சொர்க்கத்தில் நவபாரதம்
காட்சி 3
நிகழிடம் : உமையம்மையின்
அந்தப்புரம்
நிகழ்த்துவோர்
: சிவபெருமான்,
உமையம்மை.
***
பொன்னால் வேய்ந்த கூரை. பரந்து
நீண்ட தாழ்வாரம். தூண்களில்
பல வண்ண மணிகள் பதிக்கப்பெற்ற
சித்திர வேலைப்பாடு கண்ணைக் கவர்கிறது. விதானங்களிலும்
சுவர்களிலும் சிவனின் திருவிளையாடல்கள்; உமையின் பல்வேறு அவதாரங்கள்; கணபதி, முருகன் பிறப்பு, வளர்ப்பு, திருமணம் முதலிய குடும்பக் காட்சிகள் பல இயற்கை நிறம்
ஊட்டப்பெற்ற ஓவியங்களாய் எழிலினை மிகுவிக்கின்றன. ஆங்காங்குச் சோழர், பல்லவர், நாயக்கர் எனப் பல வம்ச
அரசர்கள் காலத்தைச் சிறப்பிக்கும் வகை வகையான சிற்பங்கள்
அணிவகுத்து நிற்கின்றன. மொத்தத்தில் அது
ஒரு கலைக்கூடமாய் மலைக்க வைக்கிறது.
***
சிவன்
: உமா,
நான் உன்னை ஒன்று கேட்கட்டுமா?
உமை :
கேளுங்களேன். ஏன் இப்படிப் பீடிகை
போடுகிறீர்கள்?
சிவன்
: இன்று
ஆலோசனைக் கூட்டத்தில் நீ ஏதோ சட்ட
திட்டங்களை மாற்ற வேண்டும் என்று சொன்னாயே?
உமை : அவையில்
ஒரு கருத்தைச் சொல்ல வந்தேன். அங்கே அதற்கு வாய்ப்பு அளிக்கப் படவில்லை. இப்பொழுது
அது எதற்கு? பிறகு
பார்த்துக் கொள்ளலாம்.
சிவன்
: அதற்கில்லை
உமா. நீ
சொல்ல வந்தது என்னவென்று நான் தெரிந்து கொண்டால்
அதைப்பற்றி இப்பொழுதே பரிசீலித்து விடலாம் என்றுதான்!
உமை : ஆஹாஹா!
நன்றாக நடிக்கிறீர்கள். உங்களைப்
பற்றி எனக்குத் தெரியாதா? பெண்ணிற்குப் பாதியை உங்கள் உடலில் கொடுத்துவிட்டதாகச் சொல்லிச் சொல்லியே புகழை அடைந்துவிட்டீர்கள்!
சிவன்
: நான்
புகழோடு இருப்பது உனக்கும் மகிழ்ச்சிதானே! விஷயத்தைச் சொல் உமா.
உமை : நீங்கள்
ஒன்றும் குழைய வேண்டாம். நான்
என் கருத்துகளை வாய்ப்புக் கிடைக்கும்போது சபையிலேயே
சொல்லிக் கொள்கிறேன்.
சிவன்
: இப்பொழுது
சொல்லப் போகிறாயா? இல்லையா?
உமை : என்ன
மிரட்டுகிறீர்கள்? எனக்கு அப்போதே தெரியும்.
சிவன்
: என்ன
தெரியும்?
உமை : உங்கள்
அதிகாரத்திற்குக் குறைவந்துவிடும் வகையில் நான் ஏதாவது சொல்லிவிடப்
போகிறேன் என்று அவசர அவசரமாக ஆலோசனைக்
கூட்டத்தைக் கலைத்தீர்கள்; அப்படித்தானே?
சிவன்
: ஆமாம். அதற்கென்ன
இப்போது?
உமை : ஏன்
அப்படிச் செய்தீர்கள்? உங்கள்
மனைவி பலரும் நிறைந்த சபையில் அறிவு பூர்வமாக எக்கருத்தையும் சொல்ல அனுமதி இல்லை, அப்படித்தானே? ஒரு பெண் என்னதான்
படித்துப் பட்டம் பெற்று பதவியில் இருந்தாலும் அவளை இந்தச் சமூகம்
பெண்ணாகத்தான் பார்க்கிறது. அவளது அறிவை ஆடவரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. தேவர்களாகட்டும், மனிதர் களாகட்டும், யாராயினும் ஆடவனையே உயர்வாகக் கருதுகின்றனர்.
