முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 8
'இதோ பாருங்க! என்
கனவுல கடவுள் வந்தாரு. உங்களுக்கு ஒரு கொழந்த கட்டாயம்
பொறக்கும்னு சொன்னாரு.' அடித்துக் கூறினாள் சுந்தரி.
சந்திரனுக்குக் குழந்தை இல்லாததை அங்குப் பணியாற்றுபவர்கள் மூலம் அறிந்து வைத்திருந்தாள் அவள்.
இப்போதெல்லாம் சந்திரனைச் 'சார்' போட்டு அழைப்பதை விட்டுவிட்டாள் சுந்தரி. அவர் அவளுக்கு அவ்வளவு
நெருக்கமாகிப் போனதாகக் காட்டிக் கொண்டாள்.
சந்திரன் சிரித்தான். 'அசடே உனக்குத்தான் என்
மேல எவ்வளவு அக்கற! நீ சொல்ற மாதிரி
நடக்க வாய்ப்பே இல்ல.'
'ஏன் அப்படில்லாம் நினைக்கறீங்க.
நான் சொல்றது நிச்சயமா நடக்கத்தான் போவுது. அந்தத் திருப்பதி பாலாஜி மேல சத்தியம். அந்தக்
கிருஷ்ணனே உங்களுக்குக் குழந்தையா வந்து பொறக்கப்போறான்'. - குறி கூறினாள் சுந்தரி.
'சரிதான் போ! உலகமே தலைகீழாப்
புரண்டாத்தான் அப்படி நடக்கும்!'
'ஏங்க இப்படி கொஞ்சங்கூட
நம்பிக்கையே இல்லாம சொல்றீங்க? எல்லாத்துலயும் நம்பிக்கை வெக்கணும்னு நீங்கதானே சொல்வீங்க!'
'நடக்கும்னு தெரிஞ்சா நம்பிக்கை வக்கலாம். எது நடக்காதுன்னு நல்லா
தெரியுமோ அதுபோய் நடக்கும்னு எப்படி நம்பிக்கை வைக்கமுடியும்?'
'நம்பிக்கை வெச்சா நடக்காதுன்னு ஏதாவது இருக்கா?'
'ஒரு சின்ன பையன்
வாலிபனா ஆவான்னு நம்பிக்கை வக்கலாம். ஒரு கிழவன் வாலிபனா
ஆவான்னு நம்பிக்கை வக்க முடியுமா?'
'ஏன் முடியாது? யயாத்திக்
கத உங்களுக்குத் தெரியாதா? சின்ன வயசுல எங்க ஊர் கோயில்ல
நான் கதாகாலட்சேபம் கேட்டிருக்கேன். யயாத்தின்னு ஒரு ராஜா இருந்தானாம்.
அவன் தன் பொன்டாட்டி தெய்வானை
இருக்கறப்ப சன்மிஷ்டைன்னு ஒருத்தியக் காதல்பன்னிக் கல்யாணமும் செஞ்சிக்கிட்டானாம். விஷயம் தெரிஞ்ச தெய்வானையோட அப்பா யயாத்தி கிழவனா போகனும்னு சாபம் கொடுத்துட்டாராம். உடனே யயாத்தி குடுகுடு
கெழவனாயிட்டானாம். 'அய்யோ இந்த உலகத்துல இன்னும்
நான் அனுபவிக்க வேண்டிய இன்பங்கல்லாம் நிறைய இருக்கே! எனக்குச்
சாப விமோசனம் குடுங்க மாமா'ன்னு தன்
மாமனார் கால பிடிச்சுக் கெஞ்சுனானாம்.
மாமனாருக்குப் பாவமா போயிடுச்சாம். என்ன இருந்தாலும் தன்
மருமகனில்லையா? இரக்கப் பட்டாராம். ஆனா கொடுத்த சாபத்த
வாபஸ் வாங்கமுடியாதாம். அதனால வேற ஒரு வழியிருக்கு
அப்படின்னாராம். என்னன்னு கேட்டான் யயாத்தி. உன் புள்ளைங்க யாராச்சும்
அவங்க எளமைய ஒனக்குத் தானமா கொடுத்தாக்கா நீ பழையபடி வாலிபனா
மாறிடலாம். ஆனா தன்னோட எளமைய
யாரு கொடுக்கறாங்களோ அவங்க கிழவனா மாறிடுவாங்க அப்படின்னாராம். ஒடனே யயாத்தி தன்
பிள்ளைங்க கிட்ட கேட்டுக்கிட்டாராம். கடைசிப் புள்ள தன் இளமையத் தகப்பனுக்குத்
தானமாக் கொடுக்க முன்வந்தானாம். யயாத்தியும் பழையபடி வாலிபனா மாறி ரொம்ப காலத்துக்கு
இந்த ஒலகத்த அனுபவிச்சானாம்.'
