Monday, 16 September 2019

கல்லாடத்தில் பெண்


கல்லாடத்தில் பெண்

            மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையாரின் நூறு அகப்பொருட் துறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றோடு ஒன்றுபட்டும் சில இடங்களில் மாறுபட்டும் பாடல்களைப் புனைந்துள்ளார் கல்லாடர். கல்லாடம் என்னும் பெயரில் அமைந்துள்ள இந்நூல் மதுரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் அருட்புகழைப் பாடுவதையே நோக்கமாகக் கொண்டு எழுதப்பெற்றது என்பர். மாணிக்கவாசகர் ஒவ்வொரு துறையையும் நான்கு அடிகளில் அமைத்துப் பாடியதால் அகப்பொருள் செய்திகள் கோடிட்டுக் காட்டப்பெறும் நிலையிலேயே அமைந்துள்ளன. கல்லாடனார் இத்தகைய வரையறையை அமைத்துக் கொள்ளாததால் அகப்பொருட் செய்திகளை மிக விரிவாக எடுத்துக்கூறும் தன்மையைக் காணலாம். இதன் காரணமாக அவர்தம் காலத்து வாழ்க்கைப் போக்குகளையும் மிக விரிவாகவே அவரால் வெளிப்படுத்த இயலுகிறது. இந்நிலையில் கல்லாடர் பாடல்கள் மூலம் வெளிப்படும் பெண்களின் நிலையை இக்கட்டுரை முன்வைக்கிறது.

கற்புக் கோட்பாடு
            வடமீன் கற்பினெம் பீடுகெழு மடந்தை (37.1) என்று தலைவியைப் பற்றிக் குறிப்பிடும்போது அவளது கற்பு வடமீனாக ஒளிரும் அருந்ததியின் கற்பைப் போன்றது என்று குறிப்பிடுகிறார். பிறிதொரு பாடலிலும் தலைவியின் கற்பு அருந்ததியாகிய வடமீன் வியக்கும் திறத்தது என்னும் பொருளில், குலமீ/ னருகிய கற்பு (74.1-2) என்று குறிப்பிடுகிறார். செவிலியைப் பற்றிக் குறிப்பிடும் ஓரிடத்தில் தவங்கற் றீன்ற நெடுங்கற் பன்னை (58.15) என்று அவளது கற்பினைச் சுட்டுகிறார்.
            மகட்போக்கிய செவிலித்தாய் தலைவியின் அடியொற்றி பாலைநிலத்தின் வழியே செல்கின்றாள். தலைவியும் தலைவனும் சென்றபோது எதிர்ப்பட்ட ஆறலைக்கள்வர்களைத் தலைவன் கொன்று வெற்றி பெற்றதற்குக் காரணம் தலைவியின் கற்பின் திறமே என்று எடுத்துரைக்கிறாள் செவிலித்தாய்.
கொடுமறக் கொலைஞ ராற்றிடை கவர
வெண்ணாது கிடைத்த புண்ணெழு செருநிலைக்
கைவளர் கொழுந்து மெய்பொடி யாகவென்
சிற்றிடைப் பெருமுலைப் பொற்றொடி மடந்தைதன்
கவைஇய கற்பினைக் காட்டுழி யிதுவே (6.16-22)
எனவரும் பகுதியில் பெண்ணின் கற்புடைமை அவள் கணவனைக் காக்கின்ற கவசமாக அமையும் என்பதைப் புலப்படுத்துகிறார்.
                நாணிழந்து வருந்தல் என்னும் துறையில் அமைந்துள்ள பாடல் பெண்ணின் நாண், கற்பு என்னும் இரண்டு கோட்பாடுகளும் அவளுள் ஏற்படுத்துகின்ற மனப்போராட்டத்தைத் தெள்ளிதின் உணர்த்துகிறது.
