Thursday 29 August 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 19


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 19
            ஒருநாள் எதேச்சையாகச் சமையலறைக்குச் சென்றாள் தாட்சாயணி. அங்கே வாசலுக்கு முதுகைக் கொடுத்துக்கொண்டு நின்றிருந்தாள் சுந்தரி. அதனால் தாட்சாயணியின் வருகையை அவள் அறியவில்லை. சுந்தரி ஒரு முழுமாங்காயை ஆர்வத்துடன் காலிசெய்து கொண்டிருந்தாள்.
            ஒரு துண்டைக்கூட தின்னமுடியாமல் பல் கூசச்செய்யும் அந்த மாங்காயைச் சுவைத்துச் சுவைத்துச் சுந்தரி முழுதுமாகத் தின்றதைப் பார்த்துத் திகைத்தாள் தாட்சாயணி. மனத்தில் சந்தேகத் தேள் கொட்டியது.
            நேரே கணவனிடம் சென்றாள். சுந்தரியிடம் தான் கண்ட மாற்றத்தை உரைத்தாள்.
                'அவளப்பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்னு சொன்னீங்களே! இப்ப என்னாயிடிச்சி பாத்தீங்களா? நம்ம கிட்டயே மறைச்சிருக்கா',  பொரிந்தாள்.
            சந்திரன் நிதானித்தான். 'தாட்சும்மா. . . அவ நம்ம வீட்டுக்கு வந்தப்ப எனக்கும் இதப்பத்தி எதுவும் தெரியாது. ஆனா போனவாரம் ஒருநாள் நான் முன்னாடி வந்துட்டேன் இல்ல. அப்ப அவ அழுதுகிட்டே இருந்தா. அவள ஒருத்தன் காதலிச்சு ஏமாத்திட்டானாம். பாவம்! தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொன்னா. நான்தான் ஆறுதல் சொல்லி வெச்சேன்.'
                'அத ஏன் அன்னிக்கே என்கிட்ட  சொல்லல?'
                'சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா அவளப்பத்தி நீ என்ன நெனப்பியோன்னு அவ ரொம்ப பயந்தா. நான் எங்க கரெஸ்பாண்டென்ட் கிட்ட சொல்லி இதுக்கு ஏதாச்சும் ஒரு நல்ல முடிவு எடுக்கனுமுன்னு நெனச்சிட்டிருந்தேன். ஆனா அவரு இப்ப சிங்கப்பூர்ல மக வீட்டுக்குப் போயிருக்காராம். அவரு வந்ததும் இவளை அனுப்பிடலாம்னு நெனச்சிருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடிச்சி' - குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றிப் பொய்களை அடுக்கினான் சந்திரன். வேறு வழியில்லை. இப்பொழுது இதைச் சமாளித்தாக வேண்டும்.
                'எப்படி? இதெல்லாம் மூடி மறைக்கற விஷயமா? ஐயாவுக்குத் தெரியுமாம்! என்கிட்ட மறைச்சுட்டாராம்! ஒன்னு கெடக்க ஒன்னு ஆனா என்னாவறது? என்கிட்ட முதலியேலே சொல்லி இருக்கணும்' - தன் கணவனின் அப்பாவித்தனத்தை நினைத்து நொந்துகொண்டாள் தாட்சாயணி.
                'இன்னும் ரெண்டு வாரம் பொறுத்துக்கோம்மா. கரஸ்பாண்டென்ட் திரும்பி வந்ததும் எல்லாம் சரியாயிடும். நடுவுல நீ ஏதாச்சும் சொல்லப்போக அவ ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணிக்கிட்டா நமக்குத்தான் இடைஞ்சலாப் போயிடும். இந்த விஷயத்த நிதானமாத்தான் செய்யணும்' - அவன் சொற்களில் லேசான அச்சுறுத்தலும் தொனித்தது.
            அதென்ன இரண்டு வாரக் கணக்கு? அதற்குள் என்ன சாதிக்கலாம் என்று சந்திரன் நினைக்கிறான்? இதென்ன, வேண்டுமென்றால் சுமப்பதற்கும் வேண்டா மென்றால் இறக்கிவைத்து விடுவதற்கும் கையில் உள்ள சுமையா?
            ஏதோ ஒரு பேச்சுக்கு வாயில் வந்ததைச் சொன்னான். அம்மட்டில் இரண்டு வாரம் தாக்குப் பிடிக்கலாம்.
                'இதோ பார். அவளக் கண்டுக்காம விட்டுடு. இந்த விஷயம் தெரியும்னு நீ காட்டிக்க வேண்டாம்! எல்லாம் நான் பாத்துக்கறேன்.'