படிப்பறிவே இல்லாத சுந்தரி எவ்வளவு அழகாக மகாபாரதக் கதையைப் புரிந்துகொண்டு சொல்கிறாள் என்று அவள் அறிவுத்திறத்தை வியந்தான்
சந்திரன். அவள் நம்பிக்கையின் ஆழத்தையும்
அகலத்தையும் அளந்துகண்டான்.
'அதெல்லாம் சரி! ஆம்பளைங்க கிழவனாயிட்டா
எளமையா மாற நெறைய வழியிருக்கு
சுந்தரி. . . ! மாத்தர மருந்தெல்லாம் கூட இருக்கு. . . ஆனா
பொம்பளைங்களுக்கு அப்படி எதுவும் இல்லையே! கடவுளே அவங்களுக்கு எல்லாத்தையும் லிமிட்டாத்தான் கொடுத்திருக்கான்.'
'நீங்க என்ன சொல்றீங்க? ஒன்னும்
புரியலை!'
'அட முண்டமே! (சந்திரனுக்கு
அதீத அன்பு வந்துவிட்டால் அப்படித்தான் கொஞ்சுவான்) ஆம்பளைங்க எத்தன வயசுல வேணும்னாலும் புள்ள பெத்துக்கலாம். ஆனா பொம்பளைங்களுக்கு வயசாயிட்டா
கருமுட்ட உருவாகாம போயிடும். அதெல்லாம் கல்யாணமாகாத உனக்கெங்கே தெரியும்?' லஜ்ஜை இல்லாமல் இத்தகைய விஷயங்களைச் சுந்தரி முன்னர்ச் சமர்ப்பித்தான்.
'நீங்க இப்ப சொல்றதுக்கும் உங்களுக்குக்
கொழந்த பொறக்கும்னு நான் சொன்னதுக்கும் என்னங்க
சம்பந்தம்?' - ஒன்றும் அறியாதவள் போல் கேட்டாள்.
'என்ன சம்பந்தம்?' பெருமூச்செறிந்தான்
சந்திரன். 'எங்க வீட்டம்மாவுக்கு விலக்காறது
நின்னு வருஷக் கணக்காச்சி! அப்புறம் எப்படிக் கொழந்த பொறக்கும்?'
அதிகமான அழுத்தத்தைத் தன்னுள் அழுத்தி வைத்திருக்கும் பிரஷர் குக்கரின் சேப்டி வால்வ் சற்றே உருகிவிட்டால் உள்ளே வெந்து கொண்டிருக்கும் பொருட்களைக் கூரைவரை பீச்சி
அடித்துத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அழுத்தத்தை ஒட்டுமொத்தமாக வெகுஆற்றலுடன் வெளிப்படுத்துவதுபோல சுந்தரி அவன் மனக்கதவின் சேப்டி
வால்வை உருக்கியவுடன் தன்னுள் அழுத்தி வைத்திருந்த செய்திகளைச் சகட்டுமேனிக்கு
வெளியிட்டுவிட்டான் சந்திரன்.
வாயடைத்து நின்றாள் சுந்தரி. இச் செய்தியை அவள்
எதிர்பார்க்கவில்லைதான்.
தனக்கு இன்னும் திருமணமாகவில்லையே, இனித் தன்னை யார் முறையாக மணந்து
கொள்வார்கள் என்று சுந்தரிக்குக் கவலை!
திருமணமான சந்திரனுக்குக் குழந்தை இல்லை என்ற கவலை!
உலகத்தில்தான் ஒவ்வொருவருக்கும் எத்தனை கவலைகள்!
இரவு நெடுநேரம் வரை
சுந்தரிக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். ஐயோ பாவம். எல்லோருக்கும்
நல்லது செய்யும் சந்திரனுக்கு இத்தகைய குறையா? அதனை இனி யாராலும்
போக்கமுடியாதா?
'அவர் ஏன் பேசாமல்
சின்ன பொண்ணாப் பாத்து இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது?' தனக்கு
இரண்டாம் கல்யாணத்தை வெறுத்த சுந்தரி இப்போது சந்திரனுக்கு இரண்டாம் கல்யாணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று உறுதி கொண்டாள்.
இந்த யோசனையை அவருக்குக்
கட்டாயம் சொல்லியே ஆக
வேண்டும்.
(தொடரும்)
No comments:
Post a Comment