. . .                                          என்
னுயிரொடும் வளர்ந்த பெருநாண் டறியினை
வெற்பன் காதற் காலுலை வேலையின்
வலியுடைக் கற்பி னெடுவளி சுழற்றிக்
கட்புலங் காணாது காட்டைகெட வுந்தலி
னென்போ லிந்நிலை நின்றவர் படைக்கும்
பேறாங் கொழிக பெருநாண் கற்பின்
ரெற்பே றுடைய ராயிற்
கற்பிற் றோன்றாக் கடனா குகவே (36.7-15)
என்னும் பகுதியின் வாயிலாகக் காதலனின்மேல் கொண்ட காதல் காரணமாக, அவனையே அவள் மணந்துகொண்டாக வேண்டிய கற்பைக் காக்கின்ற சூழலால் நாணத்தைக் கைவிடவேண்டிய போராட்டம் மனத்தில் தோன்றி அலைக்கழிப்பதால் இத்தகைய துன்பத்தை எய்துவதைவிட நாண் அழிகின்ற நிலை அடையும் மகளிருக்கு அடுத்த பிறவியிலாவது உயர்குடிப் பிறத்தல் வாய்க்காது போகட்டும் என்றும் கற்பினையும் நாணத்தையும் காக்கவேண்டித் துன்புறும் மகளிர் அடுத்த பிறவியில் கற்பில்லாத குடியில் தோன்றும் கடப்பாட்டினை எய்தட்டும் என்றும் தலைவி கூறுகிறாள். இதன் மூலம் உயர்குடியில் பிறப்பவர்க்கு நாணம் வற்புறுத்தப்படுவதை அறியமுடிகிறது. மேலும் பரத்தையர் குடியில் தோன்றிவிட்டால் நாணத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவை யில்லை என்ற கருத்தைக் கல்லாடனார் முன்வைக்கிறார். இன்றைய நவீன பாலியல் சுதந்திரம் என்னும் பெண்ணியச் சிந்தனையை இப்பகுதி கோடிட்டுக் காட்டுவதை அறியமுடிகிறது.
வடமீன் கற்பினெம் பீடுகெழு மடந்தை
பெருங்கடன் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
விண்டிரிந்து முழங்கி வீழா தாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போலக்
கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள (37.1-5)
எனவரும் தோழியியற்பழித்தல் என்னும் துறையில் அமைந்த பாடற் பகுதி பரத்தையின் பொருட்டுப் பிரிந்த தலைவன் பரத்தையரின் ஒப்பனை முதலியவற்றால் மயக்கமெய்தி தன் உயர்குடிப் பிறப்பிற்கேற்ற பெருமை இலனாகத் திரிய, அவனது பிரிவாற்றாமையைத் தாங்கி நிற்கின்ற தலைவியின் துன்பத்தினைக் காட்டுகிறது. தலைவி கற்பு, நாணம் இரண்டினாலும் அடக்கப்பட்டுத் துன்புறுவதைத் தோழி கூற்றாகக் கல்லாடனார் எடுத்துரைக்கிறார்.
இவற்றால் கற்புக்கோட்பாடு நற்குடிப் பிறந்த பெண்டிரின்மேல் ஆதிக்கம் செலுத்தப் பயன்படும் கருவியாக அமைவதைக் கல்லாடர் குறிப்பாய் உணர்த்துகிறார்.

புறத்தொழுக்கத் துன்பம்
                தலைவனின் புறத்தொழுக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்களைச் சங்ககாலம் தொட்டுக் காணமுடிகிறது. பரத்தையிற் பிரிவு என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கம்போன்றே இலக்கியப்படுத்தப் படுகிறது. இவ் வழக்கம் தலைவியின் தரப்பிலிருந்து எத்தகைய துன்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவ்வப்போது சிலர் தம் பாடல்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். மாற்றமுடியாத இவ் வழக்கம் பெண்களின் மேல் ஆடவர் செலுத்தும் அதிகாரப்போக்கை வெளிப்படுத்து கிறது எனலாம்:
திருமருங் கணைந்து வருபுனல் வையை
வரைபுரண் டென்னத் திரைநிரை துறையகத்
தணந்தெடுத் தேந்திய வரும்புமுகிழ் முலையோண்
மதிநுதற் பெருமதி மலர்முகத் தொருத்தியை
யாட்டியு மணைத்துங் கூட்டியுங் குலவியு
மேந்தியு மெடுத்து மொழுக்கியு மீர்த்து
முழக்கியுந் தபுத்தியு முலையொளி நோக்கியும்
விளிமொழி யேற்றும் விதலையிற் றிளைத்தும்
பூசியும் புனைந்தும் பூட்டியுஞ் சூட்டியு
நிறுத்தியு நிறைத்து நெறித்துஞ் செறித்து
மெழுதியுந் தப்பியு மியைந்தும் பிணித்துங்
கட்டியுங் கலத்தியுங் கமழ்த்தியு மறைத்துச்
செய்தன வெல்லாஞ் செய்யலர் போல . . .
