பெருங்கதையில் பெண்
தமிழின் தழுவல் காப்பியமான பெருங்கதை, உதயணன் என்னும் மன்னனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டமைகிறது. உதயணன் வாசவதத்தை, பதுமாபதி, மானனீகை, விரிசிகை ஆகிய நான்கு பெண்களை
மணந்துகொள்கிறான். காப்பியத்தின் பெரும்பகுதி இந் நான்கு பெண்களை
உதயணன் மணந்துகொண்டு வாழ்ந்த வாழ்க்கையைச் சித்திரிப்பதாகவே அமைந்திருக்கிறது. இந்நிலையில் அரசனாக வாழுகின்ற ஓர் ஆடவன் கொண்டுள்ள
பெண்கள் பற்றிய மனப்பாங்கினை பெருங்கதை வாயிலாக ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பன்மகளிரை நயத்தல்
நற்குணங்களெல்லாம் முழுமையாக வாய்க்கப்பெற்ற பெண்ணையே மனைவியாகப் பெற்றாலும் அவளுடனான தன் இல்லற வாழ்க்கையில்
நிறைவடையாத ஆடவர், மகளிர் பலரை நயக்கின்ற தன்மையை
காலங்காலமாகக் காணமுடிகிறது. இத்தகைய ஆடவர் மனப்பாங்கின் சான்றாக உதயணன் விளங்குகிறான். உதயணன் அழகிற் சிறந்தவரைத் தன் மனைவியாக்கிக் கொள்ள
வேண்டும் என்ற வேட்கையுடையவனாகத் திகழ்கின்றான். யூகியின்
சூழ்ச்சியால் வாசவதத்தை இறந்துவிட்டதாக நினைக்கிறான். சிறிது காலம் கழித்து வாசவதத்தையை மீண்டும் உயிரோடு தருவிக்கின்ற ஆற்றல்வாய்ந்த முனிவரைச் சந்திப்பதற்காக அமைச்சன் வயந்தகன் உதயணனை அழைத்துச் செல்கிறான். வழியில் காசியரசன் தங்கை பதுமாவதியைக் கண்ணுறும் உதயணன் அவள் அழகில் மயங்கி
அவளை எவ்வாறேனும் திருமணம் செய்துகொள்ள விழைகிறான். வாசவதத்தை உயிருடன் தோன்றுவாள் என்று ஐயமின்றி அறிந்திருந்தும் பதுமாபதியை அதற்குள் அடைந்தே தீரவேண்டும் என்னும் வேட்கைகொள்கிறான்; அந்தணனாக வேடமிட்டு பதுமாபதியைச் சந்தித்துக் காதலித்துத் திருமணமும் செய்துகொள்கிறான்.
அதற்குப் பின்பும் அரண்மனையில் வண்ணமகளாகப் பணிசெய்யும் மானனீகையின் அழகைக் கண்டு மயங்கி அவளையும் நுகர்ந்துவிட முயன்று அதில் வெற்றியும் பெறுகிறான். வேறொரு தருணத்தில் விரிசிகையையும் அவன் மணந்துகொள்ளப் பின்வாங்கவில்லை.
வாசவதத்தை மீது பேரன்பு கொண்டவனாகத்
தன்னைக் காட்டிக்கொண்ட உதயணன் பதுமாபதியை மணந்துகொண்டது மாட்சிமைப்பட்ட செயலாகாது என்று வயந்தகன் உறுதியாக உரைக்கின்றமையைக் காண்கிறோம்.
நயக்குங்
காத
னல்வளைத்
தோளியைப்
பெயர்க்கும்
விச்சையிற்
பெரியோற்
கண்டவன்
உவக்கு
முபாய
மொருங்குடன்
விடாது
வழிபா
டாற்றி
வல்லிதிற்
பெறீஇய
கழிபெருங்
காதலொடு
சென்றபி
னவ்வழிக்
காசி
யரசன்
பாவையைக்
கண்டே
வாசவ
தத்தையை
மறந்தனை
யாகிப்
பரவை
யல்குற்
பதுமா
பதியோ
டிரவும்
பகலு
மறியா
வின்புற்
றுட்குவரு
கோயிலு
ளொடுங்குவனை
யுறைந்தது
மற்போர்
மார்ப
மாண்பு
மற்றுடைத்தோ
(4.6.39-49)
என்னும்
பகுதி வயந்தகன் கூற்றாக வெளிப்படுவது ஆசிரியரின் உட்கிடக்கையாக இருந்திருக்கவேண்டும் என்று உணரமுடிகிறது.
