Wednesday 7 February 2024

Tamil oli - Kannappan Kiligal

 

கண்ணப்பன் கிளிகளில் வெளிப்படும் தமிழ்ஒளி

கலைமாமணி முனைவர் ஔவை நிர்மலா

புதுச்சேரி 8



                    புதுவைக்குப் புகழ்சேர்க்கும் கவிஞர்கள் வரிசையில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு பாரதிதாசன் பரம்பரையில் வந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. எழுச்சி மிக்க சொல்வீச்சோடு நெஞ்சைத் தொடுகின்ற கூர்ப்புடன் சாதாரண மொழியாளுமை உடையவர்க்கும் விளங்குகின்ற எளிமையான நடையோடு அதே நேரத்தில் கவிஆளுமையோடு தமிழ்ஒளியின் படைப்புகள் விளங்கக் காணலாம்.

                    கண்ணப்பன் கிளிகள் என்னும் காவியத்தைத் தாம் உருவாக்கிய விதத்தைக் கதை பிறந்த கதைஎன்னும் தமது முன்னுரையில் தமிழ்ஒளியே எடுத்துரைக்கிறார்.

பாரதியாரின் குயிலுக்குப் பூர்வ ஜன்ம ஞானம் இருந்தது. என் கிளிகளுக்கு மனிதருடன் பரிச்சயமும் தமிழ்மொழியில் நல்ல ஞானமும் இருக்கின்றன. (தமிழ்ஒளி காவியங்கள், தொகுதி 2:85)

என்று தம் காவியக் கதைமாந்தராகிய கிளிகளை அறிமுகம் செய்கிறார் தமிழ்ஒளி.

                    கண்ணப்பன் கிளிகளில் முதன்மை மாந்தராய் கிளிகள் இரண்டுடன் அக் கிளிகளை வளர்க்கும் கண்ணப்பன் என மூவர் இடம்பெறுகின்றனர். காப்பியத்தின் இடையில் மேகங்களும் பேசுகின்றன.

கதைமாந்தராய் அஃறிணைப் பொருட்கள்

                    இப்படி அஃறிணைப் பொருட்கள் பேசுமா? இது என்ன இலக்கிய மரபு என்பதையும் நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இலக்கியப் பாத்திரங்களாக அஃறிணைப் பொருட்களை ஆக்க முடியும் என்பதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கிறார்:

ஞாயிறு திங்கள் அறிவே நாணே

கடலே கானல் விலங்கே மரனே

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே

அவையல பிறவும் நுதலிய நெறியால்

சொல்லுந போலவும் கேட்குந போலவும்

சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர் (தொல். 1456)

ஞாயிறு, திங்கள் முதலானவை மட்டுமல்லாது அவையல பிறவும் என்று குறிப்பிட்டதால் இம் மண்ணுலகிலுள்ள இல்லாத எப்பொருளையும் இலக்கிய மாந்தராகப் பேசவைக்கலாம் என்பது பெறப்படுகிறது. நன்னூலாரும் தொல்காப்பியர் வழியில்,

கேட்குந போலவும் கிளக்குந போலவும்

இயங்குந போலவும் இயற்றுந போலவும்

அஃறிணை மருங்கினும் அறையப் படுமே (நன்னூல்)

என்று தெளிவுபடுத்திச் செல்கிறார். இலக்கணம் உண்டு... அதற்கு இலக்கியச் சான்று காட்ட முடியுமா?

கானலும் கழறாது கழியும் கூறாது

தேன்இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது

ஒருநின் அல்லது பிறிதுயாதும் இலனே

....                                   நீயே

சொல்லல் வேண்டுமால் அலவ (அகம். 170)

என்று தலைவி கூறுகிறாள். கானலும் கழியும் புன்னையும் கூறாது என்று சொல்லும் தலைவி நண்டைப் பார்த்து, நீயே கூறுவதற்குத் தகுதியுடையாய் என்கிறாள்.

நீயலையே சிறுபூவாய் நெடுமாலார்க்கு என்தூதாய்

நோயெனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய்

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான் இனியுனது

வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே

என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் நாகணவாய்ப் புள்ளிடம் கூறுகிறார். இப்படி இலக்கியத்தில் பல இடங்களில் இதற்கான சான்றுகள் பரக்கக் கிடக்கின்றன...

                    கவிஞர் தமிழ்ஒளி குழந்தைகளுக்கு நீதியைப் புகட்டும் வகையிலும் உலகியல் உண்மைகளைப் புரியவைக்கும் வகையிலும் மிக எளிய நடையில் சிறுசிறு கதைகளை சரஸ்வதி, தாமரை, அமுதசுரபி முதலான இதழ்களில் எழுதியிருக்கிறார். இத்தகைய 105 குட்டிக் கதைகள் வனமலர்கள் என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளில் தாமரை முதலான மலர்கள், மரங்கள், மரங்கொத்தி, காகம், குருவி, மைனா, குயில், கிளி முதலான பறவைகள், எறும்பு, குளவி, சிலந்தி முதலான பூச்சிகள், கலைமான், நரி, வெள்ளாடு, யானை, கழுதை, புலி முதலான விலங்குகள், அலை, அருவி, கூழாங்கல், ஓடை, இருள், ஒளி முதலான இயற்கைப் பொருட்கள் என அனைத்தையும் பேசும் கதைமாந்தர்களாக்கி விழுமிய தத்துவங்களைச் சிறுவர்களுக்கு எளிமையாக உணர்த்த முயல்கிறார் தமிழ்ஒளி. குழந்தைகளுக்கு இத்தகைய சிறுகதைகள் அவசியம் என்பதைச் சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளிலேயே உணர்ந்து அதில் தமிழ்ஒளி கவனம் செலுத்தியமை வியப்பிற்குரியதும் குறிப்பிடத்தக்கதுமாகும்.