பெருநீ ரூரர் நிறைநீர் விடுத்துச்
செறிந்த தென்னெனக் கேட்டி (54.10-22, 36-37)
வையையில் தலைவன் ஒரு பரத்தையுடன் புதுப்புனலாடச் செல்கின்றான். அப்போது அப் பரத்தையைத் தலைவன் நீராடுவித்தும் மார்போடணைத்தும் தோழிகளோடு சேர்த்தும் கொண்டாடியும் தாங்கியும் தூக்கியும் நடப்பித்தும் இழுத்தும் நீரில் முழுகுவித்தும் மேலே எடுத்தும் அவளை மார்பினை நெடிது நோக்கியும் அவள் தன்னை அழைப்பதனைச் செவியேற்று இன்புற்றும் அவள் நடுக்கத்தைத் தீர்க்கக் கட்டியணைத்தும் சந்தனம் முதலியவற்றை அவள்மேற் பூசியும் மாலை முதலியவற்றைப் புனைந்தும் அணிகலன்களைப் பூட்டியும் கண்ணி முதலியவற்றைச் சூட்டியும் அவள் ஊடாதபடி நிறுத்தியும் உவகையால் நிறைத்தும் அவள் கூந்தலை அறல்படச் செய்தும் தன் மார்போடு அணைத்தும் தொய்யிலெழுதியும் எழுதுங்கால் பிழைபட எழுதியும் பின்னர் திருத்தியும் கச்சையைப் பிணைத்தும் துகிலை உடுத்தும் தன் நெஞ்சோடு ஒன்றுபடச் செய்தும் பனிநீர் முதலிய நறுமணப் பொருட்களைப் பூசியும் இப்படிப் பல செயல்களைத் தலைவி அறியாமல் செய்தாலும் அதனை அறிந்துகொள்கிறாள் தலைவி. அதன் பின்னர் ஏதும் அறியாதவன் போன்று இல்லத்திற்கு வரும் தலைவனோடு கோபம்கொள்ளும் தலைவியின் ஊடலை, புனலாட்டு வித்தமை கூறிப் புலத்தல் என்னும் துறையில் படைத்துள்ளார் கல்லாடனார்.
                பலரும் காணுமாறு பரத்தையோடு இன்பம் நுகருவதை அக்காலச் சமுதாயம் வெறுத்தொதுக்கவில்லை என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. தலைவனின் இச்செயலால் பாதிப்படையும் தலைவியின் மனநிலையை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவுமில்லை என்பதையே இப்பாடல் உணர்த்துகிறது எனலாம். அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல் என்னும் துறையில் தலைவியைச் சார்ந்தோர், தலைவிக்குப் பூப்பு நிகழ்ந்தமையைத் தலைவனுக்குச் செவ்வணிமூலம் தெரிவிக்கக் கருதுகின்றனர்.  பிறரறியாது நிகழவேண்டிய ஒருநிகழ்வை இவ்வாறு அயலார் அறிவதற்கு நாணித் தலைவி வருந்தியுரைப்பதாக மாணிக்கவாசகர் எடுத்துரைக் கிறார்.
இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழ லிங்கிவ ளாலிக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்றில்லை யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின வாறுநந் தன்மைகளே
என்னும் மாணிக்கவாசகர் பாடலில் தலைவி தனது கழிவிரக்கத்தை வெளிப்படுத்தக் காண்கிறோம். இதனைக் கல்லாடர் பரத்தையின் இழிவையும் தலைவியின் மாண்பையும் வெளிப்படுத்துகின்றவாறு பல உவமைகளை எடுத்துக்காட்டிப் புனைந்துள்ளார்.
