Thursday, 5 September 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 22


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 22

                'இதோ பாருங்க நீங்க சொல்றதெல்லாம் வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வராதுங்க! அவ கொழந்தயப் பெத்து நமக்குத் தந்துட்டு விலகிடுவா என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதுங்க.'
                'தாட்சு. . . ! நான் சொன்னா சரியா இருக்கும்னு நீ நம்பறியா இல்லையா?'
            காக்காய் கருப்பு என்றால் நம்பலாம். வெள்ளை என்று சொன்னால்கூட நம்பலாம். வெள்ளைக் கொக்கு கருப்பாய் இருக்கும் என்றால் எப்படி நம்ப முடியும்?
                'இதோ பாருங்க இதெல்லாம் சினிமாவுக்கு வேணுமின்னா சரிப்பட்டு வரலாம். ஆனா வாழ்க்கையில இப்படியெல்லாம் தியாகம் பண்ணுவாங்க அப்படின்னு யாரையும் நம்ப முடியாது.'
                'உனக்குச் சுந்தரியப் பத்தி ஒன்னும் தெரியாது. அவள மாதிரி தியாகத்தன்மை கொண்ட பொண்ணப் பாக்கறது அபூர்வம். அவ கோடியில ஒருத்தி.'
            கோடியில் ஒருத்தியை இவன் எப்படிக் கண்டுபிடித்தான்?
                'வேண்டாம்! பேசாம அந்தக் கருவக் கலச்சுடுங்க' - மன்றாடினாள் தாட்சாயணி.
                'தயவு செஞ்சி அதமட்டும் சொல்லாதே! அந்தக் குழந்த எனக்கு வேணும். அந்த வரத்தை மட்டும் கொடுத்திடு. காலம் பூரா நானும் சுந்தரியும் உனக்கு அடிமைகளாக இருக்கோம். வேலைக்காரங்க மாதிரி செருப்பாக் கெடந்து தேய்வோம்.'
            அவன் சொன்ன சொற்கள் அவள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதைப்போன்று இருந்தது. ஒரு மனைவிக்குக் கணவன் அடிமையாகக் கிடப்பதா? வேலைக்காரனாக அடங்கிக் கிடப்பதா? தன்னில் அவன் பாதி, அவனில் தான் பாதி என்றிருந்த நிலைமை மாறி தனக்கு அவன் அடிமை என்று கூறுவதைச் சகித்துக்கொள்ள முடியுமா? அதுவும் ஒரு வேலைக்காரிக்கு இணையாகத் தானும் ஒரு வேலைக் காரனாய் மாறிவிடுகிறேன் என்கிறானே? - கொத்து பரோட்டாவிற்குக் கொத்தப்படும் பரோட்டா போன்று அவள் இதயம் சில்லி சில்லியாகக் கொத்தப்பட்டது.
                'எல்லாம் ஆரம்பத்துல சாதாரணமாத்தான் தெரியும். ஊசிக்கு எடம் கொடுத்துட்டீங்கன்னா அங்க ஒட்டகமே நொழஞ்சிடுங்க!'
                'நாம சமுதாயத்துல இப்படி தப்பா முடிவு எடுத்துட்டுக் கஷ்டப்பட்டவங்க எத்தனப் பேரப் பாத்துருக்கோம்?'
                'மசாலா அரைக்க வந்துட்டு வீட்டுக்கே மகாராணியா மாறிட்டாளே அபுபக்கரோட ரெண்டாவது பொண்டாட்டி'
                'மங்கம்மா கருப்புன்னு சொல்லிட்டு அஞ்சு மாசக் கொழந்தையோட அவள அம்போன்னு விட்டுட்டுப் புருஷன் போனப்பறம் அவ பட்ட பாடு ஒங்களுக்குத் தெரியாதா?'
                'அப்பா அப்பான்னு கூப்ட்டு மடியில வளந்த அனாதப் பொண்ணு அப்புறம் தன்ன வளத்த டேனியலைக் கட்டிக்கிட்டு மொதப் பொண்டாட்டிய வீட்டை விட்டு வெரட்டின கத மறந்து போயிடிச்சா?'
