Sunday, 18 August 2019

சிறியன சிந்தித்தவன்


சிறியன சிந்தித்தவன்
            அவன் சிறைச்சாலையில் கம்பிகளை எண்ணாமல் வேறு எதையோ எண்ணிக்கொண்டிருந்தான்.
            தான் எதற்காக அவரைப் பிடித்துத்தள்ள வேண்டும்? ஏன் அவர் தடுக்கி விழவேண்டும்? தேவையில்லாமல் ஏன் தன்மேல் கொலைப்பழி வரவேண்டும்? இப்போது ஏன் இப்படி வாழவேண்டும்?
            அவன் மாமனாரை நினைக்க நினைக்கக் கோபம் கோபமாக வந்தது.
            இந்தக் கோபம்தானே அவனை இந்தக் கதிக்கு ஆளாக்கியது  . . . இன்னுமா புத்தி வரவில்லை?
            அவன் படித்த படிப்பு சொல்லித்தராத புத்தி . . .  அவன் அனுபவம் ஏற்படுத்தாத புத்தி . . . அவன் மனைவியின் அறிவுரையால் தோன்றாத புத்தி . . .  இப்போது மட்டும் வந்துவிடப் போகிறதா என்ன?
            ஒருசிலர் என்னதான் தன் தவறை ஒரு கணம் உணர்ந்தாலும் அதனைப் புறந்தள்ளி தன் மீது எந்தத் தவறும் இல்லாததுபோன்று தாங்களாகவே சப்பைகட்டு கட்டிக்கொண்டு கண்மூடித்தனமாக மேலும் மேலும் தவறைச் சரியென்று எண்ணிக்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மட்டுமா துன்பம்? அவர்களைச் சார்ந்தவர்களுக்கும்தான்!
            மாமியார் மருமகள் பிரச்சினை உலகறிந்த செய்திதான். ஆனால் மாமனார் மருமகன் பிரச்சினை . . . ? அது எங்குமே இல்லை என்று சொல்ல முடியுமா? அங்கங்கே இலைமறை காயாக இருக்கத்தான் செய்கிறது.
            சபேசன் தன் ஒரே மகளை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தான். அவளுக்கு உலகத்திலேயே இல்லாத மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டு அலைந்தான். சபேசன் மகள் ரேவதியோ அப்பாவின் அலைச்சலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள். தன்னுடன் கல்லூரியில் படித்த சுந்தரைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஒற்றைக்காலில் நின்றாள்.
            சபேசன் கடைசி வரை சுந்தரை மணம்செய்துவைக்க ஒப்புக்கொள்ளவில்லை. சபேசனுக்கு இருக்கும் பிடிவாதம் ரேவதிக்கு இல்லாமலா போகும்? அவள் சொன்னது போலவே ஒருநாள் சுந்தரைக் கல்யாணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக வந்துநின்றாள்.
                இருக்கறதோ ஒரே பொண்ணு. போயும் போயும் அவகிட்ட கோச்சிகிட்டு நீங்க வாழ்க்கைல என்ன சாதிக்கப் போறீங்க?’ - சுற்றமும் நட்பும் அறிவுரை கூறின.
            திரண்டுவந்த கருமேகம் காற்றால் சிதறிக் கலைந்தது போல் தன் கனவுகள் கலைந்து போனதில் சபேசனுக்கு ஏமாற்றம். தானே தேடி இருந்தால் தன் மகளுக்கு இன்னும் நல்ல மாப்பிள்ளையாகத் தேடி இருக்கலாம் என்று மனத்திற்குள் ஒரு கற்பனை.
            இத்தனை நாள் தனக்கு மட்டுமே கிடைத்த தன் மகளின் அன்பு இப்போது தொலைந்துபோனதில் ஏமாற்றம்.
