Wednesday, 25 September 2019

மு.வ. படைப்பில் பெண்


மு.. படைப்பில் பெண்

            பேராசிரியர் மு.வரதராசனார் தமது காலகட்டத்தில் நிலவிய மேலைநாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளைப் போக்குகளை நன்கு அறிந்தவர். அச் சிந்தனைகள் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஊடுருவத்தொடங்கிய நிலையில் மரபுக்கும் புதுமைக்குமான போராட்டத்தில் பெண்கள் அடைகின்ற சில சிக்கல்களை நுணுகிநோக்கி அதனைத் தம் படைப்புகளின் வாயிலாகச் சமுதாயத்திற்குப் புலப்படுத்த முனைந்துள்ளார். அவருடைய நெஞ்சில் ஒரு முள் புதினம் வடிவு என்னும் ஒரு பெண்பாத்திரத்தின் மூலமாகப் பெண்ணியச் சிந்தனைகளையும் பெண்களுக்கு நேரும் இன்னல்களையும் முன்வைக்கிறது. இப்புதினத்தின் மூலம் மு.. புலப்படுத்த நினைத்த சிந்தனைகளைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
கதைச்சுருக்கம்
                நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவள் வடிவு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்லப் பரவி வந்த பெண்கல்வியினால் பெற்றோர் அவளைப் பி.. வரை படிக்கவைக்கிறார்கள். அவளுடைய திருமணத்திற்கு அவளது படிப்பே தடையாக அமைகிறது. அவளது கல்விநிலைக்கு ஒத்த மணமகன் கிடைக்காமையால் விஜயா என்னும் பெண் மூலமாக தன்னைவிட இருமடங்கு வயதான ஒரு பணக்காரனுக்கு இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்படு கிறாள். அவனோடு மனம் பொருந்தாத நிலையில் தான் கல்லூரியில் படித்தபோது பழகிய காதலனைச் சந்திக்கநேர்ந்து நெறிபிறழ்கிறாள். அதனால் கருத்தரிக்க அதன் பின்னர் தன் கணவனோடு வாழ்ந்து குழந்தையைப் பெற்றுவளர்த்துப் படிக்கவைக்கிறாள். மகனுக்குத் திருமணம் செய்யவேண்டிய வேளையில் கணவன் இறந்து விடுகிறான். தன் மகன் தன் காதலனின் மகளையே காதலிப்பதை அறியும் வடிவு அவர்கள் திருமணத்தைத் தடுக்கப் போராடுகிறாள். உடன்பிறந்தவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தடுக்கப்பெற்றதைக் குறிப்பாகப் புலப்படுத்துவதுடன் புதினம் நிறைவடைகிறது. நெஞ்சில் ஒரு முள்ளாகத் தான் செய்த தவறு உறுத்துவதை வடிவு என்னும் கதாபாத்திரம் உரைப்பதாக இப்புதினம் அமைகிறது.
துன்புறும் பெண்மாந்தர்
            இக்கதையில் இடம்பெறும் பெண்மாந்தர் பலரும் பல்வேறுபட்ட சிக்கல்களால் அலைக்கழிக்கப்படுபவர்களாகப் படைக்கப்பெற்றுள்ளனர். கதைத்தலைவி வடிவு காதல் தோல்வி, பொருந்தாத் திருமணம், நெறி பிறழ்தல் ஆகியவற்றால் துன்புறுகிறாள். வடிவிற்கு வேலை கொடுத்துத் திருமணமும் செய்துவைக்கும் விஜயா என்பவளும் இளம் வயதில் காதலித்து நெறிபிறழ்ந்து தன் காதலனால் கைவிடப்பெற்று அவன்மூலம் பெற்ற குழந்தையுடன், தன்னைவிட இருமடங்கு வயதுடைய சொரூபநாதர் என்பரை இரண்டாம் தாரமாக மணந்து வாழ்கிறாள். விஜயாவின் மகள் கிந்திராவும் பல்வேறு குடும்பச் சிக்கல்களால் பைத்தியமாகி இறக்கிறாள். கிந்திராவின் மகள் கீதா திருமணமாகாமல் குழந்தை பெறு கிறாள். பேராசிரியர் மங்கையர்க்கரசியார், கிந்திராவின் தோழி பார்வதி ஆகியோர் திருமணமாகாத முதிர்கன்னி களாக இருக்கின்றனர். இவ்வாறு சிக்கலுடைய பெண் மாந்தரைப் படைப்பதன் வாயிலாகப் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சிக்கல்களை வெளிப்படுத்து வதற்குரிய களத்தை மு.. வடிவமைத்துள்ளார் எனலாம்.