                'இப்படி சாதி, மதம் பேதம் எதுவும் இல்லாம இந்த ஒரு விஷயத்துல மட்டும் ஆம்பளைங்க ஒரேமாதிரியா ரெண்டாவதா வந்த பொண்டாட்டிக்காக மொத பொண்டாட்டியக் கைகழுவி விட்டது ஒங்களுக்குத் தெரியாதா?'
                'அய்யோ, தாட்சாயணி, அவங்கல்லாம் ரெண்டாவதா வந்தவளக் கல்யாணம் பண்ணிட்டாங்க, அப்படி இல்லன்னா வெச்சிக்கிட்டாங்க. ஆனா சுந்தரி அப்படியில்ல. அவ தியாகம் செய்றதுக்கே வந்தவ. ஒரு வாடகத் தாயா இருந்து கொழந்தய மட்டும் பெத்துக் குடுத்துட்டுப் போயிடுவா, என்ன நம்பு?'
            அப்படி என்றால் சந்திரன் மடியில் சுந்தரி தலைவைத்துப் படுத்ததும், அவன் அவளை ஆதரவாய்த் தீண்டுவதும் எந்தக் கணக்கில் அடங்கும்? - அக் கேள்விகளைச் சந்திரனைப் பார்த்து அவள் எப்படிக் கேட்பாள்.
            கணவனே என்றாலும் கேள்விகளைத் தன் நாவால் எப்படிக் கேட்கமுடியும்?
            கொஞ்ச நேரம் முன்னால்தான் சுந்தரியும் தானும் வேலைக்காரர்களாகக் கிடப்போம் என்றான். இப்போதோ அவள் குழந்தையைப் பெற்றுவிட்டுப் போய்விடுவாள் என்கிறான். இவற்றில் எது நிஜம்? எது நடக்கப்போவது? அவன் அவனுக்கே தெரியாமல் மாற்றி மாற்றிப் பேசினான்.
            குழந்தை பெற்ற பிறகு அவளை என்ன செய்யப் போகிறீர்கள்?
                'நீ என்ன சொல்றியோ அதச் செய்யறோம்'. - தன் மனைவியை எவ்வளவு அழகாக வட்டத்தில் சிக்க வைக்கிறான்.
            திரைப்படங்களில் வருவதுபோல் ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்துக்கொடுத்து 'இவளை எனது தங்கையாக ஏற்றுக் கொள்கிறேன், கட்டுங்கள் தாலியை' என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்க்கின்றானா?
            சந்திரன் பேசும்போதெல்லாம் தாட்சாயணியை மட்டும் ஒரு கட்சியாகவும் தன்னையும் சுந்தரியையும் சேர்த்து மற்றொரு கட்சியாகவும் நிறுத்தியது அவன் மனத்தை நன்றாகவே புலப்படுத்தியது. சந்திரன் என்பது சந்திரன் மட்டுமல்ல. அவனில் பாதியாக ஏற்றுக் கொண்டுவிட்ட சுந்தரியையும் சேர்த்துத்தான் என்பதை அவன் குறிப்பால் புலப்படுத்துகிறான். ஏற்கெனவே அவன் மனத்தில் தாட்சாயணி இருந்தாளா? அப்படியென்றால் இப்பொழுது அவள்               வெளியேற்றப்பட்டாளா? அல்லது சுந்தரி தாட்சாயணி மேல் ஏறி அமர்ந்துகொண்டாளா?
            சந்திரன் தன் மனத்தைத் தாட்சாயணிக்குத் திறந்து காட்ட மறுத்தான். அவன் மனத்தில் அண்மைக் காலமாகச் சுந்தரி தொடர்பான எத்தனையோ விஷயங்கள் ஆக்கிரமித்துவிட்டன. மனத்தைத் திறந்தால் அவையெல்லாம் எங்கே வெளியில் கொட்டி, சில மாதங்களாக மறைத்த அவன் இரகசியங்கள் தாட்சாயணிக்குத் தெரிந்து அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சினான்.
            தாட்சாயணி அனைத்தையும் வெளியே கொட்டுங்கள் என்று கூறியும் அவற்றை அவன் வெளியிடத் தயங்கினான்; தேவையில்லை என்று கருதினான். தான் சுந்தரிக்கு ஓர் இன்றியமையாத இடத்தைக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர்த் தன் மனைவியே யானாலும் அவளிடம் வெளிப்படுத்துவது அனாவசியம் என்று நினைத்தான்.