                'ஒரு புள்ளத்தாச்சிய எப்படிங்க வேல வாங்கறது?'
                'எத்தனயோ புள்ளத்தாச்சிப் பொம்பளைங்க சித்தாளா வேலை செய்யில? ஆபிஸ்ல எத்தன கர்ப்பிணிங்க வேல செய்யறாங்க! அவங்கல்லாம் வேலைய விட்டுட்டு வீட்லயா இருக்காங்க? அப்படித்தான் இதுவும்! நீ பேசாம இரு. அவ மெதுமெதுவா வேலைய செய்யட்டும். நீ ஏன் மனசப் போட்டு அலட்டிக்கற?'
            சுந்தரியை உடனடியாக அவள் கர்ப்பத்தைக் காரணம் காட்டித் தாட்சாயணி விரட்டிவிட்டுவிடக் கூடாதே என்று அஞ்சி மனத்துள் உறைந்தான் சந்திரன்.
                'நான் அதுக்குச் சொல்லலைங்க, எப்படிக் கண்ணுக்குத் தெரிஞ்சே ஒரு புள்ளத்தாச்சிய அதச் செய், இதச் செய்யினு வேல செய்யச் சொல்லறது? அது பாவம் இல்லையா?'
                'நாம இப்ப திடீர்னு வெரட்டிவிட்டா அவ எங்க போய் நிப்பா? ஆதரவு இல்லாத ஒரு பொண்ண நிர்க்கதியா விரட்டி விடறதுமட்டும் பாவமில்லையா? அதனால கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். எல்லாம் நல்லபடியா நடக்கும்!' 
சந்திரனின் கருணைக்கு அளவே இல்லையா? - நெகிழ்ந்தாள் தாட்சாயணி.

(தொடரும்)

Tuesday 27 August 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 18


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 18
            சுந்தரியின் நடை உடையும் பேச்சும் பணிவும் தாட்சாயணிக்குப் பிடித்துவிட்டன. சம்பளமும் அவள் அதிகம் எதிர்பார்க்கவில்லை. வேலைக்காரியின் தேவையும் நெருக்கடி கொடுத்தது. 
            தாளாளருக்கு அவள் தெரிந்தவள் என்பதால் அவர்களுக்குப் பயந்து நடந்துகொள்வாள், தப்பு தண்டா செய்யமாட்டாள், திருட மாட்டாள் என்று சந்திரன் அவளைப்பற்றிய கேரக்டர் சர்டிபிகேட் வாசித்தான். மேலும் தங்கள் வீட்டோடு அவள் இருந்துவிடுவதாகக் கூறுவதும் தங்களுக்குச் சாதகமாக உள்ளதாக உரைத்தான். எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் இல்லாத நேரங்களில் வீட்டைச் சுற்றியிருக்கும் காலியிடத்தில் தோட்டத்தை அமைக்குமாறு சொல்லலாம், இப்படி நிறைய வேலைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மனைவிக்கு ஆசை காட்டினான் சந்திரன்.
            அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் பாத்ரூமோடு கூடிய ஒரு சிறிய அறை பயன்படுத்தப்படாமல் இருக்கத்தான் செய்தது. அதை அவளுக்குக் கொடுத்து விடலாம். அங்கிருந்து கீழே இறங்க வெளிப்பகுதியில் மாடிப்படிகள் இருந்தன. எனவே அவர்கள் அலுவலகம் போகும்போது வீட்டைப் பூட்டிக்கொண்டு சென்றுவிடலாம். வீட்டு வேலைநேரம் தவிர மற்ற நேரங்களில் தாட்சாயணியின் பிரைவசி சுதந்திரத்தில் வேலைக்காரியின் குறுக்கிடு இருக்காது என்று உறுதி கூறினான் சந்திரன்.
            சுந்தரியின் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியது.