 கிளிகள் பாத்திரப் படைப்பு

                    பாரதியாரின் குயில்பாட்டு தமிழ் ஒளியின் கண்ணப்பன் கிளிகளுக்குப் பாட்டை அமைத்துக் கொடுத்தது என்பதை அந்நூலின் முன்னுரையால் உணர முடிகிறது. மேலும் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் ஓராண்டு கற்ற தமிழ்ப் படிப்பும் தமிழ் ஒளிக்கு இலக்கிய மரபு பற்றிய புரிதலை அளித்திருக்க வேண்டும் என்று கூறலாம்.

                    மாதவி காவியத்தைத் தொடங்கி எழுதிக்கொண்டிருந்தார் தமிழ் ஒளி. அப்போது காப்பியத்தில் தன்னைத் தெருட்ட நினைத்த புலவர்களிடம் கோவலன் கூறிய மறுமொழியாகக் கீழ்வரும் வெண்பாவை அமைக்கிறார்.

குற்றம் குணமிரண்டும் கூட்டிற் கிளிகளென்று

சுற்றம் படநின்ற தொல்லுலகில் - பெற்றம்

பெரிதுண்டு மன்னிக்கும் பேர்க்கென் றறிந்தால்

அரிதுண்டோ ஆற்றும் அறம்?

இவ்வெண்பாவை எழுதிய மாத்திரத்தில் தமிழ் ஒளியின் எண்ணங்கள் சிறகு விரித்து வேறொரு திசையில் பறக்க ஆரம்பிக்கின்றன. ஆம்... குற்றம், குணம் ஆகிய இரண்டு கிளிகளை வைத்து இன்னொரு காவியம் எழுதலாமே... இவ் வெண்பாவே கண்ணப்பன் கிளிகள் என்னும் காவியம் வரையத் தூண்டுகோலாய் அமைந்தமையைத் தமிழ்ஒளியே எடுத்துரைக்கிறார். படைப்பாளிகள் தங்கள் அனுபவங்களை - ஏமாற்றங்களை - வெற்றிகளை ஏதேனும் ஒரு சூழலில் தம் படைப்பில் கொண்டுவந்தே தீர்வர். இதனை அனுபவவழி உத்தி என்பர். அவ்வகையில் காப்பியத்தின் அடிக்கருத்தாய் அவருடைய வாழ்வில் நிகழ்ந்த காதல் தோல்வி உயிர்கொடுக்கிறது.

பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுமொரு நெட்டைக் கனவு. (தமிழ்ஒளி காவியங்கள், தொகுதி 2:9)

என்று ம.ரா.போ. குருசாமி அவர்கள் இக்காவியத்தை விமர்சனம் செய்கிறார்.

                    இக் காவியம் இரு குணத்து இரு கிளிகள், கிளிகளின் பிரிவு, கிளிகளின் கனவு, குணக்கிளி இறந்தது, பெண் கிளியின் புலம்பல், விண்நோக்கிப் பறக்கும் தத்தை, கண்ணப்பன் சிந்தனை என்ற ஏழு இயல்களில் அமைந்துள்ளது. குணம் என்பது ஆண்கிளியாகவும் குற்றம் என்பது பெண் கிளியாகவும் உருவகப்படுத்தப் பெற்றுள்ளன.

கொவ்வைப் பழமென்ற மூக்கும் - கற்றுக்

                    கொடுக்கின்ற செஞ்சொற் பயில்கின்ற நாக்கும்

செவ்வைப் படுங்குன்றிக் கண்ணும் - கண்ணன்

                    சிந்தையி லின்பம் சிறந்திடப் பண்ணும் (18)

என்று ஆண்கிளியின் அழகினையும்,

குற்ற மென்கின்ற பெயர்கொண்ட தத்தைக்குக்

கோபம் அதிகம் வரும் - கண்ணனைக்

கொத்திட ஓடிவரும்! (18)

என்று குற்றமாகிய பெண்கிளியின் பண்பையும் வருணிக்கிறார் தமிழ்ஒளி.

                    குற்றமாகிய பெண் கிளி கண்ணப்பனின் கைகளைக் கொத்துகிறது. கோபம்கொண்ட கண்ணப்பன் அதனை ஆண் கிளியிடமிருந்து பிரித்து விடுகிறான்.

கருகின இருகிளிகள் - உளங்

                    கருகின உருகின உருகினவே

அருகினில் இருள்வரவே - அவை

                    அழுதன அழுதன அழுதனவே!