சலனப்படுதல்
பதுமாவதியை மணந்து காமம் நுகர்ந்தபின், உதயணன் மீண்டும் வாசவதத்தையை நினைந்து வருந்துகிறான்.
அன்னது
மாக
வதுவே
யாயினும்
திண்ணிதி
னதனையுந்
திறப்படப்
பற்றாய்
பின்னிது
நினைக்கும்
பெற்றியை
யாதலின்
ஒருபாற்
பட்ட
தன்றுநின்
மனன்
(4.6.50-53)
எனவரும்
பகுதியில், ஒரு நிலையில் நிற்கின்ற
திண்மையான மனத்தை உதயணன் பெற்றிருக்கவில்லை என்று வயந்தகன் குற்றஞ் சுமத்துகிறான்.
காரணம் கற்பித்தல்
காமநாட்டம்கொண்ட ஆடவர் தம் தேடலுக்கு ஏதேனும்
ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துத் தாம் செய்தது சரியே
என்று நிறுவுவதில் கைதேர்ந்தவராதலை உதயணன் வாயிலாக ஆசிரியர் புலப்படுத்துகிறார். வாசவதத்தையை மீட்டுப் பெறுவது உறுதி என அறிந்த நிலையிலும்
பதுமாபதியின்பால் மனத்தைச் செலுத்தியது தகுமோவென்று வயந்தகன் கேட்க,
வடுவாழ்
கூந்தல்
வாசவ
தத்தையொ
டிடைதெரி
வின்மையி
னவளே
யிவளென
நயந்தது
நெஞ்ச
நயவா
தாயினும்
பால்வகை
வினையிற்
படர்ந்த
வேட்கையை
மால்கடல்
வரைப்பின்
மறுத்தன
ரொழுகுதல்
யாவர்க்
காயினு
மாகா
ததுவென
மேவரக்
காட்டலும்
(4.6.55-61)
என்று
கூறும் உதயணன் தன் இரட்டைவேடத்தைப் புலப்படுத்துகிறான்.
வாசவதத்தைக்கும் பதுமாபதிக்கும் தோற்றத்தில் வேறுபாடு அறியமுடியாமல் தான் மயங்கிய தாகவும்
அதனால்தான் பதுமாபதியைக் காதலித்ததாகவும் கூறுகிறான். தன் மறுமொழியின் பொறுத்தமற்ற
தன்மையை உணர்ந்துகொள்ளும் உதயணன் மற்றொரு காரணத்தையும் முன்வைக்கிறான். பதுமாபதியை மணந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருப்பதால்தான்
அவளைத் தான் மணம் செய்துகொள்ள
நேர்ந்தது என்கிறான். இவ்வாறு தன் செயலுக்குப் பல
காரணங்களைத் தேடி அலைகிறான் உதயணன்.
இது அவனது குற்றவுணர்வை மறைக்கும் முயற்சியே எனலாம்.
அரசியலாக்கல்
அரசர்கள் தம்முடைய பலதார மணத்திற்கு அரசியல் சாயம் பூசித் தப்பித்துக்கொள்கின்றனர். காசியரசனின் அரசியல்நட்பு பெறும்பொருட்டே உதயணன் பதுமாபதியை மணந்தான் என்று கூறி வாசவதத்தையைத் தேற்றுகின்றனர்.