                தனியா நீங்க ரெண்டுபேரும் பிடிவாதமா இங்கயே இருந்து என்ன சுகத்தக் கண்டீங்க? பேசாம வீட்ட வாடகைக்கு விட்டுட்டு மகளோடபோய் இருக்க வேண்டியதுதானே!’ - அக்கம்பக்கத்தினர் தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
            அடுத்தடுத்துப் பிறந்த இரு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சரியான ஆளில்லாமல் மகளும் திண்டாடுகிறாள். ‘அவ வேலைக்குப் போவாளா? சமைப்பாளா? கொழந்தங்களப் பாத்துப்பாளா? அவ கெடந்து தனியா அல்லாடுறா!’ சபேசனின் மனைவி பார்வதியம்மாளும் கணவனை அரித்துக்கொண்டிருந்தாள்.
            வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மகளோடுபோய் செட்டில் ஆகியாகிவிட்டது.
            ரேவதிக்கு அப்பாடா என்றிருந்தது.  நாள் முழுக்க ஓடிஓடி உழைத்துக் களைப்பாய்விடுகிறது. காலையிலிருந்து எத்தனை எத்தனை வேலைகள்! வேலைகள் ஒருபுறம் கிடக்கட்டும்! வீட்டைப் பூட்டிக்கொண்டு அலுவலகம் சென்றபிறகு எத்தனை எத்தனைச் சந்தேகங்கள்!
                வீட்ட ஒழுங்கா பூட்டினனா? இல்லயா!’
                கொல்லக் கதவச் சாத்தினனே, தாழ்ப்பாள் போட்டனா? இல்லயா?’
                பால அடுப்புல வெச்சனே, அடுப்ப அணச்சனா? இல்லயா?’
                டி.வி. ஓடிக்கிட்டிருந்ததே, மெயின் ஸ்விட்ச ஆஃப் பண்ணனா? இல்லயா?’
                வாஷிங் மெஷின்ல துணியப் போட்டனே, வேலக்காரி எடுத்துக் காய வெச்சாளா? இல்லயா?’
            இப்படித் தினம்தினம் எத்தனை எத்தனைச் சந்தேகங்கள். இவற்றிற்கெல்லாம் விடைகாண வேண்டு மென்றால் மாலையில் வீடு திரும்பும்வரை காத்திருக்க வேண்டும்.
            காலையில் சில்லறை வேலைகளையெல்லாம் கவனிக்கவே கால்மணி நேரம் ஆகிவிடுகிறது.
            எஞ்சிய சட்டினி, இறக்கிவைத்த சாம்பார், பொரியல் இத்யாதிகளை ஒழுங்காக மூடிபோட்டுப் பிரிட்ஜில் எடுத்துவைக்காவிட்டால் மாலையில் அவையெல்லாம் ஊசிப்போய்க் கிடக்கும். ஊசிப்போய்ச் சாப்பிட லாயக்கில்லாமல் போவதுமட்டுமல்லாமல் ராத்திரிக்கு மீண்டும் சமைக்க வேண்டிவரும். இட்லி மாவை மறந்தாப் போல் விட்டுவிட்டால் அப்புறம் மாவு புளித்துப்போய்க் கிடக்கும்.
            வீட்டைப் பூட்டிவிட்டுத் தெருக்கதவைப் பூட்டிவிட்டு வண்டியை எடுக்கச்செல்லும்போது வண்டிச் சாவியை மறந்துவைத்துவிட்டது ஞாபகத்துக்கு வரும். இல்லையென்றால் செல்போன் சார்ஜிலேயே கிடந்து எடுக்காமல் வந்தது ஞாபகத்துக்கு வரும். மூக்குக் கண்ணாடியை மறந்துவைத்துவிட்டால் பிறகு நாள்முழுக்கக் கஷ்டம்தான். வேறுவழி இல்லாமல் மீண்டும் தெருக்கதவின் பூட்டைத் திறந்து, வீட்டுக்கதவின் பூட்டைத் திறந்து படுக்கை அறைக் கதவைத் திறந்து மறந்துவைத்துவிட்ட சாமானை எடுத்துக்கொண்டு பழையபடி எல்லாவற்றையும் பூட்டிவிட்டுக் கிளம்புவதற்குள் 'போதும் போதும்' என்றாகி விடுகிறது.
