ஓரம்போகியார் பாடல்களில்
மனைவியின்
‘இருப்பு’
ஐங்குறுநூற்றில் ஓரம்போகியாரின் மருதத்திணைப்
பாடல்கள் தலைவன், தலைவி, பரத்தை என்னும் கதைமாந்தரைக் கொண்டு (6-10, 60, 91, 92,
93, 94 தவிர) அமைந்துள்ளன. அதாவது இவை கணவன் - மனைவி
- பரத்தை என்னும் முக்கோணக் கதைமாந்தரை ஒட்டியே அமைந்துள்ளன எனலாம். தலைவனின் புறத்தொழுக்கச் சூழலில் மனைவியின் இருப்பையும் அவளது இருப்புக் குறித்தத் தலைவியின் போராட்டத்தையும் பரத்தமையை நோக்கிய அவளது எதிர்க்குரலையும் ஓரம்போகியார் எவ்வாறு பதிவுசெய்துள்ளார் என்பதைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
தலைவியை வருத்தும்
தலைவனின்
ஒழுகலாறுகள்
தலைவனோடு நீர்த்துறையில் புனலாடச் செல்கிறாள் தலைவி. ஒரு படித்துறையில் நீராட
இறங்கியபோது, முன்பு தலைவன் பரத்தையரோடு புனலாடிய துறை அதுதான் என்று
அவள் கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வருகிறது. அம்மாத்திரத்தில் தலைவியின் மகிழ்ச்சி வற்றிவிடுகிறது. அவளது வேறுபாட்டைத் தலைவன் உணரவே செய்கிறான். ஆனால் உண்மைக் காரணத்தை மட்டும் அவன் ஆராய முனையவில்லை.
தெய்வங்கள் ஆடும் துறையாதலால் அவளுக்குத் தெய்வம் ஏறி இருக்கலாம் என்றே
அவன் காரணம் கற்பித்துக் கொள்கின்றான். அறிவும் ஆற்றலும் உடைய தலைவனால் உண்மைக்
காரணத்தை அறியமுடியாதது வியப்பேயாகும். இவ்வாறு உண்மை உணர்ந்தாலும் உணராததுபோல் நடித்து வேறு காரணத்தைக் கற்பித்தல்
ஆணின் செயல் என்பது சொல்லாமலே விளங்கும். வீட்டிற்குச் சென்றபிறகே தலைவியிடம் காரணம் கேட்கின்றான். காரணம் என்னவென்று வினவுகின்ற தலைவனிடம், ‘அவன் பரத்தையரோடு நீராடித்
தலைவிக்கு இழைத்த கொடுமையே காரணம்’ என்பதனைத் தோழி வெளிப்படுத்திவிடுகிறாள்.
துறையெவ
னணங்கும்
யாமுற்ற
நோயே
சிறையழி
புதுப்புனல்
பாய்ந்தெனக்
கலங்கிக்
கழனித்
தாமரை
மலரும்
பழன
வூர
நீயுற்ற
சூளே
(53)
என்னும்
பாடலில் தலைவனின் புறத்தொழுக்கம், தலைவியின் மகிழ்வான நேரங்களில்கூட மறக்கவிடாமல் மேலெழுந்து அவளைத் துன்புறுத்தும் உளவியல் செய்தியை ஓரம்போகியார் தெளிவுபடுத்துகிறார். பழனம் போன்று தலைவன் மார்பு பரத்தையருக்குப் பொதுவாக அமைந்துவிடுவதையும் புதுப்புனல் பாய்ந்து கழனித் தாமரை கலங்குவதைப் போன்று தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தால் தலைவி கலங்குவதையும் உள்ளுறைப் பொருளாகப் புலவர் அமைக்கிறார். மனத்தால் தலைவி ஆறாத்துயர் கொண்டாலும் குடும்பவாழ்க்கையில் தலைவனின் புறத்தொழுக்கத்தை மறந்து முகம்மலர்ந்து காணப்படவேண்டிய கட்டாயத்தைத் தாமரை மலர்கின்ற தன்மையால் முன்வைக்கிறார் புலவர். தலைவனின் புறத்தொழுக்கத்தால் மனம் வெதும்பினாலும் மலர்ந்த
முகத்தோடு தலைவனை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் தலைவிக்கு இருத்தல் இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
பரத்தையரோடு புனலாடிய தலைவன் தன் மார்பில் அதற்குரிய
அடையாளங்களோடு வருகின்றான். நல்ல வேளையாக வழியில்
தோழி அவன் கோலத்தைக் காண்கிறாள்.
