Tuesday, 6 August 2019

நல்லந்துவனார் (பரிபாடல்) பாடல்களில் சொல்லடுக்குகள்


நல்லந்துவனார் பாடல்களில் சொல்லடுக்குகள்

            மொழியில் புலப்பாட்டு நெறிகளுக்கான பல்வேறு கூறுகள் பொதிந்து கிடக்கின்றன. அக் கூறுகள் மொழியின் முழுமைத் தன்மைக்குக் காரணிகளாய் அமைகின்றன. அக் கூறுகள் படைப்பாளரின் தனித்தன்மையை அறிந்துகொள் வதற்கும் பயன்படுகின்றன எனலாம். அதனால் குறிப்பிட்ட படைப்பாளரின் மொழிப் புலப்பாட்டுக் கூறுகளை அறிந்துகொள்ளுதல் அவரது தனித்துவத்தை வரையறுக்க உதவிபுரியும் எனலாம். அவ்வகையில் பரிபாடலில் நான்கு பாடல்களைப் பாடியுள்ள நல்லந்துவனாரின் மொழிப் புலப்பாட்டு உத்திகளைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது. மொழிப்புலப்பாட்டு உத்திகளில் ஒன்றாகிய சொல்லடுக்குகள் பற்றிய ஆய்வு இங்கு நிகழ்த்தப்பெறுகிறது. அவ்வகையில் சொல்லடுக்குகளை வகைப்படுத்தி அவற்றை நல்லந்துவனார் பாடல்களில் எங்ஙனம் கையாண்டுள்ளார் என்பதைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
                சொல்லடுக்குகளை ஒலியடுக்கு, சொல்லடுக்கு, எதிரொலிச் சொல்லடுக்கு என மூவகைப்படுத்துவர்.
ஒலியடுக்கு
                அளபெடை என்று இலக்கண நூலார் குறிப்பிடும் சொற்றொடர் அமைப்பை ஒலியடுக்கு என்கிறோம். உயிர் நெட்டொலியின் பின்னர்க் குற்றொலி தொடர்ந்து இடம்பெற்று ஒலியடுக்காகத் தோற்றம்பெறுகிறது. இத்தகைய ஒலியடுக்கை நல்லந்துவனார் தம் பாடல்களில் அதிகமாகக் கையாளுவதைக் காணமுடிகிறது.
                சான்றாள ரீன்ற தகாஅத்த காஅமகாஅன் (8.57) என்னும் அடியில் ஆகாரத்தை அடுத்து அதன் குற்றொலியாகிய அகரம் அடுக்கிவரக் காணலாம். ஒரே அடியில் தகாஅ, காஅ, மகாஅ என மூன்று ஒலியடுக்குகள் அமைந்து சிறப்பிக்கக் காண்கிறோம். 'பைஞ்சுனைப் பாஅ' (8.112) என்னும் பகுதியிலும் அகர ஒலியடுக்கு அமைந்துள்ளது.
குருதிகோட் டழிகரை தெறிபெறக் கழீஇயின்று (20.5)
நீரூர் அரவத்தாற் றுயிலுணர் பெழீஇத் (20.15)
குவளை குழைக்காதின் கோலச் செவியின்
இவள்செரீஇ நான்கு விழிபடைத் தாளென்று (11.97-98)
எனவரும் பகுதிகளில் ஈகாரத்தை அடுத்து அதன் குறிலாகிய இகரம் அடுக்கிவரக் காணலாம்.
தானாற்றங் கலந்துடன் தழீஇவந்து தரூஉம் வையை
                                                                                                (20.11);
நெரிதரூஉம் வையைப் புனல் (11.15);
தென்ற லசைவரூஉஞ் செம்மற்றே (8.27);
மாலைக்கு மாலை வரூஉம் (8.49);
. . . கள் ளுண்ணூஉப் 
பருகு படிமிட றென்கோ (11.28-29);
கன்றிடிற் காமம் கெடூஉ மகளிவன் (6.98);
ஆயத்துட னில்லாள் ஆங்கவன் பின்றொடரூஉ (11.111)
எனவரும் சான்றுகளில் ஊகாரத்தை அடுத்து உகரம் அடுக்கிவந்து ஒலியடுக்கு நயத்தை ஏற்படுத்துகிறது.
