பேராசிரியர்
ம.இலெ. தங்கப்பா
புதுச்சேரி
வாழ்த்துரை
உலக மாந்தர் இருவகையினர்.
தம்மையே நடுவாகக் கொள்பவர் ஒருவகை. தம்மை உலகுக்கு வழங்குபவர் மற்றொரு வகை. பாவலர்களிடையிலும் இவ்விருவகை யினரைக்
காணலாம். புகழுக்காக எழுதுவோர் தம்மை நடுவாகக் கொள்பவர். புகழைப் பற்றிக் கவலைப்படாமல் உலகுக்குத் தங்களை வழங்க நினைப்பவர் மற்றொரு வகையினர்.
தம்மை நடுவாகக் கொள்பவர்,
எதிலும் தம்மை முன்னிறுத்திக் கொள்பவர் சிறியராகவும், தம் பாடல்கள் வழி
உலகுக்கு வழிகாட்ட விரும்புவோர் பெரியராகவும் இருத்தலைக் காணலாம். தம்மை முன்னிறுத்தும் நிலையைவிட்டுத் தம்மை வழங்கும் நிலைக்குப் பாவலர் வரவேண்டும்.
பலவகையான யாப்பு வடிவங்களுள், பாவலர்கள் தம்மை முன்னிறுத்திக்கொள்ள இடங்கொடாத வடிவம் இத் துளிப்பா என்று
எனக்குத் தோன்றுகின்றது.
தங்களைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் உலகை, மக்களைக் கூர்ந்து நோக்கித் தம் எண்ணங்களை வெளிப்படுத்துவோராகத்
துளிப்பாப் பாவலர் இருக்கின்றனர். இவர்களுள் ஒருவராக ஔவை நிர்மலா நம்
முன் நிற்கின்றார்.
தமிழையும் இயற்கையையும் பாடுகின்றார். குமுகாயச் சீர்கேடுகளை எடுத்துரைக்கின்றார். அரசியல்வாணரை இடித்துரைக்கின்றார். போலி களையும் பொய்யர்களையும்
தோலுரித்துக் காட்டுகின்றார்.
பாக்களில் கற்பனை நயத்தைக் காண்கின்றோம். அங்கதச் சுவை நகைநலன் தருகின்றது.
உருவகங்கள் பாக்களை அழகு செய்கின்றன.
இவ்வாறு நானூறு துளிப்பாக்களை நமக்களித்துள்ள ஔவை நிர்மலாவுக்கு என்
பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறைகள் நீங்கிக் கூர்மையும் செப்பமும் அடையும் வகையில் மேலும் வளர்தல் வேண்டும் என என் வாழ்த்துக்களையும்
வழங்குகின்றேன்.
தங்கப்பா
No comments:
Post a Comment