. . . மற்றோர்
பெண்பாற்
செல்வம்
பேணுத
லின்மையும்
எரிசின
மொய்ம்பிற்
றரிசகன்
றங்கை
பண்பொடு
புணர்ந்த
பதுமா
பதியையும்
பொருபடை
வேந்தனை
வெரீஇப்
புணர்த்த
கருமக்
காம
மல்ல
தவண்மாட்
டொருமையி
னோடாது
புலம்பு
முள்ளமும்
(4.7.4-10)
என்னும்
பகுதி வாசவதத்தையை ஏமாற்றச் செய்த இத்தகைய முயற்சியைச் சித்திரிக்கிறது. உதயணன் பெண் கோலம் பூண்டு
தன்னை யாரும் கண்டுபிடித்துவிடாதவாறு அந்தப்புரத்திற்குச் சென்று மானனீகையின் பந்தாட்டத்தைக் கண்டு மயங்குகிறான். அவளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எண்ணும் உதயணன், அந்தப்புரத்தில் உள்ள பணிப்பெண்டிர் அனைவரையும்
தான் காணவேண்டும் என்று வாசவதத்தையிடமும் பதுமாபதியிடமும் கூறுகிறான். உதயணன் மானனீகையைக் கண்டால் தன்னை அவளிடம் இழத்தல் உறுதி என நினைக்கும் வாசவதத்தை
அவளைத் தவிர அனைவரையும் வருமாறு
கூறுகிறாள். மானனீகை அங்கில்லாதது கண்ட உதயணன் ஒருபணிப்பெண்
மட்டும் அங்கே வராததை வெளிப்படையாகவே மொழிகிறான். அவளைக் கண்டு தனியே சொல்லவேண்டிய முக்கியச் செய்தி யாது என்று வாசவதத்தை
கேட்க,
பற்றா
மன்னன்
படைத்தவும்
வைத்தவும்
உற்றவ
ளறியு
முழையரிற்
றெளிந்தேன்
மதிவே
றில்
(4:13.22-24)
என்று
கூறுகிறான். பகை மன்னவனான ஆருணி
அரசன் ஈட்டிய பொருள்களையும் அவன் சேமித்து வைத்த
பொருள்களையும் அவள் அறிவாள் என்பதை
ஒற்றர்கள் கூறியதாகவும் அதனை அறியும் பொருட்டே
அவளைத் தான் அழைத்ததாகவும் ஓர்
அரசியல் காரணத்தைக் கூறித் தன் எண்ணத்தை முடித்துக்கொள்கிறான்.
ஒப்பிட்டு நோக்கல்
நற்குண மங்கையர் தம் கணவன் எத்துணைக்
குறைபாடுடையவனாக இருப்பினும் அவனை மற்றொரு ஆடவனுடன்
ஒப்பிடமாட்டார்கள். ஆனால், தம் மனைவியைப் பிற
மகளிரோடு ஒப்பிட்டு நோக்கும் மனப்பாங்கைப் பெரும்பான்மையான ஆடவரிடத்துக் காணமுடிகிறது. இத்தகைய மனப்பாங்கை உதயணனிடமும் காணமுடிகிறது. வாசவதத்தை, பதுமாவதி இருவரில் யாரை உதயணன் அதிகமாக
விரும்புகிறான் என்றும் யாரைச் சிறந்தவராகக் கருதுகிறான் என்றும் வினவுகிறான் வயந்தகன் (4.6.16-22).
பீடுடை
யொழுக்கிற்
பிரச்சோ
தனன்மகள்
வாடிடை
மழைக்கண்
வாசவ
தத்தை
கண்ணகன்
ஞாலத்துப்
பெண்ணருங்
கலமவள்
(4.6.26-28)
என்று
கூறும் உதயணன் வாசவதத்தையைச் சிறந்தவளாகச் சுட்டுகிறான். அத்தகைய சிறந்த பெண்ணோடு அமையாமல் மற்றும் மூன்று பெண்களை அவன் மணந்தமையும் தன்
மனைவியரை ஒப்புமைப்படுத்தி யார் சிறந்தவர், யார்
குறைந்தவர் என்று காணும் மனப்பாங்கும் ஆணாதிக்க மனப்பாங்கையே காட்டுகிறது எனலாம்.
பெண்மையை இழிவுபடுத்தல்
உதயணன் யாரும் அறியாமல் மானனீகையைச் சந்திப்பதைத் தன் தோழி காஞ்சனமாலை
மூலம் அறிந்துகொள்கிறாள் வாசவதத்தை. அச் செய்திகளை உதயணனிடம்
கூறி அவன் நடவடிக்கையை அறியவிரும்பும்
வாசவதத்தை, நடந்த நிகழ்வுகளைத் தன் கனவில் கண்ட
செய்திகளைப்போன்று மறைத்துக் கூறுகிறாள். அதனைக் கனவென்றே நம்பும் உதயணன் வாசவதத்தையை ஏமாற்ற நினைக்கிறான். தன் செயலின்மீது எந்தவித
குற்றஉணர்வும் இல்லாமல் பெண்மையின் பண்பையே இழித்துக்கூறுகிறான்.
