Monday, 5 August 2019

சொர்க்கத்தில் நவபாரதம் காட்சி 4


சொர்க்கத்தில் நவபாரதம்

காட்சி 4
                   நிகழிடம்    :      கைலாய சபை
                நிகழ்த்துவோர்    :   சிவன், திருமால் - இலக்குமி, பிரம்மா - சரஸ்வதி, அஸ்வினி தேவர்கள்    (1-அண்ணன், 2-தம்பி), இந்திராணி, நாரதர், காவலன் மற்றும் மௌனமாகப் பிற தேவகணங்கள்.

     ***
                கைலாய சபை கூடுகிறது.  திருமால், பிரம்மா, முப்பது முக்கோடி தேவர்கள், முனிவர்கள் என்று சபை களைகட்டி இருக்கிறது.  அனைவரும் கூடியிருப்பதால் ஆரவாரத்திற்குப் பஞ்சமில்லை. அங்கே தனது சகதர்மினியுடன் வரவேண்டிய  சிவன் தனியாக வருகிறான். நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தனக்குப்பேச வாய்ப்பளிக்கப்படாததால் தன் கோபத்தைக் காட்ட  இன்றைய கூட்டத்திற்கான அழைப்பை நிராகரித்து விடுகிறாள் உமையம்மை.  சிவன் அரங்கினுள் நுழைவதைப் பார்த்ததும் தங்களுக்குள் பேசிக் கொள்வதை அனைவரும் நிறுத்த திடீரென்று அசாதாரண அமைதி அங்கே நிலவுகிறது.

சிவன்  :  அனைவரும் வந்துவிட்டார்களா? எங்கே இந்திரனைக் காணோம்?
இந்திராணி: அவருக்கு உடல் நலமில்லை பிரபோ.  அதனால் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருக் கிறார்.  தங்களிடம் இதைக்கூறி முன்னமேயே அனுமதி பெறுமாறு கூறினார். அதற்குள் நீங்களே கேட்டுவிட்டீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் தேவாதி தேவா!
சிவன் உடல்நலக் குறைவென்றால் அஸ்வினி தேவர்களிடம் காட்டவேண்டியது தானேதேவலோகத்தில்தான் ஒன்றுக்கு இரண்டாக மருத்துவர்கள் இருக்கிறார்களே!
அஸ்வினி 1   :  வைத்தீஸ்வரா! இப்போதெல்லாம் எங்களை யாரும் மதிப்பது இல்லை.
சிவன்  : ஏன் இப்படிச் சொல்கிறாய்?
அஸ்வினி 1   : உடல்நலமில்லை என்றால் பெயர் தெரியாத ஏதாவது ஒரு பச்சிலையைத் தருகிறோமாம்!  அப் பச்சிலையால் குணமாகக் காலம் செல்கிறதாம்!  இம் மூலிகை மருத்துவ முறையைக் காட்டிலும்அலோபதிஎன்ற மேற்கத்திய மருத்துவமுறை நன்றாக வேலை செய்கிறதாம்!  மருந்து வில்லைகளைப் போட்டமாத்திரத்தில் உடனுக்குடன் குணம் தெரிந்துவிடுகிறதாம்!
திருமால் : அதெல்லாம் வெறும் மாயை!  உலக மக்களுக்கு நாம் உணர்த்திய மூலிகை மருத்துவத்தின் சிறப்பு தெரியாததால்தான் பிறமுறைகளை நாடுகிறார்கள். பூலோகத்தில் மக்களெல்லாம் சாதாரண தலைவலி,  சுரம் என்றால்கூட ஏதேதோ மருந்து வில்லை களையும் திரவங்களையும் விழுங்கி விட்டு பிறகு அதனால் வருகின்ற பல துணை உபாதைகளால் அவதியுறுகிறார்கள்.  மூலிகை மருந்தென்றால் குணமாவதற்கு நேரம் எடுக்கத்தான் செய்யும். ஆனால் இப்போ தெல்லாம் மக்களுக்குப் பொறுமை எங்கே  இருக்கிறது? எல்லாவற்றிலும் அவர்களுக்கு அவசரம்.  கடைசியில் இல்லாத நோய்களை யெல்லாம் வரவழைத்துக்கொண்டு தம்மைக் காக்குமாறு நம்மைத் தொந்தரவு செய்கிறார்கள்!