தலைவியை அப்படியே சந்திக்க வேண்டாமென எச்சரிக்கிறாள்.
செவியிற்
கேட்பினுஞ்
சொல்லிறந்து
வெகுள்வோள்
கண்ணிற்
காணி
னென்னா
குவள்கொ
னறுவீ
யைம்பான்
மகளி
ராடுந்
தைஇத்
தண்கயம்
போலப்
பலர்படிந்
துண்ணுநின்
பரத்தை
மார்பே
(84)
என்னும்
பாடலில், ‘தலைவனின் புறத்தொழுக்கத்தைப் பிறர் சொல்லக்கேட்டுக் கோபிப்பவள் அதற்குரிய அடையாளங் களை அவனுடைய மார்பில்
கண்டால் என்னாகுவளோ’ என்று தோழி உரைப்பது தலைவனின்
பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தக் காணலாம்.
கணவனின் உடல் வேறுபாடுகள் ஒவ்வொன்றும்
அவனது புறத்தொழுக்கத்தின் விளைவாக இருக்குமோ என்று மனைவியை ஐயுறச்செய்கின்றன.
புலக்குவே
மல்லேம்
பொய்யா
துரைமோ
நலத்தக
மகளிர்க்குத்
தோட்டுணை
யாகித்
தலைப்பெயற்
செம்புன
லாடித்
தவநனி
சிவந்தன
மகிழ்நநின்
கண்ணே
(80)
என்று
கேட்கிறாள் மனைவி. கணவனின் கண்கள் சிவந்திருக்கின்றன. அதற்குரிய காரணம் பரத்தையரைத் தழுவி வெகுநேரம் நீராடியிருப்பான் என்று ஐயுறும் மனைவி உண்மையைச் சொல்லுமாறும் அவன் சொல்லப்போகும் உண்மைக்காக
அவள் கோபிக்க மாட்டாள் என்றும் உறுதி கூறுகிறாள். இதன்மூலம் புறத்தொழுக்கம்கொண்ட கணவனின் அசைவுகள் மனைவியின் நெஞ்சில் என்றென்றும் துன்பச் சிந்தனைகளை மையம்கொள்ள வைப்பதை ஓரம்போகியார் வெளிப்படுத்துகிறார்.
திருமணம்
ஆன சிலநாட்களிலேயே தலைவன் புறத்தொழுக்கம் மேற்கொள்வதைச் சில பாடல்கள் காட்டுகின்றன
(55, 83).
தலைவன்
புறத்தொழுக்கம் மேற்கொண்டமையால் பகலிலும் தன் வீட்டிற்கு வருவதைத்
தவிர்க்கிறான். தன் கணவன் உண்ணவேண்டும்
என்று ஆர்வத்தோடு தான் சமைத்துவைக்கும் உணவைக்கூட
அருந்துவதற்குத் தன் கணவன் வரவில்லையே
என்னும் வருத்தம் மனைவிக்கு அதிகமாகிறது.
கருங்கோட்
டெருமை
கயிறுபரிந்
தசைஇ
நெடுங்கதிர்
நெல்லி
னாண்மேய
லாரும்
புனன்முற்
றூரன்
பகலும்
படர்மலி
யருநோய்
செய்தன
னெமக்கே
(95)
எனக்கூறும்
தலைவியின் சொற்களில் மனைவியின் வாழ்க்கை கணவனின் புறத்தொழுக்கத்தால் தனிமை வாழ்க்கையாக - வெறுமை வாழ்க்கையாக அமைந்துவிடுதல் வெளிப்படுகிறது.
பரத்தையரும் உடன்
வசித்தல்
மனைவி வசிக்கும் வீட்டிலேயே பரத்தையரையும் ஆடவர் சிலர் வைத்திருந்த சூழலையும் ஓரம்போகியார் குறிப்பாகப் புலப்படுத்துகிறார்.
கரும்புநடு
பாத்தியிற்
கலித்த
வாம்பல்
சுரும்புபசி
களையும்
பெரும்புன
லூர
(65.1-2)
என்னும்
அடிகள்,
‘நாம் இல்லறஞ்
செய்தற்
கியற்றிய
இவ்
இல்லத்தே
பரத்தையர்
குழுமி
அவர்
சுற்றத்தாரை
ஓம்பா
நிற்பர்
என்னும்
குறிப்புடையது.
