முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 27
ஒருநாள் மாலையில் வீடு திரும்பியபோது வாசலில்
நான்கு ஜோடி செருப்புகள் கிடந்தன.
ஒரு ஜோடி பெண்ணினுடையது; ஒரு
ஜோடி ஆணுடையது. மற்ற இரண்டு ஜோடிகள்
அளவில் சிறியதாய் இருந்தன.
யோசனையோடு தனது செருப்புகளை ஸ்டாண்டில்
வைத்துவிட்டு உள்ளே கால் பதித்துக் கண்களால்
துழாவினாள்.
ஹாலில் இரண்டு சிறுமிகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். டூர்போன இடங்களி லிருந்து ஞாபகார்த்தமாக அவள் ஆசை ஆசையாய்
வாங்கி ஷோ கேஸில் அடுக்கி
வைத்திருந்த பொம்மைகள் கீழே இரைந்து கிடந்தன.
சோபாவில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சந்திரனிடம்
ஒருவர் இரைந்து பேசிக்கொண்டிருந்தார்.
'தன் கணவன் எதிரே
கால் மேல் கால் போட்டுக்கொண்டு
உட்கார என்ன துணிச்சல்? அதுவும்
இவ்வளவு சத்தமாக அநாகரீகமாக இரைந்து பேசிக்கொண்டு' - பற்றிக்கொண்டு வந்தது தாட்சாயணிக்கு.
இடையிடையே புதிதாக வந்தவன் 'மச்சான்! மச்சான்!' என்றான்.
அதைக் கேட்கவே தாட்சாயணிக்கு
அருவறுப்பாக இருந்தது.
'எல்லாம் அவராக இழுத்துவிட்டுக்கொண்டது. அதனை அவர் அனுபவித்துத்தான்
ஆக வேண்டும்'. மனம் சமாதானம் செய்தது.
சமையலறையை எட்டிப் பார்த்தாள். ஒருத்தி சமைத்துக் கொண்டிருந்தாள். மளிகைச் சாமான்களின் பெட் பாட்டில்கள் அங்கங்கே
இடம்மாறி இருந்தன. காய்கறிகள் பிரிட்ஜிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு வெட்டியும் வெட்டாமலும் அம்பாரமாகக் கிடந்தன. சமையல் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. கார நெடி தும்மலையும்
கண்ணிலும் நெஞ்சிலும் எரிச்சலையும் வரவழைத்தது.
படுக்கையறையில் சுந்தரி டி.வி.யை
வைத்துக் கொண்டு ஆனந்தம் நெடுந்தொடரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கார்த்திக்குடன் அவன் வாரிசைப் பெற்றுக்
கொடுத்த மனிஷாதான் வாழவேண்டும் என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சுந்தரி அந்த நெடுந்தொடரை வேண்டுமென்றே
சத்தமாக வைத்திருக்கிறாளா?
தாட்சாயணிக்கு என்ன செய்வதென்று ஒன்றும்
புரியவில்லை. பேசாமல் தன் அறைக்குப்போய்க் கட்டிலில்
வீழ்ந்தாள்.
'மச்சான் மச்சான்' என்று கூறியவன் சொற்கள் அரைகுறையாய்த் தாட்சாயணியின் காதுகளில் நாராசமாக விழுந்தன.
அவன் தன் தங்கையின்
கழுத்தில் உடனே சந்திரன் மூன்று
முடிச்சு போடவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
தன் நெஞ்சில் நெருப்பை
அள்ளிக் கொட்டியது போல் இருந்தது.
'ஒரு முடிவு தெரியாம
நாங்க இங்கிருந்து போமாட்டோம்!' என்று அவன் கத்தினான். ஒன்றும்
தெரியாத அப்பாவியான தன் தங்கையின் மனத்தைக்
கெடுத்து அவளை இப்படி நாசம்
செய்துவிட்டதாகப் பழி சுமத்தினான். சந்திரன்
பணியாற்றும் பள்ளியில் அவன் வண்டவாளத்தைப் பரப்பி
அனைவரிடமும் அவன் பெயரை நாறடித்து
விடுவேன் என்று அறைகூவல் விடுத்தான்.
