முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 20
சந்திரன் சொன்ன இரண்டு வாரக் கெடு முடியவில்லை. ஒரு
வாரம் மட்டுமே நகர்ந்திருந்தது.
வெள்ளிக்கிழமை. அரசாங்க அலுவலகங்களில் வெள்ளிக்கிழமைகளில் முழு நேரமும் யார்
வேலை செய்கிறார்கள்?
திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மதுரை என்று பல இடங்களிலிருந்தும் சென்னைக்கு வந்து
வேலை பார்க்கிறார்கள். வெள்ளிக்கிழமை காலை முதலே வீட்டுக்குத்
திரும்பி ஒரு வாரம் பிரிந்திருந்த
தன் மனைவி மக்களை எப்போது காணப் போகிறோம் என்று அவர்கள் மனத்தில் அரிப்பு எடுக்கிறது.
மதிய உணவு இடைவேளை
வரும்போதே இப்படித் தொலை தூரத்திலிருந்துவந்து வேலை பார்ப்பவர்கள்
ஒருவரை ஒருவர் பார்த்து, 'எப்போது கிளம்பப் போகிறீர்கள்?' 'ஊருக்குக் கிளம்ப உங்களுக்கு அனுமதி கிடைத்துவிட்டதா?" என்றெல்லாம் பார்வையால் வினவிக் கொள்கின்றனர்.
மேலதிகாரிகள் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களிடம் தலையைச் சொரிந்துகொண்டு நிற்பார்கள். அவர்களும் 'சரி சரி கிளம்புங்க,
பாக்கி வேலைய திங்கக்கெழம வந்து முடிச்சிக் கொடுத்துடுங்க' என்று ஆதரவாகக் கூறுவர்.
தாட்சாயணியின் செக்ஷனிலும் முக்கால் வாசிப்பேர் இப்படிப்பட்டவர்கள். எனவே ஒவ்வொருவராகத் தாங்கள்
காலையில் கொணர்ந்த மூட்டை முடிச்சுகளுடன் மெல்ல நழுவிவிட்டனர். முக்கால்வாசி இருக்கைகள் வெறிச்சோடிக் கிடந்தன. தாட்சாயணி தன் வேலைநேரம் முடியாமல்
ஐந்து மணி முப்பது நிமிடங்களுக்கு
முன்னதாக எப்போதும் தன் வீட்டைப் பற்றி
நினைத்தது இல்லை.
ஆனால் இன்று சுந்தரியின்
நினைப்பு வந்தது.
தனக்குக் குழந்தையைக் கொடுக்காமல் இயற்கை சதிசெய்துவிட்டது. ஆனால் சுந்தரிக்குக் குழந்தையைக் கொடுத்துச் சதிசெய்து விட்டது. அப்படிப் பார்த்தால் இருவரும் பாவம்தான்!
காலையில் சுந்தரி சோர்வாகக் காணப்பட்டாள். சந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க, சுந்தரியின் நிலை பற்றித் தனக்குத்
தெரியும் என்று இன்றுவரை சுந்தரியிடம் தாட்சாயணி காட்டிக் கொள்ளவில்லை. இதனால் சுந்தரிக்குத் தன்னால் வெளிப்படையாக எந்தவித உதவியும் செய்ய இயலாது போகிறது. இவ்விஷயம் தனக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சுந்தரி முயற்சி செய்கிறாள் போலும். அய்யோ
பாவம்!
'இனி அலுவலத்தில் செய்யவேண்டிய
எந்த வேலையும் இல்லை. கொஞ்சம் முன்னதாகக் கிளம்பினால் சுந்தரிக்கு உபகாரமாக இருக்கும். அவளை அருகிலிருக்கும் டாக்டரிடம்
அழைத்துச்சென்று காட்டினால் என்ன?'
என்றுமில்லாத அதிசயமாய் அவள் சீக்கிரமாகக் கிளம்புவதைச்
சிலர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
தாட்சாயணி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி மூன்று. ஒரு
ஆட்டோ பிடித்தால் முக்கால்மணி நேரத்தில் சென்றுவிடலாம். இந்தச் சமயத்தில் பேருந்தை எதிர்பார்க்க முடியாது.
வீட்டை அடைந்தவளுக்கு வீடு திறந்துகிடப்பது கண்ணில்
பட்டது. எப்பொழுதும் தாட்சாயணிதான் காலையில் வீட்டைப் பூட்டிக்கொண்டு செல்வாள். மாலையிலும் அவள்தான் முன்னதாக வருவாள். சந்திரனிடம் ஒரு சாவி இருந்தாலும்
அவன் எப்பொழுதும் நேரம் கழித்துதான் வருவான்.
சுந்தரிக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?
யோசனையோடு வெளிக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே மெதுவாகப் பிரவேசித்தாள். வீட்டுக் கதவும் திறந்தே கிடந்தது. நேராக உள்ளே சென்றவளுக்குத் தங்களுடைய படுக்கைஅறை திறந்து கிடப்பது தெரிந்தது. அவள் வேலைக்குச் செல்லும்
போது பூட்டிவிட்டுத்தான் செல்வாள்.
ஏன் இப்படிக் கதவெல்லாம்
திறந்து கிடக்கின்றன?
முன்னால் இரண்டடி எடுத்துவைத்தவளுக்கு நெஞ்சம் பதறியது.