பாலியல் சுதந்திரம்
            விஜயா பாலியல் சுதந்திரத்தைப் போற்றுபவளாகப் படைக்கப்பெற்றுள்ளாள்.
நீங்கள் ஆங்கிலப் பள்ளிக் கூடங்களில் கல்லூரிகளில் படித்தவர்கள். ஆங்கிலக் கதைகளையும் நாடகங் களையும் படித்தவர்கள். படித்தும் இப்படிப் பழங்காலம்போல் இருந்தால், உங்கள் கதி என்ன? பழங்காலம் போல் எந்த அத்தைபிள்ளை, அம்மான் பிள்ளை உங்களை மணம் செய்துகொள்ள வருகிறான்? (54-55)
என்று கூறும் விஜயா தன் இரண்டு மகள்களையும் ஆடவருடன் கலந்து பழகுமாறு தூண்டுகிறாள்.
சேகர் என்று ஒரு பிள்ளை வரவில்லையா? அவனுடன் நண்பன் ஒருவனும் காலையில் வந்தான். கிந்திரா அவர்களோடு புறப்பட்டாள். சந்திராவையும் உடன்போய் வருமாறு நானே வற்புறுத்தி அனுப்பினேன். மாமல்லபுரத்திற்கு யார் யாரோ போகிறார்களாம். இவர்களும் போய் வரட்டும் (56)
என்னும் பகுதியில் விஜயாவின் செய்கை மேல்தட்டுப் பெண்களிடையே காணப்படுகின்ற சுதந்திரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
            விஜயாவின் மூத்த மகள் கிந்திரா மேனாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளின் பாதிப்பால் சேகர், கோபாலன் இருவரிடமும் நெருங்கிப் பழகுகிறாள். சேகரிடம் எல்லைமீறிப் பழகி, திருமணத்திற்கு முன்பே நான்கு முறை கருக்கலைப்பும் செய்கிறாள். அதை அவளும் அவளது தாயும் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் சேகரை விட்டுவிட்டு வசதியுள்ள கோபாலனைத் திருமணம் செய்துகொள்கிறாள். திருமண வாழ்க்கைக்குப் பிறகும் கிந்திரா பெண்மைக்குரிய மரபில் குடும்பத்தைச் செலுத்தவில்லை.  குதிரைப்பந்தயம் முதலியவற்றில் தன் கணவனோடு ஈடுபட்டு அத்தனைச் சொத்துகளையும் இழக்கிறாள். அவளுடைய கணவனும் அவளைவிட்டு நீங்குகிறான். இறுதியில் அவள் பைத்தியம் பிடித்து மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பெற்று அங்கேயே இறந்துபோகிறாள். அவளது மூத்த மகள் கீதாவும் ஒருவனைக் காதலித்து ஏமாந்து திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள்.
            கிந்தராவின் மூலமாக எல்லைதாண்டும் பாலியல் சுதந்திரம் பெண்களைப் பொறுத்தவரையில் துன்பத்தையே தேடித்தரும் என்பதை மு.. நுட்பமாகப் புலப்படுத்துகிறார்.
