Thursday, 22 August 2019

ஒருவன் ஒருவன் முதலாளி


ஒருவன் ஒருவன் முதலாளி                    
            தலைமைக்கு என்று ஒரு மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது.
            ரீட்டா தன் இருபத்து மூன்று வயதில் அரசாங்கக் கல்லூரியில் டுயூட்டராகச் சேர்ந்தாள். சொல்லப்போனால் கல்லூரி ஆசிரியர்களில் கடைநிலை ஊழியம் என்பது டுயூட்டர் பதவிதான். இப்போது அந்தமாதிரிகேடரைபல அரசுக் கல்லூரிகளில் நீக்கிவிட்டார்கள்.
            அந்த வயதில்தான் எத்தனை நிர்பந்தங்கள். மேலதிகாரிகளைக் கண்டபோதெல்லாம் ஒருவித அச்சம் உள்ளுக்குள் ஓடியவண்ணம் இருக்கும். அவர்கள் எதற்கேனும் அவளைக் கூப்பிட்டால், ‘நான் நேத்தோ அல்லது இன்னிக்கிக் காலைலயோ ஏதாச்சும் தப்பா செஞ்சிட்டனா?’ என்றுதான் மனசு படபடக்கும்! ‘நான் ஏதாவது எழுதும் போது தப்பா எழுதிட்டனா . . . ? யார்கிட்டயாவது பேசும்போது ஏதாவது தப்பித்தவறித் தப்பாப் பேசிட்டனா . . . ?’ -  இவ்வாறெல்லாம் செய்யாத தவறுகளைப் பட்டியல் போட்டுச் சரிபார்க்கத் தொடங்கிவிடும் மனசு.
            வேலையில் சேர்ந்து எந்தக் கெட்ட பெயரும் இல்லாமல் ஒழுங்காக இரண்டு வருடங்களைக் கடத்திவிட வேண்டும். இல்லையென்றால் எப்போதும் தொந்தரவுதான். தன் மேலதிகாரி அவளுடைய சி.ஆரில் கைவைத்துவிடக் கூடாது. அப்படி ஏதேனும் செய்துவிட்டால் அவளது பணிக்காலம் முழுக்க அதன் பாதிப்பு எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஆகவே அவருக்கு அஞ்சி நடுங்கியாக வேண்டும். 
                வசந்தாவின் சி. ஆர். சரியில்லாததால் இன்றுவரை அவள் எப்படிப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறாள் என்று சக ஆசிரியர்கள் அனைவரும் பேசிப்பேசி அவ்வப்போது ரீட்டாவின் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.
            வசந்தா ஒரு முறை அவளது மேலதிகாரியை முறைத்துக் கொண்டாளாம். அவள் பக்கம்தான் அன்று நியாயம் இருந்ததாம். அதனால்தான் அவள் தைரியமாகத் தன் மேலதிகாரியை முறைத்துக் கொண்டாள். ஆனால் அவளைப் பற்றித் தாறுமாறாக எழுதும் உரிமை மேலதிகாரிக்கு இருந்துவிட்டதுதான் ஆபத்தாய் முடிந்தது.
            பலரும் தன் குறையைப் பற்றி அறியும் அவமானத்தை - அது உண்மையாகவே இருந்தால்கூட ஒரு மனிதனால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? எப்படியாவது வஞ்சம் தீர்க்க வேண்டாமா? தன் கீழ்ப் பணி புரிபவரை வஞ்சம் தீர்த்துக்கொள்ளக் கிடைத்த வசதிதான் சி.ஆர். என்பது.
                அரசாங்கத்தில் இதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம். ஏதோ ஒரு காலத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் எந்த மாற்றமும் இன்றி, காலப் பொருத்தம் இன்றி அப்படியே பின்பற்றப்படுவதுதான். தங்கள் துறையினரின் திறமைபற்றி மேலதிகாரிகள் கணித்து எழுதவேண்டும் என்பது சிறந்த முறைதான். அந்தக் காலத்தில் அதன் அடிப்படையில் திறமைக்கேற்ப அவர்களுக்குப் பணி உயர்வு கொடுக்க வசதியாக இருந்தது.