            சுந்தரி நன்றாகவே வீட்டு வேலைகளைச் செய்தாள்.காலையில் தாட்சாயணி எழுந்திருப்பதற்குள் எழுந்து வாசலைக் கூட்டி அழகழகான கோலங்களை இட்டாள். தாட்சாயணி வாசலைப் பெருக்குவாளே அன்றி எப்பொழுதும் கோலம் போடுவதில்லை. 'கோலம் இல்லாமல் வீடு களை இல்லாம இருக்கு' என்று கூறி முதல்நாளே ஒருபடி கோலமாவு வாங்கிவைத்தாள் சுந்தரி. காலையில் விரைவாகச் சமையல் வேலைகளைக் கச்சிதமாக முடித்தாள். தாட்சாயணி சுவைத்துச் சாப்பிடுமாறு உணவு வகைகளைச் செய்து பரிமாறினாள். சந்திரனும் நன்றாகவே சாப்பிட்டான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
            சந்திரன் வீட்டில் பூஜை அறை என்று எதுவும் இல்லை. கடவுளர் படங்களும் இல்லை. சந்திரனுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பது நாடறிந்த பழைய விஷயமாயிற்றே! கடவுள் இத்தகைய படங்களிலும் உருவங்களிலும் நிறைந்திருக்கிறார் என்ற சித்தாந்தத்தை தாட்சாயணியும்  ஏற்காதவள். எத்தனையோ குணநலன்கள் சந்திரனுக்கும் தாட்சாயணிக்கும் ஒத்துப்போயின. கடவுள் விஷயத்திலும் அதேதான். எல்லா வகையிலும் இருவரும் சரியான ஜோடிதான் என்று சுற்றத்தினராலும் நண்பர்களாலும் பலமுறை பாராட்டப் பெற்றவர்கள். அவர்கள் தீபாவளி போன்ற சமயம் சார்ந்த பண்டிகைகளைக் கூடக் கொண்டாடுவதில்லை. அதற்காகத் தங்களைப் பகுத்தறிவுப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று பறைசாற்றிக் கொண்டதும் இல்லை.
            சந்திரனும் தாட்சாயணியும் கிளம்பும்போதே சுந்தரியும் வெளியே கிளம்பிவிடுவாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்கு வேண்டிக் கொண்டதாக உரைப்பாள்.
            ஒருநாள் கோயிலில் மண்சோறு உண்டதாகக் கூறுவாள். அது தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் நலனுக்காக என்று சந்திரனுக்கு மட்டும் உரைப்பாள்.
            ஒரு நாள் சுமங்கலிப் பூஜை செய்யப் போவதாகக் கூறுவாள். அது சந்திரனின் ஆயுளுக்காக என்று அவனிடம் கண் ஜாடை காட்டுவாள்.
            இப்படி வாரம் முழுக்கச் சந்திரனுக்காகவும் அவன் குழந்தைக்காகவும் சுற்றியுள்ள கோயில்களை எல்லாம் ஏறி இறங்கினாள்.
            மாவு விளக்கு ஏற்றினாள்.
            எலுமிச்சை விளக்கு ஏற்றினாள்.
            அம்பிகைக்குப் புடவை சாற்றினாள்.
            நூற்றிஎட்டு குடம் தண்ணீர் ஊற்றி லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தாள்.
            கோயிலின் பிரகாரத்தில் அடிஅடியாக நடந்து அடிப்பூஜை ஆற்றினாள்.
            நவக்கிரகத்தை நாள் தவறாமல் சுற்றிவந்தாள்.
            சனி, ஞாயிறு தினங்களில் வேலைகளை எல்லாம் காலையிலேயே முடித்துவிட்டு பேருந்து ஏறிச்செல்ல வேண்டிய தூரத்தில் இருக்கும் கோயில்களையும் விசிட் செய்தாள்.
            பெருமாள், சிவன், அம்பிகை, முருகன், விநாயகர் என்று எந்தக் கடவுளையும் அவள் விட்டுவைக்கவில்லை.
            பெரிய கோயில், சிறிய கோயில், வழிக்கரை அம்மன், ஏழை மாரியம்மன், தெருமுனைப் பிள்ளையார் என்று எல்லாத் தரத்தில் அமைந்த பெரிய, சிறிய, மூலை முடுக்குக் கோயில்களிலும் பிரார்த்தனை செய்தாள்.
            ஒருநாள் உச்சிக்காலப் பூஜை செய்தாள்.
            ஒருநாள் ராகுகாலப் பூஜை செய்தாள்.
            ஒருநாள் கடை ஜாமப் பூஜை செய்தாள்.
            சர்ச், தர்கா என்று பிற மதத்துக் கோயில்களையும் அவள் பாக்கி வைக்கவில்லை.
            சுந்தரியின் கடவுள் பக்தி நாத்திகவாதியான(?) சந்திரனை மெய் சிலிர்க்க வைத்தது.
            வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு இப்படித் தனக்காக வருத்திக் கொள்கிறாளே என்று உள்ளம் கசிந்தான் சந்திரன்.
            தினமும் தாட்சாயணியிடம் விபூதி குங்குமம் கொடுப்பாள். சுந்தரியின் மனம் கோணவேண்டாம் என்று தாட்சாயணியும் விரலில் பட்டும்படாமல் தொட்டு இட்டுக் கொள்வாள்.