இவளுளங் கொட்ப வயலுளங் களிப்ப
வரும்பொருட் செல்வி யெனுந்திரு மகட்கு
மாளிட மகளிர் தாமுநின் றெதிர்ந்து
புல்லிதழ்த் தாமரை யில்லளித் தெனவு
முலகுவிண் பனிக்கு மொருசய மகட்குத்
தேவர்தம் மகளிர் செருமுக நேர்ந்து
வீரமங் கீந்தபின் விளிவது மானவு
மிருளட லரக்கியர் கலைமகட் கண்டு
தென்றமிழ் வடகலை சிலகொடுத் தெனவு
நீரர மகளிர் பாந்தளங் கன்னியர்க்
காரெரி மணித்திர ளருளிய தெனவுஞ்
செம்மலர்க் குழலிவன் போயறி வுறுத்தக்
கற்றதுங் கல்லா துற்ற வூரனை
யவடர விவள்பெறு மரந்தையம் பேரினுக்
கொன்றிய வுவம மின்றிவ னுளவான்
மற்றவ டரநெடுங் கற்பே
யுற்றிவள் பெற்றா ளென்பதுந் தகுமே (73.14-30)
திருமகளுக்கு மானிடமகளிர் பொருள் தந்ததைப்போல், இருள்போன்ற உடலுடைய அரக்கியர் கலைமகளுக்கு சில சொற்களைக் கற்பித்ததைப்போல் குலமகளான தலைவிக்குப் பரத்தையின் கருணையால் தலைவனைச் சந்திக்க நேருகிறது என்று தோழி கூற்றாக அமைந்துள்ளது. இத்தகைய நிலையைத் தலைவிக்கு ஏற்படுத்துகின்ற தலைவனின் ஆணாதிக்கப்போக்கை இப்பாடல் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.
            செவ்வணி விடுக்க அதுகண்ட தலைவன் தலைவியை வந்தடைய வாயிலோர் வாழ்த்தல் என்னும் துறையில்,
நல்லிய லூரநின் புல்லமுண் மங்கைய
ரோவிய வில்லமெம் முறையு ளாகக்
கேளாச் சிறுசொற் கிளக்குங் கலதியர்
இவ்வுழி யாயத் தினர்களு மாக
மௌவலிதழ் விரிந்து மணஞ்சூழ் பந்தர்செய்
முன்றிலு மெம்முடை முன்றி லாக
மலர்ச்சுமைச் சேக்கை மதுமலர் மறுத்தவித்
திருமனங் கொள்ளாச் சேக்கைய தாக
நின்னுளங் கண்டு நிகழுண வுன்னி
நாணா நலப்பொய் பேணியுட் புணர்த்தி
யாழொடு முகமன் பாணனு நீயுந்
திருப்பெறு மயலவர் காண
வரப்பெறு மாதவம் பெரிதுடை யேமே (80.22-34)
என்னும் பகுதியில் பரத்தையரைச் சுட்டுமிடத்துச் சான்றோரால் கேட்கப்படாத சொற்களைப் பேசுகின்ற கலகமியற்றும் இயல்புடையவர் என்றும் தனக்குக் கிடைக்கின்ற உணவு ஒன்றையே கருதுபவர் என்றும் பொய்களை விரும்புபவர் என்றும் தலைவனுக்கு எடுத்துக்கூறுகின்றனர் வாயில்கள். அத்தகைய பரத்தையை விட்டுவிட்டு தாங்கள் அனுப்பிய செவ்வணிக்கும் மரியாதை கொடுத்து வந்தமைக்காகத் தலைவனை வாழ்த்துகின்ற தன்மை, தலைவியின் வாழ்க்கை முறையைத் தெள்ளிதின் உணர்த்துகிறது. பாணன் புலந்துரைத்தல் என்னும் திருக்கோவையார் துறையை மாற்றிப் பாணனைப் பழித்தல் என்னும் துறையாகக் கல்லாடர் புனைந்துள்ளார். அப் பாடலில் அக்காலச் சமுதாயத்தை மிக விரிவாகவே புலப்படுத்துகிறார். தலைவனைப் பரத்தையரிடம் அழைத்துச்செல்வதில் பாணன் பெரும்பங்கு வகிக்கிறான். அதனால் தலைவி துன்புறுகிறாள். தலைவியின் வேதனையைக் கண்டு பொறுக்கவியலாத அவளது தோழியர் பாணனைக் கண்டபோது அவனைக் கோலினாலும் கைகளாலும் வாரினாலும் நன்றாகப் புடைக்கின்றனர். தோட்டத்தை மேய்ந்த குள்ளநரியைத் தோட்டத்து உரிமையாளன் நன்றாகப் புடைக்கும்போது, அந் நரி இறந்துவிட்டதைப்போன்று தந்திரம் செய்யும்; பின்னர்ச் சமயம்பார்த்து ஓடித் தப்பிப்பதைப் போன்று அப்பாணனும் தன்னைப் புடைப்பாரை விலக்கிக்கொண்டு ஒடிப்போனதைக் கல்லாடனார் காட்சிப்படுத்துகிறார். 
