முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 25
ஆறாவது மாதம்!
மொட்டை மாடி அறை சுந்தரி
வசிப்பதற்கு வசதிக்குறைவாகப் பட்டது.
தாட்சாயணியின் மனத்தை மெதுமெதுவாகக் கரைத்து முதல் மாடியில் இருக்கும் பாத் அட்டாச்சுடு விருந்தினர்
அறையைச் சுந்தரிக்குப் பரிந்துரைத்தான் சந்திரன்.
தாட்சாயணியால் என்ன செய்ய முடியும்?
'இன்னும் நாலே மாசந்தான். கடகடன்னு
ஓடிடும், கொஞ்சம் அனுசரிச்சிப் போ' என்றான் சந்திரன்.
சில நேரங்களில் பணிவாக!
சில நேரங்களில் கோபமாக!
சில நேரங்களில் அதட்டலாக!
சில நேரங்களில் அச்சுறுத்தலாக!
தாட்சாயணி கோபப்படும் தருணங்களை எல்லாம் சுந்தரி தனக்குச் சாதகமாக்கிக் கொண்டாள். தாட்சாயணியிடம் நேரும் எரிச்சலின் வெப்பத்தைச் சுந்தரியின் தழுவல் குளிரச்செய்தது.
அவர்கள் வீட்டில் லேண்ட் லைன் தொலைபேசித் தொடர்பு
இருக்கத்தான் செய்தது. பள்ளி சென்றதும் அவ்வப்போது சுந்தரியிடம் பேசி அவள் உடல்நலத்தை
விசாரிக்க ஆவல் எழுந்தது சந்திரனுக்கு.
அவள் எத்தனை முறைதான் மாடியிலிருந்து இறங்கி வரமுடியும்? ஆகவே உயர்தர செல்போன்
ஒன்றை அவளுக்கு வாங்கிக் கொடுத்தான் சந்திரன். அவள் விரும்பும் நேரத்தில்
தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் மனம்விட்டுப் பேசலாமே!
பள்ளி சென்று சேர்ந்தவுடன்
தான் பள்ளிக்குச் சென்று சேர்ந்துவிட்டதை அவளுக்குத் தெரிவிப்பான். அவள் உடம்பு எப்படி
இருக்கிறது என்று விசாரிப்பான். 'ஒரு அரை மணி
நேரத்தில் அவளுக்கு என்னவாகியிருக்கும்?' முறையாகக் கட்டிக்கொண்டு கருத்தரித்த மனைவியிடம் கூட எந்தக் கணவனும்
இந்த அளவிற்குப் பாசத்தைப் பொழிந்திருக்க மாட்டான். பள்ளியின் வகுப்பு மணி அடிக்கப்படுகிறதோ இல்லையோ,
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை
அவளுக்குப் போன்செய்யச் சந்திரன் தவறுவதில்லை.
பள்ளிவேலை தொடர்பாக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. அங்கு இரண்டு நாள் வேலை இருக்கும்.
சுந்தரியைப் பிரிந்திருக்க முடியாது என்பதால் விமானத்தில் பயணித்தான். அதன்மூலம் போக, வர என்று
நான்கு நாள் பயணத்தைத் தவிர்க்கலாம்
அல்லவா? இதுவரை அவன் விமானப் பயணம்
மேற்கொண்டதே இல்லை. சுந்தரியின் பொருட்டு எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். ஆனால் அவளைப் பார்க்காது ஒரு நிமிட நேரத்தையும்
செலவழிக்க முடியாது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்குப் பிளைட்!
விமானத்தில் பயணம் செய்யும்போது செல்போனை இயக்கக்கூடாது என்பது விதி. அந்த இரண்டரை மணி
நேரம் தொடர்ந்து சுந்தரியிடம் பேசமுடியவில்லையே என்று தனக்குப் பயன்படாத அந்த அறிவியல் கண்டுபிடிப்புக்
குறைபாட்டை எண்ணி நொந்து கொண்டான். இனிவருங் காலங்களிலாவது இத்தகைய குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
அவன் டெல்லி விமான
தளத்தில் தரையிறங்கியதும் முதல் வேலையாகச் செல்லை உயிரூட்டிச் சுந்தரியை விசாரித்தான். முதன்முதல் சந்திரனில் காலடி எடுத்துவைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில்
காலடி எடுத்துவைத்ததும் மண்ணுலகிற்கு முதல் போன்தொடர்பு கொண்டபோதுகூட அத்தகைய மகிழ்ச்சி எய்தி இருக்கமாட்டான். அதைவிடப் பன்மடங்காகச் சந்திரனின் மகிழ்ச்சி அமைந்தது.
மேல்மாடியில் தன் கணவன் சுந்தரியுடன்
செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதைத் தாட்சாயணியும் கவனித்தாள். அவள் கொஞ்சிக் கொஞ்சிப்
பேசிக்கொண்டிருந்தாள். அரை மணிநேரமாக அப்படி
என்னதான் பேசிக் கொண்டிருக்கிறானோ! இவளை விட அவன்தான்
அதிகமாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவள் கொஞ்சலில் இடைவெளிகள்
அதிகமாக இருந்தன.
