Monday 19 August 2019

ஆசைமுகம் மறந்துபோச்சே - சரளா இராசகோபாலன் அணிந்துரை


கலைமாமணி முனைவர் சரளா இராசகோபாலன்
பன்னூலாசிரியர்
6 ரங்காச்சாரி தெரு
ஆழ்வார்பேட்டை, சென்னை
அணிந்துரை
   இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தியின் ஆசைமுகம் மறந்து போச்சே என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளும் நவரத்தினங்களாக ஒளி விடுகின்றன. சமுதாயச் சிக்கல்களைத் தேடி அவற்றிற்குத் தீர்வு காணும் நிலையில் ஆசிரியர் இக்கதைகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் தொகுப்பில் உள்ள முதல் கதையின் தலைப்பே நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது. உடனே பாரதியின் நினைப்பும் வருகிறது. தமிழ்ப் பேராசிரியராகிய இவருடைய தலைப்புகள் எல்லாவற்றிலும் தமிழ்மணம் கமழ்கிறது. எடுத்துக்காட்டாக இருண்டவீடு, சிறியன சிந்தித்தவன், கானல்வரி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சத்திய சோதனை காந்தீயத்தை நினைவூட்டுகிறது. பாவை மன்னிப்பு, ஒருவன் ஒருவன் முதலாளி, பணம் என்னடா பணம் பணம் ஆகிய தலைப்புகள் திரைப்படத் துறை அடிப்படையில் அமைந்தவை. இப்படித் தலைப்பிலேயே ஒரு புதுமையைச் செய்துவிடுகிறார் பேராசிரியர் நிர்மலா அவர்கள்.
ஆசைமுகம் மறந்து போச்சே என்னும் முதல் சிறுகதையே படிப்போரைச் சிந்திக்க வைக்கிறது. நன்றல்லது அன்றே மற என்பது உண்மை மொழி. தன்னை வெறுத்து வேறொரு பெண்ணை மணந்து வாழ்பவனை நினைத்து ஒரு பெண் மனத்தளவிலும் உடல் அளவிலும் பாதிப்பு அடையக்கூடாது. தன்னை மறந்தவனைத் தானும் மறந்து, தன் வாழ்க்கைப் பாதையில் நடக்க வேண்டும் என்ற தீர்வை வைத்துள்ளார் ஆசிரியர்.
கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் அறுந்துபோன பிறகு, திருமண வாழ்க்கையில் மீண்டும் தொடரவிடக் கூடாது. அது தன் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கும். கிட்டாதாயின் வெட்டென மற என்பதைப் போற்ற வேண்டும் என்ற உண்மையை உணர்த்துகிறது மறதி என்னும் கதை. 
குடும்பத் தலைவி பொறுப்பற்று சிக்கனமில்லாமல் ஆடம்பரமாக வாழ்ந்தால் வீடு இருண்டுவிடும் என்ற கருத்தை உணர்த்துகிறது இருண்ட வீடு என்ற சிறுகதை. பாவேந்தரின் இருண்ட வீட்டை நினைவுபடுத்துகிறது இக்கதை.
பொதுவாகக் கதாசிரியர்கள் மாமியார் - மருமகள் போராட்டத்தை விவரிப்பதில் இன்பம் காண்பார்கள். சிறியன சிந்தித்தவன் என்னும் கதை மாமனார் - மருமகன் போராட்டத்தை விளக்கியுள்ளமை புதுமைத்து. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமையும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமையும் மக்களிடையே இருக்கும்வரை குடும்பம் ஒற்றுமையால் ஓங்காது; அழிவுப் பாதையில் வீழும் என்ற நல்ல கருத்தை இக் கதையில் உணர்த்தியுள்ளார் ஆசிரியர். தனிக் குடும்பம், கூட்டுக் குடும்பம் ஆகியவற்றுக்கிடையே உள்ள நன்மை தீமைகளைப் படிப்போர் கண்முன் நிறுத்துகிறார்.