அஸ்வினி 1  : அதுமட்டுமா மாயவா!   பூலோகத்தில் தற்பொழுதெல்லாம் புதுப்புது நோய்கள் வந்து விட்டன. நம் நூலகத்திலுள்ள நோய் அகராதியில் அந்தப் பெயர்களைக் காணவே முடியாது.  நாம் இந்த உலகில் படைத்த நோய்கள் மிகச் சிலவே.  ஆனால் மக்கள் தாங்களாகவே நிறைய புதுப்புது நோய்களைப் படைத்துக்கொண்டு விட்டார்கள்.
அஸ்வினி 2: ஆமாம் மாதவா!  இப்போது மலேரியா, நிமோனியா, பைலேரியா என ஏகப்பட்ட நோய்கள்.  ஆந்தராக்ஸ், எய்ட்ஸ், புற்றுநோய், சிக்குன் குன்யா என நோய்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது.
சிவன்  : மாயவா, இதற்கெல்லாம் காரணம் ஆய்ந்து மக்களை நோய்களின் பிடியிலிருந்து காக்கக் கூடாதா?
திருமால்  : நான் ஏன் காக்க வேண்டும்?  அவர்கள் நோய்களோடு இருக்கவே விரும்புகிறார்கள்.
சிவன் : ஏன் இப்படிச் சொல்கிறாய்?
திருமால் : மக்கள் அனைவரும் நோய்வாய்ப் பட்டிருந்தால்தான் தமக்கு வருமானம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் நோயை அதிகமாக விரும்புகிறார்கள். அவர்கள் நோயின்  தொடக்க நிலையிலேயே நோயாளிகளை நன்கு பரிசோதித்து உரிய மருந்துகளைக் கொடுப்ப தில்லை.  யாருக்கும் புரியாத கையெழுத்தில் கிறுக்கி ஏதேனும் ஒரு மருந்தை எழுதிக் கொடுத்துவிடுகிறார்கள்.  பிறகு எப்படி நோய் குணமாகும்? நோயாளிகள் அதிகமாக மாத்திரைகளை வாங்கவாங்க மருந்து ஏஜெண்ட்களிடமிருந்து அவர்களுக்கு நல்ல வருவாய் வந்துகொண்டே இருக்கும். நோயாளிகள்பணம் படைத்தவர்கள்என்று தெரிந்தால் போதும்! வேண்டுமென்றே மருத்துவர்கள் விலை உயர்ந்த மருந்துகளை தாராளமாக எழுதிக் கொடுத்துவிடுகிறார்களாம்.
சிவன்  : மருத்துவர்கள் கருணை உடையவர்கள் ஆயிற்றே? இப்படிக் காசு மீது ஆசை வைக்கலாமா?
அஸ்வினி 1   : கருணையா? இன்னும் கேளுங்கள் கருணா மூர்த்தி!  இதில் பெண் மருத்துவர்கள் சிலர் இன்னும் மோசம்.  சில மருத்துவர்கள் குழந்தைப் பேற்றின்போது குழந்தை இயல்பாகப் பிறக்கும் நிலை இருந்தாலும் தங்கள் தனியார் மருத்துவமனைக்கு அதிகமாகக் காசு சேர்க்க வேண்டும் என்றுசிசேரியன்என்ற அறுவை சிகிச்சை செய்துவிடுகிறார்களாம்.
இலக்குமி  : கொடுமை, கொடுமை!  ஏன் இப்படி யெல்லாம் நடக்கிறது?
பிரம்மா : எல்லாம் காலத்தின் கோலம்.  புவியில் மக்களிடம் சேவை மனப்பான்மை குறைந்து கொண்டே வருகிறது தங்கையே!
சரஸ்வதி :   அதுமட்டுமில்லை லஷ்மி, அங்கே கல்வித் தரமும் குறைந்து வருகிறது. புத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட பணத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நன்றாகப் படிப்பு வருமா? வராதா? என்ற கவலை யெல்லாம் அவர்களுக்கு இருப்ப தில்லை.  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல இலட்சங்களைக் கொடுத்துச் சேர்ந்து விடுகின்றனர்.  ஏதோ தட்டுத்தடுமாறி தேர்ச்சி பெறுகிறார்கள். சிறப்பாகப் படிப்பவர்கள் அதிகப் பணம் சம்பாதிக்க வெளி நாடுகள் சென்றுவிடுகிறார்கள். பெரும்பாலும்மக்குப் பிளாஸ்திரிகள்தாம்டாக்டர்கள்என்ற போர்வையில் உலா வருகிறார்கள்.  இவர்கள் தனியார் மருத்துவமனைகளில் குப்பைகொட்ட முடியாது.  அதனால் இலஞ்சம் கொடுத்து அரசாங்க மருத்துவ மனையில் வேலையில் அமர்ந்துவிட்டால் பிறகு சுகவாழ்க்கைதான்.  இதில் போலி டாக்டர்களின் தொல்லை வேறு.