            தன் பெற்றோர் தங்களுடன் இருப்பதாய் வந்ததிலிருந்து ரேவதிக்கு இம்மாதிரித் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. நேரமாகிவிட்டது என்றால், ‘அம்மா . . .  நான் இப்ப டிபன் சாப்பிடல, டிபன் பாக்ஸ்ல போட்டுடு, ஆபீஸ்ல சாப்ட்டுக்கறேன்என்று ஓர் உத்தரவு போட்டுவிட்டு நிம்மதியாக அடுத்தது என்ன என்று சிந்திக்கலாம். டிபன் பாக்ஸை ஏந்திக்கொண்டு அம்மா வாசல்வரை ஓடிவர இரண்டு நிமிடத்தில் கிளம்பிவிட முடிகிறது.
            ரேவதியின் அப்பா, அம்மா வந்ததிலிருந்து சுந்தருக்கும் நிறைய ஓய்வு கிடைத்தது. இல்லையென்றால் அவன்தான் காலையில் எழுந்து குழந்தைகளையும் எழுப்பி, குளிப்பாட்டி, ஆடை அணிவித்து அடுத்த தெருவில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு வரவேண்டும்.  பெரியவளாவது சொன்னால் புரிந்துகொள்வாள். சின்னவன் செய்யும் அழும்பல் அதிகம். சீக்கிரத்தில் ஒத்துழைக்க மாட்டான். ‘சட்ட போட்டுக்கோஎன்றால்மாட்டன்என்பான். போட்டுவிட்ட சட்டையைமாத்துஎன்பான், ‘அந்த பொம்ம எடுத்துக் குடு, இந்தக் கார் எடுத்துக் குடுஎன்பான். இதற்கிடையில் அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் முகம் சுளிக்காமல் பதில் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். சற்றே முகம் சுளித்தாலும் அழுது வீட்டை இரண்டாக்கிவிடுவான்.
            இப்போது குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் டென்ஷனிலிருந்து ஓய்வு கிடைத்தது. அவை காலை எட்டுமணி வரை சமத்தாகத் தூங்கிக்கொண்டிருக்கின்றன. மாலை நேரங்களிலும் வீட்டில் அச்சுறுத்தக் காத்துக்கிடக்கும் வேலைகளின் அச்சம் இல்லாமல்  வீட்டிற்கு வரமுடிகிறது.
            ஆனால் சபேசன் . . . ?
            அங்கே மகிழ்ச்சியடையாத ஒரே ஜீவன் இருக்கிறது என்றால் அது சபேசன்தான்.
ரேவதியும் சுந்தரும் அன்யோன்யமாக இருப்பதுகூட சபேசனுக்குப் பொறாமையாக இருந்தது.
            தன் மீது மட்டுமே அன்பைச் செலுத்திவந்த மகள் இப்போது ஒட்டுமொத்தமாக சுந்தர்மீது அன்பைப் பொழிவதைச் சபேசனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானே பார்த்துத் திருமணம் செய்து வைத்திருந்தால்கூட ஒருவேளை மனத்தைத் தேற்றிக் கொண்டிருக்கலாம்.
            போதாததற்குத் தன் மனைவிவேறு மருமகனைத் தாங்குதாங்கென்று தாங்குகிறாள். தன்னை அவள் நன்றாக கவனித்துக் கொள்வதில்லை என்று சபேசனுக்கு அவள் மீதும் வெறுப்பு. மகளும் மருமகனும் காலையில் 'நேரமாச்சி நேரமாச்சி' என்று ஆளாய்ப் பறக்கும்போது அவர்களைக் கவனித்து அனுப்புவதற்கே பார்வதியம்மாளுக்குச் சரியாக இருக்கிறது. இவற்றிற்கிடையில் சபேசன் காபி குடித்தாரா இல்லையா என்று எங்கே பார்ப்பது? 'நீங்களே கொஞ்சம் வந்து போட்டுக் குடிக்கக் கூடாதா?’ என்று அவள் எதார்த்தமாகக் கேட்பதைக்கூட அலட்சிய மனோபாவம் என்று குறை காண முயன்றார்.