    திருமணம் என்பது அடிமை வாழ்விற்கு வழிவகுப்பது என்று பெண்ணுரிமை பேசிய பெண்கள் இறுதியில் தாங்களும் சீரழிந்து மற்றவரையும் சீரழிப்பதைப் படக்காட்சியாகப் பாவை மன்னிப்பு சிறுகதையில் விளக்குகிறார். இன்று சமுதாயத்தில் அதிகமாகக் காணப்படும் இச் சிக்கலை ஆசிரியர் மிக அழகாக அழுத்தமாக விளக்குகிறார்.
     ஒருவன் ஒருவன் முதலாளி அற்புதமான கதை. தலைமைப் பதவியில் இருப்பவர்கள் தமக்குக் கீழே பணிபுரிபவர்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறார்கள் என்பதை நுண்மையாக விளக்குகிறார் ஆசிரியர். மற்றவரின் உழைப்பை எவ்வாறு சுரண்டுகிறார்கள், அவர்களை உயரவிடாமல் எவ்வாறு தடுக்கிறார்கள் என்பதை ஆசிரியர் தம் அனுபவத்தின் மூலம் பிழிந்து கொடுக்கிறார்.
    ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பது சிலப்பதிகார காலத்தில் மட்டுமா இருந்தது; இன்றும் இருப்பதுதான் என்பதைக் கானல்வரி சிறுகதையில் விளக்குகிறார். பழைமைக்கும் புதுமைக்கும் நேரிட்ட மோதலில் சின்னாபின்னமாகும் வாழ்க்கையை யதார்த்தமாகக் காட்டுகிறார்.
  காந்தீயத்தை விரும்பினாலும் அதனைப் பின்பற்ற முடியாமல் நம் வாழ்க்கைச் சூழல் அமைந்திருப்பதைச் சத்திய சோதனை விளக்குகிறது.
      இந்த எழுத்தாளரின் எழுத்துகளில் தேர்ந்த படைப்பாளியின் முயற்சியைக் காணமுடிகிறது. ஒவ்வொரு காட்சியும் கண்முன் நிகழ்வதுபோல் இருக்கிறது. ஆசிரியர் சமுதாயத்தை நுணுகிப் பார்ப்பதை இச் சிறுகதைகள் உணர்த்துகின்றன; வாழ்க்கைத் தேடலை எடுத்தியம்புகின்றன; ஆசிரியரின் பட்டறிவைப் பாங்குடன் புலப்படுத்து கின்றன. படிப்போர் உணர்ந்து தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள இக் கதைகள் பயன்படும் என்பது உறுதி.
   இச் சிறுகதைத் தொகுப்பான நவரத்தின மாலையின் ஆசிரியர் நிர்மலா கிருட்டினமூர்த்தி பன்முகச் சிறப்பினர்; சிறந்த இல்லத்தலைவி; கல்லூரிப் பேராசிரியர்; பன்மொழிப் புலமையாளர்; ஆய்வாளர்; ஆய்வு நெறியாளர்; நாடக ஆசிரியர்; புதின ஆசிரியர் எனப் பல சிறப்புகளுக்குரியவர். இவர் என் இனிய மாணவி என்ற பெருமிதம் எனக்கேற்படுகிறது.
    சமுதாயச் சிந்தனையுள்ள இந்த நூலைத் தமிழ்கூறு நல்லுலகம் மகிழ்ந்து வரவேற்கும்; சிறந்த சிந்தனைகளை ஏற்று மகிழும்.
   இவருடைய வாழ்க்கைத் துணைவர் பேராசிரியர் முனைவர் கிருட்டினமூர்த்தியும் சிறந்த கவிஞர்; திறனாய்வாளர்; படைப்பாளர் என்ற சிறப்புகளுக்குரியவர். இந்த இலக்கிய அன்றில்கள் மேன்மேலும் உயர என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். பல நூல்களை எழுதிப் புகழ்பெற வாழ்த்துகிறேன்.
சென்னை,
12.12.2009.                                 முனைவர்  சரளா இராசகோபாலன்

No comments:

Post a Comment