Tuesday, 3 September 2019

சொர்க்கத்தில் நவபாரதம் : காட்சி 6


சொர்க்கத்தில் நவபாரதம்
                                                                                                               
காட்சி 6

நிகழிடம்        : எமனால் உருவாக்கப்பட்ட புது நகரம்
நிகழ்த்துவோர் : சிவன், கணபதி, முருகன், யமன்,  சித்திரகுப்தன், நாரதர்.
                                                                                                                                                               
***
            எமனால் உருவாக்கப்பட்ட அந்தத் தற்காலிக நகரில் சிலர் கூட்டமாகக் கூடி ஆவேசமாக ஏதோ சர்ச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். சிலர் தனித்தனியே அமர்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்கின்றனர்.  அங்கே இருக்கும் எவருக்கும் வாழ்க்கைக் கணக்கு முடியாததால் அவர்கள் செய்த பாவத்திற்கேற்ப எந்தவித தண்டனையும் இன்னும் கொடுக்கப்படவில்லை. பூலோகத்தில் உயிருடன் இருந்திருந்தால் அன்றாடம் அவர்கள் ஆற்றவேண்டிய பரபரப்பான பணிகள் எதுவும் இங்கே அவர்களுக்கில்லை. அதனால் நேர்முகத் தேர்விற்குச் சென்றோரின் மனநிலையில் அவர்கள் இருந்தார்கள். மொத்தத்தில் அந்நகரம், தேவலோகத்தில் ஒரு பூலோகமாகக் காட்சியளித்தது.
***
முருகன் : வணங்குகிறேன் தந்தையே!

சிவன் : வா மைந்தா.  அனைவரும் நலந்தானே?

முருகன் : நலந்தான் தந்தையே.  நீங்கள் எங்கோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்போல் தோன்றுகிறதே!

சிவன் : ஆமாம் சுப்ரமணியா.  யமன் ஒரு புதுநகரம் அமைத்திருப்பதாகக் கூறினான்.  அதைப் பார்வையிடலாம் என்றுதான் சென்று கொண்டிருக்கிறேன்.  நீ வேண்டுமானால் உடன் வருகிறாயா?

முருகன் : தங்கள் சித்தம் தந்தையே!  அதோ தமையனாரும் வருகிறார்.  அவரையும் அழைத்துச் செல்லலாம்.

கணபதி : நான் எங்கும் வரவில்லை.  இந்த உடம்பை வைத்துக்கொண்டு என்னால் நடக்க முடிவதில்லை.
                                (அங்கே நாரதர் வருகிறார்)
நாரதர் : தொந்தி வயிறோனே! உடல் பருத்தவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  அது உடம்பிற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

கணபதி : என் தோற்றத்தைக் கிண்டல் செய்தது போதும்! நீர் ஏன் இங்குச்சம்மன்இல்லாமல்ஆஜர்ஆகிறீர்?  சற்று முன்னால் ஸ்ரீமன் நாராயணனைக் காணச்செல்கிறேன் என்று கூறி விடைபெற்றீரே?

நாரதர் : போகலாம் என்றுதான் நினைத்தேன்.  வழியில் இந்திரன் மாளிகைக்குச் சென்றேனா?  அதன்பிறகு. . .  ஆம். இப்படித் திரும்பிப் பார்த்தால் . . . முக்கண்ணன் மகன்கள் புடைசூழ நிற்பதைப் பார்த்தேன்.  அதனால் செய்தி அறியலாம் என்று வந்தேன்.

முருகன் : அண்ணா . . . விடுங்கள்! அவரும் வந்து விட்டுப் போகட்டும். பேச்சுத் துணையாக இருக்கும்.  ஆமாம் நாரதரே! ஏதோ நடைப்பயிற்சி என்று ஆரம்பித்தீரே?