 

மலைகள் வளர்ந்தனவோ - அவை

மறைத்தன மறைத்தன மறைத்தனவோ?

 

தொழுதன இருகிளிகள் - அவை

                    துடித்தன துடித்தன துடித்தனவே

பொழுது விடிந்திடலும் - அவை

                    புலம்பின புலம்பின புலம்பினவே (20)

என்று கிளிகளின் பிரிவுத்துயரை பலபடப் பேசுகிறார் தமிழ்ஒளி. அப்புலம்பலில் காதலரின் பிரிவுத்துயரை வடித்துக் காட்டுகிறார்.

                    பெண் கிளியிடமிருந்து தன்னைப் பிரித்துவிட்டுத் தனக்குப் பாலும் பழமும் கொடுக்கும் கண்ணப்பனைப் பார்த்து ஆண்கிளி,

பால்எனக் கெதற்குக் கண்ணப்பா! - பெண்

                    பாலெங்கே சொல்லுநீ கண்ணப்பா!

கூடெனக் கெதற்குக் கண்ணப்பா? - கண்

                    கூடெங்கே சொல்லுநீ கண்ணப்பா! (93)

என்று துன்பமிகுதியால் கேட்கிறது.

                    கடலை அலை மறக்குமோ? - இளங்

                                        கதிரைச் சுடர் மறக்குமோ?

                    உடலை உயிர் மறக்குமோ? - பின்

                                        உலகில் உயிர் இருக்குமோ? (22)

என்று காதலின் பரிமாணத்தை ஆண்கிளி வாயிலாக மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறார் தமிழ் ஒளி.

                    ஆண்கிளியைப் பிரிந்த பெண்கிளியும் உறக்கம் கொள்ளாமல் தவிக்கிறது.

கனியை அருந்த வில்லை - இரு

                    கண்கள் பொருந்த வில்லை

பனியில் உறங்க வில்லை - அப்

                    பகலும் உறங்க வில்லை! (94)

என்று பெண்கிளியின் தவிப்பை நயம்பட உணர்த்துகிறார் தமிழ்ஒளி.

                    பெண்கிளியைப் பிரிந்த ஆண்கிளியை மாந்தரைப்போல் கனவு காண வைக்கிறார் தமிழ்ஒளி. தானும் பெண்கிளியோடு பறந்து திரிகையில் பெண்கிளி கடலில் வீழ்ந்து இறந்துவிடுவதைக் காண்கிறது ஆண்கிளி. கனவும் நனவுமாகிய அந்தப் பிரிதலின் சோகத்தில் அதனை உண்மையென நம்பும் ஆண்கிளி துடிதுடித்து இறந்துவிடுகிறது. காலையில் இறந்துகிடக்கும் ஆண்கிளியைக் கண்டு கண்ணப்பன் தன் தவறை உணர்கின்றான். அதன் உடலை ஒரு புதரின் ஓரம் இடுகின்றான். இனிப் பெண்கிளியேனும் உயிரோடு வாழட்டும் என்னும் எதிர்பார்ப்பில் கூட்டைத் திறந்து விடுகிறான்.

                    கண்ணப்பனைப் பார்த்துக் கொதித்துச் சினமொழி கூறுகிறது பெண்கிளி. ஆண்கிளி புதர் அருகில் இறந்து கிடப்பதைக் காண்கிறது. அதனைக் கண்ணப்பன் செய்த மாயையோ என்று எண்ணித் திகைக்கிறது.

                    அப்போது வானத்தில் பிறையின் தோற்றத்தைக் கண்டு அதுதான் தன் துணைக்கிளி என நினைத்து விண்நோக்கிப் பறக்கிறது பெண்கிளி. உயரஉயரப் பறந்து, பின் தளர்ந்து தன் துணைக்கிளி வீழ்ந்துகிடந்த புதரின் அருகிலேயே தானும் வீழ்ந்து இறக்கிறது.

                    குற்றமும் குணமும் இணைந்தே இருக்கும் என்பதையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரித்துவிடுதல் உலகியலுக்கு அப்பாற்பட்டது என்பதையும் தமிழ்ஒளி இதன்மூலம் உணர்த்துகிறார்.

                    மணமிருக்கும் மலரிருக்க

                                        மற்றதனில் முள்ளிருக்கக்

                    குணமிருக்க அக்குணத்திற்

                                        குற்றமெனும் அன்பிருக்க (61)

என்று பிறிதோரிடத்திலும் மலரைக் காக்கும் முள்ளாய்க் குற்றம் குணத்தைக் காப்பதாய்க் குறிப்பிடுகிறார்.

                    பெண் கிளியைக் குற்றமாக உருவகப்படுத்தினாலும் கண்ணப்பனைக் கொத்திய ஒரு குற்றத்தைத் தவிர வேறெந்தக் குற்றத்தையும் தமிழ் ஒளி அதன்மேல் சுமத்தவில்லை என்பதும் சிந்தித்தற்குரியது.