குடும்பமே நன்றாக நாடகமாடுகிறது. இத்தனை நாள் தன் தங்கை
செத்தாளா இருந்தாளா என்று பார்க்காதவன் இப்போது எங்கிருந்து வந்தான்? அதைச் சந்திரனும் சிந்திக்கவில்லை. அவனுக்கு வெளுத்ததெல்லாம் பால்தான்!
எதற்கும் சந்திரன் பதில் பேசவில்லை. அவன் என்ன சொல்வான்?
இத்தனை நடந்தும் சுந்தரி வெளியே வந்து எல்லாவற்றுக்கும் தான்தான் மூல காரணம் என்று
ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. தன் அண்ணனுக்கு அஞ்சி
நடுங்குவதுபோல் முடங்கிக் கிடந்தாள்.
சமாதானப் பேச்சுகள் தொடர்ந்தன. வந்தவர்கள் எவரும் திரும்பிச் செல்லவில்லை.
சத்தம் மெதுமெதுவாக அடங்கியது. அனைவரும் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு உறங்கியிருக்க வேண்டும்.
ஆனால் எந்தவொரு ஜீவனும்
தாட்சாயணியைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. உணவு உண்ணுமாறு சந்திரனும்
அவளைக் கூப்பிடவில்லை.
நடு ராத்திரி இருக்கும்.
சந்திரன் ஒரு திருடனைப்போல மெதுவாகத்
தாட்சாயணியின் அறைக்குள் நுழைந்தான்.
தாட்சாயணி விழித்துக்கொண்டுதான் அமர்ந் திருந்தாள். அவளுக்கு எப்படித் தூக்கம் வரும்? அவள் சரியாகத் தூங்கி
எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன. அவள் பெருமூச்சின் வெப்பக்
காற்றால் அந்த அறையே சூடாகக்
கொதித்தது.
'ஏம்மா? ஏசி போட்டுக்கலையா? தூங்காம
இருக்கே! ஒடம்பு சரியில்லையா?' பசப்பினான் சந்திரன்.
அவன் தன்னைக் கவனித்து
எத்தனை மாதங்களாயின. திடீரென்று எப்படிப் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது?'
அவள் பதிலேதும் சொல்லவில்லை.
அவனாகவே ஆரம்பித்தான்.
'வேறு வழியில்ல. தாட்சு.
. . நான் சொல்றதக் கவனமாக் கேளு. சுந்தரி எனக்குச் சத்தியம் பண்ணியிருக்கா? அவ கொழந்தயப் பெத்ததும்
அடுத்த நிமிஷம் செத்துடுவா. அசரீரி அப்படித்தான் சொன்னது.'
'அந்த அசரீரிய நீங்க
கேட்டிங்களா?' கொக்கி போட்டாள் தாட்சாயணி.
'அது வந்து . . .'
மழுப்பினான் சந்திரன்.
'அப்படி அவ சாகலைன்னா என்ன
பண்ணப் போறீங்க?'
'என்ன நீ இப்படி
இரக்கமில்லாமப் பேசற? ஒரு பொண்ணு கொழந்த
பெத்துக்கறது செத்துப் பொழைக்கற மாதிரி. உன் மனசு என்ன
கல்லா? நீயும் ஒரு பெண்ணா?'
அவள் கேட்டதுக்குப் பதில்
சொல்லாமல் சுற்றி வளைத்தான் சந்திரன்.
'நான் கேட்டதுக்கு இன்னும்
பதில் சொல்லலை' - தாட்சாயணி ஞாபகப் படுத்தினாள்.
'அப்படி அவ சாகலைன்னா கொழுந்தயக்
கொடுத்திட்டு எங்கயாச்சும் போயி செத்துப் போயிடுவா'
கோபத்தில் இரைந்தான் சந்திரன்.
கண்கள் சிவந்து அவளை உற்று நோக்கினான்.
