Monday, 5 August 2019

மயங்குகிறாள் ஒரு மாது


மயங்குகிறாள் ஒரு மாது

            ஒரு மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்கச் செல்ல வேண்டும்.
            அழைப்பிதழ் வந்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆய்வுக்கட்டுரை வழங்குவோர் பட்டியல் இணைக்கப் பெற்றிருந்தது. கழுகுப் பார்வையாக ஒரு நோட்டம்.
                'திருமதி வெற்றிச்செல்வி'
            பெயரைப் பார்த்ததும் என் கண்கள் கீழே பயணிக்காமல் சடன் பிரேக் போட்டது.
            யாரிவள்?
அவளாக இருக்குமோ?
            என் எண்ணம் பழைய நினைவு ஆல்பத்தை மூளையிலிருந்து தேடி எடுத்தது. அந்த ஆல்பம் இருபதாண்டுகளுக்கு முந்தையது என்றாலும் பளிச்சென்று இருந்தது.
            எனக்கு அறிமுகமாகியிருந்த வெற்றிச் செல்வி . . .
            அவளை நீங்கள் எப்பொழுதும் தனியாகப் பார்த்துவிட முடியாது. அவளுடன் ஒருவன் உடன் இருப்பான். எப்பொழுதும் அவன் ஒருவனே இருப்பான் என்றும் நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் அறியாமையைக் காட்டும்.
            அப்படி என்றால் அவள் உலகமகா அழகியா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவள் கீழ்த்தாடை எலும்புகூட சற்றே துருத்திக்கொண்டு முக்கோணமாக அமைந்திருந்தது.
            ஆனாலும் அவள் மயக்கம் கிறங்கப் பார்க்கும் பார்வைக்கும் குஷி படத்தின் மும்தாஜ் போன்று அவள் வாயிலிருந்து உதிர்க்கும் போதை கலந்து சொக்கவைக்கும் சொல்லுக்கும் எப்பொழுதும் எவனாவது ஒருவன் அடிமைப்பட்டவனாக அவளைச் சுற்றிக்கொண்டு இருப்பான். 
            அவளை நான் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும்.
            இப்போதெல்லாம் பெரும்பாலான பருவப்பெண்கள் ஆடவர்களோடு பேசுவதையோ பழகுவதையோ தவறாகக் கருதுவதில்லை. வெட்டவெளியில் ஒருவரோடு ஒருவர் தோள்கள் உரசப் பக்கம் பக்கமாக அமர்வதை அனிச்சையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
            சென்ற மாதம்கூட ஒரு பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதி வாசலில் ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது.  அழகிய இளைஞன் ஒருவனைச் சுற்றி நின்று ஐந்தாறு பெண்கள் கடலை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவனைக் கையில் ஒருத்தி செல்லமாகக் கிள்ளினாள். உடனே உடனிருந்த அத்தனை பெண்களும் அதே இடத்தில் கிள்ளித் தங்கள் அன்பையும் புலப்படுத்திக் கொண்டார்கள்.
            இப்படியெல்லாம் கம்பெனி கொடுக்கின்ற பெண் நண்பர்கள் ஆடவர்களுக்கு அந்தக் காலத்தில் அதிகமாகக் கிடைத்ததில்லை. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று எடுத்துக் கொண்டாலும் உடன் படிப்பவர்களில் ஒன்றிரண்டு பேர்தான் இப்படிக் கம்பெனி கொடுப்பார்கள். அப்படிக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களில் அவர்கள் அழகானவர்களா? இல்லையா? என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க முடியுமா என்ன? எல்லாம் வெறும் டைம் பாஸ் தானே? அவர்களை என்ன திருமணம் செய்துகொள்ளவா போகிறார்கள்?
            நான் என் ஆய்வு நிமித்தமாக வேறொரு பல்கலைக்கழகத்தில் சில ஆய்வேடுகளைப் பார்க்க வேண்டியிருந்தது. அந்தப் பல்கலைக்கழக நூலகத்திற்குச் செல்லப்போகிறேன் என்று கேள்விப்பட்ட என் வகுப்பு நண்பன் தனக்கு அப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவியைத் தெரியுமென்றும் அவள் என் தேடலுக்கு மிகவும் உதவியாக இருப்பாள் என்றும் கூறினான். 
            அவன் என்னுடைய வருகையைக் கடிதம் மூலம் அவளுக்குத் தெரிவித்தும் இருந்தான்.
            நான் நூலகத்தில் சிரத்தையோடு நூல்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அவளாகவே என்னைத் தேடி வந்தாள். 
'பரவாயில்லையே! என் மீது இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு இப்படிக் காலையிலேயே தேடி வந்துவிட்டாளே?' 
