Monday 5 August 2019

நூலக ஆற்றுப்படை


நூலக ஆற்றுப்படை






சிக்கன அரசின் செயல்மின் வெட்டினால்
அக்கினி வெயிலை ஆற்றா நிலையில்
தக்கது எதுவெனத் தவித்து எண்ண
பக்க மிருக்கும் பரந்த கடற்கரை
மிக்க நலத்துடன் புதுக்கிய பூங்கா
வெக்கை ஆற்றி வேண்டிய துண்ண
தக்கநற் கடைகளும் தாராள முண்டு
என்னும் சிந்தனை என்னுள் பளிச்சிடப்
பின்னிடல் இன்றிப் புறப்பட் டெழுந்தேன்!
காரைக் காலின் கவின்பெறு கடற்கரை
சீராய்ச் செல்லச் செய்தனர் பல்வினை
நடந்து சென்றிட நன்நடை மேடை
நடுவே களைத்தால் அமர்ந்திட இருக்கை
கடற்கரை அருகே கவின்மிகு பூங்கா
அடர்ந்திடு சிறுவர் அளவில் அடங்கார்
பகலோ என்றிடப் பளிச்சிடும் விளக்கு
நகலோ சொர்க்கம் எனும்நீர் ஊற்று
வண்ண ஒளியில் வழுக்கிடும் காற்று
எண்ணத் தொலையா மக்களின் நாற்று
பக்கம் தொடுத்த பன்மணி மாலையாய்
ஒக்க நிறுத்திய உந்துகள் சீராய்
தக்கநற் காவலர் எங்கணும் திரிந்திட
மக்கள் யாதொரு அச்சமும் இன்றிச்
சிக்கும் மணலில் சிலிர்த்து நடந்தனர்!
மிக்கொளி நிலவும் வெப்பம் நீக்கிட
இக்கடல் குளித்து எழுந்தது சிலிர்த்து!
அக்கரை அறியா அலையெறி கடலின்
பக்கரை பொறுக்கிப் பாலனாய் மகிழ்ந்து
மிக்க பொழுதினைக் கழித்திட விழைந்து
தக்க இடம்செலத் தனித்து நடந்தேன்!
பூங்கா உள்ளே பூவையர் சிலரும்
பாங்காய்த் தம்முள் பேசிக் களித்தார்!
பட்டாம் பூச்சியாய்ப் பறந்தனர் சிறுமியர்
தட்டான் பிடிக்கத் தாவித் திரிந்தார்!
கிளிகள் ஊஞ்சலில் ஆடுதல் போலே
களியுடன் ஊஞ்சல் கையகப் படுத்தினர்!
சறுக்கு மரத்தில் சட்டென ஏறிச்
சறுக்கித் திளைத்தனர் சிற்சில வாண்டுகள்!
அகவை முதிர்ந்த ஆடவர் பலரும்
தகையுறு குழுக்களாய்த் தளர்நடை தொடங்கினர்!
முன்நெற்றி வழுக்கையும் முகத்தினில் ஒளியும்
கண்களின் கண்களாய்க் காட்டிடு ஆடியும்
கருமயி ரிடையே கதிர்விடு நரையும்
உருவாய்க் கொண்ட உயர்வோர் ஒருவர்
தருநிழற் கீழே தனித்தே இருந்தார்
பருகுதல் போலே பக்கம் புரட்டி
உருகிக் கிடந்தார் ஒருநூ லுள்ளே!
அருகில் சென்று அவர்தம் பக்கலில்
விருப்புடன் அமர்ந்து வியந்து பார்த்தேன்
சிறிது பொழுதில் சிரத்தை நிமிர்த்திக்                              50
குறிப்பால் கேட்டார் குறித்தது யாதென!
 'ஐயா, நீங்கள் அமைவுற இங்கு
பையப் படிப்பது யாதெனக் கேட்டேன்
'தம்பி! இதுதான் தகைசால் புத்தகம்
நம்முடைச் சிறப்பு நவிலும் பொக்கிம்!”
