Monday, 16 September 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 26


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 26
            எட்டாவது மாதம்!
   டாக்டர் வீட்டுக்கே வரவழைக்கப்பட்டார்.  'அதிகமா மாடி ஏறி எறங்கவேணாம், அப்புறம் மிஸ் கேரேஜ் ஆயிடும்' என்று டாக்டர் வற்புறுத்தினார்.
            சுந்தரிக்குச் சாதகமான விஷயம்தான்!
            கீழே உள்ள அறையொன்றைச் சுந்தரிக்கு ஒதுக்கியே தீர வேண்டும். யோசனை செய்தான் சந்திரன். தாட்சாயணியின் கம்ப்யூட்டர் அறையைக் கொடுக்கலாம். ஆனால் அதில் பாத்ரூம் வசதி இல்லை. எழுந்து வெளியில்தான் போக வேண்டும். எனவே சுந்தரி தங்க அந்த அறை வசதியாக அமையாது.
            கீழே உள்ள அவர்களுடைய படுக்கை அறையில் மட்டுமே பாத்ரூம் வசதி இருந்தது. பெரிய பாத்ரூம், ஷவர், குளிப்பதற்கு டப் எனப்படும் நீர்த்தொட்டி, இருபத்தைந்து லிட்டர் வாட்டர் ஹீட்டர், டிரெஸ்ஸிங் டேபிள், ஃபேன் எனச் சகல வசதிகளுடன் கூடியது. சுவரில் முழுக்க முழுக்க இளம் நீலவண்ண உயர்ரக டைல்ஸ் ஒட்டப்பட்டு ஆறடி உயரக் கண்ணாடியுடன் கூடியது. அவர்கள் படுக்கை அறையில் ஸ்பிலிட் சி இருந்தது. சுவரில் தொங்கிய ஐம்பத்தோரு அங்குலம் அகலமான பெரிய திரை கொண்ட அதி நவீன எல் சி டி ஸ்கிரீன் தொலைக்காட்சி இருந்தது. வேலைப்பாடு கொண்ட அழகான கட்டில், அதற்குமேல் படுத்ததும் தூக்கம் கண்களைத் தழுவிக்கொள்ளும் மெத்தென்ற இலவம் பஞ்சு மெத்தை - அந்த அறையைத்தான் சுந்தரிக்குத் தரவேண்டும்.
            குழந்தை பத்திரமாகப் பிறக்க வேண்டாமா?
            அதையே தாட்சாயணியிடம் காரணம் காட்டினான் சந்திரன். இருபது ஆண்டுகளாகச் சந்திரனோடு கூடிக் குலாவிய அவளுடைய அந்தப்புரத்தை - அந்தரங்க அறையை ஊர் பேர் தெரியாத யாரோ ஒருத்திக்குத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டாள் தாட்சாயணி.
            தாட்சாயணியின் ஜாகை விருந்தினர் அறைக்கு மாறியது. அங்கே ஏசி இல்லை. ஏசி இல்லை யென்றால் தாட்சாயணிக்குத் தலைவலி வந்துவிடும். யோசித்தான் சந்திரன். ஏசி ரிப்பேர் கடையிலிருந்து பழைய விண்டோ ஏசியைக் குறைந்த விலைக்கு வாங்கிப் பொருத்தினான். அதில் இன்ஜின் எழுப்பிய சத்தம் ரயில் ஓடுவதைப்போல் கேட்டது.
            இது அவள் வாழ்வின் அடுத்த சறுக்கல்!
            இவற்றைத் தாட்சாயணியின் வாழ்க்கையில் நேரிட்ட சறுக்கல்களாகச் சந்திரன் கருதவில்லை. அவள் வாழ்க்கையில் ஒளியேற்றப்போகும் குழந்தைக்கு இட்ட வெற்றிப் படிகள்! என்றே நினைத்தான். நிகழ்வு ஒன்றாக இருந்தாலும் அதைக் காண்பவர்கள் கண்ணோட்டம் வேறுபடத்தான் செய்கிறது.