எனவே,
தலைவன்
தன்னை
அவமதித்துப்
பரத்தையர்க்கு
உரிமை
வழங்கியுளன்
எனக்
குறித்தாளாயிற்று’
என்னும்
உள்ளுறைப் பொருளை வெளிப்படுத்துவதாகக் கூறும் குறிப்புரை கணவனின் புறத்தொழுக்கத்தால் மனைவியின் இருப்பு கேள்விக் குறியாக்கப்படுவதைத் தெற்றெனப் புலப்படுத்துகிறது.
பொருளாதார வீழ்ச்சி
கணவன் அதிகமான வருவாய் உடையவனாக இருந்தாலும் அவை யனைத்தையும் அவன்
பரத்தையரிடம் பறிகொடுக்கிறான். பரத்தையர் அவனை வேண்டி விரும்புவதற்கு
அவனது தொலையாதுவரும் வருவாயே காரணம் என்பதை யாணர் ஊரன் (70.3) என்னும் சொல்லாட்சி வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் தன் கணவன் வருவாயை
முழுமையாக மனைவி அடைந்து இன்புறாத சூழல் அமைந்திருந்ததனை அறியலாம்.
குழந்தைகள் வளர்ப்பில்
பங்குபெறாமை
குழந்தையின் மழலை பெற்றோர்க்கு உவப்பினை
அளிப்பதாகும். தன் கணவன் தம்
மகனின் மழலைமொழி கேட்டு அவனோடு பொழுதைக் கழிக்க வேண்டும் என்று மனைவி அவாவுதல் உலக இயல்பே. அத்தகைய
சிறுசிறு மகிழ்வான பொழுதுகளைக்கூட இல்லாதாக்குகின்றது தலைவனின் புறத்தொழுக்கம். அடிக்கடி தன்னைப் பார்த்து ‘தந்தை எங்கே?’ என்று மகன் கேட்கும் கேள்விக்குத்
தலைவி என்ன பதில் உரைக்க
முடியும்? அவள் வேதனையால் வருந்துகிறாள்.
மகன் அவன் தந்தையைத் தேடுகிறான்
என்ற செய்தியைப் பரத்தையர் சேரியில் இருக்கும் தலைவனின் காதில்பட வைக்கிறாள். அதனைப் பரத்தையும் கவனிக்கிறாள். தலைவன் மகன் மீது கொண்ட
பாசத்தின் காரணமாகத் தன்னை விடுத்துச் செல்லாதவாறு வெகுண்டெழுகிறாள்.
வெண்டலைக்
குருகின்
மென்பறை
விளிக்குர
னீள்வய
னண்ணி
யிமிழு
மூர
வெம்மிவ
ணல்குத
லரிது
நும்மனை
மடந்தையொடு
தலைப்பெய்
தீமே
(86)
என்று
கோபமாகப் பரத்தை கூறும் மொழியைக் கேட்டபிறகு தலைவன் தன் வீட்டிற்குச் செல்லவேண்டும்
என்று நினைத்தும் பார்க்க இயலுமோ? பரத்தையிடம் கொண்டுள்ள பெருவிருப்புக் காரணமாகத் தன் மகனைக் காணும்
ஆவலையும் அடக்கிக்கொள்வான். குருகின் பார்ப்புகள் குருகை நினைத்து விளித்தல் என்னும் கருப்பொருள் சூழல் தந்தையாகிய தலைவனைக் கேட்டு அழுகின்ற மகனை உள்ளுறைப் பொருளாக
உணர்த்துகிறது. இதன்மூலம் குடும்பத்தின் அடிநாதமாக அமையவேண்டிய தந்தை - மகன் பாசம் என்னும்
பிணைப்பு அற்றுப்போதலும் மகனைச் சமாதானப்படுத்தவியலாத ஒரு தாயின் பரிதவிப்பும்
புறத்தொழுக்கத்தின் விளைவாக அமைகின்றன.
குடும்பத் தலைவி
மனைவி என்பவள் குடும்பத்திற்குரிய தலைவி மட்டுமே. இல்லத்தை நிருவகிக்க அவள் தேவைப்படுகிறாள். கணவன்
தனக்கு மட்டுமே உரித்தானவன் என்னும் எதிர்பார்ப்பு அவளது நிறைவேறா ஆசையாகவே முடிந்துவிடுகிறது. மணம்புரிந்த சில நாட்களிலேயே அவன்
பரத்தையரை நாடிச்செல்வதையும் மனைவியின் அழுகை யுடன் கூடிய ஆற்றாமையினையும் ஓரம்போகியார் வெளிப் படுத்துகிறார்.
