முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 5
அழகழகான மலர்களைப் போல சீருடையில் மாணவர்கள்.
'சுந்தரி! சுந்தரி!' என்று அன்போடு அழைக்கும் ஆசிரியர்கள்.
தலைமையாசிரியராக இருந்த சந்திரனோ என்றால் அசல் தெய்வம்தான். அன்பு,
பரிவு, குழைவு, நட்புரிமை என அத்தனைக்கும் ஒட்டுமொத்தக்
குத்தகைக்காரனாய் இருந்தான்.
ஆசிரியப் பணி ஆற்றிக்கொண்டே பல்வேறு
மேற்படிப்புகளைப் படித்துப் பல பட்டங்களைப் பெற்றவன்.
பள்ளியில் அவனுக்கென்று நல்லபேர்.
அவன் கீழ்ப் பணியாற்றும்
ஆசிரியர்கள் அவனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பாவித்துக்கொண்டனர்.
அனைவரின் சுக துக்கங்களில் பங்குகொள்ளும்
அருள் நெஞ்சம் உடையவன்.
அவன் பள்ளியில் சுமார்
ஐந்நூறு மாணவர்கள் பயின்றனர். தலைமையாசிரியரை நல்லாசிரியருக்கு ஓர் எடுத்துக்காட்டாக மாணவர்கள்
கருதினர்.
அவன் சமுதாயத்தில் சிறந்த
அங்கீகாரம் பெற்றுப் பல விருதுகளைப் பெற்றவன்.
தலைமையாசிரியருக்கு ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு
வகுப்புகள்தான் பாடம் எடுக்க வேண்டியிருக்கும். மற்ற சமயத்தில் பள்ளியின்
நடைமுறைச் செயற்பாடுகள், கோப்புகள் ஆகியவற்றை ஒரு நோட்டம் பார்த்துக்
கையொப்பம் இடவேண்டும். மற்றபடி நிறைய நேரம் ஓய்வு கிடைக்கும்.
முன்பெல்லாம் தனக்கு அட்டெண்டராக இருந்த மூதாட்டி தன்அறை வாசலுக்கு முன்னிருக்கும் புங்கமரத்தின் நிழலில் 'அக்கடா' என்று வெற்றிலைப் பாக்கை மென்றுகொண்டு அமர்ந்திருப்பாள். அவள் வயது கருதியும்
தாளாளருக்கு அவள் தூரத்துச் சொந்தம்
என்ற வகையிலும் அவளுக்கு எந்தவேலையும் யாரும் இடுவதில்லை.
சந்திரன் காலை, மாலை இருவேளையும் வகுப்புகள்
சரியாக நடைபெறுகின்றனவா என்று பள்ளியை ஒரு சுற்றுச் சுற்றி
வருவான்.
தன் ஓய்வு நேரத்தில்
செய்தித் தாள்களையும் சிறந்த அறிஞர்கள் எழுதிய நூல்களையும் பள்ளி நூலகத்திலிருந்து தருவித்துப் படித்துக் கொண்டிருப்பான்.
சுந்தரி வந்தது முதலாக அவள் புங்க மரத்தடியைத்
தஞ்சம் அடையவில்லை. சிறு வயதினளாக இருப்பதால்
அவளை மரத்தடி நிழலுக்குத் தாரைவார்க்க முடியவில்லை.
தன் அறையிலேயே மூலையில்
ஒரு நாற்காலி போட்டு அதில் அமரச்சொன்னான். பிளஸ் டூ வரை படித்த
பெண்ணுக்குரிய மரியாதையைத் தரவேண்டாமா?
சந்திரனைச் சுந்தரிக்கு ரொம்பவே பிடித்துப் போனது.
முதற் பார்வையில் அவன்
தந்தையாகத் தெரிந்தான்.
அடுத்தமாத வாக்கில் தமையனாகத் தெரிந்தான்.
அதற்கு அடுத்த மாதத்தில் தோழனாகத் தெரிந்தான்!
பிறகு ? ? ?
'சார் ஒங்களுக்கு எவ்வளவு
வயசிருக்கும்?' - பெண்களிடம்தான் வயதைக் கேட்கக் கூடாது. ஆண்களிடம் கேட்கலாம் இல்லையா?
சந்திரனுக்கு எப்போதுமே தனது இளமைத் தோற்றத்தில்
அலாதியான பற்று உண்டு.
அவன் வயதினர் எத்தனையோ
பேருக்கு வழுக்கை விழுந்துவிட்டது.
