Tuesday, 27 August 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 18


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 18
            சுந்தரியின் நடை உடையும் பேச்சும் பணிவும் தாட்சாயணிக்குப் பிடித்துவிட்டன. சம்பளமும் அவள் அதிகம் எதிர்பார்க்கவில்லை. வேலைக்காரியின் தேவையும் நெருக்கடி கொடுத்தது. 
            தாளாளருக்கு அவள் தெரிந்தவள் என்பதால் அவர்களுக்குப் பயந்து நடந்துகொள்வாள், தப்பு தண்டா செய்யமாட்டாள், திருட மாட்டாள் என்று சந்திரன் அவளைப்பற்றிய கேரக்டர் சர்டிபிகேட் வாசித்தான். மேலும் தங்கள் வீட்டோடு அவள் இருந்துவிடுவதாகக் கூறுவதும் தங்களுக்குச் சாதகமாக உள்ளதாக உரைத்தான். எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் இல்லாத நேரங்களில் வீட்டைச் சுற்றியிருக்கும் காலியிடத்தில் தோட்டத்தை அமைக்குமாறு சொல்லலாம், இப்படி நிறைய வேலைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மனைவிக்கு ஆசை காட்டினான் சந்திரன்.
            அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் பாத்ரூமோடு கூடிய ஒரு சிறிய அறை பயன்படுத்தப்படாமல் இருக்கத்தான் செய்தது. அதை அவளுக்குக் கொடுத்து விடலாம். அங்கிருந்து கீழே இறங்க வெளிப்பகுதியில் மாடிப்படிகள் இருந்தன. எனவே அவர்கள் அலுவலகம் போகும்போது வீட்டைப் பூட்டிக்கொண்டு சென்றுவிடலாம். வீட்டு வேலைநேரம் தவிர மற்ற நேரங்களில் தாட்சாயணியின் பிரைவசி சுதந்திரத்தில் வேலைக்காரியின் குறுக்கிடு இருக்காது என்று உறுதி கூறினான் சந்திரன்.
            சுந்தரியின் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியது.
            சுந்தரி நன்றாகவே வீட்டு வேலைகளைச் செய்தாள்.காலையில் தாட்சாயணி எழுந்திருப்பதற்குள் எழுந்து வாசலைக் கூட்டி அழகழகான கோலங்களை இட்டாள். தாட்சாயணி வாசலைப் பெருக்குவாளே அன்றி எப்பொழுதும் கோலம் போடுவதில்லை. 'கோலம் இல்லாமல் வீடு களை இல்லாம இருக்கு' என்று கூறி முதல்நாளே ஒருபடி கோலமாவு வாங்கிவைத்தாள் சுந்தரி. காலையில் விரைவாகச் சமையல் வேலைகளைக் கச்சிதமாக முடித்தாள். தாட்சாயணி சுவைத்துச் சாப்பிடுமாறு உணவு வகைகளைச் செய்து பரிமாறினாள். சந்திரனும் நன்றாகவே சாப்பிட்டான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
            சந்திரன் வீட்டில் பூஜை அறை என்று எதுவும் இல்லை. கடவுளர் படங்களும் இல்லை. சந்திரனுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பது நாடறிந்த பழைய விஷயமாயிற்றே! கடவுள் இத்தகைய படங்களிலும் உருவங்களிலும் நிறைந்திருக்கிறார் என்ற சித்தாந்தத்தை தாட்சாயணியும்  ஏற்காதவள். எத்தனையோ குணநலன்கள் சந்திரனுக்கும் தாட்சாயணிக்கும் ஒத்துப்போயின. கடவுள் விஷயத்திலும் அதேதான். எல்லா வகையிலும் இருவரும் சரியான ஜோடிதான் என்று சுற்றத்தினராலும் நண்பர்களாலும் பலமுறை பாராட்டப் பெற்றவர்கள். அவர்கள் தீபாவளி போன்ற சமயம் சார்ந்த பண்டிகைகளைக் கூடக் கொண்டாடுவதில்லை. அதற்காகத் தங்களைப் பகுத்தறிவுப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று பறைசாற்றிக் கொண்டதும் இல்லை.
            சந்திரனும் தாட்சாயணியும் கிளம்பும்போதே சுந்தரியும் வெளியே கிளம்பிவிடுவாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்கு வேண்டிக் கொண்டதாக உரைப்பாள்.
            ஒருநாள் கோயிலில் மண்சோறு உண்டதாகக் கூறுவாள். அது தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் நலனுக்காக என்று சந்திரனுக்கு மட்டும் உரைப்பாள்.
            ஒரு நாள் சுமங்கலிப் பூஜை செய்யப் போவதாகக் கூறுவாள். அது சந்திரனின் ஆயுளுக்காக என்று அவனிடம் கண் ஜாடை காட்டுவாள்.
            இப்படி வாரம் முழுக்கச் சந்திரனுக்காகவும் அவன் குழந்தைக்காகவும் சுற்றியுள்ள கோயில்களை எல்லாம் ஏறி இறங்கினாள்.