தாட்சாயணி மேல் காட்டிய வெறுப்பு,
சுந்தரியை எதிர்க்கிறாயே என்ற முறைப்பு அக்கண்களில்
தெரிந்தன.
அக்கண்களில் சிவப்பு ரத்தம் கட்டி நெருப்பாக எரிந்தது. அத்தகையதொரு பார்வையை அவள் தன் இருபது
வருட திருமண வாழ்க்கையில் அவனிடம் கண்டதில்லை. கனிவான அவன் கண்கள் முதன்முதலாகச்
அக்கினித் திராவகத்தை உமிழ்ந்தன. அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தாட்சாயணியின்
குலை நடுங்கியது. இந்தக் கண்களில் தெறிக்கும் நெருப்புச் சுவாலை தன்னை எரிக்கப் போகிறதா? தன்னை மட்டுமல்ல, காலங்காலமாகக் கணவனுக்கென்றே வாழ்ந்துவரும் தன்னைப் போன்ற ஒட்டுமொத்த அப்பாவிகளையும் அந்த நெருப்பொன்றே எரித்துவிடும்
சக்தி படைத்ததாக அவள் கருதினாள்.
நன்றாகவே இருந்தது அவன் கற்பனை. ஆனால்
அது நிஜமாகமாட்டாத உண்மை என்பதை தாட்சாயணி கவனிக்கத் தவறவில்லை.
'அதனால?. . .' - நடுங்கிக்கொண்டே கேட்டாள்.
சற்றே குரலை இறக்கினான்
சந்திரன். வேகத்தைக் குறைத்தான். தழுதழுத்துப் பேசினான்.
'அதனால நீ ஒன்னுக்கும் பயப்பட
வேண்டாம். இப்ப அவளோட அண்ணன்
தகராறு பண்றான். அவ கழுத்துல தாலி
கட்டனும் அப்படின்னு கட்டாயப்படுத்தறான். அவங்கள வீட்டை விட்டு அனுப்பனுமன்னா அவ
கழுத்துல தாலி கட்டியே ஆகனும்.
அவங்கல்லாம் இங்கேயே இருந்தா ஒனக்குக் கஷ்டமாயிருக்கும் இல்¬யை£?' சந்திரன்
எது செய்தாலும் தன்மனைவியின் நலத்தின் பொருட்டே என்பதுபோல் பேசினான்.
'அப்படி இல்லைன்னா அவன் தங்கச்சியைக் கூட்டிக்கிட்டுப்
போயிடுவான். அப்புறம் நாம பட்ட கஷ்டமெல்லாம்
வீணாப்போயிடும்' - குழந்தைத்தனமாகக் கற்பனை செய்தான் சந்திரன்.
'அப்படி எதுவும் நடக்காது. அதெல்லாம் நீங்க ஒன்னும் தாலிகட்டக் கூடாது. இதுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்க
மாட்டேன்.'
'நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா
அவன் என் மானத்தை வாங்கிடுவான்.
மானம் போனப்பறம் நான் எதுக்கு உயிர்
வாழனும்? நான் செத்துப்போறேன். நீ
நிம்மதியா இரு.' வார்த்தைச் சவுக்கால் அவளை விளாசித் தள்ளினான்.
சிறிது நேரம் கழித்து அவன் மிக இணக்கமாகப்
பேசத் தொடங்கினான். 'தாட்சாயணி! இதெல்லாம் ஒரு டிராமா தான்!
எல்லாம் சும்மா அவ அண்ணனுக்காக! இதுல
சுந்தரிக்கே கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல
தெரியுமா? அவ நமக்காகவே தியாகம்
பண்ண வந்த பொண்ணு. கொழந்தய
எந்தச் சிக்கலும் வராம பெத்துக் கொடுக்கனுங்கறதுதான்
அவ மனசுல ஆழமா ஓடிட்டிருக்கு. எங்க
அவ கொடுத்த வாக்கக் காப்பாத்த முடியாமப் போயிடுமோன்னு சொல்லிச் சொல்லித் தேம்பறா! மத்தபடி இந்தச் சொத்து, சுகம் எல்லாம் அவ கொஞ்சம்கூட நெனச்சுப்
பாக்கலம்மா' செஞ்சினான் சந்திரன்.