நாரதர் : அதைத்தானே சொல்லவந்தேன். மானிடர் பலர் தற்போது உடலுழைப்பைப் பெரிதும் மறந்துவிட்டார்கள். எல்லாவிதமான வேலை களைச் செய்யவும் தற்பொழுது இயந்திரங்கள் வழக்கில் வந்துவிட்டன.  அதுமட்டுமல்லாமல் அவர்கள் பெரும்பாலான நேரம் அமர்ந்தே பணி செய்வதுபோல் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் சிறுவர்கள்கூட ஓடியாடி விளையாடுவதில்லை.  ஓய்வு நேரத்தில் எல்லாம் தொலைக்காட்சிதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வசதியிருப்பவர்கள்வீடியோ கேம்ஸ்விளையாடுவார்கள்.

கணபதி : குழந்தைகள் ஏன் விளையாடுவதில்லை?

நாரதர் : தொகுப்பு வீடுகளிலும் அடுக்குமாடி வீடுகளிலும் குடியிருக்கும் அவர்களுக்கு விளையாட எங்கே இடம் இருக்கிறது?  அதனால் சிறுவயதிலேயே கணபதிபோல் உடல் பெருத்துவிடுகிறார்கள்.  அத்துடன் அவர்களுக்கு எல்லாவித நோய்களும் வந்துவிடுகின்றன.  அதனால்தான் அவர்கள் கொழுப்பைக் குறைக்க இந்த நடைப்பயிற்சி!

கணபதி : நாரதரே! நீங்கள் சொல்லவந்ததை மட்டும் சொல்லக்கூடாதா? இடையில் என்னை ஏன் உவமை காட்டுகிறீர்?

நாரதர் : ஒரு பேச்சுக்குச் சொன்னேன் தும்பிக்கையானே! கோபித்துக்கொள்ளாதே. அலுவலகப் பணி முடிந்துவிட்டால் மானிடர் எப்பொழுதும் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  பூலோகத்தை விடுங்கள்!  நம் இந்திரனை எடுத்துக்கொள்ளுங்களேன்.  அவர்கூட. . .

சிவன் : என்னடா விஷயத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லையே என்று பார்த்தேன்.  தேவேந்திரன் மாளிகையில் என்ன செய்தி?

நாரதர் : மகாதேவா, அவர் இன்று தலைவலி என்று கூறிச் சபைக்கு வரவில்லை அல்லவா?  அதனால் உடல்நலம் விசாரிக்கலாம் என்று சென்றேன்.  ஆனால் அவரோவென்றால். . .

சிவன் : அவர் உடல் நலத்தோடு இருந்தாரோ இல்லையோ! ஆனால் உன்னைப் பார்த்தபிறகு நிச்சயமாக அவர் உடல்நலம் குன்றியிருக்கும்.  அப்படித்தானே?

நாரதர் : ஆயிரம் கண்ணுடையானாகிய இந்திரன் நன்றாகவே இருக்கிறார்.  அதுமட்டுமில்லை சங்கரனே! எப்பொழுதும்பேஷன் ஷோசேனலைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் இப்பொழுது அவரது பொழுதுபோக்கே!
சிவன் : அது என்ன அவ்வளவு நன்றாக இருக்குமோ?

முருகன் : அதில் விதவிதமான உடைகளை அணிந்துகொண்டு பெண்களும் ஆண்களும் இப்படியும் அப்படியும் அசைந்து நடப்பார்கள் தந்தையே!

நாரதர் : இதைப்பற்றித் தணிகைவேலனும் அறிந்து வைத்திருக்கிறார் பாருங்கள்! என்ன ரசனை!

கணபதி : ஹோ!. . . அழகுக் கலை என்று சொல்லுங்கள்!
நாரதர் : அழகுக் கொலை! இதில் பெரும்பாலும் பெண்கள் அரைகுறை உடையோடு நடந்து செல்வதைத்தான் ஆடவர் விரும்பிப் பார்க்கிறார்கள்.  அதிலும் திருமணமாகாத வாலிபர்கள், சிறுவர்கள் நிலையை யோசித்துப் பாருங்கள்.

சிவன் : அப்படியென்றால் பார்க்கவேண்டிய விஷயம்தான்!

நாரதர் : அட நீங்களுமா?