                    பெண்கிளிமேல் குற்றம் சுமத்துதல் பெண்கிளிக்கு உருக்கொடுத்த தன் காதலிக்குச் செய்யும் தீங்காகத் தமிழ் ஒளி நினைத்திருக்கலாம். எங்குமே பெண்கிளியைக் குற்றப்படுத்தாமல் படைத்திருக்கிறார் தமிழ் ஒளி. அது மட்டுமல்ல... ஆண்கிளி மீது பேரன்பு கொண்டதாகவே அக்கிளியைப் படைத்ததுடன் ஆண் கிளி இறந்தது கண்டு தன் உயிரையும் துறக்கின்ற அரிய பண்புடன் நிறைவுசெய்கிறார். "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்" என்று பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் உயிர்விட்ட கோப்பெருந்தேவியின் கற்புக்கடம்பூண்ட பண்பு இப் பெண்கிளியில் பளிச்சிடுகிறது.

அடிக்கருத்து

                    இக் காப்பியத்தின் அடிக்கருத்தாக அமைவது காதல் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

                    நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்

நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்

ஊடகத்தே வீட்டிலுள்ள கிணற்றோ ரத்தே

ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்

பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்

பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க

மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து

முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே

என்று பாரதியார் கூறுவதைப் போலவே தமிழ்ஒளி காதலினால் பெருந்துயர் உற்றவர். காதலியின் வீட்டார் செய்த இடையூறுகளால் காதலைத் தொலைத்தவர். அதனால் திருமண வாழ்க்கையைத் தவிர்த்தவர். அந்த வேதனை கண்ணப்பன் கிளிகளில் உணர்ச்சிமயமாக வெளிப்படுவதைக் காணலாம்.

காதலுக்கு எதிர்ப்பு

                    ஆண்கிளி பெண்கிளியைக் காட்டுமாறு கேட்க "கொன்றுகிளி போடுவன்" (23) எனக் கூறிக் கண்ணப்பன் கோபத்துடன் செல்கிறான்.

                    காதலுக்குச் சமூகம் காட்டும் எதிர்ப்பைச் சாடுவதாக,

                    கண்ட கனவுகள் கற்பனையாய் - அவை

                    காணுமுன் நின்ற இடம்சென்றிடப்

பண்டு தொடர்ந்த பழவினையே - நமைப்

                    பற்றிச் சிறகிற் படுத்ததம்மா!

காற்றிற் சிறகு விரித்திடவும் - இருட்

                    கடலில் விழுந்து தவித்திடவும்

கூற்றிற்கு நல்ல விருந்திடவும் - ஒரு

                    கூத்துக்கு நாம்பொருள் ஆகிவிட்டோம்!

கூத்து நிகழ்ந்தது தத்தையம்மா - அலங்

                    கோலம் நிகழ்ந்தது தத்தையம்மா

மூத்துக் கிடக்கும் பழவினைகள் - வந்து

                    மூக்கை ஆட்டிக்கொண்டு பார்த்தனவே! (31)

எனக் காதலைச் சிதைத்து காதலரை அழிக்கும் சமூக மனப்பாங்கைச் சாடுகிறார் தமிழ்ஒளி.

கண்ணப்பன் உள்ளம்

                    கறையுள்ளம் காழ்ப்புள்ளம்

எண்ணப்பர் எத்தனைபேர்

                    ஏதுள்ளம் சூதுள்ளம்!

குகையுள்ளம் மற்றும்

                    குறையுள்ளம் பொல்லாப்

பகையுள்ளம் வஞ்சர்

                    பழியுள்ளம் அம்மனைகள்! (35)

என்று காதலை ஒடுக்குகின்றவரின் உளப்பாங்கை வெளிப்படுத்துகிறார்.

பிறர்இறந்தால் எமக்கென்ன

                    பெயர் எடுப்போம் என்றெண்ணும்

நரர்உலகப் போக்குக்கு

                    நாயகன்நீ கண்ணப்பா (55)

என்று தம்மைப் பிரித்துத் தன் துணையைச் சாகடித்த கண்ணப்பனுக்கு எதிர்க்குரல் விடுக்கிறது பெண்கிளி.

கடவுள் எமைப்படைக்கக்

                    கயவன் எமைப்பிரிக்க

நடந்த கொடுமைக்கு

                    நடுங்காதோ என்னெஞ்சம்?

இயற்கை எமைப்பிணைக்க

                    இடையில் இவன்பிரிக்க

செயற்கை உறவுக்குத்

                    தியங்காதோ என்னெஞ்சம்?

வையம் எமைப்பிணைக்க

                    வலுவில் இவன்பிரிக்கப்

பொய்யர் உறவுக்குப்

                    புழுங்காதோ என்னெஞ்சம்? (56)

என்றெல்லாம் பெண்கிளி கூக்குரல் எழுப்புகிறது. இத்தகைய குரலைத் தன் காதலி எழுப்பியிருப்பாள் என்ற புனைவாகவும் தமிழ்ஒளி இப்பகுதிகளைப் படைத்திருக்கலாம்.