            அவள் என்னை விடாப்பிடியாகச் சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்றாள். எனக்கு அவளை அறிமுகப்படுத்திய வகுப்பு மாணவன் குறித்தே முக்கால்வாசி நேரம் பேசிக்கொண்டிருந்தாள்.
                ', காதலாக இருக்குமோ? காதலாக இல்லாவிட்டால் அவனைப்பற்றிப் பேசும்போது இப்படி இவள் கண்களில் மயக்கம் ஏற்படுமா?'
            அவள்கேட்ட அவனைப் பற்றிய பல கேள்விகளுக்கு எனக்கு எந்த விடையும் தெரியவில்லை. என்னுடன் வகுப்பில் படிக்கும் ஆடவன் பற்றி எனக்கு என்ன தெரிந்திருக்க முடியும்? நான் சொல்லாத விடைகளுக்கு அவள் வருந்தியதாகத் தெரியவில்லை. அவனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க ஒரு தோழி கிடைத்த திருப்தி அவள் முகத்தில் தெரிந்தது.
            அகவன் மகளே அகவன் மகளே
            மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
            அகவன் மகளே பாடுக பாட்டே
            இன்னும்பாடுக பாட்டே அவர்
            நன்நெடுங் குன்றம் பாடிய பாட்டே
என்னும் தன்மையில் அவள் பேச்சு அமைந்திருந்தது.
            அவளிடமிருந்து என்னை விடுவித்துக்கொண்டு நூல்களைப் படிப்பதில்முனைய மிகுந்த சிரமப்பட வேண்டியதாயிற்று. மாலையில் அவள் வீட்டுக்குக் கட்டாயம் வருகை புரியவேண்டும் என்று என்னை வற்புறுத்திச் சம்மதம் பெற்ற பிறகே எனக்கு விடுதலை அளித்தாள்.
            மாலையில் எப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் என்று நான் மனத்தில் நினைத்திருந்தேன். உள்ளூரிலேயே என் தோழிகள் எவருடைய வீட்டிற்கும் நான் அநாவசியமாகச் சென்றதில்லை. ஆனால் என் எண்ணம் சாத்தியப்படவில்லை. நூலக வாசலில் அவள் காத்திருந்தாள்.  அவள் அழைப்பை மறுப்பது நாகரிகமாகப் படவில்லை. அவள் அழைப்பால் என்னுடைய பல எழுத்துப் பணிகள் பாதிக்கப்பெறும்தான்.  வேறு வழியில்லை.
            அவள் வீட்டிற்கு அழைத்துச்சென்றாள். தம்பிகளை அறிமுகப்படுத்தினாள். எதிரே வருவோர் போவோரை எல்லாம் அறிமுகப் படுத்தினாள். அதில் ஆடவர், மகளிர், சுற்றம், நட்பு என அனைவரும் அடக்கம். அவர்களை எல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? 
            என்னை விழுந்துவிழுந்து உபசரித்தாள். எல்லாம் அந்த நண்பனுக்காகத்தான் என்று நன்றாகவே விளங்கியது. நான் ஊருக்குத் திரும்பியதும் அவள் காதலனிடம் அவளைப் பற்றி நல்லவிதமாகக் கூறவேண்டுமல்லவா? என்று நினைத்துக்கொண்டேன்.
            மறுநாள் நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து நூலகம் செல்லும்போது தூரத்தே அவள் மரத்தின் நிழலில் அமர்திருப்பது தெரிந்தது. ஆனால் அவளோடு ஒருவன் அமர்ந்திருந்தான் - உடல் உரசிக்கொள்ளும் நெருக்கத்தில். அவர்களை நெருங்க நெருங்க அவள் அவனைப் பார்த்து மயக்கம் கிறங்கப் பார்த்துக்கொண்டிருந்த பார்வை என் பார்வையில் பட்டது.
                'அடடா, இவன்தான் இவளுடைய உண்மைக் காதலனாக இருக்க வேண்டும். நான் எவ்வளவு தவறாக நினைத்துவிட்டேன். என் வகுப்புத் தோழனையும் அவளையும் பற்றி . . . சே!' என்னை நானே கடிந்து கொண்டேன்.
            என்னைப் பார்த்ததும் அவள் எழுந்து வந்தாள். 'வாங்க, டிபன் சாப்பிடப் போவோம். உங்களுக்காகத்தான் நான் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன்'.
            உணவு விடுதியைக் கடந்துதான் நான் நூலகத்திற்குச் செல்லவேண்டும். வேறுவழி இல்லாமல் நான் அவர்களுடன் சாப்பிட வேண்டியதாகிப் போய்விட்டது. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்ட மயக்கப் பார்வை என்னை நெருடியது. அவர்களுக்கு இடைஞ்சலாக நான் அங்கு ஏன்? காதலர்கள் மத்தியில் நானும் கரடிபோல் இருப்பது என்னை உறுத்தியது.