            சர்க்கஸில் மிருகங்களைப் பழக்கி அதிசயமான விளையாட்டுகளைப் புரிய வைக்கிறார்கள். அவற்றைப் பார்க்கின்ற நாமோ 'கிளி எவ்வளவு அழகாகக் கொஞ்சுது பார்! அந்த நாய்க்குட்டிகள் எவ்வளவு அழகாக வண்டி ஒட்டுகின்றன பார்! யானை எவ்வளவு அழகாக கிரிக்கெட் விளையாடுகிறது பார்! அவங்க நில்லுன்னா நிக்குது, உக்காருன்னா உக்காருது! எல்லாம் எஜமான விசுவாசம்! என்று உடல் புல்லரிக்கப் பேசுகிறோம். மனிதர்கள் கண்ணோட்டம் அப்படி!
                'நிம்மதியாக இந்த உலகத்தை அனுபவிக்க விடாமல் இப்படி நேரங்கெட்ட நேரத்தில் துன்புறுத்தி நம்மைப் பணியவைத்து ஆட்டிப் படைக்கிறார்களே இந்தக் கேடுகெட்ட மனிதர்கள்' என்று நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் அப் பிராணிகள்!
            தாட்சாயணியின் அறை மாறினாலும் அவளுடைய பொருட்கள் அனைத்தும் கீழ் அறையிலேயே இருந்தன.
            எவ்வளவு பொருட்களைத்தான் அவள் மேலே கொண்டு செல்ல முடியும்? சுவரிலேயே வடிவமைக்கப்பட்ட வார்ட் ரோப் நிறைய மைசூர் ஸில்க், ஷிப்பான், ரப்பர் ஸில்க், டெரகோட்டா, உல்லி உல்லி, ஜார்ஜெட், பிரிண்டட் சில்க் என வகைவகையான உயர்தரப் புடவைகள்; விழாக்களுக்கும் வைபவங்களுக்கும் உடுத்திக் கொள்ளும் ரிவர்ஸிபில் சேரி, சாமுத்ரிகா பட்டு, ஐம்பதாயிரம் ஷேட் புடவை, ராகமாலிகா, சில காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள்; அவற்றிற்கு மேட்சிங்காக ஜாக்கெட்டுகள்; புடவைகளின் நிறத்திலேயே அடுக்கி வைக்கப்பட்ட உள்பாவாடைகள்; விதவிதமான நைட்டிகள்; இத்யாதி - என நிரம்பி வழியும் துணிகளை எடுத்துச்சென்று அவள் எங்கே அடுக்குவாள்?
            மற்றவர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும், அவர்களுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக்கொடுக்கவும் உணவுவகைகளை வாங்கிக் கொடுக்கவும் அவர்களின் மருத்துவத்திற்கும் செலவழிக்கும் பணம் அவளிடத்தில் இப்படித் துணிமணிகளாக மாறி நிறைந்திருந்தன. அவளுக்கு அவற்றைத் தவிர வேறு எதில் இன்பம் இருக்க முடியும் என்று சந்திரனும் வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருப்பான்.
            பீரோ நிறைய வைக்கப்பட்டிருக்கும் கம்மல்கள், மேட்சிங்காக அணியப்பெறும் பல்வேறு ஆபரணங்கள், தங்கக் கொலுசு, கடா வளையல்கள், முத்து மாலைகள், பலவகை இயற்கைக் கற்களால் ஆன பல வண்ண மணிமாலைகள்; அவற்றிற்கு மேட்சிங்கான பல்வேறு மணிகள், கண்ணாடிகள் பதித்த வளையல்கள்; குந்தன் வொர்க், ஆண்டிக் வொர்க் செய்யப்பெற்ற ஆபரணங்கள்; மேக்கப் செட்டுகள்; நறுமணமிக்க மேனாட்டுச் சென்ட் வகைகள்; பலவித ஸ்டிக்கர் பொட்டுகள் - இப்படி எந்தெந்த பொருட்களைத் தேர்ந்தெடுத்து அவள் எடுத்துச்செல்வாள்?
            இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது மக்கள் தத்தம் பொருட்களைச் சொந்த மண்ணிலிருந்து பெயர்த்தெடுத்துச் செல்வதில் எத்தகைய துன்பத்தை உற்றிருப்பார்களோ அத்துயரத்தைவிட பன்மடங்கு அவளுடைய அறை மாற்றத்தில் ஏற்பட்டது.
            மனத்தில் குமைந்து சூழ்ந்த எரிச்சலில் பத்துப் பதினைந்து ஆடைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு மேல் அறைக்குச் சென்றாள்.
            அவளுடைய பீரோவிலிருந்து சாவி எடுக்கப்படாமல் தொங்கியது.
            அவள் சம்பளப் பணத்திலிருந்து அவ்வப்போது செலவழிக்கப்படாமல் சேர்ந்திருக்கும் இலட்சத்திற்குக் குறைவில்லாத ரொக்கப் பணம், பேங்க் செக் புக், பாஸ் புக், ஏடிஎம் கார்டுகள் அனைத்தும் பீரோவின் ஓர் அறையில் நிறைந்திருந்தன.
            இனி அவள் சாதாரணக் கட்டிலில் படுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கிரானைட் பதித்த அறையில் பெருமிதத்தோடு வளைய வந்தவள் இனி விலை குறைந்த டைல்ஸ் பதித்த அறையைப் பார்த்துப் பெருமூச்செறிய வேண்டும். உயர்தர சாண்டிலியர் கொத்து விளக்குகள் தொங்கும் நவநாகரிக அறை இனிச் சுந்தரிக்குச் சொந்தம்.
            இரண்டு டியூப் லைட்டுகளிலிருந்து மட்டும் ஒளிகசியும் அறையைப் பார்த்துத் தாட்சாயணி கண்ணீர் கசிந்தாள்.
                'எல்லாம் ரெண்டு மாசந்தான்! பொறுத்துக்கோ செல்லம்!' சுந்தரியைக் கொஞ்சும் நினைப்பில் தாட்சாயணியைச் 'செல்லம்' என்று அழைத்து விட்டான். தன் தவறை எண்ணிச் சுதாரிப்பதற்குள் முழுமையாக அச்சொல் வெளிப்பட்டு நின்றது.
            ஆண்களுக்குத்தான் எத்தனைக் கல் மனசு! தான் மற்றொரு பெண்ணைக் கொஞ்சுவதைத் தன் மனைவி சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எப்படி அவன் எதிர்பார்க்கிறான்?
            தன் மனைவியிடமே வேறொருத்தியைச் சுட்டிக் காட்டி அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் பார் என்று கூறும் ஆடவர்கள் எத்தனை பேர்!
            வேறொருத்தியின் அங்க இலாவண்யத்தைப் பற்றி வருணிப்பவர்கள் எத்தனை பேர்!
            தன் கணவனோடு போகும்போது அவன் கண்கள் சாலையின் வண்டி வாகன நெரிசலைக் கவனிப்பதை மறந்து வண்டியிலோ நடந்தோ செல்லும் அழகான, அழகற்ற பெண்களின் உடல்வாகின் மீது ஒரு கணநேரம் மொய்த்து விலகுவதைக் கண்டும் காணாததுபோல் பெண்கள் சகித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
            தன் மனைவி தன் முன்னால் மற்றொரு ஆடவனைக் கொஞ்சினால் அவனால் ஏற்றுக்கொள்ள முடியுமா? கொஞ்சக்கூட வேண்டாம். தன் கணவனைக் காட்டிலும் அவன் திறமையானவன் என்று சிறிதே வேறுபாடு காட்டி அடுத்தவனைப் புகழ்ந்துரைத்தால் அவன் கேட்டுக்கொண்டு சும்மாவா இருப்பான்? - தாட்சாயணியின் பெண்ணியச் சிந்தனை எட்டிப் பார்த்தது.
