முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 23
சுந்தரியின் அண்ணன் வீடு இருக்கும் தெருவிலிருந்து
கீதா என்பவள் தனது அலுவலகத்தில் கிளார்க்காகப்
பணிபுரிகிறாள் என்பதை அறிந்தாள் தாட்சாயணி.
தாட்சாயணி அவளிடம் சுந்தரியின் பண்பு நலன்களைப் பற்றிப் பொதுவாக விசாரித்தாள்.
கீதா சுந்தரியின் பூர்வோத்தரத்தைப்
புட்டுப் புட்டு வைத்தாள். சுந்தரி பாவப்பட்ட ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவள் என்றாள்.
பிறரை நம்பவைத்துக் கழுத்தறுப்பவள்
என்றாள்.
'எப்படி இப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்டாள் தாட்சாயணி. கீதாவும் சுந்தரியும் பிளஸ்டூ ஒன்றாகப் படித்தார்களாம். பரீட்சை வருவதற்கு இரண்டு மாதம் இருக்கும்போது கீதாவிற்கு அம்மை போட்டுவிட்டதாம். அதனால் கீதா அதிகநாள் பள்ளிக்கு
லீவ் போட்டு விட்டாளாம். அதனால் பரீட்சைக்குப் படிப்பதற்கு நோட்ஸ் கொடுத்து உதவுமாறு சுந்தரியிடம் கேட்டாளாம் கீதா. அவள் 'கட்டாயம் தறேன் தறேன்' என்றாளாம். பரீட்சை நெருங்கும் சமயத்தில் 'ஒனக்குக் கொடுத்துட்டா நான் எப்படிப் படிக்கிறது?
என்னால தரமுடியாதுப்பா' என்று கூறிவிட்டாளாம். 'நாம ரெண்டுபேரும் சேந்து
படிப்போம்' என்று கீதா கெஞ்சினாளாம். 'எனக்கெல்லாம்
சேந்து படிச்சா மண்டைல ஏறாது' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாளாம் சுந்தரி. பிறகு கீதா இன்னொரு தோழியின்
வீட்டிற்குச் சென்று நோட்ஸ் வாங்கிப் படித்துப் பாஸ் செய்தாளாம்.
கீதா சுந்தரியைவிட அதிக
மார்க் வாங்கிக் காலேஜிலும் சேர்ந்துவிட்டாளாம். தினமும் கீதாவைப் பார்க்கும் சுந்தரி, 'நீ மட்டும் காலேஜுக்குப்
போறியாக்கும்? ஒனக்கு மட்டும் எப்படி எல்லாம் கெடச்சுடுது? நீ மட்டும் எப்படி
மார்க் வாங்கின? காப்பி அடிச்சியா?' என்றெல்லாம் பொறாமைச் சொற்களைக் கண்டபடி அள்ளிவீசிக் கீதாவை நோகடிப்பாளாம். அதிலிருந்து அவளுடைய சகவாசமே வேண்டாம் என்று கீதா ஒதுங்கிவிட்டாளாம்.
சுந்தரியின் பூர்வோத்தரத்தைப் பற்றியும் குணநலன்கள் பற்றியும் சந்திரன் கூறிய செய்திகள் கீதா சொன்ன செய்திகளோடு
மாறுபட்டமைந்ததைக் கவனித்தாள் தாட்சாயணி. இச் செய்திகளைக் கூறியாவது
சந்திரனைத் தெருட்ட முடியுமா? என்று யோசித்தாள்.
தான் கீதாவிடமிருந்து அறிந்த
செய்திகளை யாரோ சிலரைப் பற்றிய
செய்தி போன்று சந்திரனிடம் உரைத்தாள் தாட்சாயணி. அவற்றைக் கேட்டதும் சந்திரன் கொதித்தான். 'அதெல்லாம் நல்ல குலத்துல பொறந்திருக்கணும்!
நல்ல பண்புகளோட வளந்திருக்கனும்! என்ன பச்சை அயோக்கியத்தனம்!
இந்தமாதிரி நம்பவெச்சிக் கழுத்தறுக்கற ஆளுங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்!' கோபத்தில் வார்த்தைகள் வெடித்தன.
'நீங்க சொல்ற ஜட்ஜ்மெண்ட் எல்லாருக்கும் பொருந்துமா?'
சந்திரனுக்குப் பொறி தட்டியது.
'இவள் நம்மை எங்கோ மாட்டப் பார்க்கிறாள்'.
'எல்லாருக்கும் நியாயம் ஒன்னுதான்?'
