Friday, 13 September 2019

சொர்க்கத்தில் நவபாரதம் - காட்சி 9


சொர்க்கத்தில் நவபாரதம்
                                                                        காட்சி  9

நிகழிடம் : விருந்து மண்டபத்திலிருந்து கவிஞர்களின் மாளிகைகளுக்குச் செல்லும் வழி               
நிகழ்த்துவோர்        : வால்மீகி, திருவள்ளுவர், கம்பர், பாரதியார், நாரதர்.
***
                ஆறு கிடந்ததுபோல் அகன்ற நெடுந்தெருக்கள். குண்டு குழிகளின்றி குப்பைகளின்றி வெண்மணல் பரந்த பளிச்சென்ற பளிங்குபோன்ற தரை. இருபுறமும் பச்சைப் பசேல் என்றிருந்த புல்தரைப் பரப்பு.  ஒருபுறம் மயில்கள் தோகைகளை விரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன.  மறுபுறம் பிணைமான்கள் கலைமான்களோடு ஊடிக் கொண்டிருக்கின்றன.  வேட்டையாடுவோர் இன்மையால் பருத்து நீண்ட வெண்மையான தந்தங்களோடு களிறுகள் செம்மாந்து திரிந்து கொண்டிருக்கின்றன. அருகே புலிகளும் சிங்கங்களும் தாம் ஈன்ற புனிற்றிளங் குட்டிகளுக்குப் பால்அருத்திக் கொண்டிருக்கின்றன.  இது காடா? அல்லது நாடா? என்று இனம்பிரிக்க முடியாத மயக்கத்தில் விண்மீன்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன.
***
வால்மீகி : கவிச்சக்கரவர்த்திகளே! நிறைவாகச் சாப்பிட்டீரா?

கம்பர் : வால்மீகி அவர்களே! நீங்கள்போய் என்னைக் கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கிறீர்களே?

வால்மீகி : உலகமே அழைக்கும்போது நான் அழைக்கக் கூடாதா?

கம்பர் : அதற்குக் காரணமே தாங்கள்தாம்.  உங்கள் படைப்பை அல்லவா நான் தமிழில் ஆக்கினேன்.  அதனால் எல்லாப் பெருமையும் உமக்குத்தான்.

வால்மீகி : அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.  மாவு என்னுடையதாக இருந்தாலும் அதை சுவைநிறைந்தஅதிரசமாகச் சமைத்தது உங்கள் கைப்பக்குவம்தான்! நான் இயற்றிய இராமாயணத்தைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பாக அதை நீங்கள் படைத்துவிட்டீர்கள். அதனால் கவிச்சக்கரவர்த்தி என்ற பெருமை உமக்கு மட்டுமே உரியது.

கம்பர் : என்னே பெரிய மனது உமக்கு?  இப்படிப் பாராட்டும் மனம் யாருக்கு வரும்?  நன்றி பெருமானே!  நீங்கள் கேட்ட வினாவிற்கு நான் இன்னும் பதில் கூறவில்லை. மன்னிக்கவும்!  நின்றுகொண்டே சாப்பிட்டதால் எனக்குச் சாப்பிட்டதுபோல் நிறைவில்லை. அவ்வாறு சாப்பிடுவதற்கு ஏதோ பெயர் சொன்னார்களே?

பாரதி : அதன் பெயர்புப்ஃபே’!

வால்மீகி : இதற்குத்தான் பிற மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும் என்பது.  கேட்ட உடனே சட்டென்று சொல்லிவிட்டீர்களே!

கம்பர் : தலைவாழை இலை போட்டு சுற்றிலும் நான்குவகை பதார்த்தங்கள் வைத்து மா, பலா, வாழை என முக்கனிகளோடு உண்ணும் முறைக்கு இது ஈடாகுமா? தங்கத் தட்டிலேயே இன்று நமக்கு உணவு படைத்தும்கூட அது ஒன்றும் எனக்குச் சிறப்பாகத் தோன்றவில்லை.  அக்காலத்தில் நான் சோழனது அரண்மனையில் உணவு அருந்தியது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

வால்மீகி : அது மட்டுமில்லை கவிச் சக்கரவர்த்திகளே! சில உணவு வகைகள் எனக்குப் பிடித்திருந்தும் நானே எடுத்து வைத்துக் கொள்ள மிகவும் கூச்சமாக இருந்தது.  அதனால் ஆசையை அடக்கிக்கொண்டு நான் வந்துவிட்டேன்.