படுக்கையில் சந்திரன் அமர்ந்திருந்தான். அவன் மடியில் சுந்தரி
தலைவைத்துப் படுத்திருந்தாள். அவன் தன் கை
விரல்களால் அவள் கூந்தலை மெதுவாகக்
கோதிக் கொண்டிருந்தான். அவன் முகம் அவளுடைய
முகத்தோடு உரசிக்கொண்டிருந்தது.
தாட்சாயணி பத்தடி தூரத்தில் நிற்பதை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.
தாட்சாயணியின் கை கால்கள் நடுங்கின.
வெலவெலத்து நின்றாள். மயக்கம் வந்துவிடும்போன்று இருந்தது.
இது என்ன நாடகம்?
இது என்ன விபரீதம்?
தனக்கே தனக்கென இருக்கும் சந்திரனின் மடியில் இப்பொழுது சுந்தரியா? அவளால் தாங்க முடியவில்லை. விழுந்துவிடாமல் இருக்கத் தலையைப் பிடித்துக் கொண்டாள். கீழே விழுவதுபோல் அமர்ந்தாள்.
அது அவள் வாழ்க்கையில்
கண்ட முதற் சரிவு.
அவள் கீழே அமர்ந்த
வேகத்தில் ஹாண்ட்பேக் தரையில் மோதி சிறுஒலி எழுப்பியது.
சந்திரன் நிமிர்ந்து பார்த்தான்.
சிவபெருமான் நெற்றிக் கண்ணில் தோன்றிய அக்கினிப் பார்வையோடு தாட்சாயணி. அதன் வெப்பத்தைச் சந்திரனால்
தாங்கமுடியவில்லை.
சந்திரன் தன்னை ஆதரவாகத் தடவிக் கொடுக்காமல் இருந்த மௌனத்தின் அசாதாரணத்தை உணர்ந்து அரைத்தூக்கத்தில் கண்மூடிக் கிடந்த சுந்தரி விழித்தாள். நிலைமையின் புரிதல் நொடியில் நிகழ்ந்தது. விசுக்கென்று எழுந்தாள்.
'என்னை இருவரும் இப்படி நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டீர்களே! பாவிகளே!' - தாட்சாயணியின் நெஞ்சு கொதித்தது. வார்த்தைகள் வெளியே வராமல் உள்ளே புதைந்தன.
தாட்சாயணியின் கைகளைப் பற்றினான் சந்திரன். தாட்சாயணி அவற்றைத் தட்டி விட்டாள்.
நேரே மொட்டை மாடிக்கு
ஓடினாள். விழுந்து தற்கொலை செய்துகொள்வதற்காக!
தொடர்ந்து சந்திரனும் ஓடினான். அவளை எட்டிப் பிடித்தான்.
'நீ செத்துப்போறாதா இருந்தா
தாராளமா செத்துப்போ! நீ செத்தப்பறம் நான்
மட்டுமென்ன உயிரோடா இருக்கப்போறேன்? நானும் இதோ வரேன் ரெண்டுபேரும்
கையப் பிடிச்சுக்கிட்டு கீழே குதிச்சுடுவோம்!'
எந்த மனைவிதான் தன்
கணவன் இறப்பைத் தாங்கிக் கொள்வாள். அவன் எப்படிப்பட்ட அயோக்கியனாக
இருந்தால்கூட?
அவர்களைத் தொடர்ந்து சுந்தரியும் ஓடிவந்தாள். 'நான்தான் பாவி! நான்தான் மொதல்ல சாகணும்! நான் முதல்ல செத்துப்போறேன்!'
என்று மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் வேகமாக ஏறினாள். கைதேர்ந்த நடிப்பு!
தாட்சாயணிக்கு இப்போது சுந்தரியைக் காப்பது முக்கிய வேலையாகிப் போய்விட்டது.
தாட்சாயணியும் சந்திரனும் சுந்தரியைப் பிடித்து இழுத்தனர். சுந்தரி தற்கொலை செய்துகொண்டே தீர்வேன் என்று முரண்டு பிடித்தாள். ஒருவழியாக அவளை இழுத்துக்கொண்டு ஹாலுக்கு
வந்தனர்.
சுந்தரி தாட்சாயணியின் காலைப் பிடித்துக்கொண்டு தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். சந்திரன் அழுது புலம்பினான். தாட்சாயணியிடம் தன்னைக் கொன்று விடுமாறு கூறினான்.
இருவரும் சேர்ந்து தாட்சாயணியின் இதயத்தை நார் நாராகக் கிழித்தனர்.
சந்திரன் தாட்சாயணியின் பொருட்டே ஒரு குழந்தையைப் பெற்று
அவளுக்குப் பரிசாகத் தரக் கருதியதை எடுத்துரைத்தான்.
அவன் சொல்வன்மை நன்றாகவே கைகொடுத்தது.
குழந்தை பிறந்ததும் அவர்கள் இருவரின் வாழ்க்கையில் தான் தலையிடாமல் இறந்து
விடுவதாகக் கையடித்துச் சத்தியம் செய்தாள் சுந்தரி.
அன்று இரவு மூவரும்
தூங்கவில்லை, உண்ணவில்லை, நீர் கூட அருந்தவில்லை.
(தொடரும்)
No comments:
Post a Comment