மணந்தனை
யருளா
யாயினும்
பைபயத்
தணந்தனை
யாகி
யுய்ம்மோ
நும்மூ
ரொண்டொடி
முன்கை
யாயமுந்
தண்டுறை
யூரன்
பெண்டெனப்
படற்கே
(83)
என்று
கூறும் தலைவி குடும்பத்தில் மனைவியாகத் தன் இருப்பைத் தெளிவுபடுத்திவிடுகிறாள்.
அவன் பல பெண்டிரை நாடவும்
அவள் அவன் மனைவி என்ற
அந்தஸ்துடன் இருத்தல் மட்டுமே அவளது இருப்பாக இருக்கிறது.
மகனைப் பெற்றுத் தன் குலத்தைத் தொடரச்
செய்வது தன் மனைவியின் முதன்மைக்
கடமையாகக் கருதுகிறான் கணவன். பழனத்தில் பல மீன்களை அருந்துகின்ற
நாரை தங்கி ஓய்வெடுக்கக் கழனியில் உள்ள மருதமரத்திற்கு வருவதுபோல
பரத்தையரிடம் இன்பம் அனுபவிக்கும் தலைவன் பாதுகாப்போடு தங்குவதற்காக மட்டுமே தன் இல்லத்திற்கு வருகிறான்
என்பதை,
பழனப்
பன்மீ
னருந்த
நாரை
கழனி
மருதின்
சென்னிச்
சேக்கு
மாநீர்ப்
பொய்கை
யாண
ரூர
(70.1-3)
என்னும்
அடிகள் உள்ளுறைப் பொருளாய் வெளிப்படுத்துகின்றன.
கவர்ச்சிப் பரத்தையர்
‘நலத்தகு மகளிர்’
(80) என்று பரத்தையர் அழகு சுட்டப்படுகிறது.
தலைவன் உடல் அழகிற்கு மட்டும்
ஆட்பட்டவன் என்று கூறல் இயலாது. தலைவியிடம் அழகு நிறைந்திருந்தாலும் அவளால் அத்
தலைவனை புறத் தொழுக்கம் மேற்கொள்வதிலிருந்து தடுக்க இயலுவதில்லை என்பதை ஓரம்போகியார் சில பாடல்கள் மூலம்
புலப்படுத்திவிடுகிறார்.
ஞாயிற்று மண்டிலம் போன்று தோன்றுகின்ற பல சுடர்களையுடைய வேள்வித்
தீயினையும் ஆம்பல் மலராலே அழகுற்ற கழனிகளையும் உடைய தேனூரைப் போன்ற
தலைவியின் அழகைக் காட்டிலும் பரத்தை அழகு உடையவளோ என்று
வினவுகிறாள் தோழி.
பகலிற்
றோன்றும்
பல்கதிர்த்
தீயி
னாம்பலஞ்
செறுவிற்
றேனூ
ரன்ன
விவணலம்
புலம்பப்
பிரிய
வனைநல
முடையளோ
மகிழ்நநின்
பெண்டே
(57)
என்ற
அப் பாடல் பரத்தையைக் காட்டிலும் தலைவியே அழகுநலம் சிறந்திருத்தலை எடுத்துரைக்கிறது.
இருப்பினும் தலைவன் புறத்தொழுக்கம் மேற்கொண்டது ஏன்? இக் கேள்விக்கு,
‘சூதார் குறுந்தொடிச்
சூரமை
நுடக்கம்’
(71.1) என்று பரத்தையின் இயல்பு பற்றிய வருணனை பதிலளிக்கிறது. அவள் சூது நிறைந்தவளாக
இருக்கிறாள். நற்பண்புடையாருக்கு அச்சம் தரும் நடை உடையவள் அவள்.
அதே நேரத்தில் புறத்தொழுக்கத்தில் எளியராக இருப்பவரை எளிதில் வசியப்படுத்துவது அவள் பண்பு என்பது
சொல்லாமலேயே விளங்கும்.
தலைவியின் உடல்மாற்றம்
தலைவனின் புறத்தொழுக்கம் காரணமாகத் தலைவியின் உடல் பொலிவிழக்கிறது.
கரும்பி
னெந்திரங்
களிற்றெதிர்
பிளிற்றுந்
தேர்வண்
கோமான்
றேனூ
ரன்ன
விவ
ணல்லணி
நயந்துநீ
துறத்தலிற்
பல்லோ
ரறியப்
பசந்தன்று
நுதலே
(55)
என்று
தோழி தலைவியின் முந்தைய அழகினை எடுத்துரைக்கிறாள். ஆனால் தலைவனின் புறத்தொழுக்கம் அவளது பொலிவை வெகுவாகப் பாதித்துவிடுகிறது. பல்லோர் அறியுமாறு தலைவியின் நுதல் பசந்தது என்னும் செய்தியைக் கூர்ந்து கவனித்தால் எந்த அளவிற்குத் தலைவி
பாதிக்கப்படுகிறாள் என்பது புலனாகும்.