என்றே அவர்சொல எழுப்பினன் வினாக்கள்
'ஐயா, உங்கள் அகவை எழுபது
என்றே எனக்கு எண்ணம் தோன்றும்
இந்த வயதில் இந்நூல் படித்தே
எந்தப் பட்டம் வாங்க விருக்கிறீர்?
மந்தைகள் போலே வேலை யின்றி
நொந்தனர் இளைஞர் நூற்றுக் கணக்கில்!
இனிமேல் உமக்கு வேலை தேடிட
உதவுமா நீங்கள் படித்திடும் நூல்தான்?”
என்றே நானும் என்சந் தேகம்
பின்னை விடுக்கப் பிள்ளையாய் நகைத்தார்
பிரித்த புத்தகம் மூடி வைத்தே
சிரித்தே அன்பாய் அருகில் நகர்ந்தார்!
'துடிப்புடை இளைஞ, யான்சொலும் செய்தி
படிப்பினை நல்கும் பண்புறக் கேள்நீ!
பள்ளியில் படித்திடும் பாடபுத் தகங்கள்
தள்ளிட வொண்ணா அறிவை நல்கும்
மதிப்பெண் பெறுதலே இலட்சியம் என்னும்
கதியினை அனைவரும் விதியாய்ச் சமைக்க
விதியே என்று மாணவர் படிப்பர்
விழுமிய அறிவைப் பெறலை நாடார்
பட்டம் பெற்றதும் பணத்தைக் கொடுத்தோ
துட்டர் தம்மின் பரிந்துரை பிடித்தோ
இட்ட மில்லாப் பணிதனில் அமர்ந்ததும்
விட்டார் படிப்பதை! விழலாய்க் காய்ந்தார்!
உண்மைப் படிப்பு அதன்பின் தானே!
கண்போல் நூல்கள் அறிவைத் துலக்கும்
மண்ணக வாழ்வில் மகத்துவம் நிறைக்கும்
தத்துவம் மருத்துவம் சரித்திரம் என்று
வித்தகர் படைத்த நூல்பல் லாயிரம்
எத்துறை விருப்போ அத்துறை நூலைச்
சித்தம் கலந்து சிறப்பாய்க் கற்பின்
புத்தர் ஞான போதியும் தோற்கும்!”
'ஐயா அதிசயம் நீர்அறை வதுதானே!
பணியில் சேர்ந்ததும் படிப்பது வீணே!
மாதச் சம்பளம் கையில் வாங்கித்
தோதாம் செலவுகள் செய்ததும் மீதியைத்
திரைப்படம் காணவும் திகட்டா இன்பக்
கரைதனில் அமர்ந்து களிப்பினைத் துய்க்கவும்
இறைப்பதை விடுத்து நூல்கள் வாங்கக்
கரைப்பது மடமை என்றே பகர்வேன்
என்றே நானும் என்முடி புரைக்கக்
கன்றினை நோக்கும் தாய்ப்பசு வாகி
என்னை நோக்கி இனிதுறப் புகன்றார்
'உன்னை நோக்கப் படித்தவன் போன்ற          100
தோற்றம் என்னுள் எழுவது பொய்யோ?
கல்விச் சாலை சென்றிருந் தால்நீ
நூலகம் குறித்து அறிந்திருப் பாயே!”
என்றே சொல்லி என்முகம் நோக்க,
'ஐயா, உங்கள் நினைப்பும் தவறிலை
கல்லூரி தனிலே நூலகம் இருந்ததாய்
ஆசிரி யர்சிலர் அறிவித் தனரே!
பாட நூலெனில் பாகலின் கசப்பே
ஏடுக ளின்றி எழுதுகோ லின்றிக்
கையை வீசிக் களித்தோம் அங்கே!
தேர்வு வருங்கால் நண்பர் கூடிச்
சேர்த்த நகலைத் தெளிவே யின்றிப்
பார்த்த துண்டுடல் வேர்த்த துண்டு!
தன்னாட்சி பெற்ற கல்லூரி யதனால்
நாட்டில் தமது மதிப்பைக் காக்க
ஏட்டில் வெற்றி வீதம் நிறுத்த
படித்தார் படியார் அத்தனை பேர்க்கும்
பெரும்படி மதிப்பெண் அளித்தார் முதல்வர்!
