முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 14
மறுநாள் அவன் பள்ளிக்கு வரும்போது
ஐந்து முழ குண்டு மல்லிகைப்
பூவை வாங்கினான்.
அந்தக் கன்னி வெடிகுண்டிற்கு அவன் வாங்கிவந்த குண்டு
மல்லிகை அவன் வாழ்க்கையைக் கலைக்கும்
அணு குண்டாய் மாறிப்போகுமா?
தேர்விற்குப் படிப்பதற்காக மாணவர்களுக்கு ஒருவார விடுமுறை விட்டாகிவிட்டது. வேலை எதுவும் இல்லையாதலால்
ஆசிரியர்கள் பள்ளிக்குப் போய்க் கையெழுத்துப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாம். அனைவரும் சீக்கிரம் கிளம்பிய வரை லாபம் என்று
வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினர்.
பிள்ளைகள் இருந்தாலேயே குடும்பத்தில் பிக்கல் பிடுங்கல்கள் அதிகமாகிவிடுகின்றன.
'அப்பா, நாளைக்குப் பீஸ் கட்ட கடைசி
நாள்!'
'அப்பா, எங்க ஸ்கூல்ல டூர்
போறாங்க, ஐந்நூறு ரூபா வேணும்!'
'அப்பா, எனக்கு பர்த் டே வருது, இன்னும்
புது டிரஸ் எடுக்கலே, எப்ப எடுக்கப் போறோம்?'
'என்னங்க, புள்ளைக்கு ஒடம்பு சரியில்ல, சீக்கிரமாக வந்து டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போங்க!'
'என்னங்க, இவங்க கிளாஸ்ல ஒரு பையன் இவனப்
போட்டு அடிச்சிட்டானாம், டெய்லி இவனக் கிள்றானாம். ஸ்கூலுக்குப் போயி அவன் மிஸ் கிட்ட
கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டு வாங்க!'
இப்படி ஏதாவது பிரச்சனைகள் அன்றாடம் முளைவிட்டுக் கொண்டிருக்கும். இவற்றைச் சரி கட்டுவதற்கு என்ன
செய்யலாம் என்ற யோசனையில் அல்லல்பட்டு
அங்கலாய்த்துக் கிடப்பவர்கள் வெட்டித் தனமாகப் பிறவற்றை எண்ணி மனத்தை அலைபாய விடுவதில்லை.
ஆனால் சந்திரனுக்கென்ன பிள்ளையா?
குட்டியா? அவன் மனம் வாழ்க்கைப்
பிரச்சனைகள் இல்லாமல் நிச்சலனமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனால்தான் சுந்தரி அவன் வாழ்க்கையாகிய ஆற்றில்
அவளுக்கு ஆதாயமாக நிறைய மீன்கள் கிடைக்கும் என்று தூண்டில் போட்டுவிட்டு அமர்ந்திருக்கிறாள். இன்று தன் தூண்டிலில் அவனே
சிக்கிக்கொள்வான் என்று தீர்மானத்துடன் பள்ளிக்கு வந்தாள். தன்னை வெகுவாக அலங்கரித்துக் கொண்டு புதுப்பெண்போல வந்திருந்தாள். தலையில் பூ மட்டும் மிஸ்ஸிங்.
அவளுக்குத் தெரியும், அவன் கட்டாயம் அதனை
வாங்கிவருவான் என்று!
சந்திரன் தான் வாங்கிக்கொண்டு வந்த
மல்லிகைப் பந்தைச் சுந்தரியிடம் கொடுத்தான். அவள் சொல்லுக்கு அது
பச்சைக் கொடியாய் அமைந்தது.
இனிச் சுந்தரிக்காக அவன்
மலர் வளையம் வாங்கவேண்டிய தேவை இருக்காது. ஒருவேளை
அவன் மனைவிக்குத் தேவைப்படலாம்.
குழந்தை பெற்றவர்களைக் கேட்டு, கரு உருவாகும் தருணத்தை
மிகத் துல்லியமாகக் கணக்கிட்டிருந்தாள் சுந்தரி. எல்லாம் கடவுள் செயல்!
ஒரு கணை தொடுத்தான்
சந்திரன். இலக்கு தவறவில்லை!
அன்றிரவு சுந்தரி நிம்மதியாகத் தூங்கினாள். அதற்குப் பின் அவள் கனவில்
கடவுள் தோன்றவேயில்லை.
தினந்தோறும் 'வாக்கிங் போகட்டுமா?' 'குளிக்கப் போகட்டுமா?' 'டிரெஸ் அயர்ன் பன்னட்டுமா?' என்று தன் மனைவியிடம் அர்த்தமில்லாத
விஷயங்களுக்குக்கூட கேள்விகள் கேட்டுச் செய்யும் சந்திரன், இன்று ஒரு முக்கியமான விஷயத்தைச்
செய்யட்டுமா என்று கேட்கவில்லை.
அவளுடைய அனுமதியைப் பெறுவதில் அர்த்த மில்லை, அவசியமுமில்லை என்று நினைத்தான்.
மனைவிக்காகத் தான் தரப்போகும் பரிசு
என்று அவன் கற்பித்துக்கொண்ட கற்பனையை
அடைகாத்தான்.
சந்திரன் மனத்தில் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி
நிழலாடியது. என்னதான் தன் தவறுக்கு ஆயிரம்
சமாதானங்களைச் சொல்லிக் கொண்டாலும் மனச்சாட்சி என்ற ஒன்று அவ்வப்போது
எழுந்து தலைநீட்டத்தானே செய்யும்? அதனை அவ்வப்போது தட்டிவைப்பதே
அவனுக்குப் பெரும் பிரயத்தனமாக இருந்தது.
மாலையில் வீட்டிற்குச் சென்றபோது அவனால் தன் மனைவியை நேருக்குநேர்
பார்க்க முடியவில்லை.
அதற்குப்பின் மாலை நேரங்களில் கூட்டம்,
அது, இது என்று ஏதாவதொரு
காரணம் காட்டிவிட்டு இரவுச் சாப்பாடு அருந்தும் தருணத்தில் வீட்டிற்கு வருவது அவன் வழக்கமானது. வேலைகளை
முடித்துவிட்டுத் தாட்சாயணி படுக்கைக்கு வரும்முன் அவன் தூங்கிப் போவதும்
வழக்கமானது. இருவரும் ஒரே போர்வையைப் போர்த்திக்
கொள்ளும் வழக்கம் விடுபட்டது. தனியாகச் சிறிய போர்வையில் அவன் தன்னை ஒளித்துக்கொண்டான்.
மனைவியின் பக்கம் தன் முகம்காட்டாது எதிர்ப்புறம்
தலைதிருப்பிப் படுப்பதும் வழக்கமானது.
(தொடரும்)
No comments:
Post a Comment