முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 21
மறுநாள் காலையில் 'எழுவதா? வேண்டாமா?' என்று ஹாலின் சோபாவில் கண்களைத் திறந்து வெறித்த பார்வையோடு படுத்திருந்தாள் தாட்சாயணி. ஸிட் அவுட்டின் வெறுந்தரையில்
கிடந்தாள் சுந்தரி. நாற்காலியில் அமர்ந்தவாறே உணவு மேசையில் தலை
கவிழ்த்திருந்தான் சந்திரன்.
எழுவதுபோல் மெதுவாக எழுந்தாள் சுந்தரி. உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ 'அம்மா. . .' என்று முனகிக்கொண்டு விழுவதுபோல் விழுந்தாள். அவள் விழுந்ததை இருவருமே
கவனித்தனர்.
சந்திரன் உள்ளம் துடித்தது. அவனுக்கு இச்சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. தாட்சாயணி என்ன செய்யப் போகிறாள்
என்று பார்த்துக் கொண்டிருந்தான். தாட்சாயணி சோபாவை விட்டு எழுந்து குவளையில் இருந்த தண்ணீரைக் கையில் ஊற்றிச் சுந்தரியின் முகத்தில் தெளித்தாள்.
சற்றே மயக்கம் நீங்கியதுபோல்
கண்களைத் திறந்தாள் சுந்தரி. உடனே அழுது ஆர்ப்பாட்டம்
செய்தாள். 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்
செஞ்சுட்டேன்' என்றாள். தன் வயிற்றில் (மெதுவாக)
அறைந்து கொண்டாள். சந்திரன் பதறிப்போனான். இத்தனை நாள் போற்றிக் காத்த
பொக்கிஷம் கலைந்துவிட்டால் என்னாவது? என்று நெஞ்சு துடித்தான்.
'வேண்டாம், வேண்டாம், செல்லம்மா! வேண்டாம்! வயித்த குத்திக்காத! தப்புக்கெல்லாம் காரணம் நான்தான்! நான் தண்டனைய அனுபவிக்கிறேன்.
உன் வயித்தில் இருக்கற என் செல்வத்த பத்திரமா
பெத்து என்கிட்ட குடுத்துடு. அதக் கொல்றதுக்கு ஒனக்கு
எந்த அதிகாரமும் இல்ல!'
'செல்லம்மா!' - அந்தச் சொற் பிரயோகத்தைக் கேட்டதும்
சுருக்கென்றது தாட்சாயணிக்கு. அவனை ஆசையாய்த் தான்
அழைக்கும் விளியல்லவா இது?
செல்லம்மா, குட்டிம்மா, கண்ணம்மா, டார்லிங், டியர், ராஜாத்தி, கன்னுக்குட்டி, தம்பி இப்படிப் பல விளிப்பெயர்களைத் தன்
கணவனை அழைப்பதற்காகவே தாட்சாயணி தொகுத்து வைத்திருந்தாள். அவற்றை அவள் எல்லா இடங்களிலும்
யார் முன்னிலையில் வேண்டு மானாலும் எதார்த்தமாகப் பயன்படுத்தினாள். அச் சொற்களைக் கேட்போர்
ஒரு சில நொடிகள் யோசித்துத்
தங்களுக்குள் மெலிதாகச் சிரித்துக் கொள்வார்கள். சிறுவர்கள் கேட்டுவிட்டால் அச்சொற்களை அடிக் கோடிட்டுக் கூறிச் சந்திரனை வெட்கப்படச் செய்வார்கள். அவற்றிற்கென்ன அர்த்தம் என்று கேட்டு வம்புக்கு இழுப்பார்கள். சந்திரன் என்ன பெண்ணா? அல்லது
குழந்தையா? என்று கேட்டுப் பரிகாசம் செய்வார்கள்.
அப்பெயர்களைச் சொல்லி விளிப்பதில் தாட்சாயணி விவரிக்கமுடியாத சுகம் கண்டவள்.
'அச்சச்சோ அச்சச்சோ
அச்சுவெல்லம் கசக்குது உன்னாலே'
என்ற
திரைப்படப் பாடல் வரிகளை அடிக்கடி மனத்திற்குள் சொல்லிச்சொல்லிச் சந்திரனை எண்ணிப் பூரித்துப் போனவள்.
