முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 10
வீட்டிற்குப் போகாமல் யோசனையில் மூழ்கினான் சந்திரன். 'டேய் சந்திரா, உன்
ஜாதகத்துல ரெண்டு பொண்டாட்டின்னு இருக்குடா' என்று மூட நம்பிக்கையே மொத்த
உருவாகக் கொண்ட அவனது தாய் சிறுவயதில் சொல்லிக்
கொண்டிருப்பாள். ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை என்று
அப்போது தாயைத் திட்டித் தீர்ப்பான். அவன் தாய் என்றோ
சொன்ன செய்தியின் விதை இன்று அவன்
மனத்தில் முளைவிடத் தொடங்கியது.
பல காலமாகக் கற்பனைக்
கடலில் நீந்தித் திளைத்துக் கொண்டிருந்த சுந்தரி இப்போது சந்திரனையும் அல்லவா அந்தக் கடலில் தனக்குத் துணையாக இழுத்துப் போட்டுவிட்டாள்.
சந்திரனின் தாய்கூட பதினைந்து நாட்களுக்கு முன்தான் தவறிப்போனார்.
அவர் ஏழு எட்டு
மாதங்களாகவே வாதத்தால் பீடிக்கப்பட்டுப் ஊரில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். எப்போதும் தனக்கு உடம்பு சரியில்லை, உடம்பு சரியில்லை என்று அனத்துவார்களே தவிர இப்படி அவர்கள்
படுக்கையில் வீழ்ந்தது கிடையாது.
'வாழ்க்கையில் இதுவரை வழுக்காத தன் மகன் ஒரு
கைகாரியால் வீழப் போகிறான். அரிய பொக்கிஷமான அவன்
மனைவி தாட்சாயணியைக் கூடிய விரைவில் இழக்கப்போகிறான்' என்று ஏதோ ஓர் உள்ளுணர்வு
அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அந்த எண்ணத்தைத் தாளமாட்டாமல்
என்னவென்று சொல்ல முடியாமல் அவர் வீழ்ந்து பின்னர்
எழவேயில்லை.
சுந்தரி அவன் பள்ளியில் - அவன்
வாழ்க்கையில் நுழைந்தபிறகுதான் இச்சம்பவம் நிகழ்ந்தது.
மனம் எப்போதும் ஏதாவதொரு
சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து
அதற்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறது. ஒரு எண்ணம் மறைந்து
மற்றொரு எண்ணம் அம் மனத்தில் குடியேற
வேண்டுமானால் பழைய எண்ணத்தைவிட புதிய
எண்ணம் வலுவானதாக இருக்கவேண்டும். இல்லையென்றால் ஏதேனும் அவசர நிமித்தமாக இருக்க
வேண்டும்.
அவன் தாய் படுத்த
படுக்கையாய்க் கிடந்தபோதுகூட ஏனோ அது அவன்
மனத்தைப் பெரிதாக வருத்தவில்லை. அது ஏனென்று அவனுக்கே
புரியாத புதிராக இருந்தது. சுந்தரிதான் அவன் மனம் முழுக்க
உலா வந்துகொண்டிருந்தாளே!
'ஆமாம், அவங்களுக்கென்ன வயசாகிப் போச்சு, வயசானா எல்லா நோயுந்தான் வரும். ஏதோ படுக்கையில ரொம்பகாலம்
கெடக்காம நல்லா இருக்கும்போதே போய்ச்சேந்தா சரிதான்' என்று தன் மனத்துக்கும் தன்னை
விசாரிப்பவர்களுக்கும் சொல்லிக்கொண்டான்.
வயதாகிவிட்ட தன் தாய் பற்றிய
எண்ணத்தைவிட திருமணமாகாமல் வயதாகிக் கொண்டிருக்கிறதே என்று தன்னை எண்ணத் தூண்டிய சுந்தரி அவன் மனத்தை ஆக்கிரமித்ததில்
வியப்பில்லை.
'நான் போனாக்கூட அவங்களால
தெரிஞ்சுக்க முடியாது, வாயும் பேசமுடியாது, கை காலும் அசைக்க
முடியாது, கண் பார்வையும் தெரியுதா
தெரியலையான்னு ஒன்னும் தெரியல, நான் அங்க போய்த்தான்
என்ன செய்யப்போறேன்?'.
'நான் ஊருக்குப் போயிட்டா
இங்க சுந்தரிக்குத் தனியா போரடிக்குமே!'