                'உன்ன இப்படி நிர்க்கதியா விட்ட அந்த ஆண்டவன் கிட்ட அப்படி என்னதான் வேண்டிக்கற?'  என்று பரிகசித்தாள் தாட்சாயணி.
                'அப்படிச் சொல்லாதீங்கம்மா! கடவுள் என்னை ஒன்னும் நிர்க்கதியா விடல. தெய்வம்போல உங்க ரெண்டுபேரையும் என் கண்ணுக்குக் காட்டலையா? கடவுள் எப்பவும் நேர்ல வந்து உதவிசெய்யாது. யார் மூலமாவதுதான் உதவி செய்யும். உங்க பேரே  அம்பிகையோட பேராச்சே!'  - புகழ் போதையைத் தாட்சாயணியின் தலையில் ஏற்றினாள்.
                'நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கனுமன்னுதான் நான் தெனமும் வேண்டிக்கறேன். அதவிட வேறென்ன வேண்டுதல் எனக்கு இருக்க முடியும்?'
                'கடவுள் இருக்கோ? இல்லையோ? ஆனா உன் வேண்டுதல் பலிக்கட்டும்னு நான் மனசார சொல்றேன்!' - சுந்தரியின் உள்மன வேண்டுதலை அறியாமல் தாட்சாயணி பரிந்துபேசினாள்.
            இரண்டு மாதங்கள் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் உருண்டன.
            சுந்தரியின் உடலில் சில மாறுதல்கள் தோன்றுவதை தாட்சாயணி கவனித்தாள். இப்பொழுதெல்லாம் அவள் அதிகாலையில் எழுவதில்லை. காரணம் கேட்டால், 'ராத்திரி எல்லாம் தூக்கமே வரலைம்மா, அதனால காலைல தூங்கிட்டேன். மன்னிச்சுடும்மா, இதோ ஒரு நொடில வேலயெல்லாம் முடிச்சுடுவேன்' என்பாள்.
                'எனக்கு ரொம்ப நாளா லோ பி பி இருக்கும்மா, அதனால தலை சுத்துது' என்று காரணம் காட்டினாள்.
            மாலை தாட்சாயணி வீடு திரும்பும்போதும் சுந்தரி நல்ல தூக்கத்தில் இருப்பதைக் கண்ணுற்றாள்.
            இப்போதெல்லாம் சுந்தரி செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பு இல்லை. எப்பொழுதும் மந்தமாக இருந்தாள். தாட்சாயணி ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால் சுந்தரியின் தோற்றத்தை வைத்தே உண்மையை யூகித்திருப்பாள். ஆனால் அவளுக்கு இதெல்லாம் புதியது.
(தொடரும்)

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 17


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 17
            ஒரு திங்கட்கிழமை நாளில் சுந்தரியின் முகம் வீங்கியிருந்தது. யாரோ அடித்திருக்க வேண்டும். நெற்றியில் சிறியதாகப் பிளாஸ்திரி போட்டிருந்தாள்.
            சந்திரன் அன்போடு விசாரித்தான்.
                'ஆபீஸ் நாள்ல இங்க எப்படியோ ஓட்டிட்டு, வீட்டுக்குப் போனதும் ஆபீஸ்ல அநியாயமா வேலைன்னு சொல்லிட்டு தலைவலிக்கிறமாதிரி பாவலா பண்ணிட்டுப் படுத்துக்கலாம். சனி, ஞாயிறுன்னா பாழாப் போன லீவு வந்துடுதே. வீட்ட வுட்டுட்டு எங்கயும் போவ முடியாது. இந்த வாந்தி வேற அடிக்கடி வந்து காட்டிக்கொடுத்துடுச்சி. என் அண்ணி அடுத்தவீட்டுப் பாட்டியக் கூப்டாந்து என் நாடிய பாக்கச்சொன்னா.  நான் உண்டாயிருப்பது தெரிஞ்சிபோச்சி. என் அண்ணன் அண்ணி பேச்சக் கேட்டுட்டு அடிஅடின்னு அடிச்சிட்டான். ஆனா நான் ஒங்களப் பத்தி மூச்சு விடலயே! ஆனா இனிமே என்னால அந்த வூட்டுக்குப் போவமுடியாது சாமி!  என்ன உயிரோட கொளுத்திடுவாங்க. இல்லைன்னா நைசா வெஷம் கொடுத்துக் கொன்னுடுவாங்க. நான் எனக்காக யோசிக்கல. கடவுள் கொடுத்த பிரசாதத்தை நான் சொமந்து கிட்டிருக்கேன். அதுக்குத்தான் பயப்படறேன். நான் எங்கயாச்சும் கண்காணாத எடத்துக்குப்போயி நாலு வீட்ல பத்துப்பாத்திரம் தேச்சாவது உங்க புள்ளைய - அந்தக் கடவுளப் பெத்துடுவேன். என் கடமைய பன்னிட்டேன்னா நான் கடவுளேன்னு கண்ணை முடிடுவேன். கடைசி கடைசியா உங்களப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்' - அழுதுகொண்டே சொன்னாள். மூக்கில் நீர் கோர்த்துக் கொண்டது.