'சுந்தரியா இருந்தாக் கூடவா?'
'அவ செஞ்சாலும் தப்பு
தப்புதான். ஆனா அது உண்மையா
இருக்கணும் இல்லையா?' - சுந்தரியைக் காப்பாற்ற விஷயத்தையே பொய்யாக்கப் பார்த்தான்.
சுந்தரியின் பண்பு நலன்களைச் சந்திரனும் கூர்ந்து நோக்கவேண்டும் என்றுதான் தாட்சாயணி இச் செய்தி களைச்
சந்திரனிடம் கூறினாள்.
சுந்தரியைப் பற்றித் தாட்சாயணி துப்புத்துலக்க ஆரம்பித்துவிட்டதை எண்ணிப் பார்த்தான் சந்திரன். இனி இன்னும் ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும்.
சந்திரன் சுந்தரியைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள முயன்றதைவிட சுந்தரியைக் காப்பாற்று வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான்.
மறுநாள் தாட்சாயணி தன் ஸெக்ஷன் வழியாகக்
கீதா செல்வதை எதேச்சையாகப் பார்த்தாள். 'என்ன
கீதா சௌக்கியமா?' என்று கேட்டுவைத்தாள். கீதா ஏதோ சொல்ல
வாயெடுத்துவிட்டுப் பின் மனத்தை மாற்றிக்
கொண்டு பேசாமல் செல்லத் தொடங்குவதைப்போன்று தாட்சாயணிக்குத் தோன்றியது.
'என்ன கீதா? ஒரு
மாதிரி இருக்க? ஒடம்பு சரியில்லையா?' தாட்சாயணி மீண்டும் அவளை அழைத்து நலம்
விசாரித்தாள்.
'அதெல்லாம் ஒன்னுமில்ல மேடம், காலைல எனக்குச் சுந்தரி போன் பண்ணினா. . . '
'என்ன சுந்தரியா?'
'ஆமாம் மேடம். போன் எடுத்ததும், என்னை
யாருன்னு ஞாபகம் இருக்கான்னு அதட்டினா?'
'போன்ல என்ன முகமா தெரியும்?
நான் பதிலுக்குத் தெரியலையேன்னு சொன்னேன்'.
'என்னப்பத்தி குத்தம் மட்டும் சொல்லத் தெரியுதா? நான்தான் சுந்தரி பேசறேன். ஒனக்கு என்னைப்பத்தி என்ன தெரியும்? என்னைப்
பத்தி விசாரிக்கனுமன்னா என் டீச்சர்ங்க கிட்ட
விசாரிக்கனும்.'
'நான் ரொம்ப அடாவடியான
பொண்ணு அப்படின்னா சுந்தரி!'
'நான் ரொம்ப அமைதியான
பொண்ணுன்னு சொன்னேன் நான்'.
'ஒனக்கு நான் ஏன் என்
நோட்ஸ தரணும்? வேணும்னுதான் நான் தரல.'
'அதத்தானே நானும் சொன்னேன். நீ வேணும்னே எனக்குத்
தரலைன்னு'
'நாங்க பணக்காரங்கன்னு ஒனக்குத் தெரியுமா? ஒரு காலத்துல நாங்க
ஏழையா இருந்திருக்கலாம். ஆனா நான் இப்ப
எவ்வளவு பணக்காரின்னு ஒனக்குத் தெரியுமா?'
'என்னைப் பத்தி அடுத்தவங்களுக்கு இப்படித் தகவல் கொடுக்கற வேலையெல்லாம் வச்சுக்காதே'
'நான் இப்பப் பேசினத
கண்டுக்காம விட்டுடு! யாருகிட்டயும் போயி சொல்லிக்க வேணாம்'
அப்படின்னு பொரிஞ்சு தள்ளிட்டா மேடம். அவளுக்கு எப்படி மேடம் நாம பேசனது எல்லாம்
தெரிஞ்சது?
'ஸாரி கீதா, அவ
இப்படி உன்கிட்ட பிஹேவ் பண்ணுவான்னு நான் கொஞ்சங்கூட எதிர்பாக்கல.
அவ எங்க சார் ஸ்கூல்ல
வேல பாக்கறா. அவளப்பத்தி எங்க சார் சொல்லிக்கிட்டு
இருந்தாங்க, அதனாலதான் அவளப்பத்திச் சும்மா உங்கிட்ட விசாரிச்சேன். நீ சொன்ன விஷயத்தப்
போயி நான் பேச்சுவாக்குல எங்கசார்
கிட்ட சொல்லிட்டேன். அவரும் ஏதோ எதார்த்தமா அவகிட்ட
பேசியிருப்பார் போல. அது இப்படி
ஆகும்னு நான் நினைக்கவேயில்ல கீதா,
பிளீஸ் மன்னிச்சுடும்மா!'
