முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 17
ஒரு திங்கட்கிழமை நாளில்
சுந்தரியின் முகம் வீங்கியிருந்தது. யாரோ அடித்திருக்க வேண்டும்.
நெற்றியில் சிறியதாகப் பிளாஸ்திரி போட்டிருந்தாள்.
சந்திரன் அன்போடு விசாரித்தான்.
'ஆபீஸ் நாள்ல இங்க எப்படியோ ஓட்டிட்டு,
வீட்டுக்குப் போனதும் ஆபீஸ்ல அநியாயமா வேலைன்னு சொல்லிட்டு தலைவலிக்கிறமாதிரி பாவலா பண்ணிட்டுப் படுத்துக்கலாம். சனி, ஞாயிறுன்னா பாழாப்
போன லீவு வந்துடுதே. வீட்ட
வுட்டுட்டு எங்கயும் போவ முடியாது. இந்த
வாந்தி வேற அடிக்கடி வந்து
காட்டிக்கொடுத்துடுச்சி.
என் அண்ணி அடுத்தவீட்டுப் பாட்டியக் கூப்டாந்து என் நாடிய பாக்கச்சொன்னா. நான்
உண்டாயிருப்பது தெரிஞ்சிபோச்சி. என் அண்ணன் அண்ணி
பேச்சக் கேட்டுட்டு அடிஅடின்னு அடிச்சிட்டான். ஆனா நான் ஒங்களப்
பத்தி மூச்சு விடலயே! ஆனா இனிமே என்னால
அந்த வூட்டுக்குப் போவமுடியாது சாமி! என்ன
உயிரோட கொளுத்திடுவாங்க. இல்லைன்னா நைசா வெஷம் கொடுத்துக்
கொன்னுடுவாங்க. நான் எனக்காக யோசிக்கல.
கடவுள் கொடுத்த பிரசாதத்தை நான் சொமந்து கிட்டிருக்கேன்.
அதுக்குத்தான் பயப்படறேன். நான் எங்கயாச்சும் கண்காணாத
எடத்துக்குப்போயி நாலு வீட்ல பத்துப்பாத்திரம்
தேச்சாவது உங்க புள்ளைய - அந்தக்
கடவுளப் பெத்துடுவேன். என் கடமைய பன்னிட்டேன்னா
நான் கடவுளேன்னு கண்ணை முடிடுவேன். கடைசி கடைசியா உங்களப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்' - அழுதுகொண்டே சொன்னாள். மூக்கில் நீர் கோர்த்துக் கொண்டது.
அவள் கண்ணீரைத் தாங்கும்
சக்தி சந்திரனுக்கு இல்லை.
வீட்டு வேலைக்காரி செல்லாயி ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை என்று தன் மனைவி அன்றாடம்
புகார் கூறியவண்ணம் இருந்தாள். கடந்த மூன்று நாட்களாக எந்தவித அறிவிப்பும் இன்றி அவள் விடுப்பும் எடுத்துவிட்டாள்.
பணிக்குப் போகும் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய ஆளில்லாமல் எப்படிச் சமாளிக்க முடியும்?
சந்திரனுக்கு யோசனை உதித்தது. ஒரே கல்லில் இரண்டு
மாங்காய்! தன் வீட்டைவிட பத்திரமான
இடம் சுந்தரிக்கு வாய்க்காது. தன் கண்காணிப்பிலும் இருக்கலாம்.
'சுந்தரி. . . , நீ
ஏன் அடுத்தவங்க வீட்ல பத்துப்பாத்திரம் தேய்க்கனும்? என் வீட்ல மகாராணியா
வெச்சுத் தாங்கறேன். ஆனா அதுக்கெல்லாம் நாளாகும்.
இப்ப எங்க வீட்ல வேலைக்காரியா
கொஞ்சநாள் நடி, அப்பறம் எல்லாத்தையும்
சரி பண்ணிறலாம்!' ஒரு நடிகைக்கே நடிப்புச்
சொல்லிக்கொடுத்தான்.
'நீங்க இப்படிச் சொல்றதே எனக்குச் சந்தோஷமா இருக்குங்க. நான் உங்க வீட்டுக்கு
மகாராணியா ஆக என்னைக்கும் ஆசைப்பட
மாட்டேங்க. உங்க வீட்ல வேலைக்காரியா
எல்லா வேலையும் செஞ்சுகிட்டு, வீட்டைப் பத்திரமா பாத்துகிட்டு ஒரு மூலைல இருந்துக்கறேன்.
என் கடவுளான உங்களயும் நான் தூரத்துல நின்னு
பாத்து ரசிப்பேன். உங்களுக்குப் பணிவிடை பண்ற பாக்கியமும் எனக்குக்
கெடைக்கும். அதத் தவிர எனக்கு
வேறு என்னங்க வேணும்? அதுவும் உங்கக் கொழந்த பத்திரமா பொறக்கனுமேன்னுதான். இல்லைன்னா இந்த உசுர வச்சிக்கிட்டு
நான் என்ன பண்ணப்போறேன்?'
சுந்தரியின் ஒவ்வொரு சொல்லும் அவன் மனத்தைப்
பிசைந்தன.
அவளிடம் தன் வீட்டிற்கு வரவேண்டிய
வழியை உரைத்தான். தானே அழைத்துச்சென்றால் சிக்கலாகி விடும்.
தன் மனைவி அவளைப்
பள்ளியில் பார்த்ததை நினைவில் வைத்திருந்தால்?
தன் மனைவி ஒருவரைப்
பலமுறை பார்த்தாலும் மறந்துவிடும் பேர்வழி. யாரையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டாள். அப்படிப்பட்டவள் ஒரே ஒருமுறை அதுவும்
விழாக் கூட்டத்தில் பார்த்ததையா நினைவில் வைத்திருக்கப் போகிறாள்? - தன்னைச் சமாதானம் செய்துகொண்டான் சந்திரன்.
அவர்கள் திட்டமிட்டபடியே நடந்தது. சந்திரன் வீட்டிற்குப் போனதும் புதிய வேலைக்காரி வரவிருப்பதை அறிவித்தான்.
'தாட்சு . . . ! வர
பொண்ணைப் பாரு. உனக்குப் பிடிச்சா வேலைக்கு வெச்சுக்கோ, இல்லைன்னா தயவு தாட்சண்யம் பாக்காதே,
போய்ட்டு வாம்மான்னு அனுப்பிடு.
வேற ஆளப் பாத்துக்கலாம். நமக்கு
அவளவிட்டா வேற ஆளா கிடைக்காது?'
அழகாகவே சூழலை வடிவமைத்தான் சந்திரன்.
(தொடரும்)
No comments:
Post a Comment