அவன் பத்திரமாகச் சென்று
சேர்ந்த செய்தியைத் தாலி கட்டிய மனைவியாகிய
தனக்கு முன்னதாகச் சொல்லவேண்டும் என்று நினைக்காத அவனை என்னென்று சொல்வது?
அவள் பேசி முடித்த
பிறகும் நெடுநேரம் தாட்சாயணிக்குப் போன் வரவில்லை. அவளிடமும்
செல்போன் இருக்கத்தான் செய்தது. ஆனால் சுந்தரியிடம் இருந்த மயக்கம் தன்னிடம் இல்லையே, 'அவள் என்ன வப்பாட்டியா,
அவனை மயக்கி வைக்க!'
அவன் எப்போது போன்
செய்கிறான் என்று பொறுத்துத்தான் பார்ப்போம் - பொறுமைகாத்தாள் தாட்சாயணி.
அந்த மட்டில் அவன்
பத்திரமாகப் போய்ச் சேர்ந்தான் என்று மறைமுகமாக அறிந்துகொண்டதில் தாட்சாயணியின் மனம் அவனைப் பற்றிய
கவலையை விடுத்தது.
அதற்குப் பிறகு மேலும் இருமுறை சுந்தரியின் அறையில் கொஞ்சல்கள் கேட்டன.
கள் குடித்தவன் போதை
ஒரு டம்ளர் எலுமிச்சம் பழச்சாறில் இறங்கி விடுவதைப்போல தனக்குப் போன் செய்தால் அந்தக்
கொஞ்சலின் மயக்கம் இறங்கிவிடும் என்று கருதி விட்டுவிட்டிருக்கலாம்.
சுமார் பத்தரை மணிக்குத் தாட்சாயணிக்குச் சந்திரனிடம் போன் வந்தது.
'நீ நல்லா இருக்கியா?'
என்று அவன் விசாரிக்கவில்லை. ஐந்து
மணி நேரத்தில் அவளுக்கு என்னவாகியிருக்கும்? ஒன்றும் ஆகியிருக்காது!
'நான் பத்திரமா வந்து
சேர்ந்துட்டேன், நாளைக்கு பாங்க் டியூ பணம் கட்டனும்,
ஞாபகமாக் கட்டிடு' என்று ஒரு செய்தியை ஞாபகப்படுத்துவதற்கு
அந்தப் போன்காலைப் பயன்படுத்திக் கொண்டான்.
செல்போனின் கால் ஹிஸ்டரியைப் பார்த்தாள்.
வெறும் 51 நொடிகள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஒரு நிமிடம் முழுமையாக
அவளிடம் பேச அவனுக்குச் செய்தி
கிடைக்கவில்லை என்பதை அறிந்துகொண்டபோது அவள் இதயம் இரத்தக்
கண்ணீர் பிழிந்தது.
அதற்கடுத்தும் அன்று பலமுறை சுந்தரிக்குப் போன்கால்கள் வந்த வண்ணம் இருந்தன.
இரவு எட்டரை மணிக்குத்
தாட்சாயணிக்கு ஒரு கால் வந்தது.
'நான் செவ்வாக்கிழம வந்துடுவேன்' என்று ஒரே வரியில் முடித்துவிட்டான்.
தன் அறையில் தனிமையில்
குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தாள். அத் தனிமை இனி
அவள் வாழ்க்கையில் அப்படியே நிலைத்துப் போகுமோ? இதுவரை தனிமையை உணர்ந்திராத அவள் முதன்முதலாகத் தனிமைக்
கொடுமையை உணர்ந்தாள்; நடுங்கினாள்.
அதற்குப் பிறகும் பத்து, பத்தரை, பதினொன்று, பதினொன்றரை என்று அரைமணி நேரத்திற்கு ஒருமுறை ஐந்து, பத்து நிமிடங்களுக்குச் சுந்தரி கொஞ்சிக் கொண்டிருக்கும் குரல் மாடியிலிருந்து ஒலித்துக்கொண்டு இருந்தது.
அதற்குப் பின் என்னாயிற்று . . . ? தாட்சாயணி தூங்கிப்போனாள்.
மறுநாள் காலையிலும் சுந்தரிக்கு அடிக்கடி போன் வந்தவண்ணம் இருந்தது.
தனக்கு ஒருமுறையேனும் அவன் போன்செய்து 'நன்றாக
இருக்கிறேன்' எனக் கூறமாட்டானா? 'எப்படி
இருக்கிறாய்?' எனக் கேட்க மாட்டானா?
அலுவலகம் கிளம்பும்வரை அவளுக்கு அவன் போன் செய்யவே
இல்லை.
