின்னணி ஒலி கொடுத்தாள். தன்
அண்ணியின் பார்வையிலிருந்து தன் வாந்தியை மறைக்கப்
பாடுபடுவதாகக் கோடிட்டுக் காட்டினாள். அந்த நேரத்திற்கு ஆறுதல்
கூறிவிட்டுத் தன் பணிகளில் மூழ்கப்
பார்த்தான் சந்திரன். ஆனால் அவன் மனத்தில் 'அடுத்து
என்ன செய்வது?' என்ற திட்டம் சரியான
வரைவுக்கு வராமல் திணறியது.
(தொடரும்)
No comments:
Post a Comment