            மருமகன் நிறைய சம்பாதிக்கிறான்; கேள்விமுறை இல்லாமல் தாராளமாகச் செலவு செய்கிறான்; வெகு சொற்ப காலத்திலேயே வசதிகளைப் பெருக்கியிருக்கிறான். அவற்றைப் பார்க்கப் பார்க்கப் பார்வதியம்மாள் பூரித்தாள். அவனுக்குத் தந்த மரியாதையை உயர்த்தினாள்.
                'ஆமாம்! என்னத்தப் பெருசா சாதிச்சிட்டான்? நான் அந்தக் காலத்துல செய்யாததா?’ என்று தன் மருமகனைப் பற்றி அலட்சியமாகப் பேசினார் சபேசன். தன்னைவிட தன் மருமகன் புத்திசாலியாக இருப்பதைக்கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
            சபேசனின் அலட்சியப்போக்கு சுந்தருக்கு எரிச்சல் ஊட்டியது. சுந்தர் நல்லவன்தான் என்றாலும் சபேசனைப் பார்க்கும் போதெல்லாம் கெட்டவனாக மாறிப்போனான். தன் மாமனாரை எப்படியாவது மட்டம்தட்ட வேண்டும் என்பதில் அவனும் குறியாக இருந்தான்.
            ஒருவரையொருவர் மட்டம் தட்டிக் கொள்வதில் சளைத்தவர்களல்லர். இப் போட்டி நாளுக்கு நாள் வளர்ந்தது. விடைக் கோழிகள் சிலிர்த்துக்கொண்டு சண்டை போடுவதைப்போல் உப்புப்பெறாத விஷயத்திற்கெல்லாம் இருவரும் வாக்குவாதம் செய்துகொள்வது வழக்கமாகிப் போனது.
            யார் எதைச் சொன்னாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கும் சபேசன், மருமகன்ம்என்றால்கூட வாக்கியம் வாக்கியமாத் திருப்பித் தாக்கினார்.
            சுந்தர் மட்டுமென்ன இளைத்தவனா? அவன் பங்குக்குக் கருந்தேளாகக் கொட்டினான்.
                அறிவிருக்கா?’, ‘என்ன லூசு மாதிரிப் பேசறீங்க!’, 'என்ன கிழிச்சீங்க?’ என்ற வார்த்தைகள் அவன் நாக்கில் அழுத்தம் கொள்ளும்.
            சுந்தர் வீட்டிலிருக்கும் நேரங்களிலெல்லாம் மாமனார் என்ன செய்கிறார்? என்ன சாப்பிடுகிறார்? எங்கே நிற்கிறார்? எப்படி அமர்ந்திருக்கிறார்? என்று இன்ச் இன்ச்சாகக் கவனித்துக் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான்.
            சுந்தரின் பேச்சுகளுக்கு எதிர்வாதம் செய்தார் சபேசன்.
            இருவரின் பேச்சும் ரேவதி, பார்வதியம்மாள் காதுகளில் நாராசமாகப் பாயும். அவரவர் எப்படித் தன் கணவன்மாரை விட்டுக்கொடுக்க முடியும்?