மேலதிகாரியான தாட்சாயணி சுந்தரியின் பொருட்டுக் கீதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதாகப் போயிற்று. இனித் தன் கணவனுக்காகவும் சுந்தரிக்காகவும்
தனக்காகவும் யார் யார் கால்களிலெல்லாம்
விழவேண்டி வருமோ?
இதுவரை தாட்சாயணி, தனக்கும் அவனுக்கும் மறைவான எந்த இரகசியங்களும் இல்லை
என்று நினைத்து ஆனந்தம் அடைந்தாள். அதனைப் பிறரிடம் கூறித் தருக்கித் திரிந்தாள். இனி அந்தக் குடுப்பினை
தாட்சாயணிக்கு இல்லை. அதற்கு உரிமை பூண்டவள் இனி சுந்தரிதான்.
தனக்கு அமைந்ததைப் போன்ற கணவன் அனைவருக்கும் அமைய வேண்டும் என்று
தாட்சாயணி பிறருக்கு வாழ்த்து கூறியிருக்கிறாள். ஆனால் அவனே அமையவேண்டும் என்றல்லவா
சுந்தரி முனைந்து விட்டாள்.
நேற்றுத் தன்னிடமிருந்து கேள்விப்பட்ட ஒரு செய்தியை அவனால்
சுந்தரியிடமிருந்து மறைக்க முடியவில்லையே! ஆனால் அந்தச் செய்தியைத் தான் சுந்தரிக்குச் சொல்லிவிட்டதாகத்
தன்னிடம் கொஞ்சம் கூட வெளிப்படுத்தாமல் மறைத்துதானே
வைத்தான்?
அவளுடைய பண்புகளைக் கூறி அவளிடமிருந்து அவன்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அவள் கூறிய செய்தியைச்
சந்திரன் எடுத்துக்கொண்டவிதம் வித்தியாசமாகவும் விபரீதமாகவும் அல்லவா இருக்கிறது?
தன்னால் கீதாவும் அவமானப்பட வேண்டியதாய்ப் போயிற்றே?
இவ்வாறு சுந்தரி கீதாவின் தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து வம்புக்கிழுத்த விஷயத்தைச் சந்திரனிடம் சொன்னாலும் அவன் சுந்தரியின் முகத்திரையைக்
கிழிப்பதற்குப் பதிலாக அவளைக் கெட்டவள் என்று வெளிப்படுத்திய கீதாவையும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த தன்னையும்தான் மோசமானவர்கள் என்று முத்திரை குத்துவான்.
தாட்சாயணி என்ன சொன்னாலும் சந்திரன்
ஏற்றுக்கொள்வதில்லை என்று பிடிவாதமாகவே நின்றான்.
தாட்சாயணியின் அறிவுரைகளைக் கேட்கக் கேட்க அவன் மனம் எரிச்சலடைந்தது.
'எல்லாம் உன்னப்பத்தி மட்டுமே பாரு. மத்தவங்களுக்கும் ஒரு மனசிருக்கு என்றதையே
மறந்துடு. ஒரு ஆம்பளையான என்னோட
உணர்ச்சிகள நீ கொஞ்சமாவது புரிஞ்சுக்கறியா?
தியாகம் செய்ய வந்த சுந்தரி மேல
நீ அபாண்டமா பழி சுமத்தறே! அவளையே
நீ சந்தேகப்படற! அவள நீ சந்தேகப்படறது
என்னையே சந்தேகப்படற மாதிரிதான். இத்தனநாள் நீ என்கூட வாழ்ந்ததெல்லாம்
ஒரு போலியான வாழ்க்கைதான்' - பொருமினான்.
சந்திரன் தனக்காக அடைந்த வேதனையைவிட சுந்தரியைத் தாட்சாயணி சந்தேகிப்பதை நினைத்து அடைந்த வேதனைதான் அதிகம்.
போலியாக வந்த சுந்தரியின் போலித்தனத்தை
அறிந்துகொள்ள முடியாத சந்திரன், உண்மையாக அவர்கள் இத்தனைநாள் வாழ்ந்த வாழ்க்கையைப் போலி என்று ஒரு
நொடியில் உறுதியாகச் சொன்னதில் எந்தப் போலித்தனமும் இல்லை.
(தொடரும்)
No comments:
Post a Comment