            பெண்ணியத்தைப் பற்றி நாம் மணிக் கணக்காய்ப் பேசிக் கொண்டிருக்கலாம். கூட்டம் போடலாம். வாழ்க்கை என்று வரும்போது அவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தான். நடைமுறைப்படுத்த எந்தவிதச் சாத்தியக் கூறும் இல்லை. பெண்ணியத்தைப் பேசுபவர்கள்தாம் வாழ்க்கையை இழந்து பரிதவிக்க வேண்டும்.
            பெண்ணியம் பேசுபவர் வீடுகளுக்குச் சென்று பார்த்தால்தான் தெரியும். தங்கள் வீடுகளுக்குள் அவர்கள் எவ்வளவு அடிமைகளாய் நடத்தப் படுகிறார்கள் என்று. உண்மையைச் சொல்லப் போனால் பெண்ணியம் பற்றித் தெரியாத கிராமத்துப் பெண்கள்கூட ஓரளவுக்குச் சுதந்திரக் காற்றை அனுபவிக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் படித்து வேலைக்குச்செல்லும் நடுத்தட்டு வர்க்கப் பெண்கள் 'அவர் என்ன சொல்வாரோ? இவர் என்ன சொல்வாரோ?' என்று சமுதாயத்திற்கு அஞ்சி, உற்றார் உறவினருக்கு அஞ்சி, மாமியார் நாத்தனாருக்கு அஞ்சி, கட்டிய கணவனுக்கு அஞ்சி, பெற்றுவிட்ட பிள்ளைகளுக்கு அஞ்சி - இப்படி அனுதினமும் தன்மானம் காக்கவும் உற்றார், உறவினர், சமுதாயம் ஆகியவற்றின் கண்களில் கணவனை நல்லவனாகக் காட்டவும் தனது நற்பெயரைக் கட்டிக்காக்கவும் அச்சத்தாலும் தங்களை அடிமைப்படுத்தி நோகடித்துக் கொள்கிறார்கள்.
            தாட்சாயணி தன் மனத்தைச் சமாதானப் படுத்திக்கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்ப முனைந்தாள். புடவைக்கு மேட்சான ஜாக்கெட் மிஸ்ஸானது. அந்த ஜாக்கெட் தன் வார்ட் ரோபில் இருந்தது. எடுத்து வரலாம் என்று கீழிறங்கினாள்.
                'சுந்தரன் ஞானும் சுந்தரி நீயும்
            சேர்ந்திருந்தால் திருவோணம்'
            என்பதுபோல் சந்திரனும் சுந்தரியும் தழுவலில் மறந்து கிடந்தார்கள். கதவு திறந்தே கிடந்தது. அவர்களுக்குத் தான் லஜ்ஜை இல்லை. தனக்குமா?
                சென்ற சுவடு தெரியாமல் மீண்டாள்.
                புடவைக்குச் சற்றும் பொருந்தாத ஜாக்கெட் அணிந்துசென்றாள்.
                அதற்குப்பின் அவளால் தன் அறைக்குச் சகஜமாகச் செல்ல முடியவில்லை. 'ஏனோ தானோ' வென்று முதலில் எடுத்துச்சென்ற ஆடைகளையே துவைத்துத் துவைத்து மாற்றி மாற்றிப் பொருத்தம் இல்லாமல் உடுத்திக்கொண்டு அலுவலகம் சென்றாள்.
            இப்போதெல்லாம் உடைக்கு மேட்சாக வளையல், கழுத்து மாலை, பொட்டு என அணிவதையும் விட்டு விட்டாள்.
            அவள் உடைகள் செண்ட் வாசம் தொலைத்தன. அவள் உதடுகள் உதட்டுச் சாயத்தை மறந்தன.
            மற்றவர்களிடம் அதிகமாகப் பேசுவதையும் நிறுத்திக் கொண்டாள்.
            அவள் உதடுகள் புன்னகைக்க மறந்தன.
            அவள் பார்வை வெறுமையானது.