பகல்கொள்
விளக்கோ
டிராநா
ளறியா
வெல்போர்ச்
சோழ
ராமூ
ரன்னவிவ
ணலம்பெறு
சுடர்நுத
றேம்ப
(56)
என்னும்
பாடலும் தலைவனின் புறத்தொழுக்கத்தால் தலைவியின் உடல்நலம் சிதைந்தமையைத் தோழி கூற்றாக வெளிப்படுத்துகிறது.
தலைவியின் அழகு கெடுதலை ஆங்காங்கு
ஓரம்போகியார் எடுத்துரைக்கிறார் (57, 67). இத்தகைய உடல் மாற்றங்கள் தலைவிக்கு
எதிராக அமைந்துவிடுவதை உளவியல் ரீதியாக அணுகினால் அறியமுடியும். தலைவனின் புறத்தொழுக்கம் மனத்தளவிலும் உடலளவிலும் எதிரான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே பரத்தையரின் அழகால் கவரப்பட்டுத் தலைவியை விட்டுப் பிரியும் தலைவனைத் தலைவியின் பொலிவற்ற தன்மை மேலும் மேலும் பரத்தையரை நாடிச்செல்ல வழிவகுக்கிறது எனலாம். மனைவி மகப்பெற்றதும் அவளுடனான இன்பம் விடுத்துப் பரத்தையரை நாடும் தலைவனின் சுயநலப் போக்கையும் ஓரம்போகியார் வெளிப்படுத்தத் தயங்க வில்லை.
தூயர்
நறியர்நின்
பெண்டிர்
பேஎ
யனையமியாஞ்
சேய்பயந்
தனமே
(70.4-5)
புதல்வனை
யீன்றவெம்
மேனி
முயங்கன்மோ
தெய்யநின்
மார்புசிதைப்
பதுவே
(65.3-4)
என்ற
மனைவியின் கூற்றுகள் அக்கால உலகியலை வெளிப்படுத்துகின்றன.
கணவனின் வெளிப்படையான
புறத்தொழுக்கம்
தலைவன் தன் புறத்தொழுக்கம் குறித்துப்
பெருமையாக நினைத்த மனப்பாங்கைச் சங்கப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. பரத்தையரோடு புதுப்புனல் ஆடுவதை தலைவன் வழக்கமாகக் கொண்டிருக்கிறான். தன் மனைவிக்கு அதனை
மறைப்பவன் பலரும் காணும் இடந்தனில் பரத்தையோடு நீராடுவதைத் தவறாக எண்ணவில்லை. இத்தகைய நிகழ்வுகள் தன் மனைவிக்கும் தனக்குமான
இல்லற ஒழுக்கம் எத்தகையது என்பதைப் பற்றிச் சமுதாயம் கொள்ளும் மனப்பாங்கிற்கு அவன் எவ்வித முக்கியத்துவமும்
அளிக்காத தன்மையையே வெளிப் படுத்துகிறது.
சூதார்
குறுந்தொடிச்
சூரமை
நுடக்கத்து
நின்வெங்
காதலி
தழீஇ
நெருநை
யாடினை
யென்ப
புனலே
யவரே
மறைத்த
லொல்லுமோ
மகிழ்ந
புதைத்த
லொல்லுமோ
ஞாயிற்ற
தொளியே
(71)
என்னும்
பாடலில் ஞாயிற்றது ஒளியைப் புதைத்தல் இயலாதது போலவே பலரும் காணுமாறு பரத்தையரோடு தலைவன் ஆடிய புனலாட்டையும் மறைத்திடல்
இயலாது என்று தலைவி அவனது பொய்மையை வெளிப்படுத்து கிறாள்.
அலர்
தலைவனின் புறத்தொழுக்கம் அறிந்து அலர் தூற்றுகின்றனர்.
நறுவடி
மாஅத்து
விளைந்துகு
தீம்பழ
நெடுநீர்ப்
பொய்கைத்
துடுமென
விழூஉம்
(61)
என்னும்
அடிகள் நல்ல மாங்கனி மரத்தில்
தங்காமல் பொய்கையில் துடும் என்னும் ஒலியோடு விழுதல் தலைவனின் புறத்தொழுக்கம் பிறர் அறியுமாறு அலர் எழுவதனை உள்ளுறையாக
உணர்த்துகின்றன.