. . .          நம் பொருபுன லூரனை
யெங்கையர் குழுமி யெமக்குந் தங்கையைப்
புணர்த்தினன் பாண்டொழிற் புல்லனென் றிவனைக்
கோலிற் கரத்திற் றோலிற் புடைப்பக்
கிளைமுட் செறித்த வேலியம் படப்பைப்
படர்காய்க் கணைந்தபுன் கூழையங் குறுநரி
யுடையோர் திமிர்ப்ப வருமுயிர்ப் பொடுக்கி
யுயிர்பிரி வுற்றமை காட்டியவர் நீங்க
வோட்டங் கொண்டன கடுக்கு
நாட்டவர் தடையமற் றதிர்த்துநடந் ததுவே (90.13-22)
எனவரும் பகுதியில் பாணனைக் கீழ்மகன் என்று தலைவி குறிப்பிடுவதைக் காணலாம். மாணிக்கவாசகர் இப்பாடற் துறையைப் பாணன் கூற்றாக அமைத்திருக்கக் கல்லாடனார் இதனைத் தலைவி கூற்றாக அமைத்துத் தலைவியின் மன வருத்தத்தைத் தெள்ளிதின் புலப்படுத்துகிறார்.
            பாணன் வரவுரைத்தல் என்னும் திருக்கோவையார் துறையில் தலைவன் வீட்டிலிருப்பதாகக் கருதித் துயிலெழுமங்கலம் பாடவந்த பாணனையும் விறலியையும் கண்ட தலைவிக்குத் தோழி உரைப்பதாக மாணிக்கவாசகர் புனைந்துள்ளார். இதனைக் கல்லாடர் தலைவியின் கூற்றாக வெளிப்படுத்துகிறார்.
பொருபுன லூரனைப் பொதுவென வமைத்த
வக்கடி குடிமனை யவர்மனை புகத்தி
யறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவெனச்
சுரைதலை கிடைத்த விசையுளர் தண்டெடுத்
தளிதார் பாடுங் குரனீர் வறந்த
மலைப்புட் போல நிலைக்குர லணந்தாங்
குணவுளங் கருதி யொளியிசை பாட
முட்டாண் மறுத்த முண்டகந் தலையமைத்
தொருபா லணைந்தவிவ் வுயர்மதிப் பாணற்
கடுத்தனை யுதவ வேண்டுங்
கடுத்திகழ் கண்ணியக் கல்லையிக் கணமே (91.7-17)
எனவரும் பகுதியில், சான்றோரால் விலக்கப்பட்ட குடி வாழ்க்கையை உடைய பரத்தை மகளிருடைய வீட்டில் தலைவனைச் சேர்க்கின்ற பாணனை அடிப்பதற்குக் கல்லை எடுத்தளிக்குமாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள். தலைவி தனது எதிர்ப்பை இவ்வாறு வெளிப்படுத்தும் தன்மையைக் கல்லாடனார் படைத்திருக்கிறார்.
                பரத்தையிற் பிரிவு என்னும் ஆணாதிக்க வழக்கினைப் பெண்கள் நேரடியாக எதிர்க்கவியலாத சூழலில் அதற்குக் காரணமான பாணனை எதிர்த்துப் போராடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கின்றனர் எனலாம்.
                மேற்கூறியவற்றால் இல்லற வாழ்க்கையில் பெண்களின் துன்பமான சூழலை எடுத்துக்காட்டும் கல்லாடர் அதனை எதிர்க்கவேண்டிய தேவையையும் வழிமுறைகளையும் குறிப்பாகப் புலப்படுத்துகிறார் எனலாம்.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 80-89.

No comments:

Post a Comment