'கொழந்த பொறந்தப்புறம் இந்தத் தாலிதான் ஒனக்குக் கஷ்டமா இருக்கும்னா அதக் கழட்டிக் காளியம்மன்
கோயில் உண்டியல்ல போட்டிடுவேன்னு சத்தியம் பண்ணியிருக்கா. நீ எதுக்கும் தயங்காத!
இப்ப மட்டும் இதுக்கு ஒத்துக்கோ! நான் இனி உன்
கிட்ட எதுவும் கேக்க மாட்டேன். இந்த ஒரு வரத்த
மட்டும் கொடு!' கடவுள் நிலைக்கு உயர்த்தி அவளிடம் வரம்கேட்டான் சந்திரன்.
'உன்ன நான் மதிக்கறதாலதான்
இவ்வளவு தூரம் கெஞ்சிக்கிட்டு இருக்கேன். வேற அயோக்கியனா இருந்தா
அடி போடி! நீ சம்மதிச்சா என்ன?
சம்மதிக்கலைன்னா என்ன? அப்படின்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருப்பான்' - தான் எவ்வளவு நல்லவன்
என்பதைச் சுட்டிக் காட்டினான்.
ஒரு தவறைச் சொல்லாமல்
செய்பவன் அயோக்கியன். அதே தவறைச் சொல்லிவிட்டுச்
செய்பவன் நல்லவன் - என்ன சமூக நியாயம்
இது!
'நான் இவ்வளவு கெஞ்சறேன்!
உன் கூட இத்தன வருஷம்
வாழ்ந்ததுக்கு எனக்கு இந்த வரத்தக் கொடுக்க
மாட்டியா? என் அன்புக்கு நீ
தரும் பரிசு இதுதானா?'
பால்போன்ற நெஞ்சம் நிறைந்திருந்த சந்திரன் இப்போது எப்படி இப்படிக் கூர்உளி போன்ற வார்த்தைப் பற்களால் தன்னைக் குத்திக் கிழிக்கிறான்? எல்லாம் சுந்தரி என்ற நஞ்சுப் பற்கள்
முளைத்திருப்பதாலா?
அவள் சம்மதித்தாளா? இல்லையா?
என்று அவளுக்கே தெரியவில்லை.
ஆனால் அவள் சம்மதத்தைத்
தான் பெற்றுவிட்டதாகவும் அதற்கு அவளுக்கு நன்றி சொல்வதாகவும் சுந்தரியும் தானும் இனிமேல் அவளுக்கு அடிமைகளாகச் சேவகம் செய்தாலும் அந்த நன்றியை அடைக்கமுடியாது
என்றும் சந்திரன் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு
அகன்றான்.
'சுந்தரி எவ்வளவு கைகாரியாக இருக்கிறாள்? சந்திரன் மீது அவள் அண்ணன்
சுமத்திய பழிகளைத் துடைக்க சிறிதும் முயலவில்லையே, மாறாகச் சந்திரனின் குழந்தையைச் பெற்றெடுப்பதற்காகவே தன் அண்ணனை எதிர்த்துப்
பேசவில்லை என்று எவ்வளவு அழகாக நாடகம் ஆடி இருக்கிறாள். ஆனால்
சந்திரன் அப்பாவியாக அனைத்து நாடகத்தையும் நம்பி மோசம் போகப்போகிறான். தான்தான் நாடகம் ஆடப் போவதாகப் பழியைத்
தன்மேல் வேறு சுமத்திக் கொள்கிறானே!'
'கடவுளே! என் கணவனைக் காப்பாற்றவே
முடியாதா?'