சிவன்
: உமா,
நீ ஏன் பேச்சை மாற்றுகிறாய்? நான்
உன்னைப் பற்றிக் கேட்டால் நீ உலகைப் பற்றிப்
பேசுகிறாய்! அதுவும்
பூலோக மக்களைப் பற்றி!
உமை : தேவலோகம்
என்ன? பூலோகம் என்ன? எல்லாம்
ஒன்று போலத்தான் இருக்கின்றன. ஆடவன்
எப்பொழுதும் பெண்ணை மட்டமாகவே கருதுகிறான்.
சிவன்
: இதோ
பார். உன்னை
மட்டமாக நினைத் திருந்தால் என் உடலில் சரி
பாதியை உனக்குக் கொடுத்திருப்பேனா?
உமை : உடலில்
பாதியைக் கொடுத்துவிட்டால் எனக்குச் சமஉரிமை கிடைத்துவிட்டதாக அர்த்தமா? நான் உங்கள் ‘ரப்பர்ஸ்டாம்ப்’பாக இருக்கவேண்டும் என்றுதானே
விரும்புகிறீர்கள். மண்ணுலகில்கூட
இப்படித்தான்! எல்லா
உயர்மட்ட ஆலோசனைக் குழுக்களிலும் பெண்களுக்கு உறுப்பினர் பதவி தரப்படுகிறது. ஆனால்
அவர்கள் ஆண்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ‘ஆமாம் சாமி’ போட வேண்டும்.
அரசியலிலும் பெண்ணுக்குச் சம அந்தஸ்து கொடுக்கிறோம்
என்று கூறி கட்சிப் பதவிகளில்
இட ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆடவரின் ‘ரப்பர் ஸ்டாம்பு’களாக மட்டுமே செயல்படுகிறார்கள். ஆண்கள்,
பெண்களைக் கைப் பாவைகளாக்கி அரசியல்
சதுரங்கத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தன்னிச்சையாகச் சுய சிந்தனையோடு செயல்படும்
பெண்கள் மிகவும் அரிது. மத்திய அமைச்சரவை, மாநிலங்களின் சட்டசபைகள், உள்ளாட்சி மன்றங்கள் என அனைத்திலும் இதேநிலை
தானாம்!
சிவன்
: ஆனால்
நான் அப்படியில்லை உமா. உன்னை
எவ்வளவு உயர்வாக நடத்துகிறேன் தெரியுமா?
உமை : எல்லாம்
போலித்தனம்! பெண்ணை
மதிக்கத் தெரிந்திருந்தால் உலகமே பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு காலைத் தூக்கி
ஆடி என்னைக் கவிழ்த்திருப்பீர்களா? ஒரு
பெண்ணால் அத்தகைய முத்திரையைக் காட்ட இயலாது என்றுதானே வேண்டுமென்றே அப்படி ஆடினீர்கள்?
சிவன்
: எப்பொழுதோ
நடந்து முடிந்ததை இப்பொழுது சொல்லிக் காட்டுகிறாயே! அது
பழைய கதை, அது இப்போது
எதற்கு? நான்
உன் காலில் விழுந்தேன் என்று கூடத்தான் இவ் வையகமே கேலி
செய்கிறது!
உமை : நீங்கள்
எதற்காக என் காலில் விழுந்தீர்கள்
என்று எண்ணிப் பாருங்கள்! நான்
அப்படிப் போய் இப்படி வருவதற்குள்
கங்கையை மயக்கிக் கலந்துவிட்டீர்கள். கைலாயப்
பிரச்சினை காற்று போல் பரவிவிடும் என்று
நானும் அதனைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன்.
சிவன்
: ஆனால்
நான் உன் மீது வைத்திருக்கும்
அன்பில் குறை வைத்தேனா?
உமை : இதென்ன
அபத்தம்! ஆடவர்களாகிய நீங்கள்
இப்படி ஏதேனும் தவறைச் செய்துவிட்டு நியாயப்படுத்தி விடுவீர்கள். நாங்களும் அதற்கு உடந்தையாக இருந்தால் நல்ல மனைவி என்று
‘பாராட்டுப்பத்திரம்’ வாசிப்பீர்கள். உங்களைப் பார்த்து முருகனும் கெட்டுப் போனான். ஊரறிய
உலகறிய இருதாரம் மணம்புரிந்தான். அவன்
அண்ணன் கணபதியைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்! மணம்செய்து
கொள்ளாமலேயே இரு பெண்களை ‘வைத்திருக்கிறான்’
என்று அனைவரும் ‘அரசல் புரசலாக’ அலர் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்!