தலைவனின் புறத்தொழுக்கத்தைப் பல்லோர் அறிதல் (55) என்பது தலைவிக்கு ஆற்றொணாத் துயர் தருவது ஆகும்.
பரத்தையரின் பழித்துரை
தலைவியின் வேதனைகளின் உச்சமாகத் திகழ்வது தலைவியைப் பரத்தை பழித்தலாகும். பரத்தையைக் காணும் தலைவன் தான் அவளிடம் பெருவிருப்புக்
கொண்டிருப்பதை உரைக்கிறான். அதனைக் கேட்.கும் அவள்,
. . . நீ
யென்னை
நயந்தனெ
னென்றிநின்
மனையோள்
கேட்கின்
வருந்துவள்
பெரிதே
(81.3-5)
என்று
கூறுகிறாள். தலைவனிடம் பரத்தையானவள் அவனது மனைவியைப் பற்றிப் பழித்துக்கூறுதல் அவளுடைய ஆதிக்கத்தைத் தெற்றெனப் புலப்படுத்துவதுடன் தலைவி யின் செயலற்ற தன்மையை
அவளது மாண்பினுக்கு உறுகின்ற வீழ்ச்சியை அறிவிக்கிறது. மேலும்,
குருகுடைத்
துண்ட
வெள்ளகட்
டியாமை
யரிப்பறை
வினைஞ
ரல்குமிசைக்
கூட்டு
மலரணி
வாயிற்
பொய்கை
யூர
(81.1-3)
என்னும்
அடிகளின் உள்ளுறை உவமமாகிய குருகால் உண்ணப்பட்ட யாமைத் தசையைப் பறையடிப்போர் இரவு உணவாகச் சேர்த்து
வைத்தல் பரத்தை நுகர்ந்து எச்சிலாகிய மார்பே அவனது மனைவிக்கு வாய்க்கிறது என்ற பரத்தையின் அகந்தைமிகு
எண்ணத்தை வெளிப்படுத்து வதாகக் கூறுதல் பரத்தை - மனைவி இருவருக்கிடையிலான இல்லற நுகர்வின் இடைவெளியைப் புலப்படுத்தி மனைவியின் வேதனைமிகு வாழ்க்கை நிலையைத் தெளிவுபடுத்துகிறது.
பரத்தை தலைவனைத் தன் வசம் ஈர்க்க
விரும்பாதவள் போன்று பேசினாலும் உண்மை அதுவல்ல என்று தலைவி கூறிய சொற்களைக் கேள்விப்பட்ட பரத்தை, தலைவனைத் தன்வசமே கவர்ந்துகொள்ளப் போவதாகச் சூளுரைக்கிறாள்.
வண்டுறை
நயவரும்
வளமலர்ப்
பொய்கைத்
தண்டுறை
யூரனை
யெவ்வை
யெம்வயின்
வருதல்
வேண்டுது
மென்ப
தொல்வேம்
போல்யா
மதுவேண்
டுதுமே
(88)
என்று
தலைவிக்கு எதிராகப் பரத்தை சூள் உரைத்தல் நகைப்பிற்குரியது
மட்டுமின்றி வேதனைக்குரியதுமாகும்.
தன்னுடன் புனலாட வரவேண்டும் என்று விரும்பிக் கேட்கும் தலைவனிடம், இனி அவன் தன்
மனைவியோடு நீராடக் கூடாது என்றும் தன்னுடன் மட்டுமே நீராடுவதாகச் சத்தியம் செய்தால் மட்டுமே அவனது வேண்டுகோளை நிறைவேற்றக் கூடும் என்றும் பரத்தை ஆணைஇடுகிறாள்.
அம்ம
வாழியோ
மகிழ்நநின்
மொழிவல்
பேரூ
ரலரெழ
நீரலைக்
கலங்கி
நின்னொடு
தண்புன
லாடுது
மெம்மொடு
சென்மோ
செல்லனின்
மனையே
(77)
என்று
பரத்தை விடுக்கின்ற கட்டளை மனைவியின் இருப்பினை மிக எளிதாகப் புலப்படுத்தி
விடுகிறது.
தலைவன் தலைவி இடையிலான உறவின் பலமின்மையைப் பல்லோர் அறியப் பொதுவிடத்தில் பரத்தை பழிப்பதும் அச்செய்தி தலைவியைப் பலர் வாயிலாக வந்தடைவதும்
தலைவியின் வேதனையை அதிகரிக்கும் காரணி ஆகும்.
