சொர்க்கத்தில் நவபாரதம்
காட்சி 7
நிகழிடம்
: ஆலோசனைக் கூடம்
நிகழ்த்துவோர்
: சிவன், உமை, வசிட்டர், எமன்,
சித்திரகுப்தன், கணக்கர் சிரலிபி,
உதவியாளன் யமாள் என்னும் கிங்கரன், நாரதர்.
***
ஆலோசனைக் கூடத்தின் மேசைகளில் மக்களின் இறப்புக் கணக்குகள் அடங்கிய பெரிய பெரிய பதிவேடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. தலை
யெழுத்தின் அடிப்படையில் மரணமடையும் மனிதர்களின் இறப்புக் கணக்குகளை அவ்வப்போது சரிபார்த்துக் குறித்து வைக்கும் சிரலிபியும் அவனுடைய உதவியாளனாகிய யமாள் என்னும் கிங்கரனும் அழித்தல் துறையின் தலைமைக் கடவுளாகிய சர்வேஸ்வரன் சிவன் தம்மிடம்கொண்ட நன்மதிப்பில் இன்று எந்தவித வில்லங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையில் மூழ்கிக்
கிடக்கின்றனர். எமனும் சித்திரகுப்தனும் வாயிலின் புறத்தேநின்று சிவனின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆலோசனைக்
குழுவின் அங்கத்தினராகிய வசிட்டர் அங்குவந்து சேர்கிறார். இன்று ஆலோசனைக்குழு கூடுவதை நேற்றே அறிந்துகொண்ட நாரதர் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடுவாரா என்ன? தற்செயலாக
அங்கு வந்ததைப்போன்று வசிட்டரிடம் நலம் விசாரிக்கிறார். அப்போது
சிவன் உமையம்மையோடு எருதுவாகனத்தில் ஆலோசனைக் கூடத்தை வந்தடைகிறார். நாரதர் விடைபெற முயலுவதுபோல் பாசாங்கு செய்ய, அவரை உள்ளே செல்லுமாறு
கண்ஜாடை காட்டுகிறார் சிவன்.
***
சிவன்
: (கணக்குப் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டியவாறு) எமா, ஏன் மக்களின்
இறப்புக் கணக்கு அங்கங்கே அடித்தல் திருத்தலுடன் காணப்படுகிறது?
எமன் : எங்கே
காட்டுங்கள் சர்வேஸ்வரா, ஆமாம். ஏன்
என்று தெரியவில்லையே!
(சித்திரகுப்தனைப் பார்த்து)
சித்திரகுப்தா, ஏன் இப்படி ஏடுகளில்
குளறுபடி செய்துள்ளாய்?
சி.கு. : பிரபோ, என்னை மன்னியுங்கள். எனக்கும்
ஒன்றும் புரியவில்லை. இக்
கணக்குகளை எல்லாம் பார்த்தவன் நம் கணக்குப் பிரிவின்
தலைவன் கணக்குப்புலி சிரலிபிதான்.
எமன் : சிரலிபி! ஏன்
இப்படி உன் இஷ்டத்திற்குக் கணக்கு
வழக்குகளை மாற்றி அமைத்துள்ளாய். உன்
தவறுகளுக்கெல்லாம் என்ன தண்டனை என்று
தெரியுமா?
சிரலிபி
: மன்னியுங்கள் அகிலாண்டேஸ்வரா! சிறிது நாட்களாகவே என் மனநிலை சரியில்லை. எல்லாம்
குழப்பமாக இருக்கிறது. இதைப்
பற்றித் தங்களிடம் பேசவும் மிகுந்த கூச்சமாக இருக்கிறது. என்
உதவியாளன் யமாள் என்னும் இந்தக் கிங்கரனிடம் கூறியதற்கு இதைப்பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டான்.
சிவன்
: இதென்ன தேவ சபை என்று
நினைத்தீர்களா, அல்லது பாரதத்தின் சட்டசபை என்று நினைத்தீர்களா? ஆளாளுக்கு
இன்னொருவர் மீது குற்றம் சுமத்திக்
கொண்டிருக்க. . . ! வெட்கமாயில்லை? அவரவர்
தவறுக்கு அவரவரே பொறுப்பு. சிரலிபி!
உனக்கென்ன குழப்பம்?