சுந்தரி இருப்பதால் அவள் ஏதாவது நினைக்கக்
கூடும், எதற்குப் பொல்லாப்பு என்று தன்னிடம் பேசுவதைத் தவிர்க்கிறானோ?
ஒருவேளை அலுவலகம் சென்றபின் அவன் போன் செய்யலாம்.
அலுவலகத்தில் அன்று அவள் எங்கு சென்றாலும்
செல்பேசியைக் கையோடு எடுத்துக் கொண்டு திரிந்தாள். பாத்ரூம் போகும்போதுகூட அவள் செல்போனை வைத்து
விட்டுச் செல்லவில்லை. போன் வராதபோதும் அடிக்கடி
தன் காதில்தான் ரிங்டோன் விழவில்லையோ என்று நினைத்துக்கொண்டு செல்பேசியை ஆய்ந்து பார்த்து எந்தக் காலும் வரவில்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டாள். அலுவலகம் முடிந்து திரும்பும்வரை சந்திரனிடமிருந்து அவளுக்குப் போன்கால் வரவேயில்லை.
வீட்டில் நுழையும்போதே பால்கனியில் சுந்தரி செல்போனில் அளவளாவிக் கொண்டிருப்பது தெரிந்தது.
தாட்சாயணியின் மனம் என்ன கல்லா?
இரும்பா? அதுவும் இரத்தத்தாலும் தசையாலும் எண்ணங்களாலும் ஆனதுதானே? ஒரு ஆசிரியனுக்கு இதுகூடவா
தெரியாது? தன் மனைவியோடு வீட்டிலிருக்கும்போதுதான்
பேசுவது இல்லை. வெளியே செல்லும்போதாவது தான் நன்றாக இருப்பதாக
ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? அதற்கு அவனுக்கு நேரமில்லையா? மனமில்லையா?
முகம் தெரிந்தவர்களுடன் சில
சமயத்தில் முகம் தெரியாதவர்களுடன் ஒரு நாளின் எத்தனையோ
நிமிடக் கூட்டுகளைத் தொலைக்கும் சந்திரன் ஒரு நிமிடத்தின் பின்னப்பட்ட
நேரத்தைக்கூடத் தன் மனைவியின் பொருட்டு
வீணாக்க விரும்பவில்லையா?
எல்லா நிமிடங்களையும் சுந்தரிக்காகவே
அர்ப்பணித்துவிட்டானா?
இரவு எட்டு மணிக்குப்
போனால் போகிறது என்று தாட்சாயணிக்கு ஒருபோன் செய்து இருபது நொடிகளை வீணாக்கினான்.
யானை உண்ட சோற்றுக்
கவளத்திலிருந்து சிதறும் உணவுப் பருக்கையை ஓர் எறும்பு அனுபவித்தது
போல சுந்தரிக்கு அர்ப்பணித்த மணிக் கவளத்திலிருந்து மிகச் சிறியதொரு உடைந்த பருக்கையை எடுத்துத் தன்மனைவி தாட்சாயணிக்குப் பிச்சை போட்டான்.
இப்போதே இப்படி என்றால் இனி வருங்காலத்தில் தன்னிடம்
பேச அவனுக்கு என்ன செய்திகள் கிடைக்க
முடியும்?
படுக்கையில் வீழ்ந்து கோவென அழுதாள். அழுகை தீர்ந்தவுடன் சற்றே அமைதியாகி எழுந்தாள்.
இப்படி அடிக்கடி அழுவதே தாட்சாயணியின் இப்போதைய முக்கிய பொழுதுபோக்காகி விட்டிருந்தது.
அக் கண்ணீரைத் துடைக்கச்
சந்திரன் கைகள் நீளாது என்பதைத் தெரிந்தும் அக் கண்ணீர் வற்றும்வரை
அழுது தொலைத்தாள். கண்ணீர் வற்றியவுடன் கண்கள் தானாகவே காய்ந்துவிடும்.
கண்ணீரைத் துடைக்காமல் இருக்க இப்படி ஒரு புது வழியைக்
கண்டுபிடித்திருந்தாள் தாட்சாயணி.
இல்லையென்றால் அவள் தினந்தோறும் குளிக்கும்
போது குளியலறையில் கோவென அழுவாள். அவள் குளித்து முடிப்பதற்கும்
கண்ணீர் வற்றிப் போவதற்கும் நேரம் சரியாக இருக்கும்.
அப்பொழுதும் அவள் கண்ணீரைத் துடைக்கத்
தேவையில்லை. அவள் குளிக்கும் தண்ணீருடன்
கண்ணீரும் சேர்ந்து வெளியேறிவிடும்.
ஆனால் அத் தண்ணீர்
எந்தச் செடிக்காவது பாய்ச்சப்பட்டிருக்குமானால் அந்த நீரில் இருந்த
உப்பினைத் தாங்கமாட்டாமல் அச்செடி பட்டுப்போயிருக்கும்.
(தொடரும்)
No comments:
Post a Comment