சிவன்
: இறைநிலையில்
இருக்கும் நம்மைப் போன்றோர் செயல்களை எல்லாம் தத்துவ ரீதியாக அணுகவேண்டும் உமா! இவை எல்லாம்
நீ அறியாததா?
உமை : தத்துவங்களில்
மறைந்துகொண்டு நடப்பியல் உண்மைகளை மறைக்கப் பார்க்காதீர்கள். . .!
சிவன்
: எங்களை
விடு. உன்
உடன்பிறப்பு மாயவன் மட்டும் யோக்கியமானவனா?
உமை : இதில்
எங்கள் குடும்பம், உங்கள் குடும்பம் என்ற பேதம் எதற்கு? எந்தக்
குடும்பமானாலும் ஆண் ஆண்தான். மாயவன்
ஆயர்பாடியில் ஆயிரம் பெண்களோடு லீலைகள் புரிந்ததற்கு மட்டும் நான் என்ன ஆரத்தியா
எடுத்தேன்? இந்திரனோ வென்றால் எல்லோரையும்விட மோசம். உங்கள் கதைகளையெல்லாம் கேட்டுக்கேட்டு பூலோக வாசிகளும் மோசமாகி விட்டார்கள். நாட்டை
ஆளும் தலைவர் முதல் நாலாந்தரக் குடிமகன் வரை கெட்டுக் குட்டிச்சுவராகி
விட்டார்கள். ஒருவன்,
ஒரு மனைவியோடு நிறைவுறாமல் பலரை மணம் புரிந்து
கொள்வதை எழுத்தாளர்களும் தொடர்ந்து ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி
நியாயப்படுத்திச் சமூகத்தை நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிவன்
: ஓஹோ,
இது மட்டும்தான் உனக்குத் தெரியுமா? பெண்கள் தறிகெட்டுக் கிடப்பது பற்றி உனக்கு ஒன்றும் தெரியாதா? ‘துரியோதனா! துரியோதனா! தாயம் உருட்ட வாடா. துச்சாதனா!
துச்சாதனா! என் சேலை உருவ
வாடா’ என்று பெண்கள் சந்தோஷமாகப் பாடிக் கொண்டிருப்பதை நீ கேட்கவில்லையா?
உமை : அது
சரி, ஏதோ அங்கொன்று இங்கொன்று
என்று பெண்கள் தவறும்போது அதையே பெரும் செய்தியாக்கிக் ‘கிழி கிழி’ என்று
மானிடர்கள் கிழித்து விடுகிறார்கள். மகளிர்
தப்பித்தவறிக்கூட ஒரு வார்த்தை பிழையாக
உரைத்து விடக்கூடாது. எதிர்ப்புகள்
சூறாவளியாய்த் திரண்டெழும். ஆனால், ஆண்கள்
தவறுகள் செய்யும்போதுமட்டும் சமூகம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது!
சிவன்
: நீ
நன்றாகவே ‘பெண்ணியம்’ பேச ஆரம்பித்துவிட்டாய்!
உமை : நான்
எங்கே பெண்ணியம் பேசுகிறேன்? உண்மையான
பெண்ணியம் என்றால் என்ன வென்று உங்களுக்குத்
தெரியுமா? பெண்கள்
எப்பொழுதும் ஒருபடி கீழே முட்டாள்களாக இருக்க
வேண்டும் என்று ஆடவர் விரும்புகிறார்கள். தனக்கு
நிகரான அறிவுடன் பெண் இருக்கிறாள் என்பதை
இந்த ஆடவரால் ஏன் ஜீரணிக்க முடிவதில்லை
என்று தெரியவில்லை! ஒருவன் தனக்குக்கீழ் பணி புரியும் ஓர்
ஆடவன் தன்னைவிட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்திருந்தால் பல நேரங்களில் மனந்திறந்து
பாராட்டுகிறான். ஆனால்
தனது மேலதிகாரி பெண்ணாக இருந்துவிடும் பட்சத்தில் அவனால் தாங்கிக் கொள்ளவே இயலுவதில்லை. அப் பெண் மேலதிகாரி
தப்பித்தவறி ஏதாவது பிழைசெய்ய
மாட்டார்களா? என்று அவருக்குக் கீழ் பணிசெய்யும் ஆடவர்கள்
ஆர்வத்துடன் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தேடுகின்றனர். அப்படி ஏதேனும் தவறு ஒன்று கிடைத்துவிட்டால்
போதுமே! எத்தனைக் கோணங்களில் அதை ஆராய முடியுமோ
ஆராய்ந்து தங்களுக்குள் பேசிக் கேலி செய்து மகிழ்ச்சி
அடைகிறார்கள். அப்படியென்றால் பெண் விடுதலை எங்கே
இருக்கிறது? எல்லாம்
ஏட்டுச் சுரைக்காய்தான்!