அதனால் நூலகம் செல்லும் எண்ணம்
எமக்கு என்றும் வாய்த்தது இல்லை!
அங்கே எட்டிப் பார்த்ததும் இல்லை!
மேலும் சொல்லச் செய்தியொன் றுண்டு
பாடம் பயிற்றும் ஆசான் இன்றி
இயங்கும் கல்விச் சாலைகள் அதிகம்
நூலகர் இன்றி வருடக் கணக்காய்ப்
பு+ட்டுத் தொங்கும் நிலையே எங்கும்!
நூலகம் என்ற பெயரைத் தாங்கிய
அறையின் கதவு திறந்ததே இல்லை
ஆயிரக் கணக்கில் நூல்கள் அங்கே
நாயின் தெங்காய் ஆனதும் உண்மை
இணைய நூலகம் என்றே சொல்லி
இருந்தன கணினிகள் இயங்கா நிலையில்!
மேலதி காரிகள் வருகை தருகையில்
மேலோட்ட மாகப் பார்வை யிடுவர்
துறைநூ லகமும் இருந்தது அங்கே
புல்லிய நெஞ்சப் பேரா சிரியரின்
பொறுப்பில் இருந்தன அடுக்கிய நூல்கள்!
மாணவத் தோழர் நூல்களை வேண்டி
அவ்வப் போது அணுகிய துண்டு!
தலைமேல் அவர்க்குத் தாங்கொணாப் பணியால்
இலையே நொடியும் ஓய்வெனச் சொல்லி
தட்டிக் கழித்தே தடைசெய லானார்
வலிந்து கேட்டால் முகத்தைச் சுளிப்பார்
விலங்கு போலே வெறுப்புடன் கடிப்பார்
காவிய நூல்களின் கல்லறை அமைத்தார்
கேட்டுக் கேட்டுப் புளித்துப் போனதால்
அதற்குப் பின்னால் கேட்பதை விடுத்தோம்
இவ்வா றாக நூல்கள் படித்தல்
ஒவ்வாப் பண்பாய் எம்முள் நிலைத்ததே!
இத்தகு காரணம் இருந்தத னால்தான்                              150
புத்தகம் படிப்பதில் நாட்டம் இழந்தோம்!”
என்றேன் நானும் உணர்ச்சியின் வசத்தில்!
'சொல்லுவ தெல்லாம் உண்மையே தம்பி!
கல்விச் சாலையின் நூலகம் சிலவும்
சொல்லிய வாறே கல்லறை யாயின!
அரசுப் பணத்தை அடைந்திட வேண்டிக்
கணக்குக் காட்டும் நிலையில் முடங்கின!
படிப்பதைப் பரவலாய் ஆக்கிடத் தானே
துறைநூ லகமாய் வகுத்தனர் திட்டம்
உருப்படி யில்லா சிலரால் அதுவும்
சிறப்புடன் செயல்படா நிலையில் சிதையும்!”
என்றே இசைந்தனர் என்கருத் தோடு!
'இலட்சம் காசு செலவழிக் காமல்
இலட்சியம் அடைய நூல்கள் உதவும்
ஆதலால் நீயும் நூல்கள் படித்தால்
சாதனைச் சிகரம் சேர்ந்திட லாகும்
என்ற அறிவுரை கேட்டதும் நெஞ்சில்
தன்னம் பிக்கை பேருரு வெடுக்க,
'ஐயா, நான்பெறும் சொற்ப வருவாய்
நூல்கள் வாங்கவே செலவிட் டொழிப்பின்
நாளும் என்கை நோக்கிய குடும்பம்
தோளில் சுமக்க ஆகுமோ?” என்றேன்
'அருமைத் தம்பி அதற்கொரு மாற்று
அறைவேன் கேளாய் அமைவுற நீயும்!