சுந்தரியின் பேச்சாகிய போதைமருந்து, படுக்கையில் கிடந்த தாயை அவன் அடிக்கடிச்
சென்று பார்க்கக்கூட நினைத்துப் பார்க்க முடியாமல் மயக்கிப்போட்டது என்பது அவனுக்கே அறிய முடியாமல் போனது.
தன் தாயின் மரணச்
சடங்குகளுக்குக்கூட அவன் அதிக நேரம்
ஒதுக்கவில்லை. தாய்க்குக் கொள்ளி வைத்தால் மீசை எடுக்க வேண்டும்,
மொட்டை அடிக்க வேண்டும் என்பதற்காக அச்சடங்குகளைச் செய்யத் தயங்கினான். கடைசியில் ஊராரின் வற்புறுத்தலுக்காக அதனைச் செய்ய வேண்டியதாகிப் போய்விட்டது.
மீசை எடுத்துவிட்டு, மொட்டை
அடித்துவிட்டு தன் முகத்தை அவனுக்கே
பார்க்கப் பிடிக்கவில்லை.
தாட்சாயணிகூட அவனை அடிக்கடிப் பார்த்துப்
பரிகாசம் செய்தாள்.
ஆனால் சுந்தரி அவனை
நேர்மாறாக எதிர்கொண்டாள்.
'நீங்க மீசை இல்லாம எவ்வளவு
சூப்பரா இருக்கிங்க தெரியுமா? இன்னும் பத்து வயசு கொறஞ்ச மாதிரி
இருக்குது".
'மொட்டைகூட உங்களுக்கு ரொம்ப அழகா இருக்குங்க'
அவன் மிகவும் இளமையாகத்
தெரிவதாகக் கூறியது அவனை மகிழ்ச்சிப்படுத்தியது. அதில் அவன்
தாய் இறந்த துக்கம்கூட மறந்துபோனது.
தன் இளமையைப் பற்றிப்
புகழ்ந்தால் சந்திரன், தன் சொத்தைக்கூட எழுதிவைத்துவிடச்
சித்தமாய் இருப்பவன் ஆயிற்றே! தன் அழகைப் பற்றிச்
சுந்தரி புகழ்ந்தது அவனைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. தன் மொட்டைத் தலையைக்
கூட அழகு என்று ஏற்றுக்
கொண்ட அவள் பண்பைச் சொல்லொணா
உச்சிக்குக் கொண்டுசென்றது.
தன் தாயின் இறப்பைத்
தொடர்ந்து, ஜாதகம் பற்றி அவள் என்றோ பரிகாசத்திற்காகச்
சொன்ன சொற்களை இன்று அவன் தெய்வ வாக்காகக்
கருதி அதற்கு வடிவம் கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
எண்ணங்களுக்கென்று ஒரு சக்தி இருக்கத்தான்
செய்கிறது. எந்த ஒன்றைப் பற்றி
நாம் ஆழ்ந்து சிந்திக்கிறோமோ அது நடந்தே விடுகிறது.
அந்த எண்ண பலத்தால்தானே அசோக
வனத்தில் ஆயிரமாயிரம் அரக்கர்களுக்கு மத்தியில் இராவணன் கொடுத்த அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது இராமனுக்காகக் காத்திருந்தாள் சீதை.
சந்திரனை எப்படியேனும் மடக்கிப் போட்டு விடலாம் என்ற சுந்தரியின் எண்ண
பலம் இப்போது
வேலைசெய்யத் தொடங்கிவிட்டதே!
ஜாதகம் பற்றிய சந்திரனின் எண்ணம் இப்போது பூதாகாரமாக வளர்ந்து பெரிதாகிக் கொண்டே போகிறதே!
ஆனால் தன் கணவன்
என்றும் தன்னையன்றி இன்னொரு பெண்ணை மனத்தாலும் நினைக்க மாட்டான் என்று எண்ணிய தாட்சாயணியின் எண்ணம் வலுவிழந்து கரையைக் கடந்த புயல் போன்று பொசுக்கென்று மடிந்தது ஏன்?
சுந்தரி, சந்திரன் என்னும் இருவருடைய எண்ண விசைமுன் ஒற்றையாய்
நின்ற தாட்சாயணியின் எண்ணம் ஆற்றல் குறைந்து போனதில் வியப்பில்லைதான்!
(தொடரும்)
No comments:
Post a Comment