            மாவு விளக்கு ஏற்றினாள்.
            எலுமிச்சை விளக்கு ஏற்றினாள்.
            அம்பிகைக்குப் புடவை சாற்றினாள்.
            நூற்றிஎட்டு குடம் தண்ணீர் ஊற்றி லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தாள்.
            கோயிலின் பிரகாரத்தில் அடிஅடியாக நடந்து அடிப்பூஜை ஆற்றினாள்.
            நவக்கிரகத்தை நாள் தவறாமல் சுற்றிவந்தாள்.
            சனி, ஞாயிறு தினங்களில் வேலைகளை எல்லாம் காலையிலேயே முடித்துவிட்டு பேருந்து ஏறிச்செல்ல வேண்டிய தூரத்தில் இருக்கும் கோயில்களையும் விசிட் செய்தாள்.
            பெருமாள், சிவன், அம்பிகை, முருகன், விநாயகர் என்று எந்தக் கடவுளையும் அவள் விட்டுவைக்கவில்லை.
            பெரிய கோயில், சிறிய கோயில், வழிக்கரை அம்மன், ஏழை மாரியம்மன், தெருமுனைப் பிள்ளையார் என்று எல்லாத் தரத்தில் அமைந்த பெரிய, சிறிய, மூலை முடுக்குக் கோயில்களிலும் பிரார்த்தனை செய்தாள்.
            ஒருநாள் உச்சிக்காலப் பூஜை செய்தாள்.
            ஒருநாள் ராகுகாலப் பூஜை செய்தாள்.
            ஒருநாள் கடை ஜாமப் பூஜை செய்தாள்.
            சர்ச், தர்கா என்று பிற மதத்துக் கோயில்களையும் அவள் பாக்கி வைக்கவில்லை.
            சுந்தரியின் கடவுள் பக்தி நாத்திகவாதியான(?) சந்திரனை மெய் சிலிர்க்க வைத்தது.
            வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு இப்படித் தனக்காக வருத்திக் கொள்கிறாளே என்று உள்ளம் கசிந்தான் சந்திரன்.
            தினமும் தாட்சாயணியிடம் விபூதி குங்குமம் கொடுப்பாள். சுந்தரியின் மனம் கோணவேண்டாம் என்று தாட்சாயணியும் விரலில் பட்டும்படாமல் தொட்டு இட்டுக் கொள்வாள்.
                'உன்ன இப்படி நிர்க்கதியா விட்ட அந்த ஆண்டவன் கிட்ட அப்படி என்னதான் வேண்டிக்கற?'  என்று பரிகசித்தாள் தாட்சாயணி.
                'அப்படிச் சொல்லாதீங்கம்மா! கடவுள் என்னை ஒன்னும் நிர்க்கதியா விடல. தெய்வம்போல உங்க ரெண்டுபேரையும் என் கண்ணுக்குக் காட்டலையா? கடவுள் எப்பவும் நேர்ல வந்து உதவிசெய்யாது. யார் மூலமாவதுதான் உதவி செய்யும். உங்க பேரே  அம்பிகையோட பேராச்சே!'  - புகழ் போதையைத் தாட்சாயணியின் தலையில் ஏற்றினாள்.
                'நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கனுமன்னுதான் நான் தெனமும் வேண்டிக்கறேன். அதவிட வேறென்ன வேண்டுதல் எனக்கு இருக்க முடியும்?'
                'கடவுள் இருக்கோ? இல்லையோ? ஆனா உன் வேண்டுதல் பலிக்கட்டும்னு நான் மனசார சொல்றேன்!' - சுந்தரியின் உள்மன வேண்டுதலை அறியாமல் தாட்சாயணி பரிந்துபேசினாள்.
            இரண்டு மாதங்கள் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் உருண்டன.
            சுந்தரியின் உடலில் சில மாறுதல்கள் தோன்றுவதை தாட்சாயணி கவனித்தாள். இப்பொழுதெல்லாம் அவள் அதிகாலையில் எழுவதில்லை. காரணம் கேட்டால், 'ராத்திரி எல்லாம் தூக்கமே வரலைம்மா, அதனால காலைல தூங்கிட்டேன். மன்னிச்சுடும்மா, இதோ ஒரு நொடில வேலயெல்லாம் முடிச்சுடுவேன்' என்பாள்.
                'எனக்கு ரொம்ப நாளா லோ பி பி இருக்கும்மா, அதனால தலை சுத்துது' என்று காரணம் காட்டினாள்.
            மாலை தாட்சாயணி வீடு திரும்பும்போதும் சுந்தரி நல்ல தூக்கத்தில் இருப்பதைக் கண்ணுற்றாள்.
            இப்போதெல்லாம் சுந்தரி செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பு இல்லை. எப்பொழுதும் மந்தமாக இருந்தாள். தாட்சாயணி ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால் சுந்தரியின் தோற்றத்தை வைத்தே உண்மையை யூகித்திருப்பாள். ஆனால் அவளுக்கு இதெல்லாம் புதியது.
(தொடரும்)

No comments:

Post a Comment