தாய்மொழிக் கல்வி

                    சிறந்த படைப்பாளர்கள் எத்தகைய கருவை எடுத்துக்கொண்டாலும் சமுதாயத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றங்களை, சமுதாயச் சழக்குகளை, சாடல்களை எப்படியேனும் வாய்ப்புள்ள இடத்தில் நுழைத்துவிடுவார்கள் எனலாம். அப்படிப் பாவேந்தர் வழியில் தமிழ்ஒளியும் தமிழ் குறித்த சில சிந்தனைகளை வாய்ப்பான இடத்தில் நுழைத்துவிடுகிறார்.

சரஞ்சர மாய்ச்சரம் சலசலெனத்

                    தமிழ்மொழி யிற்கவி கலகலெனச்

                                        சுரஞ்சர மாயுடற் சுடுசுடெனத்

                    துணைமத னார்கணை விடுவிடென (ப. 26)

என்னும் பகுதி ஆண்கிளியின் கனவில் ஆண்கிளியும் பெண்கிளியும் பறந்துதிரியும் காட்சியைக் கூறும் ஆசிரியர் கூற்றாக வெளிப்படுகிறது.

தாய்மொழிக் கல்வியைக் கற்பதிலார் - அவர்

                    தம்மொழி கற்க நமைவருத்தி

வாய்மொழி பெற்று மகிழ்ந்திடுவார் - அவர்

                    வாழ்க்கையில் ஞானம் வருவதில்லை (ப.31)

என்னும் பகுதி பெண்கிளி இறந்துவிட்டது என்று நினைத்து வருந்தும் ஆண்கிளியின் கூற்றாக வெளிப்படுகிறது.

                    "தன்கிளியை ஆண்கிளியைத் / தமிழ்க்கிளியைக் காணாமல்" (40) என்று சொல்லுமிடத்தில் தமிழினைக் குறிப்பிடும் பாங்கைக் காணலாம்.

மழையென்பது கவிதைப்புனல்

                    மலிந்துள்ளது நெஞ்சில்

பிழையென்பது சற்றும்இலை

                    பிழிந்தூற்றிட ஓடும்!

என்று தமது கவித்திறனையும் போகிற போக்கில் சொல்லிச்செல்லும் அழகைக் கண்டு சுவைக்கலாம்.

சமூக அவலம்

ஒற்றைக் குரலுக்குக் காலமில்லை - பலர்

                    ஊளைக் குரலுக்குக் காலம்அம்மா

கற்ற தெலாம்வெறும் காசுக்கம்மா - அன்பு

                    காட்டுவது காலப் போக்குக்கம்மா (30)

தன்னலந் தேடி விருந்திடுவார் - அவர்

                    சாதனை தோற்றிடில் உண்பதற்கு

முன்னரே மாற்று மருந்திடுவார் - இது

                    மூட மனிதரின் செய்கையம்மா (30)

என்று சமூக அவலங்களையும் ஆண்கிளியின் கூற்றாக வெளிப்படுகிறார் தமிழ்ஒளி.

தமிழ் ஒளியின் இலக்கியப் புலமை

                    அஃறினைப் பொருட்களைச் சொல்லுந போலவும் கேட்குந போலவும் படைத்துக் காட்டல் இலக்கிய மரபு என்பதைத் தமிழ்ஒளி அறிந்தவர் என்பது முன்னரே குறிப்பிடப் பெற்றது.

                    அதைப்போல் புதர் அருகே ஆண்கிளியின் உயிர்பிரிந்த உடலைக்கண்டு அது கண்ணப்பன் செய்த மாயையாக இருக்கக்கூடும் என்று பெண்கிளி நினைப்பதாகப் படைத்துக் காட்டுகிறார் தமிழ்ஒளி:

இக்கிளிதான் என்னரசோ?

                    இல்லையெனில் ஏமாற்றிப்

பொய்க்கிளியைப் புதரினில்

                    போட்டானோ, போட்டானோ?

வீழ்ந்தகிளி என்னரசோ

                    வேறுகிளி ஒன்றிங்கே

வாழ்ந்தகுணக் கிளியென்று

                    வைத்தானோ? வைத்தானோ?

பிணக்கிளிதான் என்னரசோ?

                    பேதையெனை ஏமாற்றக்

குணக்கிளிபோல் வேறுகிளி

                    கொன்றானோ, கொன்றானோ? (49)

பெண்கிளி ஐயம் கொள்ளும் இக்காட்சியினை கம்பன் படைத்துக் காட்டும் மாயாசனகப் படலத்தோடு ஒப்புநோக்க முடியும். இராவணன் சீதையை இணங்கவைக்க பல்வேறு மாயக் காட்சிகளைப் படைத்துக் காட்டும் திறத்தை அறிந்த தமிழ்ஒளி அத்தகைய ஒரு செய்தியைக் கண்ணப்பன் கிளிகள் காப்பியத்தில் பயன்படுத்திக்கொண்டுள்ளார் எனலாம். தமிழ்ஒளி சென்னையில் வாழ்ந்தபோது புரசைவாக்கத்தில் கிருபானந்த வாரியார் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுச் சுவைத்தவர் என்பதனை செ.து. சஞ்சீவியும் பதிவுசெய்கிறார்.