ஒரு நாளும் உனைமறவாத
இனிதான வரம்வேண்டும்
என்று
தினம்தினம் அவனை நினைப்பதொன்றையே தன்
வரமாக நினைத்தவள். அவனைத் தொடுவதைக் காட்டிலும் அவள் கைகளுக்கு வேறொன்று
அருமையுடையதாகத் தெரிந்ததில்லை. அவன் அணைத்துக் கொள்வதைக்
காட்டிலும் அவளுக்குப் பேரானந்தம் தரும் விஷயம் வேறில்லை.
'நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே'
என்ற
சங்கப் பாடல் தனக்கும் தன் நெஞ்சு நேர்ந்த
கணவனாகிய சந்திரனுக்காகவும் எழுதப்பட்டதாக நினைத்து இலயிப்பவள்.
தாட்சாயணி இவ்வாறெல்லாம் தன்னை விளிக்கும்போது சிலநேரம் தெரிந்தவர்கள் கவனிக்கிறார்கள் என்பதற்காகச் சந்திரன் வெட்கப்படுவான். சிலநேரம் புன்னகைப்பான். ஆனால் அவன் அவற்றால் இன்பம்
எய்தினானா? இல்லையா? என்பது தாட்சாயணிக்குத் தெரியாது. அதைப்பற்றி அவனும் எதுவும் சொன்னதுமில்லை.
ஆனால் அந்த விளிப்பெயர்களைச்
சுந்தரியை அழைக்க அவன் பயன்படுத்தியபோது நிஜமாகவே
சுந்தரி சொக்கிப் போனாள். சந்திரனும் அதனைப் பார்த்துப் பரவசமாகிப் போனான். அச் சொற்களுக்குப் போதை
அதிகம்தான் என்பதைச் சுந்தரியைக் கலந்தது முதலாக சந்திரன் உணர்ந்து வருகிறான்.
தாட்சாயணி தேடிப்பிடித்துப் பயன்படுத்திக் காபி ரைட் வாங்கிய
சொற்களை எந்தவித முன் அனுமதியும் அவளிடம்
பெறாமல் அவன் வேறொருத்திக்குப் பயன்படுத்தினான்.
தன் கண்டுபிடிப்பு இப்படிச்
சூறையாடப்பட்டதை எண்ணி எண்ணி நொந்தாள் தாட்சாயணி. இனி அவளால் அச்சொற்களை
இயல்பாக உச்சரிக்க முடியுமா?
தாட்சாயணி சுந்தரியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று காரணங்களை அடுக்கினான் சந்திரன்.
தங்கள் சொத்துகளுக்குக் கட்டாயம் ஒரு வாரிசு தேவை
என்றான்.
குழந்தையைப் பெற தாட்சாயணியால் இயலாது
என்பதை லேசாகவும் உறுதியாகவும் கோடிட்டுக் காட்டினான்.
ஏதோ ஒரு அனாதைக்
குழந்தையை எடுத்து வளர்ப்பதற்குப் பதிலாகத் தன் இரத்தத்தின் ஒரு
துளியை - தன் உயிர்த் தொடர்பை
- தன் பண்புகளின் மறு பதிப்பை - தன்
தோற்றத்தின் நகலை அவள் ஏன்
ஏற்றுக்கொள்ளக் கூடாது? என்று தர்க்கவாதம் செய்தான்.
தாட்சாயணியின் முகம் இறுகிக் கிடந்தது. அவள் என்னவென்று சொல்வாள்?
'ஊரிலில்லாததையா நான் செஞ்ட்டேன்? அதுவும்
உன் நன்மைக்காகத்தான் செஞ்சேன்' என்று தன் தவறுக்கு அவளையே
காரணமாக்கினான்.
'சுந்தரி ஒரு வேலைக்காரியாக இருப்பாளே
தவிர உனக்கு எப்பொழுதும் ஒரு சக்களத்தியாக மாறமாட்டாள்'
என்று சுந்தரியின் பொருட்டுச் சினிமாத்தனமாக அவளுடைய தலைமீது அடித்து அவன் சத்தியம் செய்தான்.
நாட்கள் நகர நகர தாட்சாயணியின்
மனமெனும் பாதை அரசால் பராமரிக்கப்படாது
குண்டும் குழியுமாய் ஆங்காங்குப் பெயர்த்துக் கிடக்கும் தார்ச்சாலைகள் போன்று சிதைவு பெற்றது.
(தொடரும்)
No comments:
Post a Comment