            ஆனால் இன்றோ மக்களிடையே காணப்படுகின்ற காழ்ப்புணர்வின் அடையாளச் சின்னங்களாக அவை ஆகிவிட்டன.
            எத்தனைப் பேர் தங்கள் தலைமையின் கீழ்ப் பணிபுரியும் ஊழியர்களின் திறன்களைப் போற்றுபவர்களாக இருக்கிறார்கள்? அவர்களுடைய உழைப்பை எல்லாம் அட்டைபோல் உறிஞ்சிக் கொள்வார்கள். ஆனால் அதனால் கிடைக்கும் நல்லபேர் மட்டும் தலைமைப் பீடத்திற்கே சொந்தமானது. தங்கள் தனித்த தலைமையால்தான் தன் கீழ்ப் பணிபுரிபவர்கள் திறமையாக வேலை செய்வதாகப் பீற்றிக் கொள்வார்கள். திறமையானவர்களை நாலுபேர் முன்னால் பாராட்டக்கூடத் தயங்குபவர்கள்தாம் ஏராளம்.
            சி.ஆரில் குறிப்பிட்ட நபர்களின் ஆற்றல்களையும் உச்சகட்ட சிறப்புகளையும் மறந்தும் எழுதிவிட மாட்டார்கள். அவர்கள் எந்த நிலையிலும் நல்லநிலை எய்திவிடக் கூடாது என்பதில் அதிகவனமாக இருப்பார்கள். தப்பித்தவறி நல்லதாக ஒரு வார்த்தை எழுதிவிட்டால், ‘உங்களைப் பற்றி நான் நன்றாக எழுதியிருக்கிறேன்’, என்று தம் நல்ல மனத்தைத் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ‘உள்ளதைத் தானே எழுதினேன், பெரிதாக நான் வேறென்ன செய்து விட்டேன்என்று அவர்கள் மனம் உண்மையை எடுத்து அவர்களுக்குச் சொல்லவே சொல்லாது போலும்.
            அரசாங்கத் துறைகளில் இன்னுமொரு வருத்தப்பட வேண்டிய விஷயமும் நடக்கும். சில துறைகள் மிகச் சிறியதாக இருக்கும். சில துறைகள் விரிந்து பரந்திருக்கும். இந்த விரிந்து பரந்த துறைகளில் சிலருக்கு எந்தக் காலத்திலும் தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் ஓய்வு பெறும்வரை எல்லாச் சிறப்புகளும் சில வருட, மாத, நாள், மணித்துளிகள் வித்தியாசத்தில் பணியில் சேர்ந்த ஒருவருக்குச் சேர்ந்துவிடும்.
            சில துறைகளில் ஒருவர் கூட ஒரு துறையாக மதிக்கப்படுவார். அவர் துறையில் அவர் வைத்ததுதான் சட்டம். அவரே ராஜா, அவரே மந்திரி, அவரே எடுபிடி. அவரைப்பற்றி யாரும் பல்லிலே நாக்கைப் போட்டு ஒரு சொல் சொல்லமுடியாது. தலைமையின் அர்த்தமற்ற குசும்புகளுக்கு அங்கே வேலையில்லை. கல்லூரி முதல்வர் அற்ப விஷயங்களில் தலையிட மாட்டார் என்பது அவர்களைப் பொருத்தவரையில் மற்றொரு மனநிறைவான தகவல். அப்படிப்பட்ட ஒரு ராஜாங்கம் பெற்றவர்கள் புண்ணியவான்கள்.
            ரீட்டா மாற்றலாகிச் சென்ற கல்லூரியில் அவள் துறையில் அவளைக் காட்டிலும் மூத்தவர்கள் இல்லை யென்பதால் எளிதாகவே தலைமைப் பதவி கிடைத்து விட்டது.
            பத்து ஆண்டுகள் முடியுமுன்பே தலைமையின் மாமியார்த்தனக் கொடுமையிலிருந்து விடுபட்டுஅப்பாடா பிழைத்தேன்என்று ரீட்டா மூச்சுவிட்டாள்.