வருவாய் அதிகம் பெறுபவர் சிலரே
அருமை நூல்களை வாங்கிப் படிப்பார்
வேட்கை உடையோர் செலவைப் பாரார்
வீட்டில் நூலகம் விரும்பி அமைப்பார்
ஆயின் ஏழையர்க் காகா இச்செயல்
வாய்க்கும் கைக்கும் வரும்படி காணார்
வேணவா உறினும் நூலினை வாங்கார்
தேங்கா தறிவைத் திரட்டிட வழியாய்ப்
பாங்காய் நூலகம் ஊர்கள் தோறும்
அரசே முனைந்து அமைத்திட லாலே
ஆரும் இதிலே நூல்கள் பெறலாம்
வார இதழ்களும் மாத இதழ்களும்
காரச் செய்தி கலந்திடு தாள்களும்
சேரப் படிக்கும் வசதியும் உண்டு
கட்டணம் கட்டி உறுப்பின ரானால்
முட்டின்றி நூல்கள் முறைபெற லாகும்
கதைகள் உவப்போர் கதைகள் மடுக்கலாம்
கவிதையில் மகிழ்வோர் கவிநூல் எடுக்கலாம்
ஆய்வுகள் செய்யும் ஆசையில் உழல்வோர்
தோய்ந்து படிக்கத் தோதும் உண்டு
என்றவர் சொன்ன சொற்கள் தேனாய்
என்னுளம் நிறைத்திட எழுந்தது ஆர்வம்
'நல்லதோர் செய்தி நவின்றீர் ஐயா!
எல்லா நூலும் இங்கே உண்டோ?”
'நன்றே கேட்டனை! நானும் தொடர்வேன்
மாவட்ட நூலகம் பெரிதாய் இருக்கும்                200
ஆங்கிலம் தமிழெனப் பன்மொழி நூல்கள்
அமர்ந்து படித்திட அங்கே கிடைக்கும்
காலந் தோறும் கல்விக் களத்தில்
எத்தனை விதமாய்த் துறைகள் உண்டோ
அத்தனைத் துறையிலும் நூல்கள் வாங்கி
வகைதொகை பிரித்து வரிசையில் அடுக்கி
நேர்த்தியாய் இருக்கும் நூலகத் துள்ளே!”
'பல்லா யிரமாய்ப் பரந்திடு மாயின்
ஒருநூல் தேடிட வாரம் பிடிக்குமோ?”
'அல்ல! அல்ல! அவ்வா றல்ல!
நூல்களின் பட்டியல் அங்கே உண்டு
நூலின் பெயரோ இயற்றியோர் பெயரோ
தெரிந்திடு மாயின் நிமிடம் போதும்
கணினி மயமாய் ஆனத னாலே
நூலைத் தேடுதல் எளிதாம் செயலே
உற்றுழி உதவிடும் ஊழியர் உண்டு
பெற்றிடு அலைச்சலும் நேரமும் மிச்சம்!”
'நூலகம் தன்னில் கடைப்பிடி நெறிகளை
மேலும் கூறுகஎன்றே நுவன்றேன்
'பல்லோர் அங்கே படித்திட லாலே
அமைதி காத்தல் அறிவர் செயலாம்!
படிப்பவர் சிலரின் பண்பில் செயலால்
நூலகர் கெடுபிடி செய்வதும் உண்டு!
புத்தக அடுக்கில் தேடிடும் போது
வரிசையைக் கலைத்திடல் வேண்டாச் செயலாம்!
நூலக எண்ணின் நேரிய வரிசையைக்
கலைக்கா திருப்பின் கண்டெடுத் திடலாம்
நூலைத் தேடும் வாசகர் சிலரோ
பின்னர்ப் படிக்க விரும்பிடும் நூல்களை
வேறொரு துறையின் நூல்களின் அடுக்கில்
செருகிச் செருகி மறைத்தே வைப்பர்
காலப் போக்கில் மறந்தும் தொலைப்பர்!
நல்ல நூல்கள் பலவும் இப்படிச்
செல்லாக் காசாய்ப் பயனில வாகும்
பாடம் தொடர்பாய்ப் படித்திடும் நூல்களின்
பக்கம் கிழிப்பர் பண்பிலா மாணவர்
மறுபதிப் பில்லா மாறிலா நூல்கள்
இத்தகு செயலால் இல்லா தாகுமே!
தமக்குப் பிடிக்கா கருத்தில் கிறுக்கல்
தாறு மாறாய்க் கருத்தைப் பதித்தல்
தாளின் நுனியை மடித்து வைத்தல்
பக்கம் திருப்ப எச்சில் தொடுதல்
கவனக் குறைவால் அட்டைகள் பிய்த்தல்
இத்தகு செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்
'நல்லது ஐயா! நீங்கள் சொன்னவை
ஒல்லும் வகையால் உவந்துகைக் கொள்வேன்!