பாரதி : கேட்கவே நகைப்பாக இருக்கிறது.  விரும்பிய உணவை விரும்பிய அளவில் உண்ணத்தான் இந்த முறையையே ஏற்படுத்தி வைத்தார்கள்.  இதற்குப்போய் நாணப்பட என்ன அவசியம் இருக்கிறது?

வால்மீகி : என்ன இருந்தாலும் நீர் தைரியசாலி,  உங்களுக்கு மட்டும்தான் இந்த முறை பொருந்தும். உங்களுக்காகவென்றே சிவன் இந்த முறையை இன்று கைக்கொண்டிருக்க வேண்டும். சிவனுக்கும் அப்படிச் சாப்பிட்டுத் தானே பழக்கம்!  வீடுவீடாகக் கையேந்தி உண்டவன்தானே அவன்!

வள்ளுவர் : எதைச்செய்தாலும் குற்றம் கண்டு பிடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறீர்கள். ஆனால் உண்மையில் இவ்வாறு நின்று கொண்டும் நடந்துகொண்டும் பேசிக்கொண்டும் சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடானது; அமர்ந்து சாப்பிடுவதே சிறந்தது என்று என் நண்பர் பெருவாயின் முள்ளியார் தாம் இயற்றியஆசாரக்கோவைஎன்ற நூலில் கூறியுள்ளார்.

கம்பர் : நானும் படித்திருக்கிறேன் வள்ளுவரே, சங்க இலக்கியங்கள் வாழ்வுச் சித்திரங்கள் என்றால் பதினெண் கீழ்க்கணக்கின் நீதி இலக்கியங்கள் அறிவுப் பெட்டகங்கள். சரி பாரதியாரே, உணவு பற்றி நீர் ஒன்றும் சொல்லவில்லையே? உணவு எப்படி? ஒரு பிடி பிடித்தீரா?

பாரதி : உணவு பிடித்திருந்தால்தானே ஒரு பிடி பிடிக்க?

வள்ளுவர் : ஏன்  இப்படிச் சொல்கிறீர்?

பாரதி : உணவில் ஏகப்பட்ட மசாலா வாசனை!  ஏதோ புது விதமாகச் சமைப்பதாகக் கூறிக்கொண்டு சுவைக்கொலை செய்து விட்டார்கள்.

கம்பர் : முதலில் கலைக்கொலை! அடுத்தது சுவைக்கொலை! அப்படித்தானே?

பாரதி : ஆமாம் ஆமாம் சக்கரவர்த்திகளே!  எந்த உணவை எடுத்தாலும் இனிப்புச் சுவையும் இருக்கிறது; புளிப்புச் சுவையும் இருக்கிறது; அதே நேரம் காரமாகவும் இருக்கிறது.  இதில் பல்வேறு செயற்கை நிறங்கள் வேறு.

கம்பர் : நளனது கைப்பக்குவத்தில்  உணவு வகைகள் நன்றாக மணமாகத்தானே இருந்தன?

வள்ளுவர் : உணவு மணமாகவும் சுவையாகவும் இருந்தால் மட்டும் போதாது.  உடலுக்கு நலம் பயப்பதாகவும் அமைய வேண்டும். 

பாரதி : எல்லாம் பிறநாட்டு உணவு வகைகள். ‘பீசாஎன்று ஒன்று இருந்ததே, அதை நீர் சுவைத்தீரா?  அதைச் சுவைத்ததால் வாயை என்னமோ செய்கிறது!  வயிறும் என்னமோ செய்கிறது!

வால்மீகி : நீர்தானேபிறநாட்டுக் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்என்று பாடினீர்.  இப்போது பிறநாட்டு உணவு வகைகளைப் பழிக்கிறீரே?