. . . நின்
உள்ளத்
துள்ளே
யுறைகுவே
னாகவும்
கள்வ
னென்று
கருதினை
யன்றியும்
நெறியுடை
மகளிர்
நினைப்பவுங்
காண்பவும்
இவையிவை
போலுங்
கணவர்தந்
திறத்தென
(4.13.204-8)
என்று
நன்னெறியில் நிற்கும் பெண்கள் இப்படித்தான் கணவரின்மீது ஐயம்கொள்வார்கள் போலும் என்று இழிவுபடுத்துவதைக் காணலாம். தம் தவறை மறைப்பதற்காகத்
தம் மனைவியின் மாண்பையே இழித்துப் பேசுகின்ற கணவரின் இழிவான மனப்பாங்கை இதன்மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
காமத்தில் வீழ்தல்
பெரும்பாலும் ஆடவர் தமது காமஇச்சை தீர்ந்தால்
போதும் என்று நினைப்பதுடன் அது நிறைவேறுவதற்கு எத்தகைய
செயலையும் செய்யத் தயாராக இருப்பர் என்பதை உதயணன் செயல் உறுதிப்படுத்துகிறது. உதயணன் - மானனீகை தொடர்பை அறியும் வாசவதத்தை மானனீகைபோன்று குச்சரச்குடிகையில் காத்திருக்கின்றாள். உதயணன் மனக்கிடக்கையை நன்கு அறியும்பொருட்டு வாசவதத்தை ஊடி இருப்பதைப்போன்று நடிக்கிறாள்.
மானனீகையே ஊடலுடன் இருக்கிறாள் என்று எண்ணிய உதயணன் அவள் ஊடலைத் தீர்க்க,
முரசுமுழங்கு
தானை
யரசொடு
வேண்டினும்
தருகுவ
லின்னே
பருவர
லொழியினி
(4.13.227-8)
என்று
கூறுகிறான். தன் காமத்தை நிறைவு
செய்யும்பொருட்டு தன் அரசையே ஒரு
பெண்ணின் காலடியில் சமர்ப்பிக்கும் தன்மை எதனையும்விட காமத்தையே பெரிதென எண்ணும் ஆடவரின் மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது.
நம்பிக்கை ஏய்த்தல்
தன் கணவன் மீதுகொண்ட
அன்பின் காரணமாக அவனை முழுதுமாக நம்பும்
மனைவியின் நல்ல பண்பை கேலிக்குரியதாக
ஆக்கிவிடுகின்ற மனப்பாங்கை ஆடவரிடம் காணமுடிகிறது. மானனீகையை எப்படியேனும் சந்திக்க வேண்டும் என்று வேட்கைகொள்ளும் உதயணன் மானனீகையை வாசவதத்தையின் வண்ணமகளாகப் பணியாற்றச் செய்கிறான். அவளுக்கு யவனமொழி தெரியும் என்பதை அறிந்து, அவளைத் தான் விரும்பும் செய்தியை
அவளுக்கு அறிவிக்கின்ற ஊடகமாக வாசவதத்தையின் முகத்தையே பயன்படுத்திக்கொள்கிறான்; மானனீகை செய்யும் முக அலங்காரம் சிறப்பாக
இல்லை என்றுகூறி அதனை அழித்துவிட்டுத் தன்
உள்ளக்கிடக்கையை அறிவிக்கின்ற வாசகங்களை யவனமொழியில் வாசவதத்தையின் முகத்தில் எழுதி மானனீகையிடம் காட்டுமாறு கூறிவிடுக்கிறான். உதயணனின் சூழ்ச்சியை அறியாத வாசவதத்தை தன் முக அலங்காரத்தை
மானனீகையிடம் காட்டுகிறாள். அவள் தனது மறுமொழியை
மறுநாள் அவள் முகத்தில் எழுதிவிடுக்கிறாள்.
இவ்வாறு, உதயணனும் மானனீகையும் தங்கள் செய்தியைப் பரிமாறிக்கொள்ள வாசவதத்தையின் அன்பினையும் அறியாமையினையும் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.