பிரம்மா  : ஏன் மருத்துவர்கள் மீது இவ்வளவு கோபமாகக் குற்றம் சுமத்துகிறாய் தேவி?
சரஸ்வதி:  நாதா! ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகின்றாள்என்று ஔவைப் பாட்டி நான் தொடர்ந்து வீணைப் பயிற்சி செய்து கொண்டும் கையில் ஏடுகளை வைத்துக் கொண்டு படித்துக்கொண்டும் இருப்பதைப் பற்றிப் புகழ்ந்து பாடியிருப்பதை நீங்கள் கேட்டதில்லையா?  கல்விக்கு எல்லை என்பதே இல்லை, நாம் வாழ்நாளில் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுவும் மருத்துவர்கள் தங்கள் படிப்பையும் ஆராய்ச்சிகளையும் விடவே கூடாது.  தினம் தினம் மாறிவரும் சூழ்நிலையால் - புதுப்புது மாற்றங்களால் - நோய்களின் போக்கும் மாறிவருகிறது.  எனவே அதைப்பற்றிய ஆய்வுநோக்கு இவர்களுக்கு வேண்டாமா?  பூவுலகில் வாழும் மருத்துவர்கள் காலத்திற்கு ஏற்ப தம் அறிவைப பெருக்கிக் கொள்ளாமல் என்றோ படித்த விஷயங்களை வைத்துக் கொண்டு பணம்சேர்ப்பதே குறிக்கோளாய்  இருப்பதால்தான் அவர்களால் நோயைக் கண்டறியவும் முடிவதில்லை; நோயாளிகளை குணப்படுத்தவும் முடிவதில்லை.
இந்திராணி: நோய் வந்தபின் இப்படி மருத்துவர் களிடம் அவதிப்படுவதைவிட நோய் வராமலேயே தடுத்துக் கொள்ளலாமே சரஸ்வதி?
நாரதர்     :  பூலோகத்தில் நோயின்றி வாழ்வது சாத்தியமில்லை தாயே.
சரஸ்வதி  : அதுதானே, நீ இன்னும் வாயைத் திறக்கவில்லையே என்று பார்த்தேன்!
நாரதர்  :  சரி தாயே, நான் எதுவும் சொல்லப் போவதில்லை.
இலக்குமி கோபித்துக் கொள்ளாதே நாரதா.  உன்னை விட்டால் உலகச்செய்திகளை அறிய எங்களுக்கு வேறுவழி என்ன இருக்கிறது?  பிடிவாதம் செய்யாமல் சொல்ல வந்ததைச் சொல்லிவிடு.
நாரதர்  : தாயே, பூலோகத்தில் எங்கு பார்த்தாலும் நாற்றம் பீடித்திருக்கிறது.  வீட்டுக்கு வீடு சாக்கடையைத் தேங்க வைத்துவிடுகிறார்கள்.
இந்திராணி: ஏன் அப்படி?
நாரதர்  :   லோகத்தில் மக்கள்தொகை பெருகி விட்டது தாயே. நகரங்களிலும் நகர்ப்புறங் களிலும் சில வசதிகளுக்காக நெருக்கமாக வாழவே மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு சிறு இடத்தைச் சொந்தமாக வாங்கி 'இத்துணூண்டு' மண்ணும் விடாமல் தெருவை யும் வளைத்துப்போட்டு ஒட்டு மொத்தமாக வீடுகட்டி விடுகிறார்கள். இந்த இலட்சணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வேறு. நாம்  என்னதான் அவர்கள் இன்பமாக வாழ, பரந்த நிலஉலகத்தைப் படைத்திருந்தாலும் புறாக் கூடுகள் போன்று வீட்டைக் கட்டிக்கொண்டு மூச்சு திணறுமாறு வாழ்வதை இன்பமாக நினைக்கிறார்கள்.  அத்தனைப்பேர் பயன் படுத்தும் கழிவுநீரும் எங்கே போகும்?  எல்லாம் சாக்கடையாய்த் தெருக்களில் தேங்கிக் கிடக்கிறது.  அதிலெல்லாம் கொசுக் களும் ஈக்களும் சுகமாகப் பெருகி மக்களுக்கு பல்வேறு நோய்களைத் தாராளமாகத் தானம் செய்கின்றன.