அவன் கங்கைப் பிரவாகத்தில்
சிக்கி இழுத்துச் செல்லப்படுகிறான். ஆனால் அவன் அதைச் சற்றேனும்
உணர்ந்தான் இல்லை. ஏதோ புதுமையாக இருக்கிறது
என்று எண்ணிக்கொண்டே செல்கிறான். அந்தப் பிரவாகம் அவனை உருட்டிச்சென்று ஆயிரம்
அடி உயரத்திலிருந்து வீழ்த்தி நிலைகுலையச் செய்யப்போகிறது என்பதை அறியாமல் இருக்கிறான்.
சந்திரனின் அநியாயமான அப்பாவித்தனத்தை நினைத்து நோவாளா? அல்லது அவன் அப்பாவித் தனத்தால்
தனக்கு நேரப்போகும் அவஸ்தைகளை நினைத்து நோவாளா?
இனி அவனைக் காப்பாற்றத்
தனக்கு வலிமையில்லை. வாய்ப்பும் இல்லை. சுந்தரி என்ற நல்ல பாம்பைப்
பற்றி அவள் என்ன உரைத்தாலும்
அவன் நம்பப் போவதில்லை.
நல்ல பாம்பு அழகாகப்
படம் எடுத்து ஆடுகிறது. பாம்புப் பிடாரன் மகுடி ஊதி அதனை எவ்வளவு
அழகாக ஆடவைக்கிறான். மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது; அது தன் விஷப்
பற்களால் கொத்தாதவரை. கொத்திவிட்டால் அதற்கு விஷம் இருக்கிறதா? என்று நாம் யோசித்துப் பார்ப்பதற்குள்
நம் உயிரல்லவா போய்விடும்.
பிறகு பாம்புதான் இருக்கும். அதை உணர்ந்து பார்க்க
நாம் இருக்க மாட்டோம்.
சுந்தரியோடு சந்திரன் இனிக் காலம் காலமாக வாழ்ந்தாலும் அவளுடைய நிஜ சொரூபம் அவன்
கண்களுக்குப் புரியப்போவதில்லை. அவளுடைய இரண்டு வேடங்களில் ஒன்ற மட்டுமே அவனுக்குக்
காணக் கிடைக்கும். மற்றொன்றை சுந்தரி நிச்சயமாக அவனுக்குக் காட்டவே மாட்டாள். அதற்குச் சந்தர்ப்பமும் வாய்க்காது. அதனை வெளிப்படுத்த வேண்டுமானால்
இன்னும் இருபது முப்பது வருடங்கள் தாட்சாயணி சந்திரனோடு பொறுமையாக வாழ்ந்து மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டுச்
சுந்தரியின் முகத்திரையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவமாகக் கிழிக்க வேண்டும். அதற்குள் தாட்சாயணிக்கென்று எதுவும் மிஞ்சி இருக்காது. அதனால் தாட்சாயணி அடையப்போகும் வெற்றியில் எந்தப் பெருமிதமும் ஒட்டி இருக்காது. நொந்து நூலாகி 'இதுதான் வாழ்க்கை' என்று அவளே விரக்தியில் அனைத்தையும்
ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் பெற்றுவிடுவாள்.
சுந்தரி விஷத்தைச் சந்திரனுக்குக் காட்ட மாட்டாள். அவள் அவன் மகுடிக்கு
மயங்குவதைப் போல் படமெடுத்து ஆடி
அழகு காட்டுவாள்.
விஷத்தைச் சந்திரன் அறியாமல் தாட்சாயணியின் தலையில் கக்குவாள். அது கொஞ்சம் கொஞ்சமாகத்
தன்னைச் சாகடித்துவிடும். சுந்தரி நிச்சயமாகத் தன்னை ஏதேனும் செய்து அப்புறப்படுத்திவிடுவாள்.
பிறகு எல்லாம் அவள்
ராஜ்ஜியம்தான். அவள் மிக மிக
நல்லவள், அடக்கமானவள் என்ற போர்வையில் சந்திரனை
ஏமாற்றி சொத்து, சுகம், கௌரவம் என எல்லாவற்றையும அனுபவிப்பாள்.
