முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 31
சுந்தரியின் நெற்றியில் ஏற்பட்ட காயம் ஆழமாக இல்லை. சிறியதாகத்தான் இருந்தது.
அடிக்கடி குழந்தைகள் கீழே விழுந்து அடிபட்டுவிடுவது
சகஜம். அதனால் எப்பொழுதும் அவள் வீட்டில் காயத்திற்குப்
போடும் பிளாஸ்திரி ஸ்டாக்கில் இருக்கும். அதில் ஒன்றை எடுத்துச் சுந்தரியின் நெற்றியில் போட்டாள் கலா.
சுந்தரி பீரோவின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள்.
அவள் அண்ணன் நன்றாகவே அறைந்திருந்தான். கன்னத்தில் அவன் அறைந்ததின் வீக்கம்
இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தாங்கும்.
அவள் நினைத்ததுபோலவே கன்னத்தின்
வீக்கமும் விரும்பியது போலவே நெற்றிக் காயமும் அமைந்திருந்தன. மனசுக்குத் திருப்தியாக இருந்தது.
சுந்தரி மெதுவாக அண்ணியிடம் பேச்சுக் கொடுத்தாள்.
கலாவுக்கும் சுந்தரியின் போக்கால் எரிச்சல்தான் ஏற்பட்டது. அவள் செயலால் தங்கள்
குடும்பமும் சேர்ந்தல்லவா தலைகுனிய வேண்டும்? சுந்தரி பேச ஆரம்பித்ததுமே கலா
எழுந்துபோக முனைந்தாள்.
'அண்ணி, நான் பேசறதக் கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க, பிளீஸ் அண்ணி', மேலே போகாதவாறு அண்ணியின்
காலைப் பிடித்துக் கொண்டாள்.
சுந்தரி என்னதான் சொல்கிறாள் என்று கேட்டுத்தான் பார்ப்போம் என்று கலா கீழே சற்றுத்
தள்ளியே அமர்ந்தாள்.
'நான் எதையும் எடுத்தேன்
கவுத்தேன்னு செஞ்சுடல, நான் யார்போட்ட சொக்குப்பொடியிலயும்
மயங்கிக் கெட்டுப்போயிடல. எல்லாம் நல்லா யோசிச்சுத்தான் செஞ்சேன்.'
'இப்படி வாயும் வயிறுமா நின்னுகிட்டு நான் யோசிச்சுத்தான் இப்படி
ஆனேன்னு சொல்றியே இது உனக்கே அபத்தமா
தெரியலையா?'
'அண்ணி, நான் எதச் செஞ்சாலும்
நம்ம எல்லாரோட சுகத்தையும் மனசுல வெச்சுக்கிட்டுத்தான் செய்வேன்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்.'
'கல்யாணமே ஆகாம இப்படிப் புள்ளைய
வாங்கிட்டு நிக்கறியே, இதுலபோய் என்ன நன்மை இருந்திடப்
போகுது? இந்த சேதி வெளியில
தெரிஞ்சா உங்க அண்ணன் வெளியில
நடமாட முடியுமா? நான்தான் நாலு கல்யாணம் காட்சின்னு
போக முடியுமா? நான் என்ன ஆம்பள
புள்ளைங்களையா பெத்துவெச்சிருக்கேன்? ரெண்டையும்
பொட்டையா இல்ல பெத்துவெச்சிருக்கேன்? அவங்களுக்கு எப்படி
கல்யாணம்லாம் ஆவும்னு யோசிச்சுப் பாத்தியா?'
'எல்லாம் யோசிச்சுப் பாக்காம இருப்பேனா அண்ணி? நான் உங்க மேலயும்
அண்ணன் மேலயும் எவ்வளவு பாசம் வெச்சிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும். சுமித்ராவும் சுதாவும் பெரிய படிப்பெல்லாம் படிச்சி நல்ல பணக்கார மாப்பிள்ளைங்களாக்
கட்டிக்கிட்டு நல்லா வாழனும்னு நான் எத்தன நாள்
கனவு கண்டிருப்பேன்?'
'பேசறதெல்லாம் நல்லாத்தான் பேசறே ஆனா உன் செயல்லதான்
எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டுத் திரியறே'
'அண்ணி, நீங்க குறுக்க குறுக்கப் பேசினா
நான் எப்படி சொல்ல வந்ததச் சொல்ல முடியும், தயவுசெஞ்சி அண்ணன் வர்றதுக்குள்ள எல்லாத்தையும் சொல்ல விடுங்க அண்ணி.'
சுந்தரியின் குரலில் ஒலித்த நிதானம் கலாவைச் சிந்திக்க வைத்தது. சுந்தரியின் பேச்சில் ஏதோ ஒரு திட்டம்
இருக்கிறது. அண்ணன் வருவதற்குள் எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும் என்று துடிக்கிறாள். விநாயகம் சரியான சொதப்பல் பேர்வழி. எதையும் சரியாகக் கேட்காமல் ஆச்சா போச்சா என்று குதிப்பான். இனி குறுக்கே பேசாமல்
சுந்தரி என்னதான் சொல்கிறாள் என்று கேட்போம். மௌனத்தை முன்நிறுத்தினாள் கலா.
'அண்ணி, இப்ப எதையும் விவரமாக்
கேக்காதீங்க, நான் நாளைக்கு ஸ்கூலுக்கு
எப்பவும் போல போவேன். ஆனா
சாயந்திரம் நம்ம வீட்டுக்குத்
திரும்பி வர மாட்டேன். யாராச்சும்
நான் எங்கன்னு கேட்டா சென்னையில வேல செய்யிறேன்னு சொல்லிடுங்க.