                நனவிற் சேஎப்ப (8.104) என்பதில் ஏகாரத்தை அடுத்து எகரம் அமைந்து ஒலியடுக்கை ஏற்படுத்துகிறது.
                ஐகாரம் அளபெடுக்கும்போது இகரம் பெறுவது இயல்பாகும். அவ்வகையில்,
புகைவகை தைஇயினார் பூங்கோதை நல்லார்
தகைவகை தைஇயினார் தார்
வகைவகை தைஇயினார் மாலை (20.27-29)
எனவரும் பகுதியில் 'தைஇ' என்னும் ஒலியடுக்கு மூன்று அடிகளிலும் இடம்பெற்று ஓசைநயம் அளிக்கிறது. அதேபோன்று, 'நிலமறை வதுபோன் மலிர்புன றலைத்தலைஇ' (6.3) என்னும் அடியையும் சான்றாகச் சுட்டலாம்.
                இவ்வாறு , , , , என (, தவிர்ந்த)  ஐந்து நெட்டெழுத்துகளிலும் பல ஒலியடுக்குகளை அமைத்துள்ளார் நல்லந்துவனார். இதனால் அளபெடை எனச் சுட்டப்பெறும் ஒலியடுக்குகளை அதிகமாகக் கையாளுதல் நல்லந்துவனாரின் தனித்தன்மையாக அறியப்படுகிறது.
சொல்லடுக்கு
            சொற்கள் தம்முன் தாம் பயின்று வரும்போது அவற்றைச் சொல்லடுக்குகள் என்பர். அதாவது ஒரு தொடரில் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அடுக்கி வரும்போது அதனைச் சொல்லடுக்கு என்று குறிப்பிடு கிறோம். சொல் ஒரே தன்மையில் அடுக்கிவருதல் மட்டுமன்றி வெவ்வேறு பெயர்ச்சொற்களோ அல்லது வினைச் சொற்களோ அல்லது ஒரே வகையான இலக்கணக் கூறுபாட்டில் அடங்கும் சொற்களோ அடுத்தடுத்து வந்தாலும் அவற்றையும் சொல்லடுக்குகள் என்றே மொழியியலாளர் குறிப்பிடுவர்.
இயல்பும் திரிபும்
                தொடரில் சொற்கள் அடுக்கிவரும்போது அவை இயல்பாய் வடிவம் மாறாமல் வருவதுண்டு. சில சமயங்களில் புணர்ச்சி விதிகளின்படி திரிபு பெற்றும் வரும். இத்தன்மையின் அடிப்படையில் இயல்பாய் அடுக்குதல், விகாரமாய் அடுக்குதல் எனச் சொல்லடுக்கு இருவகைப்படும்.
இயல்பாய் அடுக்குதல்
கடல்குறை படுத்தநீர் கல்குறை படவெறிந்
துடலே றுருமின மார்ப்ப மலைமாலை
முற்றுபு முற்றுபு பெய்துசூன் முதிர்முகில் (20.1-3)
என்னும் பகுதியில் முற்றுபு என்னும் சொல் எவ்விதத் திரிபும் இன்றி இயல்பாய் அடுக்கிவரக் காணலாம்.
விகாரமாய் அடுக்குதல்
                'அயலய லணிநோக்கி ஆங்காங்கு வருபவர் (20.32)' என்னும் அடியில் 'அயல்' என்னும் சொல் தம்முள் 'அயல் அயல்' என அடுக்கிவரும்போது அயலயல் என்று திரிபுடன் இடம்பெறக் காண்கிறோம்.  அவ்வாறே ஆங்கு ஆங்கு என்பதும் புணர்ச்சிவிதிப்படி ஆங்காங்கு என்று திரிபுபெறக் காணலாம்.