திருத்தகு
மார்பன்
கருத்தொடு
புகுந்து
விருப்பொடு
தழுவி
நடுக்கந்
தீரக்
கூடிய
வேட்கையி
னொருவர்க்
கொருவர்
ஊடியுங்
கூடியு
நீடுவிளை
யாடியும்
இருந்த
பின்றை
யிருவரு
முறைமுறை
திருந்திய
முகத்துப்
பொருந்திய
காதலொ
டெழுதிய
வாசக
மெல்லா
முரைத்து
வழுவுத
லின்றி
வைகலு
மீங்கே
குறி
(4.13.72-80)
என்னும்
பகுதி இருவரும் வாசவதத்தையை ஏமாற்றுவது மட்டுமின்றி அவளது அப்பாவித்தனத்தைக் கேலிசெய்து கொள்ளும் தன்மை உதயணன் எந்த அளவிற்கு எத்தனாக
இருக்கிறான் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
கற்புக் கோட்பாடு
பெண்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் கற்பிற் சிறந்தவர்கள் என்று கூறுவது அவர்தம் நடத்தையைப் பற்றிய அறிமுகச் செய்தியாக அமைகிறது.
உதயணன் தாயைப் பற்றி அவன் தம்பியர் பிங்கல
கடகர் கூறும்போது,
பயந்தினி
தெடுத்த
படைப்பருங்
கற்பினம்
கொற்ற
விறைவி
(3.24.86-87)
என்று
குறிப்பிடுகின்றனர்.
பயந்த
கற்பிற்
பதுமாபதி
(4.6.18)
என்று
வயந்தகன் பதுமாபதியைப் பற்றியும்,
நின்னினு
நின்மாட்டுப்
பின்னிய
காதற்
றுன்னிய
கற்பிற்
றேவி (4.8.70-71)
என்று
யூகி வாசவதத்தையைப் பற்றியும் உதயணனிடம் குறிப்பிடுகின்றனர்.
பெருந்தகு
கற்பினெம்
பெருமகள்
(4.8.92)
என்று
பதுமாபதி வாசவதத்தையைப் பற்றி குறிப்பிடுகிறாள்.
திருத்தகு
கற்பிற்
றீங்குயிற்
கிளவி
வரிக்குழற்
கூந்தல்
வசுந்தரி
(4.12.144-45)
என்று
பிரச்சோதனனும் மாசில் கற்பின் வசுந்தரி (4.13.37) என்று மானனீகையும் வசுந்தரியைப் பற்றிக் கூறுகின்றனர்.
வீயாக்
கற்பின்
விரிசிகை
(4.15.45-48)
என்று
விரிசிகையைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
வாசவதத்தையைப் பதுமாவதி சென்று வணங்கு கிறாள். அப்போது, வாசவதத்தை,
கற்புமேம்
படீஇயர்
கணங்குழை
நீ
(4.8.23)
என்று
வாழ்த்துகிறாள்.
இவ்வாறு சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்ற பெண்களைக் குறிக்குமிடத்து அவர்தம் கற்புடைமை விதந்தோதப்பெறுகின்றது.
நம்பும் மனப்பாங்கு
கணவனைக் குருட்டுத்தனமாக முழுதாய் நம்புதல் பெண்களுக்குரிய பண்பாக அமைந்துவிடுகிறது. தன் கணவன் பதுமாபதியை
மணந்து கொண்டான் என்பதை அறிந்தும் வாசவதத்தை உதயணன் பண்பினை முற்றுமாக அறிந்துகொள்ளவில்லை. வாசவதத்தை வரப்போகிறாள் என்பதை அறியும் உதயணன் அங்கிருந்து பதுமாபதியையும் அவள் தோழியரையும் தன்னைத்
தனியேவிட்டு அகலுமாறு கூறுகிறான். வாசவதத்தையைப் பிரிந்து பெரிதும் துன்புற்று இருப்பதைப்போன்று அரற்றுகிறான். உதயணன் வாசவதத்தையை நினைந்து புலம்புவதை அவள் மறைந்திருந்து கேட்டுமாறு
அவனது அமைச்சன் வயந்தகன் சூழலை அமைத்துக் கொடுக்கிறான் (4.7.1-17). உண்மை அறியாத வாசவதத்தையின் நிலையை,
தன்னல
தில்லா
நன்னுதன்
மகளிரை
மறுதர
வில்லாப்
பிரிவிடை
யரற்றுதல்
உறுகடல்
வரைப்பி
னுயர்ந்தோற்
கியல்பெனல்
கண்டனெ
னென்னுந்
தண்டா
வுவகையள்
நூனெறி
வழாஅ
நுனிப்பொழுக்
குண்மையின்
ஏனை
யுலகமு
மிவற்கே
யியைகெனக்
கணவனை
நோக்கி
யிணைவிரல்
கூப்பி
(4.7.30-36)
என்று
கொங்குவேளிர் எடுத்துரைக்கிறார். உதயணன் நடிப்பை உண்மையென்று நம்பும் வாசவதத்தை தம் மனைவியை நினைத்து
அரற்றுதல் உயர்ந்த ஆடவரின் மாண்பு என்று எண்ணுவதுடன், அத்தகைய பெருந்தகைமை உடைய உதயணனே இனிவரும்
பிறப்புகளிலும் தனக்குக் கணவனாக அமையவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறாள்.