            ரேவதி தன் தந்தையை எப்படி விட்டுக் கொடுப்பாள்? என்னதான் ஆனாலும் தன்னைப் பெற்று வளர்த்துப் படிக்கவைத்தவர் அவர்தானே? இப்போது ஒரு நல்ல வேலையில் தான் இருப்பதற்கும் கைநிறைய சம்பாதிப்பதற்கும் அவர்கொடுத்த கல்விதானே காரணம்? அதை மறந்துவிட முடியுமா? என்னதான் தான் காதலித்துக் கைப்பிடித்தவன் என்றாலும் தராதரம் இல்லாமல் சுந்தர் தன் தந்தையை நேரடியாகத் திட்டுவதை அவளால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?
            அதே நேரம் தன் கண்நிறைந்த கணவனைத் தன் தந்தை அவமதிப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?
            இருவரது சண்டையினாலும் அவளுடைய இரத்த அழுத்தம் ஏறியதுதான் அவள் கண்ட பலன்.
            சுந்தரின் பேச்சைப் பொறுத்துக்கொள்ளுமாறு சபேசனிடம் கூறினால், ‘பெருசா சொல்ல வந்திட்டா, உன் வேலய பாத்துட்டுப் போ!’ என்று பார்வதியம்மாளைக் கரித்துக்கொட்டுவார்.
                இதோ பாருங்க, அப்பாதான் புரியாம நடந்துக்கறார். நீங்க நெறைய படிச்சவர்தானே? பண்பாடு உள்ளவர்தானே? நாகரீகம் தெரிஞ்சவர்தானே? ஊர்ல எத்தனையோ பேர் ஒங்களுக்குச் செய்யற துரோகத்தை யெல்லாம் போனாப் போறாங்கன்னு பொறுத்துக்கறீங்க, எல்லாத்தையும் மறந்து தொடச்சிப் போட்டுட்டுச் சகஜமாச் சிரிச்சிப் பேசறீங்க. ஆபீஸ்ல ஒங்க கால வாரி விடறாங்கன்னு தெரிஞ்சும் ஒங்க டிபார்ட்மென்ட் ஹெட்டு கிட்ட வழியறீங்க, ஆனா சொந்த மாமனார இப்படிக் கரிச்சுக்கொட்றீங்களே, அவர் செய்யற சின்னச்சின்னத் தப்பையும் பூதக்கண்ணாடி போட்டுத் தேடிக்கிட்டுத் திரியறீங்களே! ஏதோ மென்ட்டல் பேசுதுன்னு நெனச்சாவது அவர விட்டுத்தள்ளக் கூடாதா?’ இப்படி ரேவதி எத்தனை முறை அவனுக்கு அறிவுரை கூறியிருக்கிறாள். ஆனால் அவற்றையெல்லாம் அவன் கேட்டானா? ஏதோ ஜென்ம வைரியைப் பார்ப்பது போலல்லவா தன் மாமனாரைப் பார்க்கிறான்? மாமனாகிய கம்சனும் மருமகனாகிய கண்ணனும்கூட இப்படி ஒருவர் மீது ஒருவர் பழிதீர்த்துக் கொள்ள அலைந்திருக்க மாட்டார்கள்.
                நீங்க இப்படித் தேவையில்லாம கோச்சிகிட்டா அப்பறம் அவங்க நம்பளவிட்டுப் போயிடுவாங்க. அதுக்கப்பறம் நான் தனியா சமைச்சுக்கிட்டு வேலைக்கும் போயிகிட்டு பசங்களயும் பாத்துக்கிட்டுச் சிரமப்படணும், அப்பறம் ஒங்க இஷ்டம்' என்று ரேவதி சுந்தருக்கு பயங்காட்டுவாள்.