முக்கால்வாசிப் பேருக்கு நரைத்துவிட்டது.
உடல் தளர்ந்து, இளைத்து
அல்லது தொப்பை விழுந்து மூப்புற்றதைப்போல் தோற்றம் அளிக்கிறார்கள்.
அவர்களோடு தன் தோற்றத்தை ஒப்பிட்டுத்
தன் இளமையைப் பறைசாற்றிக் கொள்வதில் அவன் தவறுவதில்லை.
அத்தகையோரைப் பார்க்கும்போது, 'என்ன தலை எல்லாம்
சுத்தமா நரைச்சிடுச்சி?' என்று நக்கலடிப்பான்.
அவர்கள் பதிலாகச் சந்திரனைப் பார்த்து, 'ஆமா
என்ன பண்றது, வயசாகுது இல்லையா?' என்பார்கள்.
'ஆனா நீ மட்டும்
அன்னைக்குப் பாத்த மாதிரியே இளமையா இருக்கியே!' என்று கூறுவார்கள்.
அப்படித்தான் அவர்கள் கூறுவார்கள் என்று எதிர்பார்த்துத்தானே அவன் பேச்சை அப்படி
ஆரம்பிப்பது!
தன் இளமையை அனைவரும்
புகழ்வதில் அவனுக்கு அப்படியொரு அலாதியான இன்பம். அவன் தலை நரைக்காமல்
இருப்பதற்குக் காரணமே அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்ளும் அவன் மனைவி தாட்சாயணிதானே!
அது அவனுக்குத் தெரியுமா?
நல்ல மனைவி என்பவள்
தன்னைக் காத்து, தன் கணவனைக் காத்து,
தன் கணவனின் மானத்தைக் காத்து, அவனைப் பற்றி எந்த இரகசியத்தையும் வெளியில்விடாது
சொல்லைக் காத்துக் கிடப்பதால்தான் சமுதாயத்தில் ஆண்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக வலம்வர முடிகிறது. ஆனால் இவற்றை எல்லாம் நல்ல மனைவி விளம்பரப்படுத்திக்
கொள்வதில்லை.
தன் வயதைப் பற்றிக்
கேட்ட சுந்தரியைப் பார்த்து மறுகேள்வி தொடுத்தான் சந்திரன் : 'எனக்கு எவ்வளவு வயசிருக்கும்னு நீதான் சொல்லேன்.'
சந்திரனைத் தன் பதிலால் உச்சி
குளிர வைத்துவிடவேண்டும்.
'என்ன ஒரு முப்பது
வயசிருக்குமா?' - வேண்டுமென்றே இருபது வயதைக் குறைத்தாள் சுந்தரி.
'அவ்வளவு இளமையாவா தெரியறேன்!' - மகிழ்ச்சி மத்தாப்புகள் முகத்தில் பூத்தன.
'ஆமா, நான் நெஜமாத்தான்
சொல்றேன். ஒங்களப் பாத்தா காலேஜ்ல படிக்கற பையன் மாதிரிதான் இருக்கு. உங்களுக்கு முப்பது வயசுதானே!' - அவனை இன்னும் குஷிப்படுத்த
வேண்டும்.
'இல்ல சுந்தரி, நாற்பதுல
இருக்கேன்.' அவன் பங்குக்குப் பத்து
வயதைக் குறைத்தான்.
'பாத்தா அப்படியொன்னும் தெரியவேயில்ல. இப்பக் கூட நீங்க ஊன்னு
ஒரு வார்த்த சொன்னா ஒங்களக் கட்டிக்க நூறுபேர் கியூவுல நிப்பாங்க' - அவனை நன்றாகவே மகிழ்ச்சிக்
கடலில் குளிப்பாட்டினாள்.
நூறு பேரில் அவளும்
ஒருத்தியோ?
'சுந்தரி நீ கூட சின்னப்
பொண்ணாத்தான் தெரியற. ஒனக்கு முப்பத்தஞ்சி வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.' - அவள்
சான்றிதழைப் பார்த்து அவள் வயதைக் கணக்கிட்டு
வைத்திருந்தான் சந்திரன்.
சந்திரன் மனத்தில் தனக்கென ஒரு இடம் ஒதுக்கப்படுவதைக்
கண்டுகொண்டாள் சுந்தரி.
தன் வாழ்க்கைத் துயரங்களை
எல்லாம் சந்திரன் மீது ஏற்றிவைத்து ஆறுதல்
தேடினாள் சுந்தரி.