பாரதி : நான்தான் சொன்னேன்! ஆனால், நாம் பிறநாட்டுப் பழக்கவழக்கம், கலைகள் அனைத்தையும் பார்த்து அறிந்து அவற்றில் எவை நலம் பயக்குமோ அவற்றையே கைக்கொள்ள வேண்டும்.  மற்றவர்கள் செய்கிறார்கள் என்று நம் நாட்டிற்கும் சூழலுக்கும் ஒவ்வாதவற்றைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றவேண்டும் என்று அர்த்தமில்லை. எண்ணெயிலேயே வறுத்த மசாலாக்கள், ‘அஜினோமோட்டோஎன்னும் உப்பு ஆகியவை சேர்த்துச் செய்யப்படும்தந்தூரிவகைகளைவிட ஆவியில் வேக வைக்கப்படும் நம்நாட்டு இட்லி, இடியாப்பம் போன்றவற்றைக் குழந்தைகளும் நோயாளி களும்கூட தயக்கமின்றி உண்ணலாமே!

கம்பர் : நீர்பீசாஎன்று ஏதோ சொன்னீரே, அதைப் பிடிக்காவிட்டால் ஒருவாய் சாப்பிடும்போதே வைத்துவிடுவதுதானே?

வள்ளுவர் : ``பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்`` என்ற எனது குறளைப் பாரதி பின்பற்றினார் போலும்!

பாரதி : சரியாகச் சொன்னீர்! உணவுப் பொருளை வீணாக்குவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.  பூவுலகில் மக்கள் பசியாலும் பட்டினியாலும் துன்புறுவதைப் பார்த்து மனம் நொந்தவன் இந்த பாரதி.  அதனால்தான்  தனியொருவனுக்கு உணவில்லையெனில்  சகத்தினை அழித்திடுவோம்என்று  ஆவேசமாகப் பாடினேன்.
                (அப்பக்கமாக நாரதர் வர)

நாரதர் : இப்போது பூலோகத்தில் எப்படி உணவுப் பொருள்களை வீணாக்குகிறார்கள் தெரியுமா?  செல்வந்தர்கள் தம் வீட்டு வைபவங்களில் தினுசு தினுசாகப் பல நிறங்களில் பல சுவைகளில் உணவு வகைகளைப் பரிமாறுகிறார்கள். அங்கே உண்ண வருபவர்களோ பசி ஏப்பக்காரர்கள் அல்லர், எல்லோரும் புளியேப்பக்காரர்கள்! ஒவ்வொருவரிடமும் ஆயிரத்தெட்டு வியாதிகள். அதனால் ஏதோ ஒன்றிரண்டைச் சுவைத்துவிட்டு இலையை மூடிவிடுகிறார்கள். இதனால் எவ்வளவு உணவுப்பொருள் நட்டமாகிறது தெரியுமா? 

வள்ளுவர்      :               நஷ்டம் என்ற வடமொழிச் சொல்லை நட்டம் என்று தமிழ்ப்படுத்திக் கூறுகிறீர்கள்!

நாரதர் : இத்தனைத் தமிழ்ப் புலவர்கள் ஒன்றாக இருக்கும்போது நான் மொழித்தூய்மையைக் காப்பாற்றாவிட்டால் உங்கள் கடுமையான விமரிசனத்திற்கு ஆளாக நேருமே என்றுதான் கவனமாகப் பேசுகிறேன்!

பாரதி : பல மொழிகளைக் கற்றிடும் அதே நேரத்தில் நாம் மொழித்தூய்மையையும் காக்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது நாரதா!

நாரதர் : ஆனால் நிலவுலகில் தமிழ்வழி ஒளிபரப்பு என்று கூறிக்கொண்டு தமிழைக்  கொலை செய்வதைப் பற்றி நீர் அறியாமல் பேசுகிறீர்.

கம்பர் : சற்றே புரியுமாறு சொல்லுங்கள் நாரதரே!

நாரதர் : நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பலர் கிளிபோல் மிழற்றுவதாகக் கருதிக்கொண்டு தமிழ்ச் சொற்களைச் சரிவர உச்சரிக்காமல் ஆங்கிலம் போன்றே பட்டும்படாமல் நுனி நாக்கில் பேசுகிறார்கள்.  இதில் அதீத ஆங்கிலக் கலப்பு வேறு.  அவர்கள் வேகமாகவும் பேசுவதால் பல நேரங்களில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே தெரிவதில்லை.

வள்ளுவர் : அதைத்தான் நாம் இன்று மாலையில் பார்த்தோமே!