            சந்திரன் டாக்டர் பட்டம் பெற வேண்டுமென ஆய்வு செய்துகொண்டிருந்தான். அவன் வேலைப் பளு காரணமாக அவனுடைய நூல்கள் பலவற்றைப் படித்து தாட்சாயணிதான் குறிப்புகளைக் கணினியில் சேகரித்துத் தொகுத்து வைத்திருந்தாள். அவளால் மட்டுமே அவற்றைப் பற்றிய விவரத்தை விளக்க இயலும். அதனைச் சந்திரனால் கூட என்னவென்று  புரிந்துகொள்ள இயலாது. அப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் அவன் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும்.
            இனி அவளால் அவற்றைத் தொடர முடியாது. அவள் வேண்டுமென்றே தன்னைப் பழிவாங்கவே அப் பணியைத் தொடராமல் முரண்டு பிடிக்கிறாள் என்று சந்திரன் குற்றம் காணக்கூடும். ஆனால் மனம் ஒருநிலைப் படாதபோது எப்படி இப்படிப்பட்ட நுணுக்கமான வேலைகளில் அறிவைச் செலுத்தமுடியும்?
            அவள் செய்த அன்றாடப் பணிகளில் அடிக்கடி தவறுகள் நிகழ்ந்தன. பலவற்றைச் செய்ய மறந்தாள். அவற்றை அவள் கீழ்ப் பணிபுரியும் சாதாரண அறிவு படைத்தோர் சுட்டிக்காட்டியதுதான் வேடிக்கை.
            அனைவராலும் பேசப்படுமாறு தன் திறமையை வெளிக்காட்ட அவளுக்கு அளிக்கப்பெற்ற நாலைந்து புராஜெக்டுகளைத் தன்னால் செய்ய இயலாது என்று உப்புச் சப்பில்லாத காரணங்களைக் காட்டி மறுதலித்தாள்.
            பிராந்திய மேலாளர் பதவி அவளுடைய நெடுநாளைய கனவு. அப்பதவிக்கு விண்ணப்பிக்குமாறு வந்த அலுவலக ஆணை அவள் கணினி மெயிலில் ஒரு மாதமாகக் காத்துக்கிடந்தது. அவளுக்கிருந்த சிதைந்த மனநிலையில் அந்த ஆணையைக் கூட கவனிக்க மறந்தாள். அவள் அந்த மெயிலைக் கண்டபோது விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்தேதி முடிவடைந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. தன் வாழ்க்கையில் எட்ட நினைத்த அந்தச் சிறந்த, தன் பணிக்காலத்தில் மீண்டும் கிடைக்க இயலாத அரிய வாய்ப்பை நழுவவிட்டாள்.
            விண்ணப்பித்திருந்தால் மட்டும் என்னவாகி இருக்கும்? தன் மனத்திரையில் எதிர்காலத்தை ஓட்டிப் பார்த்தாள். பதவிக்காகக் கேட்ட தகுதிகளைவிட அவளிடம் அதிகமான சிறப்புகள் இருந்தமை நிதர்சனமாகத் தெரிந்தது. தான் விண்ணப்பித்திருந்தால் தனக்கு அப் பதவியைக் கொடுத்து விட்டுத்தான் மற்றவர்களைப் பரிசீலிக்க வேண்டும்.
            ஆனால் பிராந்திய மேலாளர் ஆனபின் என்ன செய்வது? அப் பதவியின் சவால்களை எதிர்கொள்ளும் மனத்துணிவு இப்போது அவளுக்கு இருக்கிறதா?
            முன்பெல்லாம் எந்தவிதமான சவால்களையும் துணிவாக எதிர்த்து நின்றவள்தான். ஆனால் இப்பொழுது அவள் மனமே சுக்குநூறாக உடைந்து, நிற்பதற்கும் நடப்பதற்கும் உண்பதற்கும் உடுப்பதற்கும் கூடத் திராணி அற்றவளாய் இருக்கிறாளே! பிறரிடம் பேசக்கூடத் தெம்பில்லாமல் மெல்லிய குரலில் பேசுகிறாளே? அப்படிப்பட்ட நிலையில் அவளால் அப்பதவியைத் திறம்பட எப்படிச் செய்ய முடியும்? பெண்கள் கையில் பொறுப்புகளைக் கொடுத்தால் இப்படித்தான் ஆகும் என்று பெண்ணினத்தையே கேலி பேசும் நிலை தன்னால் வந்துவிடாதா?