                இரட்டைக்கிளவியும் அடுக்குத்தொடரும் மக்களின் பேச்சுவழக்கிலும் இலக்கிய வழக்கிலும் பரவலாகப் பயன் படுத்தப்பெறும் சொல்லடுக்கு வகைகளாகும். இவ்விரண்டும் தவிர்ந்த பிறவகைச் சொல்லடுக்குகள் பெயர், வினை, பெயரெச்சம், வினையெச்சம், உருபு என்னும் வகைகளில் அமையும்.
பெயரடுக்கு
                பல பெயர்ச்சொற்கள் ஒன்றன்பின் ஒன்று அடுக்கிவரும்போது அதனைப் பெயரடுக்கு என்று கூறுகிறோம்.
புண்மிசைக் கொடியோனும் புங்கவ மூர்வோனும்
மலர்மிசை முதல்வனு மற்றவ னிடைத்தோன்றி
உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும்
மருந்துரை யிருவருந் திருந்துநூ லெண்மரும்
ஆதிரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரு நன்றிசை காப்போரும்
யாவரும் பிறரு மமரரு மவுணரும்
மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும் (8.2-9)
என்னும் பகுதியில் பதினான்கு பெயர்ச்சொற்கள் அடுக்கிவரக் காண்கிறோம். இவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்ச்சொற்கள் அடுக்கிவருவதை நல்லந்துவனார் பாடல்களில் பரக்கக் காணலாம்.
வினா அடுக்கு
                யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு (8.72) என்னும் அடியில் யார் என்னும் வினாச்சொல் நான்குமுறை அடுக்கிவந்து நயம்பயக்கக் காணலாம்.
வினையடுக்கு
                அடுக்கிவரும் சொற்கள் வினைச்சொல்லாயின் அச் சொல்லடுக்கு வினையடுக்கு எனப்படும்.
                களிப்பர் குளிப்பர் காமங் கொடிவிட /அளிப்ப துனிப்ப வாங்காங் காடுப (6.103-104) என்னும் பகுதியில் களிப்பர், குளிப்பர், அளிப்ப, துனிப்ப, ஆடுப என்னும் வினைச்சொற்கள் அடுக்கிவந்து வினையடுக்கு என்னும் வகையாக உருப்பெற்றுள்ளன.
ஏற்றுதுமல ரூட்டுது மவி
தேற்றுதும் பாணி எழூதுங் கிணைமுருகன்
தாட்டொழூ தண்பரங் குன்று (8.80-82)             
என்னும் பகுதியிலும் ஏற்றுதும், ஊட்டுதும், தேற்றுதும், எழூதும், தொழு ஆகிய வினைச்சொற்கள் அடுக்கிவந்து வினையடுக்காய் நிற்கக் காணலாம். இவ்வாறு வினையடுக்குகள் நல்லந்துவனார் பாடல்களில் விரவிக் காணப்படுகின்றன.
வினையெச்ச அடுக்கு
                வினையெச்சங்கள் தம்முன் தாம் அடுக்கி வரும்போது அவை வினையெச்ச அடுக்குகளாகின்றன.
வையைத் தொழுவத்துத் தந்து வடித்திடித்து
மத்திகை மாலையா மோதி அவையத்துத்
தொடர்ந்தேம் (20.61-63)
என்னும் பகுதியில் தந்து, வடித்து, இடித்து, மோதி முதலான வினையெச்சங்கள் தொடர்ந்து அடுக்கிவந்து வினையெச்ச அடுக்குகளை அமைக்கக் காணலாம்.
இரட்டைக் கிளவி
                பெரும்பாலும் ஒலிக்குறிப்புச் சொற்களாய்ப் பிரித்தால் பொருள்தராத தன்மை பெற்றுவரும் சொற்களை இலக்கண நூலார் இரட்டைக் கிளவி என்று வகுத்துரைப்பர். பிற சொல்லடுக்கு வகைகளை அதிகமாகக் கையாளும் நல்லந்துவனார், எவ்விடத்தும் இரட்டைக்கிளவியைப் பயன்படுத்தாமை குறிப்பிடத்தக்கது.