            அவள் கண்ணீரைத் தாங்கும் சக்தி சந்திரனுக்கு இல்லை.
            வீட்டு வேலைக்காரி செல்லாயி ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை என்று தன் மனைவி அன்றாடம் புகார் கூறியவண்ணம் இருந்தாள். கடந்த மூன்று நாட்களாக எந்தவித அறிவிப்பும் இன்றி அவள் விடுப்பும் எடுத்துவிட்டாள்.
            பணிக்குப் போகும் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய ஆளில்லாமல் எப்படிச் சமாளிக்க முடியும்?
            சந்திரனுக்கு யோசனை உதித்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! தன் வீட்டைவிட பத்திரமான இடம் சுந்தரிக்கு வாய்க்காது. தன் கண்காணிப்பிலும் இருக்கலாம்.
                'சுந்தரி. . . ,  நீ ஏன் அடுத்தவங்க வீட்ல பத்துப்பாத்திரம் தேய்க்கனும்? என் வீட்ல மகாராணியா வெச்சுத் தாங்கறேன். ஆனா அதுக்கெல்லாம் நாளாகும். இப்ப எங்க வீட்ல வேலைக்காரியா கொஞ்சநாள் நடி, அப்பறம் எல்லாத்தையும் சரி பண்ணிறலாம்!' ஒரு நடிகைக்கே நடிப்புச் சொல்லிக்கொடுத்தான்.
                'நீங்க இப்படிச் சொல்றதே எனக்குச் சந்தோஷமா இருக்குங்க. நான் உங்க வீட்டுக்கு மகாராணியா ஆக என்னைக்கும் ஆசைப்பட மாட்டேங்க. உங்க வீட்ல வேலைக்காரியா எல்லா வேலையும் செஞ்சுகிட்டு, வீட்டைப் பத்திரமா பாத்துகிட்டு ஒரு மூலைல இருந்துக்கறேன். என் கடவுளான உங்களயும் நான் தூரத்துல நின்னு பாத்து ரசிப்பேன். உங்களுக்குப் பணிவிடை பண்ற பாக்கியமும் எனக்குக் கெடைக்கும். அதத் தவிர எனக்கு வேறு என்னங்க வேணும்? அதுவும் உங்கக் கொழந்த பத்திரமா பொறக்கனுமேன்னுதான். இல்லைன்னா இந்த உசுர வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணப்போறேன்?'
            சுந்தரியின் ஒவ்வொரு சொல்லும் அவன் மனத்தைப்  பிசைந்தன.
            அவளிடம் தன் வீட்டிற்கு வரவேண்டிய வழியை உரைத்தான். தானே அழைத்துச்சென்றால் சிக்கலாகி விடும்.
            தன் மனைவி அவளைப் பள்ளியில் பார்த்ததை நினைவில் வைத்திருந்தால்?
            தன் மனைவி ஒருவரைப் பலமுறை பார்த்தாலும் மறந்துவிடும் பேர்வழி. யாரையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டாள். அப்படிப்பட்டவள் ஒரே ஒருமுறை அதுவும் விழாக் கூட்டத்தில் பார்த்ததையா நினைவில் வைத்திருக்கப் போகிறாள்? - தன்னைச் சமாதானம் செய்துகொண்டான் சந்திரன்.
            அவர்கள் திட்டமிட்டபடியே நடந்தது. சந்திரன் வீட்டிற்குப் போனதும் புதிய வேலைக்காரி வரவிருப்பதை அறிவித்தான்.
                'தாட்சு . . . !  வர பொண்ணைப் பாரு. உனக்குப் பிடிச்சா வேலைக்கு வெச்சுக்கோ, இல்லைன்னா தயவு தாட்சண்யம் பாக்காதே, போய்ட்டு வாம்மான்னு  அனுப்பிடு. வேற ஆளப் பாத்துக்கலாம். நமக்கு அவளவிட்டா வேற ஆளா கிடைக்காது?' அழகாகவே சூழலை வடிவமைத்தான் சந்திரன்.



(தொடரும்)