மொழி நடை

                    நடை இருபதாம் நூற்றாண்டு நடையானாலும் சொல்லும் பாணியும் சந்தமும் பல இடங்களில் சிலப்பதிகாரப் பாடல்களை நினைக்கச் செய்கின்றன. (தமிழ்ஒளி காவியங்கள், தொகுதி 2:84)

என்று கி.வா. ஜகந்நாதன் இக்காவியத்தின் நடை பற்றிக் கருத்துரைக்கிறார்.

உவமை நயம்

                    பெண்கிளியின் பிரிவைத் தாங்க இயலாமல் குணம் என்னும் ஆண்கிளி இறந்துபட்ட காட்சியை,

கொத்தாக ஒடிந்தஇலை

கூட்டிற்குள் இருந்ததுபோல்

பித்தாக இருந்தகிளி

பிணமாகக் கிடக்கிறது! (109)

என்று வருணிக்கிறார்.

                    இறந்துகிடந்த ஆண்கிளியை சிதறுண்ட ஓடாய் சிறுபுதரினுள் எறிந்தான் (44) என்று கூறும் உவமை குறிப்பிடத்தக்கது.

                    "தறியிடை ஆடிடு தக்கை தன்னிலை யுற்றது தத்தை" (75) என்னும் உவமையும் சிறப்பாய் அமைகிறது.

உருவகம்

இருளிடை கத்தத் தொடங்கித் - துயர்

இரவெனுங் கூண்டுதனைக் கொத்தத் தொடங்கி (21)

என்னும் பகுதியில் இரவையே கூண்டாக உருவகப்படுத்துகிறார் தமிழ்ஒளி.

                    கையோ இவன் கொண்டான், அவை

                                        "கண்கொத்திடும் நாகம்" (58)

என்று கண்ணப்பனின் கைகளை நாகமாகக் காண்கிறது பெண்கிளி.

முகில் வாகனம் வந்தது (31)

முகிற் கைகள் விரிந்தன (31)

இருட் கடல் (31)

உயிர் ஓடம் (29)

மதித் தீபம் (28)

அலை ஊர்தி (28)

விதி வேடன் (29)

என்றெல்லாம் சிறப்பாக உருவகங்களைக் கையாளுகிறார்.

குறியீடு

கரிய இருட் காட்டில் - மரக்

                    கைகள் எனுங் கூட்டில்

பெரிய அரவம் வரும் - அதன்

                    பின்னர் கனவு வரும்!

என்று கிளியின் கனவை வருணிக்கிறார் கவிஞர் தமிழ்ஒளி. இருட் காடு அது. அதுவும் கரிய இருட் காடு. அங்கே மரக்கைகள் கூடுகளாகின்றன. அதில் பெரிய பாம்பு வருகிறது. பாம்பு என்பது இங்குத் துன்பத்தின் குறியீடாகிறது. ஆதாம் ஏவாள் வாழ்வில் பாம்பு உருவெடுத்துச் சாத்தான் வருவதைத் தொன்மமாகக் காணலாம். இன்றும் பல திரைப்படங்கள் மாய மந்திரப் பேய்க் கதைகளில் அச்சுறுத்தல் மற்றும் துன்பத்தின் குறியீடாக அரவத்தைக் காட்டுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

சிலேடை

பால்எனக் கெதற்குக் கண்ணப்பா - பெண்

பாலெங்கே சொல்லுநீ கண்ணப்பா

சுகம்எனக் கெதற்குக் கண்ணப்பா - அஞ்

சுகமெங்கே சொல்லுநீ கண்ணப்பா! (22)

என்னும் பகுதிகளில் சிலேடை நயத்தைப் போகிறபோக்கில் அமைத்துவிடுகிறார் தமிழ்ஒளி.

அடுக்குத் தொடர்

                    உணர்ச்சி வெளிப்பாட்டில் அடுக்குத் தொடர்களை இலகுவாகப் பயன்படுத்துகிறார் தமிழ்ஒளி.

                    இறந்துபட்ட ஆண்கிளியைக் கண்டு புலம்புகிறது பெண்கிளி :

புலம்பிப் புலம்பிமிகப்

                    புழுங்கிப் புழுங்கிஅது

சிலம்பிச் சிலம்பிமனம்

                    சிதறிப் பதறியது!

கதறிக் கதறிநிலை

                    கலங்கிக் கலங்கிஇற

குதறி உதறிமொழி

                    உளறிக் குளறியது (116).

இங்கு அடுக்குத் தொடரின் பயன்பாடு உணர்ச்சிப் பெருக்கைக் காட்டுவதற்குத் தமிழ்ஒளிக்கு மிகச் சிறப்பாகக் கைகொடுக்கிறது.

ஓசை நயம்

                    உணர்ச்சி மாறுபாடுகளைக் காட்டுவதற்காகத் தமிழ்ஒளி சந்தத்தைத் தம் பாடல்களில் அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கிறார். இக் காப்பியத்தில் மொத்தம் 319 பாடல்கள் உள்ளன. பாடல் தொடர்ச்சியில் 93 முறை சந்தங்களை மாற்றியமைக்கிறார் தமிழ்ஒளி என்பது குறிப்பிடத் தக்கது.