அடுக்குத் தொடர்
                தனித்துப் பொருள்தரும் ஒரு சொல்லே மீண்டும் தம்முள் அடுக்கிவருதல் அடுக்குத் தொடரின் இலக்கணமாகும். இந்தச் சொல்லடுக்கு வகையை நல்லந்துவனார் மிக அதிகமாய்ப் பயன்படுத்தியுள்ளார். இவை அனைத்திலும் ஒரு சொல் இருமுறை மட்டுமே அடுக்கிவரக் காண்கிறோம். சான்றாக,
வகைவகை தைஇயினார் மாலை மிகமிகச்
சூட்டுங் கண்ணியு மோட்டு வலையமும்
இயலணி அணிநிற்ப வேறி யமர்பரப்பின்
அயலய லணிநோக்கி ஆங்காங்கு வருபவர் (20.29-32)
எனவரும் பகுதியில் வகைவகை, மிகமிக, அயலயல், ஆங்காங்கு ஆகிய சொற்றொடர்களில் வகை, மிக, அயல், ஆங்கு ஆகிய சொற்கள் இருமுறை அடுக்கிவந்து அடுக்குத் தொடராய்ப் பொருளைச் சிறப்பிக்கக்  காண்கிறோம்.
                சொல்லடுக்குகள் அடுக்கிவரும் போக்கிற்கு ஏற்ப ஒன்று பல அடுக்குதல், வேறுபல அடுக்குதல், விதியாய் அடுக்குதல், எதிர்மறையாய் அடுக்குதல், விதி எதிர்மறை என இரண்டும்  சேர்த்து அடுக்குதல், பல சொல் ஒரு பொருளாய் அடுக்குதல், பலபொருள் ஒரு சொல்லாய் அடுக்குதல், இருவகைக்குப் பொதுவாய் அடுக்குதல் எனப் பல வகைப்படும்.
ஒன்று பல அடுக்குதல்
                வெவ்வேறு சொற்கள் அடுக்கிவந்தாலும் அவை அனைத்தும் ஒரு பொருளைச் சுட்டிவருமாயின் அதனை ஒன்றுபல அடுக்குதல் என்பர்.
ஆயித ழுண்க ணலர்முகத் தாமரை
தாட்டா மரைத்தோட் டமனியக் கயமலர்
எங்கைப் பதுமங் கொங்கைக் கயமுகைச்
செவ்வா யாம்பல் சென்னீர்த் தாமரை
புனற்றா மரையொடு புலம்வேறு பாடுறாக்
கூரெயிற்றார் குவிமுலைப் பூணொடு
மார னொப்பார் (8.113-19)
என்னும் பகுதியில் தாமரை என்னும் சொல் நான்குமுறை அடுக்கிவருவதுடன் கயமலர், பதுமம், கயமுகை, ஆம்பல், குவிமுலை ஆகிய ஐந்து பெயர்ச்சொற்களும் தாமரையைக் குறித்துவருதலால் இச்சொல்லடுக்கு ஒன்று பல அடுக்குதல் என்னும் வகைசார்ந்து அமைவதாகக் கொள்ளலாம்.
எதிர்மறையாய் அடுக்குதல்
                அடுக்கிவரும் சொற்கள் எதிர்மறைப்பொருள் பயப்பதாயின் அதனை எதிர்மறையாய் அடுக்குதல் என்னும் வகையில் அடக்கலாம்.
                நகைசான்ற கனவன்று நனவன்று (8.77) எனவரும் பரிபாடல் அடியில் கனவன்று, நனவன்று என்னும் சொற்கள் ஒரே முறையிலான அமைப்புடன் எதிர்மறையாக அடுக்கி வருகின்றன.  வலிய ரல்லோர் துறைதுறை யயர/ மெலிய ரல்லோர் விருந்துபுன லயர (6.39-40) எனவரும் பகுதியில் அல்லோர் என்னும் சொல் எதிர்மறைப் பொருளில் தொடர்ந்து ஒவ்வொரு அடியிலும் அடுக்கிவரக் காணலாம்.