- தாட்சாயணியின் கண்முன் எதிர்காலம் மெல்ல மெல்ல விரிந்தது.
ஒருவருடைய வாழ்க்கை ஒரே மாதிரியாகப் போகும்போது
அதற்கு அடுத்த பக்கம் இருக்கிறது என்பது அறியப்படாமல் போகிறது.
பகலில் வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு அதுவே சாஸ்வதம் என்பதுபோல் நாம் நம் பணிகளைச்
செய்வதில்லையா?
யார் ஒருவருக்குத் துன்பம்
வருகிறதோ அப்போதுதான் போராட்ட குணம் எழுகிறது. அதைப் பார்த்து அவர்களைக் கெட்டவர்கள் என்று முத்திரை குத்துகிறோம். எந்தத் துன்பமும் நேராத நிலையில் புன்னகையோடு வாழ்க்கை நடத்துபவர்களை நல்லவர்கள் என்று தரம் பிரிக்கிறோம்.
நாயிடம் எலும்பை உண்ணக்கொடுத்துவிட்டு பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தால் அது மிகச் சாதுவான
மிருகம் என்று எண்ணத் தோன்றும். அதுவே அதனிடமிருந்து எலும்பை எடுக்க முனைந்தால், எலும்பைப் போட்டவரே யானாலும் அவர்களை நாய் கடித்துவிடும். அப்போது
அது தனது எஜமானன் என்றும்
பார்க்காது.
தனக்கும் தன் கணவனுக்கும் துன்பம்
நேரப் போவதை நன்றாக அறிந்துகொண்டாள் தாட்சாயணி. அவள் தன் கணவனை
அச் சிக்கல்களிலிருந்து எந்தவிதச் சேதாரமுமின்றிக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாள். அது அவளால் முடியுமா?
கணவனைத் தெருட்ட முயலும் முயற்சியில் அவனாலேயே கெட்டவள் என்று முத்திரை அல்லவா குத்தப்படுகிறாள்.
தாட்சாயணியால் எந்தவிதக் கெடுதியும் தனக்கு வர வாய்ப்பில்லை என்று
அறிந்து வைத்திருக்கிறாள் சுந்தரி. ஏனென்றால் அவள் பக்கம் குழந்தை
என்ற வலிமையான ஆயுதம் இருக்கிறது. அக்குழந்தை கட்டாயம் வேண்டும் என்று நினைக்கும் சந்திரன் அவளுக்குத் துணை வலிமையாக இருக்கிறான்.
அப்படிப்பட்ட நிலையில் சுந்தரி எப்படித் தன் போராட்ட குணத்தைக்
காண்பிப்பாள்.
அவள் ஆயுதம் அன்புதான்.
அதன் கூர்மை கண்களுக்குத் தெரியாது.
ஒரு சாதாரண பேப்பர்
கைகளை வெட்டுமா? ஏன் வெட்டாது? ஒரு
புதிய தாளின் வெட்டுப்பட்ட பக்கத்தால் உடல் தோலில் வேகமாக
இழுத்தால் அது தோலைக் கிழித்துக்
காயப்படுத்திவிடும்.
சுறா மீன் கடலுக்கடியில்
நம் கால்களைக் கடித்துவிட்டாலும் அது நம்மைக் கடித்த
உணர்வே தோன்றாது. நீருக்கு மேலே கொப்பளித்து மிதக்கும்
நமது இரத்தத்தைப் பார்த்துத்தான் சுறாமீன் கடித்துவிட்டது என்பதை உணர்வோம். அந்த அளவிற்கு அதன்
பற்கள் வெகு கூர்மையாக இருக்குமாம்.
சுந்தரியும் கூர்மையான ஆயுதத்தோடு திரிந்தாள்.
பலவற்றை நினைத்துக்கொண்டே தலைகனக்க மெதுமெதுவாகத் தூங்கிப்போனாள் தாட்சாயணி.
(தொடரும்)
No comments:
Post a Comment