வால்மீகி : இந்நிலைமையைச் சீர்செய்யத் தமிழ் மொழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் என்ன?

நாரதர் : தமிழ்மொழிக் கல்வி மட்டுமல்ல, தமிழ் வழிக் கல்விக்கே அங்கே கொடிபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால் அவை எல்லாம் ஏதோ நாடகம் போன்று அரங்கேறுகிறதே அல்லாமல் நடைமுறைக்கு வரமாட்டேன் என்கிறது.

பாரதி : ஆங்கிலேயரை  நாட்டைவிட்டு ஓட்டிய பின்னும் இன்னும் ஆங்கிலத்தை ஏன் பிடித்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.

வள்ளுவர் :  ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு எனப் பல மொழிகள் பயின்ற நீரா இப்படிப் பேசுகிறீர்?  ஆச்சரியமாக இருக்கிறது!

பாரதி : பல மொழிகள் பயிலுவது அந்தந்த மொழியிலுள்ள இலக்கியங்களைப் பயின்று இன்புறுவதற்காக! அம்மொழி பேசும் மக்களுடன் பேசி அளவளாவுவதற்காக! ஆனால் குறிப்பிட்ட மொழியைக் கட்டாயமாகப் பயில வேண்டும் என்று வற்புறுத்துவதுதான் கண்டிக்கத்தக்கது.

நாரதர் : ஆங்கிலம் படித்தால்தானே பிறநாடுகளில் வேலை கிடைக்கும்?

பாரதி : இந்த உலகம் முழுக்க ஆங்கிலம் மட்டுமே வியாபித்திருப்பதாக நீங்களுமா கருது கிறீர்கள்?  ஒரு சில நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் உதவும்.  மலேயா, துபாய், ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டு மானால் அவ்வந்நாட்டு மொழிகளை அறிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல.  ஆங்கிலம் பேசும் இடங்களில்கூட நம் நாட்டில் பேசப்படும் ஆங்கிலம் உதவாது.  ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்கள். 

வள்ளுவர் : அப்படியென்றால் ஆங்கிலக்கல்வி அர்த்த மற்றது என்று கூறுகிறீர்களா?

பாரதி : ஆங்கிலமொழிக் கல்வி அவசியமானது.  ஆங்கில வழிக் கல்விதான் ஆபத்தானது.  அவரவர் தத்தம் தாய்மொழியில் கல்வி கற்பதே சிறப்புடையது. பிறமொழி வாயிலாகக் கற்கும் போது அம்மொழியின் இலக்கண அமைப்பிலேயே சிந்தனையைச் செலுத்தித் தம் மூளையைக் கசக்கிக் கொள்கிறார்கள்.  பிறகு இலக்கியங்களின் ஆழத்திற்கு அவர்கள் எப்போது செல்வது? அது மட்டுமா? படித்த அனைவருமே வெளி நாடுகளுக்குச் சென்று விடுவதில்லை. ஒரு பத்து சதவீதம் பேர்தான் வெளிநாடுகள் செல்கிறார்கள்.  இந்தப் பத்துச் சதவீதம் பேருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காகத் தொண்ணூறு சதவீதம் பேருக்குத் துயரம் தருவது எந்த அளவு நியாயம் என்று யோசித்துப் பாருங்கள்.

வால்மீகி : அப்படியென்றால் இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது?

பாரதி : மிக எளிதாகத் தீர்த்துவிடலாம்.  யார் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புகிறார்களோ அந்நாட்டு மொழி கற்பிக்கும் சிறப்புப் பாட சாலைகளை நிறுவினால் போதும். மூன்று முதல் ஆறு மாதங்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு அம்மொழியில் நடைமுறைப் புலமை பெற்று விடலாம். மற்றவர்களை ஒரு குறிப்பிட்ட மொழி கற்றிடுமாறு நிர்ப்பந்திக்கத் தேவையில்லை.  விரும்பினால் யார் வேண்டுமானாலும் இம்மொழிகளைத் தம் திறனுக்கு ஏற்பக் கற்றுக் கொள்ளலாம்.