இருவகைக்குப் பொதுவாய் அடுக்குதல்
சொல்லடுக்கில் இடம்பெறும் இரு சொற்களும் ஒன்றுபோலக் காட்சியளித்தாலும் அவ்விரண்டும் வேறுவேறு பொருட்களைச் சுட்டிநிற்குமாயின் அதனை இருவகைக்குப் பொதுவாய் அடுக்குதல் என்பர்.
காரிகைமது ஒருவரினொருவர் கண்ணிற் கவர்புறச்
சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி (11.68-69)
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு          
போற்றாய்காண் அன்னை புரையோய் புரையின்று
மாற்றாளை மாற்றாள் வரவு (20.71-73)
என்னும் பகுதிகளில் ஒருவர், வேற்றார், மாற்றாள் என்னும் சொற்கள் இருமுறை அடுக்கிவந்தாலும் "ஒருவர் பிறிதொருவரை" என்னும் பொருள்தந்து எழுவாய், செயப்படு பொருள் என்னும் இருவேறு நிலைகளில் அமைந்து பொருள் பயப்பதால் இவற்றை இருவகைக்குப் பொதுவாய் அடுக்குதல் என்னும் வகையில் அடக்கலாம்.
அடுக்குப் போறல்
                மேம்போக்காகக் காணும்போது ஒரே சொல் அடுக்கி வந்ததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு.  உற்றுநோக்கும்போது அச்சொற்களில் பொருள்வேறுபாடோ அல்லது அவை தாங்கிவரும் இலக்கணக் கூறோ  வேறுபட்டமையக் காணலாம். அவ்வாறு அமையும் அடுக்குகள் சொல்லடுக்குப் போலியாகும். அதனை அடுக்குப் போறல் என வகைப்படுத்துவர்.
            அடியோர் மைந்த ரகலத் தகலா (8.43) என்னும் அடியில் அகலம் என்னும் சொல் மார்பு என்னும் பொருளில் பெயர்ச்சொல்லாகவும் அகலா என்பது நீங்காத என வினைச்சொல்லாகவும் அமைந்து அடுக்குப் போறல் என்னும் வகையாய் அமையக் காணலாம். என்னை யருளி யருண்முருகு சூள்சூளின் (8.65), குறவன் மகளாணை கூறலோ கூறேல் (8.69) எனவரும் பகுதிகளிலும் முதலாவதாக வரும்சொற்கள் (சூள், கூறலோ) பெயராகவும் அடுத்துவருவன (சூளின், கூறேல்) வினையாகவும் அமைந்து சொல்லடுக்குப் போலியாக உருக்கொள்கின்றன.
எதிரொலிச் சொல்
மதநனி வாரண மாறுமா றதிர்ப்ப
எதிர்குதிர் ஆகின் றதிர்ப்பு (பரி.8.20-21)
என்னும் பகுதியில் எதிர்குதிர் என்னும் சொற்றொடரில் எதிரொலிச்சொல் அமைந்திருக்கக் காணலாம். எதிரொலிச் சொல்லின் பயன்பாடு இது தவிர நல்லந்துவனாரின் பரிபாடற் பாடல்களில் வேறெங்கும் காண இயலவில்லை.
     இதுகாறும் கண்டவற்றால் நல்லந்துவனாரின் பாடல்களில் பலவகையான சொல்லடுக்கு வகைகள் பயின்றுவருவதை அறியமுடிகிறது. குறிப்பாக, அளபெடை எனப்படும் ஒலியடுக்குகள் மற்றும் அடுக்குத்தொடர்களை இவர் அதிக அளவில் தம் பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். இச் சொல்லடுக்குகள் யாவும் திட்டமிட்ட ஓர் உத்தியாகவே நல்லந்துவனாரால் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை மேற்குறித்த சான்றுகள் உணர்த்துகின்றன. நல்லந்துவனாரின் பாடல்களில் காணலாகும் பல்வேறு சொல்லடுக்குகளை வகைப்படுத்தின் அது தனித்ததொரு ஆய்வாகத் திகழ்வதற்கான களம்விரிவதையும் காணலாம்.

***
நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, சங்கச் சாரலில்
            காஞ்சிபுரம் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2012,  61-71.

No comments:

Post a Comment