பெண்ணுரிமை பற்றிய எண்ணம், ஒழுக்கக்கேட்டின் உரிமை தேடும் அளவிற்கு வளர வேண்டுமா என்றும், மேற்கு நாட்டுப் படிப்பும் பழக்கமும் இவ்வாறு நம் நாட்டுப் பெண்களின் மனங்களை மாற்றியுள்ளனவே என்றும் எண்ணினேன். (63-64)
என்ற வடிவின் சிந்தனை ஓட்டத்தின்மூலம் பாலியல் சுதந்திரம் தேவையற்ற ஒழுக்கக்கேட்டையே ஏற்படுத்தும் என்ற மு..வின் கருத்தை அறியமுடிகிறது.
                மாதர் கழகத்தில் பெண்ணுரிமை பற்றிய பிரான்சு நாட்டுப் பெண்மணியின் பேச்சும் அதைத்தொடர்ந்து விவாதமும் நடைபெறுவதாக வரும் புதினப் பகுதியில்,
உரிமை என்றால் ஓர் ஆண் இரண்டு மூன்று பெண்களை மணந்துகொள்ள உரிமை இருப்பதுபோல் ஒரு பெண்ணும் இரண்டு மூன்று ஆண்களோடு வாழ்வதற்கு உரிமை இருக்கவேண்டும் அல்லவா? (66)
என்று ஒருத்தி கிண்டலாகக் கேள்வி கேட்கிறாள். அப்பொழுது மற்றொரு பெண், "இதற்கு உரிமை கேட்க வேண்டாமே. இப்போதே சில பெண்கள் அப்படி வாழ்கிறார்களே". (66) என்று விவாதத்தைத் தொடர்கிறாள். அதைக்கேட்டு வேறொருத்தி, அதைச் சமூகம் குற்றமாகக் கருதுகிறதே (67) என்கிறாள். இத்தகைய உரையாடலின் மூலம் பெண்கள் சிலர் பாலியல் சுதந்திரம் வேண்டுமென்று கருதுவதை மு.. முன்வைக்கிறார். அச் சுதந்திரம் தேவையற்றது என்பதை பிரான்சுப் பெண்ணின் விடையில்,
ஆனால், அது காட்டுமிராண்டித்தனம். ஒருவன் ஒருத்தி என்று வாழ்வதுதான் நாகரிகம். பொருத்தமில்லை யானால் விட்டு விலகுவதற்கு இருசாரார்க்கும் உரிமை வேண்டும் (67)
என்று கூறி முடிக்கிறார். மணவிலக்கு உரிமை தேவையானது என்பதையும் பாலியல் சுதந்திரம் என்பது தேவையற்ற விலங்குத்தன்மை என்பதையும் மு.. இங்கு வெளிப்படுத்தக் காணலாம்.
பெண்கல்வி
                பெண்களுக்குக் கல்வி தேவை என்பதைப் பல அறிஞர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால் சமுதாயம் கல்வி என்பது அறிவை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையைச் செம்மையாக்க உதவும் ஒரு கருவி என்பதை மறந்து அதனைத் திருமணத்தோடு தொடர்புபடுத்தித் துன்புறுவதை மு.. எடுத்துரைக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்கல்வி பெண்ணின் திருமணத்திற்குப் பெருந்தடையாய் இருந்ததை மறுக்கமுடியாது.