சரஸ்வதி  :  தமது பகுத்தறிவைப் பயன்படுத்தி நவீன அறிவியல் சாதனைகளைப் படைக்கும் மனிதர்கள் இதைப்பற்றி ஏன் இன்னும் சிந்திக்கவில்லை?
நாரதர்   :  ஈக்களும் கொசுக்களும் தங்களைப் பாதிக்காமல் இருக்க, கொசு முறுக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். சில விஷேச திரவக் குப்பிகள்கூட கிடைக்கின்றன. மக்கள் தம் வீட்டின் ஜன்னல்களை எல்லாம் மூடி வைத்துக் கொண்டு  இந்தத் திரவக் குப்பிகளை மின் சாதனங்களில் பொறுத்திவிடுகிறார்கள்.  இந்தப் புகை அவர்கள் நுரையீரலில் சென்று புற்றுநோயை ஏற்படுத்துகிறது தாயே. 
இந்திராணி:  நாரதா, நமது தேவலோகத்தைப் போலவே பூமியிலும் இப்போதெல்லாம் புகை மயமாகத் தோன்றுகிறதே. அவர்கள் அகில், சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களை இட்டுத் தங்கள் பூலோகத்தைத் தேவ லோகத்திற்கு நிகராக ஆக்குகிறார்களா என்ன?             
நாரதர்  : அதெல்லாம் ஒன்றுமில்லை தாயே.  நம் தேவலோகத்தில் இருப்பதோ அகிற்புகை. மண்ணுலகிலோ எங்கும் வாகனப்புகை, தொழிற்சாலைப் புகை, போதாததற்கு ஆடவர் தம் வாயில் புகையிலைக் குழலை வைத்துக்கொண்டு ஓயாது வெளிவிடும் புகையிலைப் புகை.
சரஸ்வதி  : அதென்ன  புகையிலைக் குழல்?
நாரதர் : அதற்குசிகரெட்என்று பெயர் தாயே.  அதைப் புகைத்துக்கொண்டு செல்வதில் அவர்களுக்குத் தனி இன்பம் கிடைக்கிறதாம்.  அதில் அவர்கள்ஸ்டைல்வேறு காட்டு கிறார்கள்.  அது மட்டுமா?  சின்னச் சின்ன பொடிசுகள்கூடபான்பராக்’, கஞ்சா, ‘பிரவுன் சுகர்எனப் பல தினுசான போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.  நம் தேவலோகத்துச் சோம பானம், சுரபானம் போன்றுபாக்கெட் சாராயம்வேறு குடித்துப் பட்டை கிளப்புகிறார்கள் தாயே!
இலக்குமி :  நாம்தான் இங்கே  அப்பழக்கத்தைக் கைவிட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகி விட்டனவே!
நாரதர்   ஆனால் பூலோகத்தில் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துகிறது.  புகைப் பழக்கம் கேடானது’, ‘குடி குடியைக் கெடுக்கும்என்னும் எச்சரிக்கை வாசகங்கள் அப்பொருட்களிலேயே அச்சடிக்கப் பெற்றிருந் தாலும் அவற்றின் விற்பனைக்கு அரசாங்கமே துணை நிற்கிறது.  மதுக்கடைகளை அரசே எடுத்து நடத்துவதால்கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்என்ற பழமொழி மறைந்துமதுக்கடை இல்லா ஊரில் மக்கள் இருக்க வேண்டாம்என்ற புதுமொழி தோன்றிவிட்டது தாயே.
பிரம்மா   :  என்ன இது? நீங்கள் மூன்று பேரும் சபையினரை மறந்து உங்களுக்குள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள்?
சரஸ்வதி :  ஏன்? நாங்கள் நல்லதொரு விஷயத்தைத் தானே பேசிக்கொண்டு இருக்கிறோம் நாதா!  ஆடவர் பயன்படுத்தும் பொருட்களை விமர்சனம் செய்கிறோம் என்றுதானே ஆத்திரப்படுகிறீர்கள்?  சக்தி ஏன்  இன்று அவைக்கு வரவில்லை?
இந்திராணி :  உமாதேவி மட்டும் உடன் இருந்தால் எங்கள் விவாதம் இன்னும் களைகட்டி இருக்கும்.