சிவன் : அடடா. . . நான் கண்களால் பார்ப்பதைச் சொல்லவில்லை. ‘எண்ணிப்பார்க்கவேண்டிய விஷயம் என்றுதான் சொன்னேன். 

நாரதர் : அத்துடன் தேவேந்திரனையும். . .

சிவன் : தேவேந்திரனையும் நிச்சயம் எச்சரிக்கை செய்ய வேண்டும்.  இங்கே இருப்பவர்கள் அதனைப் பார்த்துத் தங்கள் தவவலிமையை இழந்துவிடக் கூடாதல்லவா!  ஆனால். . . அவருக்கெப்படி இந்தத் தொலைக்காட்சித் தொடர்பு கிடைத்தது?

நாரதர் : எல்லாம் திருட்டுத்தனமாகப் பெற்றதுதான்.  இப்பொழுதெல்லாம் திருட்டுவிசிடி’, திருட்டுகேபிள் கனெக்ஷன்எல்லாம் சகஜமாகி விட்டது திருநீலகண்டா!

சிவன் : எதில்தான் திருட்டுத்தனம் செய்வது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது!

கணபதி : இதோ யமனின் புது நகரம் வந்துவிட்டது. பேசிக்கொண்டே வந்ததில் களைப்பே தெரியவில்லை தந்தையே!

எமன் : வாருங்கள் வாருங்கள்!  நீங்களெல்லாம் இன்று வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

நாரதர் : அப்படியென்றால் எங்கள் வருகையைத் தாங்கள் விரும்பவில்லை என்று சொல்லுங்கள்!

எமன் : தங்கள் அனைவரின் வருகையால் எனது நகரம் பெருமையடைகிறது.  நாரதருக்கு எப்பொழுதும் பொடிவைத்துப் பேசுவதே வழக்கமாகிவிட்டது.

நாரதர் : பழக்கத்தைப் பழகிக்கொண்டேயிருந்தால் பழக்கம் வழக்கமாகிவிடும். வழக்கிமாகிவிடும் பழக்கம் பழகினாலும் பழகாவிட்டாலும் நம்மைவிட்டுப் போகாமல் வழக்கமாகிவிடும்.

சிவன் : எமன் ஏற்கெனவே குழம்பிக்கிடக்கிறார்;  அவரை மேலும் குழப்பாதே நாரதா!
                (எமனிடம்) எமா, இறப்புக்கணக்குகளை எல்லாம் கொண்டுவரச் சொன்னேனே மறந்துவிட்டாயா?

எமன் : எல்லாம் தயாராக இருக்கின்றன சர்வேஸ்வரா!  நாங்கள் தங்கள் கட்டளைக் காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்.

சிவன் : அப்படியா! நாளை காலை நான் ஓய்வாகத்தான் இருப்பேன்.  கணக்குப் பதிவேடுகளோடு ஆலோசனைக்கூடத்திற்கு வந்துவிடு.
எமன் : உத்தரவு சர்வேஸ்வரா!

முருகன் : சித்திரகுப்தா, அங்கே ஒருவர் மும்முரமாக எதையோ படித்துக்கொண்டிருக்கிறாரே, அவர் என்ன எழுத்தாளரா, அல்லது ஆராய்ச்சியாளரா?

சி.கு.   : இரண்டும் இல்லை சூரனை வதைத்தவனே!  கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்என்று யாரோ சொன்னதை நம்பி அவர் எதையாவது எப்பொழுதும் படித்துக் கொண்டே இருப்பவராம். இங்கு வந்ததிலிருந்து படிப்பதற்கு ஏதாவது கொடுங்கள்! படிப்பதற்கு ஏதாவது கொடுங்கள்! என்று நச்சரித்துக்கொண்டே இருந்தார்.  நல்ல பருமனாகஎல்லோ பேஜஸ்என்ற நூல் கிடைத்தது.  அதை அவரிடம் கொடுத்தோம்.  அதையும் அவர் மிகுந்த ஈடுபாட்டோடு விடாமல் புரட்டிக்கொண்டிருக்கிறார்.