நூலகம் என்னும் இத்தகு வசதி
எல்லா நாட்டிலும் உள்ளதா ஐயா?”
'கல்வியில் சிறந்த எல்லா நாட்டிலும்
நூலகம் என்னும் ஆலயம் உண்டு                           250
தில்லி, மும்பை, கல்கத் தாவிலும்
சொல்லிடத் தொலையா நூலகம் உளவே!
சென்னை நகரின் கன்னி மராவும்
பன்னெடுங் காலம் நிலைபெற் றதுவாம்
ரோமன் ரோலன் என்னும் நூலகம்
புதுவை நகரில் புகழ்பெற் றதுவே!
அரசே அன்றி ஆன்றோர் சிலரும்
தம்முடை வருவாய் தன்னில் மீத்து
சிறுகச் சிறுக நூல்களைச் சேர்த்துப்
பெரிதாய் நூலகம் சமைத்தார் காத்து!”
'ஆஹா! அற்புதம் அதனை விளக்குவீர்!
நூலகம் வைத்தல் எளிய செயலா?”
'காசைக் கூடக் கொடுத்திட லாகும்
தூசைத் தட்டி நூல்கள் காத்தல்
கூட்டும் குப்பையைப் பெருக்கல், துடைத்தல்
மீட்டும் உரிய இடத்தில் அடுக்கல்
நாடும் நூலை நாளும் அளித்தல்
தேடும் பொருளில் தரவுகள் சேர்த்தல்
கோட்டம் இன்றிப் புன்னகை பு+த்தல்
எளிய செயலோ? என்னே தொண்டு!”
'தனியார் நூலகம் தந்த சான்றோர்
அணியாம் மானிட அறிவுத் தேர்க்கே
தகைமை கூறீர் தகைசால் பெரியீர்!”
'நன்றே சொன்னாய் நல்லது தம்பி!
மக்கள் அறிவைப் பெருக்கல் வேண்டி
மாந்த நேயம் வளர்த்தல் வேண்டி
நல்லோர் சிலரும் அங்கே இங்கே
நன்னூல் தொகுத்து நூலகம் அமைத்தார்
ஒன்றி ரண்டை உனக்குச் சொல்வேன்
ஒழிந்தவை நீயே ஒருநாள் அறிகுவை
ரோசா முத்தையா பெயர்பெறு நூலகம்
வாகாய் அமைந்த வளராய்வு ஆலயம்
சென்னையி லுள்ள இப்பெரு நூலகம்
இன்தமிழ் வளர்ப்பில் இயன்றதோர் மைல்கல்
காரைக் காலில் சாயபு மரைக்கார்
பேரைப் பெற்ற பேரா சிரியர்
ஈரா யிரத்தின் பத்தின் பெருக்காய்ச்
சீர்மிகு நூல்களைச் சேர்த்தார் உவப்பாய்
வாரிதி போன்ற அறிவுத் தேரைச்
சாரதி யாகக் தனித்துச் செலுத்தப்
பாரதி அங்கே நீங்கா துறைவாள்
காரினைக் கண்டு மகிழும் மயிலாய்!
'ஐயா, நிற்க அடுத்த மாதம்
புதுவை நகர்க்குப் பணியிட மாற்றம்
பெறுகுவன் என்று அலுவலர் உரைத்தார்
அங்கே இதுபோல் தனியார் நூலகம்
பாங்குறல் உண்டோ? அறிந்தால் உரைப்பீர்!”
என்று நான்சொல எழில்நகை யுடனே,
'புதுவை அருகே பொற்புற அமைந்த
கோட்டக் குப்பம் என்னும் ஊரில்                            300
அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் என்னும்
அருமை நூலகம் உண்டே அறிவாய்
தொண்ணூ றாண்டுகள் தழைத்து வளர்ந்து
துறைதுறை தோறும் நூல்கள் பெருத்து
நல்லார் பல்லோர் திசைதொறும் அடுத்து
இல்லா நூல்கள் இலையென விடுத்துச்
சொல்லால் புகழ்ந்த செம்மலோர் பலரே!