சிவன்  :  இவ்வளவு நேரம் உமையம்மை குறித்து விசாரிக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்திரனுக்கு எப்படி உடல் நலமில்லையோ அதைப் போன்றே உமைக்கும் ஏதோ களைப்பு போலும்.  அதனால்தான். . . (மழுப்பியவாறு)
பிரம்மா :  தேவி, பெண்கள் மட்டும் என்னவாம்? நச்சுத்தன்மை கலந்திருக்கிறது என்று தெரிந்தும் சிலவகையான குளிர்பானங்களை அதிக அளவில் அருந்தித் தங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அதைப்பற்றியும் நாரதனிடம் கேட்டுப் பார்.
இந்திராணி :  இப்பொருட்கள் உடல்நலத்திற்கு ஊறு செய்யும் என்று தெரிந்தும் நாட்டில் இவற்றை உலவவிடுவது தவறில்லையா? மக்கள் தவறு இழைத்தால் தட்டிக்கேட்க வேண்டியது அரசின் கடமை.  ஆனால் அரசே இத்தகைய காரியம் செய்தால் . . .
நாரதர் : இவற்றின் விற்பனை மூலம் நாட்டிற்குக் கோடிக்கணக்கான பணம் கிடைக்கிறதாம் தாயே.  அப்படியிருக்க அவற்றைப்போய் ஏன் தடுக்க வேண்டும் என்பது அரசின் வாதம்.
இலக்குமி :  இது அபத்தமான வாதம்.  அரசுக்குரிய பொருளை ஈட்ட எத்தனையோ சிறந்த வழிகள் இருக்கும்போது, இப்படி ஒரு வழியைக் கையாள்வது அரசின் பிற்போக்குத் தனத்தையே காட்டுகிறது.
நாரதர் : அரசுக்குரிய பணத்தை ஈட்ட வருமானவரி என்ற அற்புதமானவழி இருக்கிறது தாயே.  ஆனால் அதன் நடைமுறையில் தான் ஏகப்பட்ட சிக்கல்!
சரஸ்வதி  :   நூலிலுள்ள சிக்கலைவிடப் பெருஞ் சிக்கலோ?
பிரம்மா  : படிக்கும் நூலாயின் சிக்கலைத் தீர்க்கும் வழியைக் கலைமகளிடம் கேள். தைக்கும் நூலாயின் கோகுலத்துக் கண்ணன், குலமகள் ராதையின் வரதன், பலதேவனின் பின்னன், விண் வண்ணன், மாயவனிடம் கேள்.  அவருக்குத்தான் நூல்விடத் தெரியும்.  புடவையும் தரத் தெரியும்.
நாரதர் : தாயே, நான் கூறும் சிக்கல் உலகமகா சிக்கலம்மா.  அதாவது விஷயம் இதுதான் : அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் அவர்தம் சம்பளத்திலேயே வருமானவரியை அரசு பிடித்துக் கொள்கிறது.  மற்றபடி தொழில் அதிபர்கள், கடையதிபர்கள், அரசியல்வாதிகள், வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் என்று கொள்ளை கொள்ளையாய்ப் பெரும்பணம் சம்பாதிப்போரிடம் வருமானவரி சரியாக வசூலிக்க முடிவதில்லை.  அப்படி வசூலித்தால் நாட்டின் கருவூலமே நிறைந்துவிடும்.
சரஸ்வதி   :      அதை அரசு ஏன்  செய்யாமல் இருக்கிறது?
நாரதர்  : இதற்கென்று ஒரு துறையே இருக்கிறது.  இந்த வசூல்வேட்டையில் கெடுபிடி காட்ட நினைக்கும்  வருமானவரித்துறை அதிகாரிகள், தட்டுத் தடுமாறி சிறிய அளவில் சுயதொழில் செய்பவர்களைப் பிடித்துக் கொள்வார்களே அன்றி, கோடி கோடியாய்ப் பணம் புரட்டும் ஆசாமிகளுக்குச்சாமி சாமிஎன்று சரணம்தான் போடுவார்கள்.
இலக்குமி   :     பணக்காரர்களுக்கு வருமான வரி இல்லையா என்ன?
நாரதர் : பெரும்பொருள் ஈட்டுபவர்கள் அரசுக்குச் சரியான வருமானக் கணக்கு காட்டுவதில்லை தாயே!