கணபதி : அப்படியென்றால் அது மிகச்சிறந்த நூல் என்று கூறு!
எமன் : சொன்னால் நீங்கள் நகைப்பீர்கள்.  அது கவிதையோ கட்டுரைகளோ கொண்ட நூல் அல்ல.  வெறும் தொலைபேசி எண்களைக் கொண்ட நூல்.
சிவன் : வேடிக்கைதான்!. . . அந்த நூல் எப்படி இங்கே?

சி.கு.   : எம் தலைவர் எமனாரின் எருமை பூவுலகம் செல்லும்போது சுவரொட்டிகளைப் பிய்த்துத் தின்று அவற்றின் சுவையில் மயங்கிவிட்டது. அதனால் இங்கு வந்ததும் அசைபோடுவதற்குக் காகிதம் தேடி அலைகிறது. அதனால் கனமான இப் புத்தகங்களைப் பழைய புத்தகக் கடையிலிருந்து வாங்கி வந்தேன் பிரபோ! உங்கள் வாகனமான நந்திக்கு வேண்டுமானால் ஒன்றிரண்டு தரட்டுமா?

சிவன் : பூலோகத்திற்குப் போய் உங்கள் எருமையும் மாறிவிட்டதா? ஐயா!  இந்தப் பழக்கத்தை உங்கள் எருமையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். என்னுடைய நந்தியையாவது இயற்கையோடு வாழ வழிவிடுங்கள்!

எமன் : சித்திரகுப்தா! நீ பேசாமல் இருக்கமாட்டாயா? நகரத்தைச் சுற்றிக்காட்டச் சொன்னால் நம் எருமைப் புராணத்தைப் பாடிக்கொண்டிருக்கிறாய்!

சி.கு.   : பிரபோ! இன்னும் பாருங்கள் வேடிக்கையை.  அங்கே பாருங்கள் . . . ஒருவர் சோகமாக அமர்ந்திருக்கிறார். 

முருகன் : அவர் சோகத்திற்கு என்ன காரணம்?

எமன் : அவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்க வில்லையாம்.

கணபதி : ஏழையோ?

சி.கு.   : ஏழையா?  போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய தந்தைக்கு இலக்குமியின் அருள் கிடைத்திருக்கிறது.  இருந்தும் என்ன பயன்?  அவர் தந்தை பொருளை எல்லாம் செலவு செய்யாமல் சேர்த்துச் சேர்த்து வைத்தார்.  அவரைப் பொறுத்தவரை பணம் என்பது சேர்த்து வைக்கத்தான்.  செலவுசெய்து மனமகிழ்ச்சி பெறுவதற்கல்ல.

முருகன் : அதற்கும் இவருடைய சோகத்திற்கும் என்ன தொடர்பு?

எமன் : இவர் தந்தை உயிருடன் இருக்கும் வரை இவருக்கென்று எந்தப் பணமும் கொடுக்க வில்லையாம். எதற்கும் செலவு செய்யவும் இல்லையாம். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்குக்கூட ஆயிரம் கணக்குப் பார்ப்பாராம். தன் இறப்பிற்குப் பிறகு சொத்தை எடுத்துக்கொள்ளுமாறு சொல்லி விட்டாராம்.

சிவன் : அம்மட்டில் சந்தோஷப்படுவதுதானே!

சி.கு. : எங்கே சந்தோஷப்படுவது? ஒரு வெடி குண்டு விபத்தில் மொத்த குடும்பமும் மாட்டிக்கொண்டு மடிந்து இங்குதானே கிடக்கிறார்கள்.

நாரதர் : மக்களுக்கு நல்லநல்ல சிந்தனைகளை ஊட்டுவதற்காகவே அவ்வப்போது நாம் அறிவாளர்களைப் படைக்கிறோம்.  அவர்கள்செல்வம் நிலையில்லாததுஎன்று எவ்வளவு எடுத்துரைத்தாலும் மக்கள் அதைச் சிறிதும் உணருவதில்லை.