உயர்த்தலில் மகிழ்தல்
தன் கணவனின் அன்பில்
பதுமாபதியும் பங்கு கொண்டமையால் ஊடல்கொண்டாள் வாசவதத்தை. அவ் ஊடலைத் தீர்க்க,
வாசவதத்தையை நிகர்க்கும் பதுமாபதியின் தோற்றத்தால் அவளை மணந்து கொண்டாதாக
உதயணன் கூற அவள் கோபம்
மேலும் அதிகரிக்கிறது. தனக்குப் பதுமாபதி நிகர் ஆவாளோ என்று கோபம் கொள்கிறாள். அதுகண்ட உதயணன் அவளது ஊடலைத் தணிக்க,
உருவி
னல்லது
பெண்மையி
னினாடு
திருநுதன்
மடவோய்
தினையனைத்
தாயினும்
வெள்வேற்
கண்ணி
யொவ்வாள்
(4.8.109-11)
என்று
உரைக்கிறான். பெண்மையின் சிறப்பில் வாசவதத்தைக்குப் பதுமாபதி நிகராகமாட்டாள் என்று எடுத்துரைக்கிறான்.
உவக்கும்
வாயி
னயத்தகக்
கூறித்
தெருட்டியுந்
தெளித்து
மருட்டியு
மகிழ்ந்தும்
இடையற
வில்லா
வின்பப்
புணர்ச்சியர்
(4.8.112-14)
என்று
வாசவதத்தையின் கோபம் தணிந்த தன்மையை எடுத்துரைக்கிறார் ஆசிரியர். தன் வாழ்க்கை தொலைந்ததை
யும் மறந்துவிட்டு பிறரைவிட தன்னை உயர்த்திக்கூறுகின்ற பெருமையே போதும் என்று நினைக்கும் பெண்ணின் மனப்பாங்கு இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
எச்சரிக்கை மனப்பாங்கு
கணவனை முதலில் நம்பி ஏமாறும் மனைவி, அதன் பிறகு எச்சரிக்கை
மனப்பாங்கோடு செயல்பட ஆரம்பிக் கிறாள். அதிகப்படியான நம்பிக்கை ஏமாற்றத்தால் உடையும்போது எச்சரிக்கை உணர்வு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது. தன் கணவன் உதயணன்
பெண்கள் விஷயத்தில் உறுதியற்ற நெஞ்சினன் பதுமாபதியின் திருமணத்தால் அறிந்துகொள்ளும் வாசவதத்தை தன் அந்தப்புரத்தில் மானனீகையைப்
பார்க்கும்போது எச்சரிக்கையாக நடந்துகொள்கிறாள்.
கண்ணார்
மாதர்
மதிமுகங்
காணிற்
காவன்
மன்னன்
கலங்கலு
முண்டு
(4.12.246-47)
என்று
எண்ணும் வாசவதத்தை உதயணன் கண்ணில் மானனீகை பட்டுவிடக்கூடாது என்று அந்தப்புரத்தில் மறைத்துவைக்கிறாள்.
உதயணன் தன்னையும் பதுமாபதியையும் தவிர்க் கிறான் என்று ஐயம்கொள்ளும் வாசவதத்தை உதயணனைக் கண்காணிக்குமாறு காஞ்சனமாலையை அனுப்புகிறாள்.