இலக்குமி :  அதற்குத்தான் கடைகளில் பொருட் களை வாங்கும்போது பற்றுச்சீட்டு போட்டு வாங்க வேண்டும் என்று அரசு சட்டம் உள்ளதாகக் கேள்விப்பட்டேனே.  ஆனால், அதைத்தான் யாரும் பின்பற்றுவது இல்லையாமே?
நாரதர் : தாயே, ஏழை வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து ஒரு கம்மல் வாங்கப் போனால் அங்கே அவன் வாங்கும் பொருளுக்கு விற்பனை வரி கட்டச் சொன்னால் அவன் பாவம் எப்படிக் கட்டுவான்?  அதனால்தான் அவன் எனக்குபில்லே வேண்டாம்.  காசைக் கொஞ்சம் குறைத்துக் கொடுத்தால் போதும்என்று போய்விடுகிறான்.  இப்படிச் சாதாரண மக்கள் வாங்கும் பெரும்பாலான பொருட்களுக்கு விற்பனை வரி உண்டென்று சொன்னால் மக்கள்பில்வாங்கத் தயங்கத்தான் செய்வார்கள்.
சரஸ்வதி  : நாரதா, நீ முன்னே வந்தால் கடிக்கிறாய்!  பின்னே போனால் உதைக்கிறாய்! நாட்டிற்கு வருமான வரியும் வேண்டும் என்கிறாய்; மக்களிடம் விற்பனை வரியும் வாங்கக் கூடாது என்கிறாய்.  இரண்டும் எப்படியப்பா சாத்தியம்?
நாரதர் : அங்கேதானம்மா இருக்கிறது இந்த நாரதரின் மூளை!  பெரிய பெரிய உணவு விடுதி களுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுப்பதுபோல் ஒவ்வொரு சுயதொழில் நிறுவனத்திற்கும் ஒரு படிநிலை அந்தஸ்தை நிர்ணயித்துவிடலாம்.  குறிப்பிட்ட படி நிலையில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டவேண்டும் என்று   நிர்ணயித்துவிட்டால் அவர்கள் வரி ஏய்ப்பி லிருந்து தப்பமுடியாதல்லவா?
இந்திராணி: இம்முறை சாத்தியப்படுமா?
நாரதர் : இதுமட்டுமே போதாது அம்மா! அவர்கள் மாதாமாதம் வரிசெலுத்துகிறார்களா என்று கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.  ஒரு மாதம் வரிகட்டத் தவறினால் அச்செய்தி மின் துறைக்கு அறிவிக்கப்பட வேண்டும்.  அவர்களுக்குரிய மின்பங்கீட்டை நிறுத்தி விட்டால் உடனடியாக வரியைக் கொண்டு வந்து கட்டிவிடுவார்கள்.
பிரம்மா                          : ஏன் மின்சாரத்தை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறாய் நாரதா?
நாரதர் :  நீர்த்தொடர்பை நிறுத்தலாம் - ஆனால் அதற்காக அவர்கள் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.  ஏற்கெனவே குடிநீரை நகர மக்கள் காசுகொடுத்துத்தான் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  வங்கிக் கணக்கை முடக்கலாம் - ஆனால், ஒரு வங்கியின் கணக்கை முடக்கினால் வேறொரு வங்கி மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்துவிடுவார்கள்.
பிரம்மா : மின்சாரத்தைக்கூடத்தான்ஜெனரேட்டர்மூலம் தேவைப்படுபவர்கள் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்பது உனக்குத் தெரியாதா?
நாரதர்  :   . . . . . . என்னை மடக்கிவிட்டதாக நினைக்கிறீர்களா நான்முகனாரே!  மின்சார ஜெனரேட்டரை வைத்துக்கொண்டு குளிர் ஊட்டப்பட்ட பெரிய பெரிய கம்பெனிகள், வியாபாரத் தலங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை நாள்முழுதும் இயக்கமுடியாது என்பதும் அதற்குப் பெரும்பொருள் செலவு ஆகும் என்பதும் உங்களுக்குத் தெரிந்து இருக்குமே!

 (பிரம்மா வாயைத் தன் வலதுகையால் பொத்திக் கொள்கிறார்; அனைவரும் நகைக்கிறார்கள்.)

திருமால்  :  சரி சரி, உங்களுக்குள் போட்டி வேண்டாம்.  விஷயத்திற்கு வாருங்கள்.  நாரதா! நீ சொல்வது நடக்க இயலாத விஷயம்.  எப்படி வருமானவரித் துறையையும் மின்துறையையும் ஒருங்கிணைக்க முடியும்.  மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடப் பார்க்கிறாய்!