பிரிந்தன இருகிளிகள் - அவை

                    பிரிந்தன சொரிந்தன நீர்விழிகள்!

எரிந்தன இருகிளிகள் - அவை

                    இடறின இடறின இடறினவே! (91)

எனக் கிளிகளின் பிரிவுத்துன்பத்தின் மிகுதியைப் பல பாடல்களில் வெளிப்படுத்துகிறார் தமிழ்ஒளி.

கத்துங்கிளி கொத்தும் இரு

                    கண்ணும் புனல் உண்ணும்

பித்தும்அதன் நெஞ்சும், இழை

                    பின்னும் செலும் பின்னும் (58)

என்று வானோக்கிச் செல்லும் பெண்கிளியை வருணிக்கிறார்.

  வருணனை

                    சூரியன் மறைகின்ற மாலைக்காலத்தை மிகச் சிறப்பாக வருணிக்கிறார் தமிழ்ஒளி

வானவில் எழுந்து கூண்டை

                    எட்டிப் பார்க்குதே - தத்தை

வர்ணத்தைச் சுமந்து விண்ணிற்

                    கொட்டிப் பார்க்குதே!

செக்கர்மீன் எழுந்து கூண்டைத்

                    தேடிப் பார்க்குதே - தத்தை

இக்கணம் வரும் என்றுகண்

                    மூடிப் பார்க்குதே!

மறியினங் குதித்துக் கொண்ட

                    மலையைப் பார்க்குதே - தத்தை

மழலையை நினைத்துக் கொண்டு

                    மணிகள் ஆர்க்குதே!

மலைநிழல் விரிந்து வந்து

                    மண்ணை மூடுதே - தத்தை

தலைநிழல்  மறைந்த தென்று

                    கண்ணை மூடுதே! (32)

- இப்பகுதி அவரை ஓர் இயற்கைக் கவிஞராக இனங்காட்டுகிறது.

                    பெண்கிளி வானோக்கிப் பறந்தபோது இடையூறாய் மழையும் வந்துசேர்கிறது.

வானெனும் வேடன் விரிக்கும்

                    மழையெனும் இடர்வலை சிக்கிக்

கூனெனும் சிற்றுரு வத்தைக்

                    கொண்டுருள் கின்றது தத்தை!

மேல்எடுத் தெற்றிய பந்து

                    மெலமெலக் கீழ்விழல் என்று

வால்இற கனைத்தும் ஒடுங்கி

                    வந்தது தத்தை இறங்கி (75)

என்று மழையில் மாட்டிக்கொண்டு கிளி படும் பாட்டைச் சொல்லோவியமாய் விரிக்கிறார்.

கற்பனை

                    ஆண்கிளி தன் கனவில் மாலையைக் காண்கிறது. அதனை மிக அழகாக வருணிக்கிறார் தமிழ்ஒளி.

கனவிடை ஒரு மாலை - அது

                    கற்பக மலர்களின் நறுமாலை

புனலிடை நுரைமாலை - அப்

                    புனலிடை புகழ்பெறுந் திரைமாலை!

வானுலகத்தில் கிட்டும் மாலையாக இருந்தால் அது கற்பக மலர்களால் செய்யப்பட்டதாக அல்லவா இருக்க வேண்டும் என்று கற்பக மலர் என்னும் தொன்மத்தைப் பயன்படுத்துகிறார் கவிஞர். புனலிலே நுரைமாலையாகவும் திரைமாலையாகவும் காணும் காட்சி வருணனை அழகியல் தன்மையுடையது.

இந்திர வில்லென்ற மாலையைக் - கிளி

                    எட்டி எடுத்துக் கழுத்தினிற்

சந்திரன் பார்த்திடப் போட்டது - தன்

                    தத்தையைச் சம்மதம் கேட்டது!

தத்தையும் தானும் பறந்தன - அத்

                    தாழ்வரை நோக்கிப் பறந்தன

முத்தையும் பொன்னையும் சேர்த்தன - பின்

                    மோகச் சரம்ஒன்றைக் கோத்தன!

மேகச் சரிவிற் பறந்தன - அம்

                    மின்னலைக் கன்னலைச் சேர்த்தன

மோகச்சரம் ஒன்றைக் கோத்தன - பின்

                    முத்துச் சரம்ஒன்றை யாத்தன (26)

என்று மோகச் சரமாகிய நுண்பொருளையும் முத்துச் சரமாகிய பருப்பொருளையும் இயைத்துக் காட்டுகிறார் தமிழ்ஒளி. ஒருவேளை தமிழ்ஒளி தம் காதலியோடு திருமண வாழ்வில் இணைந்திருந்தால் எத்தகைய இன்பத்தைப் பெற்றிருக்கலாம் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடு இது.

                    இறந்துகிடக்கின்ற ஆண்கிளியைப் பார்த்த கண்ணப்பன்,

மேகம் உனக்கு மெல்லமெல்ல

                    மெத்தை விரிக்குமோ?

மின்னல் உனக்கு நல்லநல்ல

                    விளக்கு வைக்குமோ? (43)

என்னும் காட்சியும் அழகியலாய் விரிகிறது.