மடவ
ளம்மநீ
யினிக்கொண்
டோளே
தன்னொடு
நிகரா
வென்னொடு
நிகரிப்
பெருநலந்
தருக்கு
மென்ப
(67.1-3)
என்று
கூறும் தலைவி தனுக்குச் சற்றும் நிகரல்லாத பரத்தை தனக்கு நிகரானவளாக நினைத்துத் தலைவனொடு தான் பெற்ற அந்தஸ்தைத்
தருக்கிக்கொள்ளும் தன்மையைத் தன் கணவனாகிய தலைவனிடம்
வெறுப்புடன் எடுத்துரைக் கிறாள். அதே நேரத்தில் தன்
கணவனின் நடத்தையை நன்கறிந்த மனைவி தன்னைவிட்டு எவ்வாறு பரத்தையாகிய அவளைப் பின்தொடர்ந்து சென்றானோ அதைப்போன்று வெகுவிரைவில் அவளைத் துறந்துவிட்டு அவளைவிட அழகிற் சிறந்தாரை நாடுவான் என்று கூறிப் பரத்தையின் மடப்பத்தை எள்ளி நகையாடுகிறாள்.
கன்னி
விடியற்
கணைக்கா
லாம்பல்
தாமரை
போல
மலரு
மூர
பேணா
ளோநின்
பெண்டே
யான்றன்
னடங்கவுந்
தானடங்
கலளே
(68)
என்ற
பாடலிலும் பரத்தையின் செயலால் பாதிக்கப்பெற்ற தலைவியின் வேதனையைக் காணமுடிகிறது. தன் கணவனைக் கவர்ந்துள்ள
பரத்தையைத் தான் எதுவும் சொல்லாமல்
அடங்கி இருக்கிறாள் என்பதனைத் தலைவி கூறுகிறாள். அவ்வாறு எதுவும் கூறவியலாத அவளது பரிதாப நிலை சிந்திக்கத் தக்கது.
பரத்தையைப் பற்றித் தலைவனிடம் எதனை அவள் கூறமுடியும்.
அதனால் இல்லறத்தில் வெறுப்புகளே மிஞ்சும். பரத்தையிடமும் அவள் மோதவியலாது. அது
அவள் மாண்புக்கு இழுக்காகும். எனவே வாய்திறக்க இயலாமல்
அடங்கிக் கிடக்கிறாள் மனைவி. ஆனால் பரத்தையோ தலைவியைப் பற்றிப் பலவாறு அவதூறுகளைப் பரப்பித் திரிகிறாள். அதனால் மனம் வெறுக்கும் தலைவி
தன் கணவனிடம் இனியாவது பரத்தை, தன்னை வம்புக்கு இழுக்காமல் அடங்கிக் கிடக்குமாறு செய்யவேண்டும் என்று குறிப்பாகப் புலப்படுத்துகிறாள்.
இத்தகைய குறிப்புகள் பரத்தையைக் காட்டிலும் மனைவியின் உரிமைகளும் வாழ்நிலையும் தாழ்ந்து கிடைப்பதைக் காட்டி மனைவியின் இருப்பு பரிதாபத்திற் குரியது என்பதனைப் புலப்படுத்துகிறது.
பெண்கள் - போகப்பொருள்
தலைவன் தன்னை இன்புறுத்திக்கொள்ளப் பல பெண்களை நாடுபவனாக
இருக்கின்றான். பரத்தையர் பலராக இருப்பதை ஓரம்போகியாரின் பல பாடல்கள் (62, 63) வெளிப்படுத்துகின்றன. தன் கணவன்
நாடும் மகளிர், ‘விரிமலர்த் தாதுண் வண்டினும் பலரே’ (67) என்று மனைவி தன் கணவனிடமே கூறுகிறாள்.
பெண்ணைப் போகப் பொருளாக நடத்துகின்ற ஆணாதிக்க மனப்பான்மையையே தலைவனின் இச்செயல் வெளிப்படுத்துகிறது.
நல்லோர்
நல்லோர்
நாடி
வதுவை
யயர
விரும்புதி
நீயே
(61)
என்னும்
அடிகளில் புதிய புதிய பரத்தையரைத் தேடி மணப்பதையே தொழிலாகக்
கொண்டுள்ள தலைவனின் செயலுக்கு எதிர்க்குரல் எழுப்புகிறாள் தோழி.