நாரதர் :  ஏன் முடியாது.  அறுவைசிகிச்சைக்காகத் தண்டுவடத்தில் மயக்க ஊசி போடும்போது தலையை முழங்காலோடு முட்டவைப்பது இல்லையா? அதைப் போலத்தான்!  அரசுத் துறைகள் ஒன்றோடொன்று இணைந்து செயல் படாமல் இருப்பதால்தான் சமூகப் பிரச்சனைகள் பல,  இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
திருமால்    :  அப்படியும் மசியவில்லையென்றால்?
நாரதர்   :  பூட்டிச்சீல்வைக்கவேண்டியதான்!
இந்திராணி: அவர்கள் பாவமில்லையா?
நாரதர் இது ஒன்றும் பாவகாரியமே இல்லை.  உண்மையில் புண்ணிய காரியம்தான் அம்மா!  ஒருவன் தவறிழைக்கும்போதே தண்டனை கொடுத்துவிட்டால் இன்னொரு குற்றவாளி தோன்றமாட்டான். ஆனால் ஒரு குற்றவாளிக்குப் பரிவுகாட்டுவதன் மூலமாக நிறையபேரைக் குற்றவாளிகளாக மாற்றி அதன் தொடர்ச்சியாக நாம் நல்லோருக்குத் தீமைசெய்துவிடுகிறோம்.
சரஸ்வதி    :     நாரதா, உனக்கும் நன்றாகச் சிந்திக்கவருகிறதே!
நாரதர் :  நான் உங்களிடமல்லவா பாடம் கற்றேன், தாயே!
இலக்குமி உன் சொல்படி செய்தால் நாட்டில்இலட்சுமி கடாட்சம்வந்துவிடும் என்று சொல்!
நாரதர் : அதெப்படியம்மா வரும். நீங்களும் ஒருவிதத்தில் மக்களுக்கு ஓரவஞ்சனைதான் செய்கிறீர்கள்.  பணம் படைத்தவருக்கு மேலும் மேலும் பணத்தை அள்ளிக் கொடுக்கிறீர்கள்.  ஏழைகளுக்கோவென்றால் இருப்பதையும் கிள்ளி எடுத்துக்கொள்கிறீர்கள்.
இலக்குமி :   ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுசனைக் கடித்த கதைஎன்பார்கள். அதுபோல் நீயும் மானிடரைத் தாக்கிக்கொண்டே வந்து இப்பொழுது என்னையும் தாக்குகிறாயா?
                                                 (காவலன் வருகிறான்)
காவலன்        :               ஓம் . . . திரிபுராரி மூர்த்தி போற்றி!
                                           ஓம் . . . துந்திமி சம்ஹாரா போற்றி!
                                           ஓம் . . . நீலலோகித மூர்த்தி போற்றி!
                                           ஓம் . . . கஜாரிமூர்த்தி போற்றி!
                                           ஓம் . . . சலந்தராரி போற்றி!
                                           ஓம் . . . இடபாரூடா போற்றி!
                                           ஓம் . . . புஜங்க பூஷணா போற்றி!
                                           ஓம் . . . கங்கா விசர்ஜனமூர்த்தி போற்றி!
                                           ஓம் . . .
சிவன்  :  போதும், போதும்!  நிறுத்து உன் துதிகளை!  நீ இப்படியே என் திருவிளை யாடல்களை எல்லாம் போற்றி உரைத்துக் கொண்டிருந்தால் எல்லோரும் தூங்கி விடுவார்கள். சொல்லவந்த செய்தியைச் சொல்.
காவலன்   :  மகாதேவா, கந்தன் கடம்பன் சூரனை வதைத்த வேலாயுதன். . .
சிவன்  :  அடடா, நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லப் போகிறாயா? இல்லையா?
காவலன்  :  மன்னிக்க வேண்டுகிறேன் மகாதேவா! அப்படியே பழகிவிட்டது! தங்கள் மகனார் முருகன் வள்ளி,   தெய்வானையோடு தங்கள் அழைப்பை ஏற்று வந்துள்ளார். அவர்கள் மூவரும் தங்கள் ஆணைக்காகக் காத்திருக் கிறார்கள்.
சிவன் : அப்படியா? அவர்களைச் சற்றுநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்.  நாங்களும் சபையைக் கலைத்துவிட்டுச் சற்று நேரத்தில் மாளிகையில் எழுந்தருளுவோம்.  அங்கே வந்து தரிசிக்கச் சொல்.