சிரலிபி
: அதாவது விஸ்வேஸ்வரா. . .! ஒரு குறிப்பிட்ட நபருக்கு
வாழ்நாளே முடியவில்லை. ஆனால்
அவர் இறந்துவிட்டார். அதனால்
அக்கணக்கை நான்தான் சரியாகக் கணிக்க வில்லை என்று நினைத்துத் திருத்திவிட்டேன். சில
நாட்கள் கழித்து பூலோகத்திற்குச் சென்று பார்த்தால் அவர் மீண்டும் உயிருடன்
உலவிக் கொண்டு இருக்கிறார். என்னவென்று புரியாமல் அவர் உயிருடன் இருப்பதாக
மாற்றினேன். இரண்டொரு
நாளில் அவர் மீண்டும் இறந்துவிட்டிருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு பார்த்தால் மீண்டும் உயிர்த்தெழுந்து உலவுகிறார்.
யமாள்
: அது மட்டுமில்லை எம்பெருமானே. இப்படி
இறப்பதும் உயிர்ப்பதுமாக இருப்பவர்கள் ஒருவர் இருவரல்ல எம்பெருமானே. நிறைய
பேர் இத்தகைய ஆற்றலுடன் திகழ்கிறார்கள். அவர்களைப்
பார்த்தால் மிகுந்த குழப்பமாக இருக்கிறது.
சிவன்
: என்ன கதை விடுகிறீர்கள்?
நீங்களும் குழம்பி எங்களையும் குழப்புகிறீர்கள். உங்கள்
மனநிலையை நல்லதொரு மனநல மருத்துவரிடம் சென்று
நன்கு பரிசோதித்துக் கொள்ளுங்கள்!
வசி.
: ஆஹாஹா.
. . ஆஹாஹா. . .
(வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். அவை
நாகரிகம் இன்றித் திடீரென அவர் இவ்வாறு
சிரித்தது சிவனைக் கோபம் அடையச் செய்கிறது)
சிவன்
: வசிட்டரே! என்ன உங்களை மறந்து
பெருநகை புரிகிறீர்கள்?
வசி.
: மன்னியுங்கள்
வேதமுதல்வா! இவர்கள்
இருவருடைய முட்டாள்தனத்தை நினைத்து என்னை மறந்து பெரிதாகச் சிரித்துவிட்டேன்.
சிவன்
: அப்படியென்றால் இவர்கள் என்ன பிழை செய்தார்கள்
என்பது உங்களுக்குப் புரிந்துவிட்டதா?
வசி.
: ஆமாம் ஊழிமுதல்வா!
சிவன்
: அப்படியென்றால் சற்று எங்களுக்கும் புரியுமாறு விளக்கிச் சொல்லுங்கள்!
வசி.
: அதாவது
முக்கண் முதல்வா! இவர்கள் பூலோகத்தில் சென்று வேலையை முடித்ததும் தம் நடையைக் கட்டாமல்
தொலைக்காட்சி பார்த்திருக்கிறார்கள்!
சிவன்
: அப்படியா?
வசி.
: ஆமாம். தொலைக்காட்சியில்
பல்வேறு ‘சானல்’கள் இருக்கின்றன.
அவற்றில் நிறைய ‘மெகா சீரியல்’ எனப்படுகின்ற
பெருநீளத் தொடர் நாடகங்களை ஒளிபரப்புகிறார்கள். அவற்றை
எல்லாம் மாற்றி மாற்றிப் பார்த்ததால்தான் இவர்களுக்கு இந்தக் குழப்பம் நேர்ந்துவிட்டது.
சிவன்
: எப்படி?
வசி.
: ஒரு
தொடரில் நடிப்பவர் அக்காட்சியில் இறந்துவிட்டிருப்பார். அவரே
வேறொரு தொடரில் ஆரோக்கியத்தோடு நடித்துக் கொண்டிருப்பார். இவ்விஷயங்களை
அறியாமல் அவர்கள் இறந்துபட்டதாக இவ்விருவரும் குழம்பிவிட்டார்கள்.
யமாள்
: அக்காட்சிகள் எல்லாம் நாடகம் போன்று தோன்றவில்லையே! இறந்தவர் கால்களின் பெருவிரல்கள் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்தன. மூக்கில்
பஞ்சு - நெற்றியில் நாணயம் - உடலில்
மாலை - பாடையில் கிடத்தப்பட்ட அசையாத சடலம் - தாரை, தப்பட்டை முழக்கம் - சுற்றத்தினரின் ஒப்பாரி - சுடுகாட்டில் பிணம் கிடத்தி, விறகடுக்கி, தண்ணீர்ப் பானையோடு சுற்றிவந்து தண்ணீர்க்குடம் உடைத்து - ஈமத்திற்குத் தீ மூட்டி - இப்படி
ஒன்றுவிடாமல் முறைப்படி செய்து அவற்றிற்குப் பின்னால் செய்யப்படும் பாலூற்றல், காரியம், புண்ணியாதானம் என அனைத்தும் சீராகச்
செய்யப்பட்டனவே? அதை
எப்படி நாடகம் என்று சொல்கிறீர்கள் மாமுனிவரே?