            ஐம்பது வயதிலும் தலைமை கிடைக்காமல் பலர் அல்லாடிக் கொண்டிருக்கும்போது முப்பது வயதில் தலைமைப் பதவி கிடைப்பது என்பது சாதாரண விஷயமா?
            தலைமைப் பதவி வந்தென்ன லாபம்? அதற்குரிய பக்குவம் வேண்டாமோ?
            இதுவரை பிறருடைய தலைமையின்கீழ்த் தான் அனுபவித்த துன்பங்களை இனித் தன்கீழ்ப் பணிபுரிபவர்கள் மேல் திணித்து இன்புறும் வாய்ப்பை நழுவ விடலாமா? ரீட்டாவின் மனத்தில் மாமியார்த்தனம் எட்டிப்பார்த்தது.
            மனிதன் பாதி, மிருகம் பாதி கலந்துசெய்த கலவையில் தலைமை என்று வரும்போது பெரும்பாலும் மிருகம்தான் உள்ளேயிருந்து எட்டிப்பார்க்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக மனிதனைத் தின்று ஏப்பம் விட்டுவிடுகிறது. பின்னர் அவர்கள் தேவதையாவது எங்கே?
            ரீட்டா தலைமை ஏற்றவுடன் அவளுள் இருந்த பழைய சாதுவான ரீட்டா காணாமல் போய்விட்டாள். தன் கீழ் இருப்பவர்களைப் பற்றி ஒற்று அறிவதும், அவர் களுடைய குறைகளைப் பூதக்கண்ணாடி மூலம் காண்பதும் அன்றாடக் கடமைகளாகிவிட்டன. அவர்கள் எங்கே போகிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? யாருடன் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்னும் செய்தி யெல்லாம் குறுந் தகவலாகவும் நெடுந்தகவலாகவும் ஒற்றறிந்து ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டு அவர்களுக்கு இம்சை தருவதில் நன்றாகவே பயிற்சி எடுத்துக்கொண்டாகிவிட்டது. எல்லாம் மூத்தோர்களிடம் கற்றுக் கொண்டதுதான். 
            ரீட்டா சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவர்கள் நல்லவர்கள். அவள் சொல்லும் வேலைகளைச் சிரமேற்கொண்டு செய்பவர்கள் வல்லவர்கள். அப்படிச் செய்யாதவர்கள் விரோதிகள். அவர்களை எப்படியாவது இயங்கவிடாமல் 'கார்னர்' செய்துகொண்டே இருக்க வேண்டும்.
            பெண்கள் தலைமைப் பீடத்தில் அமரும்போது இன்னொரு துன்பமும் ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் கீழ் ஆண்களும் பெண்களும் பணிபுரிந்தால் ஆண்களுக்குச் சலுகை கொடுப்பதும் பெண்கள் என்றால் அவர்களைப் போட்டுப் பிழிவதும் சகஜமானவை.
            ஆண்களிடம் வரம்பு மீறி வேலைகளைச் சுமத்தினால்போ போ! உன் வேலயப் பாத்துட்டுப் போ! என்னை ஒன்னும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது. உன்னால முடிஞ்சதப் பண்ணு! நானும் ஒரு கை பாக்கறன்என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் ஒருபுறம். ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்யவும் மின்சாரக் கட்டணம் கட்டவும் வங்கிகளில் பணம் போடவும் எடுக்கவும் இப்படிப்பட்ட வெளிவேலைகளை அவர்கள் மூலம் செய்துகொள்ளும் எதிர்பார்ப்பு மறுபுறம். அந்த வசதிக்காக ஆடவர்களுக்குச் சற்றே தயவு தாட்சண்யம் காட்டத்தான் வேண்டியிருக்கிறது. 
            ரீட்டாவிற்குக் கிரிமினல் மூளை அதிகம். பிறர் பார்வையில்பட்டுப் பாராட்டைப் பெற்றுத்தந்துவிடும் பொறுப்புகளை தன் கீழ்ப் பணிபுரியும் திறமைசாலிப் பெண்களுக்குத் தாரை வார்த்துத் தரமாட்டாள். ஒருவேளை அவர்களுடைய திறமைகள் வெளிவந்து அனைவராலும் அவர்கள் பாராட்டப்பட்டுவிட்டால்? அல்லது தான் இதுநாள் வரை எந்தவிதத் திறமைமிக்க செயல்களையும் சாதனைகளையும் சாதிக்காதது மற்றவர் கண்களில் பட்டுவிட்டால்?