காவலன்        :               (காவலன் தலையால் பணிந்து)         ஓம். . . பர்வத ராஜ. . .
சிவன்  : (காவலனை முறைத்து, துதிகளை நிறுத்திவிட்டுத் திரும்பிச் செல்லுமாறு சைகை செய்கிறான்.      காவலன் வணங்கிச் செல்கிறான். திருமாலும் நாரதரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைக்கிறார்கள்)
                பாற்கடல்வாசனும் அவனுடைய தாசனும் ஒரு மர்மப் புன்னகையைச் சிந்திக்கொண்டதுபோல் தெரிகிறதே!
திருமால் : காவலனின் முகஸ்துதியைப் போதும் போதும் என்ற கூறினீர்களே!  இன்று முகஸ்துதிக்கு மயங்காதார் யார்? என்று நினைத்தேன் சிரிப்பு வந்தது.
நாரதர்  :  ஆமாம் வேதமுதல்வா!  இப்பொழு தெல்லாம் கூட்டங்களிலும் மன்றங்களிலும் பேச வருபவர்கள் அங்கே குழுமியிருக்கின்ற பெரும் புள்ளிகளை எல்லாம் திருப்திப்படுத்துவதற்காக ஒவ்வொருவர் பெயரையும் தனித்தனியாகக்  கூறி வணங்கவே நேரம் ஆகிவிடுகிறது.  பிறகு அவர் எங்கே பேசுவது?  அதனால் கூட்டங்கள் எல்லாம் தனிநபர் முகஸ்துதியை மேடை ஏற்றுவதாகவே அமைகின்றன என்று  நேற்றுதான் ஸ்ரீமன் நாராயணனிடம் கூறிக் கொண்டிருந்தேன்.  
சிவன்  : அப்படியா! முகஸ்துதி செய்வதும் தனிக் கலைதான். அதற்கும் திறமை வேண்டும். ஆனால் முகஸ்துதிக்கு மயங்குபவர் தலைமைப் பதவியில் சிறப்பாகச் செயலாற்றமுடியாது என்பதுதான் உண்மை. இப்படிச் சின்னவற்றில் சிறைப் படுவதைவிட சிந்தனைகளில் கவனம் செலுத்தினால் அனைவருக்கும் நன்மை விளையும்.
நாரதர்  :  ஆஹா நல்லதொரு கருத்தைச் சொன்னீர்  திருநீலகண்டா!  என்ன இருந்தாலும் நீங்கள் வேதமுதல்வனல்லவா? பற்றற்றவனல்லவா?  அதனால்தான் இப்படி நடுநிலையோடு . . .
சிவன்  : நாரதா போதும். என்னையே பரீட்சித்துப் பார்க்க நினைக்கிறாயா?  கொஞ்சம் நாளைக்கும் மிச்சம் வை!
                                                                (சபையோரைப் பார்த்து)
   சபையோரே! இன்று மகளிர் அணியினர் அதிகமான சர்ச்சை நேரத்தை எடுத்துக் கொண்டாலும் அது நமக்கு மகிழ்ச்சியையே தருகிறது.  நம்மை எட்டாத எத்தனையோ பிரச்சினைகள் நிலவுலகில் இருப்பதை இன்று நாம் அவர்கள் கலந்துரையாடலின் மூலம் அறிந்து கொண்டோம். அவர்கள் எழுப்பிய பல ஐய வினாக்கள் நம் அறிவைச் செம்மைப்படுத்தக் கண்டோம்.  வெகுநாட்கள் கழித்து வந்திருக்கும்  என்மகன் எனது தரிசனத்துக்காகக் காத்திருப்பதால் இன்றைய வாதங்களை  இத்துடன் முடித்துக்கொள்வோம்.    
           நாளை மறுநாள் பௌர்ணமியாதலால் அன்று மாலை ஓர் அற்புதமான கலைநிகழ்ச்சியை நம் தேவலோகத் தாரகையாகிய ஊர்வசி தம் தோழியர் அரம்பை, திலோத்தமையுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கிறார்.  நம் கண்களுக்கு விருந்தாக அவர் படைக்கவிருக்கின்ற கலை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க அனைவரும் தவறாது கலை மண்டபத்திற்கு வந்துவிடுங்கள்.
                                                                                                                               
(சபை கலைகிறது)

***
(தொடரும்)

No comments:

Post a Comment