பொறுத்துப் போதல்
தன் கணவன் எத்தகைய
தவறுகள் இழைத்தாலும் - அது தனது வாழ்க்கையையே
கேள்விக்குறியாக்கும் செயலாக இருந்தாலும் அதனைப் பொறுத்துப்போதல் பெண்ணின் மாண்பு என்ற கருத்தாக்கம் நிலவிவருகிறது.
தன் கணவனின் ஆசைக்கு உடன்பட்ட மானனீகையின் மீது கோபம்கொள்ளும் வாசவதத்தை,
அவளது கூந்தலைக் குறைக்கவேண்டும் என்று முனைகிறாள். அதனைத் தடுக்கநினைக்கும் உதயணன் பதுமாபதியை வேண்ட அவள் வாசவதத்தையைச் சந்தித்து,
வீறுயர்
மடந்தாய்
வேண்டா
செய்தனை
அன்புடைக்
கணவ
ரழிதகச்
செயினும்
பெண்பிறந்
தோர்க்குப்
பொறையே
பெருமை
(4.14.97-99)
என்று
கூறுகிறாள். கணவன் மனைவிக்கு அழிவே ஏற்படுத்தினாலும் அதனைப் பொறுத்துக்கொள்வதே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் என்ற பதுமாபதியின் கூற்று
பொருளற்ற இத்தகு பெருமைகளால் காலங்காலமாகப் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதை உணர்த்துகிறது.
பட்டத்தரசியின்
அதிகாரம்
அரசன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் புரியும்போது அவனுடைய முதல் மனைவியே பட்டத்தரசியாக மதிக்கப்பெறுகிறாள். அரசு அதிகாரத்திலும் பிறவற்றிலும்
அவளுக்கும் அவள் மூலமாகப் பிறக்கும்
குழந்தைகளுக்கும் முன்னுரிமை தரப்படுகிறது.
பிரச்சோதனன் பதினாறாயிரம் மனைவியரை மணந்துகொண்டவன் என்று சொல்லப்படுகிறது. அவர்களில் முதல் மனைவியாகிய பதுமகாரிகையே பட்டத்தரசியாக மதிக்கப்பெறுகிறாள். உதயணன் அறிந்த யாழ்க் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணும் பிரச்சோதனன் பட்டத்தரசியின் மகளாகிய வாசவதத்தைக்கு மட்டுமே கற்றுக்கொடுக்கிறான்.
வாசவதத்தைக்கு
ஏற்பட்ட வயாநோய் தீர்ப்பதற்காக பத்திராபதி என்னும் வித்தியாதரப்பெண் வாயிலாக விமானம் வடிவமைக்கப்பெற்று வான்வழிப் பயணம் மேற்கொள்ளப் பெறுகிறது. அப்போது பிரச்சோதனன் நாட்டை அடைந்து அவனைக் கண்டு வருகின்றனர். அடுத்ததாக பதுமாவதியின் பிறந்த நாடாகிய இராசகிரியம் கண்ணில்பட அந்நாட்டில் இறங்கிச்செல்லோமா என்று உதயணன் வாசவதத்தையைக் கேட்கின்றான். அவள் அதற்கு ஒப்புதல்
அளிக்காமையால் அவ்விடத்தில் இறங்காமலேயே பயணத்தைத் தொடர் கின்றனர் (5.4.99-102). இதன்மூலம் பட்டத்தரசிக்கும் பிற மனைவியருக்கும் இடையேயுள்ள
அதிகார வரம்பை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
சமணசமயக் கருத்துகளை மக்களிடையே பரப்ப எழுதப்பெற்ற நூலாகப் பெருங்கதை விளங்கினாலும் மக்களை நூலின்பால் ஈர்ப்பதற்குரிய உத்தியாக காமவின்பத்திற்கு அதிகமான இடமளிக்கப்பெற்றிருக்கிறது எனக் கருத்துரைப்பர். ஆயினும்
பலதார மணம் விரும்பும் ஆடவரின்
பண்புநலன்களை ஆசிரியர் நடப்பியல் பாங்குடன் பொருத்தமாக அமைத்திருப்பதை இக் கட்டுரையின் வாயிலாக
அறியமுடிகிறது.
நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில்,
காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 65-79.
No comments:
Post a Comment