தலைவியின் எதிர்க்குரல்
இந்திர
விழவிற்
பூவி
னன்ன
புன்றலைப்
பேடை
வரிநிழ
லகவு
மிவ்வூர்
மங்கையர்த்
தொகுத்தினி
யெவ்வூர்
நின்றன்று
மகிழ்நநின்
றேரே
(62)
- ‘இந்திரவிழவிற்கு
ஒருங்கு கூட்டினாற்போன்று பரத்தையர் பலரது இல்லம் செல்கின்ற தலைவன் இப்போது எந்தப் பரத்தையின் இல்லம் செல்லும் வழியில் தன் வீட்டிற்கு வந்தான்’
என்று தலைவி தலைவனை எதிர்த்துக் கூறுவதை இப்பாடலில் காணமுடிகிறது.
தன் கணவனின் மார்பினைத்
தழுவும் மனைவி அவன் தனக்கு மட்டுமே
உரியன் என்று நினைக்கும்போதே உள்ளார்ந்த உவப்போடு தழுவுதல் கூடும். ஆனால் அவனோ பல பெண்டிரைத்
தழுவியவன் என்று நினைக்கும்போது ஒவ்வொரு தழுவலிலும் அவள் மனம் குமைதல்
இயல்பாம். இருப்பினும் அதனை வெளிப்படுத்த இயலாத
பண்பாட்டுச் சூழல் கடனே என்று அவன்
தழுவலை ஏற்றுக்கொள்கிறது. தன் கணவனின் இத்தகைய
புறத்தொழுக்கத்தை எதிர்க்கும் ஒரு மனைவியின் குரலாகக்
கீழ்வரும் பாடல் அமைகிறது:
பொய்கைப்
பள்ளி
புலவுநாறு
நீர்நாய்
வாளை
நாளிரை
பெறூஉ
மூர
வெந்நலந்
தொலைவ
தாயினுந்
துன்னலம்
பெருமபிறர்த்
தோய்ந்த
மார்பே
(63).
தலைவனின்
தழுவலை ஏற்றுக்கொள்ளாது தலைவி எதிர்க்குரல் எழுப்புவதை ஓரம்போகியார் முன்வைத்தலைப் பரத்தமைக்கு எதிரான அவரது எதிர்க்குரலாகக் கொள்ளலாம். மேலும்,
பொய்கைப்
பள்ளி
புலவுநாறு
நீர்நாய்
வாளை
நாளிரை
பெறூஉ
மூர
(63.1-2)
என்னும்
அடிகளில்,
இதன்கண்
நீர்நாய்
பொய்கையைத்
தான்
வாழுமிடமாகக்
கொண்டிருந்தும்
தன்னுடலில்
நாறும்
புலானாற்றத்தைக்
கழுவிக்
கொள்ளாமல்
மீண்டும்
புலானாறும்
இழிதவுடைய
வாளை
மீனையே
இரையாகப்
பெறுதல்
போன்று
நீதானும்
நினது
குடிப்
பிறப்பிற்கேற்றபடி
தூய
காதல்
நெறியிலே
நில்லாயாய்
இழிந்த
காமவின்பமே
காமுற்று
நாடோறும்
பரத்தையரை
நாடி
நுகர்கின்றனை
என்றிகழ்ந்தாள்
என
உள்ளுறை
காண்க
என்று
தரப்படும் உள்ளுறை விளக்கம் தலைவனின் புறத்தொழுக்கதிற்கு புலவரின் எதிர்க்குரலாகக் கொள்ள முடிகிறது.
மேற்கூறியவற்றால், சங்க கால வாழ்க்கை
முறையில் பெண்கள் போகப் பொருளாக ஆடவரால் நோக்கப்பட்ட சூழலில் மனைவியின் இருப்பு என்பது வாரிசைப் பெற்றுக் குடும்பம் என்னும் நிறுவனத்தைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கவேண்டிய பொறுப்புடன் மட்டுமே முடிந்துவிட்டது என்பதையும் கணவனின் புறத்தொழுக்கத்தை அறிந்து அதனை ஏற்றுக்கொண்டு வாழவேண்டிய
கட்டாயம் அவள்மீது திணிக்கப்பெற்றது என்பதையும் அவ்வப்போது எழும் அவளது எதிர்க்குரல் குடும்பம் என்ற கட்டுக்கோப்பு சிதையக்கூடாது
என்ற பண்பாட்டு அச்சுறுத்தலில் வெளிவராமல் அமுக்கப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது.
நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில்,
காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 20-36.
No comments:
Post a Comment