இந்நூ லகத்தின் வௌ;ளி விழாவில்
சுத்தா னந்த பாரதி யும்தான்
சத்தாய் வாழ்த்துப் பாவினை அளித்தார்
இரண்டா யிரத்து இரண்டாம் ஆண்டில்
பவள விழாவைக் கண்டது சிறப்பாய்
ஓரிரு ஆண்டுகள் முன்பே கூட
இலட்சக் கணக்காய்ச் செலவுகள் செய்து
புதுக்கினர் நூலகம் புதுமெரு கடைய!
குவைத்தி லிருந்தும் அமீரகத் திருந்தும்
மலேயா குரே‘pயா ஜெர்மனி பிரான்சு
நார்வே முதலா நாடுக ளிருந்தும்
அர்ஜெண் டினாவின் நகரத் திருந்தும்
மொரீ‘pயஸ் என்னும் தீவி லிருந்தும்
வந்தனர் பிரமுகர் நூல்கள் படித்திட
தந்தனர் புகழ்மொழி வருகைப் பதிவில்!
மறைநெறி காட்டும் மந்திர நூல்கள்
இறைநெறி கூட்டும் இன்சுவை நூல்கள்
திருக்குரான் குறித்த தெளிதமிழ் நூலென
அருள்மொழி நூல்கள் அங்குண் டாயிரம்!
இசுலாம் நூல்கள் இங்கே மிக்குள
மார்க்க இதழ்களும் மிகுதியாய் உளவே
பழம்பெரு நூல்கள் பாதுகாப் பதனால்
பலரும் நம்பி நாடுவர் இதனை
பேரிடர் காலத் தொண்டுகள் புரிந்து
கணினி மையப் பயிற்சியும் தந்து
கல்விக் காக உதவிகள் அளித்துச்
சமூகப் பணியிலும் ஆர்வம் கொண்டு
குமுக வளர்ச்சியில் பங்கும் ஆற்றும்
அறக்கட் டளையால் அமைந்தஇந் நூலகச்
சிறப்பினை நீயே நேரில் காண்பாய்!”
என்ற செய்தியால் மனத்தை நிறைத்தார்
'ஐயா, மகிழ்ந்தேன் நன்றி மொழிந்தேன்
மெய்யாய் இன்றே கண்கள் திறந்தேன்
பொய்யாம் வாழ்வின் போக்குகள் விடுத்து
நையா நூல்கள் நாளும் படிப்பேன்
கையா லாகும் நூல்களை வாங்கி
விழாக்கள் தோறும் பரிசாய் அளிப்பேன்
வீணாய்ச் சுற்றி அலைவதை விடுத்து
விருப்பாய் நூலக அறையில் கழிப்பேன்
'நன்று தம்பி நல்லது சொன்னாய்
வாய்க்கும் என்றால் உவப்புடன் நீயும்
தோய்நல் அறிவுத் துறைதொறும் நூல்கள்
சேர்க்கும் செயலைச் செவ்வனே புரிக                              350
கார்மழைத் துளியாய் அவையொரு நாளில்
நூலக மாகப் பேருருக் கொள்ள
நாளைய மானுடம் நலமே தழைக்கும்!
எந்தன் பரிசாய் இச்சிறு நூலை
ஏற்பாய் இனிநலம் நாடுக உன்னை
வார்ப்பாய் நீயும் புதுப்புது நூல்கள்
தூர்ப்பாய் நம்மிடைத் திரண்ட புன்மைகள்
போர்ப்பாய் புகழெனப் புறப்பட எழுந்தார்.
நூலகம் குறித்த நுவலரும் பெருமைகள்
பாலமாய் இருவர் பகர்ந்திட வைத்து
முந்நூற் றறுபத் தைந்து அடிகளில்
செந்தமிழ்ப் பனுவலாம் நூலினைத் தைத்து
ஆற்றுப் படையின் அருந்தமிழ் இலக்கணம்
மாற்றம் இன்றியே யாத்து
ஈந்தார் அவ்வை நிர்மலா இனிதே!                       365

No comments:

Post a Comment