அந்த ஏழைப் பெண்ணைப் போன்ற வாழ்க்கை எனக்கு வாய்ப்பதற்குத் தடையாக இருந்தது செல்வம் அல்ல, பி.. என்ற இரண்டு எழுத்துத்தான் எனக்குத் தடை என்று சொல்லலாம். நான் படித்த படிப்பு, நல்ல பதவியிலும் வருவாயிலும் உள்ள குடும்பத்து இளைஞர்களை மட்டுமே தேடும் நிலைமையை உண்டாக்கிவிட்டது.  அப்படிப்பட்ட குடும்பங்கள் நூற்றுக்கு ஒன்று இரண்டுதானே? அந்தக் குடும்பங்களையே நாடினார் என் தகப்பனார். அந்தக் குடும்பத்தார்களோ, ஒரு படித்த பெண் மட்டும் வீட்டுக்கு வந்தால் போதும் என்று எண்ணவில்லை. அவளுடன் ஐம்பதினாயிரம் பெறும் நகையும் இருபதினாயிரம் முப்பதினாயிரம் பணமும் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள், அவ்வளவு தொகைக்கு என் தந்தை என்ன செய்வார்? (23)
என்று கூறும் வடிவு ஊரூராக அலைகின்ற ஈயம்பூசும் ஓர் ஏழைப் பெண்ணுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய குடும்ப வாழ்க்கை தனக்கு அமையாமையை எடுத்துரைக்கிறாள்.
                பி.. வரை படித்த வடிவு தனக்கு நிகராகவோ அல்லது தன்னைவிடப் படித்தவனாகவோ தன் கணவன் அமையவேண்டும்; அவன் நன்றாகச் சம்பாதிப்பவனாகவும் அமையவேண்டும் என்ற எண்ணத்தில் பல வரன்களைத் தட்டிக்கழிக்கிறாள். படித்தவனாக இருந்தால் அவன் சொற்ப வருமானமுடையவனாக இருக்கிறான். படித்தவனாகவும் வசதியானவனாகவும் வரும்போது அவனுக்கு ஈடாகச் சீர்செய்யும் வசதி வடிவின் பெற்றோருக்கில்லை. வசதியுடையவனாக இருக்கும் பட்சத்தில் தன்னைவிடக் குறைந்த படிப்புடையவனை ஏற்றுக்கொள்ளவும் மனம் வரவில்லை. இப்படியே அவளுடைய வயது இருபத்தெட்டாகிறது. கடைசியில் எப்படியாவது திருமணம் முடிந்தால் போதுமென்ற ஏக்கம் ஏற்பட அவளைவிட இரண்டுமடங்கு வயதுடைய ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள்.
படிப்பு இல்லாமலே ஒழுங்காக வாழ்வைநடத்தி அமைதியோடு மகிழும் ஏழை எல்லம்மாவின் வாழ்க்கையைப் போற்றுகிறேன். அவளுக்குப் புத்தகம் பல அறிமுகம் ஆகவில்லை. உலகமும் அவளுக்குத் தெரியாது. வீடு தெரியும்; தெரு ஒருவாறு தெரியும்; குடும்பக் கடமைகள் நன்றாகத் தெரியும். குழந்தைகள் அவளுடைய நெருங்கிய உறவு; கணவனே அவளுடைய பற்றுக்கோடு. இப்படி இருந்தால், அப்படிச் செய்திருந்தால் - இதுவரை மணக்காமலிருந்திருந்தால், அவரை மணந்து கொண்டிருந்தால் - இப்படிப்பட்ட எண்ணங்களே இல்லாமல் அவள் அமைதியாக வாழ்க்கை நடத்துகிறாள். (14)
என்று தன் வயதொத்த உறவுக்காரப்பெண் எல்லம்மாவின் வாழ்க்கையைப் பார்த்து ஏங்கும் வடிவு, தன் திருமண வாழ்க்கைக்குத் தன் பட்டப்படிப்பே தடையாகிவிட்டதாக எண்ணுகிறாள்.
உரிமையும் நன்மையும் இயைந்து வராமல் அவற்றினிடையே ஒருவகைப் போராட்டம் இருந்து வருகிறது. . . . பெண்ணுரிமை என்பதும் இப்படிப் பட்டதுதானே? தீமைக்கு வழிவகுத்து வைத்து, மனம் போனபோக்கில் அலையவிட்டுவிட்டு, நன்மையை ஒதுக்கிவிடுகிறதோ? இதுதான் உரிமையின் விளைவோ? (16)
என்று பெண்ணுரிமையால் சில நன்மைகளைக் கண்ணுக்குத் தெரியாமல் இழந்துவிடுவதாக எண்ணுகிறாள்.