முருகன் : செல்வம் என்பது வாழ்க்கையை நுகரக் கிடைத்த தோணி என்று அறியாது இருக்கின்றனர் பலர். ஆற்றைக்கடந்தால் படகு விணாகிவிடும் என்று நினைத்துப் படகைப் பத்திரமாய் வைத்துவிட்டு வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கும் அறிவிலிகள்!

கணபதி : செல்வத்தின் பயனே வாழ்க்கையை இனிதாய் நுகர்வதுதான் என்று அறியாமல் வாழ்க்கையின் முழுப்பயனே செல்வத்தைச் சேர்ப்பதுதான் என்று தவறாக எண்ணி செல்வத்தைச் சேர்த்துச் சேர்த்து, தானும் பயன்படுத்தாமல் தன்னைச் சார்ந்தாரையும் பயன்படுத்தவிடாமல் செய்யும் அறிவிலிகளும் பூலோக அதிசயம்தான்!

நாரதர் : அதுமட்டுமில்லை மகேஸ்வரா! தம்முடைய பிள்ளைகளுக்கு முதலிலேயே சொத்தினைப் பிரித்துக்கொடுக்க அவர்களுக்கு ஏனோ மனம் வருவதில்லை. ‘ஈத்துவக்கும் இன்பம்என்பதை இவர்கள் சிறிதும் அறியாமல் இருக்கிறார்கள்.  இறக்கும் நாளை யாரால் அறியமுடியும்?  அவர்கள் இறந்தவுடன் நடுவீட்டில் பிணம் கிடக்கும்போதே அன்பால் அழவேண்டிய பிள்ளைகள்சொத்து யாருக்கு?’ என்ற தகராறில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். சில நேரங்களில் கொலைகள் கூட நடந்துவிடுகின்றன.  இப்படி ஆசை ஆசையாய் வளர்த்த தம் பிள்ளைகள் மனம் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நீதி மன்றத்திற்கும் சிறைக்கும் செல்ல பெற்றோரே காரணமாகி விடுகிறார்கள்.

சிவன் : இத்தகைய மூடர்களை எத்தனை நீதி இலக்கியங்கள் படைத்தாலும் திருத்த முடியாது. காலனே! இத்தகையோருக்குயானைத்தீஎன்னும் பசியை ஏற்படுத்து.  உண்பதற்கு உணவாகப் பொற்காசுகளைக் கொடுத்து உண்ணச்சொல்!

எமன் : ஆகட்டும் சர்வேஸ்வரா!

சிவன் : என்ன அது? அங்கே சிலருடைய வாயைத் துணியால் ஏன் கட்டி வைத்திருக்கிறாய்? முதலில் அவர்களுடைய வாய்க்கட்டுகளை அவிழ்த்துவிடு.

சி.கு.   : பிரபோ, பிரபோ, அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்!

முருகன் : என்ன பிதற்றுகிறாய்? வாய்க்கட்டை அவிழ்த்தால் என்ன கேடு நிகழ்ந்துவிடும்?  அவர்கள் என்ன நாயா? கடித்துக் குதற. . .

எமன் : வாயால் கடித்துக் குதறினால் மருந்திட்டு ஆற்றிவிடலாம்.  ஆனால் அவர்கள் வார்த்தை களால் கடித்துக் குதறுகிறார்கள்.

கணபதி : அவர்களுக்கு நீ இப்படி அஞ்சுவது அதிகப்படியாக எனக்குத் தோன்றுகிறது.

எமன் : நிச்சயமாக நான் பெரிதுபடுத்தவில்லை மூசிக வாகனனே!  இவர்கள் பூலோகத்தில் அரசியல்வாதிகளாக இருந்தவர்கள்.  இங்கு வந்ததிலிருந்து யாரையேனும் தாக்கிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.  வாயை மூடுவதே கிடையாது. 