கொஞ்ச நாள் கழிச்சு நானே
உங்களுக்குப் போன் பன்னுவேன். அப்ப
நீங்கல்லாம் என்ன மாதிரி நடந்துக்கனும்னு
நான் சொல்றேனோ அதே மாதிரி நடந்துகோங்க. அதுக்கு
இடையில என்னப் பத்தி ஏதாச்சும் சங்கதி கேள்விப்பட்டாக்கூட ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துடுங்க. அண்ணன் ஏதாச்சும் எக்குதப்பாச் செஞ்சிக் குட்டையக் குழப்பாமப் பாத்துக்கோங்க. நான் சொல்றபடி நடந்திங்கன்னா
என் வாழ்க்கையும் சௌக்கியமா இருக்கும், உங்களுக்கும் என்னால எந்தவித பொருள் நஷ்டமும் இருக்காது, அத்தோட சுதா, சுமித்ரா படிப்புக்கும் நிச்சயமா என்னால உதவ முடியும். அவங்கள
ஈசியா டாக்டருக்குப் படிக்க வைக்கலாம். அது என் பொறுப்பு, அப்புறம் அவங்க கல்யாணத்துக்கும் நீங்க கவலயே படவேண்டாம். அவ்வளவு தான் நான் சொல்வேன்.
சுந்தரி சொல்வதைப் பார்த்தால் சரியான புளியங்கொம்பாகத்தான் பார்த்துப் பிடித்திருக்கிறாள் என்பது கலாவுக்கு நன்றாகவே புரிந்தது. சுந்தரி திறமைசாலிதான் என்பதில் கலாவுக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. அவளென்ன பச்சைக் குழந்தையா ஏமாந்து நிற்க?
தனக்கும் தன் குழந்தைகளுக்கும் வருங்காலத்தில்
உதவுவதாய்ச் சுந்தரி சொன்ன போனஸ் வார்த்தைகள் கலாவின் மனத்தில் கோட்டைகளை நிர்மானித்தன. தன் குழந்தைகள் இருவரும்
வருங்காலத்தில் டாக்டர்கள். அப்படியென்றால் டாக்டர் மாப்பிள்ளைகளைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்துவிடலாம். நினைக்கவே நன்றாக இருந்தது. இப்போது சுந்தரியின் திட்டம் நன்றாகச் செயல்பட வேண்டும் என்று சுந்தரியைவிட கலா அதிக அக்கறை
கொண்டாள்; தனக்குத் தெரிந்த தெய்வங்களை யெல்லாம் ஒரு ரவுண்டு வேண்டிக்கொண்டாள்.
சுந்தரிக்குப் பக்கபலமாகக் கலா செயல்பட ஆரம்பித்தாள்.
எங்கெங்கோ கால்போன போக்கில் சுற்றி விட்டு இரவு எட்டு மணிக்கு
விநாயகம் வீட்டிற்கு வந்தான். அவன் வரும் சத்தம்
கேட்டதும் சுந்தரி அவன் கண்களுக்குப் படாமல்
அடுப்படியில் சென்று முடங்கிவிட்டாள்.
விநாயகத்திடம் கலா மெதுமெதுவாகத் தனக்குத்
தெரிந்த, தெரியாத விஷயங்களை எல்லாம் பக்குவமாக எடுத்துரைத்து அவனைச் சாந்தப்படுத்தினாள். சுந்தரியின் விஷயத்தில் அவன் தலையிட்டு தாய்
தந்தையில்லாத அவளை நோகடிக்க வேண்டாம்
என்று வேண்டிக் கொண்டாள். அவள் வாழ்க்கையைத் தானாகவே
நல்லபடியாக அமைத்துக் கொள்வாள் என்று உறுதி கூறினாள். இரண்டு மணிநேரம் அவள் விநாயத்திற்கு நன்றாக
வேப்பிலை அடித்தாள். அதுவும் நன்றாகவே வேலை செய்தது.
'நீயாச்சு, உன் நாத்தனார் ஆச்சு,
ரெண்டுபேரும் சேந்து என் மானத்த வாங்காம
இருந்தா சரி' என்று அவன்
சட்டையை மாட்டிக்கொண்டு சுற்றுலா சென்றிருந்த தன் இரண்டு மகள்களையும்
அழைத்துவர பத்துமணி சுமாருக்குப் பள்ளிக்குச்
சென்றான்.
திங்கட்கிழமை சுந்தரி நினைத்ததுபோலவே சந்திரன் சுந்தரியின் திட்டத்தில் அகப்பட்டு அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச்
சென்றுவிட்டான். அவள் நினைத்த அளவிற்குச்
சந்திரன் வீட்டில் எந்தவிதச் சிக்கலும் ஏற்படவில்லை. தாட்சாயணியும் சந்திரனைவிட அநியாயத்திற்கு நல்லவளாக இருந்தாள். சுந்தரியைப் பற்றி எந்தவித சந்தேகமும் அவள் அடையவில்லை. நவ
நாகரிகம் உடையவளாக இருந்தாலும் கணவன் சொல்லை அப்படியே நம்புபவளாக இருந்தாள். சந்திரனும் தாட்சாயணியும் இத்தனை ஆண்டுகள் நடத்திய தாம்பத்தியத்தின் நெருக்கம் அப்படி. அதில் ஏற்பட்ட கரையான் புற்றை இருவருமே அறிந்துகொள்ளவில்லை.
(தொடரும்)
No comments:
Post a Comment