            உண்மைதான். காலையில்புவாங் புவாங்' என்று ஏதோ ஒரு கோடியில் கேட்கும் பால்காரனின் ஹாரன் சத்தத்தைப் பின்பற்றிக் காதுகளைக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நாலுவீடு தள்ளி அவன் வந்திருப்பான் என்ற அனுமானத்தில் சரியான காசையும் பாத்திரத்தையும் வைத்துக்கொண்டு வாசலில் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் பால்காரன் ஜுட் விட்டுவிடுவான். கடைசியில் பால் வாங்காமல் அவஸ்தைப்பட வேண்டும். காலையில் பால் வாங்குவதைப்போன்று சிரமமான வேலை வேறு இருக்கமுடியுமா? பால்காரன் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் காலைக்கடன்களைச் செய்யப் போகமுடியாது. குளிக்கப் போகமுடியாது. பாக்கெட் பால் வாங்கினால் யாருக்கும் பிடிக்கமாட்டேன் என்கிறது. என்ன செய்ய?
            இந்தப் பயமுறுத்தல் இரண்டு மூன்று நாளைக்கு தான் தாக்குப்பிடிக்கும். அதன் பலன் எல்லாம் சின்னக் குழந்தைக்குப் பூச்சாண்டி பயம்காட்டுவது போல்தான். மீண்டும் பழையபடி வாய்ச்சண்டை வம்புச் சண்டைதான்!
தன் தந்தையையும் கணவனையும் பெரும்பாலான நேரம் ஒருத்தரையொருத்தர் அண்டவிடாமல் பார்த்துக் கொள்வது ரேவதியின் முக்கியப் பணிகளில் ஒன்றாகிப் போனது.  ஏதேனும் காரணத்தை அடிப்படையாகக்கொண்டு தந்தையைத் தன் கணவன் முறைத்துக்கொள்ளப் போகிறான் என்ற அச்சத்தில் சுந்தரைக் கூப்பிட்டுப் படுக்கையில் தள்ளாத குறையாகத் தள்ளித் தொலைக் காட்சியை 'ஆன்' செய்து அவனைச் சோம்பேறியாக்கிக் கொண்டிருந்தாள் ரேவதி. காற்றாட அவனைத் தோட்டத்தில் உலாவவிட்டால் பின்விளைவுகளை யார் சமாளிப்பது?
            சபேசன் - சுந்தர் இருவரின் எதிர்பார்ப்புதான் என்ன?
            சபேசனுக்குத் தன் மகள் நன்றாக இருக்க வேண்டும்; வசதியாக இருக்க வேண்டும்; ஆனால் மருமகன் அழிந்துபோக வேண்டும். மருமகன் அழிந்துபோனால் மகள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
            சுந்தருக்கோ தன் வீட்டு வேலைகளைச் செய்ய பொறுப்பான ஆள் வேண்டும். மாமியார் தன் மனைவியையும் குழந்தைகளையும் தன்னையும் வீட்டையும் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். தனக்கு வீட்டின் சின்னச்சின்ன பொறுப்புகளிலிருந்து விடுதலை கிட்ட வேண்டும். ஆனால் சபேசன் அழிந்துபோக வேண்டும். சபேசன் என்ற பற்றுக்கோடு இல்லையென்றால் மாமியார் எப்படி இயங்க முடியும்?
            தன் தந்தையின் போக்கையும் மாற்றமுடியாமல் தன் கணவனையும் வழிக்குக்கொண்டுவர முடியாமல் பல சமயங்களில் ரேவதியின் கண்களில் அருவி கொட்டி யிருக்கிறது. அவள் மனத்திற்குள் எரிமலை வெடித் திருக்கிறது? இருவரின் வாக்குவாதத்தின்போது அவள் உடலில் பூகம்பத்தின் நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவளால் வேறு என்ன செய்யமுடியும்? வேலைக்குப் போகும் பெண்களின் நிலை இதுதான்!
            சென்ற மாதம் இப்படித்தான் வாய்ச்சண்டை ஆரம்பித்தது. ஆனால் சண்டையின் காரணத்தை இன்றுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணமே இல்லாமல் சண்டையிட்டுக் கொள்வதில் சுந்தரும் சபேசனும்தான் சூரப்புலிகளாயிற்றே!