            சீக்கிரமாக உணவை முடித்துக்கொண்டு கிளம்பினேன்.
            மணி ஒன்றாகியது. வயிறு பசித்தது. 'சரி, சாப்பாட்டை முடித்துக்கொண்டு வருவோம்'. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்தேன்.
            நூலக வாசலை அடைந்தபோது ஆச்சரியம் காத்திருந்தது. அவள் எனக்காக மரநிழலில் காத்திருந்தாள். அவனும் இருந்தான். காலை முதல் மதியம் வரை அப்படி என்னதான் பேசிக்கொண்டிருப்பார்கள்? அவள் நூலக வாசலைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததால் என்னைப் பார்த்ததும் எழுந்துவர ஆரம்பித்தாள். அவனும் எழுந்தான். நெருங்கி வரும்போது ஒன்றைக் கவனித்தேன். நான் காலையில் பார்த்தவன் அவனில்லை. இவன் வேறொருவன். சரி சரி வெறுமனே பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்.  வகுப்புத் தோழனாகக்கூட இருக்கலாம்.
            அவர்களோடு நானும் நடந்தேன். அவள் பார்வையில் மாற்றம் இல்லை. காலையில் ஒருவனிடம் வீசிய 'அதே மாதிரி'யான பார்வை.
            இவள் கண்களில் என்ன கோளாறா? அல்லது என் கண்களிலா? என்னால் சரியாகப் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.
            காலையில் வந்தவன் காட்டிய அதே அந்நியோன்யத்தை இவனும் காட்டினான். ஆச்சரியமாக இருந்தது. பெண்கள் எல்லா ஆடவரிடமும் வித்தியாசம் இல்லாமல் இப்படி அந்நியோன்யமாகப் பழக முடியுமா?
            அவளுக்குப் பல்கலைக்கழகத்தில் இப்போது எந்த வேலையும் இல்லை. விடுமுறை நாட்கள்தான். அப்படியிருக்க தினமும் ஏன் வருகிறாள்? எனக்காகவா? அவள் வீட்டைவிட்டு வெளியேவந்து சுற்றுவதற்கு என் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறாளோ?
            அவள் வருவது எனக்கு எந்த வகையிலும் உதவியாக இல்லை. நூல்களை எடுப்பதிலோ, குறிப்புகள் எடுப்பதிலோ அவள் எந்தவித அறிவு பூர்வமான உதவியும் செய்யவில்லை. ஆனால் உணவருந்த நான் மொத்தமாக எடுத்துக்கொள்ளும் அரைமணி நேரத்தை ஒருமணி நேரமாக்கி என் பொன்னான நேரத்தை அவள் வீணடித்துக் கொண்டிருந்தாள். இதைத்தான் அன்புத் தொல்லை என்பதா?
            மறுநாள் என் வேலைகளை முடித்துக்கொண்டு இரவு ரயில் ஏற வேண்டும். இன்னும் பார்க்கவேண்டிய ஆய்வேடுகள் நிறைய இருந்தன. அவள் காரணமாக ஒரு நிமிடத்தையும் என்னால் வீணாக்க முடியாது. மனம் உறுதியாகச் சொன்னது.
            யோசித்தேன். மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு நூலகத்திற்குள் சென்றுவிட்டேன். அவள் வழக்கமான நேரத்தில் என்னைத் தேடிக்கொண்டு நூலகத்திற்குள் வந்தாள்.
                'நெறைய படிக்கவேண்டி இருக்கு, நான் காலையிலேயே சாப்பிட்டுட்டேன். இப்போ என்னால வரமுடியாது, ஸாரி' என்றேன். 'அதோட மத்தியானமும் என்னால சாப்பிட வரமுடியாது. இதோ பிஸ்கட் இருக்கு. இன்னைக்கு முழுக்க நான் நூலகத்தை விட்டு வெளிய வரமுடியாது'. திட்டவட்டமாகக் கூறினேன். அவள் அதற்காக ஒன்றும் பெரிதாக வருந்தியதாகத் தெரியவில்லை. போய்விட்டாள். 'சனியன் விட்டது' என்று நூல்களில் மூழ்கிப்போனேன்.
            படித்துமுடித்துவிட்டு நூலகத்தை விட்டுக் கிளம்பும்போது மணி ஏழரையாகியது. ஒன்பது மணிக்கு ரயில். ரிசர்வேஷன் செய்திருந்தேன். அதனால் கால்மணி நேரத்திற்கு முன்னால் ரயில்வே ஸ்டேஷன் போனால் போதும்.