சிவன்
: அருமை,
அருமை! நன்றாகப்
பேசுகிறாய். நாளையே
நம் அவையில் கருத்தரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்து உன்னைப் பேசச் செய்யட்டுமா?
உமை : இப்படிப்
பெண்களைப் புகழ்ந்து புகழ்ந்தே அறிவுமயக்கம் கொள்ளச்செய்து அவர்களை மேற்கொண்டு சிந்திக்கவிடாமல் செய்வது ஆடவர் கையாளும் இன்னொரு உத்தியல்லவா!
சிவன்
: உமா,
எதைச் சொன்னாலும் நீ ‘குதர்க்கம்’ காண்கிறாய்!
உமை : ஆமாம்,
நீங்கள் செய்தால் ‘தர்க்கம்’, அதையே நாங்கள் செய்தால் ‘குதர்க்கம்’!
சிவன்
: (இலேசாக
முணுமுணுத்தவாறு) நாளை நான் அவையில்
என்ன பாடுபடப் போகிறேனோ?
உமை : ஏன்
பயப்படுகிறீர்கள்? நாளைக்கு நான் சபைக்கு வரப்போவதே
இல்லை. பேச
உரிமை இல்லாதபோது கொலுபொம்மைபோல் உட்கார்ந்திருக்க நான் ஏன் வர
வேண்டும்? அப்படியே வந்தாலும் சபையிலிருந்து பாதியில் ‘வெளிநடப்பு’ செய்துவிடப் போகிறேன்.
சிவன்
: அம்மா,
தாயே! நீ அவைக்கு வரவே
வேண்டாம். ஆனால்,
நீ வரவில்லை என்றால் அனைவரும் என்னைக் காரணம் கேட்டுத் துளைத்துவிடுவார்களே!
உமை : நன்றாகக்
கேட்கட்டும். தைரியமிருந்தால் உண்மையான
காரணத்தைச் சொல்லுங்கள். அவர்களே
நீங்கள் செய்தது சரி என்று ஒப்புக்
கொள்கிறார்களா என்று பார்ப்போம். ஆனால்.
. . ஆடவர்
உண்மையுரைக்க அஞ்சி ஒருவேளை உங்களுக்கு
ஆதரவு தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சிவன்
: சரி
சரி. . . ! குடும்பப் பிரச்சனையைக் ‘கோர்ட்டு’ வரை கொண்டுசெல்ல வேண்டும்
என்று விரும்புகிறாயா என்ன? நீ
ஒன்றும் நாளைக்குச் சபைக்கு வரவேண்டாம். நான்
ஏதாவது காரணம் சொல்லிச் சமாளித்து விடுவேன். என்னைச் சந்திக்க நிறையபேர் காத்திருக்கிறார்கள். நான்
அவர்களைப் போய் கவனிக்கிறேன்.
உமை : வீட்டில்
பிரச்சனை என்றால் இப்படி ஏதாவது சொல்லி தப்பித்து வெளியே ஓடிவிடுங்கள். உங்களுக்குத்தான் பார்வை யாளர்கள் இருக்கிறார்களா? என்னைத் தரிசிக்கக்கூட நிறையபேர் காத்திருக்கிறார்கள். உங்களுக்கு
முன் நான் போகிறேன்.
(இருவரும்
முகத்தைத் திருப்பிக்கொண்டு எதிர் எதிர் திசைகளில் செல்கிறார்கள்)
***
(தொடரும்)
No comments:
Post a Comment