வசி.
: அது அப்படித்தான், கிங்கரனே! எதையும்
தத்ரூபமாகச் செய்ய வேண்டும் என்று மகா சிரத்தை எடுத்து
இக்காட்சிகளை வடிவமைக் கிறார்கள். மேலும் இக்காட்சிகளை முறை பிசகாமல் படமாக்குவதன்
மூலம் அக் கதைகளை ஆண்டுக்
கணக்கில் நகர்த்திச் செல்லவும் முடியும். அத்துடன்
பெண்கள் சமுதாயத்தின் ஆதரவையும் பெற முடியும்.
உமை : இதில்
எப்படி மகளிரின் ஆதரவு கிடைக்கிறது என்று சொல்கிறீர்கள் முனிபுங்கவா?
வசி.
: ஆம் தேவி, இந்த நாடகங்களைப் பார்த்துப்
பெண்கள் எவ்வளவு அதிகமாகக் கண்ணீர் சிந்துகிறார்களோ அந்த அளவிற்கு அந்நாடகம்
வெற்றிபெற்றதாக அர்த்தம்.
உமை : போயும்
போயும் நாடகங்களைப் பார்த்து ஏன் கண்ணீர் சிந்துகிறார்கள்? மக்கள்
கண்ணீர் சிந்துவதற்கு பூலோகத்தில் இரங்கத்தக்க அவலங்கள் கணக்கின்றி உள்ளனவே!
வசி.
: ஜனனீ! பூலோகத்தில் மக்கள் உண்மையை விட்டுவிலகி கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கவே அதிகம் விரும்பு கிறார்கள். இந்த ‘மெகா சீரியல்’களைப்
பார்த்துப் பார்த்து அவர்கள் உணர்வுத் தரமே மாறிவிட்டது.
அழவேண்டிய தருணங்களில் கூட சிரிக்கிறார்கள். ஒரே
பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. நாடகங்
களில் கற்பழிப்பு, கொள்ளை, கொலை, இறப்பு, தற்கொலை ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து நிஜவாழ்க்கையில் அவை நடக்கும்போது உணர்ச்சியற்ற
மரக்கட்டைகளாகிவிடுகின்றனர்.
நாரதர்
: அது மட்டுமில்லை, காலையிலிருந்து படுக்கப்போகும்
வரை பெரும்பாலான நேரம் இத் தொலைக்காட்சி மாயையில்
மூழ்கி இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருடன் ஒருவர் கலகலப்பாகப் பேசிக் கொள்வதுகூட இல்லை மாமுனிவரே!
சிவன்
: உண்மைதான். நவநாகரிக உலகில் அறிவியல் சாதனங்கள் உலகத்தவரின் ‘தொலைவு இடைவெளி’யைக் குறைத்தாலும், இவைபோன்ற
சில விஷயங்களால் அருகருகே இருப்பவர்கள்கூட மனத்தால் தூரப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.
நாரதர்
: வீட்டில் இருக்கும்போது அப்பா செய்தித் தாளில் மூழ்கியிருப்பார். அம்மா
மெகா சீரியலில்! அண்ணன்
கம்ப்யூட்டரில்! அக்கா செல்போனில்! - இப்படி
ஆளாளுக்கு அவர்களுக்கென்று ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு
வாழ்கிறார்கள். சாப்பிடும்
போதாவது பேசிக்கொள்வார்களா என்றால் அப்போதும் கவனம் தொலைக்காட்சியில்தான்! அவர்கள்
வீட்டிற்குத் திருடனே வந்தால்கூட தெரிவதில்லை.
உமை : அப்படியென்றால்
இந்த அறிவியல் சாதனங்கள் வீணானவைதானே!
வசி.
: அப்படியும் சொல்வதற்கில்லை அகிலாண்ட நாயகியே! இத்
தொலைத் தொடர்புச் சாதனங் களால் மனிதர்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்கிறார்கள். அது மட்டுமில்லை அன்னையே!