            நேரே விடுதிக்குச் சென்றேன். சற்றுநேரம் இருந்துவிட்டுத் தொடர்வண்டி நிலையத்திற்குக் கிளம்பினேன். ரயிலில் ஏறி அமர்ந்தேன். சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் அவள் ஓட்டமும் நடையுமாக வருவது தெரிந்தது.
            அவளா?
            இந்த நேரத்திலா?
            எதற்காக இங்கே வரவேண்டும்?
            திகைத்தேன். என்னை வழியனுப்ப வந்ததாகக் கூறினாள். கையில் ஒரு கிப்ட் பேப்பரால் சுற்றிய ஒரு பொட்டலம் தந்தாள். என் வகுப்பு நண்பனிடம் கொடுத்துவிடுமாறு கூறினாள்.
            பத்திரமாக அதைக் கொண்டுசென்று சேர்த்தேன்.
            படிப்பை முடித்த கையோடு எனக்கு வேலை கிடைத்து திருமணம் முடித்துச் செட்டில் ஆகிவிட்டேன்.
            என் வகுப்பில் படித்த அவன் என்ன ஆனான்?
            அவள் என்ன ஆனாள்?
            அவள் அவனைத் திருமணம் செய்துகொண்டாளா?
            அல்லது பல்கலைக்கழகத்தில் அவளோடு காலையில் பார்த்த அவனைத் திருமணம் செய்துகொண்டாளா?
            அல்லது மாலையில் பார்த்தோமே அவனையா?
            எதுவும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.
            ஆயிற்று இருபது ஆண்டுகள். என் நினைவு ஆல்பத்தை மூடிவைத்தேன்.
            ஒருவேளை இவள் அவளாக இருக்குமோ?
            மாநாட்டிற்குப் போனால் தெரிந்துவிட்டுப் போகிறது.
            என்ன ஆச்சரியம்?
            அவளே தான். பழைய நட்பு மனத்தில் துளிர்த்தது. விசாரித்தேன். யாரைத் திருமணம் செய்துகொண்டாள் என்று அறிய உள்ளூற ஆசை எழுந்தது.
            பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணம். அவள் கணவன் ஒரு மருத்துவராம். நல்ல அண்டர்ஸ்டேன்டிங் டைப் என்றாள். இரண்டு பெண் குழந்தைகள். மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள்.
            எத்தனைப் பேர் அவளையே சுற்றிக்கொண்டு இருந்தார்கள்? எல்லாம் வயசுக் கோளாறு. அவள் அதிலிருந்து மீண்டு ஏதோ இந்த வரைக்கும் செட்டில் ஆனாளே, மனம் சந்தோஷப்பட்டது.
            மாநாட்டிற்கு என் கணவரும் வந்திருந்தார். அவளுக்கு அவரை அறிமுகம் செய்துவைத்தேன். என் கணவரும் அனைவரிடமும் சகஜமாகப் பழகக்கூடியவர்.
            அடுத்து இன்னொரு ஆய்வு மாநாடு சென்னையில் நடைபெற இருந்தது.
            அம் மாநாட்டிலும் நான் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இருந்தேன். அவளும் வந்திருந்தாள். சென்னையில் சில வேலைகள் இருந்ததால் என் கணவரும் உடன் வந்திருந்தார். அவளும் வருகிறாள் என்று என் கணவர் சொன்னார். அவள் வருகிறாள் என்று இவருக்கு எப்படித் தெரியும்?
            நாங்கள் முன்னதாகவே சென்றுவிட்டதால் அவள் தங்குவதற்கும் எங்கள் அறையின் பக்கத்திலேயே ஓர் அறையின் சாவியை வாங்கி வைத்தார். அவர் அனைவருக்கும் உதவும் குணமுடையவர் என்பதால் எனக்கு எதுவும் வித்தியாசமாகப் படவில்லை.
            அவள் சென்னை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் என் கணவருக்குப் போன் செய்தாள். 'பாவம் அவளுக்கு இந்த இடம் தெரியாதாம், நான் போய் அழைத்து வந்துவிடட்டுமா?'
                'அதனாலென்ன? அழைத்துவாருங்கள்'.
            என்னிடம் பேசுவதைவிட என் கணவரை நோக்கிப் பேசுவதையே அவள் விரும்புகிறாள் என்பதை ஊகிக்க முடிந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவள் கண்களில் நான் கண்ட மயக்கம் சற்றும் குறையாமல் இன்னும் இருந்தது. இதுதான் காட்சிப் பிழையோ?