சி.கு.   : அது   மட்டுமில்லை பிரபோ.  ஒருநாள் யாரைப்பற்றி மகா மட்டமாகக் குறிப்பிட்டுப் பேசுகிறார்களோ அவர்களைப் பற்றி மறுநாள் புகழ்ந்து பேசுகிறார்கள்.  முதல்நாள் புகழ்ந்து பேசியவர்களைப்பற்றி மறுநாள் கேவலமாகப் பேசுகிறார்கள்!

சிவன் : கேட்பதற்கே விநோதமாக இருக்கிறதே!

நாரதர் : ஆனால் உலக மக்களுக்கு இவற்றை எல்லாம் கேட்டுக்கேட்டுச் சலித்து விட்டது போலும். மக்களைப் பொறுத்தவரை இது ஒரு அரசியல் நாடகம்.  முதல்நாள் ஒரு கட்சியில் இருப்போர் எதிர்க்கட்சியைப் போட்டுமிதித்துப் பேசுவதும், மறுநாள் அந்த எதிர்க்கட்சிக்குத் தாவிவிட்டால் முதலில் தான் இருந்த கட்சியைச் சாக்கடையாக தூஷிப்பதும் வாடிக்கையான வேடிக்கை.  அங்கு இந்தத்தாவல்மாறிமாறி நடந்துகொண்டே இருக்கிறது.

முருகன் : பிறகு மக்கள் எப்படி இவர்களைத் தலைவர்களாக ஆட்சி அமைக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

நாரதர் : வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் பெயரும் சின்னமும் இருக்கிறதே அல்லாமல் தேர்தலில் நிற்கும் எவரும் தகுதியற்றவர் என்று நினைக்கும் வாக்காளர்நிராகரிப்பு ஓட்டுஅளிக்க வழியில்லை.  அப்படி இருந்தால் அதற்கு அஞ்சியாவது வேட்பாளர்கள் கூடிய மட்டும் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வார்கள். அத்தகைய ஒரு வசதி தற்போது இல்லாததால் தேர்தலில் நிற்கின்ற யாரேனும் ஒருவருக்கு மக்கள் ஓட்டுப்போட்டே ஆகவேண்டி  இருக்கிறதாம்.

முருகன் : மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆட்சி செய்வதால் மக்களுக்குத்தானே நன்மை ஏற்படும் நாரதா?

நாரதர் : எந்தக் கட்சி எந்தக் கட்சியோடு இணைவது, எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்றெல்லாம் முடிவெடுக்கும் அதிகாரம் சில தலைவர்களின் கைகளில் உள்ளது கடம்பா! அங்கே மக்களின் கருத்துகளுக்கு எல்லாம் மதிப்பில்லை.

சிவன் : நீ சொல்வதைப் பார்த்தால் இதனை மக்கள் ஆட்சி என்று கூறுவதைவிட மந்திரி ஆட்சி என்று கூறலாம்போல் இருக்கிறதே!

நாரதர் : உண்மைதான். மக்களாட்சி என்பது உண்மையில் ஒரு மாயைதான். தலைவர்கள் நினைத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை நீக்கலாம், மறுதேர்தல் வைக்கலாம், பணி, பதவி ஒதுக்கீடு செய்யலாம், தேவைப்படும் போது கதவடைப்பு, ஊர்வலம், போராட்டம் நடத்தலாம்; அனைத்தும் பொது மக்களின் முழுமனத்தோடு செயல்படுகின்றன என்ற போர்வையில்!  

கணபதி : இவற்றால் அவர்களுக்கென்ன இலாபம்?

நாரதர் : இலாபம் இல்லாமலா? கோடி கோடியாய்ப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில்தான் பெரும்பாலும் அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டி இடுகிறார்கள். நாட்டிற்கு நல்லது செய்யவேண்டும் என்பதற்காகப் போட்டி போடுபவர்கள் மிக மிகக் குறைவு. 

சிவன் : அறிஞர்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களின் கண்களைத் திறக்கக்கூடாதா?

நாரதர் : அவை நெற்றிக்கண்ணா?  திறப்பதற்கு?

சிவன் : நாரதா! அதிகப் பிரசங்கி!. . .

