Friday 2 August 2019

வேண்டா விருந்து

வேண்டா விருந்து
எத்தனைப் பெயர்களைச்
சூட்டிக் கொள்கிறாய்
விருதுகளைப் போல்!

உன்னை விரட்ட
எத்தனை ஆய்வுகள்?
எத்தனைச் செலவுகள்?

நீ
சூடுசுரணை அற்றவன்!
சூதுகள் அறிந்தவன்!
விரட்டி விரட்டித் துரத்த
மாறுவேடமிட்டு
மறுபடியும் வருவாய்!

இறங்குமாறு கெஞ்சக்கெஞ்ச
மடியில் அமர்ந்து
கொஞ்சுகிறாய்!

பிஞ்சுக் குழந்தையின்
பஞ்சு உடலில்
முத்தம் சொரிவாய்!

முதியோர்
நெஞ்சக் குழியில்
முகம் புதைப்பாய்!

அஞ்சா இளையரை
அரவணைத்து
அச்சுறுத்துவாய்!

உன்னைவிட
உன் நினைப்பே
அச்சத்தின் ஊற்று!
உன்னை வைத்துப்
பணம் பண்ணுபவர்கள்
கடவுள் ஆவார்!

உன்
மகிழ்ச்சிப் புன்னகை
பலருக்கு மரணஓலம்!

பயந்துவிட்டால்
அன்றாடம் கதவைத்தட்டி
நலம் விசாரிப்பாய்!

இரவு வேளைகளில்
தூங்கவிடாமல் இமை கிழிக்கும்
நெடுந்தொடர் நீ!

உன்னைவைத்தே அரங்கேறும்
கார்ப்பரேட் மருத்துவமனைகளின்
சூதாட்டம்!

பணக்காரர்களை
பயந்தாங்கொள்ளிகளாக்கிப்
பணக்கட்டுகள் கறப்பாய்!

வசதியில்லாதவர்
கடவுளிடம் மனுப்போட்டுக்
காத்திருப்பார்!

வருமானம் இல்லாதவரின்
கண்ணீருக்கு அஞ்சாத
கந்துவட்டிக்காரன் நீ!

நீ
குறிவைத்த உயிரை
எடுக்காமல் போகாய்!

நீ
அனைத்தையும் எhpத்து மேலுந்தும்
ஏவுகணை!

நீ போக நாள் குறித்தால்
தாரை தப்பட்டையோடு
கொண்டாட்டம்!

பட்டாசு வெடிச்சத்தம்
மனதிற்குள்
மயான அமைதி!

அப்பாடா எனும் பெருமூச்சு
ஆனாலும்
கண்ணீரை அடக்கமுடியாமல்!

அழுவது
உன்னைப் பிரியும்
சோகத்தாலா?

இயற்பகை நாயனாரைச்
சோதித்த சிவனாய்க்
கூந்தலையும் கேட்பாய்!

சிலருக்கு நீ இனிப்புக் கள்வன்!
சிலருக்கு அறுவை மன்னன்!
சிலருக்கு மின் தூண்டில்காரன்!

உன்னைப் பார்த்ததும்
சிலர் ஓடுவார்கள்!
சிலர் குதிப்பார்கள்!
நண்பர்களும் உறவுகளும்
கூடுகையில்
உன்னைப் பற்றியே பேச்சு!

உனக்கு உணவிட்டவர்கள்
மெலிந்து போக
நீ மட்டும் கொழுத்துக்கொண்டே!

காரி உமிழ்ந்தாலும் களிக்கிறாய்
தலைமீது ஏறித் தெறிக்கிறாய்
தற்கொலைக்கும் தூண்டுகிறாய்!

பிறந்த குழந்தையும் பிடிக்கும்
மூத்து மெலிந்தவரென்றால்
விட்டுப் பிடிப்பாய்!

ஆணோ பெண்ணோ ஆஹா என்பாய்!
உனக்குப் பிடிக்காதவர்கள் யாருமில்லை!
உன்னைப் பிடித்தவர்களோ யாருமில்லை!

உன்னை விரட்டும் வழியைக்
கண்டவரிடமெல்லாம் கேட்டுக் கேட்டு
அலுத்துப் போகிறோம்!

ஆளாளுக்குத் தரும்
அரிய தகவல் அத்தனையும்
சோதித்துப் பார்க்கிறோம்!

ஆயிரம் ஊசிகள் துளைத்தாலும்
அசராமல் நிற்பாய்
அரசியல்வாதியாய்!

நீ வருவதை அறிந்தாலே
மனத்திற்குள் மண்டுகிறது
கவலை!

ஒற்றையாகவா வருகிறாய்?
நண்டுசிண்டுகளையும் அழைத்துவந்து
குடும்பத்தோடல்லவா கும்மியடிக்கிறாய்?

சில நேரங்களில்
முன்னறிவிப்போடு
பலமுறை திடுதிப்பென்று!

விருந்தும் மருந்தும்
மூன்று நாளைக்கு
உனக்குப் பிடிக்காத பழமொழி!

ஏதேனும் காரணம் சொல்லி
இடத்தைப் பிடித்துக் கொள்கிறாய்
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பாய்!

எங்களைச் சாகடிக்கும் நீ
செத்துத் தொலைய மாட்டாயா?
பிணியே . . . !

No comments:

Post a Comment