            அவள் கண்ணில் பிரெஷராம். அதற்குத் தினமும் கண்ணில் ஒரு சொட்டுமருந்து விடவேண்டுமாம். அந்த மருந்தை எப்பொழுதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டுமாம். மாநாட்டு அமைப்பாளர்கள் சிலரிடம் அம் மருந்தைப் பத்திரப்படுத்த குளிர்சாதனப்பெட்டி குறித்து விசாரித்தாள். வேறு எந்தப் பெண்ணாவது அவள் நிலையில் இருந்திருந்தால் ஒன்று மாநாட்டைத் தியாகம் செய்திருப்பார். அல்லது மருந்தைத் தியாகம் செய்திருப்பார். அவள் இரண்டையும் தியாகம் செய்யவில்லை.
            கல்லூரி விடுமுறை நாள். அதனால் குளிர்சாதனப் பெட்டி இருக்கும் துறைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன. அவள் துன்பத்தைக்கண்டு துன்புற்ற அபிமானிகள் சிலர் என்ன செய்யலாம் என்று தங்கள் அவசரமான அவசியமான மாநாடு தொடர்பான வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவளுக்கான வழி தேடிக்கொண்டு இருந்தார்கள். கல்லூரிக்கு அருகாமையில் வசிக்கும் ஒருவர் இல்லம் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டது. நாங்கள் தங்கி இருந்த அந்த இரண்டு நாட்களும் அவர் அந்த மருந்தைத் தூக்கிக்கொண்டு அலைவதையே முக்கிய பணியாக ஏற்றிருந்தார்.
            அவர் மட்டுமா அலைந்து கொண்டிருந்தார். அது தொடர்பாக இன்னும் நாலைந்துபேர் அலைந்து கொண்டிருந்தார்கள்.
            அவள் எதையும் நேராக டீல் செய்வதில்லை.
            அவள் ஒரு வேலையை ஒருவரிடம் ஒப்படைப்பாள்.
            அவர் சரியாகச் செய்கிறாரா என்று கவனிக்கும் பொறுப்பை மற்றொருவருக்குக் கொடுப்பாள்.
            அவரைக் கண்காணிக்கும் பொறுப்பை இன்னொரு நபருக்குக் கொடுப்பாள்.
            இப்படி வேலை ஒன்றாயினும் அதனை ஆற்றுவதற்குப் பல ஆடவர் நியமிக்கப் பெற்றார்கள்.
            அவ்வேலையை அனைவருமே ஆவலுடன் செய்ததுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
            மதியம் எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் மாநாட்டிற்கு வந்திருந்தார். ' ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்போகிறீர்களா?' என்றேன்.
                'இல்லை இல்லை. நான் கட்டுரையே எழுதவில்லை'. என்றார்.
                'அப்புறம் எப்படி?'
            மாநாட்டைப் பார்ப்பதில் இவ்வளவு ஆர்வமா? என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன்
                'இல்லை, வெற்றிச்செல்வி ஏதோ ஷாப்பிங் செய்யவேண்டுமாம். வரச்சொன்னார்' என்றார்.
            ஓஹோ. . . விஷயம் அப்படிப் போகிறதா?
            ஆனால் வெற்றிச்செல்வி ஏற்கெனவே சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கிப் படித்திருக்கிறார். அவருக்கு எல்லா ஷாப்பிங் சென்டர்களும் அத்துப்படி என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
            அவள் உடனே அந்த நபருடன் கிளம்பிவிடவில்லை. ஏதேதோ காரணம் காட்டி நேரத்தைக் கடத்தினாள். கடைசியில் மாலையில்தான் அவனோடு அவள் ஷாப்பிங் புறப்பட்டாள்.
            அந்த ஒருவருக்காக மாநாட்டில் பல ஆடவர்களோடு கிடைக்கும் அறிமுகத்தை அவள் இழக்க விரும்பவில்லை.
            அத்துடன் ஒரு நான்கைந்து மணிநேரம் தன் பொருட்டே ஓர் ஆடவனைக் காக்கவைக்கும் திருப்தியும் கிடைப்பதில் மகிழ்ச்சிதானே!
            ஷாப்பிங் முடித்து இரவு பத்துமணிக்கு விடுதிக்குத் திரும்பினாள். விடுதியில் வேறு சிலரும் எங்களோடு தங்கியிருந்தனர். இரவு உணவை முடித்துவிட்டு நாங்கள் எல்லோரும் விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கே இருந்த ஒரு நபருக்குப் போன் வந்தது.
            வெற்றிச்செல்விதான் போன் செய்திருந்தாள். ஷாப்பிங் முடித்துத் தான் வந்துவிட்டதாகவும் வாசலில் இருப்பதாகவும் தனியாக உள்ளேவர அச்சமாக இருப்பதாகவும் வாசலுக்கு வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறும் போன் வந்தது.