            வாய்ச்சண்டை ஏதோவொரு நொடியில் கைச் சண்டையாக மாறியது.  அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சபேசன் மருமகனை அடித்துவிடுவதுபோல் இரண்டடி முன்னால் பாய்ந்தார். கோபம் தலைக்கேற சபேசனை ஒரு எத்து எத்தித் தள்ளினான் சுந்தர்.
            விட்டிருந்தால் இன்னும் ஒன்றிரண்டு வருடத்தில் சபேசன் தானாகவே இறந்து விட்டிருப்பார். ஆனால் அதன் காரணகர்த்தாவாகச் சுந்தர் ஆகவேண்டும் என்பது . . .
            தயவுசெய்து விதியின்பேரில் பழியைப்போட்டு யாரும் தப்பித்துக் கொள்ளாதீர்! இது விதியல்ல, இருவரும் வேண்டுமென்றே உருவாக்கிக் கொண்ட வினை . . . !
            வயதான சபேசன் தடுமாறிக் கீழேவிழுந்தார். சுவரில் தலைமோதி இரத்தம் கொட்டியது. மயக்கமானார். சுந்தர்தான் மாமனாரைத் தூக்கிக் காரில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டுசென்றான். சபேசனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர் அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என்று உறுதிப்படுத்திச் சான்றிதழ் வழங்கினார்.
            சபேசன் - சுந்தர் போட்டியில் ஜெயித்தது யார்?
            சபேசன் அழியவேண்டும் என்ற சுந்தரின் ஆசை நிறைவேறிவிட்டதா?
            நிறைவேறியது.
            அவர் சிதையில்!
            சுந்தர் அழிய வேண்டும் என்ற சபேசனின் ஆசை நிறைவேறிவிட்டதா?
            நிறைவேறியது.
            அவன் சிறையில்!
            ஆனால் வெற்றி யாருக்கு மகிழ்ச்சியைத் தந்தது? வெற்றியை யார் கொண்டாடியது?
            சோகம்! சோகம்! சோகம்! தொடர்புடைய எல்லோர் வாழ்விலும் சோகம்!
            போலீஸ் விசாரணை தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் சுந்தருக்கு எதிராகச் சாட்சி கூறினர். அவன் வீட்டில் நடைபெறும் மாமனார் - மருமகன் பிரச்சினைதான் ஊரறிந்த இரகசியமாயிற்றே.
            சூழ்நிலையும் சாட்சிகளும் சுந்தருக்கு எதிராகவே அமைந்தன. ரேவதியால் எதுவும் பேச முடியவில்லை. அவள் யாருக்கென்று அழுவாள்.
            இறந்துவிட்ட தன் தந்தைக்காகவா?
            தந்தையைப் பறிகொடுத்து முடங்கிக்கிடக்கும் தன் தாய்க்காகவா?
                கோபத்தை அடக்குங்கள்! அடக்குங்கள்!' என்று அவள் கூறிய அறிவுரையைக் கொஞ்சமும் காதுகொடுத்துக் கேட்காமல் இன்று சிறைக்குள் பரிதவிக்கும் தன் கணவனுக்காகவா?
            மாமனாரும் மருமகனும் வேண்டுமென்றே சிறிது சிறிதாக வளர்த்துக்கொண்ட எரிச்சலும் கோபமும் சுந்தரையும் அவன் மனைவி மக்களையும் பார்வதி அம்மாளையும் இன்று அதலபாதாளத்தில் வீழ்த்திவிட்டன.
            ஆனால் இன்னும் சுந்தரின் கோபம் அடங்கவில்லை. இத்தனைக்கும் காரணம் தன் மாமனார்தான் என்று அவன் எண்ணியபோது கோபக்கனல் தெறித்தது. அதன் ஜுவாலை சிறைக் கம்பிகளைச் சூடாக்கிக் கொண்டிருந்தது.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி,  ஆசைமுகம் மறந்துபோச்சே,  காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2009,  52-65.

No comments:

Post a Comment