வள்ளுவர் : பாரதி! நீர் சொல்வது சரியாகவே படுகிறது.  நாமெல்லாம் குறைந்த அளவே கற்றிருந்தும் சிந்தனை ஆற்றலால் அளப்பரிய படைப்புகள் படைத்தோம். ஆனால் இக்கால மக்களோ மூன்று வயதிலேயே கல்வி கற்க ஆரம்பித்தும்கூட - அதிகமான பாடங்களைப் படித்தும்கூட சொந்தமாக நாலுவரி கடிதம் எழுதக்கூட திணறுகிறார்கள்.  இதற்கெல்லாம் காரணம் தாய்மொழிவழிக் கல்விக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதுதான்.

பாரதி : ஆமாம். படித்தவர்கள்கூட இதைப்பற்றிச் சிந்திக்காமல் பழமை வாதத்திலேயே சிக்கித் தவிக்கிறார்கள்.

நாரதர் : இல்லை பாரதியாரே, நீர்தான் அவர்களைப் பற்றித் தவறாக மதிப்பிட்டு விட்டீர்கள்!

கம்பர் : என்ன சொல்கிறீர் நாரதரே!

நாரதர் : இதில் பூடகமான ஒரு விஷயம் இருக்கிறது கம்பரே!  படித்தவர்களுடைய குழந்தைகள்தாம் பெரும்பாலும் அதிகமாகப் படித்து வெளி நாடுகளுக்குச் செல்கிறார்கள்.  படித்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எளிதாக ஆங்கிலத்தைப் புரிய வைத்து விடுகிறார்கள்.  பள்ளியிலும் கல்லூரியிலும் கிடைக்கும் ஆங்கில வழிக் கல்வி அவர்களை மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான மதிப்பெண்கள் எடுக்கத் துணைபுரிகின்றது.  அவர்களும் படித்து மிக எளிதாக வெளி நாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். இதனாலேயே மெத்தப் படித்தவர்கள்உள்நாட்டிலும் ஆங்கிலம் அவசியமாகத் தேவைப்படுகிறதுஎன்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அறிவாளிகளால் புகுத்தப் பட்டுள்ள இந்தஅறிவாதிக்கப் போக்கால் பாதிக்கப் படுபவர்கள் பாமர மக்கள்தாம்! பாமர மக்களுடைய பெரும்பான்மையான குழந்தை கள் வகுப்பில் ஒன்றும் புரியாமல்சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்படிப்பைப் பாதியிலே விட்டுவிட்டுத் துன்புறுகிறார்கள். அவர்களால் தமது கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்ளவோ சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளவோ இயலுவதில்லை. அதன் காரணமாக ஆங்கில மொழியின் அவசியம் இல்லாத உள்நாட்டிலும் அவர்கள் நல்ல பணிகளில் அமர இயலாத நிலை ஏற்படுகிறது.

பாரதி : அப்படியென்றால் பாமரரும் கல்வி கற்று நல்ல பதவிகளில் அமர்ந்து நாட்டை உயர்த்த வேண்டுமானால் தாய்மொழி வழிக்கல்விதான் சிறந்தது என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கிறீர்களா?

அனைவரும் (ஒருமித்த குரலில்) :  சந்தேகமின்றி ஒத்துக்கொள்கிறோம்.

நாரதர் : நான் பூலோகம் செல்லும்போது இதற்கு என்னால் ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன்.

பாரதி : நன்றி நாரதரே!  அப்படியே உலக மொழிகளில் ஒப்பற்ற செம்மொழியாம் தமிழின் சிறப்பினையும் பாரோர் அறியுமாறு பரப்பி வாரும் நாரதரே!

நாரதர் : அப்படியே கவிஞர் பெருமானே!

கம்பர் : எங்கள் மாளிகைகள் வந்துவிட்டன.  நாம் பிறகு சந்திப்போம் நாரதா. நாங்கள் விடைபெறுகிறோம்.

நாரதர் : ஆகட்டும். நானும் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்து நீங்கள் சொன்ன செய்திகளைப் பற்றிக் கலந்தாலோசிக்கிறேன்.  வருகிறேன். வணக்கம்!

பாரதி : வெல்க தமிழ்!

                 உலகெங்கும் ஓங்கிச் செல்க தமிழ்!

                                                                            ***
                                                                            /end/

No comments:

Post a Comment