            அந்த நபரும் அப்பாவியாக உடனே வரிந்து கட்டிக்கொண்டு வாசலைநோக்கிச் சென்றார். அவர்கள் திரும்பி வந்தபோது அந்த நபர் இரண்டு கைகளிலும் இரண்டு ஷாப்பி பேக்குகளைச் சுமந்துகொண்டு கூலி போன்று நடந்து வந்தார். அவள் கைப்பையை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு ஹாயாக நடந்து வந்தாள்.
            முன்பின் தெரியாமல் இங்கு வந்து அறிமுகமான ஒரு நபர் எப்படி அவளுக்கு அடிமையாக இப்படி வேலை செய்கிறார்? அவருடைய மனைவியோடு போகும்போதுகூட இப்படி அவர் மூட்டை தூக்கி இருப்பாரா?
            ஆச்சரியமாகவும் இத்தகைய ஆடவர்களைப் பற்றி நினைக்கும்போது வேதனையாகவும் இருந்தது.
            மறுநாள் காலை என்னிடம் கொடுப்பதுபோல் என் கணவருக்கு ஒரு கிப்ட் கொடுத்தாள். 
            அவள் இன்னும் மற்றவருக்குக் கிப்ட் அளித்துக் கவிழ்க்கும் உத்தியைக் கைவிடவில்லையோ?
            அப்பொருள் ஒரு கிப்ட் பேப்பரால் நேர்த்தியாகச் சுற்றப்பட்டிருந்தது. அவ்வளவு சிறிய அப்பொருளை கிப்ட் பேப்பரால் சுற்றியவருக்கு நிச்சயம் ஒரு கிப்ட் கொடுக்கலாம்.
            கிப்ட் பேப்பரைப் பிரித்துப் பார்த்தேன். இரண்டு சென்டி மீட்டர் அகலமும் ஆறு சென்டிமீட்டர் நீளமும் 24 கன சென்டிமீட்டர் கனப் பரிமாணமும் கொண்ட மிகமிகச் சிறிய அட்டைப் பெட்டி.
            உள்ளே திறந்து பார்த்தேன்.
            சிறிய கண்ணாடிக் குப்பி.
            குப்பிக்குள்ளே சிறு பூக்கள்.
                'வித் லவ்' என்று பொறித்திருந்தது.
            அதன் விலை சுமார் பத்து ரூபாய் இருக்கலாம். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.
            அவளுடைய காதலை எல்லாம் அந்தக் குப்பிக்குள் அடைத்துக் கொடுத்திருந்தாள்.
            இப்படி எத்தனைப் பேருக்குக் கொடுத்தாளோ? நான் என் கணவருடன் இருந்ததால் அவள் என்னிடம் கொடுக்கவேண்டியதாய்ப் போய்விட்டது.
            தனியாக வந்து அவளிடம் அகப்பட்டுக்கொண்ட ஆடவர்கள் இத்தகைய பொருட்களைப் பெற்றுக்கொண்டு என்னவிதமான கற்பனைகளில் மூழ்கப்போகிறார்களோ?
            அதனை ஒருவரோடொருவர் பேசிக்கொண்டால் அவளைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆனால் இதெல்லாம் வெளிச்சமாகப் பேசிக்கொள்ளும் விஷயங்களா என்ன?
            மாநாடு இனிதாக முடிந்தது. கல்லூரியில் பணிவிடுப்புப் பெறுவதற்கு வருகைச் சான்றிதழ் பெற விழைந்தாள். அதற்கு ஒன்றும் அதிகநேரம் ஆகாது. கணினியில் தட்டி ஒரு ஐந்து நிமிடத்தில் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படி அந்த வேலை ஐந்து நிமிடத்தில் காதும் காதும் வைத்ததுபோல் முடிந்துவிடுவதை வெற்றிச் செல்வி விரும்பவில்லை.
            ஒருவரை அணுகினாள். அந்தச் சான்றிதழைப் பெற்றுத் தனக்கு அனுப்பி வைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டாள். அவரோ சென்னையின் வேறு ஒரு மூலையிலிருந்து மாநாட்டிற்கு வந்தவர்.
            அவசரத்திற்கு அந்தச் சான்றிதழ் கிடைக்காது என்றாலும் விழா நடத்துபவர்களிடமே சொல்லியிருந்தால் இரண்டொரு நாளில் அவர்களே அவள் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் இந்த ஒரு வேலைக்கு ஒரு நாலைந்துபேராவது தனக்காக மெனக்கெடாவிட்டால் அவளுக்குத் திருப்தி ஏற்படாது என்பது நன்றாகவே தெரிந்தது.
            விழா நடத்துபவரிடம் தன் சான்றிதழைத் தயாரித்து வைக்குமாறும் குறிப்பிட்ட நபர் அதனைப் பெற்றுத் தனக்கு அனுப்பி வைப்பார் என்றும் கூறினாள்.