இப்போது அவன் அவளுக்குக் கிடைத்த
சுமைதாங்கி. அவன் தன்னையே தாங்குவானா?
முயன்றுதான் பார்ப்போமே!
தான் இதுவரை எந்த
ஆண்மகனையும் மனத்தால் கூட நினைத்தது இல்லை
என்றாள்.
'நான் சின்ன வயசுல
மாட மாளிகையில் மகாராணி மாதிரி வாழ்ந்தேன். அந்த ஊர்லயே எங்க
குடும்பந்தான் பணக்காரக் குடும்பம். தூணு வெச்ச வீடுன்னுதான்
எல்லாரும் சொல்வாங்க. முயல், புறாவெல்லாம்கூட நாங்க வளத்தோம். எங்க வீட்ல நாப்பது
கறவை மாடுங்க இருந்துது. ஊரே எங்க வீட்ல
இருந்துதான் பால் வாங்கிட்டுப் போகும்.
பால் கறக்க, வீடு வாசல் பெருக்க
அப்படின்னு ஏகப்பட்ட வேலக்காரங்க இருந்தாங்க, எங்க அப்பா என்னத்
தரையில விடாமத் தாங்கித்தாங்கி வளத்தாரு' என்று தான் கண்ட பண்ணையார்
காலத்துத் திரைப்படங்களிலிருந்து சில காட்சிகளை எடுத்துத்
தன் வாழ்க்கையோடு ஒட்டவைத்துக் கொண்டாள்.
'ஆனா யாரு கண்ணு
பட்டுதோ தெரியல. எங்கப்பா சீக்கிரமா போயி சேந்துட்டாரு. சொந்தக்காரங்கல்லாம்
வெவரம் தெரியாத எங்க அம்மாவ ஏமாத்திச்
சொத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டாங்க. எங்களைப் பராரியாத் தெருவுல நிறுத்திட்டாங்க' என்றாள்.
அவளுடைய தந்தை குடிபோதையில் ஆற்றின் குறுக்கே இருந்த ஷட்டர்ஸில் தவறிவீழ்ந்து இறந்ததை அவள் சொல்லாமல் மறைத்தாள்.
அதற்குப் பிறகு இட்லி, தோசை விற்று விநாயகத்தைச்
சிரமப்பட்டுப் படிக்க வைத்த அவள் தாயின் உழைப்பைக்
கௌரவப்படுத்தாமல் விட்டு விட்டாள். பணக்காரக் குடும்பத்தில் பிறந்து பிறரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறிச் சந்திரனின் மனத்திலே பச்சாதாபத்தைப் பச்சை குத்தினாள்.
ஏழையாக இருப்பவர்களைவிட வாழ்ந்து கெட்டவர்கள் மேல் நமக்கு அதிகமாகவே
பச்சாதாபம் பிறந்துவிடுகிறது. அந்த உலகியலை அவள்
நன்றாகவே அறிந்திருந்தாள்.
தன் அண்ணி எப்பொழுதும்
தன்னைக் கொடுமைப் படுத்திக்கொண்டே இருப்பதாகவும் தன் அண்ணியின் பேச்சுக்கெல்லாம்
தலையாட்டிக் கொண்டே அண்ணன் இருப்பதாகவும் அதனாலேயே ஆண்களைக் கண்டாலே ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது என்றும் கூறினாள்.
'அப்படின்னா, நானும் ஆம்பளதானே, அப்ப என் மேலயும்
ஆத்திரம் ஆத்திரமா வருதா?' என்று வம்பளந்தான் சந்திரன்.
'ஐயய்யோ!
உங்களப்போய் நான் அப்படிச் சொல்வனா?
நீங்களும் அவங்களும் ஒன்னா? முக்கால்வாசி ஆம்பளைங்க அயோக்கியங்களா இருக்காங்க. ஆனா நீங்க விதிவிலக்கு,
நீங்க எவ்வளவு நல்லவரு! ஒங்க குணம் யாருக்கு
வரும்? உங்களமாதிரி இந்த ஒலகத்துல எல்லா
ஆம்பளைங்களும் இருந்தாக்கா ஏங்க பொம்பளைங்க கஷ்டப்படப்போறாங்க?'
- சந்திரன் தலையில் பெரிய பெரிய ஐஸ்கட்டிகளை அடுக்கினாள் சுந்தரி.
(தொடரும்)
No comments:
Post a Comment