நாரதர் : கோபித்துக் கொள்ளாதீர் ஈஸ்வரா!  ஓர் உவமைக்காகச் சொன்னேன்! நீங்கள் சொல்வதுபோலவே அறிஞர்கள் செய்யலாம். இதற்கு முதலில் சில சட்டங்களை இயற்ற வேண்டும்.  வேலைவாய்ப்புகளுக்குக் கல்வித் தகுதியை நிர்ணயிப்பதுபோல் தேர்தலில் நிற்பதற்கும் பட்டப்படிப்பு வற்புறுத்தப்பட வேண்டும். இளமைத் துடிப்புள்ளவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்.

சிவன் : அப்படியென்றால் வயதானவர்கள் ஆட்சியமைக்க அருகதையற்றவர்கள் என்று சொல்கிறாயா? நானும் வயதானவன்தான்!

நாரதர் : நான் அப்படிச் சொல்வேனா? அனுபவத்தோடு இளமை போட்டியிட முடியுமா? உடல் தளர்ந்து மூப்புற்ற தலைவர்கள் வெளியிலிருந்து தங்கள் ஆலோசனைகளைக் கூறி நாட்டைச் சீராக்க வேண்டுமே அல்லாது, பதவிகளில் அமர்ந்து அவர்களுடைய மருத்துவச் செலவுக்கு அப் பதவிகளை ஒரு வழியாகப் பயன்படுத்தக் கூடாது. எனவே அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதை அரசியல் பதவிகளுக்கும் வரையறுக்க வேண்டும். அதுமட்டுமல்லாது பொருள் ஈட்டுவோர் தங்கள் வருமானக் கணக்கை வருடந்தோறும் அரசுக்குச் சமர்ப்பிப்பது போல் அரசியல்வாதிகளும் தங்கள் வருமானக் கணக்கைத் தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

சிவன் : நன்றாக இருக்கிறதே! இச்சட்டங்களை எல்லாம் இயற்றிவிட்டால் நாட்டின் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடுமே!

நாரதர் : பிரச்சனை என்னவென்றால் பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதான் மகேஸ்வரா! இவற்றைச் சட்டமாக்கும் உரிமை அரசியல் தலைவர்களிடம்தான் உள்ளது. இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டால் அவர்களுடைய பதவிதானே முதலில் பறிபோகும்.  மாலை மரியாதை, வாழ்த்து வகையறாக்கள் கிடைக்காது.  அதற்குப்பிறகு அவர்களை யார் திரும்பிப் பார்ப்பார்கள்? அப்படியிருக்கும்போது அவர்கள் எப்படி இதற்கு உடன்படுவார்கள்? 

கணபதி : அப்படியென்றால் இதற்குத் தீர்வு?

நாரதர் : காலம்தான் பதில்சொல்ல வேண்டும்!

எமன் : இப்போது சொல்லுங்கள் சர்வேஸ்வரா, இவர்கள் வாய்க்கட்டை அவிழ்த்துவிடவா?

சிவன் : ஐயோ, வேண்டவே வேண்டாம்.  பூலோகத்தை அவர்கள் குழப்பியது போதும்.  இந்தத் தேவலோகத்தையாவது நாம் காப்பாற்றிக்கொள்வோம்!

கணபதி : எந்தையே, அங்கே சிலர் குழுவாக ஏதோ விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்.  நாம் போய் என்னவென்று பார்ப்போமா?

சிவன் : நீ வேண்டுமானால் போய்ப் பார்.  இங்கு வந்ததில் - இம்மக்களின் போக்குகளைக் கேட்டதில் நான் என்றுமில்லாத களைப்பை அடைந்துவிட்டேன்.  முதலில் பிரம்மனைச் சந்தித்து நற்பண்புகள் செறிந்த மனிதர்களைப் படைக்க என்ன செய்வது என்று ஆலோசனை செய்யவேண்டும்.

                    (சிவன் கண்களை மூடிக் களைப்போடு அமர்கிறான்)
***
(தொடரும்)

No comments:

Post a Comment