            கல்லூரி முதல்வர்கள் எல்லா ஆசிரியர்களிடமும் நேராக விஷயத்தைச் சொல்லமாட்டார்கள். எப்போதும் துறைத் தலைவர்கள்தான் முதல்வர்களின் தூதுவர்கள். இதனால் பல சமயங்களில் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரியிடமிருந்து வரம் கிடைக்காது. சாமி கொடுக்கும் வரங்களைப் பூசாரியே அபகரித்து விடுவார். அல்லது அத்தகைய சிறந்த வரங்களுக்கு அவர்கள் அருகதை அற்றவர்கள் என்று தடுத்துவிடுவார். சமயத்தில் அவர்களையும் மீறி பக்தர்களுக்கு வரம் கிடைத்தாலும் அதற்கு ஒட்டுமொத்த காரணமும் தான்தான் என்று பூசாரிகள் மார்தட்டிக் கொள்வார்கள்.
            நாட்டில் முதலாளித்துவம் ஒழிந்துவிட்டது என்று யார் சொன்னது? ஒவ்வொரு துறையிலும் இப்படிப்பட்ட முதலாளிகளின் சாட்டை அடிகளிலிருந்து தப்பித்தவர்கள் எத்தனை பேர்?
            இப்படிப்பட்ட பெண்கள் தம்கீழ்ப் பணிபுரியும் ஆடவர்களைப் புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். இப்படிப் பெண்களே பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும்போது பெண்களுக்குச் சுதந்திரமும் சுயசிந்தனையும் எப்போது ஏற்படும்?
            ரீட்டா இப்படிப்பட்ட விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். தன் கீழ்ப் பணிபுரியும் பெண்களைக் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினாள். அவள் வைத்ததுதான் சட்டம் என்ற எதேச்சாதிகாரப் போக்கினைத் தன் வழியாக மேற்கொண்டாள்.
            ரீட்டாவின் கீழ்ப் பணிபுரியும் நந்தினி அறிவும் ஆற்றலும் மிக்கவள். செய்யவேண்டிய வேலைகளைச் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவள். பத்துபேர் செய்யவேண்டிய அறிவுபூர்வமான வேலைகளைத் தான் ஒருத்தியாகவே எளிதில் அலட்டிக்கொள்ளாமல் செய்து முடித்துவிடும் திறமைசாலி. ரீட்டா எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே அப்பணிகளைச் சிறப்புறச் செய்து அசத்திவிடும் ஆற்றல் மிக்கவள். நந்தினியின் இத்தகைய செயல்திறம் ரீட்டாவிற்கு இலாபகரமாக இருந்தது. கல்லூரியில் தன்னையும் திறமைசாலி என்று காட்டிக் கொள்ள முடிந்தது. கல்லூரியின் எந்தப் பணியினையும் தன் துறைக்குத் தருமாறு வேண்டிப்பெற்று பெயர்வாங்க முடிந்தது. முதல்வர் தரும் பொறுப்புகளை எப்பொழுதும் மறுக்காமல் முகமலர்ச்சியோடு ஏற்றுக்கொண்டு முதல்வரின் நல்ல பெயரைச் சம்பாதிக்க முடிந்தது.
                நந்தினி, இந்தாங்க இந்த வேலய முடிச்சுடுங்க. உங்களவிட்டா இந்த வேலய யாரால நல்லா செய்ய முடியும்?’ என்று ஒரு பாராட்டைத் தலையில் வைத்து உச்சி குளிரவைப்பாள். அப்படிப் பாராட்டும்போது அங்கே வேறு யாரும் அந்தப் பாராட்டைக் கேட்க இருக்கக்கூடாது என்பது முக்கிய செய்தி.