                'என் உணர்வுகளைப் புரிந்துகொள்' என்று மன்றாடினான் சந்திரன். தானும் அவளும் ஒன்று என்று கூறிவந்தவன் இப்போது தனக்கென உணர்வுகள் இருப்பதாகவும் அவற்றை அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியது தாட்சாயணிக்கு வேதனை அளித்தது.
            கடவுளே நான் என் கணவனை எப்படிக் காப்பாற்றுவேன்?
            பொதுவான விஷயம் என்றால் நண்பர்கள் மூலம்  அறிவுரை சொல்லச் செய்யலாம். அந்தரங்க விஷயத்தை யாரிடம் கூறி உதவி கேட்பாள்?
            அவர்கள் தன் கணவனைப் பற்றித் தவறாக நினைத்தால் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியுமா?
            தாய் தந்தையிடம்தான் பஞ்சாயத்து வைக்க முடியுமா? அவசரப்பட்டு அவனை ஏதேனும் பேசிவிட்டால் என்னாவது? அந்த விஷயத்தை ஊர்முழுக்கத் தம்பட்டம் அடித்துச் சொல்லிவிட்டால்?
            ஆனால் இந்தமாதிரி விஷயங்களை எத்தனை நாட்களுக்குத்தான் மறைக்க முடியும்?
                'நீ மட்டும் சரி என்று ஒத்துக்கொள், பிறகு இந்தச் சமுதாயத்தைப் பற்றி எனக்கு எந்தவித அக்கறையும் இல்லை' என்கிறான் சந்திரன்.
            எப்படி அவனால் இப்படிப் பேசமுடிகிறது. அப்படி என்றால் இந்த விஷயங்களைப் பற்றித் தன் நண்பர்களிடம் சாதாரணமாகப் பரிமாறிக்கொள்ள முடியுமா அவனால்?
            அதற்கு அவன் நிச்சயம் ஒப்பமாட்டான்.
            தன்னால் இச்செய்தியைத் தன் நண்பர்களிடம் கூறி ஆறுதலோ ஆலோசனையோ பெற முடியுமா?
            அடுத்த நிமிடம் இச்செய்தி அலுவலகம் முழுதும் பரவிவிடாதா?
            அலுவலகத்தில் தன்னைப் பார்த்து அனைவரும் கேட்கமாட்டார்களா -
                'ஒனக்கும் உன் புருஷனுக்கும் தகராறாமே?'
                'எவளோ ஒருத்தி ஒனக்குச் சக்களத்தியா வந்துட்டாளாமே?'
                'உன் புருஷன் ஒனக்குக் கொழந்த பொறக்கலன்னு ஒன்னத் தள்ளி வச்சிட்டு இன்னொரு பொண்ணோட குடித்தனம் நடத்தறானாமே?'
                'ஒன் புருஷன் வேற ஒருத்தியோட போறத நாங்க அங்க பாத்தமே, இங்க பாத்தமே, அரசல் புரசலா காதுல விழுந்த இந்த சமாசாரம் உண்மைதானா?'
            இப்படியெல்லாம் தன்னை நோக்கிவரும் வினாக்களுக்கு அவள் இனி என்ன பதில் சொல்வாள்?
                'ஐயோ, பாவம்'
                'என்னமா மகாராணியா வாழ்ந்தா! இப்ப பாருங்க. எல்லாம் நேரம்!'
                'என்ன படிச்சி, என்ன சம்பாதிச்சி என்ன லாபம்? புருஷன கைக்குள்ள வச்சிக்கத் தெரியல', என்றெல்லாம் தன் பின்னால் எழுப்பப்படும் அனுதாபக் குரல்களிலிருந்து அவள் எப்படித் தப்புவாள்.
                'இந்தச் சாருக்கு ரெண்டு பொண்டாட்டி டோய்' என்று அவன் பள்ளியில் முகம் தெரியாமல் எழுப்பப்படும் மாணவர்களின் குரலைச் சந்திரன் எளிதாக ஜீரணித்து விடுவானா?
                இவற்றை எல்லாம் அவனுக்கு எப்படிப் புரியவைப்பது? யார் புரியவைப்பது?
(தொடரும்)

No comments:

Post a Comment