            ஆய்வுக்கட்டுரை படித்ததற்கான சான்றிதழ் அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தது; அவளுக்கும்தான். கல்லூரியில் பணிவிடுப்பு பெறுவதற்கு அது ஒன்றே போதுமானது என்பது கூடுதல் செய்தி.
            மாநாடு முடிந்து, பழையபடி கல்லூரி, வீடு என்று இயந்திரத்தனமான வாழ்க்கை மீண்டும் தொடர்ந்தது.
            வெற்றிச்செல்வியை மறந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.
            நம் செல்போன்களில் செல்போன் நிறுவனங்கள் விடாமல் ஏதேனும் மெஸெஜ்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அவற்றையெல்லாம் கடனே என்று வாசித்தேயாக வேண்டும். இல்லை என்றால் சில செல்போன்களில் 'உங்கள் தகவல் பெட்டி நிறைந்துவிட்டது. மெஸேஜ்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் குறுந்தகவல் பெட்டியைக் காலிசெய்யுங்கள்' என்று மெஸேஜ்கள் வந்தவண்ணம் ஒலியெழுப்பி நம்மைத் தொந்தரவு செய்யும்.
            அது மட்டுமா? சில நேரங்களில் நமக்கு யாரேனும் முக்கியமான குறுந்தகவல் அனுப்பியிருக்கலாம். நாம் நம் செல்போன் கம்பெனிதான் அனுப்பியுள்ளது என்று அசட்டையாக இருந்துவிட்டால், அத் தகவலைக் காணாமல் சில செயல்பாடுகள் தேக்கமடையவும் வாய்ப்பிருக்கிறது.
இப்படித்தான் எதேச்சையாக என் கணவரின் செல்போனில் மெஸேஜ் வந்ததற்கான ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.
            அப்போது என் கணவர் வண்டியோட்டிக் கொண்டிருந்தார்.
                'எடுத்துப் பார்' என்றார்.
                                'காலியிடம்  - உண்மையான நண்பர்
                        தேவையான தகுதி - அன்போ காதலோ செய்தல்,
                             அக்கறை காட்டுதல்
                        முன் அனுபவம் - தேவையில்லை
                        சம்பளம் - முடிவற்ற காதல்
                        உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?
                        விண்ணப்பிக்க அழையுங்கள்'
என்று ஒரு தகவல் இருந்தது.
            செல்போன் நிறுவனங்கள்தாம் இப்படிப்பட்ட வேண்டாத தகவல்களை எல்லாம் அனுப்பித் தொல்லை தருவார்கள்.
            ஆனால் இத்தகவலின் இறுதியில் செல்போன் நிறுவனத்திற்கு பதிலாக ஏதோ பெயர் இருக்கிறதே!
            உற்றுக் கவனித்தேன்.
            வெற்றிச் செல்வி!
            தனக்கு வந்த குறுந்தகவலை அவருக்கு ரீ டைரக்ட் செய்திருக்கிறாள்.
            குறுந்தகவல் பெட்டியை மேலும் ஆய்ந்தேன்.
            இரண்டு நாட்களுக்கு முன் மற்றொரு தகவல்.
                'உன் தோழரைப் பின்னால் இருந்து திடீரென்று கட்டிப்பிடித்து ஆச்சரியப்படுத்து. அல்லது கன்னத்தில் ஒரு குறும்புத்தனமான கிள்ளலால் ஆச்சரியப்படுத்து. அவர் மனத்தில் காமம் கொழுந்துவிட்டு எரிய இவை போதுமானது' - வெற்றிச்செல்வி.
            குறுந்தகவல் பெட்டியை மேலும் மேலும் ஆய்ந்தேன். காதலர்க்குக் கிளுகிளுப்பு ஊட்டுகின்ற கல்யாணமாகிப் பக்குவப்பட்டவர்களுக்கு அருவருப்பு ஊட்டுகின்ற பல காதல், காமம் தொடர்பான குறுந்தகவல்கள் அவள் தொடர்ந்து அனுப்பியிருந்தாள்.
            மனம் குமைந்தது. 'அசிங்கசிங்கமா மெஸேஜ் அனுப்பியிருக்கா. . . ? என்ன இதெல்லாம்?'
                'ஜஸ்ட் இக்னோர் இட்மா! அவளுக்கு இதைவிட்டா வேறென்ன வேலை?' காஸுவலாகச் சொன்னார் என் கணவர்.
                'இப்படில்லாம் அனுப்பக்கூடாதுன்னு நீங்க ஏன் அவளை வார்ன் பண்ணலை?'
                'எல்லாம் நான் சொல்லிட்டேன். கேட்டாத்தானே?'