                அவளைப்போன்றே பி.. படித்து ஆசிரியர் பயிற்சியும் முடித்து ஆசிரியப்பணி செய்யும் பார்வதி திருமணம் ஆகாமலேயே வாழ்க்கை நடத்துகிறாள்.
                வடிவின் கல்லூரிப் பேராசிரியர் மங்கையர்க் கரசியாரும் படிப்பின் காரணமாகத் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமரமாகநின்று குடும்பவாழ்க்கைக்கு ஏங்கும் தன்மையைக் காணமுடிகிறது.
எப்படியோ திருமணத்தை மட்டும் நிறுத்தாதீர்கள். நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்கு இப்படி அறிவுரை சொன்னவர்கள் இல்லை. படிப்பு இருக்கிறது. சம்பளம் இருக்கிறது என்ற செருக்கோடு திருமணம் வேண்டிய தில்லை என்று சொல்லிவிட்டோம். இவள் அப்படிச் செய்யக் கூடாது. திருமணம் வேண்டாம் என்று தள்ளுவதில் பயன் இல்லை என்று இப்போது நான் சொல்கிறேன். அனுபவப் பட்டவர்கள் எல்லாரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்றார். (33-34)
என்று கூறும் மங்கையர்க்கரசியார் இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லையென்று மணம்செய்து கொடுக்குமாறு வடிவின் பெற்றோருக்கு அறிவுறுத்துகிறார்.
நடுத்தர வகுப்புக் குடும்பங்களில் கல்லூரிகளில் கற்றுப் பட்டம்பெற்ற இளைஞர்கள் பலர்க்கு உற்ற வயதில் திருமணம் ஆவதில்லை. அவர்களுள் முப்பது முப்பத்தைந்து வயது ஆனபிறகும் திருமணம் ஆகாத ஆண்கள் உண்டு; பெண்களும் உண்டு. திருமணம் ஆகாதவர்களில் ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. பட்டம் பெற்ற பெண்கள் பலர் திருமணம் ஆகாமலே காலம் கழிக்கும் நிலையில் உள்ளனர். (32)
என்று நடப்பியல் உண்மையைப் பெண்மை வாழ்க என்னும் நூலில் மு.. குறிப்பிடுகிறார்.
                கல்விக் குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் தன்னைவிடப் படிப்பில் குறைந்த ஆடவனை ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளும்போது வேறுவகையான சிக்கல் தோன்றுகிறது. அப்பெண் இயல்பாக ஏதாவது ஒன்றைச் சொன்னாலும் அவளுக்குப் படித்த திமிர் என்று கணவனும் பிறரும் கூறுவதையும் நடப்பியலில் காணமுடிகிறது. கதைத்தலைவி வடிவும் சிலநேரங்களில் தன் கருத்தை எடுத்துக்கூறியபோது அவளுடைய கணவனின் முகத் தோற்றத்தைப் பார்த்து, ‘படித்த பெண் ஆகையால் திமிரோடு பேசியதாக எண்ணுகிறாரே என்று வருந்திக் கொண்டிருந்தேன்’. (170) என்று கூறுவது பெண்களின் இருதலைக் கொள்ளி எறும்பாகும் நிலையை எடுத்துரைக் கிறது.
                மேற்கூறியவற்றால் பாலியல் சுதந்திரம் எல்லை மீறலாகாது என்பதையும் பெண்கல்வி பற்றிய சரியான கண்ணோட்டம் சமுதாயத்தில் இன்னும் ஏற்படவில்லை என்பதையும் மு..வின் நெஞ்சில் ஒரு முள் புதினம் உணர்த்துவதை அறிந்துகொள்ள முடிகிறது.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 118-127.

No comments:

Post a Comment