            நந்தினி எல்லா வேலைகளையும் பொறுப்பாக முடித்துவிட்டால் அதன் முடிவுகள் நந்தினிமூலம் முதல்வரைப் போய்ச் சேராது. ரீட்டா மூலம்தான் போய்ச் சேரும். உடனே முதல்வரும்வெல் டன், இந்த வேலைய எவ்வளவு பொறுப்பா அழகா செஞ்சி முடிச்சிட்டீங்க! வெரி குட், கீப் இட் அப்!’ என்று வேலை முடிந்த மகிழ்ச்சியில் திருப்தியை முகத்தில் சொட்டவிடுவார். அடுத்து என்ன வேலைகளை அவருக்குத் தரலாம் என்று சிந்திப்பார்.
            ரீட்டாவின் பக்கங்களில் திருப்தியின் வாசனை கூடிக் கொண்டிருக்கும். அதே நேரம் நந்தினியின் தலையில் பொறுப்பின் சுமை அழுத்திக் கொண்டிருக்கும். அவள் தலையெடுக்காமல் தலைமை பார்த்துக் கொள்ளும்.
            எவ்வளவுதான் திறமை இருந்தாலும் துறைத் தலைமை தன்னையே குறிவைத்து அனைத்து வேலை களையும் சுமத்திவிட்டுஅக்கடாவென்று இருப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? பின்னணிப் பாடகர் நிலைதான் நந்தினிக்கு. அழகிய குரல் கொடுப்பது பின்னணிப் பாடகர்கள். பெயரென்னவோ அந்த நடிகர்களுக்கு. இப்போதெல்லொம் பின்னணிப் பாடகர் யார் என்று இசைத்தட்டுகளில் பதிவாவது செய்கிறார்கள். ஆனால் நந்தினியின் நிலை அதைவிட மோசம். அவள் பெயர் எங்கும் பதிவுசெய்யப்படுவதும் இல்லை. செயல் அனைத்தும் நந்தினி செய்ய வேண்டும். ஆனால் நல்ல பெயர் முழுக்க ரீட்டாவுக்கு. அது மட்டுமா? நல்ல ஆலோசனைகளை வழங்கினால் ரீட்டாவுக்கு இலாபகரமாக இல்லை என்றால் அந்த ஆலோசனைகளைக் கேட்பதும் இல்லை. நந்தினிக்கு எரிச்சல் வரத்தானே செய்யும்?
            அன்று காலையில் முகமலர்ச்சியோடு தன் இருக்கையில் வந்தமர்ந்தாள் ரீட்டா.
                நந்தினி!  இங்க வாங்களேன். நம்ம கல்லூரியோட பொன்விழாக் கொண்டாட்டம் அடுத்த மாசம் வருது இல்லயா? அதை நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கே பிரின்சிபால் கொடுத்துட்டாங்க. இது எவ்ளவு சேலஞ்சிங்கான விஷயம் தெரிமா? நான்தான் அதுக்கு ஒருங்கிணைப்பாளர். எல்லா டிபார்ட்மண்ட்ல இருந்தும் ஒருத்தர அந்தக் கமிட்டில போட்டுக்கலாம். யாரை வேணும்னாலும் செலக்ட் பண்ணிக்கச் சொல்லி பிரின்சிபால் எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துட்டாங்க தெரிமா? பைனான்சும் ஒன்னும் பிரச்ன இல்ல, வெளி எடத்துல இருந்தெல்லாம் புரோகிராம் கொடுக்க நாம யாரை வேணும்னாலும் கூப்புடலாம். நம்ம காலேஜே மூக்குல வெரல வெக்கிற மாதிரி நாம அசத்திடணும்’. சொல்லிக்கொண்டே போனாள் ரீட்டா. அவள் முகத்தில் ஹாலோஜன் பல்பின் பிரகாசம்.
            யாரை வேண்டுமானாலும் கமிட்டியில் போடலாம் என்று சொன்னாலும் ரீட்டா யாரையாவது சந்தோஷப் படுத்தவேண்டும் என்பதற்காகத் தனக்கு யார்யார் ஏதோ ஒருவகையில் இலாபகரமாக இருப்பார்களோ அவர்களைக் கமிட்டியில் போடுவாள். சமயத்தில் அவர்கள் எந்த வேலைகளையும் செய்யும் திறனற்றவர்களாக இருப்பார்கள். கடைசியில் அவர்கள் சொதப்புவதையும் சேர்த்து நந்தினிதான் சரிசெய்ய வேண்டும்.
            யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம் என்று இப்போது கூறுவார். ஆனால் திறமையானவர்கள் பெயர்களை நந்தினி முன்மொழிந்தால் அவர்கள் தன் மதமா, ஜாதியா, தன் ஊரா என்று ரீட்டா பரிசீலிப்பாள். இம்மூன்று பொருத்தங்களில் ஒன்றிலும் தேறவில்லையென்றால் அப்பெயர்களை வேண்டாம் என்று புறந்தள்ளி விடுவாள். ‘நீங்க இந்த ஒரு விஷயத்தப் பத்தி கவலப்பட வேணாம் நந்தினி, நான் பாத்துக்கறேன்என்று கூறிவிடுவாள். கடைசியில் பார்த்தால் விழாவிற்குவரும் சிறப்பு விருந்தினர்கள் அவள் மதத்தைச் சேர்ந்தவராக இருப்பார்கள். இதுவும் ஒருவகையில் பெண்பார்க்கும் படலம் போல்தான். ஒலி ஒளி அமைப்பவன், போட்டோ எடுப்பவன் என்று எல்லோருமே தன் மதத்தவனாக இருக்கிறானா என்று பார்த்து அமர்த்திவிடுவதில் ரீட்டாவை மிஞ்ச முடியாது. இந்தச் சூட்சுமத்தை யாரும் வெளியில் கண்டுபிடித்து விடாதவாறு திட்டமிடுவதில் சூரப்புலிதான். சற்றே நுணுக்கமாகப் பார்த்தால் இது நன்றாகவே புலப்படும்.
            ஆசிரியர்கள் என்பவர்கள் தங்கள் மாணவர்களிடையே சாதி மத பேதம் பார்க்கக் கூடாது என்பது முக்கியமான ஒன்றுதான். ஆனால் ஒருசிலர் கல்வியிலாகட்டும், கலைகளிலாகட்டும், விளையாட்டுத் திறன்களிலாகட்டும்; அவர்களால் மேலே கொண்டுவரப்படும் மாணவர்கள் அவர்களுடைய மதத்துக்காரர்களாக, சாதிக் காரர்களாக அமையவேண்டும் என்பதில் அக்கறை செலுத்துவது ஒருவகையில் வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். போட்டிகளில் பங்கு பெறுபவர்களில் வெற்றி பெறுபவர்களும் சிலநேரங்களில் இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு விடுகிறார்கள். சாதி, மத வேறுபாடுகளைக் களையவேண்டியவர்களே அவற்றிற்குக் காலூன்றிக் கொண்டிருப்பார்கள்.
                மேடம். நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். ஆனா நான் என்னோட டாக்டரேட் தீஸிஸ் முடிக்கற ஸ்டேஜ்ல இருக்கேன். அதனால ஒரு பத்துப் பதினஞ்சி நாள் லீவ் போட வேண்டியிருக்கும். என்ன நீங்க கமிட்டில எல்லாம் போடவேணாம். உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணுமோ கேளுங்க செய்யறேன்பட்டும்படாமல் பதிலுரைத்தாள் நந்தினி.
                அதனாலென்ன? நீங்க எத்தன நாள் வேணும்னாலும் லீவ் போட்டுக்கோங்க. ஒன்னும் பிரச்ன இல்ல. கமிட்டில உங்கள மெம்பரா போட்டுடறேன்’.
            ரீட்டாவின் திட்டம் இத்தனை நாள் அவளோடு பழகிய நந்தினிக்குத் தெரியாதா என்ன? இப்பொழுது கெஞ்சிக்கொண்டிருக்கும் ரீட்டா, பிறகு, ‘கமிட்டில உங்க பேர் இருக்கில்ல? அப்புறம் உங்கள விட்டா இதயெல்லாம் யார் செய்வாங்களாம்? எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க லீவெல்லாம் எடுக்க முடியாது, எல்லா வேலயும் முடிச்சிட்டுப் போங்கஎன்று நிர்பந்திப்பாள்.
