Sunday 18 August 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 13


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 13
            சுந்தரி பொறுத்திருந்து பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.
            இன்றே கடைசி என்று சலனப்பட்ட மக்களின் மனத்தைச் சற்றே அசைத்துப் பார்ப்பான் லாட்டரிச் சீட்டு விற்பனையாளன். 'சார் ரெண்டே ரெண்டு சீட்டுதான் இருக்கு சார். ஒரு சீட்டு அம்பது ரூபா சார், பரிசு கெடச்சா ஒரு கோடி சார். சீட்டு எல்லாமே வித்துப் போச்சு சார். இது லக்கி நம்பர் சார். இந்தக் காம்பினேஷன் லேசுல கெடைக்காது. நான் யாருக்கும் விக்காம எனக்குன்னு எடுத்துவெச்சேன் சார். இப்பக்கூட தர்றதுக்கு எனக்கு இஷ்டம் இல்லே. வீட்டுல ஒரு பிடி அரிசி இல்ல. அதனாலதான் கொடுக்கறேன் சார்!' என்று கிடுக்கிப்பிடி போடுவான்.
            ஒரே நாளில் தான் செல்வந்தனாகிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருப்பவன் அவன் சொல்வதை எல்லாம் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு அன்று உழைத்துப் பெற்ற தன் வியர்வை மணம்வீசும் நூறு ரூபாயைக் கைமாற்றுவான். லாட்டரிச் சீட்டு விற்றவனின் வீட்டில் உலை கொதிக்கும். வாங்கியவனின் வீட்டில் உணவு இல்லாமல் எல்லோரின் வயிறும் எரியும். அதைப் போன்று சுந்தரியும் ஒரு பலம் மிக்க மந்திரத்தைப் பிரயோகித்தாள்.
                'இதோ பாருங்க. கடவுள் மேல ஆணை! யாருக்கும் உதவாம இந்த உசுர வச்சிக்கிட்டு இனி நான் என்ன பண்ணப் போறேன்? சோத்துக்குத் தண்டம்; பூமிக்கு பாரம்னு வாழ நான் பிரியப்படல. கடவுளே சொல்ற வாக்கை நீங்களும் உதாசீனப் படுத்துறீங்க! அதுக்குக் கடவுள் உங்கள தண்டிச்சிடுவாரோன்னு எனக்குப் பயமா இருக்கு. உங்களுக்கு ஏதாச்சும் நடந்ததுன்னா அதப் பாத்துக்கிட்டு என்னால உசுரோட இருக்க முடியாது!'
                'உங்களுக்காகவே கடவுள் என்னக் கன்னியா இத்தனை வருஷம் வச்சிருக்கார். என் கன்னித்தன்மையப் போக்கி கட்டாயமா ஒரு கொழந்தய உங்களுக்காகச் சுமந்து நான் தியாகம் பண்ணியே ஆகனும்' - ஏதோ உலகம் உய்யவரும் ஒரு யுகப் புருஷனை, இறைத் தூதுவனை அவள் சுமக்கப்போவதுபோலவும் அவள் பெறும் குழந்தை இந்த உலகத்தின் பாவங்களை எல்லாம் தீர்க்க அவதரிக்க இருப்பதுபோலவும் ஒரு மாயையைத் தோற்றுவித்து அதில் அவனை நிலைகுலையச் செய்தாள்.
                'நான் பொண்ணா இருந்துகிட்டு இவ்வளவு தூரம் வெக்கத்த விட்டுச் சொல்றேன். நாளைக்குத்தான் கடைசி நாள்! ஒன்னு . . . நான் சொமக்க ஒரு கொழந்தயக் கொடுங்க. இல்லன்னா. . . எனக்கு ஒரு மால வாங்கி வைங்க! சாயந்தரம் வெஷத்தக் குடிச்சிட்டு இந்த ரூம்லயே நான் உசுர விட்டுடறேன்!' - தீர்மானமாக உரைத்தாள் சுந்தரி.
            தினம் தினம் அவள் கரைத்த கரைப்பில் பாகாய்க் கரைந்துபோயிருந்தான் சந்திரன். இனி அவனால் அந்தக் காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து நிற்க முடியாது. அவனுக்காகவே வாழ்வதாகக் கூறுகிறாள். இல்லை என்றால் மடிகிறேன் என்கிறாள். செய்கிறேன் அல்லது செத்து மடிகிறேன் என்று கூறும் இவளைச் சாக விட்டுவிட முடியுமா?
            முன்பெல்லாம் அவனுக்குக் கடவுள் பக்தி ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை. கோயிலுக்குப் போவதையோ, கடவுளைக் கும்பிடுவதையோ முக்கியமானதாக அவன் எப்போதும் நினைத்ததில்லை. நண்பர்களோடு காரில் செல்லும்போது அவர்கள் வழியில் இருக்கும் கோயிலில் வழிபாடு நடத்தும் போதும் இவன் காரிலேயே அமர்ந்திருப்பான்.
            அப்படிப்பட்டவனுக்குக் கடவுளின் பெயரால் இலட்சம் முறை தன் காதில் ஓதப்பட்ட சொற்கள் வலிமையோடு அவன் நெஞ்சை முட்டிமோதின.
            சுந்தரி தன் வாழ்வில் குறுக்கிட்டது நிச்சயமாகத் தெய்வச் செயலாகத்தான் இருக்கவேண்டும் - உள்ளுணர்வு ஊகம் சொன்னது.
            உலகளாவிய நிலையில் இல்லாமல் ஒரு சமுதாயத்திற்கு மட்டுமே உரியதாகக் காணப்படும் நம்பிக்கைகளையே நாம் மூட நம்பிக்கைகள் என்கிறோம். ஒருசிலர் அறிவுக்கண்கொண்டு சிந்தித்துச் சிந்துத்துத் தம் உள்ளத்திலிருந்து இத்தகைய மூட நம்பிக்கைகளைச் சிறிது சிறிதாக வெளியேற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வில் ஏதேனும் துன்பமோ எதிர்பாராத திருப்பங்களோ நிகழும்போது தன்னம்பிக்கை இழக்கும் ஒரு சூழலில் விழும் சிறு ஓட்டை வழியாக மீண்டும் அந்த மூட நம்பிக்கைகள் நுழைந்து, பழையபடி அவர்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அதனால்தான் இந் நம்பிக்கைகள் காலங்காலமாகச் சமுதாயத்திலிருந்து ஒழிக்கப்படாமல் இருக்கின்றன.
            அன்றிரவு சுந்தரியின் கனவில் கடவுள் வரவில்லை.
            அக்கடவுள் சந்திரனின் கனவில் வந்தார்!

(தொடரும்)

No comments:

Post a Comment