Tuesday, 3 September 2019

பெண்ணியச் சாரலில் - என்னுரை


என்னுரை

                இன்றைய சமூக விழிப்புணர்வில் பெண்ணியம் என்பது முக்கிய தளமாக அமைந்து பெண் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருப்பதுடன் பெண்களின் வாழ்க்கைக் கட்டமைப்பையே பேரளவிற்கு மாற்றிவிடும் காரணியாகவும் திகழ்கிறது. சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள பெண்ணியம், இலக்கியத் தளத்திலும் பெரிதும் பேசப்பட்டும் விவாதிக்கப்பெற்றும் வருகின்ற ஒன்றாகத் திகழ்கிறது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் பெண்ணியச் சிந்தனைப் பரவலுக்கு இலக்கியங்களே பெருந்துணை புரிந்து வந்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.
                இந்நிலையில் இலக்கிய ஆய்விலும் பண்டைய இலக்கியங்களைப் பெண்ணியப் பார்வையோடு நோக்குகின்ற அணுகுமுறை கால்கொண்டு விட்டது. தொன்றுதொட்டுப் பெண்கள் எவ்வாறு நோக்கப்பெற்றனர் என்பதனையும் அவர்களின் மீது செலுத்தப்பெற்ற ஆதிக்கத்திற்குக் காரணிகளாக இருந்தவை எவை என்பதனையும் ஆய்வதன் மூலம் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்கும் முயற்சியை இன்றைய ஆய்வுகள் மையப்படுத்துகின்றன. அவ்வகையில் தமிழிலக்கியப் பரப்பின் நீண்டநெடும் பரப்பில் வகை மாதிரியாகச் சில இலக்கியங்கள் எடுத்துக்கொள்ளப் பெற்று பெண்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் முயற்சியாக இந்நூல் அமைகிறது.
               சங்கப்பாடல்களில் பெண்பாற் புலவர் பாடல்களில் வெளிப்படும் பெண்மன உணர்வுகளை முதல் கட்டுரை புலப்படுத்துகிறது.
                பெண்களின் வாழ்க்கையில் மருதத் திணைப் பாடல்கள் இல்லறச் சிக்கல்களை மையமிட்டமைவதால் அவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஐங்குறுநூற்றில் மருதத்திணை பாடிய ஓரம்போகியார் பாடல்களில் மனைவியின் இருப்பை வெளிப்படுத்துகிறது இரண்டாம் கட்டுரை.
                சமண முனிவர்களின் நோக்கில் பெண்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது நாலடியாரில் பெண் என்னும் கட்டுரை. குடிமக்கள் காப்பியமாகிய சிலப்பதிகாரம், பௌத்த சமயக் காப்பியமாகிய மணிமேகலை இரண்டிலும் மகளிர் நிலை எடுத்தியம்பப் பெறுகிறது. அரசப் பெண்களின் நிலை குறித்து ஆய்வதற்கு பெருங்கதை எடுத்துக்கொள்ளப் பெற்றுள்ளது.
                தொடர்ந்து சைவ இலக்கியமாகிய கல்லாடத்தின் வழி பெண்குறித்த மனப்பாங்கு ஆயப்பெறுகிறது. அரக்கர், தேவர், மனிதர் என்ற மூன்று நிலைகளிலும் பெண் நிலைப்பாட்டின் தன்மை குறித்து அறிந்துகொள்ள கம்பராமாயணம் துணைபுரிகிறது. குறிக்கோளியல் சார்ந்த ஒரு குடும்பத்தலைவி எவ்வாறு இருக்கவேண்டும் என்ற வரையறையைப் பாரதிதாசன் வழி அறியமுடிகிறது.
  அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட பேரறிஞர் அண்ணா, தமிழ்ப்பேராசிரியராகத் திகழ்ந்த மு. வரதராசனார், சமூகப் பிரக்ஞை வாய்ந்த ஜெயகாந்தன் ஆகியோரின் படைப்புகளில் பெண் நிலைப்பாடு வெளிப் படுத்தப்படுகிறது. புதுவை எழுத்தாளர் பிரபஞ்சன் தமது சுகபோகத்தீவுகள் என்னும் புதினத்தின் வாயிலாக அரசியலில் பெண்களின் நிலைப்பாடு குறித்துப் பதிவுசெய்துள்ள சிந்தனைகளை ஒரு கட்டுரை ஆய்கிறது. கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகளில் புலனாகும் பெண்ணியச் சிந்தனைகளை ஒரு கட்டுரை ஆய்கிறது. பெண் படைப்பாளராகிய இந்துமதி பெண்ணியம் பற்றி எடுத்துரைக்கும் முரண்பட்ட சித்தாந்தங்களை வெளிப் படுத்துகிறது ஒரு கட்டுரை.
                சிங்கப்பூரில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் காணப்படுகின்ற பெண் பற்றிய மனப்பாங்கினை மற்றொரு கட்டுரை ஆய்கிறது. வாய்மொழி இலக்கியமாகிய நாட்டுப் புறப்பாடல்களில் வெளிப் படுகின்ற பெண்மன உணர்வுகளை வேறொரு கட்டுரை வெளிக்கொணர்கிறது. மகளிரை மையப்படுத்தி அவர்தம் அறிவை மழுங்கடிக்கும் ஊடக விளம்பரங்கள் குறித்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது இன்னொரு கட்டுரை. இறுதியாக இன்றைய நிலையில் காணப்படுகின்ற மகளிர் தலைமைத்துவம் குறித்த சமூகவியல் பார்வையிலும் ஒரு கட்டுரை அமைகிறது.
                இந்நூலில் அமைந்திருக்கின்ற இருபது கட்டுரைகளையும் நுணுகி நோக்கும்போது தமிழ் இலக்கியத்தின் நீண்ட பாதையில் பெண் பற்றிய மரபு வழிப்பட்ட கருத்தாக்கத்தின் மைய நூலிழை அறுபடாமல் காப்பாற்றப்பட்டு வருவதை அறியமுடிகிறது.
                இனி என்னுடைய திறனாய்வு நூலான பெண்ணியச் சாரலில் நனைந்து இன்புற உங்களை அன்போடு அழைப்பதில் மகிழ்வெய்துகிறேன்.
                                            
காரைக்கால்,
15.12.2014.                                                          நிர்மலா கிருட்டினமூர்த்தி

No comments:

Post a Comment