            முதல்வரிடம் சென்று, ‘நந்தினிக்கு லீவெல்லாம் கொடுத்துடாதீங்க! பங்ஷன் வேலையெல்லாம் கொழப்பமாயிடும். அப்பறமா அது தப்பாயிடுச்சி, இது தப்பாயிடுச்சி அப்டின்னா நான் அதுக்குப் பொறுப்பில்ல, முக்கியமான வேலயெல்லாம் அவங்க பொறுப்புலதான் இருக்குஎன்று மந்திரம் ஓதுவாள்.
            ஆனால் நந்தினியிடம் பேசும்போது முதல்வர்தான் வேஷம் போடுவதாகவும் நந்தினியிடம் பொறுப்புகளைச் சுமத்துமாறு அவர்தான் கூறியதாகவும் அவரிடம் தான் நந்தினியைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லி வைத்திருப்பதாகவும் இரட்டை வேஷம் போடுவாள். இதெல்லாம் நந்தினிக்குத் தெரியாதா என்ன?
            ஏதேனும் தவறு ஏற்பட்டுவிட்டால் அனைவரிடமும் நந்தினியின் கவனக் குறைவால்தான் தவறு நிகழ்ந்ததாகக் காட்டிக் கொள்வாள். கமிட்டியில் இருக்கிறோமே என்று இரவு பகல் பாராமல் உயிரைக்கொடுத்து வேலைசெய்ய வேண்டும். கடைசியில் எல்லோரிடமிருந்தும்ரீட்டா அருமையா பண்ணிட்டாங்க, டிபார்ட்மென்ட்ட எவ்ளோ அழகா மேனேஜ் பண்றாங்கஎன்றெல்லாம் புகழ்மாலைகள் விழும்.
            மற்றவர்களிடம் ஏதேனும் வேலைகள் கொடுத்தால் சொதப்பிவிடுகிறார்கள் என்று எல்லா வேலையும் நந்தினி மீதே திணிப்பாள் ரீட்டா. போதாக்குறைக்குத் தங்களுக்குச் சிறப்பான பொறுப்புகள் எவையும் கொடுக்கப்படவில்லை; எல்லாவற்றிலும் நந்தினிதான் மூக்கை நுழைக்கிறாள் என்று நந்தினிமேல் கமிட்டியின் மற்ற அங்கத்தினர்கள் மறைமுகமாகப் பாய்வார்கள். வேலையையும் செய்துவிட்டு இப்படிப்பட்ட வெட்டிப்பேச்சுக்கு ஆளாகவேண்டுமா?
                ஸாரி மேடம். என்னால மெம்பரா நிச்சயமாக இருக்க முடியாது. ஒன்னு மெம்பரா இருந்தா சின்சியரா வேல செய்யணும். இல்லன்னா லீவு போடும்போதெல்லாம் கில்டியா இருக்கும். நான் ஒங்களுக்கு எவ்வளவு ஹெல்ப் வேணும்னாலும் செய்றேன்னு சொன்னேனே. கமிட்டில மட்டும் என் பெயர் போடவேணாம் மேடம்’ - திட்டவட்டமாக மறுத்தாள் நந்தினி.
            கமிட்டியில் பெயர் இல்லையென்றால் நந்தினி மீது உரிமையோடு எல்லாப் பொறுப்புகளையும் திணிக்க முடியாது. அப்படியே திணித்தாலும் அதனைத் திரை மறைவில் வைத்திருக்க முடியாது. கொண்டாட்டத்தின்போது ஏதோ ஒருவகையில் மேடையில் நந்தினி தோன்றும் வாய்ப்பு ஏற்படலாம். பிறகு கமிட்டியின் மற்ற அங்கத்தினர்களின் பொல்லாப்பைச் சம்பாதிக்க நேரிடும். 
            முகத்தில் அடித்தாற்போல் இப்படி நந்தினி மறுப்பு சொல்வாள் என்பதை ரீட்டா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
            நந்தினியின் உறுதியான மறுப்பைக் கேட்டு ரீட்டாவின் முகம் கருத்தது.