                'இதை ஏன் என்கிட்ட சொல்லலை?'
                'அவ உன் பிரண்ட்தானே? அவளப்பத்திச் சொன்னா நீ எங்கே அவளத் தப்பா நினைச்சிடுவியோன்னுதான் நான் சொல்லல. அப்பப்ப போன் வேற பண்ணி டார்ச்சர் பண்றா'.
                'அவ என்னோட டியர் பிரண்டுன்னு எப்ப நான் சொன்னேன்? அவளும் அவளோட காமப் பார்வையும்!'
                'பெண் குலத்துக்கே அவளொரு களங்கம். ஏதோ சின்ன வயசுல வயசுக்கோளாறுன்னு நெனச்சேன். ஆனா கல்யாணமாகி ரெண்டு பொண்ணுங்களப் பெத்து அதுங்களுக்குக் கல்யாணமாற வயசு வந்துகூட  எல்லையில்லாம எப்போதும் தன்னைச் சுத்தி எந்த ஆம்பளையாவது உரசிக்கிட்டு திரியனும்னு நெனக்கிற அவளப்போயி பொம்பளன்னு இன்னொருதரம் பச்சாதாபப்படாதீங்க'.  கோபத்தில் எரிந்து விழுந்தேன்.
                'ஏதோ டைம் பாஸ் பண்றான்னு நான் பேசாம விட்டுட்டேன். இதுக்குப்போய் நீ ஏன் டென்ஷள் ஆகி உடம்பைக் கெடுத்துக்கறே?'
                'அவளுக்கு வேலைவெட்டி இல்லை! உங்களுக்குமா? பெண்ணுக்குப் பெண்ணோ அல்லது ஆணுக்கு ஆணோ கூட இப்படிப்பட்ட தகவல்களை அனுப்பிக்கொள்ளக் கூசும்போது கல்யாணமான ஒருபெண் மற்றொரு கல்யாணமான ஒரு ஆம்பளைக்கு அனுப்புறான்னா அவ எவ்வளவு லஜ்ஜை இல்லாதவளா இருக்கனும்? நீங்க பேசாம விட்டா அவ உங்களப் பத்தி எவ்வளவு மட்டமா நெனக்கிறான்னுதானே அர்த்தம்?'
            நான்கேட்டதில் விஷயம் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தார் என் கணவர். அவ்வாறு உணர்ந்து கொண்டதற்கு அவர் மௌனம்தான் அத்தாட்சி.
                'அவ இப்படியே அனுப்பிக்கிட்டிருக்கட்டும்னு நெனக்கிறீங்களா?'
                'சே, சே யாராவது அப்படி நெனப்பாங்களா? நான்சென்ஸ்!'
                'அப்படின்னா இதுக்கு நான் ஒரு முற்றுப்புள்ளி வைக்கட்டுமா?'
                'தாராளமா? இப்பவே செய்'.
            அவருடைய செல்போனில் அவள் நம்பரை அமுக்கினேன்.
            அவர்தான் என்று நினைத்துக்கொண்டு ஆர்வமுடன் எடுத்திருப்பாள்.
                'ஹலோ' என்றேன். என் குரல் அவளுக்குத் தெரிந்து சுரத்தையின்றி 'ஹலோ' என்றாள்.
                'என்ன சூப்பர் சூப்பரா அவருக்கு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கீங்க!'.
அங்கிருந்து மௌனம் பதிலாகக் கிடைத்தது. திடீரென்று நடைபெற்ற தாக்குதலை அவளால் சமாளிக்க முடியவில்லை போலும்.
            என்ன கேக்குதா?
                'ம். . . சொல்லுங்க!'
                'என்ன பக்கத்துல வீட்டுக்காரர் இருக்காரோ?'
            நான் கேட்டதற்கெல்லாம் 'ம்' என்ற ஒலியைத் தவிர வேறெதுவும் பதிலாகக் கிட்டவில்லை. அவள் கணவரும் அப்போது வீட்டில் இருந்திருக்க வேண்டும். திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்.
                'இனிமே இதுமாதிரி கொச்சைத்தனமான தகவல்களைப் பரிமாறிக்கறதை நிறுத்திக் கொள்ளுங்கள். இனி அவருக்கு போன் செய்யறத நிறுத்திடுங்க. குட் பை'. போனை ஆஃப் செய்தேன்.
            முற்றுப்புள்ளியை அழுத்தமாக வைத்தேன்.
            நான் வைத்த முற்றுப்புள்ளி என் கணவர் தரப்பிலிருந்து மட்டுமே! ஆனால் எத்தனையோ ஆடவர்கள் இன்னும் முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் . . .
(2008)

No comments:

Post a Comment