                    மலையினை மகராசனின் இல்லமாகக் கற்பனை செய்கிறார். அத்துடன் முகில்களை வண்டிகளாகச் சொல்லும் தமிழ்ஒளியின் கற்பனை புதிது.

உருள்கின்றன முகில்வண்டிகள்

                    உயர்கின்றன மலையாய்

இருள்கின்றன இழைகின்றன

                    இவர்கின்றன பலவாய்! (67)

பொருளேற்றின சிலவண்டிகள்

                    புகழேற்றின நெறியா

இருளேற்றின சிலவண்டிகள்

                    எதையேற்றின அறியா (68)

என்ற முகில் வண்டிகளை வருணிக்கும் தமிழ்ஒளி, தளர்ச்சியின் காரணமாக அவ்வண்டியில் ஏறிப் பயணிக்கக் கருதும் தத்தை அடைந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் சமூக அனுபவத்தின் வழி வெளிப்படுத்துகிறார்.

வண்டிக ளிடையில் வழியிற் சிக்கி

                    வருந்தும் தத்தைப்பெண்

தெண்டிரை பட்டுச் சிதறும் நுரைபோற்

                    சிதறும் தத்தைப்பெண் (68)


உருள்வன வண்டிகள் ஒவ்வொன் றின்முன்

                    உதவிஎனக் கத்தும்

அருள்வன வல்ல அகல்வன அவைகள்

                    அலையும் தத்தைப்பெண்!

நில்லும் நில்லும் என்றொரு சிறகை

                    நீட்டும் தத்தைப் பெண்

செல்லும் செல்லும் என்றுகை வீசிச்

                    செல்வன மேகங்கள்! (68)


இறகோய்ந்தது சிறி தேற்றுவிர்

                    எனத் தத்தையும் கேட்கப்

பிறகோய்ந்ததும் ஓட்டம்,வரும்

                    பின்வண்டிகள் ஏற்றும்!

என்கின்ற இணைவண்டிகள்

                    இவர்கின்றன விரைவாய்

 தின்கின்றது சோகம், கிளி

                    தேய்கின்றது தேகம்! (69)

என்று பேருந்து நிறுத்தங்களில் கூட்டநெரிசலில் காத்திருக்கும் மக்களின் பாட்டை மிக அழகாக மேற்கண்ட காட்சியில் பொருத்திக் காண்கிறார் தமிழ்ஒளி.

முரண்

                    பெண்கிளி கடலில் வீழ்ந்ததுவோ என்று கடல்நோக்கிப் பறந்து துடித்து இறக்கிறது. பெண்கிளியோ வானில் காணும் பிறையை ஆண்கிளி என்று நினைத்து அதைப் பிடிக்கத் துடித்து மேல்நோக்கிப் பறந்து உயிர் துறக்கிறது. இரண்டும் எதிர்எதிர் திசைகளில் பயணித்திருப்பினும் இறந்தபின்னர் ஒரே இடத்தில் வீழ்ந்துகிடப்பதாக அமைத்து நாடகத் தன்மையால் சுவையை மிகுவிக்கிறார் கவிஞர் என்பது இவண் நினைக்கத்தக்கது.

மெய்ப்பாடு

                    இருநாள் நிகழ்வாக அமைந்துள்ள இக்காப்பியத்தின் பாடல்கள் உணர்ச்சிப் பெருக்கின் வெளிப்பாடாக அமைகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வில் பிரிவுத்துயரும் கையறுநிலையும் மேலோங்கி நிற்கின்றன. மெய்ப்பாடு எட்டனுள் மருட்கை, அச்சம், வெகுளி ஆகிய சுவைகளுடன் விஞ்சிநிற்கும் அழுகைச் சுவையை ஒலிநயத்துடன் வெளிப்படுத்துகிறார் தமிழ்ஒளி.

சமுதாயத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகளைத் தகர்ப்பவராகவும் வறுமைக்கு எதிராகக் குரல்கொடுப்பவராகவும் அமைந்து தம்மை ஒரு சமூகப் போராளியாக இனங்காட்டுகிறார் தமிழ்ஒளி. தமிழ்ஒளியின் படைப்புகளில் அவரது பன்முக ஆளுமையைக் காணமுடிகிறது. பொதுவுடைமைப் போராளியாக, தமிழ்இனப் போராளியாக, மொழிகாக்கும் போராளியாக, சமூகப் போராளியாகத் தமிழ்ஒளியை இனங்காட்டும் படைப்புகள் அவருள் எரிந்து கொண்டிருந்த புரட்சி தீபத்தைத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கின்றன. நீண்ட ஆயுட்காலத்தோடு இருந்திருந்தால் இன்னும் பல எழுச்சிமிக்க படைப்புகள் தமிழன்னைக்குக் கிடைத்திருக்கும் எனலாம்.

 

துணைநூற் பட்டியல்

தமிழ் ஒளி,

                    கண்ணப்பன் கிளிகள்,

                    சென்னை : புகழ்ப் புத்தகாலயம், 3ஆம் பதி. 1988.

ஔவை நிர்மலா

கவிஞர் தமிழ்ஒளி வாழ்வும் படைப்பும்

புதுச்சேரி : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2018.