            அப்படியே அப்பதவி வந்தாலும் அப்பதவி வரும்போது தாட்சாயணி போட்டோவில் மாலையுடன் சிரிப்பாளா? அல்லது நடைப்பிணமாக இருப்பாளா?
            அல்லது மனம் உடைந்து கிழிந்து அவள் உடைகளைக் கிழித்துக்கொண்டு திரியும் பைத்தியக் காரியாக வலம்வருவாளா?
            இப்போதே அவள் பத்து சதவிகித பைத்தியகாரியாக ஆகிவிட்டிருந்தாள்.
            அடிக்கடி சிரிக்கிறாள். அடிக்கடி அழுகிறாள். யாருமில்லாத அறையில் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறாள். பாத்ரூம் சென்றால் அங்கேயே மணிக்கணக்காக அமர்ந்திருக்கிறாள். படுக்கையில் உட்கார்ந்துகொண்டு அறையின் விதானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அடிக்கடி வெப்பமாகப் பெருமூச்சு விடுகிறாள்.
            கணினி முன் அமர்ந்தால் அதனை எப்படி இயக்குவது என்பதைச் சில கணப்பொழுதுகள் மறந்து விடுகிறாள். டாக்குமெண்டைச் ஸேவ் செய்வதற்குப் பதிலாக டெலீட் செய்கிறாள். மீண்டும் அடித்ததையே அடித்துக் கொண்டிருக்கிறாள்.
                'கிறிஸ்துமஸ் லீவு முடித்து வரும்போது காலண்டரை யாராவது தூக்கிக்கொண்டு போய்விடப் போகிறார்கள். பத்திரப்படுத்தி வை', என்று தனது பியூனிடம் சொன்னாள். அதற்கு அவன், 'அதுதான் இந்த வருஷம் முடிஞ்சு போச்சுங்களே! அதுக்கப்புறம் எதுக்குங்க மேடம் இது?' என்று கேட்டான்.
                'அதுல லீவு பர்டிகுளர்ஸ் எல்லாம் இருக்குமே' என்றாள்.
                'அதுல எப்படி மேடம் அடுத்த வருஷத்து லீவு இருக்கும்' என்று கேட்டான்.
                ', ஏதோ ஞாபகத்தில் குழம்பிவிட்டேன், ஆமாம்! ஆமாம்1 எடுத்துக் குப்பைல போட்டுடுங்க!' என்று கூறி அசடு வழிந்தாள்.
            பியூன் அப்போது அவளை ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டு சென்றான்.
            மனத்தில் தெளிவில்லாதபோது அவளால் எப்படிக் கருத்தூன்றி இயங்க முடியும்?
            சுந்தரி தன் வாழ்க்கையில் நுழைவதற்கு முன் கடந்த சில ஆண்டுகளில் கிடுகிடுவென முன்னேற்றத்தின் - புகழின் உச்சியில் அநாயாசமாக ஏறியவள், இன்று சுந்தரி என்னும் மாயப் பிசாசத்தால் கிடுகிடு பள்ளத்தில் சரிந்து கொண்டிருக்கிறாள்.
            அவள் வாழ்க்கை நிலை சு.மு. (சுந்தரிக்கு முன்), சு.பி. (சுந்தரிக்குப் பின்) எனப் பேசப்படப் போகிறது.
            என்னதான் அவள் வாழ்க்கைக்குச் சந்திரன் உத்தரவாதம் அளித்தாலும் இனிப் பழைய இன்பம் நிலைப்பது சாத்தியமா? திரும்பத் திரும்ப மனம் அந்த வினாவிலேயே முடிச்சிட்டுக்கொண்டு நின்றது.
            அவள் மனத்தில் - எண்ணத்தில் புற்றுநோய் ஏற்பட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்குரிய மருந்து சந்திரனிடம் மட்டுமே இருந்தது. ஆனால் அதையும் அவன் இன்று தொலைத்துவிட்டு நிற்கிறான்.

(தொடரும்)

No comments:

Post a Comment