            தன்னை நல்லவளாகக் காட்டிக்கொண்ட வேஷமும் கலையத் தொடங்கியது.
            தன்னால் நிச்சயமாக நந்தினியின் ஒத்துழைப்பு இல்லாமல் பொன்விழாவைச் சிறப்பாகச் செய்யமுடியாது என்பது நன்றாகவே புலப்பட்டது.
            கல்லூரியில் இருந்தால் அந்தப் பொறுப்பை நிச்சயமாகத் தட்டிக் கழிக்க முடியாது.
            இரவு நெடுநேரம் தூக்கம் வரவில்லை.  புரண்டுபுரண்டு படுத்தபோது திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.
            அதுதான் சரி.
            தூக்கம் மெதுவாகக் கண்களைச் சுற்றியது.
                என்ன ரீட்டா, மணி ஏழாவுது. இன்னும் எழுந்திருக்கலயா? காலேஜுக்கு நேரமாவுது பார்!’
                இல்லங்க . . . மயக்க மயக்கமா வருது. பேசாம ஒரு மாசம் மெடிகல் லீவு போட்டுடலாம்னு இருக்கேன்’.
                ஏன் திடீர்னு என்னாச்சு, நேத்து நல்லாத்தானே இருந்தே?’
                இல்லங்க ரொம்ப நாளாவே டயர்டா ஃபீல் பண்றேன். . . லீவ் போடணும் போடணும்னு நெனச்சிட்டே இருந்தேன். இப்பத்தான் அதுக்கு வேள வந்துது. பேசாம நம்ப பையன் வீட்லபோய் இருந்துட்டு வரலாம்னு நெனக்கிறேன்’.
                 அதுக்குன்னு ஒரு மாசமா? வேணும்னா ரெண்டு நாள் லீவ் போடு, அதுக்கப்பறமும் முடியலன்னா பாத்துப்போம்’.
            ஒரேயடியாக ஒருமாதம் விடுப்பு எடுத்தால்தான் விழாப் பொறுப்பு வேறு யாருக்காவது கொடுக்கப்படும். விழாப் பொறுப்பு கை மாறிவிட்டால் அதன்பிறகு சிறிது நாள் கழித்துப் பணிக்குத் திரும்பிவிடலாம்.
            தன் இயலாமையைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ளக்கூட ரீட்டாவிற்கு வெட்கமாக இருந்தது.
                அதவிட இப்போதே ஒரு மாசம் போட்டுடறேன். ஒடம்பு சரியாயிட்டா லீவ கேன்சல் பண்ணிடலாங்க! திரும்பத் திரும்ப லீவ் கேக்க முடியாதுங்க.’
                காலேஜ்ல என்னத்த வெட்டி முறிக்கற? அங்கயும் ஒக்காந்துதானே இருக்கப்போற, அதனால காலேஜ்லயே பேசாம ரெஸ்ட் எடுத்துக்கலாம்.’
                லீவ எல்லாம் வெச்சுக்கிட்டு ஊறுகாயா போடப் போறோம்?  ஆபத்து அவசரத்துக்குக்கூட லீவு எடுக்கக் கூடாதா?’ - கடுகடுப்பைக் காட்டினாள் ரீட்டா.
                ஏதோ செய். லீவெல்லாம் வீணாப் போவுதேன்னு பாத்தேன்.’
                இந்தாங்க லீவ் லெட்டர். காலேஜ் ஆபீஸ்ல குடுத்துட்டு வந்துடுங்க.  நான் பிரின்ஸிபாலுக்குப் போன் பண்ணிச் சொல்லிடறேன்.’
            சொத்தைப் போல் சேர்த்துவைத்து அவ்வப்போது கணக்குப் பார்த்து மகிழ்ச்சிகொள்ளும் விடுப்பைத் தேவையேயில்லாமல் எடுப்பது அவளுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது. இருந்தாலும் இந்த அரசியல் தந்திரம் அப்போதைக்குத் தேவையானதாகவே அவளுக்குப் பட்டது.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி,  ஆசைமுகம் மறந்துபோச்சே,  காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2009,  103-118.

No comments:

Post a Comment