கணினியின் துணையால் வேலைகளைக் கச்சிதமாக விரைவாக முடிக்க முடிகிறது. நம் தேவ லோகத்தில்
இவ்வாறு பெரிய பெரிய கணக்குப் புத்தகங்களை வைத்துக்கொண்டு கணக்குப் பார்க்க வேண்டியிருக்கிறதே! அவற்றைச் சுமந்து கொண்டுவர இன்று எத்தனை யானைகள் தேவைப்பட்டன! பூலோகத்தில்
என்றால் இக்கணக்குகளை எல்லாம் சின்ன வட்ட வடிவத் தகட்டில்
பதிவுசெய்து விடலாம். அதற்குரிய ‘புரோகிராம்’ செய்துவிட்டால் கணக்குகளில் பிழை வரவும் வாய்ப்பில்லை.
சிவன்
: ஆஹா, நாமும் அவ்வாறே செய்து விடலாமே. அப்படியே
செய்து இதுவரை வந்துவிட்ட குளறுபடிகளையும் சரிசெய்து விடலாம் அல்லவா?
நாரதர்
: என்னதான் கண்டுபிடிப்புகள் வந்தாலும் குழம்பாத குட்டையைக் குழப்புவதற்கென்றே சில குழப்பக்காரர்கள் செய்யும்
குளறுபடிகள் மாறப் போவதில்லை சர்வேஸ்வரா!
எமன் : நாரதரே!
நீர் யாரைச் சொல்கிறீர்?
நாரதர்
: போயும் போயும் உங்களைச் சொல்வேனா? உங்கள் புத்திசாலித்தனத்தை உலகமே அறியுமே!
(எமன் சித்திரகுப்தனை கேள்விக்குறியோடு
நோக்கத் தனக்கு ஒன்றும் தெரியாதென்று சித்திரகுப்தன் தலையாட்டுகிறான்)
எமன் : நீர்
என்ன சொல்கிறீர்?
வசி.
: கூற்றுவனே! நீங்கள் ஏன் பேய் அறைந்ததுபோன்று
விழிக்கிறீர். நாரதர் சும்மா 'போட்டு வாங்கப்' பார்க்கிறார். நீங்களும் மாட்டிக்கொள்ளத் தயாராய் இருக்கிறீர்கள்!
எமன் : அப்படியா?
நான் ஒரு மடையன்!
நாரதர்
: அதைத்தான் நானும் சொன்னேன்!
(அனைவரும் சிரிக்க எமன் வெட்கித் தலைகுனிய)
சிவன்
: நாரதருக்கு வரவர வாய்த் துடுக்கும்
அதிகமாகிவிட்டது. அறிவு ஜீவியாய் இருந்தால் வாய்த்துடுக்கும் இருக்கத்தானே செய்யும்! பிழைத்துப் போ நாரதா.
(வசிட்டரை நோக்கி)
வசிட்டரே, நீங்கள்
சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்!
வசி.
: வேதநாயகனே!
நம்மிடம் ஓர் ‘இண்டர்நெட்’ தொடர்பு
மட்டும் இருந்தால் போதும். நமக்கு
உலகச் செய்திகளை திரித்துச் சொல்ல நாரதர் தேவையில்லை. நாமே எளிதாக அச்
செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
நாரதர்
: ஓ. . .! கதை
போகிற போக்கில் என்னை ஏன் தாக்குகிறீர்கள் முனிகுலத்
திலகமே!
சிவன்
: முற்பகல் செய்தால் பிற்பகல் விளையாமலா போகும்?
(வசிட்டரை நோக்கி)
வசிட்டரே! விஷயங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆசிரியர்களுக்குத்தான் அதிகம் உண்டு என்பதை உங்களால் உணர்ந்து கொண்டேன். மிக
எளிதாக இன்று எழுந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணங்களை
விளக்கியதோடு அரிய புதுத் தகவல்களையெல்லாம்
கூறினீர்கள். இச்செய்திகளை
எல்லாம் நீங்கள் எங்கே அறிந்து கொண்டீர்கள்?
வசி.
: நான்
அண்மையில் பூலோகம் சென்ற சமயம் என் சீடனான கல்வியானந்தாவின்
ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கி
புத்திலக்கிய ஆராய்ச்சி செய்தேன் அறிவு வித்தகா! அவன்
‘இண்டர்நெட்’ தொடர்பு வைத்திருந்தான். அதன்மூலம்
உலக இலக்கியங்களை எல்லாம் ஒரு பார்வை பார்க்க
முடிந்தது.
சிவன்
: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி போன்றவர் ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாக நீர் இருக்கிறீர்.
உங்கள் பணி தொடரட்டும்.
வாழ்த்துக்கள். . . .
இத்துடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தை
முடித்துக்கொள்வோம்.
***
(தொடரும்)
No comments:
Post a Comment